மைக்கேல்
அவனும் அவளும் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்கள்.
முதியவர்களுக்கான பூங்காவுக்குள் வழிதவறி நுழைந்தவர்கள் போல வரவேற்பறையில் டாக்டரின் அழைப்புக்காக அவன் காத்திருக்க,
‘உங்களுக்கு ஒண்டுமே இருக்காது இந்த சிகரெட் இழவைக் கொஞ்சம் குறைச்சால் எல்லாம் சரியாயிடும். எனக்காக இல்லாவிட்டாலும் இவன் பாரதிக்காகிலும் விட்டுத் துலையுங்கோ ‘
என்னும் புத்திமதியும், மனஉளைச்சலுமாக, வியர்வை பூத்திருந்த மூக்கைத் துடைத்து விட்டு, உள்ளே இருக்கும் குழந்தையைத் தடவும் வாஞ்சையுடன், வளர்ந்து சரிந்திருந்த வயிற்றைச் செல்லமாகத் தடவினாள்.
குனிந்து வயிற்றைப் பார்த்து ‘நெளியுறான் ‘ என்றாள்.
அவன் அவள் கூறுவது எல்லாவற்றையும் கேட்டபடி, திரும்பி அவளது வயிற்றைப் பார்த்தான். பிந்தித்தான் போய்விட்டது. திருமணமாகி ஏழு வருடங்கள் கழித்து, சந்தோசம் ஒன்று ஐனித்து வளர்கிறது மனைவியின் வயிற்றில். இது பிறந்து, வளர்ந்து, பாடசாலை போகும்போது கிழட்டு அப்பாவைத்தான் பார்க்க நேரிடும். இளமையிலேயே ஊடுநரை பிடித்துவிட்டது. இன்னும் பதினைந்து வருடங்களில் தலையெங்கும் நரைத்த மல்லிகை பூத்துக் குலுங்கும். ஆயினும் சந்ததி கிளைத்துவிட்டது. பாபுவும் தேவியும் ஆலம்விதையொன்றை இந்த மண்ணில் ஊன்றிவிட்டனர். அது வேர்விட்டு வளர்ந்து, விழுது அனுப்பி, தோள் கொடுத்து, சிலபோதுகளில் கவிதை எழுதி மானுஷீகம் பேசி, தான் வாழ்ந்த முத்திரையாய் இந்தப் பூமியில் இன்னொரு விதையை நட்டுவிட்டுச் செல்லும். பனித்துச் சொரியும் வர்ணவாணங்களாக சந்ததிக்கொடி பரவிப் படரும். மின்னும் மறையும், பின் இன்னொன்றாய் நிலைக்கும்.
நெஞ்சு மீண்டும் இறுகியது. கொடிய ராட்ஷசன் தன் முரட்டுக்கரங்களால் இறுக்கி நொறுக்குவது போல, இடப்பக்கம் நெஞ்சு வலிக்கிறது. மூச்சுத் தடுமாறி அதன் இசைவை இழக்கிறது. நிமிர்ந்திருக்க முடியாமல் முன்வரிசைக் கதிரையில் தலையைச் சாய்த்தான். வலி குறையவில்லை. உரசி உரசி எரிகிறது தசைக்கோளங்கள். அவள், அவனது நெஞ்சைத் தடவியவாறு ‘சிகரெட் சளியாத்தான் ‘ இருக்கும் என்று புலம்புகிறாள்.
அவனால் கதிரையில் வாட்டமாக இருக்கமுடியவில்லை. பாதத்தால் குளிர் ஊடுருவுவதை உணர்கிறான். உறைந்த நீரில் பாதத்தை அமிழ்த்தியதுபோல காற்பெருவிரலில் இருந்து தேகமெங்கும் வியாபிக்கிறது குளிர். தலைமயிர்க்கால்களில் வேர்வை துளிர்த்து நனைக்கிறது. இதென்ன முரண் என்று குளம்பிப் போனான். குளிரும் வேர்வையும் எதிரெதிர் திசையிலிருந்து இதயத்தை நோக்கி நகர்ந்து வருகிறதே ? வலி மேலும் மேலும் உச்சநிலையடைகிறது. தீக்கற்றை ஒன்றை இடப்பக்க மார்பில் அழுத்தித் தேய்த்தது மாதிரி தசைநார்கள் கொதிக்கின்றன. மூளைக்குள் யாரோ கல் எறிந்திருக்கிறார்கள். எண்ணங்கள், பயங்கள், வேதனைகள், எல்லாம் தளும்பி வழிகிறது தலையில் சொரியும் வேர்வையுடன்.
‘கூப்பிடுகிறார்கள் ‘ என்றாள்.
‘ஜந்தாம் நம்பர் அறைக்குக் கூப்பிடுகிறார்கள். நானும் கூட வரட்டா ? ‘ என்றாள்.
அவன் ஓமென்று தலையாட்டினான். அவனால் நடக்கமுடியவில்லை. இதயப்பாரத்தைத் தாங்க முடியாது கால்கள் துவள்கின்றன. அவளில் சாய்ந்து கொண்டு அறையை நோக்கி நடந்தான்.
‘இந்தப்பக்க நெஞ்சு வலிக்கிறது ‘ என்று டாக்டருக்கு தனது இடப்பக்க மார்பைத் தொட்டுக்காட்டினான்.
அவனைப் படுக்கையில் சாய்த்துவிட்டு தன் ஸ்தெதஸ்கோப்பை வலிக்கும் பகுதிக்கு வைத்து உற்றுக் கேட்டார்.
‘இரவு படுத்தபிறகுதான் வலிக்க ஆரம்பித்தது. ‘
அவன் சொன்னதற்கு தலையை ஆட்டியபடிக்கு, இதயத்துடிப்பை அளந்து கொண்டிருந்தார் டாக்டர்.
‘மூச்சை இழுத்து விடு! ‘
முயன்று பார்த்தான். சுவாசக்குழாயுக்குள் காற்றுத்திரண்டு திண்மமாகி விட்டது. விலாவெலும்பும் விரிய மறுத்தது. இயலாமையால் தலையை அசைத்தான்.
வயதைக்கேட்டார். அவனுக்கு இருக்கும் வியாதிகளின் தொகுதியை அலசிப்பார்த்தபின் அவனிடம் சொன்னார்.
‘ஆடாமல் அப்படியே படுத்திரு! உனக்கு ECG எடுத்துப் பார்ப்போம். ‘ சார்ட்டில் எழுதி வைத்துவிட்டு, அகன்று போனார். மனைவி அவனருகே நகர்ந்து வந்தாள். கலவரமுற்றிருக்கிறாள் என்று முகம் சொல்லியது. படுத்திருந்தபடியே வலக்கையை நீட்டி, அவளது வயிற்றைத் தடவினான். தடவுவதற்கு வாட்டமாக அருகில் வந்தாள்.
‘இப்ப எப்பிடி இருக்கு ? ‘ என்றாள்
‘சுகமாயிருக்கு ‘ என்று சொன்னான்.
சொல்லும்போதும், வலி, மார்புத்தசைகளை ஊடுருவி உடலெங்கும் பரந்தது. ECG இயந்திரத்தை தள்ளுவண்டியில் வைத்து உருட்டி வந்தாள் நர்ஸ். பாதங்களிலும், இருகைகளிலும், மார்பின் பலபகுதிகளிலும், வயர்களை இணைத்தபின், ‘ஆழமூச்சிழுத்து அடக்கி வைத்திரு ‘ என்றாள்.
தம்பிடித்தபடி நர்சைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஓயாது புன்சிரிப்பை ஒட்டியிருந்த செந்தளித்த முகம். கன்னக்குழியிலிருந்து மேலெழும்பியது ஒரு கோடாக வடு. நிகக்காயமாக இருக்கலாம். அல்லது கவிஞன் கீட்ஸ் சொன்னதுபோல, காலம் தன் விபரீதக் கோலங்களுக்கான, ஆயத்தப்புள்ளியை போட ஆரம்பிக்கிறதாகக் கூட இருக்கலாம். கிரீச்சிட்டபடி ECG இயந்திரம், ரிசல்ட்டை அச்சடித்துக் கொண்டிருந்தது. ரிசல்ட் வெளிவந்து கொண்டிருக்கும்போதே, குனிந்து பார்வையால் கணித்துக் கொண்டிருந்தாள் நர்ஸ். அவளது வெள்ளைச்சட்டையின் மார்புப்பகுதியில் மரியம் என்ற பெயர்த்தகடு தொங்குகிறது. அவன் ஏக்கத்துடன் தாதியின் முகமாறுதலைத் தேடி உன்னிப்பாகப் பார்த்தபடி இருந்தான். தாதியின் முகம் எவ்வித மாறுதலுமற்று, அதே புன்சிரிப்பும், செந்தளிப்பும், நீண்டவடுவாகவும், ஓவியமாக இருந்தது.
‘ரிசல்ட் எப்படி ? ‘ கேட்டான் அவன்.
‘சாதாரணம்தான். கவலைப்படாதே! ரிசல்ட் சாதாரணந்தான். ஆனால் உடம்பை ஆட்டாதே! அப்படியே படுத்திரு. டாக்டர் வருவார் ‘
‘உனக்கு நன்றி! ‘ என்றான்.
இயந்திரத்தைத் தள்ளியபடிக்கு வெளியேறும்போது ‘எத்தனை மாதம் ? ‘ என்று அவனது மனைவியைக் கேட்டாள்.
பதில் கிடைத்தது. ‘எல்லாம் நன்மையாகட்டும் ‘ என்று வாழ்த்திவிட்டு, அதே சித்திரச்சிரிப்புடன் அகன்று போனாள். ரிசல்ட்டை உயர்த்திப் படித்தவாறு உள்நுழைந்தார் டாக்டர். அவன் படுக்கையில் இருந்து எழும்ப முயன்றான். விரைந்து வந்து அவனைத் திரும்பவும் படுக்க வைத்த டாக்டர்,
‘உடம்பை அசைக்காதே, உனக்கு உடலெங்கும் சீராக இரத்தோட்டம் பாயவில்லை. உனது இதயம் சரியாக இயங்கவில்லை. மாரடைப்பு தாக்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். ‘ என்று சொன்னார் டாக்டர்.
அவன் தலையைத் திருப்பி மனைவியைப் பார்த்தான். அவளது கன்னங்கள் மேலுயர்ந்து துடிப்பது தெரிந்தது. அழுதுவிடுவாளோ என்று பயமாக இருந்தது. அவன் அவளது முகத்தில் தன் பார்வையை வைத்திருந்தபோது கண்ணீர் குமிழியாகத் திரண்டு கன்னத்தில் தொடராக விழுவதைப் பார்க்க முடிந்தது.
‘உடனடியாகச் சிகிச்சை ஆரம்பிக்கவேண்டும். உன்னை வார்ட்டில் அனுமதித்திருக்கிறேன். தாதி வந்து வார்ட்டுக்கு கொண்டு போவார். சிலநாட்கள் ஆஸ்பத்திரியில் தங்க நேரிடலாம். உனது மனைவியைப் போகச் சொல்லு ‘ என்றார் டாக்டர்.
எல்லாவற்றையும் எழுதி வைத்துவிட்டு ‘காலையில் இருதயநிபுணர் உன்னை வந்து பார்ப்பார் ‘ என்று கூறி, விடைபெற்றுச் சென்றார் டாக்டர்.
டாக்டர் அறையை விட்டு சென்றதும் ‘என்னங்கோ ‘ என்றபடி மீதி வார்த்தைகள் கிளம்பாமல், வாயைப் பொத்திக்கொண்டு அழுதாள் மனைவி. அவன் அருகே இழுத்து, அவளது இடுப்பை அணைத்தபடி ‘ராக்ஷி பிடித்து போகமுடியுமா ? ‘ என்றான்.
‘நானும் உங்களோட நிக்கிறன் ‘ என்றாள் அழுகையோடு.
புதிய பெட்டொன்றை தள்ளிக் கொண்டு இரு தாதிமார் உள்ளே நுழைந்தனர்.
‘மன்னிக்கவேண்டும். இவள் கர்ப்பமாக இருக்கிறாள். நேரமும் அகாலமாக இருக்கிறது. இவளைத் தனியேஅனுப்பமுடியாது. நானும் இவளுடன் கூடச்சென்றுவிட்டு, நாளைவந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகுகிறேனே ? ‘ என்று அவர்களிடம் கேட்டான் அவன்.
‘முடியவே முடியாது. நீ இப்போதுள்ள நிலைமையில் உன் கையைக் காலைக்கூட அசைக்கக்கூடாது. நாங்கள் எப்படி உன்னை நடக்க அனுமதிக்கமுடியும் ? ‘ என்றாள் அவனது கையில் ஆஸ்பத்திரி அடையாளத் துண்டைக் கட்டிக் கொண்டிருந்த தாதி.
அவனை பெட்டில் வைத்து உள்ளே கொண்டு போகும்வரைக்கும் அவனது கையைப் பிடித்தபடி நின்றாள் மனைவி.
அவன் தலையை அசைத்து விடை தந்தவாறு உள்ளே போகிறான்.
இப்போதும் சிரிக்கிறான்… அவளுக்காக…!
************************
வீதிக்கு வந்தாள்.
ஆஸ்பத்திரி வலயத்ததைத் தவிர, எங்குமே இருள் கவிந்து அமைதியாய்க் கிடந்தது. அகாலம் வேறு. தனிமையில் அச்சம் தரும் நிஷ்டூர அமைதியைக் குலைத்தது அவளது சப்பாத்துச் சத்தம். அவனில்லாமல் வீட்டுக்குப் போய் எப்படி உறங்குவது.. ?
மையிருள் கசியும் கோடைகால இரவு வானத்தின் கீழே, அவள் நடந்து போய்க் கொண்டிருந்தாள்.
அவளுடைய மனம் அவளது இதயத்தில் தங்கியிருக்கவில்லை. அது அவனைப் பரிபாலிக்க, கடவுளர்களின் வீடு தேடி அலைந்தவாறு எங்கோ சென்றுவிட்டது. வயிறு இப்போது ஒரு பிண்டமாக, கல்லைக்கட்டி வைத்திருப்பது போல பாரமாக, உயிர்ப்பற்று இருந்தது. கண்ணீரின் ஓயாத ஓட்டம் தலையிடியாக முளைத்திருக்க, தனியனாக அந்தக் கர்ப்பிணி நடந்தபடி இருந்தாள்.
ஒவ்வொரு லைட்கம்பத்தின் ஒளிப்பரப்பிலும் தெரிந்து, பின் இருளுக்குள் புகுந்து, அவளது நடையின் முகம் வீட்டை நோக்கி இருந்தாலும், அவள் தன் நினைவில் பின்னேறி அவனிடமே வந்தவாறு இருந்தாள்.
**********************************
அவனைச் சூழ்ந்து நின்று இரண்டு கைகளிலும் துளைபோட்டு, மருந்து ஏற்றுவதும், இரத்தம் எடுப்பதுமாக அவசரப்பிரிவுக்கேயுரிய வேகத்துடன் இயங்கினர் தாதிகள். மருந்து உடலில் ஏற ஏற இரத்தஅழுத்தம் கூடிக் கொண்டே போனது. எலெக்ரிக்ஷொக் கொடுக்கும் இயந்திரத்தை இழுத்து வந்து அவனருகே நிறுத்தினர். மரணத்திற்கான தடையரண்களைப் பார்த்துக் கொண்டிருந்த அவனது கால்கள் நடுங்கத் தொடங்கின. பல்லுக்கிட்டி ஒன்றையொன்று மோதித் தந்தியடித்தன.
அவனைச் சுற்றி அந்தகாரம் படர்ந்தது.
‘ஏலி ஏலி லாமா சபக்தானி..! ‘
‘இறைவனே இறைவனே ஏன் என்னைக் கைவிட்டார்..! ‘
கொல்கொதா மலைக்குன்றை நோக்கிய முள்ளடர்ந்த பாதையில் அவனைத் துரத்திக் கொண்டு செல்கின்றனர். எருசலேம் தேவாலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிய, இன்றோ நாளையோ எல்லாம் முடியும். வாழ்ந்ததற்கும் மூச்சு விட்டதற்கும் அடையாளமே இல்லாமல் அவனுக்கான மேட்டுநிலத்துடன் ஜக்கியமாகி விடுவான். மரணம் இந்த முப்பத்திமூன்றாம் வயதில், அவனை முதுகிலே ஈட்டி எறிந்து கொன்று வீழ்த்தப் போகிறது.
‘சிஸ்டர்.. சிஸ்டர்… நான் சாகப்போகிறேனா.. ? இது…என்னஇது என்னத்துக்கு இந்த மெஷின் ? ‘
எலெக்ரிக்ஷொக் கொடுக்கும் இயந்திரத்தைச் சுட்டிக் காட்டியபடி பதகளித்தான் அவன்.
‘ரிலாக்ஸ், ரிலாக்ஸ், நீ குணமடைந்து விடுவாய். இது இன்னொரு தடவை மாரடைப்பு வந்தால் தடுப்பதற்கான முன்னேற்பாடே தவிர, பயப்படும்படி ஒன்றுமில்லை. ‘ அவனை ஆறுதல்ப் படுத்தினாள் அருகே நின்ற தாதி.
‘இல்லை சிஸ்டர் நான் சாகக்கூடாது. என் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள். அது ஆண்குழந்தை. நான் அதைப் பார்க்கவேண்டும். ‘
‘மனதை அலட்டாதே! உனது இரத்தத்தை திரவமிளக்கி, உடலெங்கும் பாய்வதற்கு மருந்து செலுத்துகிறோம். இனிமேல் உனக்கு ஒரு ஆபத்துமில்லை. ‘
அவனுக்கு அன்பாக விளக்கமளித்து அவனது கையைத் தடவிக் கொடுத்து ஆறுதல்ப்படுத்தினாள் தாதி. அவனால் மனதை ஒருமைப்படுத்த முடியவில்லை. அது அலைபாய்ந்து கொண்டிருந்தது. பிறக்கப் போகும் கவலையறியாச் செல்லக்குட்டிக்கு அப்பா இல்லாத துரதிர்ஸ்டம் வாய்க்குமே ? அத்துடன் ‘தேப்பனைத்தின்னி ‘ என்று எங்காவது ஒன்றுக்குப் பத்து நாக்குகள் நெளியுமே ? அவனது நிழலின் பின்னே இன்னொரு நிழலாய், இந்த ஏழுவருடங்களும் அடியொற்றி நடந்து, கதைத்துக் காதல் புரிந்து, முயங்கிச் சிரித்து, அவ்வப்போது அவனுக்கு ஏமாளி என்று பட்டம் கொடுத்து, வாழ்வின் திரும்புதிசைக் கெல்லாம் நெம்புகோலில் வைத்து, அவனை நெம்பி மடைமாற்றி, அப்போதும் பணப்பயிர் விளையாமல் போக, விதியே என்று சமாதானப்படும் தேவமலரின் வாழ்வு அவனுக்குப் பின்னே என்னவாகும் ?
இந்தப் பூமிப்பந்தின் பாரத்தை சமனப்படுத்தி, கூட்டலையும் கழித்தலையும் தீர்மானிக்கும் அந்தக் கொடியவன் யார்.. ?
அவனால் மூச்சு விடமுடியவில்லை. ஆட்காட்டி விரலில் மாட்டியிருந்த ஒட்சிசன் அளக்கும் கருவி கீச்கீச் என்று அவசரஒலி எழுப்புகிறது. நெஞ்சை இறுக்கி, உயிர்ப்பாலைப் பிழிகிறது ஏதோ ஒரு வலிய கரம். தலையெங்கும் வியர்வை வளிகிறது. வியர்வைதான் மாரடைப்பின் கடைசிச் சின்னமாம். உயிர் அவனை விட்டு அகலப் போகும் பச்சைக்கொடி காற்றில் ஆடுகிறது.
சாகக்கூடாது. நான் என் குழந்தையைப் பார்க்கவேண்டும். நான் சாகக்கூடாது. எனக்கு இன்னும் வாழ்க்கை வேண்டும். கடவுளே உன் கையிலிருந்து நழுவி விழப்போகும் என்னை இறுக்கி அணைத்துப்பிடி..!
தெய்வங்களே!! எதைக்கூப்பிடுவது ? அம்மாவின் அந்தோனியாரைக் கூப்பிடுவதா ? ஜயாவின் வயிரவரைக் கூப்பிடுவதா ? ஏன் நீங்கள் இரண்டு பேருமே கரம்கோர்த்து என்னை துாக்கி அணைத்து, இந்தப்பூமியில் நிறுத்தக்கூடாது. கடவுளர்களே கைவிட்டு விடாதீர்கள்….
‘சிஸ்டர் சிஸ்டர் நான் சாகப் போகிறேனா ? ‘
ECG இயந்திரத்தின் வயர்களை அவனது மார்பில் இணைத்துக் கொண்டு சிரிக்கிறாள் மரியம்.
‘நாலு நாளாக இதே கேள்வியா ? இதோ உனது இதயம் சரியாக இயங்குகிறது என்று ரிசல்ட் சொல்லுகிறது. நீதான் உன்னை வீணாக அலட்டிக் கொள்கிறாய். பேசாமல் உறங்கு! ‘
நேச வசீகரம் தந்து, அரவணைக்கும் தாயைப் போன்ற அதே சிரிப்புடன் தாதி மரியம் சொல்கிறாள். அவனால் எப்படி உறங்கமுடியும் ? உறக்கத்தையெல்லாம் எங்கோ இழுத்துச் சென்று பாதாளத்தில் எறிந்து விட்டது மரணபயம். ஓயாது அவனது பார்வை இதயத்துடிப்பை அளக்கும் கருவியின் திரையிலே ஒட்டிப் போய்க் கிடக்கிறது. அவனது ஏக்கம் கூடக்கூட இதயம் வேகங் கொண்டு பாய்கிறது நீர்வீழ்ச்சியின் ஆவேசத்துடன். உடலெங்கும் கேட்கிறது விடைபெறப் போகும் உயிரின் சத்தம்.
டாக்டர் அவனைத் தட்டி எழுப்பினார். திடுக்கிட்டு விழித்ததும் அவனையறியாமல் பார்வை இதயத்துடிப்பு அளக்கும் இயந்திரத்தின் திரைக்கு ஓடியது.
‘உனது நாடி நாளங்களை பரிசோதிப்பதற்காக வேறு ஆஸ்பத்திரிக்கு நாளைகாலை போகிறாய். ஏனெனில் உனக்கு குடலில் பக்ரீறியா தொற்று ஏற்பட்டிருக்கிறது இந்த நெஞ்சுவலி தொற்றின் காரணமாகவா, மாரடைப்பாலா என்று நாளை தெரியவரும். உறங்கு ‘
டாக்டர் ஏதோ எழுதி வைத்துவிட்டுப் போகிறார். அவன் மீண்டும் அலைபாயத் தொடங்கினான். ஒன்றைமேவி இன்றொன்றாக புதிய புதிய சந்தேக அலைகள் மோதி எறிந்து கலக்கின மனதை.
***************************
‘காலைவணக்கம் பாபு! இன்று உனக்காக பூவொன்று கொண்டு வந்தேன். ‘
ECG இயந்திரத்தைத் தள்ளிக் கொண்டு அவனிடம் வருகிறாள் மரியம். அவளது கையில் அழகான மஞ்சள் நிறப்பூவொன்று தெரிகிறது. அன்று பூத்ததாக இருக்கலாம் இனி வாடிவிடும் என்று அவனது நினைப்பு ஓடியது.
‘நன்றி மரியம்! நான் குணமாகி வந்தால் உனக்காக ஒரு கவிதை எழுதுவேன் ‘
‘கண்டிப்பாக. இப்போதே நீ குணமாகி விட்டாயே! எங்கே எனக்கு ஒரு கவிதை சொல்லு! ‘
‘இல்லை மரியா இன்றுதான் எனக்கான நியாயத் தீர்ப்புநாள். இதயப்பரிசோதனைக்காக என்னை வேறு ஒரு இடம் கொண்டு செல்கிறார்கள். அதன் பிறகுதான் தெரியும் உனக்கு கவிதையா… அல்லது……… ‘
அவனது உடலுக்குள் கம்பியைச் செலுத்த உடல் உஷ்ணமாகிக் கொண்டு வந்தது. பாரியநாடி தோறும் கம்பியைச் செலுத்தி இரத்தப்பாதையை படம் பிடித்தார்கள். இறுதியில் இதயத்திற்குக் கிட்ட கம்பி செலுத்தப்படும் போது, அவனது உணர்வுகள் சிலிர்த்து வந்தது. இதயத்துடிப்பு இறங்குமுகமாகியது. சுவாசக்குழாயின் வாசல்கதவைத் தட்டுகிறது உயிர்க்காற்று. ஆனாலும் கம்பியூட்டர் திரையை கவனித்தவாறே இருந்தான்.
‘மிஸ்டர்! உனக்கு நுாறு ஆண்டுகள் ஆயுசு! உனது இருதயம் குதிரையினது போல வலுவாக இருக்கிறது. ‘
அவனது காதில் பரிசோதனை டாக்டரின் குரல் விழுந்தது.
அவனுக்கு இந்தச் சந்தோசச் செய்தியை உடனே மனைவிக்குச் சொல்ல வேண்டும் என்ற துடிப்பாய் இருந்தது. நான்கு மணியாகி விட்டது. இதோ இன்னும் ஜந்து பத்து நிமிசத்தில் வந்து விடுவாள். மனம் கிடந்து அலை பாய்ந்து கொண்டிருந்தது. ECG மெஷினின் தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு பக்கத்து பெட் நோயாளியை பரிசோதிக்க வந்தாள் மரியம்.
‘வணக்கம் மரியம். ‘
அவன் குதுாகலத்துடன் அவளை அழைத்தான். அவளது முகத்தில் புன்சிரிப்பைக் காணவில்லை. என்றும் இல்லாதவாறு முகம் கூம்பிப் போய்க் கிடந்தது.
‘உனக்கு இனிமேல் ECG எடுக்கத் தேவையில்லை ‘
என்று சுரத்தில்லாமல் சொன்னாள் மரியம். ஆக, எனக்கு இருதயவருத்தம் இல்லை என்று அவளுக்கு முன்னரே தெரிந்திருக்கிறது. ஆனால் ஏன் சோகமாக இருக்கிறாள்.
‘உனக்கு என்ன நடந்தது மரியம். உனது முகம் வாடிப்போய் இருக்கிறதே ‘
என்று கேட்டபடி அவன் மரியத்தின் முகத்தைப் பார்த்தான் அவள் அழுததற்கான சுவடுகளாக கண்கள் சிவந்து போய் வீங்கியிருந்தன.
‘எனக்கு இன்று ஒரு சோகம் நிகழ்ந்துவிட்டது. ‘
‘என்ன நடந்தது. ‘
அவன் தனது சந்தோசத்தை உள்ளடக்கிவிட்டு மரியத்திடம் கேட்டான்.
‘அவள் இறந்துவிட்டாள். எவ்வளவு அழகானவள். சாம்பல் நிறமும் சடையுமாய். அவளுக்கு என்னில் நிரம்ப அன்பு. இன்றுகாலை நான் படுக்கையால் எழும்பி வர, வாசலில் இறந்துபோய்க் கிடக்கிறாள். ‘
சொல்லும்போதே மரியத்தின் உதடுகள் துடித்தன.
‘யாரது உனக்கு மிக வேண்டியவரா ? ‘
‘ஆமாம். என் செல்லப்பூனை. ‘
மரியத்திற்கு துக்கம் பீரிட்டுப் பொங்கியது, கண்ணீர் விழுந்து, அவளது முகத்து வடுவீனுாடாக கோடாக இறங்கியது.
18-ஆகஸ்ட்-99.
- வலி
- இட்லியின் அருமை இங்கிலாந்தில் தொியும்
- அம்மா வந்தாள் ! பாவண்ணனின் விமரிசனத்திற்கு பதில்
- ந. பிச்சமூர்த்தியின் ‘தாய் ‘ – சுரக்கும் அன்பும் சுரக்காத பாலும்
- நிலவியல் பிரச்சினைகள் நிறைந்த நெல்லை மாவட்டமும் கூடங்குளம் அணுமின்நிலையமும்
- இந்தோனேஷியக் காடுகள் வெகு வேகமாக அழிந்து வருகின்றன
- குபுக் குபுக் குற்றாலம்!
- படைப்பின் உதயம் !
- புரிந்து கொள்..
- தொலைந்து போனவை
- உன் காதல் புதிய நோய்!
- கல்யாணம் யாருக்கு ?
- ஒப்புமை
- நிலவியல் பிரச்சினைகள் நிறைந்த நெல்லை மாவட்டமும் கூடங்குளம் அணுமின்நிலையமும்
- இந்தியாவின் தாமஸ் பெயின்: பெரியாரின் அறிவியக்கம்
- தெய்வநிந்தனை குற்றத்துக்காக பாகிஸ்தான் சிறையின் தூக்குமர நிழலிலிருந்து ஒரு கடிதம்
- அடுப்பிலிருந்து வாணலிக்கும் , திரும்பவும்
- மழையும் வெயிலும்.
- உயிர் விளையாட்டு
- ஒப்புமை
- சீதாக்கா