உயிரோடு உரசாதே

This entry is part [part not set] of 26 in the series 20011015_Issue

வந்தியத்தேவன்


உன்னை நினைக்கையிலே கவியருவி கொட்டுதடி,
கற்பனைக்கு எட்டாத கவிதை சொல்லத் தோணுதடி.

சித்திரதில் எழுதாத ஓவியப் பாவையே,
உனக்கு உவமை சொல்ல உல்கில் யாரும் இல்லையே.

வஞ்சப் புகழ்ச்சி இல்லை வார்த்தை விளையாட்டில்லை,
நெஞ்சில் தோன்றியதை நெகிழ்ந்து எழுதியவை.

உயிரில் இழைத்து உதிரம் குழைத்து உதட்டில் வந்த வார்த்தையடி,
என் உணர்வில் வந்து உறக்கம் கலைக்கும் உன்னுடைய உருவமடி.

நீ மரபுச் சங்கிலியை உடைத்த புதுக் கவிதை,
என் கற்பனைத் தேரில் பூட்டிய வெண்குதிரை.

தூக்கம் மறந்து உன் நினைவில் நான் தவிக்க,
ஏக்கப் பெருமூச்சில் தான் எத்தனை கவிதையடி.

சொல்லழகு பொருளழகு அணியழகு கொண்டு
எத்தனை கவிதையை நான் எழுதி வைதாலும்,
ஏந்திழயே எதுவும் உன் அழகுக்கு ஈடா(கு)மோ.

உன்னில் என்னை வார்த்துக்கொள்ள, உன் உயிரில் என்னை சேர்த்துக்கொள்ள,
உனக்கு நான் அனுப்பிய ஓலைகளை காற்று கொண்டுவந்து சேர்த்ததா ?

இன்னும் எத்தனை நாள் என் உயிரை உரசிப்பார்க்கப் போகிறாய் ?
இன்னும் எத்தனை நாள் உன் மெளனத்தீயில் என்னை வாட்டப்போகிறாய் ?

நீ ஆம் என்றால் சிறகு முளைத்து உன்னுடன் சிகரம் தாண்டிச் செல்வேன்,
இல்லை என்றால் சருகாய் உதிர்ந்து காற்றில் கலப்பேன்.

ஒரு முறை என் கவிதைக்காவது உன் முத்தம் கிட்டட்டும்,
இப்படி அனுதினமும் என் உயிரோடு உரசாதே.

Series Navigation