உயர் பாவைக்கு ஒரு முன்னுரையும் விளக்கமும்

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

மாலதி


—-

சநாதிகளும் வேதாந்திகளும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு விஷயத்தை சுலபமாகச் செய்து முடித்தவள் ஆண்டாள்.

இந்துமதம் சிடுக்குகளால் ஆனது,முரண்பாடுகளின் மூட்டை என்பது தவறான வாதம்.எங்கிருந்து நூலை இழுத்தாலும் சரசரவென்று மொத்தமும் கைப்பிடிக்குள் அடங்கும்.ஆனால் கண்ணில் விசேஷமான மை தடவிக்கொள்ள வேண்டும்.அந்த மை நம்பிக்கையால் தயாராவது.

மையில்லாமல் அறிவாலும்பார்க்கலாம்.அறிவு,உருப்பெருக்கிக் கண்ணாடி அணிந்து இப்படி அப்படி விலகாமல் பார்க்கப் பழக வேண்டும்.அவ்வளவு விவரமும் துளி ஏறாமல் இறங்காமல் முரண்படாமல் ஒரே விதமாக எல்லா இடத்திலும் சொல்லப் பட்டிருக்கும்.எழுதியவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி வைத்துக்கொண்டு எழுதினாற்போல தோற்றம் கொடுக்கும்.

இந்து மதத்தில் தமிழுக்குச் சிறப்பிடம் பெற்றுத் தந்த வகையில் ஏற்றம் பெற்றது வைணவம்.இந்து நம்பிக்கைகளின் படிமங்களான பல தேவதைகளை அந்தந்த அம்சங்களோடு வழிபடுவதைத் தவிர்த்து எல்லாவற்றையும் தன் வசம் கொண்ட ஒரு முழு தெய்வத்தை உருவகித்து அந்த ‘விஷ்ணு ‘ வடிவத்துக்கே சரணாகதியாவது வைணவக்கோட்பாடு.இப்படிப் பிற தேவதைகளை மறுப்பதில் ஒரு அனுகூலம் என்னவென்றால் நோக்கக் குவிப்பும் ஆழமும் மிகுபடுகின்றன என்பதில் தான்.

[வியக்கத்தக்க வகையில் வைணவம் கிறித்துவமதத்தை ஒத்திருப்பதைப் பலர் ஏற்கனவே குறிப்பிட்டதுண்டு. கிறித்து,கிருஷ்ணன் என்ற பெயர்கள்,இருவரும் பிறந்த சூழல்,இரு சிசுக்களும் தேடப்பட்டு மற்ற குழந்தைகள் கொல்லப்பட்டமை, இருவரும் ஆடு மாடுகளிடையேயும் பெண்களிடையேயும் அன்பு கூர்ந்து வாழ்ந்தது மற்றும் இரு மதங்களிலும் இருக்கும் ‘பிரேமை ‘க்கான பிரத்யேக இடம்,இரு மார்க்கங்களிலும் நிலவும் பாவமன்னிப்பு,மற்றும் சரணாகதி உடன்பாடுகள்..என்பன போன்ற ஒற்றுமைகளைச் சொல்லலாம்.கிருஷ்ணாவதாரம் எல்லா அவதாரங்களிலும் நீர்மையுள்ள அவதாரம் மட்டுமன்றி அந்த உருவகிப்பு வாழ்வியலுக்கு மிக அணுக்கமாய் இருப்பது குறிப்பிடத்தக்கது.]

திருமால் ஒரே தெய்வம் என்ற வைணவக் கோட்பாடு பலவிதமாக விளக்கப்படுவதை திருப்பாவைப் பாசுரங்களில் பார்க்கப் போகிறீர்கள்.நம் கவலை அதுவல்ல என்றபோதிலும் அந்தக் கருத்தில் வைக்கப் படும் அழுத்தமும் வன்மமும் பிற இந்துக்களை யோசிக்கவைக்கும்.ஒரு மனக்குவிப்புக்காக வைணவம் இப்படிப் போதிக்கிறது என்று எளிமையாக எடுத்துக் கொண்டு மேலே செல்வோம்.

பக்தியையோ முக்திமார்க்கத்தையோ திருப்பாவையில் எதிர்பார்ப்பவர்கள் ஏமாந்து போவீர்கள். முழுக்க முழுக்க வாழ்வியலும் அழகியலும் வெற்றி அல்லது நன்முடிவு குறித்த தீவிர உந்துதலும் அற்புதமான காதலும் பிணைந்த காவியம் இந்தத் திருப்பாவை. மற்ற பக்தி இலக்கியங்களைப்போல இதில் ‘பாவ்லா ‘ காதலாக பர ஜீவ சம்பந்தத் திணிப்பு கிடையாது. இது அசல் ஆண் பெண் மனக்கலப்பு மற்றும் நுட்பமான சங்கேதங்களின் விவரணை.

அப்படி திருப்பாவையில் என்ன தான் இருக்கிறது ?என்று கேட்கலாம். மேலோட்டமாக எதுவும் தெரியவில்லையே என்று சந்தேகிக்கலாம். ஆண்டாள் மிகப் பெரிய கவி என்று மேடை மேடையாகச் சொல்பவர்கள் கூட எப்படி அவள் கவிதை சிறப்புடையது என்று இனம் கண்டு விளக்க வருவதில்லை. இந்தக் காரணங்களால் தான் வாய்ப்பாடு புத்தகங்களைப்போல ஏராளமான திருப்பாவை உரைகள் உலவி வருகிற போதிலும் இப்படி ஒரு திருப்பாவை விளக்கத்தை நான் எழுத நேர்ந்தது.

தன்னேற்றக்குறிப்புகளாக நான் எதையும் புதிதாகச் சொல்லி விட முடியாதபடிக்கு பூர்வாசிரியர்கள் தகுந்த ஆதாரங்களுடன் வியாக்கியானங்களை முன் வைத்திருப்பினும் அவற்றை எனக்குப் புரிந்தவகையில் என் ரசனையோடு சேர்த்து எழுதுவது எனக்குக் கடமையாகிறது.ஏனெனில் பலருக்கு வந்து சேராத கருத்துக் காவியங்களுள் மிக முக்கியமானது திருப்பாவை. இது ஒரு மனித வள மேம்பாட்டுக் குறுகிய காலப் பட்டறை என்றால் மிகையாகாது.இதை நம்ப மறுப்பவர்கள் திருப்பாவைக் கட்டமைப்பைப் பார்த்து வியந்து போவீர்கள்.

[ போதுவீர் போதுமின் -ஆரம்பிக்கும் காரியத்தில் முதல் தேவை ‘desire ‘எனப்படும் இச்சை ஒரு ‘personality development ‘ அம்சம்.

நாராயணனே நமக்கே பறை தருவான் – ஏகாரத்தில் இருப்பது ‘positive thinking ‘

எழுப்பும் பாடல்களில் இருப்பது -team spirit,effective communication, and synergy.

ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் வார்த்தைகள் மேலாண்மையைக் குறிப்பவை.

நாயகப் பெண்பிள்ளாய்- தலைமைப்பண்பு

கோதுகலமுடையாய்- உற்சாகம்

தேசமுடையாய்- தோற்றத்தில் அக்கறை

தேற்றமாய் வந்து- தெளிவு

மாலே மணிவண்ணா பாடலில் சங்கு கொடி விதானம் விளக்கு பறை இத்யாதி வேண்டுவது decentralisation of power, or delegation of power to the entitled.இதில் விநோதம் என்னவென்றால் பங்கீடு பல்லாண்டிசைப்பார் வரைப் பாய்வது தான். followers ஐக் கூட கேட்டுப்பெறும் delegation demand பற்றி எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?

ஆண்டாளின் தனித்துவம் அது.

சிற்றஞ்சிறுகாலே பாசுரத்தில் ‘இற்றைப் பறை கொள்வான் அன்று காண் ‘ என்பவள் முதல் பாசுரத்தில் நாராயணனே நமக்கே பறை தருவான் என்றவள். முரண்பாடு எதுவுமில்லை. personality development சித்தாந்தப்படி ‘பறை ‘ immediate goal, ‘பறையில்லை உன்னோடு உறவு ‘ என்று 29ம் பாட்டில் முடித்தது ultimate goal. ஒட்டு மொத்த பாவை ஒரு crash course of personality development]

திருப்பாவை ஒரே உள் சுற்றுக்குள் மட்டும் உலா வந்து கொண்டிருக்கும் காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு ?திருப்பாவை புரிய வேண்டுமென்றால் அது முதலில் மனப்பாடமாக வேண்டும். அதுவே போதாது. அதைத் திரும்பத் திரும்ப அசை போட வேண்டும். சடார் சடாரென்று சில வார்த்தைகள் வந்து விழுந்திருக்கின்றனவே என்ன அர்த்தம் என்று வியக்க வேண்டும் பிறகு ஆன்மீக மேடைகளில் குழூவுக்குறிகளில் அதைப் பிய்த்து எறிவதை வேடிக்கை பார்க்கவேண்டும்.வகுப்பு பாஷையில் திருப்பாவை விளக்கம் ஒன்றும் புரியாது. புரியக்கூடாது என்றே அவர்கள் சொல்வது போல இருக்கும். அதெல்லாம் முடிந்தபின் பூர்வாசிரியர்களுடைய உரைகளைப் பொறுமையாகப் படிக்க வேண்டும். அதற்குப் பின் யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும் கிடைத்த சந்தர்ப்பத்தில் எல்லாம் அது பற்றிப் பேச வேண்டும். இவ்வளவும் செய்தால் நூறில் ஒரு பங்கு திருப்பாவை புரிந்து விடும். 3 பத்தாண்டுகளாவது ஊறப்போட்டால் கண்ணன் மிக நெருக்கமான நண்பன் போல உங்கள் முகத்தின் மீது மூச்சு விட்டுக்கொண்டு நிற்பான். அவனைப் பற்றி அபிப்பிராயம் சொல்கிற அளவுக்கு நீங்கள் அணுக்கமாகி விடுவீர்கள். அவனைச் சட்டை செய்ய மாட்ட்டார்கள். ‘அவன் கிடக்கான்,என்னைப் போல ஒருவன் ‘ என்று தள்ளுவீர்கள் நம்பிக்கையுள்ள ஆண்பிள்ளையானால். பொறாமைப்படுவீர்கள் பலவீனமான ஆண் ஆனால்.காதலிப்பீர்கள் பெண்பிள்ளையாக நீங்கள் இருந்து வைத்தால். அதைத் தான் மதம் விரும்புகிறது. கண்ணன் ஒரே புருஷன்,பிறவிகள் எல்லாமே பெண்கள் தாம் என்கிறது.

தத்வம்,ஹிதம், புருஷார்த்தம் என்ற மூன்று அம்சங்களும் திருமால் தான் என்று விளக்குவது திருப்பாவையின் தத்துவப் பார்வை.எது பரம்பொருள்,எந்த வழியால் அது கிடைக்கும்,கிடைத்தபின் வரும் பலன் என்ன என்கிற மூன்று கேள்விகளுக்கும் பதில் திருமால்.அவனை அவன் மூலம் அடைந்தால் அவனே இறுதிப்பயன். இதென்ன சூத்திரம் ?a+a=a என்று ? கொக்கைப் பிடித்து வெண்ணை வைத்தபின் கொக்கு ஏன் கிடைக்க வேண்டும் ? வெண்ணை ஏன் வீண் செலவு ?இந்தப் பகுத்தறிவுக் கெல்லாம் அப்பாற்பட்டு மிகவும் ஏற்புடையதான பதில்களைத் தரும் திருப்பாவை.

விசித்திரமான குணநலன்களைத் திருமாலுக்கு இட்டுக்கட்டியிருக்கும் திருப்பாவை விளக்கம். சொன்னால் நம்ப மாட்டார்கள். அவற்றில் ஒன்று திருமாலிடம் இருப்பதாகச் சொல்லப்படும் பாரபட்சம்.தன் பிரஜைகளிடையே அதி தீவிரமான நுட்பமான partiality யைக் கடைப்பிடிப்பவன் கண்ணன் என்று நம்புகிறது வைணவம். ‘ஆஸ்ரித பட்சபாதம் ‘ என்கிற இந்த திவ்ய குணத்தை ஒவ்வொரு வைணவனும் தனக்கென்றே அமைந்த தனித்தன்மை என்று அதற்குள் நுழைந்து அதன் நிழலில் ஒதுங்கி தகுதியில்லாமலும் கூட மேம்பட உத்தேசித்து பிரேமை செலுத்திக் காத்திருக்கிறான். பலவீனமுள்ள தலைவன் தானே படியளக்கவும் தனிக்கருணை காட்டவும் உகந்தவன் ?

அவதாரிகை என்று ஒரு பின்னணி தருவது சம்பிரதாயமாக இருக்கிறது.அந்த வகையில் ஆண்டாள் ஏன் பத்து ஆழ்வார்களுக்குள் சிறப்பாகப் போற்றப் படுகிறாள் என்பதற்கு விளக்கம் இருக்கிறது.

உடல் வேறு,உள்ளடக்கம் வேறு என்று அறிந்து வாழும் இருடிகள் பெரிய மலைகள் என்றால் உடல் தான் உள்ளிருப்பதும் என்று நினைக்கும் பாமரர்கள் பரமாணுக்குச் சமம்.

இருடிகள் படித்துத் தெரிந்து கொண்டவர்கள்.ஆழ்வார்கள் கருவிலே திருவாகி மயர்வற மதிநலம் கொண்டவர்கள். எனவே இருடிகள் பரமாணுவாகி விடுவார்கள் ஆழ்வார்களின் மாமலை உயரங்களின் முன்.

ஆழ்வார்களைப் பரமாணு வாக்கியவர் பெரியாழ்வார்.ஆழ்வார்கள் திருமாலைப் போற்றிப் பாடித் தமக்குப் பாதுகாப்பை யாசித்தார்கள்.பெரியாழ்வாரோ தெய்வத்தின் மீதிருந்த அபரிமிதமான அன்பினால் அவனுக்கே பாதுகாப்பு கவசம் போடும் முகமாகப் ‘பல்லாண்டு ‘ பாடி வைத்தார்.இப்போது பிற ஆழ்வார்கள் கடுகு பெரியாழ்வார் மலை.

பெரியாழ்வாரைக் கடுகாக்கி மன்னிக்கவும் பரமாணுவாக்கித் தான் மலையானாள் ஆண்டாள் பெரியாழ்வாரின் தெய்வத்தையே காதலித்து வலிந்து தொடர்ந்து மணம் புரிந்து வென்று காட்டியதில்.

இப்போது புரிந்திருக்கும் வைணவம் ஆண்டாளை வைக்கும் உயரம்.

‘பாவை நோன்பு ‘ என்கிற விரதம் கன்னிப்பெண்களால் செய்யப் படுவது.அதைச் செய்து காட்டுவதான நாடக பாவனையில் ஒரு பெண் தனக்குப் பிடித்தவனிடம் திட்டமிட்டு போய்ச் சேர்வது தான் திருப்பாவையின் பாடுபொருள்.இதில் நாடகத்துக்குள் நாடகம் இயங்குகிறது.மேடையிடப்பட்டிருப்பது கலியுகத்தில்,ஸ்ரீவில்லிப்புத்தூரில்,காதலன் வெறும் கல்,வடபத்ரசாயி என்பது அவன் பெயர்.நாடக நிகழ்வின் தேதி துவாபரயுகத்துக் கடைசி.இட்டுக்கட்டப்படும் இடம் கோகுலம்.காதலன் திருமாலின் அவதாரங்களில் ஒருவனான கண்ணன்.அவன் கல் இல்லை. ரத்தமும் சதையுமாய் உயிர்த்து உலாவுபவன். அவனுடைய ஒவ்வொரு அசைவும் அத்துப்படியாகிறது திருப்பாவை முப்பதும் தெரிந்து முடிப்பதற்குள்.

இப்போது

மார்கழித்திங்கள் மதிநிறைந்தநன்னாளால்

நீராடப்போதுவீர்போதுமினோ நேரிழியீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடிச்செல்வச்சிறுமீர்காள்!

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதையிளஞ்சிங்கம்

கார்மேனிச்செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

பாரோர்புகழப் படிந்தேலோர் எம்பாவாய் [திருப்-1]

[தொடரும்]

மாலதி

====

malti74@yahoo.com

Series Navigation

மாலதி

மாலதி