உயர்பாவை 3

1 minute, 52 seconds Read
This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

மாலதி


9.தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய

‘Is it better for a woman to marry a man who loves her than a man she loves ? ‘ என்பது நிறைய யோசிக்க வைக்கிற கேள்வி.

தூமணி மாடத்துப் பெண்ணுக்குக் காதலன் விரும்பி வருவது தான் பிடித்திருந்தது.இருவர் சம்பந்தப் பட்ட இந்த பந்த விவகாரத்தில் நான்கு விஷயங்கள் இருக்கின்றன. பெரிய பெரிய பெயரெல்லாம் கொடுத்திருக்கிறார்கள் ஏதோ சேஷத்வமாம்,பாரதந்த்ரியமாம்,போக்ருத்வமாம்,போக்ருதையாம்.சுருக்கமாகச் சொல்வதென்றால் ரெண்டு விஷயம் பெண்ணிடம் ரெண்டு விஷயம் ஆணிடம்.

இந்துமதத்தில் இருப்பதைக் காட்டி இல்லாததைப் புரியவைப்பார்கள்.கோடி சூர்யப் பிரகாசன் என்று தாம் அறிந்த நல்லவற்றின் மொத்த உருவை உன்னதங்களின் ஒற்றை வடிவை [personification of all good and noble things]சூரியனைக்காட்டி இவனைப் போல் கோடி மடங்கு பிரகாசமானவன் என்றார்கள். அப்படியே எல்லாருக்கும் தெரிந்த ஆண்பெண் உறவைக் காட்டி இது போலப் பேரின்பம் அது என்றார்கள்.அதை விளக்க நாயகன் நாயகி பாவ தாபங்களைச் செய்வார்கள். அதையே உயிர்நாடியாகப் பிடித்துக் கொண்டு வைணவம் பிரேம தத்துவம் படைத்தது. பிரியவே இயலாத ஒற்றைத் தத்துவமாக ஜீவ பரம சம்பந்தம் இருப்பதை விளக்க விசிஷ்ட அத்வைதம் பிறந்தது.

இதில் நாயகன் நாயகி இருவரும் ஒருவரை ஒருவர் மிக ஆழமாக நேசிப்பவர்கள்.அவளுக்கு சந்தேகமே கிடையாது அவனுடைய காதலைப் பற்றி. அவள் வளைந்து கொடுப்பதையோ பணிந்து நடப்பதையோ எதிர்பார்க்காமல் எல்லையில்லாத அன்பைச் செய்து அவளை மேலும் மேலும் ஆச்சரிய சுகங்களில் மூழ்கவைப்பான் அவன்.[கவனிக்க.வளைந்துகொடுப்பது போக்ருத்வம் பணிந்து நடப்பது சேஷத்வம்] அதற்காக அவள் அவனின் மேல்விழும் தாராளத்தையும்[பாரதந்த்ர்யம்] அனுபவ சுகத்தையும்[போக்ருதை] taken for granted ஆக எடுத்துக் கொண்டு அலட்சியமாக இருப்பதில்லை. இது உத்தம தம்பதிகளின் லட்சணம் தானே ?

இந்த நிலையில் ஆண்டாளின் தூமணிமாடத்து cousin [மாமன் மகள்] எடுத்த முடிவு என்னவென்றால் தான் லயிக்கும் சேஷத்துவமும் போக்ருத்வமும் பிரயோசனமில்லை. அவன் வரிக்கப் போகும் பாரதந்த்ரியமும் போக்ருதையும் தான் உத்தமம் என்பது. அதாவது தான் காதலிப்பவனை விடத் தன்னைக் காதலிப்பவனே கடைசி வரை காப்பாற்றுவான் என்ற முடிவு. அப்பாடா! ஒரு வைஷ்ணவ தத்துவத்தை விளக்கி விட்டேன்.

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய

தூபம் கமழ துயிலணைமேல் கண்வளரும்

மாமன் மகளே!மணிக்கதவம் தாள் திறவாய்!

மாமீர்!அவளை எழுப்பீரோ உன்மகள் தான்

ஊமையோ ?அன்றிச் செவிடோ அனந்தலோ!

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ!

மாமாயன் கோவிந்தன் வைகுந்தனென்றென்று

நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.[திருப்-9]

உடமைப் பொருளைக் காப்பாற்றுவது உடையவனுக்கே பாரம் என்றும்கிருஷ்ணன் வந்து தன்னை ஏற்றுக் கொள்ளும்போது கொள்ளட்டும் என்றும் நிம்மதியாக படுத்திருக்கும் ஒரு கோபிகையை எழுப்புகிறார்கள் இந்தப் பாட்டில்.

சொந்த மாமன் மகளை உறவு முறையுடைய பெண்ணை அழைக்கவந்து ‘மணிக்கதவம் தாள் திறவாய் ‘ என்ற பின்னும் அவள் வாய் திறவாமல் படுத்திருப்பது எரிச்சலாகிறது வெளியே இருப்பவர்களுக்கு. பரிசுத்தமான மாணிக்கங்களை அழுத்திச் சமைத்த மாளிகையில் நாற்புறமும் அகில் முதலியவற்றின் வாசனைப் புகைகளின் மணம் கமழவும் விளக்குகள் எரியவும் மென்மையான படுக்கையில் நித்திரை செய்கின்ற மாமன் மகளைப் பார்த்தால் இருட்டில் வெளியே நிற்பவர்களுக்குப் பற்றிக் கொண்டு வராதா ? [இவள் பரவாயில்லையே! எந்த தைரியத்தில் இவள் தான் பாட்டுக்குப் படுத்திருக்கிறாள் ?]

‘மாமீர், இவள் ஒருத்தியை அழைத்துச் செல்லவென்று நாங்கள் படும் பாட்டைப் பார்த்தீர்களா ?[விட்டுப் போக முடியாமல் உறவுமுறை வேறு] நாங்கள் நெடும்போதாகக் கூவியும் இவள் மறுமாற்றம் செய்யாமலிருக்கிறாளே!உமது மகளை எழுப்பக்கூடாதா ? அவள் என்ன வாய் பேசாதவளா ? எங்கள் பேச்சைக் கேட்டு பதில் சொல்ல இயலாதபடிக்கு செவிடாகிவிட்டாளா ?[தூக்கமருந்து உட்கொண்டதுபோல] பேருறக்கம் பிடித்தவளா ? அல்லது இவளைப் படுக்கையோடு எழுந்திருக்கமுடியாதபடி காவலிட்டு விட்டார்களா ?மந்த்ரவாதத்தினால் சர்ப்பத்தைக் கட்டுவது போல இவளுக்கு மந்திரம் போட்டு விட்டார்களா ? எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லையே! ‘ என்றார்கள்.

‘அதெல்லாம் ஒன்றுமில்லை, கொஞ்சம் சோம்பல் அவ்வளவு தான், நீங்களெல்லாம் அவளூக்குப் பிடித்த மாதிரி கிருஷ்ண நாமங்களைச் சொன்னீர்களானால் தானாக எழுந்து வந்து விடுவாள் ‘ என்றார் மாமி. திருவாய்மொழியில் நம்மாழ்வார் திருந்துலைவில்லிமங்கலத்தை வர்ணிக்கும்போது ‘துவளில் மணிமாடமோங்கு திருவில்லி ‘ என்று ஆரம்பிப்பார். அந்த மணிமாடத்தைச் செய்த போது நிறைய மாணிக்கங்களைக் குவித்துக்கொண்டு அவற்றில் துவள் எடுத்து எறிந்து எஞ்சியவற்றால் மாடம் செய்தார்கள். அது அவனுக்கு. இது தூமணிமாடம். துவள் எடுக்கவேண்டிய அவசியமேயின்றி highclass material வைத்துக் கட்டியது. இது இவளுக்கு. அது தான் அவள் நம்புகிற பாரதந்த்ர்யம். அவன் அதிகமாக இங்கு தானே இருக்கப் போகிறான் ?

மணிமாளிகையானதால் மணிக்கதவு தாளிடப் பட்டிருந்தும் சுவர்கள் கண்ணாடிபோல உள்ளூம் புறமும் தெரியும்படி இருந்தது. அதன் வழியாகத்தான் அவர்கள் அவள் படுக்கையில் படுத்திருப்பதையும் அகிற்புகையையும் விளக்குகளையும் பார்த்தார்கள்.

மாமி சமாதானம் சொல்லவும் , மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்று என்றார்கள். நாமங்களின் இந்த வரிசையில் விசேஷம் இருக்கிறது. இந்த கிருஷ்ணன் அபலைப் பெண்களின் மனதைக் கவரவென்றே பல மாயங்களைச் செய்து கோகுலத்தில் வளருகிறவன் இங்கேயே கிடப்பவன் என்று நினைக்கவேண்டாம்.இவன் மாதவனும் கூட,இடக்கை வலக்கை அறியாத இடைச்சிகளோடு மலர்மகளையும் மார்பிலே அழுத்திக் கொண்டவன்.அவன் மாதவனானபின் நேரே பாற்கடல் போக வேண்டியிருக்கும் நாம். இப்படிப் பெண்களை மட்டும் ஜெயித்தவனல்லன் அவன். கண் மூடாமல் அவனைப் பார்த்தபடியே சேவகம் செய்யும் அமரர்களின் தேசம் ஒன்றிருக்கிறது. அவன் வைகுந்தனானபின் நாம் போக வேண்டியது மே…லே. மாமாயனான அவன் கண்ணனாக இருக்கிறானே என்று ஆறியிருக்கும்போது மேல் அடுத்த அடுத்த நிலைகளுக்குத் தாவி விடுவான். அதற்குள் பிடித்தாக வேண்டும். நாமம் சொல்லுங்கள் என்றார் மாமி. நாராயணனின் மேன்மை நாமமிரண்டும் நீர்மை நாமம் ஒன்றுமாக ஆயிரம்நாமத்துக்கீடான நாமங்களைச் சொல்லிவிட்டோம் [நாமம் பலவும் நவின்று என்று மூன்றே நாமம் சொன்னதைக் கவனிக்க.] அவன் வரட்டும் என்ற உன் சித்தாந்தத்தை உன் வரை வைத்துக் கொள். எங்களுக்காக நீ வா என்கிறபடி அழைத்துப் போகிறார்கள்.

நீ இல்லை என்றால் நாங்கள் எங்கே போவது ? ஸ்ரீமதே ராமானுஜாய நம: என்று நான்காவது குருவை அழைத்துக் கொண்டாயிற்று. திருமழிசை ஆழ்வாரைப் பாசுரம் குறிக்கிறது. ப்ருகுவின் மகள்பார்க்கவி தான் மஹாலட்சுமி. அவளுடன் பிறந்தவர் பார்க்கவமுனிவர். பார்க்கவரின் மகன் தான் திருமழிசை ஆழ்வார். லோக மாதாவின் சகோதரர் லோகத்துக்கு மாமனானதும் அவர் மகன் உறவு முறையானதும் இப்படித்தான். மாமன் மகளே! என்று அழைக்கப் பட்ட பெண் எழுந்து வந்தாயிற்று.


10. நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்!

நாற்றத்துழாய்முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ

ஆற்ற அனந்தலுடையாய்!அருங்கலமே!

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்[திருப்-10]

ஏராளமான தவப் பயனால் இடையீடன்றி கண்ணனுடன் சுவர்க்கானுபவம் பெற்று வருகின்ற பெரீய்ய அம்மணி! என்று ஒரு அர்த்தம். [ஏதம்மா ? இருப்பது ஏழாவது ஸ்வர்க்கமோ ? என்கிறபடி]

நோன்பு நோற்று கிருஷ்ணானுபவம் பண்ணலாம் என்று நேற்றிரவு விடியவிடியப் பேசிவிட்டு படுக்கப் போனவங்களா அம்மா தாயே நீங்க ? என்பது இன்னொரு அர்த்தம்.

எல்லாருமாகக் கூடி நோன்பு நோற்று கிருஷ்ணானுபவம் பெறலாம் என்று சொல்லி எங்களைக்கூப்பிட்டுத் தான் மட்டும் தனி நோன்பு செய்து சுவர்க்கம் போகப் புறப்பட்டாயா ? என்று மூன்றாவது அர்த்தம்.

இதில் முதல் கருத்துக்கு அடிப்படை இந்தப் பெண்ணின் வீடு கண்ணன் வீட்டுக்கு அடுத்த வீடு. ஒரு வேலிப் படலையோ மதிலையோ தாண்டி குதித்தால் கண்ணன் இந்தப் பெண்ணின் படுக்கை அறைக்கு வந்துவிட முடியும்.

இந்தப் பெண்ணோ இவர்களெல்லாம் கண்ணனுக்காகப் படுகிற பாட்டை அவன் தனக்காகப் படுமாறு படுத்தி வைக்கக் கூடியவள்.கூட்டத்திலேயே மிகவும் எடுப்பானவள்.

சுவர்க்கம் என்ற சொல் ஸ்வர்க்கம் என்ற வடமொழிச்சொல்லின் திரிபாக தமிழில் கையாளப்பட்டது. ‘யஸ் த்வயா ஸஹஸ ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா ‘ என்றாள் சீதா இராமனிடம். நீ உடனிருந்தால் அது சுவர்க்கம் இல்லாவிடில் அதுவே நரகம் என்றபடி உள்ளே சுவர்க்கம் புகுந்தாயோ என்ற கேள்விக்குக் கண்ணன் அங்கே உண்டோ என்ற சந்தேகம் தொனியாயிற்று.

என்னைப் போய் சிநேகிதமில்லாமல் பிரித்துப் பேசுகிறார்களே, அம்மா தாயே என்கிறார்களே என்று வருத்தப் பட்டபடி உள்ளிருக்கும் பெண் வெளியே இருப்பவர்களின் இனிமையான குரல்களை ரசித்துக் கேட்டபடி படுத்திருந்தாள்.

‘தோ பார்ரா, கதவைத் தான் திறக்கலை, வரேன் வந்திட்டிருக்கேன் அப்படியின்னு ஒரு பதில் கூடவா சொல்ல முடியலை ? ‘

சொர்க்கத்திலெ இருந்தபடியே ஒரு பதிலைச் சொல்றது! அவ்வளவு பெற மாட்டோமா நாங்க ? ‘

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் என்ற வரிகள் வெளியே காத்திருக்கும் கூட்டத்தை நோக்கி பேசப் பட்டவை.

‘வீண்பழி சொல்லாதீர்கள்.கிருஷ்ணன் இங்கில்லை ‘என்று உள்ளிருப்பவள் கூவிச் சொன்னாள். ‘நீ சொன்னால் ஆயிற்றா ? நீ மறைத்தாலும் துளசி வாசனை இங்கு கமழ்ந்து உண்மை தெரிந்து போய்விட்டதே! ‘என்று தாம் கண்டுபிடித்ததைக் காண்பிக்கும்படிக்கு ‘நாற்றத்துழாய் முடி ‘என்ற வார்த்தையைப் போட்டார்கள். திருத்துழாய் வாசனையை மோப்பம் பிடித்து கண்டுபிடித்ததாகப் பேசுகிறீர்களா ? விடிய விடியப் பேசிவிட்டு அந்தப் பக்கம் பொனீர்கள்.திரும்பிப் பார்த்ததும் விடிந்துவிட்டது என்று வந்து நின்று மதில் காவல் கிடக்கிறீர்கள். இதில் உங்களுக்குத் தெரியாமல் எந்தக் கண்ணன் உள்ளே வந்துவிட முடியும் ? என்று கோபப் பட்டாள் உள்ளிருப்பவள்.

‘அவனுக்கு என்ன ஒரு கதவு ஒரு மதில் ஒரு வேலி இதெல்லாம் கணக்கா ? எங்களைப் போல வெளியே நின்று கதவு திறக்கப் படும் வரைகாத்திருக்க வேண்டுமா ? அவன் நாராயணன் என்று உனக்குத் தான் தெரியாதா ? எங்களுக்குத் தான் தெரியாதா ? நினைத்த மாத்திரத்தில் எங்கு வேண்டுமானாலும் தோன்றக்கூடியவன், மறையவும் கூடியவன் ‘ என்கிறதாக நாற்றத்துழாய் முடி நாராயணன் என்றார்கள்.

உள்ளிருப்பவளுக்கு வெறுத்துவிட்டது. அசந்து தூங்குவதாக பாவனை செய்து குறட்டையும் விட்டாள்.

அதைக் கேட்டவர்கள் ‘கும்பகர்ண ‘னும் தோற்று உன்னிடம் தன் உறக்கத்தைத் தந்து போனானோ ‘ என்றார்கள்.

சுமாலியின் மகள் கேகஸியின் இரண்டாவது மகன் கும்பகர்ணன். இராவணனின் தம்பி. இவன் பெரிய வீரனும் புத்திசாலியும் நல்லவனும் ஆவான். மழையிலும் குளிரிலும் பஞ்சாக்கினியிலும் வீற்றிருந்து கடும் தவத்தைப் பண்ணி பெரிய தவப் பயனைச் சேர்த்து விட்டபின் அவன் புத்தி மாறியது.அபரிமிதமான தவச் செல்வம் பெற மீண்டும் தவத்துக்கு உட்கார்ந்தான். அப்போது தேவர்கள் பிரும்மாவிடம் ‘இவன் இப்போது துஷ்டனாகி விட்டான்.சாதுக்களை நலியும்படி கொடுமை செய்கிறான்.நேற்று நந்தவனத்தில் ஏழு அப்ஸரஸ்களையும் தேவேந்திரன் பணியாளர்கள் பத்து பேரையும் பிடித்துத் தின்றான். அனேகம் முனிவர்களை மானுடர்களை அப்படியே தின்றிருக்கிறான்.இவன் தவத்துக்கு வரம் கொடாமல் தப்பித்தால் உலகம் பிழைக்கும் ‘என்றார்கள். பிரம்மாவும் பெரிய வரம் ஏதும் இல்லாமலே இந்தத் துயரம்செய்யும் இவன் வரம் பெற்றபின் என்ன செய்வானோ என்ற பயத்தில் வாக்கு தேவதையான சரஸ்வதியை வேண்டி அவன் வரம் கேட்கும் சமயத்தில் நாக்கைத் திருப்பிப் போடுமாறு பணித்தார்.அவளும் அப்படியே செய்ய ‘நித்தியத்துவம் ‘ கேட்க வந்த கும்பகர்ணனுக்கு வரம் கேட்கும் சமயம் நாக்கு குளறி ‘நித்திரத்துவம் ‘ என்று வார்த்தை வெளியே வந்தது. அப்படியே பன்னெடுங்காலம் ஒரே தன்மையனாய் உறங்கி வாழும்படி வரம் அளிக்கப் பட்டது அவனுக்கு.

கும்பகர்ணன் இந்தப் பெண்ணுக்குத் தோற்றது எப்படி ?

சிற்பிகளோ ஒவியர்களோ போட்டி வைத்துக் கொண்டால் என்ன செய்வார்கள் ? நாமிருவரும் ஒரே நாள் ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் நம் கலையை ஆரம்பிப்போம்.பிறகு தனித் தனியே கலையைப் பூர்த்தி செய்வோம் நடுவர்களை அழைத்து யார் கலைப் படைப்பு சிறந்ததென்று கேட்போம் யார் படைப்பு இகழப் படுகிறதோ குறையுள்ளதோ அவர் தோற்றபின் கலையை வெற்றிபெற்றவரிடம் விட்டுப் போய் விட வேண்டும் என்று நிபந்தனை போட்டுப் போட்டியை ஆரம்பித்துக் கொள்வார்களல்லவா ? அப்படி இந்தப் பெண் கும்பகர்ணனிடம் சொன்னாள். உன்னைவிட நான் அதிக நேரம் தூங்குவேன் என்று. பார்க்கலாமா ? என்று போட்டி வைத்துக் கொண்டார்கள். நடுவர்கள் நின்றார்கள். கும்பகர்ணன் எழுந்துவிட்டான்.இந்த அம்மாள் அப்புறமும் எழுந்திருக்கவில்லை. நடுவர்கள் முடிவு செய்தார்கள் இவள் ஜெயித்ததாக. தோற்ற கும்பகர்ணன் தன் கலையை அதாவது தூக்கத்தை அவளிடம் ஏற்கனவே இருந்த தூக்கத்தோடு அதிகப் படியாக கொடுத்துச் சென்றான்.

‘பரசுராமனை வென்று இராமன் அவன் கை வில்லை வாங்கினாற்போல நீ கும்பகர்ணனை வென்று அவன் நித்திரையைக் கை கொண்டாயோ ?அவனது துயில். உன்னதோ பெருந்துயில்.அவன் தூங்கி ஒரு சீதையைத் தான் இராமனிடமிருந்து பிரித்து வைத்தான்.நீ தூங்கி ஒரு ஊர் முழுக்கவுமான பஞ்சலட்சப் பெண்களைக் கிருஷ்ணனிடமிருந்து பிரித்திருக்கிறாய், அவன் ஆறு மாதம் தூங்கி ஆறு மாதம் விழிப்பான். உனக்கு ஒரே தூக்கம் தான். காலம் காலமாகத் தூங்குவாய் போலிருக்கிறது ‘என்றார்கள்.

போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணன் என்றார்கள். நாம் பாடிப் புகழ்ந்தால் அவனிடமிருந்து புருஷார்த்தம் பெறலாம்.அவன் நாராயணன்.அவனே கிருஷ்ணம் தர்மம் சநாதனம் என்று சொல்லப் பட்ட கிருஷ்ணன். அவனே ராமோ தர்மவான் விக்ர: என்று சொல்லப்பட்ட புண்ணியன். புண்ணியம் என்பதே அவன் தான். அவனுடைய அப்ரீதி பாபம்.ப்ரீதி புண்ணியம். நம் பக்தியும் நற்கருமமும் நம்மைக் காப்பாற்றுவதில்லை. அவை நம் நாளைத் திருப்தியாகக் கழிக்க உதவுகின்றன. நம்மைக் காப்பது புண்ணியனான அவனுடைய முழுக் கருணைதான் என்ற கருத்து வெளிவருமாறு புண்ணியன் என்றார்கள்.

புண்ணியன் எங்காவது ஒருவனின் மரணத்துக்குக் காரணமாவானா ? குடி நீருக்கென்று வெட்டிவைத்த ஒரு குளத்தில் கல்லைக் கட்டிக் கொண்டு தலைகீழாக விழுந்தாற் போல கும்பகர்ணன் சரணாகத வத்சலனிடம் கருணையை வாங்கிக் கொள்ளாமல் மரணத்தை வாங்கிக் கொண்டான். அதற்கு இராமன் என்ன செய்ய முடியும் ? எனவே புண்ணீயனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணன் என்றார்கள்.

அவனிடமிருந்து துயிலை வாங்கிக் கொண்டாய் என்றவுடன் உள்ளிருப்பவள் ராட்சசனோடு அரை நிமிடம் அதிகம் தூங்கின என்னை ஒப்பிட்டார்களே என்று வெட்கி எழுந்தாள். தூக்கக் கலக்கத்திலும் அவள் அழகு ஜ்வலிக்க ‘ஆற்ற அனந்தலுடையாய்[அளவற்ற தூக்கம் உடையவளே!]அருங்கலமே! தேற்றமாய் வந்து திற![ கிடைத்தற்கரிய ஆபரணம் போன்றவளே! உடை முடி எல்லாம் சரியாக்கிக் கொண்டு வா. லட்சுமணன் முன் தாரை வந்து நின்றது போல அலையக் குலைய வந்து நிற்காதே பவ்யமாக பொதுச் சபையில் தோன்றுவதற்குரிய கண்ணியத் தோற்றத்தோடு வா என்றார்கள்.லட்சுமணன் ராமகாரியத்தில் தாமதம் செய்த சுக்ரீவனின் அந்தப்புறக் கதவை அம்பால் துளைத்ததும் தாரை ஓடி வந்ததும் நினைவு கூறப் பட்டது.

அம்மனாய் என்று அழைக்கப் பட்டவர் குலசேகராழ்வார்.

தருதுயரம் தடாயேல் உன் சரணல்லாற் சரணில்லை

விரை குழுவும் மலர்ப் பொழில் சூழ்

வித்துவக் கோட்டம்மானே

என்று பாடியவர். ஸ்ரீபராங்குசதாசாயநம: என்று ஐந்தாவது குருவை அழைத்துக் கொண்டார்கள்.


11.நியமத்தைக் கைவிடாத கோவலனின் அறச்சிறப்பு

[கோவலர் தம் பொற்கொடி]

ஊருக்கெல்லாம் கண்ணபிரான் ஒரு செல்லப் பிள்ளையானால் இப்போது கூப்பிடப்படுகிற பெண் ஊருக்கே ஒரு செல்லப் பெண் என்று கொண்டாடப் படுபவள்.

விவாதத்துக்கும் விவாகத்துக்கும் சாம்யம் முக்கியம். அப்பை சப்பையோடு விவாதித்து எந்தக் கருத்தையும் புரியவைக்கமுடியாது.சமமான திறமையுடன் உள்ளவன் வாதிடும்போது பேச்சாளனுடைய படிப்பும் கேள்வியும் பீறிக்கொண்டு வெளியில் விழும். அப்படியே புத்தியிலும் தோற்றத்திலும் குணத்திலும் சமமாக இருக்கக்கூடிய பெண்ணைஅடைவது ஒரு ஆடவனுடைய கனவாக இருக்கும்.அப்படி கண்ணனோடு எல்லாவகையிலும் சாம்யம் பெற்ற ஒரு பெண்ணை இந்தப் பாட்டில் எழுப்புகிறார்கள்.

கற்றுக்கறவைக் கணங்கள் பல கறந்து

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!

புற்றரவல்குல் புனமயிலே!போதராய்!

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து உன்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாடச்

சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டிநீ

எற்றுக்குறங்கும் பொருளேலொர் எம்பாவாய்.[திருப்11]

கெளஸ்துபம் என்ற மணி அவதாரமெடுத்துப் பிறந்த குலசேகர ஆழ்வார் கீழ்ப் பாட்டில் அழைக்கப் பட்டது போல கருடபிரானின் அவதாரமான பெரியாழ்வார் இந்தப் பாட்டில் எழுப்பப் படுகிறார்.

எப்போதும் இமையாமல் பரமனைப் பார்த்தவாறே இருக்கிற தேவர்கள் எப்படி மூப்பு நரை திரையின்றி இளைஞர்களாகவே இருப்பார்களோ அப்படி எப்போதும் கண்ணனின் ஸ்பரிசம் பட்டு பசுக்கள் கன்றுகளாக இருக்கவைத்தே செழிப்பாய் வளர்ந்து கன்றுபோட்டு பால் கறக்க ஆரம்பித்துவிட்டன கோகுலத்தில்.ஏற்கனவே கறவைகளாயிருந்தவை இளகிப் பதித்து முதுமை ஒட்டாமல் அப்படியே இருந்தன. ஆக கன்றுக்கறவைக்கணங்கள் பல இந்த வீட்டிலும் இருந்தன என்று ஒரு விளக்கம். நிறைய கன்றுகளையுடைய கறவைக் கூட்டங்கள் என்றும் ‘கற்றுக் கறவைக் கணங்கள் பல ‘ என்ற வார்த்தைக்கு சிலர் பொருள் சொல்கிறார்கள்.ஆனால் முதல் விளக்கம் தான் சரியானது. ஏனெனில் கறவை என்பதிலேயே கன்றுடைமை தெரியவரும் இன்னமும் கன்றுடைய கறவை என்று சொல்வதில் அர்த்தமில்லை. கன்றாக இருந்தவாறே கறவையானது,முகத்தில் கன்று தன்மையும் உடலில் கறவைத் தன்மையும் உடையது என்பதிலேயே சிறப்பு அதிகரிக்கிறது. இளைஞனாக இருக்கும்போதே அமுத வாக்கு பொழிகின்ற உத்தம ஆசாரியர்களைப் போல.

இந்தப் பாசுரத்தில் ஆடாமல் அசங்காமல் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணின் தகப்பன் மிகச் சிறந்த உழைப்பாளி.அவன் ஒருவனே தன் வீட்டுக் ‘கற்றுக்கறவைக் கணங்கள் பல ‘வற்றையும் கறந்துவிடுவான்.அது ஒன்றே அவனுடைய தினசரித் தொழில். அத்தோடு நில்லாமல் அவன் பிரமாதமான சண்டைக்காரன்.அவனுக்கு வந்த சண்டையை மட்டும் தான் கவனிக்கவேண்டும் என்ற எண்ணமில்லை.கோபால குலத்தவனுக்குப் போரிடுதல் முறையில்லை என்று அவனுக்குச் சும்மா இருந்துவிடமுடியாது. ஊருக்கோ கண்ணனுக்கோ ஒரு பிரச்னை என்று வந்தால் விவகாரம் கிட்டே வந்து அவன் வீட்டுக்குள் நுழையும் வரை அவன் காத்திருப்பதில்லை. தகராறு முளைத்தவுடன் பகைசெய்தவர்களின் கொழுப்பு அடிக்கிழங்கோடு தகர்ந்து தூக்கியெறியப் படும் விதத்தில் பகை முகாமுக்கே போய் சண்டையிட்டு வென்றுவரும் குணம் அவனுடையது. தம் காரியம் தாம் பார்க்கும் கோபாலருக்குப் பகை ஏது என்று கேட்டால் கண்ணனின் பகை கோபாலருக்கும் பகை என்று யூகிக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்கான நேரடிக் காரணமில்லாமல் இராவணன், இராமப்ரேமையை முன்னிட்டு வானரர்களுக்குப் பகையானபடிக்கே கம்சன் கோபாலர்களின் பகையானான்.அவன் இடையர்களுக்கு அரசியல் ரீதியாக தொந்தரவுகளைத் தர அவர்கள் அங்கங்கு மோதி விஷயங்களைத் தீர்க்கவேண்டியிருந்ததை ஆண்டாள் வரிகளில் புரிந்துகொள்ள முடிகிறது. வீட்டுக்காரனின் தன்மையில் குற்றமே கிடையாது என்பது ஆண்டாளின் ‘கணிப்பு ‘ இங்கு குற்றம் பற்றி என்ன பேச்சு என்று நினைக்கலாம். ஆண்டாள் குறிப்பிடுவது அவன் வேறு யோக ஞான,பக்தி அனுஷ்ட்டானங்களைச் செய்யாமல் இருப்பது பற்றி.

தன் வேலையைப் பார்க்கிறான்.ஊர் defence க்குப் போகிறான்.பின்னும் மூன்றாவதாக எதையும் செய்யவேண்டிய அவசியமில்லை.கர்மயோகி போல தன் வேலையைத்தான் பார்க்கும் அவன் உயர்ந்தவன் அவனுடைய புதல்வி ‘பொற்கொடி ‘ என்று அழுத்தம் திருத்தமாக certificate வழங்குகிறாள் ஆண்டாள். கற்றூக் கறவைக் கணங்கள் பல கறந்து செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும் குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே என்பது படுத்திருப்பவளுக்கு சிறப்பு விளியாயிற்று.

சென்று செருச் செய்வது சக்கரவர்த்தித் திருமகன் செய்தது போல பகைமுகாம் போய் இராவணனை ஜெயித்து வந்தது போல.

குற்றமில்லாமை என்பது கோவலர்களின் குலத்துக்கு எதுவெனில் பிரயோசனம் எதிர்நோக்காமல் கர்மானுஷ்டானம் செய்வது.அந்தக் கோவலர் குலத்தின் ஒற்றை வம்சக் கொடி அதிலும் பொன்னாலான கொடி உறங்குபவள். ‘மெல்லிய இடையும் பாம்பின் படம் போன்ற பின்பக்கமும் கிருஷ்ணனைப் பிச்சேற்றவல்ல மயில் போன்ற அழகும் உடையவளே!நீ எழுந்து வரவேண்டும் ‘என்கிறபடி எளிமையான வர்ணனை. ஆழம் வைக்காமல் பேச ஆண்டாளுக்கு வராதே! ‘புற்றரவல்குல் புனமயிலே போதராய் ‘என்கிற phrase இன்னும் கூர்மையானது. ‘வெய்யிலிலடியுண்டு புழுதிபடைத்த அரவுபோலன்றிக்கே தன் நிலத்திலே வாழும் பாம்பின் படமும் கழுத்தும் போலேயிருக்கை ‘ என்பது வியாக்கியானம். புற்றில் இருந்து தலை காட்டும் நாகத்தின் படத்தையொத்த பளபளப்பு அவளுடைய இடையில். அவயவ சோபை அவளிடம் அதோடு முடியவில்லை.அவளுக்கு மயிலின் சாடை. எப்படிப்பட்ட மயில் என்றால் ‘புலம் பெயர்ந்த மயில் ‘ அல்ல. அது வாடிக்கிடக்கும்.தன் புனத்தில் தன்னிச்சையாக இருக்கும் மயில்.சுதந்திரமாக ஆடிப் பாடிக் களித்திருக்கும் மயில். இன்னொரு காட்டுக்குப் பிடித்துப் போகப் படாத தன் புன மயில் அவள். தன்னிலத்திலே நின்ற மயில்தோகை போல கூந்தலை உடையவளே எழுந்திரு என்றார்கள்.

ஸ்வாபதேசம் என்ற பெயரில் முழு தத்துவார்த்த விளக்கத்தைத் திருப்பாவைக்குப் பெரியவர்கள் செய்து வைத்தார்கள். வேதாந்தம் ஜனரஞ்சகத்தைக் குறைத்து என் புரிபாட்டைப் பாதிக்கும் என்று மட்டும் நான் அதைத் தவிர்க்கவில்லை. Down to the earth policy என்று சொல்லப்பட்ட லோகாயதப் புரிதலுக்காகவே அவதரித்த ஆண்டாளின் அடிநோக்கத்தைக் கெடுத்து விடுவோமோ என்ற பயமும் கூட.எந்தமின் மின்னணு சக்தியும் earthfactor இன்றி இயங்க முடியாது. ஆண்டாளே earth என்பது ஒரு அழகான irony.அவள் நிலம் தொடுகிற விஷயங்களிலேயே மனதைச் செலுத்தியிருக்கிறாள்.லட்சியக் காற்றாடிகளை நாம் நிலத்தில் நின்றபடியே அலைக்கவிடுகிறோம். விடுபட்ட காற்றாடிஅறும். மாட்டிக்கொள்ளும்.காலைப் பதியவிடாமல் திட்டமிட்ட பறத்தலுக்குக் கூட உந்துசக்தி கிடைக்காது, அப்படி ஆண்டாள் மிகுந்த ஈடுபாட்டொடு தினசரி வாழ்வியல் கடப்பாடுகளைப் பின்பற்றும் அவசியங்களை எப்போதும் சொல்லியபடி இருக்கிறாள். ‘கீசுகீசு ‘ பாசுரத்தில் பெண்கள் வாழ்வியல் ஒழுங்கைச் சொன்னது போலவே இந்தப் பாசுரத்தில் ஆண்களின் வாழ்வியல் ஒழுங்கை அழுத்திப் பேசுகிறாள்.கற்றுக்கறவைக்கூட்டங்களை உடையவன் எப்படி தற்காப்பு மேற்கொள்ள இடையில் time management செய்கிறான் என்பதையும் பெண்கள் தயிர்கடைதலூடே நாமசங்கிர்த்தனம் செய்வதைக் கோடியிட்டதைப் போலவே விவரிக்கிறாள்.நேரமில்லை என்று சொல்லிக்கொண்டு நாம் அறம் சார்ந்த செயல்களையும் அறத்தார் சார்ந்த கடமைகளையும் தவிர்ப்பதை கேலி செய்கிறாள்.

அதனால் ஸ்வாபதேசத்தில் முக்கியமான சில அம்சங்களை மட்டும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதால் ஓரிரு புள்ளிகளை நான் வைக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.திருப்பாவையில் ‘தாய் ‘ ‘யசோதை ‘ என்று வருமிடங்கள் திருமந்திரம் என்றும் ‘தந்தை ‘ ‘காவலன் ‘ ‘நந்தகோபன் ‘ என்று வருமிடங்கள் ஆசார்யன் என்றும் ‘கண் ‘கண்ணழகு ‘ ‘மை ‘என்று வருமிடங்கள் ஞானம் என்றும் ‘இதழ் ‘ ‘மலர் ‘ ‘வாசம் ‘ ‘அல்குல் ‘ ‘இடை ‘என்ற இடங்கள் பக்தி என்றும் அறிக. இந்தப் பாசுரத்தில் இடையும் அல்குலும் ஏன் சொல்லப் பட்டன ?அவற்றின் சோபிதம் கிருஷ்ணனுக்குப் பிரியமானவை என்ற உருவகம் தத்துவக் கோட்பாட்டில் எப்படிப் பொருந்துகின்றன ?

உடலின் மேல்பாகத்தில் தலை முக்கியம்.தலையின் உள்ளீடு intellect எனப் பட்ட ஞானம். கீழ்ப்பாகம் யோகத்தின் அங்கமான நடவடிக்கைகளின் காரணி.அதனால் கீழுக்கும் மேலுக்கும்நடுவில் இடை போல ஞானத்துக்கும் யோகத்துக்கும் நடுவில் பக்தி இருக்கிறது.ஞானம் பெறப் படுவது.யோகம் பெறப் படுவது.பக்தி பெறப் படுவதல்ல. உள்ளார்ந்தது.அதுவே அதாகவே இருந்து பரிமளிப்பது. மனைவி புத்திசாலியாயிருப்பதும் காரியங்களைச் செய்ய வல்லவளாயிருப்பதும் அவள் வளர்த்துக்கொண்ட திறமைகள். அன்பாக இருப்பது அவளுக்கே வாய்த்தது. புருஷனுக்கே உரியது. ஜீவ பரம சம்பந்தத்தை ஆண்பெண் உறவில் பார்க்கும்போது கிருஷ்ணனுக்குக் கிளர்ச்சியூட்டக் கூடிய இடையும் அல்குலும் குறிப்பிட்ட கோபிகைக்கு இருப்பதாகச் சொல்வது அந்த ஜீவாத்மாவின் ‘பக்தி ‘ பிரகாசித்தது என்பதை விளக்க. ஞான பக்தி யோக வரிசையில் இடைப்பட்டது பக்தியல்லவோ! போகத்துக்கு இடையும் இடை சூழ்ந்த அழகும் முக்கியம் என்பதில் கிருஷ்ணாம்ருத நீராட்டமான கலவி அழகிய பூடகமாகிறது. இவ்வளவு போதும் இங்கு ஸ்வாபதேச விளக்கம்.

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் அவளுக்கு மிக நெருக்கம். எல்லாரும் வந்து அவள் முற்றத்தை நிறைத்தாயிற்று. அத்தோடு அவர்கள் மேகவண்ணனான கண்ணன் பெருமையை பாடுகிறார்கள். மேகம் கண்டால் மயில் ஆடுவது போல முகில் வண்ணன் பேர் கேட்ட மாத்திரத்தில் புனமயில் ஆட வேண்டாமா ? ஓடி வரவேண்டாமா ?

இன்னமும் சிற்றாது பேசாது கிடந்து நீ உறங்குவதற்கு என்ன பொருள் ? நாம் எல்லாருமாய் உன் வீட்டு முற்றத்தில் சிற்றில் இழைத்து விளையாடினதும் ‘முற்றம் புகுந்து முறுவல் செய்தீர் ‘என்றபடி பூட்டிய வீட்டின் உள்முற்றத்தில் கண்ணன் வந்து சிற்றில் சிதைத்து நம்மை அழ வைத்ததும் எல்லாமான ஞாபகங்களோடு தோழிகள் கூடிவிட்டார்கள்.நீ உகக்கும் கண்ணன் திரு நாமங்களைச் சொல்கிறார்கள். நீ எங்களிடையே வந்து நின்று உன் அழகிய தோற்றத்தால் எங்களை மகிழ்வித்து எங்கள் கூட்டத்துக்கு இன்னும் சிறப்பைத் தரவேண்டும் என்றார்கள்.

‘விட்டுசித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனைக் கொழுங்குளிர் முகில் வண்ணனை ‘ என்று பெரியாழ்வார் திருமொழி 5-4-11ல் வருவதை இரு வார்த்தைகளில் முத்திரையாக்கிப் பெரியாழ்வாரைக் குறிக்கிறாள் ஆண்டாள். ஸ்ரீமத் யாமுந முநயே நம: என்பதாக அடுத்தகுரு எழுப்பிக் கொள்ளப்பட்டார்.

12.அநியமத்துக்கும் அதே பாராட்டு

கீழ்ப் பாசுரத்தில் நியமத்துடன் நடந்த கோபாலனை குற்றமொன்றில்லாத கோவலர் என்று கொண்டாடிய ஆண்டாளைப் பார்த்து ஆகா! அண்டாள் மெச்சிய மாதிரி இருக்கவேண்டும் என்று நினைத்திருப்பீர்கள். கதையைக் கந்தலாக்கி விட்டாள் ஆண்டாள்.இந்தப் பாசுரத்தில் தலைகீழ்ப் பாடம்.

எல்லாவற்றையும் விட்டவனை கடமை மறந்தவனை ‘நற்செல்வன் ‘ என்று விகுதி போட்டு அழைக்கிறாள்.நீங்களே இந்தப் பாசுரத்துக்குள் வந்து பாருங்கள்.இப்படியும் கட்சி மாற முடியுமா என்று பிரமிப்பீர்கள்.

கனைத்திளம் கற்றெருமை கன்றுக்கிரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!

பனித்தலைவீழ நின் வாசல் கடைபற்றி

சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச்செற்ற

மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய்திறவாய்!

இனித் தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்

அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.[திருப்-12]

இளங்கற்றெருமைகனைத்து கன்றுக்கிரங்கி நினைத்து முலைவழியே

நின்று பால்சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்

இளங்கற்றெருமை-நாட்கள் அதிகம் ஆகாத பச்சிளம் கன்றுகளையுடைய எருமைகள் கனைத்து-[தம் கன்றுகளுக்கு ஊட்டிவிட்டுப் பின் வழக்கம் போல் பால் கறப்பரில்லாமையாலே மடிகனத்து காம்பு கடுத்து அந்த வலி தாங்காமல் ] கதறிக்கொண்டு கன்றுக்கிரங்கி-தன் பச்சிளம் கன்றுகள் என்ன செய்கிறதுகளோ என்று இரங்கி நினைத்து முலைவழியே-கன்று வாய் வைத்ததாகவே நினைத்து அந்த பாவனை வசத்தில் மடிக் காம்புவழியே நின்று பால் சோர-இடைவெளியில்லாமல் பாலைத் தொடர்ந்து வழியவிட்டுப் பெருக்கி இல்லம் நனைத்து-வீட்டை ஈரமாக்கி சேறாக்கும்- அந்தப் பால் வெள்ளத்திலேயே மாறிமாறிக் காலால் துகைத்து உள் தூசும் வெளித்துகளும் பால்பட்டு சேற்றுகுழம்பாகும். நற்செவன் – அப்படி எருமைகளைக் கறக்காமல் விட்டுப் போன வீட்டுத் தலைவன், இளைஞன், கண்ணனிடம் தொண்டூழியம் புரிபவன்[லட்சுமணனைச் சொன்னது போல கைங்கர்யமான செல்வத்தைப் படைத்த பாக்கியசாலி] தங்காய்-[அவனுக்கு]தங்கையாகப் பிறந்தவளே!

இந்தப் பாட்டில் வரும் இளைஞன் வீட்டுக் கடமையை மறந்தவன். கற்றுக்கறவைக் கணங்கள் பல கறந்தவனுக்கும் இவனுக்கும் எவ்வளவு வித்தியாசம் ? எருமைகள் கதறுகின்றன.கன்றுகளத் தனியாகக் கட்டிவைத்திருக்கிறார்கள் பாதுகாப்பான இடத்தில் காலை எழுந்து கன்றுக்கு ஊட்டிவிட்டு பால் கறந்திருக்கவேண்டும்.காலையில் கண்ணனிடம் வேலையாகப் போன இளைஞன் வேலை பளுவினால் திரும்பவில்லை. அதற்குள் வீடு,எருமைகள் மடிவழியே முலைக்கடுப்பு தாங்காமல் வழியவிட்ட பாலால் சேறாகியிருக்கிறது.அதற்குள் இந்தப் பெண்களும் வந்துவிட்டார்கள் தங்கையை அழைத்துப் போக. எல்லாம் சரி. இந்த இளைஞன் எப்படி நற்செல்வன் என்ற அத்தாட்சிப் பத்திரம் வாங்கினான் ஆண்டாளிடமிருந்து ?

அநுஷ்டானம் முக்கியம் என்று கீழ்ப்பாட்டில் ஆண்டாள் சொன்னாள். இப்பாட்டில் அநநுஷ்டானம் அதாவது அநுஷ்டானமின்மையும் அவ்வளவே சிறப்பு வாய்ந்தது என்கிறாள். அது ஏனெனில் அநுஷ்டானத்தை விட்டு விட்டு மனிதன் என்ன செய்தான் என்பது முக்கியம்.

இராமாயணத்தில் இராமன் காட்டுக்குப்போக இளவல் லட்சுமணன் அவனுக்கு உதவியாகத் தொண்டூழியம் செய்யவென்று தாய் சுமித்திரை கட்டளையிட்டபடி பின் தொடர்ந்தான்.கட்டின மனைவியை விட்டு வந்து தாம்பத்திய நீதிக்குக் குற்றவாளியானான்.பின் சகோதரனையும் அவன் மனைவியையும் பெற்றோராகவே பாவித்து இரவு பகலாகக் காவலிருந்து தொண்டும் செய்தான். அந்தக் காலகட்டத்தில் அவன் தன் சொந்த தினசரி அனுஷ்டானமோ ஜபம் தவமோ எதுவுமே செய்யவில்லை. அறம் செய்யாததற்கான குற்றம் அவனுக்கு ஏற்பட்டதாக யாருமே சொல்லவில்லை.

நற்செயல் அதாவது தர்மம் என்பது இருவகைப்பட்டது. சாதாரண தர்மம் மற்றும் விசேஷ தர்மம்.ஒருவன் எப்போதும் சாதாரண அறத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். விசேஷ தர்மம் வந்து குறுக்கிட்டால் தினப்படி அறத்தை நிறுத்திவிட்டு விசேஷ அறத்தை மேற்கொள்ள வேண்டும்.

தசரதன் சாதாரண தர்மமான சத்யத்தைக் கடைப்பிடிக்க விசேஷ தர்மமாக அவனுக்கு வாய்த்த இராமனையே காட்டுக்கு அனுப்பி புத்திர சோகத்தால் உயிரிழந்தான். ததிபாண்டியன் கண்ணனைக் கட்டிஅடிக்கவந்த பெண்களிடம் அவனைக் காட்டிக்கொடுக்காமல் பொய்சொல்லி வாய்மையாகிற தர்மத்தைவிட்டு சித்த தர்மமான பகவானைப் பிடித்தான்.வழக்கமாக கோயிலுக்குப் போகும் வேளையில் அக்கம்பக்கத்தில் உதவிக்கென்று மருத்துவமனை போக நேர்ந்தால் வருத்தப் படுவோமா ? கிளைப் பாதை வரும்போது நாம் விசேஷ தர்மத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

‘கனைத்து ‘ பாசுரத்து நற்செல்வன் எருமை கறக்கும் நேரத்தில் கண்ணனிடம் தொண்டு செய்து ஆண்டாள் நல்லெண்ணத்தைப் பெற்றான்.விசேஷ அறமான ஐஸ்வர்யத்தைப் பெற்றான் அவன்.

ஆண்டாளுக்கு தூமணி மாடமும் பனித்தலை வீழும் இந்தக் குடிலும் ஒன்றே.உள்ளே இருப்பவர்கள் அல்லவா முக்கியம் ?

பனித்தலைவீழ நின் வாசல் கடைபற்றி

—-

மேலே பனிவெள்ளம் கீழே பால்வெள்ளம் எங்களிடையே மால்வெள்ளம், இந்த வெள்ளக் காட்டில் குளிரி நடுங்கிக்கொண்டு [ கூரையடைப்போ பூசின தரையோ இல்லாத] உன் வீட்டின் வாசல்நிலையை பிடித்துக் கொண்டு தொங்கியபடி நிற்கிறோம். உங்கள் வாசலைக் கடக்க படகு வேண்டும்போல இருக்கிறது

சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற

—-

மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய்திறவாய்

—-

நீரிலே நெருப்பு பற்றிகொண்டாற்போல கோபமே வராத இராமனுக்குக் கோபமூட்டினான் இராவணன். அந்தத் தென்னிலங்கை அதிபதியைப் பகைத்து அழித்தான் இராமன்.அதுவும் எப்படியெனில் படிப் படியாக.முதலில் சேனை,பின் மந்திரிகள் பின் தம்பிகள்,பின் பிள்ளைகள் பின் அவகாசம்(இன்றுபோய் நாளை வா!)பின் வேறு வழியேயின்றிஇராவண வதம்என்றபடி. அந்த இராமன் கண்ணன் போலப் பெண்களைப் பாடாய்ப் படுத்தும் போக்கிரியில்லை. பெண்களை மிகக் கண்ணியமாக நடத்தும் ஆடவன். சீதைக்காக கடலில் அணை கட்டி ஒரு போரையே செய்து முடித்தவன் பெண்கள் மனதில் இடம் பிடித்தவன் உத்தமமான அந்த இராமனே. எனவே மனத்துக்கினியானைப் பாடினோம்.இன்னும் நீ பேசவில்லை.

பெண்களை நெஞ்சாரல் பண்ணூகிற கிருஷ்ணனை மறக்கமுடியாமல் விரக வேதனையை அனுபவித்து மனம் ஆறுவதற்காக ஏகபத்தினி விரதனான,மனைவிக்காக அழுகிற,தேடி அலைகிற, இராமனைப் பாட நீயும் வா,

இனித்தான் எழுந்திராய்

—-

இனியாவது எழுந்திருக்கமாட்டாயா ?இது என்ன இப்படித் தூங்குகிறாய் ? வைதீகமுமில்லாத வெளகீகமுமில்லாத வரைமுறையற்ற தூக்கம் ? என்று அதட்டினார்கள்.

அனைத்தில்லத்தாரும் அறிந்து

—-

ஆய்ப்பாடியில் ஒருத்தி பாக்கியில்லாமல் எல்லாரும் எழுந்து உன்னைக் கூப்பிட வேண்டும் என்று நீ நினைத்திருந்தாயானால் அப்படியே அத்தனை இல்லப் பெண்களும் வந்தாயிற்று,என்பது ஒரு கருத்து. பாடியிலுள்ள பெண்களெல்லாம் திரண்டு இன்னார் வீட்டின் முன் நின்றார்கள் என்பதை அக்கம்பக்கமெல்லாம் அறிந்து உன் மதிப்பு வீதியில் உயர வேண்டுமென்று நினைத்திருந்தாயானால் அப்படியே ஆயிற்று. உன் பேர் மிகவும் பிரபலமாகிவிட்டது. இனியாவது எழுந்து வா என்று கூப்பிட்டார்கள்.

இந்தப் பாட்டில் தொண்டரடிப் பொடியாழ்வாரைக் கூப்பிட்டார்கள். வைஜயந்தி என்கிற வனமாலையின் அம்சம் இவர். ஸ்ரீராம மிஸ்ராய நம: என்று ஏழாவது குருவை அழைத்துக் கொண்டார்கள்.

நியம அனுஷ்டானமும் அனுஷ்டானமின்மையும் விஷயமேயில்லை சித்த தர்மமான பகவான் தான் முக்கியம் என்கிற கருத்து இந்தப் பாட்டில் சிந்தனையைத் தூண்டும். கீழ்வரும் கதை இதற்கு விளக்கமாகும். எட்டுபேர் சேர்ந்து ஒரு ஊருக்குப் போகிறார்கள்.வழியில் ஒரு நதியைக் கடக்கவேண்டியிருக்கிறது.படகு அக்கரைக்குப் போயிருந்தது.அது திரும்பி வரும் வரையில் நால்வராகப் பிரிந்து இவர்கள் சூதுசதுரங்கம் ஆடினர்.ஒரு குழு பணம் வைத்து ஆடினர். இரண்டாவது குழு பொழுதுபோக்காக ஆடினர். படகு இக்கரைக்கு வந்தது.பந்தயமின்றி ஆடின நால்வரும் தங்கள் ஆட்டத்தை விட்டுவிட்டுப் படகில் ஏறி அக்கரை சேர்ந்தனர். பணம் வைத்து ஆடினவர்கள் ஆட்டத்தைக் கலைக்கப் பிரியப்படாமல் படகை விட்டு ஆடிக்கொண்டே யிருந்தனர்.படகு வந்தது போனது இவர்கள் மட்டும் அக்கரை சேரவேயில்லை.

எனவே படகில் கவனம் இருந்து அக்கரையில் கண் இருந்தால் போதும்.

13. புள்ளின் வாய்க்கீண்டானை

காலம் மிகவும் அருமையானது. அருகிக்கொண்டே வருவது. கட்வாங்கர் என்று ஒரு ரிஷி இருந்தார்.அவர் போர்வீரரும் கூட தேவர்களுக்காக போரில் ஈடுபட்டு அசுரர்களை அழித்துவந்தார். ஒரு பெரிய போரை முடித்தபின் அயர்ந்து உட்கார்ந்து [நாம் மிச்சமிருக்கிற internet hours balance ஐப் பார்ப்பது போல log on செய்து]ஆயுள் மிச்சம் இன்னும் எவ்வளவு ? அந்த நேரம் என் வழிக்கு ஏதாவது செய்யப் போகிறேன் என்று பார்த்தார். மிச்சம் ஒரே ஒரு முகூர்த்தமிருந்தது. ஒரு முகூர்த்தமென்பது ஒரு நாழிகை.65ஐ 24ல் வகுத்தால் வரக் கூடிய அளவு மணித்தியாலங்கள்.

பரீக்ஷித்துக்கு ஏழு நாள் அவகாசம் கிடைத்தது.

கிடைத்த காலத்தை வீணாக்காமல் செலவு செய்யவேண்டும்.பூவுலகின் தார்மிக சந்தோஷங்களை அனுபவிக்க வேண்டும். எங்கும் கிடைக்காத [பூலோக] சொர்க்கங்கள் இங்குண்டு. அவற்றுள் சில,மகான்களின் அனுபவச்சிதறல்களும் அவர்களின் படைப்புகளும்.அவற்றை நம் அனுபவமாக நாம் காண்பதற்குப் பல காலம் நாம் ஜீவிக்க வேண்டியிருக்கும். அதற்கு அவசியமில்லாதபடி பெரியவர்கள் அனுபவத்தை நாம் அவர்களின் கருத்தை உள்வாங்கிக்கொள்வதன் மூலம் பெறமுடியும் என்று பூர்வாசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள்.அப்படி காலத்தின் அருமையை உணர்ந்த ஆண்டாள் இன்னொரு பெண்ணை எழுப்புவது இந்தப் பாசுரம்.

புள்ளின் வாய்க் கீண்டானைப்பொல்லாஅரக்கனைக்

கிள்ளிக்களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக்களம்புக்கார்

வெள்ளிஎழுந்து வியாழன் உறங்கிற்று

புள்ளும் சிலம்பினகாண் போதரிக்கண்ணினாய்!

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே

பள்ளிக்கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.[திருப்-13]

இந்தக் கோபிகை கண்ணழகு மிக்கவள்.[கண் என்று சொன்னால் என்ன அர்த்தம் ? நினைவிருக்கும். ஞான வீறுபாடு கொண்டவள்] கிருஷ்ணன் பரமரசிகன். இவளிடம் அதீத ஈடுபாடு கொண்டவனாதலால் இவள் கூட்டத்தில் இருப்பது மிக அவசியம் என்று இவளை அழைக்க வந்திருக்கிறார்கள்.

பறவையுருக்கொண்டு வந்த பகாசுரனுடைய வாயைக் கிழித்தெறிந்தவனும் பொல்லாங்குகளுக்கு உறைவிடமான இராவணனை விளையாட்டாக அழித்துப் போட்டவனுமான எம்பிரானுடைய வீரச்செயல்களைப் பாடிக்கொண்டு சென்று எல்லாப் பெண்பிள்ளைகளும் நோன்புக்காகக் குறித்த இடத்திற்குள் புகுந்தனர். சுக்கிரன் மேலெழுந்து குரு அஸ்தமித்தது.மேலும் பறவைகளும் இரை தேடச் சிதறிச் செல்கின்றன.[பொழுது விடிந்தது] பூவையும் மானையும் ஒத்துள்ள கண்ணையுடையவளே!இயல்பான இனிய ஸ்த்ரீத்துவத்தைப் பெற்றவளே! கிருஷ்ணனும் நாமும் கூடவிருக்கிற இந்த நல்லநாளில் நீ தனியிருந்து கிருஷ்ணகுணங்களை அனுபவிக்கையாகிய கபடத்தை விட்டு எங்களோடு கலந்துகொள்ளவேண்டும். மிகக் குளிர்ச்சியாயிருக்கும் கிருஷ்ண ரச நீரில் ஆட வராமல் படுக்கையில் கிடப்பாயோ! ஆச்சரியம் இது.

இவ்வளவு தான் பொருள்.

மனத்துக்கினியான் இராமன் குறிப்பைக் கேட்ட அயலகத்துப் பெண் ஒருத்தி ‘இங்கு யாரோ ராமகதை சொன்னாற்போலிருந்ததே ‘ என்றதற்கு ‘இராமகதை கிருஷ்ணகதை பாஞ்சராத்ரத்தோடு குறையின்றி சொன்னோம் ‘ என்று பதில் இறுப்பது போல ஒரு ராமகாரியமும் ஒரு கண்ணன் செயலுமாகச் சொன்னார்கள்.[பாஞ்சராத்ரம் என்பது பாற்கடல் வைபவம் பற்றிப் பேசும் ஒரு பிரிவு-6வது பாசுரத்தில் சொல்லப் பட்டது]

கண்ணன் மீது கறுவி அவனைக் கொல்லுமாறு கம்சனால் ஏவப்பட்ட ஒரு அசுரன் கொக்கின் உருவங்கொண்டு யமுனைக்கரையில் நின்றான். கண்ணனை விழுங்கிவிட்டான்.அவனது நெஞ்சில் கண்ணன் நெருப்பு போல எரிக்கவும் அவன் பொறுக்கமாட்டாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து மூக்கால் குத்தினான். கண்ணன் அவன் வாயலகுகளைத் தனது இரு கைகளாலும் பற்றி விரித்துக் கிழித்துப்போட்டான்.அதுவே புள்ளின் வாய் கீண்டது. கீண்டது என்றால் வகிர்ந்தது,நெடுக்காகப் பிளந்தது.

கீழ்ப்பாட்டில் ‘மனத்துக்கினியான் ‘ சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்றதற்கும் இங்கே பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்ததற்கும் ஒரே வரலாறு தான். இராவண வதம் தான் அது.அதை ஏன் அடுத்தடுத்துத் திருப்பிச்சொல்கிறார்கள் ? முதலில் சொன்ன இராவண வதத்துக்கும் இப்போது சொல்லப் படுகிற இராவணவதத்துக்கும் என்ன வித்தியாசம் ?

அங்கு மனத்துக்கினியான் செய்ததெல்லாம் மென் செயல்கள்.தண்ணீர் போல சிலீரென்று ஒரு குணம்அவனுக்கு. கோபமே வராது.சுக்ரீவனுக்குச் சீற்றம் வந்தபோது[அவனுக்காக] வாலியை எய்தான்.சுக்ரீவன் அழுதபோது கூடவே தானும்[வாலியின் உடல்மேல்]அழுதான்.பெரிய அந்தஸ்து உடைய இராவணனைத் தனக்கு மிகப் பெரிய கொடுமையைச்செய்தவனாயிருந்தும் ஒரே அம்பால் முடித்துவிடாமல் படையைக்கொன்று தேரை அழித்து ஆயுதங்களை முறித்து [கோன்போலுமென்றெழுந்து கிளர்ந்து வந்த மானத்தையழித்து -என்றபடி] இன்று போய் நாளை வா என்று நேரமும் தவணையும் கொடுத்துக் கடைசியில் கொன்றான். அந்த மென் தன்மை பெண்கள் மனதில் இடம் பிடித்ததை வைத்து மனத்துக்கினியான் செயலாக இராவணவதம் படிப்படியாக நிறைவேற்றப் பட்டது சொல்லப் பட்டது. இங்கு அதே செயல் வேறு விதத்தில் சொல்லப் படுகிறது. அரக்கர்குலத்தில் ஒரு பொல்லா அரக்கன் இருந்தான் ஒரு நல்ல அரக்கனும் இருந்தான்.[விபீஷணஸ்ய தர்மாத்மா-என்றபடி] செழிப்பான ஒரு செடியில் சில இலைகளில் பூச்சி வந்தால் செடியை அழிப்பார்களா ? பூச்சி வந்த இலைகளை மட்டும் கிள்ளிக் களைந்து பின்பு செடிக்கு உரமிட்டு நீர்விட்டு வளர விடுவதில்லையா ? அந்தக் கருணையைச் செய்தான் இராமன். இராவணனை அவன் கூட்டத்தோடு அழித்து அரக்கர்குலம் பட்டுப் போகாதபடி விபீஷண பட்டாபிஷேகம் செய்து வந்தான், அதைச் சொல்ல முன்பாட்டில் விட்டுப் போய்விட்டதே என்று தோன்றியிருக்கிறது ஆண்டாளுக்கு.இப்போது சொல்லிவிட்டாள்.ஆனாலும் சில சரிதைகளே ஆண்டாளூக்கு மிகப் பிடித்தமோ என்று நினைக்கும்படி repeat செய்வது நிறைய நேருகிறது.[உம்-கேசிவதம்,உலகளந்த வரலாறு இத்யாதி] அதெல்லாம் படைப்பாளியின் மனப்பள்ளம் சார்ந்தவை.

‘பொல்லா ‘என்கிற விகுதிக்குக் காரணம் இவர்கள் வாயால் சொல்லமுடியாதபடி இராவணன் செய்த பொல்லாத்தனம். பிறன் மனை இழுத்தது. பிரியவே முடியாத ஜோடியைப் பிரித்தது.

‘புள்ளின் வாய்க்கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய் ‘என்றதற்கு அடி இவர்களின் பிரயாண கட்டுச்சோறு எப்போதும் நாமஸ்மரணையாக இருக்கை. வீர பத்னிகளாகையாலே செய்யப்பட்ட வீரச்செயல்களைக் கொண்டாடுகிறார்கள்.சாதாரண பெண்கள் தங்கள் கணவன்மாரை ‘இருக்கிற வம்பெல்லாம் உங்களுக்கெதற்கு ? ‘ என்பார்களில்லையா ? பாதேயம் புண்டரீகாட்ச நாமசங்கீர்த்தனம் என்று சொன்னபடி பாடிக்கொண்டேபெண்கள் எல்லாரும் நோன்பு செய்யுமிடம் போய்ச் சேர்ந்தாயிற்று.பொழுது விடிந்துவிட்டது. விடிவெள்ளி எழுந்து வியாழன் மறைந்தது.பறவைகள் இரைதேடப் பரவின. அழகிய கண்களை யுடையவளே!போது அரிக்கண்-புஷ்பம் போலவும் மான் போலவும் கண்(1)போதரி கண்-புஷ்பத்துக்கு விரோதியான கண்(2)போதரிக் கண்-பூவுக்குள் ஒரு வண்டிருந்தாற்போல் குறுகுறுக்கும் கண்(3)

நெடுங்கணிளமான் இவள். அனைத்துலகுடைய அரவிந்த லோசனன் அவன். இருவர் கண்ணுக்கும் இலக்காகி நாங்கள் கடைத்தேற வேண்டும். எங்கள் பேற்றூக்கு உடலென்றிருந்தோம் இவளுடைய செளந்தரியம்,இப்போது என்னவென்றால் அதுவே எங்கள் தாமதத்துக்கு உடலாகிறதே! அழகியென்கிற அகந்தையில் தான் குளிர்ந்த கிருஷ்ண ரசத்து நீராட்டத்துக்கு வராமலிருக்கிறாயா ?

படுக்கையில் என்ன செய்கிறாய் ? அங்கு போராய் விளைந்து கிடக்கிறது. இங்கு உதிர்நெல் பொறுக்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாயா ? சேர்ந்து அநுபவத்துக்கு வாக்கு தந்து விட்டு தான் மட்டும் தனி நோன்பு பிடிக்கிறாயா ?கள்ளம் அல்லவா அது ? கபடம் விடு.

குள்ளக்குளிர குடைந்து நீராடாதே பள்ளிக்கிடத்தியோ என்று கடிந்து எழுப்பிக் கொண்டு போனார்கள்.

ஸ்ரீவத்ஸம் என்ற மரு திருப்பாணாழ்வார் ஆயிற்று. அவரை அழைத்த அடையாளத்துக்கு அவருடைய ‘என் கண்ணினுள்ளன ‘ ‘என் அமுதினைக் கண்ட கண்கள் ‘ போன்ற சொல்லாடல்கள் முன்வைக்கப் படுகின்றன.

ஸ்ரீபுண்டரீகாட்சாய நம: என்ற ஆச்சாரியர் எழுப்பிக்கொள்ளப்பட்டார்.

14. உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

தான் முன்னதாக எழுந்திருந்து எல்லாரையும் எழுப்பி வழிநடத்திப் போவதாக முதல்நாளே வாக்கு கொடுத்திருந்த ஒரு பெண் இன்னமும் வீட்டுக்குள் படுத்திருக்கிறாள். அவளை எழுப்பிஅழைத்துக் கொள்ளப் பாடுகிறார்கள் இந்தப் பாசுரத்தில்.6 முதல் 15 திருப்பாவைகளில் சொல்லப்பட்ட பத்து ஆசாரியர்களில் ஓரிருவர் மட்டுமே திட்டு வாங்காமல் சமாளிக்கிறார்கள்.மற்றபடி எல்லாரும் கல்லூரி ஆசிரியர்களைப் போல ஏகமாய் வாங்கிக் கட்டிக்கொள்கிறார்கள்.

இங்கு கூப்பிடப்படும் பெண் நாவீறுடையவள். [சரியான வாயாடி.வெளியே வந்தால் பிய்த்து உதறுவாள் இவர்களை] இவர் நம்மாழ்வார் என்று அடையாளப் படுகிறார்.நாலாயிரத்தில் கால்பங்கைத் தாமே ஆக்கிரமித்து எழுதித் தள்ளியவர் நம்மாழ்வார். திருவாய்மொழி[1102பாசுரங்கள்]வெகு பிரசித்தம். இவருடைய மொழியும் வெகு சிக்கலானது.அழகானதும் கூட.

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர்வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கொயில் சங்கிடுவான் போகின்றார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்

நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்

சங்கொடுசக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணனைப் பாடேலோர் எம்பாவாய்[திருப்-14]

ஊர்ப் பெண்கள் எல்லாரும் திரண்டு இவள் வாசல் முன் நின்று ‘எத்தனை நேரமாகக் காத்திருப்பது ? இன்னுமா எழுந்திருக்கவில்லை ? ‘என்று கேட்டார்கள்.

உள்ளிருப்பவள் ‘பொழுது விடிந்ததா ? ‘ என்று கேட்டாள்.

காலை மலரெல்லாம் பூத்து இரவு மலர்களெல்லாம் வாடின என்று அசிரத்தையாய் சொன்னார்கள்.பின்னே எத்தனை பேருடைய ஒரே பல்லவிக்கு அநுபல்லவி படிப்பது ?

என் வீட்டைப் பார்த்ததும் உங்கள் முகம் மலர்ந்ததையும் நான் வாசலில் நிற்காததால் உங்கள் வாய் அடைத்ததையும் சொல்கிறீர்களா ? என்று கேட்டாள் உள்ளிருப்பவள். வாயிருந்தால் எதை வேண்டுமானாலும் பேசலாம் போலிருக்கிறது என்று முணுமுணுத்துக் கொண்டு உரக்க ‘அதெல்லாமில்லை குளத்தில் தாமரை செங்கழுநீர் போன்ற காலை மலர்கல் மலர்ந்தன. அல்லி ஆம்பல் போன்ற இரவு மலர்கள் கூம்பின ‘என்றார்கள்.

உள்ளிருப்பவள் ‘இரவெல்லாம் வயலெங்குமுலாவி மொக்குகளை மலர்த்துவதும் மலர்களை மூடுவிப்பதும் அல்லவோ உங்களுக்குக் காரியம் ? ‘என்றாள். எப்படியும் இராத் தூக்கம் கிடையாது. ஐந்து லட்சம் பேருமாகப் பூவையெல்லாம் ஒரு வழி பண்ணியிருப்பீர்கள் என்கிறபடி.

அதைக் கேட்ட இவர்கள் ‘கட்டும் காவலுமாய் உள்ள தோட்டத்தில் குளங்கள் உள்ளன. அங்கும் அந்தந்தப் பூவெல்லாம் அவ்வப்படி மலர்ந்தும் கூம்பியும் இருக்கின்றன.அங்கு நாங்கள் எப்படிப் புகுந்திருக்க முடியும் ? ‘என்றார்கள். அதாவது திறந்த குளங்களில் இதைப் போன்ற காரியங்களை இவர்கள் செய்வதுண்டு என்று தெரிகிறது.பாம்பின் கால் பாம்பறியும் என்று தோழிக்கு இது தெரிந்திருக்கிறது. ‘அங்கும் நீங்கள் புகுந்து கொள்ள கேட்பானேன் ? எல்லாருக்கும் மரமேறத்தெரியும் மதிலேறத் தெரியும். கட்டுக் காவல் உள்ள குளங்களுக்கும் நீங்கள் போயிருப்பீர்கள் ‘என்றாள்.

ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது வெளியில் நிற்பவர்களூக்கு. ‘போ,போ உள்ளே,போய் ‘உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவி ‘யைப் போய்ப் பார்.[உள்ளே உங்க வீட்டிலேயேயும் புழக்கடை இருக்கில்லே ? அங்கே குளம் இருக்கில்லே அது முழுக்க செங்கழுநீரும் நீராம்பலும் இருக்கில்லே அதெல்லாம் மலர்ந்திருக்கா கூம்பியிருக்கா பாரேன் நீயே உன் கண்ணாலே பார்] அங்கு நாங்களா வந்தோம் ? ‘அங்கும் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் ‘என்றார்கள்.

[இப்படி ஒரு சம்பாஷணை இருந்திராவிடில் திடாரென்று உங்கள் எங்கள் என்று இதுவரை உபயோகப் படுத்தாத பதங்களை ஆண்டாள் பிரயோகிக்க வேறென்ன காரணமிருக்க முடியும் ?]

அப்புறம் இன்னொரு அடையாளமும் சொல்கிறார்கள். ‘செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார். ‘நம் தெருவில் எப்போதும் தாமதமாக எழுந்திருப்பாரே அந்த காவி ஆடை சன்னியாசியும் எழுந்து வெள்ளை வெளேரென்று பல்தேய்த்து தம் ஆராதனையிடத்தைச் சாவியிட்டுத் திறக்கப் போய்க் கொண்டிருக்கிறார் ‘என்றார்கள். சிறு பெண்களானதால் காவி என்று சொல்ல வரவில்லை. செங்கல் பொடியை எடுத்து வெள்ளைக் கூரையில் புரட்டினாற்போல ஒரு உடை போட்டிருப்பாரே, ஒரு தவசிப் பெரியவர்,அவருக்குக்கூட வெளேரென்று பல் இருக்குமே அவர் விடுவிடுவென்று சாவியும் கையுமாகப் போகிறார். அவர்களுடைய திருக்கோயிலுக்குப் போகிறார் போலும். என்றார்கள். அடுத்து ஞாபகம் வந்துவிட்டது. இவள் முதல்நாள் பேசியதும் இப்போது இவர்களுக்கே கேள்வி வைப்பதும்.

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் என்றார்கள். மனஸ் வாக்கு செயல் எல்லாம் வேறு வேறாயிருக்கும் துராத்மாக்களுக்கு. மூன்றும் ஒரே மாதிரியிருக்கும் மஹாத்மாக்களுக்கு. ‘பாம்பணையாற்கும் தன் பாம்பு போல நாவிரண்டுளவாயிற்று ‘ என்றபடி கண்ணன் சம்பந்தத்தால் உனக்கும் இரட்டை நாக்கு. சொன்னபடி செய்யவில்லையே என்று துளியாவது வெட்கம் இருக்கிறதா உனக்கு என்றார்கள். எதைக் கேட்டாலும் நல்லா வாயாடுவாயே! இப்போ எங்கே போச்சு வாய் ? என்றார்கள்.

போகட்டும் அந்த நாவீறுடைமைக்காகத்தானே உன் வாசலில் வந்து நிற்கிறோம். கண்ணபிரான் எந்தமாதிரி மறுத்தாலும் வாதிட்டு பேற்றை வாங்கித்தரப்போகிறவள் நீ தானே எங்களுக்கு ?

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணனைப் பாடு என்றார்கள். ‘நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங்கள் வந்து காணீரே ‘ என்று யசோதைப் பிராட்டி அழைத்தபடி சங்கும் சக்கரமும் எப்போதும் கையிலுண்டு கண்ணனுக்கு. நண்பர்களுக்கு மட்டும் தெரியும் எல்லார் கண்ணூக்கும் தெரியாது. சங்கு சக்கரம் ஏந்தி அதனால் தடக்கையனானான். ‘கூராழி வெண்சங்கு ஏந்தி ஒருநாள் காண வாராயே ‘என்றபடி சதா ஆண்டாளுக்கு சங்கின் மீது ஒரு கண். உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம் கண்படை கொள்ளல் கடல் வண்ணன் கைத்தலத்தே என்று வயிறெரிவாள். கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச்செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ என்றெல்லாம் அடுக்கி அடுக்கி கேட்டது சங்கிடமல்லவா ? ‘சுடராழியும் பல்லாண்டு,அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டு ‘ என்றவரின் மகளாயிற்றே! ராமகமல பத்ராட்ச என்றபடி அரவிந்த லோசனனைப் பங்கய்க்கண்ணன் என்ற வார்த்தையால் சிறப்பித்தாள் ஆண்டாள்.

ஸ்ரீநாதமுநயே நம: என்றதும் அடுத்த ஆச்சாரியர் எழுந்தருளினார்.


15.எல்லே!இளங்கிளியே

திருப்பாவையாகிறது இப்பாட்டிறே என்று சொல்லப்பட்ட ஏற்றம் பெற்றது இந்தப் பாசுரம்.

‘அடியார்தம் ஈட்டம் கண்டிடக் கூடுமேல் ‘என்றபடிக்கும் ‘பேராளன் பேரோதும் பெரியாரை ஒரு போதும் பிரிகிலேனே ‘ என்ற படிக்கும் ‘அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு ‘ என்றபடிக்கும் அடியாரில்லாமல் ஆண்டவனில்லை என்பதால் எவ்வளவு கருத்து வேற்றுமை இருந்தாலும் அதெல்லாம் பேசித் தீர்த்துக் கொண்டு பெரியவர்களை எல்லாம் கூட்டிக்கொண்டு ஆண்டாள் கடைசி ஆழ்வாரை அழைக்க வந்துள்ளாள். கீழ்ப்பாட்டின் நம்மாழ்வாரும் கெளஸ்துப மணியின் அம்சம் என்று சொல்லப் படுகிறார்.இங்கு அழைக்கப்படும் திருமங்கைஆழ்வார் பகவானின் அம்சம் என்று சொல்லப் படுகிறார்.

எல்லே!இளங்கிளியே!இன்னம் உறங்குதியோ!

சில்லென்றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்

வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்

வல்லீர்கள் நீங்களே நானே தானாயிடுக!

ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்

வல்லானைக் கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.[திருப்-15]

இத்தனை பாடல்களிலும் சம்பாஷணை வரிகளுக்கு இடையில் இருந்தது.இந்தப்பாடல் நேரிடையாக சம்பாஷணையாகவே இருக்கிறது.

இவர்களெல்லாம் குளிரில் விரைத்து உடல் வெளிரி உதடு கருத்து வாடியிருக்க[கொஞ்சம் அலைச்சலா ?]உள்ளேயிருப்பவள் பசுகு பசுகு வென்று ஸ்வெட்டர் ஷால் கனத்த போர்வை வெதுவெதுப்பு கூடிய அறை இப்படி வசதியோடு படுத்திருப்பதைப் பார்த்தால் எப்படியிருக்கும் ?அவள் கிளர்ந்த மேனியோடு சிவந்த உதடுகளோடு கிளி போல இருக்கிறாள்.

என்னம்மா பச்சைக்கிளியே இன்னமும் தூக்கமா ? என்று கேட்டார்கள். [எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ] அதோடு மட்டுமில்லை.கீழ்ப்பாட்டில் பங்கயக் கண்ணனைப் பாடியது கேட்டு உள்ளிருக்கும் பெண் தனக்குத் தெரிந்த பங்கயக்கண்ணன் கீர்த்தனையை வார்த்தை யோசித்து கிளியின் குரலில் சன்னமாகப் பாடிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.இவர்கள் அழைத்தது பாட்டைத் தடுக்கியது.கிளியே என்று அழைத்தது வேறு இவள் பாட்டைக் கேலிசெய்தது போலிருந்தது இவளுக்கு. சிலுகு சிலுகு என்று அழைக்காதீர்கள் என்னை. நீங்களெல்லாம் பூரணைகள் தாம் தெரியும் இதோ வருகிறேன் என்றாள். [சில்லென்றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்]

இதேது!நாங்கள் பாட்டுக்கு வாசலில் நின்று கூவிக் கொண்டிருக்கிறோம். நீ எங்களுக்கு ceremon படிக்கிறாய்.கெட்டிக்காரிதான்.நீ இப்படித்தான் என்பது எங்களுக்கு வெகுகாலமாகவே தெரியும்.உனக்கு வாய் அதிகம் என்பது இப்போதைய விஷயமல்ல. என்றார்கள். [வல்லை உன்கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்]

‘நீங்களெல்லாம் தான் கெட்டிக்காரர்கள்.நான் என்ன கெட்டிக்காரத்தனம் செய்து விட்டேன் ? என்னை வாயாடி என்று வேறு சொல்கிறீர்கள்.உங்கள் யாருக்கும் வாயே கிடையாது என்பது போல ‘என்று படபடவென்று ஆரம்பித்தவள் சடாரென்று தன் நிலை உணர்கிறாள். [வல்லீர்கள் நீங்களே] தன் குறிக்கோள் தன் முயற்சி இன்று கூட்டமாகக் கிளம்பி எடுத்துக் கொள்ளவிருக்கிற பெரிய காரியம் அதில் இருக்கிற சிக்கல்கள் எல்லாவற்றையும் யோசித்தபின் வந்திருக்கிற கூட்டம் அறம் சார்ந்தது பகவானையும் விட பாகதர்கள் முக்கியம் என்பதைப் புரிந்து கொண்டபின் தணிந்து ‘சரி, நானே தான் கெட்டிக்காரி, நானே தான் வாயாடி ,இருந்துவிட்டுப் போகிறேன்,இப்போது என்ன செய்ய வேண்டும் நான் ? ‘என்று கேட்டாள். [நானே தான் ஆயிடுக] ‘சீக்கிரம் வா, நீ என்ன தனிப்பானை வைத்து பொங்கல் போடுகிறாயா ? என்று கேட்டார்கள். [ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை] ‘அதெல்லாம் ஒன்றுமில்லை. நான் உங்களோடு தான் எப்போதும்.எல்லாரும் வந்தாயிற்றா ? ‘ என்று கேட்டாள். ‘ஆயிற்று,உனக்கு சந்தேகமிருந்தால் வந்தவர்களையெல்லாம் எண்ணிவிடு. பஞ்சலட்சம் பேரும் இருக்கிறார்களா என்று பார்த்து விடேன். அவர்களும் உன்னை அருகிலிருந்து தொட்டாற்போல் சந்தித்து மகிழ்ந்தது போலிருக்கும். உனக்கும் திருப்தியாயிருக்கும். ‘என்றார்கள். [எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக் கொள்]

வலிய யானையாகிய குவலயாபீடத்தைக் கம்சன் ஏவ அதை மதுராபுரியில் தோற்கடித்துக் கொன்றவனும் பகைவரின் பகையை மறக்க வைக்கவல்ல மாயம் செய்பவனுமான கண்ணனைப் பாடிக்கொண்டு சென்றடைவோம் வா என்றார்கள். [வல்லானை….இத்யாதி] இவ்வளவு தான் பாட்டு.

பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபனாய சம்பவாமியுகேயுகே

என்று தன்னிலையில் பகவத் கீதையில் சொல்லிக்கொண்டதை ஆண்டாள் படர்க்கையில் ‘வல்லானைக் கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனை ‘ என்கிறாள்.

மாயன் என்றதில் சாது பரித்ராணம் சொல்லப்பட்டது. சாது என்பவன் கையாலாகாதவனில்லை.எல்லாம் தெரிந்தவன் ஆனால் பொறுத்துப் போகிறவன். அக்ரூரர்,கோபிகள் போன்ற மிகச்சிறந்தசாதுக்கள்.பக்தர்கள்.பகவானை நம்பியவர்கள்.அவனிடம் ஈடுபட்டவர்கள். அவர்களுக்கு விரும்பத்தக்க அனுபவங்களைக் கொடுத்து தன் மாயையால் அவர்களை மயங்க வைக்கிறான்,அவர்களை லாகிரியில் ஆழ்த்துகிறான்,கண்ணன். வல்லானைக் கொன்றான் என்பதில் துஷ்டநிக்ரஹம் சொல்லப் பட்டது. மாற்றாரை மாற்றழிக்க வல்லான் என்பதில் தர்ம ஸம்ஸ்தாபனம் சொல்லப்பட்டது.கோபாலர்கள் இவன் பேச்சைக் கேட்குமளவு convince செய்து வைத்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன். கூடியவரை பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்து பிறகே களத்தில் இறங்குவது அவன் பழக்கம்.

திருப்பாவையாவது இப்பாட்டிறே என்று சொன்னது இந்த அவதார சாரத்தைச் சொன்னதற்கல்ல.பகவான் கிடக்கிறான் அவனை யார் கண்டது ?[கண்டவர் விண்டிலர். கேள்வியை வைத்து இவ்வளவு பூசிக் கொள்கிறீர்களே!கண்முன்னால் இருப்பவன் பாகவதன் தானே ?]

பாகவதனைப் பார். அவனுடைய மேன்மை தெரிவிக்கும் பாட்டு இது. ‘நானே தானாயிடுக ‘ என்று சொல்லும் பக்குவம் எத்தனை பேருக்கு வரும் ?பகவானை முழுக்க நம்பின பாகவதனுக்குத் தான் அகந்தை சுத்தமாக அழிந்து அந்த தன்னடக்கம் வரும்.

பாகவதன் தன் மேலில்லாத குற்றத்தைப் பிறர் இட்டுச்சொன்னால்தன் பாப பலன் என்று சாந்ததுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இராமன் காட்டுக்குப் போனதற்கு மந்தரை காரணம்,கைகேயி காரணம்,தசரதன் காரணம்,தந்தை சொன்னதைக் கேட்ட இராமனே கூட காரணம் ஆனால் பரதன் அதைத் தன் மேலிட்டுச் சொல்லிக்கண்டான். ‘மத் பாபமேவ அத்ர நிமித்த மாஸீத் ‘ என்று என்னைத் தவிர வேறு யாரும் இந்தக் கொடுமைக்குக் காரணமில்லை. நான் ஒருத்தன் என் அம்மாவுக்குப் பிள்ளையாய்ப் பிறந்திராமல் போயிருந்தால் இந்த வரம் கேட்கப் பட்டிருக்குமா என் தாயால் ?நான் தான் பாபி. என்னால் இராமன் காட்டுக்குப் போனான் ‘ என்று உருகினான்.தன் குற்றத்தை யார் மேல் போடலாம் என்று பார்க்கும் உலகில் பழிகளைப் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்பது பாகவத லட்சணம் பகவான் அவர்களுக்குள் இருக்கிறான் என்பதற்கு அவர்கள் வைக்கும் ஒரே சாட்சியம் அந்தத் தன்னடக்கமும் பொறுமையும் சகிப்புத் தன்மையும். அதை இந்தப் பெண் செய்து காட்டி விட்டாள். எனவே திருப்பாவையாகிறது இப்பாட்டிறே!

பெரியவர்களுக்கு இது தெரிந்திருந்தது. பாகவதனை விலக்கிவிட்டு பகவானை அணுகுவது மிக சிரமம் என்று புரிந்திருந்தனர். உடையவரை விலக்கி ஸ்ரீரங்க பெருமாள் தரிசனம் தனக்கு வேண்டாம் என்றார் கூரத்தாழ்வார்.

பாகவதனை எதிர்த்து பகவானை ப்ரீதி செய்யமுடியாது.பரதன் இராமனைத் திருப்பிக்கூட்டிப்போகவந்தபோது இலட்சுமணன் பரதனைப் படையோடு வருவதாக சந்தேகித்துச் சில கடுமையான வார்த்தைகளைச் சொன்னான்.பரதனைத் தூற்றியது இராமனுக்குச் சுருக்கென்றது. ‘பரதனை இவ்வளவு வெறுக்குமளவுக்கு உனக்கு ராஜ்யத்தில் ஆசையிருக்கிறதா ? சொல்லிவிடேன்,அவனைக் கேட்டு அதை உனக்கு வாங்கித்தருகிறேன் ‘ என்றான் இராமன்.லட்சுமணன் துடித்துப் போய் அதோடு நிறுத்திக் கொண்டான்.

சீதையும் அனுமானிடம் மனம் விட்டுச் சொல்லிக்கொண்டாள். இராமனை விட்டு மானை ஆசைப்பட்டு பகவத அபசாரப் பட்டேன். அது மன்னிக்கப் படுகிற குற்றம்.லட்சுமணனைத் தகாத வார்த்தை சொல்லி பாகவத அபசாரப் பட்டேன் அது மன்னிக்கப் பட முடியாத குற்றம் அதை மனதில் வைத்து தான் எனக்கு இந்த பத்து மாத தண்டனை போலிருக்கிறது என்றாள்.

அடிகளடியே நினையும் அடியவர்கள் தம்மடியான்[பெரியதிருமொழி-2-6-10] என்று தன்னடக்கத்தின் எல்லை நிலத்தில் நின்று பாடிய திருமங்கை ஆழ்வாரைப் பாசுரம் குறித்தது. ‘அவன்பின் கெண்டை ஒண்கண் மிளிரக் கிளி போல்மிழற்றி நடந்து ‘ என்றும் ‘மென்கிளி போல் மிக மிழற்றும் ‘ என்றும் நிறைய கிளிக்குறிப்பு வைத்ததால் இவர் கிளி. சுகர் என்ற கிழக்கிளி ஏற்கனவே இருப்பதால் இவர் இளங்கிளி.[வான்மீகி கோகிலம் என்றது போல]

இச்சை ஒன்று போது லட்சிய பூர்த்திக்கு என்று ஆசைகாட்டிவிட்டு ஆண்டாள் இவ்வளவு தூரம் equip செய்து கொள்ள வேண்டியிருப்பதைச் செயல்பாடு மூலம் விளக்கி பெரிய கூட்டத்தோடு கண்ணன் மாளிகை நோக்கிப் போகிறாள்.

ஸ்ரீமதே சடகோபாய நம: என்று பத்தாவது குரு எழுப்பிக்கொள்ளப் பட்டார்.

ஸத்வம்,ரஜஸ்,தமஸ் என்ற முக்குணங்களை உள்ளீடாகவும்[software]பஞ்ச பூதங்களை உடைய மண்ணை உடலாகவும்*[hardware]கொண்ட உயிர் என்ற ஜீவன் ஐந்து நிலைகளை யுடைய பரமனை முழுக்கத் தெரிந்துகொண்டு அர்ச்சை நிலையில்[அது தான் கடைசி access என்பதால்]அடையப்போகிறது அது மிக improbable என்பதைத் தெரிந்து வைத்திருந்தும்.

*மண் எப்படி பஞ்ச பூதத்துக்கும் அடக்கமாகிறது என்றால், ஆகாசம் தான் முதல் பூதம். அதில் ஓசை என்ற புலன் மட்டும் இயங்குகிறது.ஆகாசத்தைக் கேட்கலாம். ஓசையோடு ஸ்பரிசம் சேர்ந்து காற்று வந்தது. இரண்டாவது பூதம் அது.காற்றை தொடமுடியும் கேட்கமுடியும். காற்றோடு உருவம் சேர்ந்து நெருப்பு ஆயிற்று.நெருப்பைப் பார்க்கலாம் தொடலாம் கேட்கலாம்.இது மூன்றாவது பூதம். நெருப்போடு சுவை சேர்ந்து நீராயிற்று.நீரைச்சுவைக்கலாம்,பார்க்கலாம்,தொடலாம்,கேட்கலாம்.நாலாவது பூதமிது. நீரோடு மணம் சேர்ந்து மண் ஆயிற்று. மண்ணை முகரலாம்,சுவைக்கலாம், பார்க்கலாம்,தொடலாம்,கேட்கலாம்.இது ஐந்து புலந்திறனை அடக்கிய ஐந்தாவது பூதம். ஒரே சமயத்தில் சுற்றுவதாகவும் சுற்றாததாகவும் தென்படுவது இந்த மண். இதில் தான் பஞ்சபூதம் அடங்கி பஞ்ச பூதமும் முளைக்கின்றன. உயிரின் உடல் இந்த மண்ணினாால் ஆனது முண்ணுக்கே திரும்பிப் போவது. ஜீவன் என்பான் ஸத்வத்தோடு மனத்தைக் கலந்து சத்வ அஹங்காரமும் ரஜத்தோடு புத்தியைக் கலந்து ராஜஸ அஹங்காரமும் தமஸ்ஸோடு உடம்பென்ற ஐம்புலனைக் கலந்து சோம்பல் அஹங்காரத்தையும் [திமிர்]பெறுகிறான். எல்லாவற்றிலும் விகிதக் கலப்பு சரியாகும்போது அகங்காரங்கள் குறைந்து ஜீவனின் அருமை பளிச்சிடுகிறது. பிரயத்தனங்களால் மானுடம் சிறக்கிறது. அதையே 16வது பாட்டு முதல் ‘நெறி ‘ என்கிற வழிமுறைக்கு ஆண்டாள் இட்டுப் போகிறாள். பிழைப்பேனா ? இப்போது தான் அரைக்கிணறு தாண்டியிருக்கிறேன்.


16.ஆசாரியனின்றி ஆத்மசேமமில்லையா ?

16வது பாசுரத்தில் புதியதொரு விஷயத்தை விரித்துப் பேசுகிறாள் ஆண்டாள். இவ்வளவு நாளும் ஐந்து லட்சம் கோபிகைகளை எழுப்பின லட்சணத்துக்கு 10 பெண்களை 10 ஆச்சாரியர்களையும் 10 ஆழ்வார்களையும் உருவகித்து எழுப்பினார்களே அதனால் ஆசார்யரை எழுப்பி முடித்ததாகாதா ?

இல்லை.முனைவர்கள் ‘வழிகாட்டி ‘ என்று ஒருவரைப் பேரிட்டு வைத்திருக்க வேண்டும் என்ற விதியிருக்கிறதே அதைப் போல ஒவ்வொருவருக்கும் ஒரு ஆச்சாரியன் பிரத்யேகமாக வேண்டும்.அது அடிப்படைத்தகுதி.ஜீவன் அது பாட்டுக்கு போயிற்று முயற்சி செய்தது சேமம் அடைந்தது என்றில்லாமல் இன்னொரு பெரிய வலிய துணை தேவைப் படுகிறது என்று சொல்லும்போது விரக்தி மேலிடும். குருவை எப்படி கண்டுபிடிப்பது குருவின் அடையாளம் என்ன நாம் அவரைக் கண்டுபிடித்தாலும் அவர் நம்மை ஏற்பாரா அவர் என்ன எதிர்பார்ப்பார் நம்மிடம் என்பதெல்லாம் இம்சிக்கும் கேள்விகள்.வேறு வழியேயில்லை.பிடி ஒரு குருவை என்கிறது மதம்.[பயங்கரவில்லங்கம்]

இந்த பாசுரம் ஆசாரியனை எப்படி சம்பந்தப் படுத்துகிறது என்று பார்ப்போம்.

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில்காப்பானே!

கொடித்தோன்றும் தோரண

வாயில் காப்பானே!மணிக்கதவம் தாள் திறவாய்! ஆயர்சிறுமியரோமுக்கு

அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்

தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே யம்மாநீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.[திருப்-16]

ஆண்டாளும் கூட்டமும் நந்தகோபன் திருமாளிகைக்குப் போய் அங்கே கோயில் காப்பான் வாசல்காப்பான் இவர்களின் அனுமதியைப் பெற்று உள்ளே போக இருக்கிறார்கள்.கீழ் இரண்டாம் பாட்டில் ‘செய்யாதன செய்யோம் ‘என்று பிரதிக்ஞை செய்தது செயல்வடிவாயிற்று இது தான் முறை. இந்த கோபிகளின் நடைமுறைத் தெளிவு ஞானவான்களாகிய சனகசநந்தனாதிகளிடமும் பார்க்கக் கிடைப்பதில்லை.அவர்கள் தங்களைத் தடுத்த துவாரபாலகர்களைச் சபித்திருக்கிறார்கள்.நாமே பெரிய அதிகாரிகளைச் சந்திக்கும்போது குறுக்கிடும் கீழ்நிலை ஊழியர்களிடம் ஒரு புன்னகையாவது தந்தால் காரியம் சாத்தியப்படுவது எந்த விதத்திலாவது ஸ்திரப்படும்.நிறைய பேர் PA விடம் முறைத்துவிட்டு உள்ளே Executive காதைக் கடித்து வருவார்கள்.அவர்கள் திரும்பிப் போன அடுத்த நிமிடம் உள்ளே பார்க்க நேர்ந்தால் PA, Boss கையில் போட்டுக் கொடுப்பதை கவனித்து அதிர்ந்து போகக்கூடும்.இதெல்லாம் சர்வ சாதாரணமான logic.

நாயகனான நந்தகோபனுடைய கோயில் காப்பவனே! [வாசலில் நிற்கும் முதல் காவலாளி அனுமதி செய்து சைகை செய்கிறான்.உள்ளே கொடிமரம் அருகில் இன்னொரு காவலாளி நிற்கிறான்] கொடியும் தோரணமும் ஆடுகின்ற திருவாசல் காப்பவனே!மணியிழைத்த கதவைக் கொஞ்சம் திறந்து விடுகிறாயா ? என்றார்கள். நாயகன் முழுவேழுலகுக்கும்,தொல்லைவானவர் தம் நாயகன்.நம்முடைய நாயகனே….என்றென்றபடி தலைமைத்துவம் கண்ணனிடம் இருக்க நாயகனாக நந்தகோபனைச் சொல்வது சரியா ? எனில் சரியே. மிக உயர்ந்த நாகரத்தினத்தை உங்களுக்கு ஒரு மகான் கொடுத்திருப்பாரேல் அந்த ரத்தினத்தால் உங்களுக்குப் பெருஞ்செல்வம் வந்திருந்தால் அதன் மீது வைத்த அன்பைப்போல் பல மடங்கு அதை உபகரித்த மகான் மீது உங்களுக்கு வருவது இயற்கையல்லவா ? அருமையான கண்ணனை நமக்கு அளித்து அவனைப் பாதுகாக்க ஒரு கோயிலும் ஒரு காவலும் இரு காவலாளியும் வைத்திருக்கும் நந்தகோபனை நம் தலைவனாகக் கொள்ளத் தடையில்லையே! பகவானை யார் நமக்கு வெளிக்காட்டுகிறானோ அவனே நமக்குத் தலைவன். ஆச்சாரியன்.கடவுளுண்மையைக் கட்டிக் காவந்து பண்ணித்தருபவன் நமக்குத் தலைவன் ஆச்சாரியன்.ஆச்சாரியன் ஆசியோடும் தான் கடவுளை நாம் கிட்ட வேண்டும்.

பாபியான சத்ரபந்துவும் புண்யவானான புண்டரீகனும் மோட்சம் பெற்றது ஆச்சாரியனின் கருணையினால். பாபம் மோட்சத்துக்குத் தடையில்லை. புண்யம் மோட்சத்துக்கு வழியும் இல்லை. ஆச்சாரியனே மோட்சத்துக்கு வழி[இது எப்படி இருக்கு ?]

உயிரில்லாத கதவு கூட மயக்குவதாக இருக்கிறது நந்தகோபன் மாளிகையில். தூரத்திலிருந்து வருத்தத்துடன் வரும் பெண்களுக்கு வழி காட்டவென்றே கொடி பறக்கிறது.ஜீவனில்லாத பொருட்கள் இவ்வளவு உபகாரம் செய்யும்போது ஜீவனுள்ள காவல்காப்போன் எவ்வளவு பரிவோடு இருக்கவேண்டும் ? இந்தப் பெண்கள் வருவது பற்றி ஏதாவது சூசக உத்தரவும் கண்ணபிரானால் கொடுக்கப் பட்டிருக்குமோ ? ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு பெண்கள் நுழைகிறார்கள்.

பயமுள்ள தேசத்தில் நடுநிசியில் வந்து அழைக்கக் காரணமென்ன ? ‘என்று கேட்டான் காவலாளி. ‘அச்சம்தவிர்ப்பானிருக்கும் இடத்தில் பயப்பட அவசியமென்ன ‘என்றார்கள். ‘நன்றாய்த்தான் சொன்னீர்கள்.யுகம் திரேதாயுகமாய்,காலம் நல்லடிக் காலமாய்,தகப்பனார் சம்பிராந்தகராய்,பிள்ளைகள் தாங்களும் ஆண்புலிகளாய்,அவர்கள் தாமும் தம் வழியே போய் அதே வழியில் வருபவராய்,ஊரும் திருவயோத்தியாய் இருந்து வாழ்கிறதா ? அஞ்ச வேண்டாமல் பாலிலே உண்டு பனியிலே கிடக்கிறதா ? காலம் கலிக்குத் தோள்தீண்டியான துவாபரமாய்,தகப்பனார் பசும்புல் சாவ மிதியாத பரமசாதுவாய்,பிள்ளைகள் சிறுவராய்.அதிலும் தீம்பரின் தலைவராய்,இருப்பிடம் இடைச்சேரியாய்,அதுவும் தான் கம்சனுக்குப் பகையாய்,எழும்பூண்டெல்லாம் அசுரமயமாயிருக்க அச்சமின்றி எப்படியிருக்கலாகும் ? என்றான் காவல்காரன். ‘ஐயோ,நாங்கள் பெண்கள் ‘ என்றனர் ‘பெண்களையும் நம்ப மாட்டோம்..சூர்ப்பணகை பெண் தானே ? ‘என்றான். ‘அவள் அரக்கி நாங்கள் இடைச்சிகள் ‘என்றார்கள் ‘பூதனை இடைச்சி தானே ‘என்றான். ‘பூதனை ஆய்ச்சி நாங்கள் சிறுமிகள் ‘ என்று பரிதாபமாகப் பதிலிறுத்தார்கள்.

பூதனையைப் போல தனித்து வராமல் பஞ்சலட்சம் பெண்கள் கூடி வந்திருக்கிறோம். எங்கள் வயதைப் பார்த்தால் நம்பிக்கை வரவில்லையா உனக்கு என்று கேட்டு ‘அறைபறை என்று தொடங்கினார்கள். மேளம் தானே ? கண்ணன் எழுந்ததும் விண்ணப்பம் செய்து வாங்கி எடுத்து வைக்கிறேன் பிறகு வந்து எடுத்துக் கொள்ளுங்கள். என்றான் காவலாளி. நீ இனிமேல் கேட்டு வாங்கி வைக்கவேண்டிய அவசியமின்றி கண்ணபிரான் நேற்றே எங்களிடம் வாக்கு கொடுத்திருக்கிறான்.அவன் மாயன். அதாவது உனக்கு மரியாதைப்பட்ட கண்ணன் எங்களுக்கு மிக நெருங்கினவன்.பல முறை எங்களோடு விளையாடினவன்.எங்களுக்கு மறக்கமுடியாதபடிக்கு வடிவழகும் உடையவன்.ஆனாலும் நாங்கள் அவனிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்கிறவர்களல்ல. எங்கள் ரட்சணத்துக்கு அவனே பொறுப்பு என்று நினைக்கிற தூய்மையை உடையவர்களாய் அவனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடிப் போற்றுவதையே நோக்கமாகக் கொண்டு வந்திருக்கிறோம் என்றார்கள்.

‘மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயிலெழப்பாடுவான் ‘ என்றதும் வாசல் காப்பவனுக்கு உருகி விட்டது. அவன் கண்ணில் தெரிந்த கனிவைப் பார்த்த பெண்கள் இன்னொரு முறை காலில் விழுந்தார்கள் ‘வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ ‘ என்று வணக்கத்துடன் இறைஞ்சினார்கள்.ஒரு முடிவுடன் வந்திருக்கிறவர்கள் இவர்கள்.ஒரு மிகப்பெரிய நோக்கம் இருக்கிறது இவர்கள் வருகையில் என்பதைக் கோடி காட்டும் வகையில் ‘எடுத்த எடுப்பில் தடை செய்து எங்கள் பலனைக் கெடுத்து விடாதே அப்பா நீ ‘ என்று கேட்டுக் கொண்டார்கள். கதவைத் தள்ளிக் கொண்டு போகும்படிக்கு அனுமதி பண்ணினான் காவலாளி. ஆனால் பெண்கள் ‘இந்தக் கதவு உன்னைவிட நேயத்துடன் கண்ணனைக் காவல் காக்கிறது. எங்களால் தள்ளமுடியவில்லை. நீயே கொஞ்சம் திறந்து கொடு ‘என்று வணங்கிக் கேட்டார்கள். அவனும் அப்படியே செய்தான். பெண்கள் உள்ளே புகுந்தார்கள்.

அடிபணிபவனும் அருள் தருபவனும் இரூக்க மத்தியில் எதற்கு ஒரு தரகன் ? கருணையுள்ளவனாயிருந்தும் பகவான் எப்போதும் நியாயம் நீதி பார்ப்பவனாகையாலே ‘அளவற்ற குற்றங்களைக் குறைவற்றுச் செய்து விட்டுஇன்று காலில் விழுகிறானே பாவி ‘ என்று நினைத்துச் சீறுவான்.அப்போது அவன் அங்கனம் சீறவொண்ணாதபடிக்கு அவனால் மறுக்கவொண்ணாத மனிச்சரையிட்டு பொறுப்பிக்க வேண்டும்.அதுவே குருவின் கடமை.

குரு ஞானம்,பக்தி,நியமம் மூன்றுமே பொருந்தியவனாக இருக்கவேண்டும்.இந்தப் பாடலில் நந்தகோபன் குரு. வாயில் காப்பான் குரு.கோயில் காப்பானும் குரு. உயிருக்கு மோட்சம் சித்திக்க முதல் படி குரு.

சரீரப்பிறவி அவனுக்கு உண்டாவது பெற்றோரால்.ஞானப் பிறவி அவனுக்கு உண்டாவது குருவால். ‘அன்று நான் பொஇறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன் ‘ என்று ஞானம் தோன்றுமுன்னேயிருந்த தன்னைப் பிறந்ததாகவே நினைக்கவில்லை திருமழிசைப்பிரான்.

தண்ணீர் சம்பந்தம் பெற்ற தாமரையை சூரியன் மலர்த்துகிறான். தண்ணீரை நீங்கிய தாமரையை அதே சூரியன் உலர்த்துகிறான்.அதேபோல ஆச்சாரிய சம்பந்தமுள்ள ஜீவனுக்கே பகவான் கருணையைச் செய்கிறான்.

திருநாராயணபுரம் என்று ஒரு ஊர்.[மைசூர் மேலக்கோட்டை]அங்கு சோமயாஜுலு என்ற பாடகர் மிக நன்றாகப் பாடுவார். அவர் பாட்டுக்கு அந்த ஊர் திருநாராயணப் பெருமாள்[செலுவேநாராயணன்]தானே வந்து ஆடுவான். வெகு நாள் பாட்டும் ஆட்டமுமாய்க் கழிந்தது.அந்திமத்தில் பாகவதர் பெருமாளைக் கேட்டார் தனக்கு மோட்சம் உண்டா ? என்று. திருநாராயணன் கேட்டான் ‘உன் குரு யார் ? ‘என்று.உன் பரிச்சயம் எனக்குப் பிரயோசனமில்லையா ? என்று பாகவதர் கதற ‘இவ்வூரில் ராமானுஜரைக் கேளும். நீர் பாடியதற்கும் நான் ஆடியதற்கும் சரியாகிவிட்டது ‘ என்றான் பெருமாள்.

குரு சம்பந்தம் என்பது நம் நடைமுறையில் ‘through proper channel ‘என்று சொல்லி process செய்கிறோமல்லவா ? அது தான் என்று எனக்குப் படுகிறது. தேவனின் சாம்ராஜ்யம் மிகப் பெரியது. அவன் தவறே நேரக்கூடாது என்று விரும்புகிறவன். முறைப்படி வராத விஷயங்களைப் பரிசீலனை செய்வதிலும் dispose செய்வதிலும் blunders நேராமலிருக்க இப்படிப்பட்ட checks தேவை தானே!


17.உம்பர் கோமானே உறங்காதெழுந்திராய்

[அம்பரமே தண்ணீரே சோறே] மாளிகைக்குள் வந்த கோபிகள் நந்தகோபரையும் யசோதைப் பிராட்டியையும் கண்ணபிரானையும் நம்பிமூத்தபிரானையும் எழுப்பும் பாசுரம் இது.முன்கட்டில் நந்தகோபர்.இடையில் யசோதை அடுத்து பிள்ளைகள்.கணவனின் கட்டிலையும் பிள்ளையின் தொட்டிலையும் விடாமல் இருப்பது பெண்ணரசி யசோதைக்கு இயற்கை தானே! நந்தகோபரின் கொடைமேன்மையைச் சொல்வது முதலடி.மேனிக்கு நிறம் கொடுப்பதில் முதன்மையான ஆடைகளையும்,[அம்பரம்-வஸ்திரம்] பின்பு தாரகமான தண்ணீரையும் போஷகமான உணவையும் வேண்டுவோர்க்கு வேண்டியபடி அறமாக அளிக்கவல்லவனே! என்றார்கள். ‘அறம்செய்யும் ‘என்று அழுத்திச் சொன்னதால் புகழைப் பயனாகக் கருதாமல் கொடையையே பயனாகப் பேணிக் கொடுக்கின்றமை விளங்கும்.யாசகர்களுக்கு கொண்டாலல்லது வாழ்வில்லை என்றது போல இவருக்குக் கொடுத்தாலன்றி உயிர் தரிக்காது என்பது இங்கு கருத்து.

அம்பரமே,தண்ணீரே,சோறே என்று ஏகாரம் போட்டு நிறைய விவரங்களைச் சொல்லிவிடுகிறாள் ஆண்டாள்.

நந்தகோபன் தானம் செய்யும்போது வஸ்திரம் மட்டுமே தானம் செய்பவன்,சோற்றை மட்டுமே தானம் செய்பவன்,நீரைமட்டுமே தானம் செய்பவன் என்பதுபோல ஒவ்வொன்றின் தானமும் குறைவின்றி பூரணமாயிருக்கும் வகையில் கொடுத்துத் தீர்ப்பவன் நந்தகோபன் என்று பொருள். உலகத்தில் சாதாரணமாக jack of all trades master of none என்றிருப்பவர்களே அதிகம்.மேதைகளின் விஷயமே வேறு.அவர்கள் தம் துறை தவிர எத்தனையோ துறைகளிலும் அதே மேதைமை கொண்டிருப்பார்கள். வெளியில் தெரியவராது.எதைச் செய்தாலும் இது தான் அவர் தம் speciality என்பது போலச் செய்வர். வல்லுனர்களின் லட்சணமே அது தான். என் பேராசிரியர் தாவர இயலில் மிகப் பெரிய ஆசாமி.பெயரும் ஸ்வாமி[B.G.L.Swami]தான்.பெங்களூர் குண்டப்பா லட்சுமண ஸ்வாமி.அவருடைய தந்தை குண்டப்பா மிகப் பெரிய கன்னட எழுத்தாளர். பெங்களூரில் ஒரு வீதியே அவர் பெயரில் உண்டு.என் பேராசிரியர் ஒரு முறை கல்லூரியில் வண்ணப்புடவைகளில் தாவர இயல் சித்திரங்களை வண்ணமாகத்தீட்டி ஒரு கண்காட்சி நடத்தினார். புடவை டிசைன் காரர்கள் சொக்கிவிட்டார்கள்.அந்தத் தொழிலுக்கே அவர் போய் விடலாம் என்று கருத்து தெரிவித்தார்கள்.அவர்கன்னடத்திலும் தமிழிலும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். எழுதினால் அவருடைய முழு நேரத் தொழில் எழுத்து என்கிற மாதிரி இருக்கும். அவர் வகுப்பெடுத்தால் ஆசிரியராகவே பிறந்தவர் என்றிருக்கும். காலை வேளையில் மாநிலக் கல்லூரி தோட்டத்தில் நீர் பாய்ச்சும்போது ஒரு நல்ல தோட்டக் காரனைப் போல இருப்பார்.

இங்கே நம் நந்தகோபர் அப்படி என்கிறாள் ஆண்டாள்.அவர் வஸ்திர தானம் செய்தால் அதையே உயிர்மூச்சாக நினைத்து ஆயுள் சங்கல்பமாக செய்கிறார் என்று தோன்றுமாம்.நீர்ப்பந்தல் வைத்தால் இவர் நேர்ந்துகொண்டு தண்ணளி செய்கிறார் தண்ணீரை என்று படுமாம்.இவர் அன்னதானம் செய்ய ஆரம்பித்தால் ஏதோ அன்னதானத்தில் இவரைவிட்டால் வேறொருவர் பேரைத் தட்டிக்கொண்டு போய் விடக்கூடாது என்று முனைந்து அதிலேயே தன் சொத்து முழுக்கவும் சாய்த்து விட்டாற் போலத் தோன்றும்படிக்கு அபரிமிதமாகச் செய்வாராம். தனித்தனியே ஒவ்வொரு தானத்தையும் அளவில்லாமல் செய்யக் கூடிய நந்தகோபரே!எழுந்திரும்.என்றாள் ஆண்டாள்.

அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்

நீர் செய்த தானம் எல்லாம் சிறக்கும்படி கண்ணனை எங்களுக்கு அனுமதி தானம் செய்து கொடும் என்பது இங்கு குறிப்பு.

எங்களுக்கு உண்ணும்சோறுபருகும்நீர்தின்னும்வெற்றிலை எல்லாம்கண்ணன்.[வாஸுதேவஸ் ஸர்வம் என்றபடி]இவனைத் தராமல் ஒளித்தால் இவ்வளவு தானம் செய்த உம்முடைய கீர்த்தி விட்டுப் போகுமே உமக்கு என்கிறாள் ஆண்டாள். ‘இவர் மகன் தூரஸ்தனாகிலும் பேர் சொல்லப் புடவை வழங்குகிறதும்,இனிது மறித்து நீரூற்றுகிறதும்,வேண்டடிசில்*உண்ணும் போதுகளிலே சோறு வாங்கி இடுகிறதும் இவர் வயிற்றில் பிறப்பாலேயிறே ‘என்பது ஆறாயிரப்படி.

மாளிகையில் வாசல் புறத்திலா நந்தகோபரின் அறை இருந்தது என்று கேட்கிறார்கள் பக்தர்கள்.பின் என்ன ? உள்ளுக் கிடக்கிறது வைத்த மாநிதியமும் தாம் எடுத்த பேராளனுமாயிருக்க காவல் காக்க வேண்டாமோ என்றார்கள் பூர்வாசிரியர்கள்.[புதையல் எடுத்தவன் எண்ணி எண்ணிப் பார்க்கமாட்டானா ?]அது மட்டுமில்லாமல் ஆய்ச்சிகள் களவு கொள்வார்கள் என்று பயம் தந்தைக்கு.

அடுத்து யசோதைப் பிராட்டியை எழுப்புகிறார்கள்.

கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்!

வஞ்சிக் கொம்பு போன்ற பெண்களுக்கெல்லாம் ஏதாவது பிரச்னையென்றால் முதலில் தான் முகம் வாடும் கொழுந்து போன்ற யசோதைப் பிராட்டியே!எங்கள் ஸ்வாமினியே!ஆயர்குலத்தின் மங்கல விளக்கே! நீ அறிந்தாயா ?[கொடிக்கு நோயென்றால் இலைத்துளிர்க் கொழுந்து வாடி இற்று விழுந்து காட்டித்தரும்.ஆக எங்கள் அவலத்தை கிருஷ்ண விரஹத்தை நீ அறிந்து கொண்டால் போதுமானது]எழுந்திருந்தாயா ?[நீ கொழுந்தாகவும் விளக்காகவும் இருந்து ஆயர்குலக்கொழுந்தும் ஆயர்குல விளக்குமான கண்ணனை நாங்கள் அடையுமாறு தந்து உபகரிப்பாயா ?]

அம்பரமூடறுத்து ஓங்கிஉலகளந்த உம்பர்கோமானே உறங்காதெழுந்திராய்

அண்டகடாஹத்தை ஊடறுத்து விஸ்வரூபமெடுத்து உலகளந்த அமரர் அதிபதியே!அந்தப் பரம்பொருளே அவதரித்த எம் ஆயர்பாடிக் கண்ணனே எழுந்திராய்! [மூன்றடி அளந்த அவதாரத்தை ஏன் சொன்னோமெனில் வேண்டாதவர் தலை மேலும் விலக்குகிறவர் தலை மீதும் வைத்த பாதத்தை வேண்டி வேண்டிப் பணிகிற எங்கள் தலை மீது வைக்கலாகாதா ? உன்னை எப்போதும் பார்த்திருக்கும் இமையாத அமரரூக்கு உகப்பன செய்த நீ உன்னைப் பார்க்க முடியாமல் துடிக்கும் அபலைப் பெண்களூக்கு அதற்கெனவே எடுத்த கிருஷ்ணாவதாரத்தில் முகம் காட்டாமல் உறங்கி இன்னும் தவிக்க விடலாமா ? எழுந்திருக்க வேண்டாமா ?]

கண்ணன் வாயைத்திறக்காமல் மெளனமாக இருந்ததும் இவர்களுக்கு சந்தேகமாகிவிட்டது.முறைதப்பி மூத்தவரை எழுப்பாமல் கண்ணனை எழுப்பிவிட்டோமோ என்ற பதட்டத்துடன்

செம்பொற்கழலடிச்செல்வா பலதேவா உம்பியும் நீயும் உறங்கேலோரெம்பாவாய். என்றார்கள்.

நீ பொற்கால் பொலியவிட்டு கோகுலத்தில் பிறந்து உன் கால்நலத்தால் கண்ணனும் பிறந்தான்.யாரைப் பிரிந்தாலும் உன்னைப் பிரியமாட்டான் கண்ணன். நடந்தால் குடையாகவும் இருந்தால் ஆசனமாகவும் படுத்தால் பாயாகவும் இருக்கவென்று லட்சுமணன் பின்னால் பிறந்து பெற்ற ஐஸ்வர்யத்தை எல்லாம் முன்னால் பிறந்து அள்ளிக்கொண்ட நம்பி மூத்தபிரானே! பலராமனே!

படுக்கை படுப்பவனோடு தூங்கிப் பார்த்ததில்லை. எங்கள் கிடக்கைக்கு இடமான படுக்கை கண்ணன்,உன் தம்பி. அவனோடு அவன் படுக்கையான நீயும் உறங்காமல் எழுந்து வரவேண்டும்.

பலராமன் அண்ணனானது எப்படியெனில்- கோகுலத்திலிருந்த வஸுதேவ பத்தினியான ரோஹிணியின் வயிற்றிலிருந்த வாயுரூபமான ஆறுமாதத்துக் கர்ப்பத்தைக் கலைத்துவிட்டு வசுதேவரின் இன்னொரு பத்தினியான தேவகியின் வயிற்றிலிருந்த ஆதிசேஷாம்சக் கர்ப்பத்தைக் கொண்டுபோய் அந்த ரோஹிணியின் வயிற்றில் சேர்த்திட[மாயையின் கைங்கர்யம்] இங்ஙனம் வஸுதேவ பத்தினியருள் தேவகியின் கர்ப்பத்தில்[ஏழாவது கருவாக] ஆறுமாதமும் ரோஹிணியின் கர்ப்பத்தில் மற்றோர் ஆறு மாதமும் இருந்து பலராமன் பிறந்தான்.தேவகியின் எட்டாவது கர்ப்பத்தில் கண்ணன் பிறந்து கோகுலத்தில் வளர வந்தான் என்பதால் பலராமன் அண்ணனானான்.

அது மட்டுமல்ல. சுக்ரீவன்,அனுமான்,குகன் விபீஷணன் என்று பலரும் லட்சுமணன் சிபாரிசால் இராமனைக் கிட்டினார்கள். அப்படி பலராமனைக் கிட்டி கண்ணனை அடையலாம் என்கிற உத்தேசம் இந்தப் பெண்களுக்கு. அதற்கும் மேல் இவர்களுக்கு நாகணை மிகப் பிரியம். கண்ணனோடு நல்ல உறவாயிருக்கிற காலத்தில் ‘நடலையெல்லாம் அந்த நாகணைக்கே சென்று உரைத்தி ‘என்று மூத்தபிரானோடு சொந்தம் கொண்டாடுவார்கள். ஊடல் சமயத்தில் ‘அந்தத் தீ முகத்து நாகணை ‘ என்பார்கள்.[மூஞ்சியைப் பாரு,அண்ணனும் தம்பியும் லச்சணம் தான்]

சீதைக்கு அக்கினிப் பிரவேசத்துக்கு நெருப்பு மூட்டியபோது லட்சுமணன் ‘இன்னொரு முறை உனக்குத் தம்பியாய் பிறக்கமாட்டேன். உன்னை ஆணையிடும் அண்ணனாகத்தான் அவதரிப்பேன் ‘ என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டானாம். அப்படிப் பெரியவனாக பிறவியெடுத்த ஆதிசேஷ அம்சம் பலராமன். பாம்பைப் போலவே புஸ்ஸென்று கோபம் வரும் அவனுக்கு ஆயுதம் கலப்பை. மிகவும் கோபக்காரனான பலராமன் ஒரு முறை பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த யமுனையைப் பார்த்து, ‘ஓ,யமுனா,இங்கே வா ‘ என்றான். யமுனைக்கு ஒன்றும் புரியவில்லை. எல்லாரும் தான் இருக்கும் பக்கம் வந்து தன்னை உபயோகிக்க இவரென்ன அவரிருக்கும் பக்கம் தன்னைக் கூப்பிடுகிறார் என்று திகைத்து ஒருவேளை மது மயக்கமாயிருக்கக்கூடும் என்று எண்ணி அலட்சியமாகத் தன் பாட்டில் நடக்கலானாள்.பலராமனுக்குக் கோபம் வந்தது. ‘நான் கூப்பிடுகிறேன் என்னை மதிக்காமல் நீ போகிறாயா ? ‘ என்றபடி கலப்பையைக் கையிலெடுத்து அதன் நுனியால் நதியைப் பிடித்து இழுக்க யமுனா நடுநடுங்கித் தன் திசையை விட்டு இவனிருந்த பாதைக்குப் பெருகிவந்தாள். அப்படியே கிருஷ்ணனின் புதல்வன் சாம்பன் துரியோதனன் மகள் லக்கணையைக் கடத்தி வரும்போது கெளரவ சேனைகள் சாம்பனைக் கட்டி உதைக்க பலராமன் அஸ்தினாபுரத்து மதிலையே கலப்பையால் அசைத்து மதில் மேலுள்ள நாஞ்சில் என்ற உறுப்பைக் கொக்கி போல் மாட்டி யமுனையில் கவிழ்த்து விடவிருக்க தகராறைக் கைவிட்டனர் கெளரவர். அவ்வளவு பெருமைக்குரிய பலராமனையும் எழுப்பினார்கள். * பக்தவிலோசனத்து வேண்டடிசில் உண்டது- கண்ணனும் பலராமனும் ஒருமுறை யமுனைக் கரையில் நிறைய ஆடு மாடுகள் பிள்ளைகளுடன் மிகக் களைத்து உட்கார்ந்தபோது சிறுவர்கள் பசிக்கிறது என்றார்கள். கண்ணன் அருகாமையில் சில ரிஷிகள் ஆங்கிரஸ் என்ற யாகத்தைச் செய்வதாகவும் அங்கு போய் தன் பெயரையும் பலராமன் பெயரையும் சொன்னால் ஆகாரங்களைக் கொடுப்பார்கள் என்றும் சொல்லி சிலரை அனுப்பினான். பிள்ளைகள் அப்படியே போய் ரிஷிகளிடம் சொல்ல அவர்கள் கொண்டுகொள்ளவேயில்லை. பிள்ளைகள் திரும்பி வந்து சொல்ல கண்ணன் புன்னகைத்து இந்தமுறை ரிஷிபத்தினிகளிடம் நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்றான். ரிஷிபத்தினிகள் விஷயம் கேட்டுப் பதறித்துடித்து அறுசுவை அன்னங்களோடும் நல்ல பாத்திரங்களில் நிரம்பின பட்சணங்களோடும் எல்லாருக்கும் விருந்து செய்வித்து அனுப்பினார்கள்.இது நாச்சியார் திருமொழியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


18.உந்துமதக்களிற்றன் ஓடாத தோள்வலியன்

‘பொழிகின்ற மதத்தைக்கொண்ட யானைகளை உடையவனும் போர்க்களத்தில் தோற்றுப் புறமுதுகிட்டு ஒடாத அளவு தோள்பலம் படைத்தவனும் ஆன நந்தகோபன் மருமகளே!நப்பின்னை! ‘என்று அழைத்து கிருஷ்ணாவதாரத்தில் பிராட்டியான [யசோதையின் சகோதரன் கும்பன் மகள்]நப்பின்னையைக் கூப்பிடுகிறாள் ஆண்டாள்.

சிலபெண்கள் தம் பிறந்தகத்தில் பாலாய் ஓடிற்று தேனாய் ஓடிற்று என்பார்கள். மிகச் சில பெண்கள் புக்ககத்தில் தாம் நுழைந்த சமயத்தில் அப்படி ஏதேதோ இருந்ததாகப் பின்வரும் ஓரகத்தியருக்குக் கதை சொல்வார்கள்.அந்தவீட்டு மகள்களும் மகன்களும் பேசாமலிருக்க இவர்கள் கதையாகச் சொல்வார்கள் தமக்கு அதிகம் தெரிந்தது போல.

அப்படி ஆண்டாள் நந்தகோபன் குறித்து வள்ளல் என்கிறாள்.யானைகட்டிப் போரடித்த விவசாயி என்கிறாள்.தோற்காத போர்வீரன் என்கிறாள். இதெல்லாம் நிஜமா ? அல்லது இதெல்லாம் புருஷன் மேலும் புக்ககத்தின் மீதும் தீராத பாசம் வைத்த பெண்களின் மீதுணர்ச்சி வெளிப்பாடா ?என்று கேட்டார்கள் வாசகர்கள்.ஆண்டாள் சொன்னால் சரியாகத்தானிருந்திருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள் பூர்வாசிரியர்கள்.எப்படியெனில் உத்தமப் பெண் தன் கணவனைத் தனக்காக்கிக் கொடுத்த மாமன் மாமியைக் கொண்டாடாமல் இருக்க மாட்டாள்.சீதை அப்படி அசோகவனத்தில் அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறாள். ‘என் மாமனார் மட்டும் இப்போது உயிருடன் இருந்திந்தால் என்னை இந்த நிலையில் விட்டு வைத்திருப்பாரா ? ‘என்று வருந்திப் பேசியிருக்கிறாள். தந்தை ஜனகன் உயிரோடிருந்தும் அவனைப் பற்றி அந்த இடத்தில் பேசவில்லை.கணவனால் வந்த பந்தம் என்பதாலும் கெளரவம் சார்ந்த பந்தம் என்பதாலும் அப்படி அதில் ஈடுபடுகிறார்கள் என்று தோன்றுகிறது.

நந்தகோபன் அப்படி செல்வாக்கு பெற்றிருக்கத் தடையில்லை. இல்லாவிட்டால் வடமதுரை அரச வம்சத்து வசுதேவர் இவர்க்கு நண்பராக இருந்தமை எப்படி சாத்தியப்படும் ?நந்தகோபன் இடையராக இருந்தும் யானைகள் உடையவராகவும் போர்வீரராகவும் இருந்ததால் தான் கம்சன் கூலிப்படை வைத்து அங்கங்கு குழப்பம் விளைவிக்கமுடிந்ததே தவிர நேரடியாகப் படையெடுத்து இடையர் தலைவனைக் கண்ணனோடு கூண்டோடு அழிக்க முற்பட தைரியம் வரவில்லை என்கிறார்கள், பூர்வாசிரியர்கள்.

ஆக நப்பின்னை யாருடைய பேரைச் சொன்னால் பெருமைப் படுவாளோ அந்த மாமனாரின் பேரைச்சொல்லி இன்னாரின் மருமகளே என்று அழைத்தார்கள்.கோகுலத்தில் நந்தகோபர் மருமகள் எத்தனையோ பேர் ,நான் ஒருத்தி தானா என்று அவள் குழம்பாமல் இருக்க அவள் பெயரையிட்டு அழைத்தார்கள். முறைப்பெண்ணான அவளைக் கும்பன் விதித்தபடி ஏழு எருதுகளை அடக்கி[அது தான் பரிசம்] மணந்து கொண்டான் கண்ணன். அதோடு நில்லாமல் நப்பின்னை சின்னவயதிலிருந்தே கூடவே விளையாடி வீட்டுக்கு வந்து போக இருந்தவள். கண்ணனைக் குளிக்கவைக்குமுன் யசோதை சீக்கிரம் குளித்துவிடு,கொஞ்சம் நேரத்தில் அந்தப் பெண் வந்து விடுவாள் ‘கண்டால்நகும் ‘ பார்த்துச்சிரிப்பாள் என்று பயமுறுத்தும் அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவள்.அந்த நப்பின்னை இங்கு அழைக்கப் படுகிறாள்.

பிராட்டி என்கிற புதிய அதிகாரியை ஆண்டாள் இந்தப் பாடலில் அறிமுகம் செய்கிறாள்.பரமன் தரும் பேற்றுக்குப் பிராட்டியின் புருஷகாரம் தேவைப்படுகிறது என்று சொல்கிறாள். பிராட்டி என்கிற அதிகாரி ஜீவனுக்கு எப்போதும் சாதகமாகவே அருள்புரியும் அதிகாரி.எனினும் அவளை மீறி பகவானைக் கிட்டக் கூடாது.அவளுடைய சேர்த்தியில் தான் பகவாணை அணுகவேண்டும் என்கிறது தர்மம். இது நாம் சொல்லிக் கொண்டு வரும் ப்ரேமை என்கிற இணை நாடகத்துக்கு எப்படிப் பொருந்திவரும் என்று கேட்டால் ராசக்ரீடை தத்துவத்தை ஞாபகப் படுத்திக்கொள்ளவேண்டும்.ஒவ்வொரு ஜீவக் கூறுக்கும் ஒரு பரமம் காத்திருக்கிறது.பிராட்டி ஜீவ பரம சம்பந்தத்தின் பாலம்.

‘நீ விடவேண்டியதைவிட்டு என்னைப் பற்றினால் நான் உன்னை ரட்சிக்கிறேன் அஞ்சாதே ‘என்பது பகவானுடைய அபயப்ரதானம். பிராட்டியின் அபயப்ராதனம் ‘நீ உன் பாபத்தைக் கண்டும் அஞ்சவேண்டாம்,பகவான் தண்டிப்பான் என்கிற அவனுடைய சர்வாதிகாரம் கண்டும் பயப்படவேண்டாம்,ருசி உண்டானபோதே நீ பகவானைப் பற்றலாம்.நானிருக்கிறேன்,நான் சொல்கிறேன் அவனுக்கு ‘என்பது.பிராட்டி புருஷகாரத்தால் அதாவது பிராட்டி இணைந்திருக்கும் நிலையில் பரமனை அணுகுவது ஜீவனுக்கு மிகவும் நல்லது என்று சொல்லப் படுகிறது.

எனக்குத் தெரிந்தவரை பிராட்டி [தேவி] என்று சொல்லப்படுகிற இந்து உருவகம் கடுமையான சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட personification of good and noble things [the God]உருவகத்தின் female counterpart.அதாவது மென்மையான betterhalf.இந்துவல்லாதார் கேலிசெய்யும்படிக்கு நம் கடவுளர் பெண்பித்து கொண்டு திரிபவர் என்பதல்ல. பெண் தன்மை ஆணுக்கும் ஆண் தன்மை பெண்ணுக்கும் எல்லாவிடத்திலும் உண்டு. இங்கு கட்டுச்செட்டான பெருமாளின் பெண்தன்மை அதாவது empathy பிராட்டியின் வடிவில் கூடவே இருக்கிறது.பரீட்சையில் பெயிலான மகனைத் தந்தை கண்டிக்கும்போது தாய் கூடவே இருந்து ‘அன்றெல்லாம் அவனுக்கு மலேரியா,நிமோனியா ‘ என்று வாயில் வந்ததைச்சொல்லி பத்துநாள் முன்பின் வந்ததை எல்லாம் பரீட்சை சமயமே வந்ததாக இட்டுக்கட்டி தந்தையிடம் அடி வாங்காமல் காப்பாற்றுகிற உதாரணமே இதுக்குப் போதும்.

பூடகங்களைப் புரிந்தும் புரியாதது போல நடிப்பது எதிர் முகாமுக்கு சாதகமாயிருக்கலாம்.ஆனால் இந்து தர்மத்தை அனுசரிப்பவர்கள் உருவகங்களைப் புரிந்து வைத்து ஆண்டாள் போல கற்பனையை நீட்டி அதை enjoy செய்யவேண்டும். அப்படி அழகான நப்பின்னை புருஷகாரத்தை அருமையாகச் சொல்கிறாள் ஆண்டாள்.

உந்துமதகளிற்றன் ஒடாத தோள்வலியன்

நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்!

கந்தம் கமழும் குழலீ!கடை திறவாய்!

வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்

பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்

பந்தார்விரலி உன் மைத்துனன் பேர் பாடச்

செந்தாமரைக் கையால் சீரார்வளையொலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.[திருப்-18]

நந்தகோபர் மாளிகையில் நந்தகோபர்,யசோதை,பலராமர்,கண்ணன் எல்லாரையும் எழுப்பி கண்ணன் அறை வாசலில் நின்று முறை தப்பி உம்பர்கோமானை எழுப்பினோமே நப்பின்னை இருக்க என்று ஞாபகம் வந்துவிட நப்பின்னையை எழுப்புகிறார்கள்.

நப்பின்னை தான் உள்ளேயிருப்பதைக் காட்டிக் கொள்ளவேண்டாம் என்று மெளனமாக இருக்க,பெண்கள் ‘உன் இருப்பைச் சொல்ல உன் குழல் வாசம் வந்து விட்டதே! ‘என்பதைக் குறிப்பாலுணர்த்தி கந்தம்கமழும்குழலீ!என்றார்கள்.[வாசனை,மலர்,அதரங்கள்,இடை,வரிசையில் முலை விட்டுப் போயிருந்தது எல்லா அவயவங்களும் என்று சேர்த்துக் கொள்ளவும்.எல்லாமே பக்தி என்று முன்பே சொல்லியிருந்தேன்] சரி வருகிறேன் பொழுது விடிந்ததா ? என்றாள் நப்பின்னை. ‘கோழி வந்து வந்து எங்கும் கூவி நிற்கின்றன.குருக்கத்திக் கொடிப் பந்தலில் ஊஞ்சலாடிக்கொண்டு குயில்கள் பலமுறையும் கூவின ‘ என்று இரு அடையாளங்கள் சொன்னார்கள் விடிந்ததற்கு.

கோழி கூவுதல் இவர்களுக்குப் பலவகையிலும் சங்கேதம்.அதெல்லாம் நப்பின்னைக்குத் தெரிய நியாயமில்லை. களவொழுக்கத்தில் ஒரு முறை கோழி கூவினபோது கண்ணன் இருட்டில் ஒரு கோபியை சந்திப்பதும் அடுத்தமுறை கோழி கூவினதும் அவளை விட்டுப் பிரிவதும் ஆக முன் தீர்மானம் செய்து கூடுவதும் பிரிவதும் உண்டு. ‘கோழிகூவுமென்னுமால் தோழி நானென்செய்கேன் ஆழிவண்ணர் வரும்பொழுதாயிற்றுக் கோழிகூவுமென்னுமால் ‘ என்றாற்போல சாமக் கோழி கூவுவதும் அடுத்துக் கூவுவதும் பாதிப்பு என்று அறியாத நப்பின்னைக்குக் கோழி அழைப்பதைத் தமக்குள் ரசித்து அது புரிந்த மற்ற தோழிப் பெண்கள் ரசிக்கச் சொல்கிறார்கள். நப்பின்னை ‘அதெல்லாம் இல்லை பொழுது விடியவில்லை ‘என்று சும்மா இருந்தாள் நப்பின்னை.

கொத்தலர் காவின் மணித்தடங்கண்படை கொள்ளுமிளங்குயிலே!என் தத்துவனை வரக்கூகிற்றியாகில் தலையல்லாற்கைமாறிலேனே!

என்று தூங்கிக் கொண்டிருக்கிற குயில்களை எழுப்பிக் கூவச் சொல்லி வருத்துகிறவர்கள் ஆயிற்றே!நீங்கள்! குயில் கூவிப் பொழுது விடிந்ததை எப்படி நம்புவது ?

அப்படி இவர்கள் சொன்னபடி அந்தக் குயில்கள் கூவாமல் போயிருந்தால்.

இன்று நாரணனை வரக்கூவாயேல் இங்குற்று நின்றுந்துரப்பன் ‘என்று அவற்றைச்

கொத்தலர் காவின் மணித்தடங்கண்படை கொள்ளுமிளங்குயிலே!என் தத்துவனை வரக்கூகிற்றியாகில் தலையல்லாற்கைமாறிலேனே!

என்று தூங்கிக் கொண்டிருக்கிற குயில்களை எழுப்பிக் கூவச் சொல்லி வருத்துகிறவர்கள் ஆயிற்றே!நீங்கள்! குயில் கூவிப் பொழுது விடிந்ததை எப்படி நம்புவது ?

அப்படி இவர்கள் சொன்னபடி அந்தக் குயில்கள் கூவாமல் போயிருந்தால்.

இன்று நாரணனை வரக்கூவாயேல் இங்குற்று நின்றுந்துரப்பன் ‘என்று அவற்றைச் சோலையிலிருந்து துரத்தி விடுவதாக பயமுறுத்தினீர்களே அதற்கு அஞ்சி பாவம் போல் அந்தக் குயில்கள் கத்தியிருக்கும் என்று நினைத்தபடி இப்போதும் மெளனமாக இருந்தாள் நப்பின்னை. பெண்கள் சாவித்துவாரம் வழியாக நப்பின்னை படுத்திருப்பதைப் பார்த்தார்கள்.

பந்தார்விரலி உன் மைத்துனன் பேர் பாடச் செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிக்க வந்து திறவாய் மகிழ்ந்து என்றார்கள்.

கண்ணபிரானும் நப்பின்னையும் இரவில் பந்தடித்து விளையாடினர். கண்ணனைத் தோற்கடித்தாள் நப்பின்னை. தனக்கு வெற்றி தந்த பந்தைக் குழந்தைப் பெண் இறுகப் பற்றிக் கொண்டு தூங்கினாள்.பந்து இறுக்கின விரல்கள் பிரியவில்லை. அதைப் பார்த்த ஆய்ச்சிகள் ரசித்தார்கள். உனக்குப் பிரியமான அந்த பொம்மை வஸ்துவாக நாங்கள் இருந்திருக்கக் கூடாதா ?என்கிறது போல.உன் கணவன் என்கிற பேரில் பரமன் இன்னும் பிரபலமானவன் எங்களைப் பொறுத்தவரை.[உன் மைத்துனன் பேர் பாட] [ஒரு பிரபல பாடகர் தம் வேட்டகத்துக்குப் போயிருந்தபோது அவருடைய புகழையெல்லாம் தாண்டி அவர் அங்கு ‘ஆச்சாள் அகமுடையான் ‘ என்பதாக அறிமுகப் பட்டதை வேடிக்கையாகச் சொல்லியிருப்பார். அது போல]

உன் கையில் பந்தைப் பார்த்தோம். என்னே உன் பெருமை. உனக்கு ஒரு கையில் நித்ய விபூதி ஒருகையில் லீலாவிபூதி. ஒரு கையில் சாட்சாத் எம்பிரான் ஒரு கையில் பொம்மை. ஒரு கையில் பரமன் ஒரு கையில் பொம்மை போன்ற ஜீவன்[அதாவது நாங்கள்]எமக்கும் பரமனுக்கும் இடையில் பாலம் போல நீ. என்பது புரிபட பந்தார்விரலி என்ற அழகியல் வாசகத்தைச் சொன்னார்கள்.

செந்தாமரைக் கையைச் சொன்னார்கள். கருணையால் சிவந்த கை பந்தை இறுக்கி இன்னும் சிவந்திருந்தது. சீரார் வளை என்பது கழலாத சரியான அளவுள்ள சரியாக சப்திக்கிற வளை. ‘என்னுடைய கழல்வளையைத் தாமும் கழல்வளையே ஆக்கினரே ‘ என்றாற்போல எங்கள் கையில் வளை கழல்கிறது. உன் கையில் சீராக இருக்கிறது.

நாங்களாக உள்ளே வர மாட்டோம்.கதவு தாள் நீக்கியிருந்தாலும் நீ எழுந்து வளை ஒலிக்க வந்து திறந்துகொடுத்து உன்னால் அடையும் பேற்றையே விரும்புகிறோம்.என்றார்கள்.

ராட்சசிகளும் காகாசுரனும் தன்னை மன்றாடாத போதும் தானாகவே அவர்களுக்குப் பரிவுரை செய்யும் அளவு கருணை மேலிட்டவள் பிராட்டி.

கிருஷ்ணாவதார சாரபூதையான நப்பின்னைப் பிராட்டியை எழுப்பி இந்தப் பாசுரம் முடிந்தது.


malti74@yahoo.com

Series Navigation

author

மாலதி

மாலதி

Similar Posts