உயர்பாவை- 2

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

மாலதி


1.போதுவீர் போதுமின்

எந்தக் காரியத்தைச் செய்யவும் ஆசை இருக்க வேண்டும்.அதனால் தான் ஒளவையார் ‘அறம் செய்ய விரும்பு ‘ என்றார்.அறம் செய் என்று சொல்லவில்லை.அப்படிச்சொல்லிவிட்டால் எது எத்தனை எப்படி எப்போது யார்யார் என்று பல கேள்விகள் வந்து விடும். விருப்பம் வந்து விட்டால் செய்கை தானாக வந்துவிடும். திருப்பாவை முதல்பாட்டும் விரும்புபவரின் விருப்பத்தை,ஆசையை. ஆவலை முதலீடாக வைத்து கண்ணன் என்கிற அவதார ரூபத்தின் பரம்பொருளை,நல்ல தன்மைகளின் முழு உருவை அடைந்து அவனில் திளைக்கும் பேரானந்தத்துக்கு வழி சொல்கிறது.

அற்ப செல்வமான கால வரையறைப்பட்ட சுவர்க்கானுபவத்துக்கு[தேவர்களும் சுவர்க்க வாசிகளும் tenure க்கு உட்பட்டவர்கள் என்று சொல்லப்படுகிறது] கூச்மாண்ட ணஹோமம் முதலிய அரிய கர்மங்களைச் செய்தாக வேண்டும். மீட்சியின்றி பரம் பொருள் உடன் றைய வெறும் இச்சை மாத்திரம் போதும். அவன் தான் வேண்டும் என்று மனசு வைத்தாலே போதும். இதையே போதுவீர் போதுமின் என்ற பதம் உணர்த்துகிறது.

நீராடப் போதுவீர் போதுமின் என்றால் நீர்க்கட்டத்துக்கு விரும்புகிறவர்களெல்லாம் வாருங்கள் என்று அர்த்தம்.சிறுமியின் பாஷை இதில் தெரிகிறது. வருகிறவர்கள் வாருங்கள் என்று சொல்லாமல் போகிறவர்கள் எல்லாம் போய்ச் சேர்ந்துகொள்ளுங்கள் என்கிறாள். சிறுவர்கள் பேசும்போது நிகழ்,எதிர் காலங்களும் ஒருமை பன்மையும் தன்னிலை படர்க்கை சொல்லாடலும் குழம்பும். அது பல இடங்களில் திருப்பாவையில் நேரும். ஒரு அசலான

வெளிப்பாடாக திருப்பாவை அமைந்ததற்கு இதுவும் காரணம்.

நீராட்டம் என்பது பரிபாஷை. நீர்ஆடுவோம் என்பார்கள் திரும்பத்திரும்ப. முப்பது பாடல்களில் ஒரு இடத்திலாவது ஒரு நதிக்கரையையோ ஒரு குளக்கரையையோ ஒட்டி நடந்ததாகக் கூடக்குறிப்பில்லை. நீராட்டம் ஒரு பூடகம். வேறு ஏதோ ஒன்றைத் தங்கள் குழுவினர் மட்டும் புரிந்து கொள்ளும்படி அயலார் அறியாமலிருக்கும்படி குறியிட்டுச் சொல்கிறார்கள் நீராடல்,புனலாடல் என்ற சொல்லாடல்கள் சங்க காலம் தொட்டுத் தமிழ்

மரபில் ‘கலவி ‘யைப் பூடகமாகச் சொல்பவை.அத்தோடு பக்தியிலக்கியங்களில் பரம்பொருளை நீராகவும் மனிதப்பிறவியை நீர்நிரப்பிப் பயனடையும் நிறைகுடமாகவும் உருவகிப்பது மரபு. ‘தாரே பிந்திகையா,கோவிந்தவென்போ குணவுள்ள நீருகெ தாரே பிந்திகையா ‘என்ற புரந்தர தாசரின் கன்னடக் கீர்த்தன வரிகள் ஒப்புநோக்கத்தக்கவை.அப்படி

தாக விடாய் தீர்க்கும் நீர்நிலையாகக் கண்ணனை பாவித்து அவனில் அமிழ்ந்து போகும் சுகானுபவம் பெறுவதை நீராட்டம் என்று அடிக்கடி குறிப்பிடுகிறாள்

ஆண்டாள்.

முதல் பாட்டில் முதல்வரி மார்கழி மாதத்தையும் அதில் ஆரம்பிக்கும் நிலவுநாட்களையும் கொண்டாடுகிறது.இந்தியா உஷ்ணப்பிரதேசமானதால் இந்திய இலக்கியங்கள் குளிர்ச்சியையும் நிலவையும் சுகமென்பன. மேலை இலக்கியங்களோ தமக்குச்சுகமான எல்லாவற்றையும் வெதுவெதுப்பு என்று வர்ணிக்கும்.சூரியனைக் கொண்டாடி அதன் கீழ்ப் படுவன அவை.அந்த கலாச்சாரத்தைப் பின்பற்றியே கீதாசாரியன் ‘மாதங்களில் நான்

மார்கழியாயிருக்கிறேன் ‘ என்றார்.[தேவலோகத்தில் பிரும்மமுஹூர்த்தம் என்கிற கணக்கு வேறு விஷயம்.ஒஸோன் படலத்தின் நல்ல பலன் கிடைக்கும் நேரம் என்று மார்கழி அதிகாலையை நாம் கண்டுகொண்டது பிறிதொரு விஷயம்]திருப்பாவையில் சிறப்பாக குளிர் மாதத்தைக் கொண்டாடக் காரணம் குளிருக்குப் பயந்து பெரியவர்கள் சிறுமிகளைப் பின் தொடர மாட்டார்கள் என்பதே.

பாடலை நாம் இப்படிப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

சீர்மல்கும் ஆய்ப்பாடிச்செல்வச்சிறுமீர்காள்!நேரிழையீர்!

மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

எரார்ந்தகண்ணி யசோதை இள சிங்கம்

கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனேநமக்கே பறை தருவான் ஆல்

பாரோர் புகழப் படிந்து நீராடப் போதுவீர் போதுமின்

சீர்மல்கும் ஆய்ப்பாடிச்செல்வச்சிறுமீர்காள்! நேரிழையீர்!

ஆய்ப்பாடிக்குச் சீராவது பால்வளம். ‘நாழிப்பால் நாழிநெய் ‘ தரும் என்று பேசப்பட்ட பால்வளம்.பின் அங்கிருந்த கொழுகொழுத்த இளமை மாறாத பசுக்கள்,எருமைகள்,மரம்செடி கொடி கனி கிண்கிணி சதங்கை,மயிற்பீலி பீதாம்பரம், கானம்,புல்லாங்குழல் எல்லாம் சேர்ந்த அழகியல்,அழகிய பெண்கள்….இடையில்லாத குதூகலம்.இவை தவிர பெரிய சீர் ஊருக்குண்டு.அது அயோத்தி போலில்லை.[இங்கு எங்கே அயோத்தி வந்தது என்று கேட்கக்கூடாது. கண்ணனை ராமனோடு தான் ஒப்புமை செய்ய வேண்டும். ஆய்ப்பாடியை

திருஅயோத்தியோடும்]அயோத்தி ஒரு ஊரா ? பரதன் பேச்சுக்கு இராமன் உடன்படாதானாய் இராமன் பேச்சுக்கு பரதன் உடன்படாதானாய் சகோதர ஒற்றுமை இல்லாத ஊர். இத்தனைக்கும் சகோதரர்கள் யோக்கியர்கள். ஆய்ப்பாடியிலோ பலராமன் வழி கண்ணனும் கண்ணன் வழி பலராமனும் ஒருமித்தாய் ஒத்துப் போவார்கள்.இத்தனைக்கும் இருவரும் செய்வதெல்லாம் அக்கிரமம். நான் சொல்லவில்லை. பூர்வாசிரியரே சொல்கிறார் பாருங்கள், தீம்பர்களின் தலைவன் என்று கண்ணனை.யோக்கியனை உகப்பதில் என்ன பெரிய

செய்தியிருக்கிறது ? அயோக்கியனை உகந்து அவன் மேல் காதற்படும் சீர் மல்குவது ஆய்ப்பாடியில். இந்திரனுக்கு இடும் சோற்றை மலைக்கு இடச் சொன்னால் ‘ஆமாம் ‘ போடும் ஊர் சீர் மல்கும் ஆய்ப்பாடி.

சிறுமிகள் என்று யாருக்கும் இன்னும் சொந்தமாகிவிடாத குமரிகளைக்குறிக்கிறாள் ஆண்டாள். ஏன் செல்வச்சிறுமீர்காள் என்கிறாள் ? கிருஷ்ண அணுக்கத்தைச் சம்பத்தாகப் படைத்துக் கொடுத்து வைத்தவர்களானார்கள் அந்தக் குமரிகள். மரவுரி அணிந்து காட்டுக்குப் புறப்பட்ட இலக்குவனைப் பார்த்து ‘தோ,பார் சீமான் ‘[லக்ஷ்மணோ லக்ஷ்மி சம்பன்னஹ ‘ என்றார்

வால்மீகி.மாளிகையும் செல்வமும் உற்றார் உறவினரும் விட்டு வெறும் கையோடு சரணாகதிக்கு வந்த விபீஷணனைப் பார்த்து ‘அந்தரிக்ஷகத ஸ்ரீமான் ‘ என்றார் கவி. சத்தியத்துக்கு அருகில் இருப்பவன் பாக்கியசாலி. நல்லவையும் அருமையானவையும் ஆன விஷயங்களின் ஒட்டு மொத்த உருவகம் கடவுள். பகவத் சம்பந்தம் தான் ஒருவனுக்குக் கிடைக்க முடியாத செல்வம். கிருஷ்ணானுபவத்துக்குத் தக்கவர்களாக அவன் காலத்தில் அவன் இடத்தில் வசிக்க நேர்ந்த கோபிகளை செல்வச்சிறுமீர்காள் என்றாள் ஆண்டாள்.

கோபிகைகள் எந்த நேரத்திலும் கண்ணன் தம்மைச் சந்திக்கவரலாம் என்ற எதிர்பார்ப்பில் தேர்ந்த ஆபரணங்களை மிகப் பொருத்தமான வகையில் சூடியிருந்தார்கள். எனவே நேரிழையீர் என்று அழைக்கப் படுகிறார்கள். தத்துவார்த்தப்படி அந்த ஆபரணங்கள் ஞானமும் பக்தியுமே.

திருப்பாவையில் ஆண்டாள் கண்ணனை வரிக்கிறாள். ஒரு தலைவனாயிற்று ஒரு தலைவியாயிற்று.இதற்கு ஏன் ஒரு குழுவே இங்கு இயங்கவேண்டும் ?பஞ்சலட்சம் குடி

கோபிகைகளும் கூட எதற்கு ?என்று கேட்கலாம். இது மொத்தமும் நாடகம். வெளியார் பார்த்து இயல்பாக எடுத்துக் கொள்ளவேண்டும்.களவுக்காதலின் குட்டு வெளிவரக்கூடாது என்பது ஒரு புறம்.இன்னொருபுறம் தலைவனுடனான உறவு சொல்லிக்கொள்ளும்படியில்லை [பூர்வாசிரியர் பாஷையில் ‘சீறுபாறு ‘என்றிருந்தது]காதல் ஒருதலையாயிருக்குமோ என்று அஞ்சும்படிக்கு அவ்விடமிருந்து ஒன்றும் சமிக்ஞை யில்லை. இத்தலையில் உறுதி இருக்கிறது[மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்] எப்படித்

தொடர்வதென்றும் தெரியவில்லை.பரிச்சயமிருக்கிறது.ஆனால் அவ்விடத்தைய எதிர்வினைக்கான உத்தரவாதமில்லை. எனவே தான் இப்படி பொய் நோன்பு

கற்பனை நாடகம் அதில் ஒளிவு மறைவு எல்லாமே!

இன்னொருவகையில் பார்த்தோமானால் ‘ராசக்ரீடை ‘ தத்துவப்படி ஒவ்வொரு கோபிகைக்கும் தனிக் கிருஷ்ணன். ஆண்டாளும் குழுவில் ஒருத்தி.இப்போது குழு சரிதானே ?

மதி நிறைந்த நன்னாள்

நல்ல விஷயங்களை ஆரம்பிக்க வளர்பிறை நாட்கள் உத்தமமானவை. அப்படிப்பட்ட நிலவு இரவுகள் தன்னடைவாகத் தங்களுக்கு வாய்த்ததைக் கொண்டாடுகிறாள் ஆண்டாள்.. ‘நந்தகோபன் கடைத்தலைக்கே என்னை நள்ளிருட்கண் உய்த்திடுமின் ‘ என்று பேசிப் புலம்பினவளாயிற்றே! மறந்து விட முடியுமா ? கிருஷ்ணனைப் பிரிந்திருந்த துயரம் தீர அவனைச் சந்தித்து வரும்படி ஊரே கூடி நியமித்து அவர்கள் பாவை நோன்பு செய்யும்படிக்கும் அதற்கான உபகரணங்களை [பறை முதலியன] வாங்கிக்கொள்ளும்படிக்கும் பணித்தது எவ்வளவு பெரிய வாய்ப்பு ?பழம் நழுவிப் பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்தது போலாயிற்றே!எனவே தான் இது நன்னாள் பொன்னாள் என்று ரமித்துச் சொல்கிறாள்.

கூர்வேல்….முகத்தான்

நந்தகோபர் ,யசோதை தம்பதியரின் மகன் கண்ணன். நந்தகோபரிருக்கிறாரே, அவர் பசும்புல் சாவ மிதியாத பரமசாது.எம்பிரானே அவருக்கு மகனாக வளரவும் அந்தக் கண்ணன் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் அசுரர்கள் ஆய்ப்பாடியை வளைக்கவும் அவர் கூர் வேல் தாங்க வேண்டியதாயிற்று. எழும்பூண்டெல்லாம் அசுரமயமாயிருக்கத் தம் பிள்ளைகள் மேல்

ஆதுரத்தினால் தொட்டிலைச்சுற்றி சிற்றெரும்பு ஊர்ந்தால் கூட நந்தகோபர் பாய்ந்து கூர்வேலால் சிற்றெறும்பைத் தாக்குகிற கொடுந்தொழிலன் ஆகிப் போனார்.அத்தகைய தந்தையின் பணிவான மகன் கண்ணன். யசோதை இருக்கிறாளே, அவள் கண்ணனைக் கண்டு உகக்கிறவள்.எப்போதும் அழகனைப் பார்த்துப் பார்த்து அவளுடைய கண்களிலே அழகு ஏறிவிட்டது ஏரார்ந்தகண்ணி யசோதையானாள்.[கண்ணன் குறும்புகளைக் கண்டுகந்து ‘தொல்லை யின்பத்து இறுதி ‘யடைந்தவளாயிற்றே யசோதை!] இந்தக் கண்ணன் நந்தகோபர் கண்டிக்கும் வகையில் அவர் முன் வினயமானவன்.தாயின் முன்னிலையிலோ செருக்கும் கம்பீரமும் மேணாணிப்பும் கொண்டு திமிறும் சிங்கக்குட்டி.

கண்ணன் நம் தாக தாபம் எல்லாம் ஆற்ற வல்ல மேகவண்ணன். நம் மீது பரிவுபொங்கும் சிவந்தகண்களை உடையவன்.[முன் சந்தித்த சந்தர்ப்பங்களில் கண்ணன் காட்டிய ஈர்ப்பை வைத்து யூகித்ததாகக் காதல் கதையில் போட்டுக் கொள்ளலாம்]ஆபரணம் அணிபவர் ஆபரணத்தை எப்போதும் நினைத்திருப்பார். அப்படி பிரிந்திருக்கிற நம்மை விரஹத்தில் சதா நினைத்துக் கண்கள் சிவந்திருப்பதால் அவன் செங்கண்ணன். ஒரே நேரத்தில் வெப்பமும் குளுமையும் செய்பவன் கதிர்மதியம் போல் முகத்தான்.அதாவது அனுகூலர்களுக்கு அன்பாகவும் பிரதி கூலர்களுக்கு கடுமையாகவும் இருக்கக்கூடியவன்.அல்லது ஒளிக்குக் கதிரவனையும் குளுமைக்கு மதியத்தையும் ஒருங்கே வைத்திருப்பவன் முகத்தில்.

[இவன்தான் கடவுள் என்று வரையறுத்து அடையாளம் காட்டித்தரும் ஆசார்யனுக்கு[குருவுக்கு]எப்படிக் கடவுள் வினயமானவனோ அப்படிக் கண்டிப்புள்ள தகப்பனுக்குப் பிள்ளை பணிவானவன்.கடவுள் தன்மையைத் தன் ஒலியிலும் அட்சரத்திலும் அழுத்திக் கட்டி இறுக்கிக் கொண்டு தன் கர்ப்பத்தில் தாங்கி அவ்வப்போது அதைப் பிரசவித்து அற்புதத்தை வெளிக் கொணரும் திருமந்திரம் தாய் அம்சம். அந்தத் திருமந்திரத்துக்கு பகவான் கட்டுப்படாமல் திமிறி வழிந்துகொண்டே யிருப்பான்.இதைக் குறிப்பால் உணர்த்தவே நந்தகோபன்குமரன்,யசோதை இளஞ்சிங்கம் என்ற வரி]

நாராயணனே நமக்கே பறை தருவான் ஆல்

எல்லாம் சரி. இங்கு ஏன் நாராயண சம்பந்தத்தைக் கண்ணனுக்கு ஒட்ட வைக்கிறாள்

ஆண்டாள் ? என்னதான் ஊரிசைந்து கண்ணனிடம் நோன்புக்கருவிகளை வாங்கிவரப்

பணித்திருந்தாலும் ‘கண்ணன் புகழை ‘ இப்படியா விவரிப்பது ? ‘கண்ணன் தூர்த்தன் ‘, ‘குழலால் சொக்குப்பொடி போட்டு மயக்குபவன் ‘, ‘பெண்கள் மேல் கண் வைத்தவன் ‘ என்று நேற்றுவரை ஊரார் கண்டித்திருந்ததையும் ,நிலவறைகளில் இவர்களை அடைத்துக் காவல் வைத்திருந்ததையும்,பஞ்சம் பெருத்து மழையின்றி போனதும் கன்னிப் பெண்களைக் காத்தியாயனி விரதத்துக்கு இன்று முதல் உட்படுத்தியிருப்பதையும் மறந்து இப்போது வெளிப்படையாக இவர்கள் ‘கண்ணா,கண்ணா ‘ என்று சொல்லி அலைந்தால் என்னாவது!பெரியவர்கள் எச்சரிக்கையாகி, ‘போதும் போதும் நீங்கள் நோற்றது! பேட்டை பொறுக்கிப் பையனின் பேரை சதா சொல்வது! உள்ளே வந்து அடையுங்கள் பழையபடி!வீட்டிலிருக்கும் கிழவிகளை அனுப்பி விரதம் செய்விக்கிறோம்.சிறுமிகளைக் கண்டால் தானே கண்ணனுக்குக் கொண்டாட்டம்! ‘என்று ஆரம்பித்து விடுவார்களோ என்று பயம் வந்தது. அப்படியே குப்புறப் போட்டார்கள் கண்ணன் பேச்சை. இன்னார் இன்னார்மகன் கண்ணன்.அவனே நாராயணன்.அவனே பறை தருவான்,அதையும் நமக்கே தருவான்.என்று கண்ணன் பெயரை மறைத்து அந்த அவதாரத்தின் அடிக்கிழங்கான ‘நாராயணன் ‘ பெயரைச் சொன்னார்கள்.வீட்டில் படுத்திருந்த கோபர்கள் உரத்துச் சொல்லப்பட்ட நாராயணன் பேரைக் கேட்டார்கள். ‘ஆகா!பெண்கள் வெகு துடிப்பு! நாரங்களுக்கெல்லாம் அயன், அதாவது எதெல்லாம் நித்தியமானவையோ அவற்றுக்கெல்லாம் அடைக்கலமாகி அவற்றின் ஒரே புகலிடம் நாராயணன். அந்தப் பரம்பொருளின் பேரைச் சொல்கிறார்கள் ‘ என்று நிம்மதியோடு திரும்பிப் படுத்துத் தூங்கினார்கள்.

[நாரங்களாவன எவை ? விஞ்ஞான உலகில் மெய்ஞ்ஞான அகராதிப் படி

எதெல்லாம் constants என்று academic interestக்காகப் பார்த்துக்

கொள்வோம்.

1.ஞான,ஆனந்த அமலத்வாதிகள்

2.ஸெளசீல்யாதிகள்

3.திருமேனி,காந்தி,ஸெளகுகுமார்யாதிகள்

4.திவ்யாயுதங்கள்,திவ்யபூஷணங்கள்

5.பிராட்டிமார்கள்

6.நித்யசூரிகள்

7.சத்ரசாமராதிகள்,வாசல் காப்பார்

8.கணாதிபர்,முக்தர்

9.பரமாகாசம்

10.பிரக்ருதி

11ஆத்மாக்கள்

12.காலம்

13.பருவங்களும் மாற்றங்களும்

14.அண்டங்களும் அதற்குட்பட்ட தேவாதி பதார்த்தங்களும்

இந்தப் பட்டியலில் முதல் ஏழு இறை குறித்த நம் உருவகம். அது எப்போதும் இருக்கும். எந்தப் பெயரிலாவது இறை இல்லாமல் போகப் போவதில்லை. அது சார்ந்த உருவகங்கள் எல்லாம் நிலையானவை. பின் வரும் ஏழும் நம் கண் முன் இருப்பவை. பிற்பட்ட ஏழின் சாட்சி மட்டுமே முற்பட்ட ஏழைக் கற்பனை செய்யத் தூண்டியது.

மேற்சொன்ன 14 நித்திய வஸ்துக்களின் திரள்கள் நாராயணனின் அதிகாரத்தில் இருப்பவை.]

நமக்குப் பறை தருவான். நமக்கும் தருவான் என்றா சொல்வது ? அவனன்றி யாருமில்லை என்று அவன் கையையே பார்த்திருக்கும் ‘நமக்கே ‘ தருவான்.

பள்ளமடையோடையல்லவாதண்ணீர் ?மேட்டிலிருந்து பள்ளத்துக்கல்லவா விழவேண்டும் ?

அவனெல்லாம் நிறைந்தவன்.நாம் எதுவுமே இல்லாதவர்கள்.அவன் கடல். நாம் வெறும் தாகம். அது போதாதா தகுதி ? நமக்கே தருவான். நாராயணனே தருவான். அவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன். அவன் யாருக்காவது ஏதாவது தருவதைத் தடுக்க யாருமில்லாதவன். omnipotent,omnipresent,supreme power.

என்ன தருவான் ?

சொல்ல வந்தது கிருஷ்ணரசம். வாயில் வந்தது ‘பறை ‘ஏனென்றால் தூங்கிக்

கொண்டிருக்கும் கோபர்கள் நினைவு வந்தது.

கிருஷ்ணனிடம் பெறப் போகும் நோன்புக்கருவியான பறை என்கிற மேளத்தின் பெயரை உரத்துச் சொல்லி திருப்பாவை முழுவதுமே பறை என்ற சொல் ஒரு பூடகமாகி இறுதியில் 29வது பாட்டில் விடுகதையை அவிழ்த்து ‘இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா ‘ ‘இந்தப் பறையைக் கேட்டு நாங்கள் வரவில்லை ‘ என்று பகிரங்கமாக்கப்பட்டது.

நாராயணனே நமக்கே பறை தருவான் ஆதலால் என்ன கிடைக்கும் யார் கொடுப்பார் என்ற சந்தேகமே இல்லாமல் மிகப்பெரிய சாதனையைஅடைந்து காட்ட விருப்பம் வைத்து வாருங்கள் என்பதாகப் போதுவீர் போதுமின் என்ற பதத்தில் விரிந்த பாதையைக் காட்டி கிளைச்சாலையில் நுழைவை அவரவர் விருப்பத்துக்கு விட்டுவிடுவதோடு முதல் திருப்பாவை முடிந்தது.

[விளக்கம் exaustive அல்ல. முடிந்தவரை செய்யப் பட்டது]


2.வையத்து வாழ்வீர்காள்!

திருப்பாவை கட்டமைப்பில் முதல் 5 பாடல்கள் இறை பற்றியவை. பரமபதம், பாற்கடல்,அவதாரம்,அந்தர்யாமி,அர்ச்சை என்று 5 நிலைகளில் இறை தத்துவம் தன் இருப்பை நிறுவியிருக்கிறது.முதல் பாட்டு பரமபத நாயகன் நாராயணனைக் குறிப்பிட்டது போல இது பாற்கடல் நிலையான வியூகத்தைச் சுட்டுகிறது.

பாற்கடல் ஒரு single window போல customer service வழங்கப்படும் இடம். பரமபதம் ivory tower. யாரும் அண்ட முடியாது. அவதாரம் direct demonstration.அந்தர்யாமி omnipotent omnipresent இருப்பு.அர்ச்சை என்பது தான் கோயிலில் நாம்வைத்திருக்கும் வடிவம். அதற்கு நாம் கொடுத்தது உருவம் நாம் கொடுத்தது குணம் நம் கற்பிதம் தான் அதன் தெய்வீகம்.அர்ச்சையை 5வது பாடலில் வைக்காமல் கொஞ்சம் நகர்த்தி 6 ல் புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில் ‘ என்று நிறுத்தியிருக்கிறாள் ஆண்டாள்.6 முதல் 15 வரை உயிர்[ஜீவன்] பற்றிய பாடல்கள் என்பது நினைவில் கொள்ளத்தக்கது. எனவே தான் ஜீவனுக்கும் பரமனுக்கும் இடையில் வரும்படி அர்ச்சையை வைக்க விரும்பியது

உத்தேசமாயிருக்கலாம்.

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ!பாற்கடலுள்

பையத்துயின்ற பரமனடி பாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்.[திருப்-2]

இப்போது நாடகத்தில் ஒன்றிப் போய் விட்டாள் நம் கதாநாயகி.முழுக்க முழுக்க சங்கேதப் பேச்சை விட்டாயிற்று.அசல் வசனம் பேசுகிறாள். நாராயணனுக்கு அடுத்த நிலையைச் சொல்கிறாள்.

தொட்டில் குழந்தைக்குப் பக்கத்தில் படுத்திருக்கும் தாய் போல பாடுபட்டு வளர்த்த பயிருக்குப் பக்கத்தில் பரண்குடில் அமைத்துப் படுத்திருக்கும் விவசாயி போல பிரபஞ்சத்து அணுக்கமாய் அன்பர்களின் கூக்குரல் கேட்குமிடமாகப் பார்த்து பாற்கடலில் படுத்திருக்கிறான் பரமன். தகட்டிலழுத்திய மாணிக்கம்போல அனந்தாழ்வான்[ஆதிசேஷன்] மீது அழுந்திப் படுத்து அறி துயில் செய்கிறான்.அவனை அல்ல அவன் திருவடியைப் பாடுவோம்.ஏனெனில் பசிக்கழும்

குழந்தை தாயின் முந்தானையையே குறி வைப்பது போல நாம் அவனுடைய திருவடியில் வாசம் செய்யும் தயா தேவியின் அருளை வேண்டி அவன் காலையே பார்த்திருப்போம். அதிகாலையிலேயே குளித்து விடுவோம்.

தானமும்தருமமும்முடிந்தவரைசெய்வோம்.பரமனடிபாடி,நாட்காலே நீராடி,ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி_ இது செய்ய வேண்டியவற்றின் பட்டியல்.

செய்ய வேண்டாததும் சில உள்ளன. அவை நெய்யுண்ணாமை,பாலுண்ணாமை,மை மலர்

விட்டுவிடல்,ஆன்றோர் செய்யாதன என்று விட்டுவிட்டதை செய்யாமல் விடல்,மற்றும் குறளை பேசாமல் இருத்தல்.

பாட்டை இப்படி பிரித்துக்கொள்ள வேண்டும்.

வையத்து வாழ்வீர்காள்! உய்யும் ஆறு எண்ணி ,பாற்கடலுள் பையத்துயின்ற பரமனடிபாடி,ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி,உகந்து,நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீர், நாம் நெய்யுண்ணோம், பாலுண்ணோம்,நாட்காலே நீராடி,மையிட்டெழுதோம்,,மலரிட்டு முடியோம்,செய்யாதன செய்யோம்,தீக்குறளை சென்றோதோம்.

வையத்து வாழ்வீர்காள்! என்றால் உலக மாந்தரே! என்பது போல ஒரு விளி

என்று சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஆண்டாளுக்கு உள்ளர்த்தமில்லாமல்

ஒரு வார்த்தை போட வராது.

வாழ்ச்சிக்கு இடமில்லாத வையகத்தில் வாழ வந்தவர்களே! நெருப்புச்சட்டிக்குள் தாமரை பூத்தாலும் பூக்கலாம். பூமியில் பிறந்து வாழ்ந்து விட முடியாது. அதாவது சரீரத்தோடு பரம்பொருள் சகவாசத்தைக் கிஞ்சித்தும் அனுபவிக்க முடியாது என்று சொல்ல வருகிறாளா ?

பகவதனுபவம் பெற்று வாழ்வது தான் வாழ்ச்சி.இந்த கர்மபூமியிலே கிருஷ்ணானுபவம் பெற்ற பாக்கியவதிகளே![கோபிகைகளே]உடலோடு பூலோகத்தில் சொர்க்கத்தை யல்லவா பார்த்திருக்கிறீர்கள்! என்று சொல்ல வருகிறாளா ?

அடுத்து நாம் பிழைக்கும் வழிக்கு சில க்ருத்ய அக்ருத்ய விவேகங்களைக் கைக்கொள்வோம் என்கிறாள். அதாவது சில resolutions.

அதென்ன நெய் சாப்பிடமாட்டோம்,பால் தின்ன மாட்டோம் என்றது ?ஆம் அப்படித்தான், ‘பையத்துயின்ற பரமனடிபாடி ‘ய வாயால் யாராவது நெய்யுண்பார்களா ? பாலுண்பார்களா ? அமிர்தம் உண்டபின் வெறும் சோறு பிடிக்குமா ?

‘உண்ணும் சோறு பருகு நீர்

தின்னும் வெற்றிலை எல்லாம்கண்ணன் ‘

என்றிருக்கிற எங்களுக்கு நெய்யும் பாலும் எதற்கு ?

நெய்யை உண்பார்களா யாராவது ?தின்னும் வஸ்து அது.பால் திரவம். அதைக் குடிக்கவல்லவா செய்வார்கள் ?

யார் கண்டது ?ஆய்ப்பாடியில் ஆகாரம் நெய்யும் பாலும் என்று பேர் கேட்டிருக்கிறோம்.அதைப் பார்த்தது தான் யார் ? சாப்பிட்டதோ குடித்ததோ யார் ?

அதெல்லாம் சாப்பிடும் பண்டமா குடிக்கும் பண்டமா என்றெல்லாம் தெரியாது. கண்ணன் பிறந்தபின் எங்களுக்கு நெய் பாலை அவன் விட்டு வைக்கவில்லை. இதுவரை சாப்பிட்டிராத பொருளை இனிமேல் சாப்பிடமாட்டோம் என்ற சங்கல்பம்[விரதம்] எதற்கு ? அதாவது அப்படி அந்த நெய்யும் பாலும் ஒரு சமயம் கிடைத்தாலும் நாங்கள் சப்பிடப் போவதில்லை.

இதுவரை கிடைக்காததால் சாப்பிடவில்லை .இனி விரதத்துக்காக சாப்பிடப் போவதில்லை.

விரதத்தின் போது நம் தினசரி உணவைத்தான் விட வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். தென் நாட்டில் அரிசி உணவை விரத நாளில் சாப்பிடமாட்டார்கள் வடநாட்டில் கோதுமைஉணவை விட்டு விடுவார்கள். நாங்கள் ஆயர்கள். நெய் பாலை விட்டோம்.

போகட்டும். மையும் மலரும் ஏன் விட்டார்கள் ?

கண் இருக்கிறதே, அது விழிப்புக்கு வழி செய்யும் புலம். விழிப்புணர்ச்சி என்பதே ஞானம் தான். கண்ணுக்குப் பிரகாசம் சேர்ப்பது என்றால் அது மை.

மையிட்டெழுதுவது ஞான யோகத்துக்குக் குறியீடு. மலர் முடிப்பது அலங்காரம்,அதிலான லயிப்பு பக்தியோகத்தின் குறியீடு. எங்களுக்கு இரண்டும் வேண்டாம்.

‘மேலையார் செய்வன ‘ தவிர்த்து செய்யாதன செய்ய மாட்டோம். பரதாழ்வான் போல நாங்கள்.அண்ணனை விட்டுத் தம்பி இதுவரை ராஜ்யம் ஆண்டதில்லை என்றான். ‘செய்யாதன செய்ய மாட்டேன் ‘ என்றான். நாங்களும் அப்படித்தான். கோள் சொல்லித் திரிய மாட்டோம். எங்களுக்குள் வசை சொல்லிப் போராடிப் போந்தாலும் கண்ணன் முன் ‘இவள் அப்படி,அவள் இப்படி ‘என்று உயர்வு தாழ்வு சொல்லித் தரம் தாழ்ந்து போக மாட்டோம்.

இவ்வளவுதான் சங்கல்பம்.

அருகதையுள்ளவர்களூக்கு வெகுமதியாய்த் தந்து கெளரவிப்பது தானம். கீழ் நிலையில் உள்ளவர்களூக்கு அபரிமிதமாய்க் கொடை தருவது தருமம். இரண்டையும் முடிந்தவரை செய்து மகிழ்வோம்.

நாராயணனே நமக்கே பறை தருவான் என்றார்களே! அப்புறம் என்ன இவர்களுக்கென்றும் ஒரு விரதம் ? செய்ய, செய்ய வேண்டாத பட்டியல் ?

நாமாக ஏதாவது செய்து நம் நல்லதை நாமே தேடிக் கொண்டால், பிரம்மாஸ்திரத்தின் மீது சணல் கயிறு பட்டால் அஸ்திரம் அறுபட்டுப் போவது போல பரம்பொருள் தன் ரட்சணையை விலக்கிக் கொள்வான் என்றார்களே!இப்போது இது என்ன அனுஷ்டானம் ?

ஆபரணம் அணிபவனைத் தேடிப் போகுமா ? அணிபவன் தான் ஆபரணத்தைத் தேடி வருந்த வேண்டும் என்றார்களே! இப்போது இந்த மாற்றம் ஏன் ?

அதற்குத் தான் வையத்து வாழ்வீர்காள்! என்ற விளி.

பூமியில் பிறந்து விட்டோமே! சும்மாயிருக்க முடியுமா ? ஏதாவது ஒன்றைச் செய்து தானாக வேண்டும்.கர்ம யோகம் பலன் கருதினால் பயனில்லாமல் போகும். செய்வதை ச் சாதனமாக நினைத்துச் செய்யாமல் ஏதோ செய்கிறோம் என்ற எண்ணத்துடன் செய்தபடி யிருந்தால் துன்பமிராது.

நாராயணனே நமக்கே பறை தருவான். ப்ராப்ய ப்ராபகம்[பலனும் பலன் தரும் வழியும்] அவனே,எனினும் க்ருத்ய அக்ருத்ய விவேகம் இன்றி நாம் இருந்துவிடக் கூடாது. discrimination என்பது நம் செயல்களில் இருந்தே தீர வேண்டும்.

இது தான் ஆண்டாள். முதல் நாள் என்ன சொன்னாள் ? இச்சை ஒன்று போதும்.உனக்கு ஆசை இருந்தால் போதும். வேறு எதுவும் தேவையில்லை.நாராயணனே தருவான் நமக்கே தருவான் என்றவள் இன்று அடுத்த கட்டம் சொல்கிறாள். இதைச் செய் இதைச் செய்யாதேஎன்று. கல் சாம்பார் செய்த யாத்திரிகன் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? [கல்லும் தண்ணிரும் இருந்தால் சாம்பார் செய்வேன் என்றவன்]அவனைப் போலத் தான் ஆண்டாளும்.


3 – ஓங்கி உலகளந்த…

விடுமவற்றை விட்டுப் பற்றுமவற்றைப் பற்றினால் பரமன் கிடைப்பான் என்கிற

நியதியை உடைத்து விடுவித்துப் பற்றுவிக்கிறவனிருக்க dos and donts

குறித்து கவலையில்லை என்று முதல் பாட்டில் வைத்து இரண்டாவது பாட்டில்

அதற்காக நாம் சும்மா இருந்து விட முடியாது,நாளைக் கழிக்க ஒரு agenda

வேண்டாமா என்று அட்டவணை தருகிறாள் ஆண்டாள். பத்தியமும் சங்கல்பமும் சிறு

பிள்ளைத்தனமாக இருந்தாலும் [கண்ணன் போன்ற சுணை கேடனுக்காக]மடலேறுவதைக்

காட்டிலும் நோன்பு செய்வது புத்திசாலித்தனம் என்று ஆண்டாளுக்குத்

தோன்றியிருக்கிறது.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு

என்ற குறள் ஞாபகம் வருகிறது ‘பரமனடி பாடி ‘என்ற ‘வையத்து ‘ பாசுர வரிகளில்.

திருப்பாவையில் மட்டும் ஒரு பாடலை ஆரம்பிக்கும்போது முந்தைய பாடலின் hangover தவிர்க்க முடியாதபடி ஒட்டிக் கொண்டிருக்கும்.வரிகளிடை விவரங்களும் நெருடும்.திரைமறைவு வாத விவாதங்கள் பிந்திவரும் பாசுரத்தில் சொல்லாடல்களாகும்.

மூன்றாவது பாடலில் அவதாரப் பெருமையைச் சொல்கிறாள் ஆண்டாள். ஓங்கினான் என்னும்போதே குறுகியிருந்தான் ‘ என்ற இறந்த காலம் தொக்கி நிற்க வாமனாவதாரமும் த்ரிவிக்ரமாவதாரமும் இணைந்த அற்புதமான அவதாரத்தின் சாதனையைச் சொல்லி அவனுக்கல்ல அவன் பேருக்கே புகழ் பாடுவோம் என்கிறாள்.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெருஞ்செந்நெல்லூடு கயலுகளப்

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக்குடம் நிறைக்கும்வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்[திருப்-3]

பேருடையானை விடப் பேருக்குப் பலம் அதிகம்.பெரிய பதவிகளில் உள்ள ஆடவரின் மனைவிமார் கணவருடன் அனுபவிக்கும் வசதிகளைவிட அவர் உடன் இல்லாதபோது அவர் பேரை வைத்து அடையும்வசதிகள் ஏராளமாக இருக்கும்.அவர் ஊரிலிருந்தால் கூசுவார். அவர் பேர் அவரையும் விட அதிகம் ஈட்டும்.அதனால் தான் பூர்வாசிரியர்கள் சொன்னார்கள் ‘அவன் கட்டிப் பொன் போல அவன் பேர் பணிப்பொன்[ஆபரணப் பொன்] போல. திரெளபதிக்கு தூரஸ்தனாகிலும் கிட்டி உதவியது அவன் பேரிறே ‘ என்றார்கள்.

உத்தமனைப்பாடி என்னாமல் உத்தமன் பேர் பாடி என்றாள். நமக்கும் அவனுக்கும் உள்ள தூரம் அவனுக்கும் அவன் பேருக்கும் உள்ளது.எப்படியென்றால் அவன் பேரை வைத்தே அவன் விரோதிகளும் பிழைப்பது.[மாதுகாதகனுக்குக் கை நொந்தால் ‘அம்மே ‘ என்று ஆஸ்வாசப் பட்டாற்போல் ‘]அதாவது ஒருவன் அம்மாவை அடிக்கக் கை ஓங்கினான். கையில் நரம்புப் பிடிப்பு ஏற்பட்டு வலித்தது. அம்மா என்று அலறி விடுவித்துக்கொண்டு அடுத்துக் கை ஓங்கினான்.

வாமனனுக்கு உத்தமன் என்ற அடைமொழி ஏன் ?

தானும் அழிந்து பிறரையும் சேர்த்துக் கெடுப்பவன் அதமாதமன்.

பிறரை அழித்துத் தான் வாழ்பவன் அதமன்.

பிறரும் வாழத்தானும் வாழ்பவன் மத்யமன்.

தன்னை அழித்து மாறிப் பிறரை வாழ்விப்பவன் உத்தமன்.தனக்கென்று வாழாமல்

பிறர்க்கேயாக இருப்பவன் உத்தமன்.

வாமனன் தன்னைக் குறுக்கிகொண்டான்.தான் பிச்சைக்காரனாகிச் சிறுமை ஏற்று அமரர்களின் நஷ்டங்கள் ஈடு கட்டப்படவும் மஹாபலியின் பெருமை குறைபடாமல் அவனை களத்தினின்று அகற்றி பாதாளம் சேர்க்கவும் ஒற்றைத் திட்டம் வகுத்தான். இரு தரப்புக்கும் வேதனையில்லாமல் இருக்கவென்று தான் புழுதிபட்டான்.எடுத்தது பிரும்மாண்டமான விஸ்வரூபமெனினும் ஆரம்பித்தது யாசகத்தில் தானே!

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு

இரவின் இளிவந்ததில்

என்ற குறள் அறியாதவர் யார் ?பிச்சை எடுக்கும்போது ஒருவனுடைய கல்வி, கேள்வி,புகழ்,சாதுரியம்,மற்றும் வெற்றி என்ற ஐந்து தேவதைகளும் அவனை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து மீண்டு வர இயலாத தூரத்துக்கு விலகுகிறார்கள் என்பது தெரியாதா ? அதையும் செய்தான் பெருமாள். அது வாமனாவதாரம். அவன் உத்தமன்.

குறிப்பாக த்ரிவிக்ரமனின் முதலடி ஆண்டாளைக் கவர்ந்தது.அந்த அடி இருந்த இடத்திலேயே மலர்ந்து ஒரு அழுத்தமில்லாத சுக ஸ்பர்ஸ நெருக்கத்தில் பூவுலகு முழுவதையும் ஒரு தாய் தூங்குகிற குழந்தையை முகர்வது போல தொட்டு அளந்து கொண்டது. ஆண்டாள் பூமாதேவியின் அம்சம் என்பதால் அவன் தன்னிச்சையாய் ஸ்பர்ஸித்த அனுபவத்தை நினைத்துச் சிலிர்க்கிறாள் என்பது பூர்வாசிரியர்கள் கூற்று.

அதையே ஓங்கினான் உலகளந்தான் என்றாள்.இரண்டாவது அடி தாவி மேலேறி வானத்தை அளந்து சத்தியலோகம் சேர்ந்து பிரம்மாவின் கமண்டநீரால் கழுவப்பட்டு ஆகாச கங்கையாயிற்று என்பதும் மூன்றாவது அடி மஹாபலியை பாதாளம் செலுத்தியது என்பதும் புராணிகம்.

மஹாபலி பக்தனாயிருந்தும் அவன் செயல்பாடுகளில் அத்து மீறிய அதிகார துர் உபயோகமும் அட்டூழியமும் இருந்ததால் இப்படி அவனை அப்புறப் படுத்த வேண்டி வந்தது. அதிகாரக்குவிப்பு எதை வேண்டுமானாலும் செய்யச் சொல்லும் அதற்குத் தடைஅவசியம் என்பது எல்லாகாலங்களிலும் பொருந்துகிறதே!

மஹாபலி உச்சகட்ட வெற்றிகளுக்குப்பின் வேற்று முகாம் ஆசாரியரான பிருஹஸ்பதியைக் கூப்பிட்டனுப்பினான். பிருஹஸ்பதி cabinetக்கு மட்டுமே தான் நியமானவனென்றும் முறையின்றி அச்சுறுத்தலால் அதிகாரம் பெற்ற கூட்டத்துக்குத் தான் பண்டிதராக இயலாதென்றும் சொல்லி வெளியேறி அதிதி காச்யபரிடம் வந்து விவரங்களைச் சொன்னார்.அதிதியின் மகன் தேவேந்திரன்,அதாவது பாதிக்கப்பட்டவர்களின் தலைவன் என்பதால் சுயநலம் காரணமாகப் பிரார்த்தித்து அதிதி தேவி வரம் பெற்று காச்யரிடத்தில் வாமனனைப் பெற்றாள்.இப்படி புராணம்.

ஓங்கி உலகளந்தபோது அவரவர்க்கு அவரவர்களின் பங்கு கிடைத்து திருப்தியுடன் போய்ச் சேர்ந்தார்கள். உலகளந்தவனைப் போற்ற யாருக்கும் நேரமில்லை. மஹாபலி மகன் நமுசி ‘சின்னக்காலைக் காட்டிப் பிச்சை வாங்கிப் பெரிய காலால் அளந்து மோசம் செய்தாய் ‘ என்று தூற்றிப் பொருமினான்.

சுக்ராச்சாரியார்[அசுரகுரு]பூச்சியாகக் கமண்டலத்தை அடைத்து தானத்தை நிறுத்த முயன்று வாமனன் தர்ப்பைப்புல்லால் விளையாட்டுப்போல் குத்தி அடைப்பு நீக்கியதில் கண்ணிழந்து போனார்.இவ்வளவில் அன்று யாரும் பாடாத வயிற்றெரிச்சல் தீர இன்று பாடுகிறோம்.ஏனெனில் ‘சதா ஏக ரூபாய ‘ என்றபடி மாற்றமேயில்லாத பரமன் தன் அன்பன் கொடையைக் கண்ட கணத்தில் தாரை ஜலம் கையில் படப் பட மகிழ்ச்சியில் பூரித்து பனிப்பட்டுச்சிறுத்த மூங்கில் வெய்யிலுக்கு விரிவது போல வளர்ந்தான். திருவெட்டெழுத்து ஒருமுறை சொன்னவன் இருந்தாலே ஊரில் மழையுண்டு என்றது போக ஐந்து லட்சம் கோடி கோபிகைகள் உத்தமன் பேர் [நாம சங்கீர்த்தனம்] சொன்னால் அதையும் பாவை நோன்பை மேவிச் சொன்னால் மழை நிச்சயம் உண்டு என்கிறாள் ஆண்டாள்.

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்யும் என்றாள். காய்ந்து கெடுத்ததை விடப் பெய்ந்து கெடுப்பது கொடுமை. அதனால் வருகிற மழை தீங்கு தரக்கூடாது. கட்டைப் பாறையில் கொட்டிக் கவிழ்த்தாற் போலன்றி ‘ ஊறெண்ணை வார்த்தாற்போல ‘ ஊற ஊற தலைக்கு விட்டு விட்டு எண்ணை வார்ப்பார்களே அதே போல ஒரு நாள் பெய்து ஒன்பது நாள் காய்ந்து பின் ஒரு நாள் பெய்து இப்படி ஊரைக் காப்பாற்ற வேண்டும் என்றாள்.

காதல் வயப்பட்டுக் கண்ணனைச் சந்திக்கப் போகிறவள் அதற்கு சாக்காக வாய்த்த காத்யாயனி விரதத்தையும் ஊரின் குறையையும் மனசில் வைத்து மனமார மழையைப் பிரார்த்திக்கிறாள். அப்படியே இறையின் மூன்றாவது நிலையாகிய அவதாரத்தையும் நூல் பிடித்துக் காட்டி விடுகிறாள்.

நீரோடி,வரப்புயர நெல்லுயரும்.அப்படி ஓங்கியசெந்நெல் பயிரிடையில் கொழுங்கயல்கள் துள்ளி விளையாடும்.வயலிலுள்ள குவளைப் பூவில் ஆணும் பெண்ணுமாக வண்டுகள் தேனையுண்டு உண்ட இடத்திலேயே மயங்கிப் படுத்துறங்கும். நீர்வளத்தால் புல் மிகுந்து கால்நடை செழிக்கும். கோபாலர்கள் கறவைக்கு மலைக்கும்படி பசுக்கள் குடம்குடமாகப் பாலைக்கறக்கும். பால்வளம் அமோகமாகவும் அழியாததாகவும் விளங்கும் என்றாள் ஆண்டாள்.

அன்பர்கள் நல்ல தினங்களில் எல்லாம் மும்மூன்று முறை உரத்துச்சொல்லிக் கொண்டாடுகிற இந்தப் பாசுரம் பாராயணங்களில் இரு முறை சொல்லப்படும் சிறப்பு பெற்றது.


4.ஆழி மழைக்கண்ணா….

‘ஆழிமழைக்கண்ணா ‘ பாசுரத்தில் படைப்பாளியின் அறியாப்பருவம் இயற்கையாக யதார்த்தமாக வெளிப்படும்.

சிறுமிகள் என்று தன்னையும் தன் தோழிகளையும் பல இடத்தில் அடையாளம் காட்டிக் கொள்ளும் ஆண்டாள் சிறுமியர் மட்டுமே செய்யக்கூடிய காரியத்தை இதில் செய்யக் காண்கிறோம்.

‘ஓ!மழைக்காரா! ‘என்பது போல ‘ஆழி மழைக்கு அண்ணா! ‘என்று மழை தரும் தேவனை அழைக்கிறாள்.மாம்பழமோ கொய்யாப்பழமோ விற்பவனை ‘மாம்பழம் ‘ ‘,கொய்யா, ‘ என்று குழந்தைகள் அழைப்பது போல ‘மழைக்காரா! ‘ என்று

அறியாமையும் மரியாதையுமாய் அழைக்கிறாள்.

மழை கொண்டு வருபவரின் பேர் அவளுக்குத் தெரியாது. மழைக்கு அதிபன் யமனோ வருணனோ அஷ்ட வசுவோ யார் கண்டது ? இல்லாதவனைத் தேடி அழைப்பதற்கும் கண்முன் வந்து வணங்கி நிற்பவனை அவன் தொழிலையிட்டு மரியாதையுடன் அழைப்பதற்கும் எத்தனையோ வித்யாசமிருக்கிறது. மழை தேவன் இவர்கள் கண்முன் வந்துவிட்டான் என்று இவள் குரலின் தோரணையிலிருந்து தெரிய வருகிறது.

கிருஷ்ணாவதார நிகழ்ச்சிகள் பல திருப்பாவையில் சொல்லப்பட்டிருப்பினும் ஒரு இடத்திலாவது கிருஷ்ணன் என்றோ கண்ணன் என்றோ பெயரைக்குறிப்பிடவேயில்லை ஆண்டாள்.

பாமரர்கள் ஆழிமழைக்கண்ணா என்ற விளியில் கண்ணன் இருப்பதாக நினைக்கக் கூடும் ஆனால் ஆழிமழைக்கு அதிபதியை அப்படி அழைத்திருக்கிறாள் என்பது நுணுகிப் பார்த்தால் தான் தெரிய வரும்.

மாதவன், கேசவன்,தாமோதரன், பத்மனாபன், நாராயணன்,கோவிந்தன்,நெடுமால், உம்பர்கோமான்,என்று பல பேர்களைப் போடுவாள்.பிரசித்தமான அவதாரப் பெயரான கண்ணன் கிடையாது.[நாச்சியார் திருமொழியில் ‘கண்ணன் என்னும் கருந்தெய்வம் ‘என்று சொல்லியிருப்பதை நினைவு கூர்க] கோபர்களுக்குத் தங்கள் ரகசியத்தை மறைக்க அப்படிச் செய்திருக்கலாம். இருந்தும் தாங்க முடியாத உற்சாகத்தில் கண்ணன் என்ற பெயர் உச்சரிக்கப் படும்படி ஆழிமழைக்கு

அதிபதியை ஆழிமழைக்கண்ணா என்று அழைத்து விட்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது.

பர்ஜன்ய தேவதைக்கு எப்படி மழை கொண்டு வரவேண்டும் என்று சொல்லித்தர ஒரு கைக்குறிப்பு தயாராக இருக்கிறது ஆண்டாளிடம். அந்தக்குறிப்பை விரிவு படுத்தும் சாக்கிலேயே இறையின் அடுத்த நிலையான ‘அந்தர்யாமி ‘ தத்துவத்தைக் கோடிட்டுக்காட்டும் சாதுரியமும் இருக்கிறது. கவிதை இவளிடம் கை கட்டி நிற்கிறது. எப்படி வேண்டுமானாலும் வளைகிறது. கருத்தில் கருவழகில். அடுக்குஅடுக்காக வெவ்வேறான உருவகங்களைப் பொதித்துக் கொடுப்பதில்.

‘பாரோர் புகழ ‘வும் ‘திங்கள் மும்மாரி ‘ பெய்யவும் வருணனின் ஒத்துழைப்பு தேவை.வைஷ்ணவ தர்மத்திலோ இன்னொரு தேவதையை நாடும் வழக்கம் கிடையாது. இந்தப் பெண்களோ ‘ஸர்வ லாபாய கேஸவ: என்று இருப்பவர்கள்.

இன்னொரு பலனைத் தங்களுக்காக யாசிக்காதவர்கள். அது தெரிந்து தான் நாட்டாருக்காக மழை வேண்டி பாவை நோன்பு செய்யக் கிளம்பிய மாத்திரத்தில் ஆண்டாள் முன் வருணன் ஓடிவந்து ‘நான் என் கை வேலையைத் தொடங்கலாமா ? ஏதாவது உங்களுக்குக் குறிப்பாக வேண்டும் வேண்டாதது உண்டா ? அம்மணி! ‘ என்று கைகட்டி முன்னே நின்று உத்தரவுக்குக் காத்திருந்தான்.

ஆழி என்றால் சமுத்திரம். அதன் கம்பீரமும் நீள அகலமும் தொனிக்கும்படி அதை ஆழி என்பதுண்டு. கீழிருக்கும் சமுத்திரத்தை மேலே இழுத்துவந்துப் பொழிவிக்கும் மழைக்காரனை ஆழிமழைக்கண்ணா என்று தானே சொல்லவேண்டும் ?

பின்னும் சுழித்து சுழித்துப் பெய்யும் சுழிமழையை,மண்டலவர்ஷத்தை,பருவமழையை ஆழி எனலாம்.

அதாவது அந்த அழைப்பில் அவனுடைய பிரும்மாண்டமும் மகத்துவமும் ஒருங்கே வரும்படி ஆழிமழைக்கண்ணா என்றாள்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாகித்துப்பார்க்கு

துப்பாயதூஉம் மழை

என்றபடி அவனின்றி அமையாதல்லவா உலகு ? மழைக்காரனின் செயல் எப்பேர்ப்பட்டது ? வானத்துக்கும் பூமிக்குமாக நீர்க்கோடல்லவா போடுகிறான் ? பிரம்மாண்டமல்லவா அவன் செயல் ?

ஒன்று நீ கைகரவேல்- உன்னுடைய கொடையில் ஒரு சிறு பகுதியையும் நீ ஒளித்துக் கொள்ளாதே!உனக்கு விதிக்கப் பட்ட தொழில் அபூர்வமானது. படைத்தல் துடைத்தல் போன்ற தொந்தரவான மனசுக்கு இம்சை தருகிற வேலைகளை

அரி அரனுக்குத் தள்ளிவிட்டுக் காக்கும் தொழிலைத்தான் தக்க வைத்துக் கொண்ட திருமாலைப் போல நீயும்.பிடி,அடி என்று வேலை பார்க்கும் யமன் முதலிய தேவதைகளைப் போல் அல்லவே நீ! எல்லா ஜீவராசிகளையும் ஈரக்கையால்

தடவிக் கொடுக்கும் அற்புதமான தொழிலைப் பார்ப்பவன் நீ. உன் தொழிலில் உள்ள இயல்பான ஒளதார்யத்தை இரக்கத்தை கொடையை நீ குறைத்துக் கொள்ள வேண்டாம்.

‘இராமடம் ஊட்டுவார் போல ‘பெரிய இரக்கம் உண்டே மழைக்கு என்று விளக்கம் சொன்னார்கள் பூர்வாசிரியர்கள். அதாவது வீட்டைவிட்டு ஓடிப்போன பிள்ளைகள் அந்தக் காலத்தில் ஊர்க்கோடியில் சத்திரத்தில் போய் படுத்துறங்குமாம். அது தெரிந்து பெற்றோர்கள் உணவை எடுத்துக் கொண்டு போய் முகத்தை மறைத்துக் கொண்டு முக்காடிட்டு குரலை மாற்றிக்கொண்டு கைவிளக்குடன் சத்திரத்து இருட்டில் நின்று கூவுவார்கள் ‘யாரிங்கே பட்டினி ? சோறு வேண்டுமா ?சோறு ? ‘என்று.பிள்ளைகள் யாரோ போடும் சோறு என்று சாப்பிட்டுக் கொள்ளுமாம்.

அப்படி முகம் தெரியாமல் வந்து ஊட்டுகிற வள்ளலே!ஆழிமழைக்கண்ணா!ஒன்று நீ கைகரவேல்.உன் வள்ளண்மையைக் குறைத்துக் கொள்ளாதே!

உனக்கு விதியெல்லாம் உண்டு என்கிறார்கள் ‘நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை ‘ என்கிறார்கள்.அதாவது பாப புண்ணியம் பார்த்து நீ பொழிவாய் என்கிறார்கள். அதெல்லாம் மனசில் வைக்காதே.[பாபிகள் என்று உலகத்தில் யாருமே கிடையாது என்று சொல்லி ராட்சசிகளுக்கு வக்காலத்து வாங்கிய சீதாப் பிராட்டியின் வழி இவர்களது போலும்]

ஆழியுள் புக்கு முகந்து கொடு-நீ நேராகப் போய் கண்ட கண்ட பள்ளத் திரவத்திலெல்லாம் நுழையாமல் [சகரகுமாரர்கள் சாகரம் என்ற பெயரில் ஒரு குழி தோண்டினார்கள் தங்கள் முன்னோரைக் கரையேற்ற. அதெல்லாம் கூட வேண்டாம்]கரை வாய் எதுவுமே தென்படாது மஹா சமுத்திரமிருக்கும், அதன் நடுவுக்குள் முங்கி அதைத் தரைதட்டும்படி உறுஞ்சி நீரை முகந்து வா.

ஆர்த்தேறி-மழைவருது மழைவருது என்று கனத்துச் சொல்லி வா ‘கண்டேன் சீதையை ‘ என்று ஆர்த்துக் கொண்டுவந்த அநுமான் போல ‘வந்தேன் மழையுடன் ‘என்று குதித்துப் பாடிக் கொண்டே வா.

ஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி

மலையாளமின்னல் ஈழமின்னல் சூழமின்னுதே

நேற்றுமின்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே

கேணி நீர்ப்படு செறித்தவளை கூப்பிடுகுதே

என்று மழை அடையாளங்களால் எல்லாரும் மகிழும்படி சத்தமிட்டுக் கொண்டு

மேகமாக ஏறு.

ஊழிமுதல்வன் உருவம்போல் மெய்கறுத்து-

நீர் கொண்டு தருபவன் நீ என்பதால் நீயே ஊழிமுதல்வன்,காலத்தின் தலைவன், பகவான் போல எங்களுக்குக் காட்சி தரவேண்டும்.உருவத்தில் நீ கண்ணனின் கருமையைக் கொண்டு மேகமாக ஏறி வரவேண்டும்.

கடலினுட் புகுந்து நீரை முற்றும் முகந்துகொண்டு பெருமுழக்கம் செய்து வானத்தின் மீதேறி எம்பெருமானது திருமேனி போலக் கருமைபூண்டு அவனது வலங்கை யாழிபோல மின்னி இடங்கைச்சங்கம்போல அதிர்ந்து ஸ்ரீசார்ங்கம் சரமழை

பொழியுமாறு போல நாடெங்கும் நீரைச்சொரிந்து எமது மார்கழி நீராட்டத்தை நல்லபடி முடித்துத் தரவேண்டுமென்று வருணனுக்குக் கையோலை கொடுப்பது இந்த பாசுரம்.

விரிவான அழகான தோள் மீது சக்கரம் வைத்திருக்கிறான் எம்பெருமான்,அல்ல அல்ல பத்ம நாபன்.சக்கரம் மின்னியது ஒரு சமயத்தில் தான் மிக அதீதமாக இருந்தது. Bossக்கு ஒரு சந்தோஷம் என்றால் சுற்று வட்டம் மிகவும் ஆரவாரிக்கும் அல்லவா ? அதுவும் கூடவே இருக்கும் மெய்க்காப்பாளன் முதலாளிக்குப் பிள்ளை பிறந்தால் எப்படித் துள்ளுவான் ? ? பெருமாள் உலகத்தைப் படைக்க ஏதுவாக நாபிக் கமலத்தில் பிரும்மாவைப் பெற்றான்.அப்போது சக்கரத்தாழ்வான் பூரித்து மின்னினான். அந்த flash ஐ ஞாபகம் வைத்து ‘பாழியந்தோளுடைப் பத்மநாபன் ‘கையில் ஆழி போல் மின்னி ‘என்றாள் ஆண்டாள். ‘பத்மனாபன் ‘ என்ற பெயரைப் போட்டுச் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டாள்.ஆண்டாள் ஒரு

பெயரைக் காரணமின்றி ஒரு இடத்தில் பிரயோகிக்கமாட்டாள்.[அங்கங்கே தாமோதரன்,மால்,கோவிந்தன்,கேசவன்,மாதவன் என்று கூறும் இடங்களும் அப்படியே]

வலம்புரி அதிர்ந்தாற்போல மங்களகரமான மழைச்சத்தமாக இடிமுழக்கம் வர வேண்டும். சார்ங்கம் என்கிற வில்லிலிருந்து புறப்படும் அம்புகளைப்போல சரம் சரமாக மழைப்பாலம் பூமியையும் வானத்தையும் இணைத்து எங்கும் நிறைந்த அந்தர்யாமியான கடவுளை நிறுவ வேண்டும் என்று பாசுரத்தை முடிக்கிறாள். பெய்யும் மழை உலகத்தை அழியவிடாதவகையில் பெய்தருள வேண்டும் என்பதைத் தெளிவாக்க ‘வாழ உலகினில் பெய்திடாய் ‘ என்று இன்னொருமுறை தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்ய வேண்டியதை ஞாபகப் படுத்துகிறாள். அப்படியே செய்வதாக வாக்களித்து மழைத்தேவன் அகல்கிறான்.

காரியங்கள் எல்லாம் பிரமாணமாக கண் முன் இருக்கும்போது காரணம் சூட்சுமமாக இருந்தே ஆக வேண்டும். menu driven programme போல நம் இயக்கத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் நடக்கும்போது சூத்ரதாரியாக ஒருவனைக் கற்பித்துக்

கொள்கிறோம். உயிர்ப்பு என்கிற பண்டத்துக்கு நெருக்கமான ஒன்றைக்கூட இது வரை விஞ்ஞானம் படைத்து விடாத காரணத்தால் மெய்ஞானம் இன்னமும் அந்தர்யாமியை நம்புகிறது. பீஜம் எப்படி செடியாகிறது கரு எப்படி உயிராகிறது என்பதில் அந்தர்யாமிக்குப் பங்கிருப்பதாக இந்து மதம் நம்புகிறது. இல்லாவிட்டால் கடும்கோடையில் பெரிய watermelon சூழலுக்கு ஒவ்வாத வகையில் தனிக் குளிர்ச்சியுடன் இனிப்புடன் எப்படி முளைக்கும் ? அதன் உள்புற இளஞ்சிவப்பு காப்பவனின் கருணையைத் தெரிவிக்கிறது அல்லவா ? பூவில் சிரிப்பவனும் பழத்தில் இனிப்பவனும் அவனே அல்லவா ? அந்தர்யாமி, அந்தர்யாமி.hardware தெரிகிறது.software இயக்குகிறது.


5.தாமோதரன் சிறப்பும் ‘போயபிழையும் புகுதருவான் நின்றனவும் ‘ விளக்கமும்

நல்லது தீயது என்பதே அவனவன் மனப் பக்குவத்துக்கேற்றபடி மாறும்.எல்லாருக்கும் மிக விரும்பத்தக்கது ஒரு யோக்கியனுக்கு அறவே பிடிக்காமல் போகலாம்.எல்லாரும் வெறுத்து ஒதுக்கும் ஒரு விஷயம் ஒரு நல்லவனை நாடி வந்து

நன்மையே பயக்கலாம்.

முற்றும் துறந்து முழுப் பக்குவமடைந்த ஒருவனுக்கு நல்லதும் கெட்டதும் சமம்.

இரண்டாலும் துன்பம் தான் என்று அனுபவரீதியாக உணர்ந்திருப்பான் அவன்.

இதை விளக்க தேசிகன் வழி அன்பர்கள் ஒரு நல்ல கதை சொல்வார்கள்.[வடகலை மரபு]

ஒரு மனிதனுக்கு அன்று பிறந்தநாள். கோவிலுக்குப் போக வேண்டுமென்று தீர்மானிக்கிறான். அவன் நிறைய புண்ணியம்[நல்வினை] பண்ணினவன்.மிக நல்ல நிலையில் இருப்பவன் நம் கதாநாயகன். அன்று மிகப் பெரிய பேரங்களும்

வியாபாரங்களும் கைகூடுகின்றன அவனுக்கு.இரவு கோயில் கடை சாத்தும் வரை அவனால் அவன் பணியை விட்டு வர முடியவில்லை. வெளிநாட்டு ஒப்பந்தங்களும் உள்நாட்டு அரசியல் பத்திரிகைத் தொடர்புகளும் அவனை நெருக்கி அவன்

மனைவி வீட்டில் காத்திருக்க அவன் வெகுவாக ஆசைப்பட்ட தொழுகையை அவனால் செய்ய முடியாமல் போகிறது.

அப்படியே இன்னொரு மனிதன். இவனுக்கும் பிறந்த நாள். இவனும் கோயிலுக்குப் போக விரும்பினவன். இவனும் கோயிலுக்குப் போக முடியவில்லை. இவனைத் தடுத்தது ஆரவார வியாபாரமோ அட்டகாச தொடர்பினமோஅல்ல. ஏனெனில் இவன் தீவினை செய்தவன், இவனைத் தடுத்தது இவன் தரித்திரம். இவனை அலுவலகம் குறைந்த ஊதியத்தில் அவன் பலத்துக்கு அப்பால்பட்ட வேலைகளை அதிகப் படி நேரமிருந்து உழைக்கும்படி கட்டளையிட்டது. விட்டுப் போக முடியாதபடி அச்சுறுத்தியது.

மேற்படி கதையில் கோயில் ஒரு குறியீடு. மனிதன் விரும்பிய ஏதோ ஒன்று.லட்சியத்தை அடைய முடியாதபடி பாபம் தடையாயிருந்தால் என்ன ? புண்ணியம் தடையாயிருந்தால் என்ன ?

தடை தடை தானே ?

ஆண்டாள் 5வது பாட்டில் கதையைப் பொருத்துவது எப்படி என்று பின்னால் பார்க்கலாம்.

இறையின் ஐந்து நிலைகளில் ஐந்தாவது நிலையாகிய கோயில் வாழ் உருவகம் [அர்ச்சை] இந்தப் பாட்டில் வரவேண்டும்.அந்த வடிவம் அடுத்து பத்து பாட்டுகளில் சொல்லப் படப் போகிற ‘உயிர் ‘ பொருளோடு நன்கு ஒட்ட வேண்டும்.cut and pasteநன்கு வேலை செய்ய பாட்டின் இறுதிவரியில் வைக்கலாமா என்று பார்த்தாள் ஆண்டாள். fevicol அழுந்தப் பற்றிக் கொள்ள ஆறாம் அடி முதல் வரியைத் தேர்ந்தெடுத்தாள். ஏனெனில் இறையையும் உயிரையும் இணைக்கிற ஒரே நிறுவனம் வழிபாட்டு ஸ்தலம் தானே! அதனால் தான் எல்லா முற்றுகைகளிலும் வழிபாட்டு ஸ்தலங்கள் எதிரிகளால் அழிக்கப் பட்டிருக்கின்றன. சுவடுகள் மறைக்கப் பட்டிருக்கிறன. நம்பிக்கைகள் பொய்த்தால் மானுடத்தின் வலு குறையும் என்பது பல நாளைய தந்திரம் தான்.

அத்தோடு ஆண்டாளின் தோழிகளுக்கு ஒரு பெருத்த சந்தேகம் வந்துவிட்டது.

மழைக்கென்று நோற்பதாகப் பிரகடனம் செய்ததும் மழைத் தேவன் ஓடிவந்து

கையோலை வாங்கிப் போன பின்பும் தீராத ஒரு கூர்மையான சந்தேகம்.

கேட்டார்கள். ‘இப்போ எங்கே போகிறோம் ?

‘கண்ணனை அடையப் போகிறோம் ‘

‘அது என்ன அவ்வளவு சுலபமா ? ‘

‘பார்க்கலாமே! ‘

‘ஆசையிருந்தா போதும், எதையும் அடையலாம். நம் மேலே ஆசை வெச்சு அவனே எல்லாம் பார்த்துப்பான்,நமக்கு சும்மா ஒரு நல்ல நோன்புக்கான பாசாங்கு கூடப் போதும். எல்லாம் சரி. ஆனா ஒரு முக்கியமான விஷயமிருக்கே, நம்ம பூர்வாகம் உத்திராகம் என்கிற பாவ மூட்டை, அதை என்ன செய்யலாம் ? ‘

சந்தேகம் நியாயமானது.

நம்முடைய பாபங்கள் நம்மைக் கிருஷ்ணானுபவத்துக்கு விட்டு விடுமா என்ன ? துரத்தித் துரதி வந்து நம்மையும் பெருமாளையும் பிரித்துவிடாதா ?

நாம் கிருஷ்ணனைச் சேரவென்று நோன்பு பிடித்தோம். அது வெற்றிகரமாக முடியும் என்று என்ன உத்தரவாதம் ? மிகப் பெரிய தர்மிஷ்டனும் சக்கரவர்த்தியுமான தசரதன் ,மிகப் பெரிய

இருடியான வசிஷ்டர் நிச்சயிக்க ,மிக நல்ல மனிதர்கள் கொண்ட அயோத்தியடங்க வாழ்த்த,கோடித்த பட்டாபிஷேகமே நின்று போனது. இத்தனைக்கும் முடிசூட இருந்தவன் பரம்பொருள். ஆண்டாள் சொன்னாள். தப்பு. இராமன் தன் பட்டாபிஷேகத்தை

நிறுத்திக்கொண்டது சுக்ரீவனுக்கும் விபீஷணனுக்கும் பட்டாபிஷேகம் நடத்தவென்று.அவன் ஒருத்தன் ராஜாவானால் மீதியெல்லாம் என்னாவது ? ராமாவதாரத்தில் தன் முடிவிழாவை ஒத்திவைத்து பிறருக்கு முடியணிவித்தான். கிருஷ்ணாவதாரத்தில் தான் சபதம் மீறி அன்பர் சபதத்தை நிறைவேற்றினான். அர்ச்சுனன் அபிமன்யூவின் மரணத்தின் மீது ஆங்காரத்துடன் சபதமிட்டபடி சூர்ய அஸ்தமனத்துக்கு முன் ஜெயத்ரத வதம் முடிக்க ஏதுவாக ‘ஆயுதம் எடுக்க மாட்டேன் ‘ என்ற தன் சபதத்தை மீறி சக்கரத்தால் சூரியனை மறைத்து சூது செய்து கெட்ட

பேர் வாங்கவில்லையா ? அவனுக்குத் தன் காரியம் உத்தேசம் இல்லை. தன் அன்பர் காரியமும் அவரின் சங்கல்பமும் தான் முக்கியம். நாம் சங்கல்பித்துக் கொண்டாகிவிட்டது.

பயப்படாமல் வாருங்கள் மேற்கொண்டு ஆவதைப் பார்ப்போம்.என்றாள். அதற்குப் பின் தான் இந்தப் பாப புண்ணிய விவகாரம் வந்தது.

திருப்பாவை வரிகளில்லாத சம்பாஷணைகளை எப்படி யூகிக்கிறீர்கள் என்று கேட்கலாம். திருப்பாவைச்செறிவைத் தொடர்ந்து வரும்போது பாவை சொல்பவரின் குரலில் ஏற்ற இறக்கமும் மொழியில் பளீர் வார்த்தைகளும் வந்துவிழும் நேர்த்தியும் இடைப்பட்ட சம்பாஷணைகளைக் கிரகிக்க வைக்கின்றன.தொலைபேசியில் பேசுபவரின் அருகே நிற்பவர் இவ்விடத்தைய பேச்சிலிருந்து அடுத்துமுனை கேள்வியை யூகிக்க முடிவதைப் போலத்தான்.

இருந்தாற்போலிருந்து ‘போயபிழையும் புகுதருவான் நின்றனவும் ‘ என்ற பிரச்னையை ஆண்டாள் முன் வைப்பானேன் ?

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்

தூயபெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர்குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்

தாயை குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

போயபிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோரெம்பாவாய்

மாயனை….

ஆச்சரியமான செயல்களை அநாயாசமாகச் செய்யக்கூடியவன். ‘எத்திறம்! எத்திறம்! ‘ என்று மலைக்க வைக்கும் அளவில் மாயன் என்ற பேரை வாங்குவதற்காகவே கிருஷ்ணாவதாரம் எடுத்தவன்.தன்னைப் படு கீழே தாழ்த்திக் கொண்டு ‘இந்தா,எடுத்துக் கொள், என் அழகை,என் குணத்தை,என் சாகஸத்தை, என்கீதையை,என் பணிவை, என் மானுடப் பிரேமையை ‘ என்று அத்தனை மேன்மைகளையும் பரிமாறிவிட்ட நேர்த்தியான கிருஷ்ணாவதாரச் சிறப்பைச் சொல்ல வார்த்தைகளில்லை.மனித மட்டத்தில் தன்னை நிறுத்திக் கொண்டு அதற்குள் குறும்பும் தர்மஒழுக்கும் கொண்ட தெய்வீக மாயை விளையாட்டை நடத்திக் காட்டி மாயனானான் அவன். எனவே மாயனைச் செப்பு.

மன்னு வடமதுரை மைந்தனை….

நிலை பெற்ற பகவத் சம்பந்தம் பெற்ற ஊர் மதுராபுரி என்னும் வட மதுரை. முன்பு வாமனன் தவம் பண்ணின இடமும்,பின் சத்துருக்கினன் படைவீடு அமைத்த இடமும் அதுவே.ஏதாவது அவதாரம் என்றால் அது மதுரையில் தான் என்று பகவான் தீர்மானித்துவிட்ட மாதிரி அவதாரத் தொடர்ச்சி நிலைபெற்ற ஊர் மதுரை. அந்த மதுரைக்கு மைந்தனாய்ப் பிறந்தான் கண்ணன். ‘தந்தை காலிற் பெருவிலங்கு தாளவிழ நள்ளிருட்கண் வந்தவெந்தை ‘ என்றபடி மிடுக்கோடு தாய் தந்தையர் விலங்கு தெறித்துவிழப் பிறந்த பையன் அவன்.

எனவே வடமதுரை மைந்தனைச்செப்பு.

தூய பெருநீர் யமுனைத் துறைவனை….

அதென்ன தூய்மை ? நிரந்தரமாகக் கிருமிநாசினி ஏதாவது போட்டு வைத்திருந்தார்களா ? எதைக் கலந்தாலும் ஒன்றும் ஆகாதாமா யமுனை ? ஏதாவது தொழிற்சாலைக் கழிவைவிட்டல் கூட குடிதண்ணிர் ஆகக் கூடியதாமா யமுனைநீர் ?

பரமபதத்தில் வ்ரஜை போல கிருஷ்ணாவதாரத்துக்கு யமுனா வாய்த்தாள். சீதாபிராட்டி இராவணன் தன்னைத் தூக்கிக்கொண்டு போன போது கோதாவரியிடம் கூப்பிட்டுக் கதறினாள். இராவண பயத்தால் கோதாவரி சும்மாயிருந்துவிட்டாள். யமுனையோ கம்சன் மாளிகையின் கொல்லைப் புறமாக ஓடிக் கொண்டும் கூட துளியும் பயமின்றி குழந்தை கிருஷ்ணன் மதுரையிலிருந்து கோகுலத்துக்கு வரும்போது முழங்காலளவு வற்றிக் கொடுத்தாள். தெய்வ காரியத்துக்கு உதவினாள்.தர்மத்தின் பக்கம் நிற்பவர்களும் அக்கிரமத்திற்கு பயப்படாதவர்களும் தூயவர்கள். கிருஷ்ணனும் கோபிகைகளும் மாறி மாறிக் கொப்பளித்து யமுனை இன்னும் தூயதாயிற்று.முத்து படும்துறை மணி படும் துறை என்றெல்லாம் சொல்வோமே,நதிவேக வண்டல் மண்ணில் வந்து ஒதுக்கும் செல்வமாக,அப்படி யமுனைத் துறை ‘பெண்கள் படுந்துறை ‘யாயிற்று.அங்கு கண்ணனும் ஒதுங்கி யமுனைத்துறைவன் என்ற பேர் பெற்றான்.ஜமுனாதீரமும் ஷியாமனும் பிரிக்க

முடியாதவர்களாயினர். தூயபெருநீர் யமுனைத் துறைவனைச் செப்பு.

தாமோதரன்….

பகலில் விளக்கு பார்க்காகாது என்று அந்தகாரத்தில் விளக்குப் போட்டாற்போல ஆயர்குலத்தில் வந்து விளக்கானான். [ஆயர்குலத்தினில் தோன்றும் அணி விளக்கை ‘ என்ற வரியில் தோன்றும் என்ற சொல்லில் இருக்கும் கால மயக்கத்தைப்பாருங்கள். தோன்றிய என்றில்லாமல் தோன்றும் என்றிருப்பது. நான் முன்பே சொன்னபடி நிறைய tense தவறுகளை வேண்டுமென்றே செய்திருப்பாள் ஆண்டாள்] இவனைப் பெற்ற தாய்க்கு என்ன புண்ணியம் செய்த வயிறோ என்று அனைவரும் வியந்து போகும்படி தாயை வெளிச்சம் செய்தான் தாமோதரன். பெற்ற தாய் என்றால் தேவகியா என்று குழம்பி விடாதபடிக்கு கட்டுப்பட்டுக் கயிற்றடையாளத்தை வயிற்றில் பெற்று அதைப் பெருமையாகப் பேரிலும் வடுவாக்கிக் கொண்ட வரலாற்றை ‘தாமோதரன் ‘ என்ற ஒரே வார்த்தையில்

சொல்கிறாள் ஆண்டாள். உலகத்தையெல்லாம் காக்கவும்,போரவும் நியமிக்கவும்[protect,maintain,and control]காரணனான ஒரு பரம்பொருளைத் தான் காக்கவும் போரவும் நியமிக்கவும் அதிகாரம் பெற்றாள் அந்த யசோதை.அவளிடம் கொட்டாங்கச்சித் தயிருக்கு குரங்காட்டம் ஆடினான் கண்ணன். அவள் கைக் கயிற்றுக்குக் கட்டுண்டு அதன் வடுவை வயிற்றில் சுமந்து [தாமம்-கயிறு,உதரம்-வயிறு] பெருமையோடு எல்லாருக்கும் காட்டிக் கொண்டான்.

[ ‘பணைகளிலே தாவினவாறே உடை நழுவ தழும்பைக்கண்டு இடைச்சிகள் சிரித்தார்கள். அத்தழும்பு தோன்றாமைக்கிறே ந்ம்பெருமாள் கணையம் மேல்சாத்து சாத்துகிறது ‘ என்றார் ஜீயர்-ஆறாயிரப்படி]

அவனுக்குக் கட்டுப் பட்டவர்கள் என்று காட்டிக் கொள்ள அவன் அன்பர்கள்

திருவிலச்சினை அணிகிறார்கள். நமக்குக் கட்டுப் பட்டவன் என்று காண்பிக்க அவன் வயிற்றுக் கயிற்றடையாளத்தையும் அதை ஒட்டின பேரையும் சுமந்து திரிகிறான்.

எனவே தாமோதரனைச்செப்பு.

இப்படி மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,யமுனைத்துறைவனை,தாமோதரனைச் செப்பி, தூய சரணாகதியோடு,முக்கரணங்களாலும் வழிபட்டு பிரேம பக்தி செய்தோமானால் நம் பூர்வாகங்களும் உத்தராகங்களும் தீயினி பட்ட பஞ்சு போல ஒன்றுமில்லாமல் போகும். இது சத்தியம். என்றாள் ஆண்டாள்.

‘தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க ‘ என்பது சுலபமானதல்ல. நாம் தூய்மை நம் பூ தூய்மை. எப்படி isi முத்திரை குத்திக் கொள்வது ?புறத்தூய்மையல்ல. போர்க்களத்தில் துவண்டு புத்தி கேட்ட அர்ச்சுனனும் தீட்டோடு வஸ்திரம் பெற்ற திரெளபதியும் புறத்தூய்மை பற்றிக் கவலைகொள்ளவில்லை.நம் தூய்மை சரணாகதியில் இருக்கிறது. நாம் கொண்டு வரும் பூவின் தூய்மை பிரயோசனம் எதிர்பார்க்காத தன்னலமின்மையில் இருக்கிறது. வாய் பாட மனசு ஸ்மரிக்க கை பூப் போட.. முக்கரணம் திசை மாறாமல் பிரேமையில் முழுக வேண்டும்.

கருமமடிப் பிறப்பு இறப்பை விதித்த சாஸ்திரங்கள் இப்படி ஒரு விதியை எங்கும் சொல்லவில்லையே! கிருஷ்ண பக்தி எப்படி கருமவினையைத்தொலைக்கும் ? ஆண்டாள் சொன்னால் சொன்னது தான். அறிஞர்களெல்லாம் முடிவாகச் சொல்லிவிட்டார்கள். ‘தகிப்பது நெருப்பின் குணம். அணைப்பது நீரின் இயல்பு. பாபம் தகிக்க தகிக்க பகவத் கடாட்சம் அணைத்தபடியிருக்கும்.ஒன்று இறுதியில் ஜெயித்து தானே ஆக வேண்டும் ? இறுதியில் தூசாவது பாபவினையாயிருக்கும். ‘

இப்போது இன்னொரு பெரிய கேள்வி. போய பிழையும் புகு தருவான் நின்றனவும் என்பதற்கு specific meaning என்ன ? போயபிழை என்ற வார்த்தை தெளிவாயிருக்கிறது. குழப்பமேயில்லை. அது-பூர்வாகம் அதாவது பிராரப்த கருமா என்ற பெயரில் பல ஜன்மங்களாகத்தொடரும் பாவமூட்டை அல்லது பகவானைச் சரணடையும் முன் நாம் அறியாமல் செய்தபிழை என்று பொருள்படுகிறது.இப்போது புகுதருவான் நின்றன என்றால் என்ன ? சரணாகதி ஆனபின்னும் பழக்கதோஷத்தால் செய்துகொண்டே யிருப்பவையா ? பாவமன்னிப்பு கேட்டுக் கேட்டு மீண்டும் மீண்டும் பாவம் செய்வதா ?

புரியவில்லையே! உத்தராகம் எனப்படும் இந்தப் பிறப்பின் அல்ப சொல்ப மூட்டையா புகுதருவான் நின்றன ?

எதுவுமில்லை.போயபிழை என்று சொன்னோமே அது மட்டும் தான் பாபம். தெரியாமல் செய்தவை. சரணாகதியானபின் பாவம் செய்யமுடியவே முடியாது அப்புறம் புகு தருவான் நின்றன யாவை ?உங்களை சொர்க்கம் சேர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு கோதாவில் இறங்கி உங்களைப் பாடாய்ப் படுத்தப்போகும் புண்ணியபலன்.நல்வினைப் பயன். கட்டுரை ஆரம்பத்தில் இருக்கும் கதையைப் பாருங்கள். அதில் புண்ணியவானான ஒருவன் பிறந்தநாளன்று கோயிலுக்குப் போக முடியாமல் தடுத்தது அவனுடைய புண்ணியம். கண்ணன் பேரைச் செப்பி அவனை ஆத்ம சுத்தியோடு வழிபட்டால் பாப புண்ய

பலன்களை மீறி அவனே வசமாவாவான். இது தான் ஆண்டாள் கருத்து.

உன்னதமான ஐந்தாவது திருப்பாவை முடிந்தது.


6.புள்ளரையன் கோயில்

சர்ச்சைக்குரிய உருவ வழிபாட்டை நியாயப் படுத்தும் இந்து மதம்

பரம்பொருளின் ஐந்தாவது நிலையாக ‘அர்ச்சை ‘யை வைத்ததில் ஆச்சரியம்

எதுவுமில்லை.பாமரனுக்காகவே இது தேவைப்பட்டது. ‘கலியுகத்தில் ‘அர்ச்சை ‘

வெகுவாக என் நிலையாக இருக்கும்.பக்தன் எனக்கு எந்த வடிவத்தைக்

கற்பிக்கிறானோ அந்த வடிவில், எந்த குணங்களைக் கற்பிக்கிறானோ அந்த குணங்களோடு பரமபதம்,பாற்கடல்,அவதாரம், அந்தர்யாமி என்ற நிலைகளில் எனக்குள்ள சக்திகளுக்கு எள்ளளவும் குறையாத வீர்யத்தோடும் கருணையோடும் பக்தர்களுக்கு நான் அருள் பாலிப்பேன் ‘ என்ற சங்கல்பத்தை பகவான் எடுத்துக் கொண்டிருக்கிறான்.

ஜீவன் பரமனுக்கு பிரேமையைச் செய்ய உகந்த இடமும் அர்ச்சை தான். எல்லா வலிமையும் இருந்து வைத்தும் பலவீனனைப் போல வாய் திறக்காமல் ஜனங்கள் இடும் ஆசனம் மலர் அலங்காரம் நைவேத்யம் போன்றவற்றை அங்கீகரித்து மிக மகிழ்ச்சியுடன் தன்னை அநாதரிக்கிறவர்களையும் ஆதரிக்கிறான் பகவான். கடவல்லி உபநிஷத்தில் மந்த்ர ரத்னமான த்வயத்தின் இரண்டு வாக்கியங்களோடு மூன்றாவது வாக்கியம் செருகப்பட்டு வைக்கப் பட்டிருக்கிறதாம்.

அதில் ‘ஸ்ரீமந் நாராயண சரணெள சரணம் பிரபத்யே

பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ணமேவ விசிஷ்யதே

ஸ்ரீமதே நாராயணாய நமஹ

என்று சொல்லப் பட்டிருக்கிறதாம்.

பிராட்டியுடன் கூடிய பகவானைச் சரணம் பற்றுகிறேன்.

அர்ச்சையில் தான் பகவான் பூரணமாக எழுந்தருளியிருக்கிறான்

பகவான் பிராட்டி சேர்த்தியில் எல்லா அடிமையும் கிடைக்கப் பெறுவேனாக வேண்டும்.

இது பொருள்.

மந்த்ரத்தின் இரண்டு வரிகளுக்கு இடையில் பூர்ணஸ்ய வரியைச் சேர்த்திருப்பது கோவிலின் விசேஷத்தை முன்னிறுத்த என்றுபெரியவர்கள் சொல்கிறார்கள்.கல்வடிவமானாலும் பார்க்கிற கண்ணில் அன்பிருந்தால் தெய்வம்

தட்டுப் படுகிறது.

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ!

பிள்ளாய் எழுந்திராய்!பேய்முலை நஞ்சுண்டு

கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து ஹரி என்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்.[திருப்-6]

கோகுலத்தில் பறவைகளின் தலைவனான கருடனின் கோ திருமாலுக்கு ஒரு கோவில் இருந்திருக்கிறது. அதை ‘புள்ளரசன் கோயில் ‘ என்று குறிப்பிட்டிருக்கிறாள் ஆண்டாள்.இப்படி அர்ச்சாஸ்தலங்கள் எல்லாக் காலத்திலும் இருந்ததற்கான சாட்சியம் இருக்கிறது.இராமன் சீதையுடன் சென்று வணங்கி வந்த கோவிலைப் பற்றி ‘ஸஹபத்ந்யா விசாலாட்ச்யா நாராயண முபாகமத் ‘ என்று குறிப்பு இருக்கிறது. பூர்வாசிரியர்கள் சொல்கிறார்கள்.அப்படி ஸ்ரீரங்கம்.ஸ்ரீமுஷ்ணம்,திருவேங்கடம் ஆகிய கோவில்கள் பல்லாயிரக்கணக்கான வருஷங்களாய் இருந்து வருவதில் கோகுலத்தில் கோவில் இருக்கத் தடையில்லை.

ஆறாவது முதல் பதினைந்து வரையிலான எழுப்பு கீதங்கள் ஜீவனுக்கு விழிப்புணர்ச்சி தரும் விதத்தில் அமைந்துள்ளன. ஜீவனின் பத்து வெவ்வேறு நிலைகளாக மேலேறும் ஏணிப் படிகளாகக் கூடச் சொல்லமுடியும்.பத்து ஆழ்வார்களை,பது ஆச்சார்யர்களை,பஞ்ச லட்சக்குடிப்பிறந்த கோபிகளை கர்மேந்த்ரியமும் ஞானேந்த்ரியமுமான பத்து புலன்களை எழுப்புவதாக ஐதீகம். பொதுவாக எழுப்புகிறவர்கள் பெரியவர்களாகவும் படுத்துத் தூங்குபவர்கள் சாமான்யர்களாகவும் தோன்றும். ஆனால் அது அப்படியில்லை. எழுப்புகிறவர்கள் சாமான்யர்கள்.தூங்குகிறவர்கள் மிகப் பெரியவர்கள், திருப்பாவையில்.

எழுப்புகிறவர்களும் தூங்குகிறவர்களும் பகவத் பிரேமையில் ஒரே தன்மையராக இருந்தும் சிலருக்கு நிம்மதியாகத் தூங்கமுடிகிறது.சிலருக்குப் படுக்கை தரிக்கவில்லை.

தனியாக பகவானிடம் போக பயம். ‘ஆழியான் ‘ என்ற ஆழமோழையில் தன்னிச்சையாக முறையின்றி இறங்கிவிட்டால் என்னாகுமோ என்ற பயத்தில் ‘வேதம் வல்லாரைக் கொண்டு விண்ணோர்பிரான் பாதம் பணிந்து ‘ என்று சொல்லியிருக்கிறபடி தங்களை அணைத்துச் செல்லவல்ல பெரியவர்களை எழுப்பிக் கொண்டு போகிறாள் ஆண்டாள்.

முதன்முதலாக பகவத் விஷயத்தில் புதியவளை, இளைய பிராயத்தாளை ‘பிள்ளாய்

எழுந்திராய் ‘என்று எழுப்பிச்செல்வதாக இருக்கிறது பாசுரம். ‘பொழுது விடிந்தாலல்லவோ எழுந்திருப்பார்கள் ?இன்னும் விடியவில்லையே! ‘ என்றாள் உள்ளிருப்பவள்.

‘எழுந்த வந்த நாங்கள் விடியாமலா வந்திருக்கிறோம் ? ‘ என்று கோபப்பட்டார்கள் காத்திருப்பவர்கள்.அதற்கவள் ‘தூங்கினால் அல்லவா விழிக்க ? கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்குமுண்டோ கண்துஞ்சுதலே என்றபடி நீங்கள் உறங்கினதே கிடையாதே! வேறு அடையாளம் சொல்லுங்கள் பொழுது விடிந்ததற்கு ‘ என்றாள்.

[கிஷோர் குமார் பாடிய ‘தேரே ஹி ஸப்னோமே ஸோயா சவேரே தேரே

க்ஹயாலோமெ ஜாகா ‘என்ற வரி ஞாபகம் வரும் ஸாவன் பிஜ்லி சந்தன் பானி ஜைஸா அப்னா ப்யார் என்ற பாடல்]

புள்ளும் சிலம்பின காண் என்று முதல் அடையாளம் சொன்னார்கள்.பறவைகள் மார்கழி நோன்பு செய்யவென்று அடித்துப் புரண்டு எழுந்திருக்கவில்லை. எப்போதும் போல பொழுது விடிந்துவிட்டதால் எழுந்தன. என்றார்கள். ‘நீங்கள் தரிக்க மாட்டாமல் அலைவது போலத் தானே உங்கள் ஊர்ப் பறவையுமிருக்கும் ? ‘ஊரும் நாடும் தன்னைப் போல அவனுடைய பேரும் தாரும் பிதற்ற ‘ என்றாற்போல நீங்கள் உங்கள் பறவைகளை உங்களைப் போலவே

ஆக்கியிருப்பீர்கள் ‘ என்றாள் பதிலுக்கு.

‘சரி,பறவைகளை நாங்களே எழுப்பிக் கூட்டிவந்தோம்.ஆயர்பாடி நாராயணன் கோவில் நிர்வாகி ஆள்காரன் எல்லாரையும் நாங்களே கூப்பிட்டு வெள்ளைச் சங்கைக் கையில் கொடுத்து ஊதச் சொன்னோம் என்று சொல்வாய் போலிருக்கிறதே!விடியற்காலை ஆராதனைக்காக பக்தர்களை அழைக்கும் ‘விளிசங்கு ‘ பெரிய சப்தமாகக் கிளம்பியதே! அது கூடவா காதில் விழவில்லை ? ‘ என்றார்கள்.

‘சங்கென்னவோ ஊதியது. அது கோயில் சங்கில்லை.விளிசங்குமில்லை, அது ஜாமத்துக்கு ஜாமம் ஊதும் சாதா சங்கு ‘என்று வாதம் செய்தாள் உள்ளே இருப்பவள்.

‘உனக்குத் தெரிந்தது அவ்வளவு தான்,அறிந்தவளாயிருந்தால் பகவத் பக்தியை விடவும் பாகவத பக்தி தான் பெரிது என்று தெரிந்து நாங்கள் கூப்பிட வேண்டாமல் நீயே எங்களைத் தேடி வந்திருப்பாயே! பிள்ளாய்! ‘ என்றார்கள்.

‘போகட்டும்,நான் பிள்ளையாகவே இருந்து போகிறேன்.வந்த சேதியைச் சொல்லுங்கள். ‘என்றாள்.

கம்சன் ஏவிய பூதனை என்னும் ராட்சசி அழகான பெண்ணூருவத்தில் ஆய்ப்பாடிக்கு வந்து தொட்டிலில் கிடந்த குழந்தைக் கண்ணனை மடியில் வைத்துக் கொண்டு நஞ்சு தீற்றிய முலைப்பாலைத் தந்தாள்.அரக்கி தனக்காகவே பிரயாசைப் பட்டுக் கொடுத்த விஷத்தை கண்ணன் ரசித்துக் குடித்து பாலோடு பூதனை உயிரையும் உறிஞ்சி அவளைக்கொன்றான்.

அப்புறம் நந்தகோபர் அரண்மனையில் ஒரு வண்டியின் கீழ்நிழலில் தொட்டிலில் குழந்தைக் கண்ணனைக் கிடத்தி குளிக்கப்போனாள் யசோதை. அந்த வண்டிச் சக்கரத்தில் கம்சனால் அனுப்பப் பட்ட அசுரன் ஆவேசித்துக் கண்ணனைக் கொல்லவிருந்தான். பெற்ற தாய் கூட அருகிலில்லாத நேரத்தில் தனக்கு வந்த ஆபத்தைஅறிந்து கண்ணன் பாலுக்கு அழுத பாவனையில் தன் சிறிய பாதங்களைத் தூக்கி சக்கரத்தை உதைக்க அச்சகடம் திருப்பப் பட்டுக் கீழே விழுந்து அசுரனும் அதனோடே அழிந்தான்.

இந்த இரு சம்பவங்களையும் சொன்னார்கள் வந்தவர்கள்,கண்ணனுக்கு ஏற்பட்ட ஆபத்துகளைச் சொன்னால் மனமதிர்ந்து படுத்திருப்பவள் தூக்கம் கலையாதா என்று. அவளோ கண்ணன் காப்பாரில்லாமலும் தன்னைத்தான் காத்துக் கொண்டதை நினைத்து நிம்மதியுடன் திரும்பிப் படுத்து தூங்க ஆரம்பித்தாள். அப்பாடா! அவன் பாதம் நமக்குத்தான் ஆதரவென்றிருந்தோம் அவனுக்கும் அதுவே ஆதரவு போலிருக்கிறதே சகடாசுரன் விஷயத்தில் என்று ஒரு பெருமூச்சு வேறு விட்டுக் கொண்டாள். காத்திருப்பவர்கள் பார்த்தார்கள். அபாயங்களைச் சொல்லிப் பிரயோசனமில்லை. அபாயங்களில்லாத பாற்கடலில் பரிவுடைய ஆதிசேஷப் படுக்கையில் சாய்ந்து அறிதுயில் செய்யும் பரம்பொருள் பற்றிச் சொன்னார்கள்.விவசாயிகள் விதையை நீரில் தானே சேர்ப்பார்கள் ? அப்படியே அகில உலகுக்கும் அடிவித்தான தன்னையும் நீரிலே சேர்த்தான்.அத்தகையவனை எப்போதும் நெஞ்சில் சுமந்திருக்கிற தியானிகளும் யோகிகளும் அவன் உள்ளே தளும்பாதபடி மெள்ள எழுந்து ‘ஹரிர் ஹரிஹி ஹரிர்ஹரிஹி ‘என்று ஏழேழு தரம் உரக்கச்சொல்லிப் பின் தம் தம் அலுவல்களைத் தொடங்கிவிட்டார்கள் என்று சொன்னார்கள்.

‘பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டோடி வந்தென் மனக்கடலில் வாழவல்ல மாய மணாள நம்பி ‘ என்றபடி நீரும் உறுத்துமென்று மென்மையான குளிர்ந்த பாம்புப் படுக்கையில் இருப்பவன் ஓரிடத்தில் உட்கார்ந்திருந்து தவம் செய்யும் தியான சீலருக்கும் அங்குமிங்கும் அலைந்து கைங்கரியம் செய்யும் கர்மயோகிகளுக்கும் மனக் கடலில் வாய்த்தவன் அல்லவா ? மனன சீலர்கள் முனிவர்கள் என்றால் கைங்கர்ய பரர்களை யோகிகளாகக் கொள்ளத் தடையில்லையே! இருவகையினரும் ஹரிநாமம் சொல்லி எழுந்தாயிற்று. இப்போது நாங்கள் எழுப்பி நீங்கள் எழுந்து வருவது தான் மிச்சம் என்றார்கள்.

‘பறவை எழுந்தது:கோயில் சங்கு ஊதியது:எந்த சத்தமும் கேட்காமல் தூங்கும் அறியாப் பெண்ணே!நாம் தேடிப் போகிற வாசுதேவ கிருஷ்ணன் சிறுவயதில் பெரும் சாகசங்களைச் செய்தவன்.அவனே அந்த பாற்கடலில் பள்ளிகொண்ட பரம்பொருள்.அதை உள்ளபடி உணர்ந்து கோகுலத்தில் முனிவர்களும் யோகிகளும் அமைதியாக எழுந்து ஹரிநாமத்தை உச்சரித்தபடி தங்கள் அன்றாட அலுவல்களைத்தொடங்கிவிட்டனர்.அந்த ஹரிநாம சப்தம் உள்ளத்தை நனைத்துக் குளிர்விக்கிறது. நாம் கிருஷ்ணாம்ருத நீராட்டத்தின் முதல் படியைத்

தாண்டுவோம் ‘ என்பது பாசுரம்.

முதல் பாசுரம் பொய்கையாழ்வாரைக் குறிப்பது எப்படியெனில் அவர் பாஞ்சசன்னியம் என்ற சங்கின் அம்சமாகப் பிறந்தவர் என்பதிலும் அவர் பிரயோகிக்கும் சில பதங்களை ஆண்டாள் இங்கு பூட்டுக்குச் சாவி போல வைத்திருப்பதிலும் என்பார்கள்.

‘அஸ்மத் குருப்யோ நம: ‘ என்று முதல் குருவைக் கூப்பிட்டுக் கொண்டதாகவும் பெரியவர்கள் கூற்று.

ஆறாவது திருப்பாவை முடிந்தது.


7.கீசு கீசென்று….

‘பேய்ப் பெண்ணே ‘என்று தொடங்கி பேயாழ்வாரை முன்னிலைப் படுத்துகிற அதி அற்புதமான பாசுரம் இது.இப்படியும் அப்படியும் வார்த்தைகளைப் போட்டால் இருந்தபடியே எளிதாகப் பொருள் கூறிவிடும்.

பேய்ப் பெண்ணே!நாயகப் பெண்பிள்ளாய்!தேசம் உடையாய்! எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து கீசுகீசென்று பேசின பேச்சரவம் கேட்டிலையோ! வாசம் நறுகுழல் ஆய்ச்சியர்,காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து மத்தினால் ஓசைப்படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ! திற!

கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே!

காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து

வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஒசைப் படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ

நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ

தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்.[திருப்-7]

மந்மநாபவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு!

மாமேவைஷ்யஸி யுக்த்வைவம் ஆத்மாநம் மத் பராயண:!

என்று கிருஷ்ணன் கீதையில் சொல்கிறான்.

‘என்னிடம் உன் மனதை வை.என்னை பஜனம் செய்.என்னிடம் பக்தியைச்செய். என்னையே கதியாகப் பற்று.இப்படிச்செய்வாயானால் நீ என்னையே அடைவாய் ‘என்று பொருள்.அதையே ஆண்டாள் கீழ்ப் பாட்டில் ‘தூமலர் தூவித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க ‘ என்றாள்.

அந்த வகையில் படிப்பு அறிவுக்காக,தொழில் தொண்டுக்காக,ஜீவனம் பகவத் நெருக்கத்துக்காக என்று வாழ்ந்தவர்கள் முகத்தில் ஒரு புகர் இருக்கும். புகர் என்றால் ஒரு தனி வெளிச்சம்.அதைத் தேஜஸ் என்று சொல்வார்கள். அதையே தேசம் உடையாய் என்று படுத்திருக்கும் பெண்ணுக்குக் கற்பித்து ஆண்டாள் விளிக்கிறாள்.

படிப்பு வேலைக்காக,வேலை பணத்துக்காக,வாழ்க்கை புலனின்பத்துக்காக என்று வாழ்பவர்களுக்கு பகவான் நம் எஜமானன் நாம் அவனுக்கு அடிமை என்கிற தாஸ்ய

ஞானம் வராது:அந்த விசேஷத்தால் ஏற்படுகிற அடக்கமும் நிம்மதியும் முகத்துக்கு ஊட்டுகிற தனி ஒளியையும் பெற முடியாது.

சீதாபிராட்டியின் தரிசனத்துக்கு முன் தன்னை ‘தூதோஹம் ‘ என்று சொல்லிக்கொண்டு போன அனுமான் அன்னையைச் சந்தித்தபின் ‘தாஸோஹம் கோசலேந்த்ரஸ்ய ‘ நான் ராமதாசன் ‘ என்று சொல்லிக்கொண்டு வந்தான் [சிலபேரின் மனைவிமாரைப் பார்த்தால் தான் அவர்களின் நிஜ அந்தஸ்து தெரியவரும்] அப்படி தாஸ்ய ஞானம் என்பது எல்லாருக்கும் பரமபதத்தில் மட்டுமே வந்து வாய்க்குமாம்.பூவுலகிலேயே வாய்த்தவர்கள் மிகச்சிலர். அவர்களுள் பீஷ்மர்,அனுமான் கோபிகைகள் ஆகியோர் முக்கியமானவர்கள். அப்படிப்பட்ட ஒரு கோபியை,இரண்டாவது ஆச்சாரிய இடத்தைப் பிடித்தவளை ‘அஸ்மத் பரம குருப்யோ நம: ‘என்கிறது போல ‘நாயகப் பெண்பிள்ளாய் ‘ என்ற சொல்லையும்

போட்டுக் கூப்பிடுகிறாள் ஆண்டாள்.

பொழுது விடிந்தது என்றார்கள். என்ன அடையாளம் ? என்று கேட்டாள் உள்ளிருப்பவள்.

பாரத்வாஜபட்சி எனப்படுகிற வலியன் குருவி செம்போத்து என்றும் இலக்கியங்களில் வழங்கப்படும்.அந்த ஆனைச்சாத்தான் கீசு கீசு என்கிறது. க் ஏஷு ? என்று ஆண்பறவை கேட்கிறது.யார் அவன் ஈசன் [என்பான் ?] பெண் பறவை பதில் சொல்கிறது கிம் ஏஷு அவன் தான் ஈசன் [சந்தேகமென்ன] கீசு கீசு என்று சம்பாஷித்தன ஆனைச்சாத்தான் எங்கும்.

[சதாராவில் அக்கூ பறவை வைஜயந்தி வைஜயந்தி என்று அழுந்தச் சொல்லும் இனிமையான சத்தம் கேட்கிறபோது கீசுகீசு ஞாபகம் வரும்]

பொழுது விடிந்தால் தானே பறவை சத்தம் போடும் ?

அது ஏதோ ஒரு பறவையாயிருக்கும் அர்த்த ராத்திரியிலே எழுந்திருந்திருக்கும்

ம்ஹூம் அப்படியில்லை அது நிறைய ஆனச்சாத்தான் எல்லா ஆனைச்சாத்தானும் கலந்து பேசுகிறதாக்கும்

ஆமாம்,விடிய விடிய பேசி முடிக்காததை ஆனைச்சாத்தன் விடிஞ்சதும் பேசிட்டு உட்கார்ந்திருக்குமாக்கும் இது அர்த்த ராத்திரி தான்.

இல்லைம்மா,ஆணும் பெண்ணுமாக ஆனைச் சாத்தான் பறவைகள் சம்பாஷிக்கின்றன. கப்பலில் பயணம் போகிறவர்கள் கரை சேரும் வரை வேண்டிய உணவையும் நீரையும் தம்முடன் எடுத்துப் போவதைப் போல இரை தேடப் போகும் ஆண்பறவைகள் தங்கள் பேடுகளிடம் தாம் இல்லாதிருக்கப்போகும் பகல் நேரம் முழுக்க என்னேன்ன பாதுகாப்பில் இருக்கவேண்டும் என்பதற்கான யோசனைகளை உரத்து செய்து கொண்டிருக்கின்றன. பொழுது நன்கு விடிந்து விட்டது.

மாளிகையில் துதிபாடகர்கள் குரல் கேட்டு எழுந்திருக்காமல் இப்படி பறவைப் பேச்சைக் கேட்டு எழுந்திருக்க வேண்டி வந்ததே என்று வெறுத்துப் படுத்தாள் உள்ளிருக்கும் பெண். அர்த்த ராத்திரியில் பேய் மாதிரி வந்து எழுப்புவதைப் பார் என்று முணூமுணுத்தாள். பகவத் விஷயத்தில் புதியவள் அல்ல எனினும் புதுமை பாவித்துக் கிடக்கும் நீ தான் பேய் என்பது போல ‘பொழுது விடிந்தது தெரியாமல் தூங்கும் நீ பேய்ப் பெண் ‘ என்றார்கள். பொழுது விடிஞ்சுதா ? மணி என்ன என்று இன்னும் அவள் கேட்க ஆய்ப்பாடியில் ஆய்ச்சிகள் எல்லாரும் எழுந்து தயிர்கடைய ஆரம்பித்ததை அடுத்த அடையாளமாகச் சொன்னார்கள்.

கோகுலத்தில் தயிர் கடைவது இருபத்து நாலு மணி நேரமும் நடக்கும் விஷயம். அதைப் போய் பொழுது விடிந்த அடையாளமாகச் சொல்வதா ? என்றாள் உள்ளிருப்பவள்.

வெளியே இருப்பவர்கள் விளக்கினார்கள். இது எப்போதும் தயிர் கடையும் ஒலியில்லை. காலை நிகழ்ச்சிகளுடன் சம்பந்தப் பட்ட ஒலி. எப்படியெனில் தயிர் கடைந்து கடைந்து தீராமல் தயிர் கடைதலைப் பல நேரத்தில் குழந்தைகளிடமோ வயோதிகரிடமோ வேலைக் காரர்களிடமோ ஒப்படைத்து விடுவர் இல்லக் கிழத்தியர். பிறகு இறுதியில் தயிர்ப் பானை மத்து எல்லாம் சுடுநீர் வார்த்துக் கழுவி ஓரமாக காற்றுப்பட வைப்பார்கள்.காலையில் காய்ந்த

கலங்களையும் மத்தையும் எடுத்துக் கொண்டு இல்லத்தரசி தான் உட்காருவாள். தொழில் அவர்களுக்கு தயிர் பால் விற்பது என்பதால் விடியற்காலை ஆரம்பிப்பாள்.அப்படி ஆய்ச்சியே கடையும் தயிர்ச் சத்தம் இது. எப்படி அறிவோம் என்றால் பார், அச்சுத்தாலியும் ஆமைத்தாலியும் என காசும் முளையுமாய் நிறைய மங்கலப் பொருட்களைத் தாலியோடு அணிந்திரூக்கும் ஆய்ச்சிகள் அசைந்து அசைந்து கையை எடுத்து வாங்கி தயிரைக் கடைகிறபோது பொன் தாலிகள் குலுங்கி சப்தம் வருகிறதே கேட்கவில்லையா ? [காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து ]

இல்லத்தரசிகள் தண்ணீர் நிரம்புவதை நகர வாழ்க்கையில் தூக்கக் கலக்கத்தோடு துல்லியமாக அடையாளம் காண்பது எல்லாருக்கும் தெரியும் எப்போது டிரம்மில் நீர் விழ ஆரம்பிக்கிறது எப்போது முக்கால் ஆயிற்று எப்போது டியூப் பொத்தென விழப்போகிறது என்று அறிந்து வைத்திருப்பார்கள் படுத்தவாறே.

அப்படி இந்தப் பெண்கள் துல்லியமாக விடியற்காலை நிசப்தத்தில் ஒலிகளை அடையாளம் காண்கிறார்கள்.ஒலி மட்டுமில்லை. வாசனை கூட தெரிகிறது இவர்களுக்கு. வாச நறுங்குழல் ஆய்ச்சியர் பூ முடித்த கூந்தல் அவிழ்ந்துவிழ அதைக் கட்டிப் போட ஒரு நொடி விரயம் ஆயிற்று. இதோ இப்போது மீண்டும் கடைகிறார்கள்.முதலில் பானையை வைத்து மத்தை உள்ளே விட்டவர்கள் கண்ணனைப் பாடிக்கொண்டே தயிர் விட மறந்து விட்டார்கள்.மத்து போய் பானைச் சுவற்றில் மோதி டங் டங் என்கிறது.இப்போது தயிரை ஊற்றிவிட்டார்கள்.

களக் களக் என்கிறது தயிர்ச்சத்தம்.

வாசநறுங்குழல் ஆய்ச்சியர் ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ ஓசைப்படுத்தியது மத்து. தவறுணர்ந்து சரி செய்தபின் வந்தது தயிர்ச்சத்தம்.இவ்வளவு துல்லியமாகச் சொல்கிறோம். நம்ப மாட்டாயா ? நீயெல்லாம் ஒரு தலைவி. அந்தச் செருக்கு தான் எதுவும் உள்ளே போக மாட்டேன் என்கிறது. நாயகப் பெண்பிள்ளாய்! என்றார்கள்.

கோகுலத்தில் பெண்கள் கிருஷ்ணனின் அன்புக்கும் அழகுக்கும் பரவசப்பட்டு எப்போதும் கிருஷ்ணன் நினைவாகவே இருந்தார்கள். அவன் கண் முன்னால் நின்றாலும் அவனே மனதில். அவன் அருகில் இல்லாதபோதும் அவனே மனதில். கிருஷ்ணனின் நாமத்தைப் பாடிக்கொண்டே காலம் கழித்தார்கள்.ஒரு கோபிகை முரன் என்ற அசுரனை வென்ற கிருஷ்ணனின் கீர்த்தியைக் கேட்டதிலிருந்து பிரமை பிடித்தவள் போல உட்கார்ந்து விட்டாள். அவளை இயல்புக்குக் கொண்டுவர வென்று அவள் வீட்டுக் காரர்கள் அவள் கையில் தயிர் பாலைக் கொடுத்துக் கடைத்தெருவில் விற்று வரச் சொன்னார்கள். அப்போது அவள்

சந்தையில் நின்று ‘பானையில் கோவிந்தன் இருக்கு கோபாலன் இருக்கு கோவிந்தன் வாங்கலையோ தாமோதரன் வாங்கலையோ ‘ என்று கூவினாள்.அப்படி ஆய்ப் பாடி முழுதும் கிருஷ்ண நாமம் இறைந்து கிடந்தது. அதனால் வாச நறுங்குழல் ஆய்ச்சிகள் பாடிக் கொண்டே தயிர் கடையவும் அவர்கள் ஆபரணச்சத்தம் கடையப் படும் தயிரின் சத்தம் பாட்டை மீறி ஒலிக்கவும் தடையில்லையே!

[ஆதாரம்:

விக்ரேதுகாமாகில கோபகன்யா

முராரி பாதார்ச்சித சித்த வ்ருத்தி

தத்யாதிகம் மோஹ வசாதவோசத்

கோவிந்த தாமோதர மாதவேதி

கோவிந்த தாமோதர மாதவேதி

கோவிந்த தாமோதர மாதவேதி]

நாயகப்பெண்பிள்ளாய் என்றதும் உள்ளிருப்பவளுக்குச் சுருக்கென்றது.

வெளியில் இருப்பவர்கள் விடவில்லை.

நாராயணாவதாரமாக சுருண்ட முடியுடன் நமக்காகவே வந்திருக்கும் கண்ணனைப் பாடினோம் கேட்டுக் கொண்டே படுத்திருக்கலாமா என்று ஒரு அர்த்தம். கேசியை வதம் செய்த கண்ணன் நாராயணாவதாரம்.ஜனஸ்தானத்தில் பதினாலாயிரம் அரக்கர்களை ஒண்டியாக அடித்துப் போட்ட இராமனை சீதை யுத்தம் முடிந்ததும் ஓடிவந்து அணைத்துக் கொண்டாள். ஜனகன் வில் முறிவு என்ற நிபந்தனையை வைத்து இந்தப் புருஷன் அதை நிறைவேற்றியும் விட நான் கடமைக்கு மாலை போட்டேன். இன்று எனக்காக தனி ஆளாக வெற்றிபெற்றவனை இவன் அல்லவோ ஆண்பிள்ளை என்று நானாகப் போய் வலிய அணைத்துக் கொண்டேன். என்னையே அவனுக்கு மாலையாக்கினேன் என்றாள். அப்படி கேசியைக் கொன்ற கேசவனின் வரலாறு கேட்டு ஓடி வந்து எங்களையாவது அணைக்க வேண்டாமோ நீ ? என்பது இன்னொரு அர்த்தம்.

நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ தேசம் உடையாய் திற.

மரியாதைக் குரியவர்களை சரியானபடி விமரிசனமும் பண்ணி கொஞ்சம் புகழ்ச்சியும் வைத்து communication skills உபயோகப் படுத்தும் ஆண்டாள் இன்னொரு முறை தன் திறமையை ஊர்ஜிதம் செய்கிறாள். கணவன் மனைவியிடம் பேசாமலிருக்கும் நாட்களில் குழந்தையைச் சாக்கிட்டு பேச்சுக்கு இழுப்பது போல நாயகப் பெண்பிள்ளாய் என்று அழைத்து உள்ளிருப்பவளின் நிஷ்டூரத்தைச் சம்பாதித்த பெண்கள் கேசவன் வரலாறு கேட்டு

அதில் பரவசமாகி தலைவி ஓடி வர வேண்டுமென்று அதை ஆரம்பித்தார்கள் என்கிறார்கள் பூர்வாசிரியர்கள். கேசி என்கிற அசுரன் குதிரையின் உருவத்தோடு ஆயர்பாடியெங்கும் கனைத்துத் துரத்திக் கொண்டு கண்ணன் மேல் பாய அவன் தன் கையை நீட்டி குதிரையின்

வாயில்கொடுத்துத் தாக்கி அதன் பற்களை உதிர்த்து உதடைப் பிளந்து அதனுடலை இரு பிளவாகும்படி வகிர்ந்தான் என்பது புராணம்[பிஸ்தா தான்]

இரண்டாவது படியைத் தாண்டிற்று உயிர்.


8.கிழக்கு வெளுத்ததடி[கீழ் வானம் வெள்ளென்று]

ஆண்டாள் வெளிப்பாட்டில் என்னை மிகக் கவர்ந்தது அவளுடைய passion.த்வரைஎன்று ஒரு வார்த்தை சொல்வார்கள் வியாக்கியானக் காரர்கள். முடிவில்லாத ஒரு வேட்கையும் ஆவலும் முடிவைப் பற்றின ஒரு உறுதியும் அதை நோக்கின பயணத்தில் தனி ஆனந்தமும் சொட்டும் அவளுடைய வரிகளில்.

குறி பெருமாளாகத்தானிருக்க வேண்டுமென்றில்லை. எந்த லட்சியத்துக்கும் ஆண்டாள் காட்டுகிற வழிமுறைகள் பொருந்தும்.

பாவாய் என்றால் பரிபூரணமான பெண் என்று அர்த்தம்.ஸ்த்ரீத்வ பூர்த்தி என்று அதைச் சொல்வார்கள். பதுமை போன்ற செதுக்கு கொண்ட உருவமுடையவள் என்று இன்னொரு பொருள்.பாவாய் எழுந்திராய் என்று மிகச் சிறப்பித்து இந்தப் பெண்ணைக் கொண்டாடுகிறார்கள். அதுவும் கோதுகலமுடைய பாவாய் என்பது இன்னும் சிறப்பு. மிகவும்

enthusiastic என்பதாகக் கொள்ளலாம். துடுக்குடையவள் என்றாலும் தப்பில்லை.

ஆனால் பூர்வாசிரியர்கள் ஆசையுடையவள் என்று பொருள் சொல்கிறார்கள். கணவனிடம் பித்தாக இருக்கிறாள் ஒரு பெண் என்றால் அவனும் அவளிடம் அப்படியே ஆசையாக இருந்திருக்கவேண்டும்.கண்ணனும் இவளும் மிகவும் நெருங்கியவர்கள் என்று பெறப்படுகிறது.

இது பூதத்தாழ்வாரைக் குறிக்கிறது என்பதற்கு முத்திரை வைத்திருக்கிறாள்

ஆண்டாள்.

எப்படி தியாகராஜர் கீர்த்தனைகள் ‘தியாகராஜனுத ‘ என்று முடியுமோ எப்படி புரந்தர தாசர் கிருதிகளில் ‘புரந்தரவிட்டலன ‘ என்று வருமோ அப்படி பூதத்தாழ்வார் எடுத்தாண்ட வார்த்தைகளைக் கையாண்டு அவரை அடையாளம் காட்டுகிறாள். ‘தேவாதி தேவனெனப் பட்டவன் முன்னொருநாள் மாவாய்பிளந்த மகன் ‘ என்றிருக்கிறார் 2ம் திருவந்தாதி28ல் பூதத்தாழ்வார்.

வரிசையும் தப்பாமல் வருகிறது.முதலாழ்வாரில் மூன்றாமவர் பூதமல்லவா ? திருமாலின் ஆயுதம் கெளமோதிகி என்ற ‘கதை ‘ யின் அம்சமாகப் பிறந்தவர். அப்படியே பொய்கை,பாஞ்சசன்னியம் என்றும் பேய்,நந்தகம் என்கிற வாள் என்றும் அறிக. கீழ்ப்பாட்டில் கூப்பிடப்பட்ட பெண், கூட்டமெல்லாம் ஒரு ஹாரமென்றால் தான் அதன் பதக்கம்[நாயகக்கல்] போன்றவள்.

இந்தப் பாட்டில் கூப்பிடப் படுகிறவள் கூட்டமெல்லாம் ஒரு பாதி என்றால் தான் மறுபாதிக்குச் சமமானவள். அவளின்றி கூட்டம் நிறைவுறாது. அந்த அளவுக்கு கண்ண பிரானின் அந்தரங்க விருப்பத்துக்குரியவள் அவள்.

‘பாவாய்!எழுந்திரடி, கிழக்கு வெளுத்தது ‘ என்றார்கள்.

‘அதற்குள் எப்படி விடியும் ?திங்கள் திருமுகத்துச் சேயிழையரான நீங்கள் நெடும்போதாகக் கீழ்த்திசையையே நோக்கி நின்றமையாலே உங்கள் முகநிலா கீழ்த்திசையில் சென்று தட்டி உங்கள் முகப் பளபளப்பில் பிரதிபலித்துத் தோன்றுகையாலே கிழக்கு வெளுத்தது போல ஆகிவிட்டது. ‘

‘நாங்கள் யாரும் சந்த்ர முகியுமில்லை.நாங்கள் ஒன்றும் கிழக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கவுமில்லை ‘ வெட்கமும் கோபமுமாக வந்தது வெளியில் நின்றவர்களுக்கு.

உள்ளிருந்து பேசினவள் மிகைப் படுத்திப் பேசவில்லை.கோபிகள் விடியலை எதிர்பார்த்து ஏதேதோ செய்தவர்கள் தான்.

அப்படித்தான் ஒரு கோபியிடம் தாயார் தெரிவித்தாள். ‘காலை விடிந்தவுடன் திருவோண விரதம்,கண்ணனைக் கூப்பிட்டிருக்கிறேன்,வந்து விடுவான். ‘என்றாள்.

கோபி, ‘அம்மா,காலை எப்போ வரும் ? ‘ என்று கேட்டாள்.

‘இரவு போய் வெளிச்சம் வரவேண்டும் ‘ என்றாள் தாயார்.

‘இரவிலேயே நிறைய விளக்கு போட்டுவிட்டால் போயிற்று.காலையாகிவிடுமே ‘ என்றாள் கோபி.

‘அப்படியெல்லாம் காலையாகிவிடாது. அததற்கு நேரம் வரவேண்டும். இப்ப இந்தப் பானையில் பாலை ஊற்றிப் புரை குற்றி வைத்தேனில்லையா ? அது தயிராகும்போது காலையாகி விடும் ‘ என்றாள் தாய்.

அவ்வளவு தான். பானைப் பாலையும் வைத்த கண் வாங்காமல் இரவு முழுவதும்

பார்த்துக் கொண்டிருந்தாள் கோபி.

அப்படிப் பட்ட கோபிகள் கிழக்குப் பக்கம் வெறித்துக் கொண்டு நிற்கமாட்டாதவர்களா என்ன ?அது தான் சந்தேகம் உள்ளிருப்பவளுக்கு.

‘நாங்கள் பொழுது விடிந்ததாகப் பொய் சொல்லவில்லை. எருமைகளை பனிப்புல் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டிருக்கிறார்கள் பார் ‘என்றார்கள்

‘அதெல்லாம் எருமையில்லை. உங்கள் முக வெளிச்சத்தில் பிளந்து திரண்டு விலகின இருள் திட்டுகள்.எருமையுமில்லை சிறுவீடு பரந்து மேயவுமில்லை. ‘ என்றாள் உள்ளிருப்பவள்.

சிறுவீடு[விடுதல்-வீடு] என்றால் குறுகியகால மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடப்படும் ஒரு காலை நேர schedule. நாயை walk பண்ண அழைத்துச் செல்வது போல. பனிப்புல் மேய்ச்சல் கறவை எருமைகளுக்கு breakfast போல.இந்த எருமை பசுக்களின் பருத்திக் கொட்டை புண்ணாக்கு அடங்க breakfast, lunch ,dinner சகல விவரமும் அட்டவணையும் இந்தப் பெண்களுக்கு அத்துப்படி. இளம் பெண்கள் திரை நடிகர்களுக்கு தொலை பேசி வீட்டில் இருப்பவர் யாரிடாவது ‘ஹீரோ குளிக்கிறாரா ?பல்லு தேய்க்கிறாரா ? ‘என்று கேட்டுக் கொண்டிருப்பார்கள்.ஏதாவது புது விவரம் கிடைத்துவிட்டால் புளகாங்கிதம் அடைவார்கள். அதே கதை தான் இங்கு.மாதர் எருமைகளை follow பண்ணுவது கண்ணனுக்காக. கண்ணன் அதுகள் பின்னால் அல்லவா திரிவான் ? எருமையும் கண்ணனும் வெளியே போனபின் யாரைத் தேடி நாம் போவதாம் ?

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தன காண் மிக்குள்ளபிள்ளைகளும்

போவான்போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்

கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய

பாவாய் எழுந்திராய் பாடிப்பறைகொண்டு

மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச்சென்று நாம் சேவித்தால்

ஆவாவென்றாராய்ந்து அருளேலோரெம்பாவாய்.[திருப்-8]

எருமை விஷயம் உள்ளிருப்பவளையும் பாதித்துவிட்டது கொஞ்சம். ‘சரி சரி,பஞ்சலட்சம் பெண்களில் ஆயிரம் பேர் தான் நிற்கிறீர்கள். மீதிப்பேர் வரும் மட்டும் கொஞ்சம் உறங்கலாமா நான் ? ‘ என்று கேட்டாள். கதறியே விட்டார்கள் பெண்கள். ‘அவ்வளவு பேரும் வந்தாயிற்று.இங்கே நிற்கிறவர்கள் தவிர மீதிப் பேரெல்லாம் போய்க் கொண்டே யிருந்தார்கள். நாங்கள் தாம் அவர்களை அதிக தூரம் பொய் விடாதபடிக்கு ஓரிடத்தில்

நிறுத்தி வந்திருக்கிறோம். கூட்டத்தில் நீ இல்லாததைப் பார்த்து உன்னை அழைத்துப் போகவென்று நிற்கிறோம். எழுந்து வா,உன் முழுமையான நிறை நம் கூட்டத்துக்குப் பெருமை சேர்க்கக் கூடியது. ‘

என்றார்கள்.

நாம் போகப் போவது பெரிய இடம். அயர்வறு அமரர்களதிபதியின் இடம். ‘ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம் ‘ என்றபடி. அடுத்தபடி யாராவது இருந்தால் நம் முயற்சி பலிக்காமல் போகுமானாலும் இரண்டாவது இடத்தை அடையலாம். ஆனால் அது சாத்தியப் படாத அளவில் அவன் ஒற்றை supreme.தேவாதி தேவன். ‘யாங்கடவுளென்றிருக்கும் எவ்வுலகிற் கடவுளர்க்கும் ஆங்கடவுள் நீ ‘ என்றபடி.அவன் கேசியை வதம் செய்ததும் மல்லரை ஜெயித்ததும் சாகச வரலாறுகள். அவனைப் பாடிக் கொண்டு போனோமானால்

நம்மை வழி கொண்டு முகமன் சொல்லி ஆகா ஆகா நான் வரும்முன் நீங்கள் வந்தீர்களே என்று குறைப் பட்டு நமக்கு வேண்டுவன செய்வான் என்றார்கள்.

[கிருஷ்ணனும் பலராமனும் கம்சன் சபை செல்லுமும் சாணூரன் முஷ்டிகன் என்ற மல்லரை

எதிர்த்துப் போரிட்டு ஜெயிக்க வேண்டி வந்தது. துரியோதனன் சபையில் பொய்யாசனம் போட்டு ஏமாற்றி பிலவறைக்குள் கண்ணனைச் செலுத்திய போதும் மல்லர்களிடம் மோத வேண்டிவந்தது.-அவையே மல்லரை மாட்டிய வரலாறு. மாவாய் பிளந்தது-ஏற்கனவே சொல்லப் பட்ட கேசி வதம்]

குகன் பத்தடி நடந்து தன்னை நோக்கி வந்ததற்கு நொந்தவன் இராமன்.அவனுக்கு ‘எம்பி உன் தம்பி மங்கை கொழுந்தி ‘ என்றும் ‘நால்வரோடு ஐவரானோம் ‘என்றும் அன்பு செய்தவன் இராமன்.

ஒரு பொழுது பழக்கத்திலே ‘ தோழமை என்றவர் சொல்லிய சொல் ஒரு சொல்லன்றோ! ஏழமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ ‘ என்று கதற விட்டவன் இராமன். அது போல நமக்கும் ‘ஆவாவென்றாராய்ந்து அருள் ‘ வான் என்றார்கள்.

‘அஸ்மத் ஸர்வ குருப்யோ நம: ‘ என்றபடி குரு பரம்பரையின் மூன்றாவது குருவைப்

பணிந்து உடன் அழைத்துக் கொண்டதாயிற்று.


malti74@yahoo.com

Series Navigation