உன் காதல் புதிய நோய்!

This entry is part [part not set] of 21 in the series 20020224_Issue

கவிமாமணி வேதம்


கண்மணீ! உன்றன் கருவிழி தைத்தது,-ஒரு
.. ‘காதலை ‘ ஆழமாய் நெஞ்சில் புதைத்தது!
மண்ணில்என் கால்களும் பாவத் தவித்தது!-என்ன
..மாயமடா என்னுடலில் நீயும் விதைத்தது ?

வானிலுன் பிம்பமே தோன்றி மறையுதே!-இந்த
..மண்ணின் பொருளெலாம் பார்த்தால் எரியுதே!
மான்என நின்றாய்! திமிரும் கரையுதே!-உன்
.. வார்த்தையே நெஞ்சில் இனிப்பாய் நிறையுதே!

கைதந்த தீண்டலால் மேனி அதிர்ந்தது;-உன்
..காதல் கடிதமோ தேனில் நனைந்தது!
பெய்தபல சொல்லில் இளமை விளைந்தது!-உன்
..பேனாவுக் குள்ளுமா சொர்க்கம் நுழைந்தது ?

புறங்கையைப் பற்றிஓர் முத்தம் பதித்தாய்!-என்
..பூரா உடலிலும் மின்னல் உதிர்த்தாய்!
நுரையீரல் உள்ளேஉன் பூமணம் சேர்த்தாய்!-புது
..நோய்தனை ஏனடா நெஞ்சில் குவித்தாய் ?

Series Navigation

(கவிமாமணி வேதம்)

(கவிமாமணி வேதம்)