உதிரும் இலைக்கு பதில் பயனளிக்காது

This entry is part [part not set] of 36 in the series 20090611_Issue

ஹமீது ஜாஃபர்


இஸ்லாமிய ஆய்வும் எனது இலையுதிர் காலங்களும் என்ற பெயரில் புலம்பல்களே நிறைந்திருக்கின்றனயொழிய உருப்படியாக எதுவுமில்லை. கேள்வியை விட்டுவிட்டு எங்கெங்கேயோ சுற்றிக்கொண்டிருக்கிறார். கேள்விக்கான பதில் எங்கேயும் காணமுடியவில்லை. செய்தி தெரிந்தால்தானே எழுதமுடியும்? தம்மை அறிவாளியாகப் பெரிதுபடுத்தி எதையெதையோ உளறிவைத்திருக்கிறார். இது வழக்கமான ஒன்றுதான்.

ரவீந்தரனார் தாகூரிடம் ஒருவர் வந்து ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தாராம். பேசி முடிந்ததும் உங்களுக்கு எந்த ஊர் என்று தாகூர் கேட்டபோது நானும் இதே ஊர்தான் வங்காளிதான் என்றாராம். அப்படியானால் தாய்மொழியிலேயே பேசலாமே என்றபடி சிறிது நேரம் வங்கமொழியில் பேசினார்களாம். முடிந்ததும் உங்களுக்கு ஆங்கிலமும் தெரியவில்லை தாய்மொழியும் தெரியவில்லை எதாவது ஒன்றை நன்றாகக் கற்றுக்கொள்ளுங்கள் என்று தாகூர் அறிவுரைக் கூறினாராம்.

அதுபோல் இருக்கிறது நேசக்குமார் நிலையும். இவருக்கு இஸ்லாமும் தெரியவில்லை தானிருக்கும் இந்து மதமும் தெரியவில்லை. இந்த லட்சனத்தில் ஐந்து வருட ஆராய்ச்சி வேறு. விழலுக்கு இறைத்த நீர்.

“பட்டினத்தாரையும் கரூராரையும் காட்டுங்களேன்!” என்று நான் சொன்னது அவர்களது உருவத்தையும் Bio-data வையும் அல்ல. அவர்கள் விட்டுச்சென்ற கருத்தை. “கடை வைத்தேன் வாங்குவாரில்லை, கடை எடுத்தேன் கேட்பாரில்லை” என்று பட்டினத்தார் சொல்லியிருக்கிறாரல்லவா! அந்த “கடை” என்ன என்பதை விளக்குங்கள்.

எங்கே விளக்கமுடியும்? கடவுள்; கடவுள் தன்மை தெரிந்தால்தானே! தன்னையே அறியாதவருக்கு கடவுளை எங்கே அறியமுடியும்?

“காலம், எல்லை, பரிமாணம், பரிணாமம், அறிவு, சிந்தனை, இவைகளுக்கு அப்பாற்பட்ட ஓர் உள்ளமை எதுவோ அது கடவுள். வேறு வார்த்தையில் சொன்னால் படைக்கப்பட்ட எந்த ஒன்றினாலும் ஒப்பிடவோ, கட்டுப்படுத்தவோ முடியாதது எதுவோ அதுவே இறைவன்”. அத்தகைய பரிசுத்தமான ஒன்றை ஓர் உருவத்தில் வைத்தால் அது எப்படி கடவுளாகும்? “பிண்ட லட்சனத்தை அண்டத்தில் வைத்து உண்மையை மறைத்துவிட்டார்கள்” என்கிறார் வள்ளலார்.

ஒரு பாறையை செதுக்கி ஒரு குறிப்பிட்ட உருவத்தைக் கொடுத்து; அல்லது ஒரு காகிதத்தில் ஓர் உருவத்தை வரைந்து இதுதான் கடவுள் என்றால் செதுக்கப்படுவதற்கு முன் பாறையும் வரைவதற்கு முன் வெற்று காகிதமும் என்னவாக இருந்தன? உருவாவதற்கு முன் கடவுளா? இல்லை உருவானபின் கடவுளா? அப்படியானால் அவற்றை உருவாக்கிய சிற்பியும் ஓவியனும் யார்? கடவுளைக்காட்டிலும் உயர்ந்தவர்களா? அவைகளுக்கு சக்தி இருக்கிறது என்றால் உருவாக்கிய கலைஞன் அதைவிட சக்தி வாய்ந்தவனாகத்தான் இருக்கமுடியும்?

ஒரு திரைப் படத்தில் காட்டுவார்கள்: மைல்கல்லின்மீது அமர்ந்திருக்கும் விவேக்கிடம் இது எங்கள் குலதெய்வம் இதன்மீதா அமர்ந்திருக்கிறாய் என்று சண்டைக்கு வருவார்கள். அடேய்! இது மைல்கல்லுடா, ஓவ்வொரு மைலுக்கும் ஒரு கல் இருக்குமடா, வெள்ளைக்காரன் நட்டிவச்சதுடா என்பார். அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் அடிக்கவருவார்கள். அப்போது சொல்வார் “ஆமாங்கடா ஓவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒரு குலதெய்வம் இருக்கு, இன்னும் ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களைத் திருத்தமுடியாதுடா?” என்று. இதுபோன்று ஆயிரமாயிரம் வார்த்தைகள், வசனங்கள் பெரியார், M.R.ராதா, அண்ணா சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். அவையெல்லாம் SATURATED MIND களுக்கு ஏறாது.

அப்படி இருக்கும்போது சித்தமும், சுத்த(சன்மார்க்க)மும் பயனளிக்குமா?

குறிப்பு: கஃபாவின் உள்தோற்றத்தைப் பார்க்கவேண்டுமென்றால் http://www.ezsoftech.com/hajj/hajj_article5.asp என்ற இணயத்தில் பார்க்கவும். இல்லாவிட்டால் கூகுலைத் தட்டி kaaba picturs ஐ கிளிக் செய்து தேடிக்கொள்ளவும்

இவண்
ஹமீது ஜாஃபர்.

maricar@eim.ae

Series Navigation

author

ஹமீது ஜாஃபர்

ஹமீது ஜாஃபர்

Similar Posts