உணர்வும் உப்பும்

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

தொ பரமசிவம்


‘உப்புப் பெறாத வேலை ‘ என்று ஒன்றுக்கும் பயனற்றதைக் குறிப்பிடு வார்கள். (உணர்ச்சியற்றவனை உப்புப் போட்டுத் தான் சாப்பிடு கிறாயா ? என்றும் கேட்பார்கள்.) ஆனால் மனிதகுல வரலாற்றில் உப்புக்குத் தனி இடம் உண்டு. மனிதனின் நாகரிக வளர்ச்சியில் நெருப்பை உருவாக்கக் கற்றதுபோல உப்பினைப் பயன்படுத்தக் கற்றதும் முக்கியத்துவமுடையதுதான். அப்போதுதான் வேதியியல் என்ற விஞ்ஞானம் தொடக்கம் பெறுகிறது.

உப்பு என்ற தமிழ்ச் சொல்லுக்குச் ‘சுவை ‘ என்பதே முதற்பொருள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என்று சுவைகளெல்லாம் உப்பு என்ற சொல்லை அடியாகக் கொண்டே பிறந்தவை. சமையலுக்குப் பயன் படுத்தப்படும் உப்பிற்கு ‘வெளிளுப்பு ‘ என்று பெயர். பழந்தமிழ் நாட்டுப் பொருளாதாரத்திலும் தமிழ்ப் பண்பாட்டிலும் உப்புக்குத் தனி இடம் உண்டு. பழந்தமிழர்களால் சுவையின் சின்னமாகவும் வளத்தின் சின்னமாகவும் உப்பு கருதப்பட்டது. தன் உருவம் தெரியா மல் பிற பொருள்களோடு கலந்து பயன்தருவது ‘வெளிளுப்பு ‘.

செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பாவும்) உப்பும் (அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தினால்தான் ‘சம்பளம் ‘ என்ற சொல் பிறந்தது என்பர். ஆங்கிலத்திலும் சூஹஙீஹசுட் என்ற சொல் சூஹஙீஞ் என்பதன் அடியாகப் பிறந்தது என்றும் கூறுவர்.

இன்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான சாதியாரிடத்தில் புது மணமகள் தன் கணவன் வீட்டிற்குள் நுழையும்போது ஒரு சிறு ஓலைக்கூடையில் உப்பை எடுத்துக்கொண்டே நுழைகிறாள். அது போலவே புதுமனை புகுவிழாக்களில் உறவினர்கள் அரிசியினையும் உப்பினையும் அன்பளிப்பாகக் கொண்டு வருவர். மதுரை மாவட்டக் கள்ளர்களில் ஒரு பிரிவினர் திருமணத்தை உறுதி செய்யும்போது மணமகன் வீட்டில் இருந்து அரிசியும் உப்பும் கொண்டு செல்கின்றனர்.

ஒருவர் இறந்த எட்டாவது அல்லது பத்தாவது நாளில் இறந் தார்க்குப் படைக்கும் உணவுகளை உப்பில்லாமல் செய்யும் வழக்கம் இன்னமும் பல சாதியாரிடத்து இருக்கின்றது. உப்பு உறவின் தொடர்ச்சிக்கு உள்ள ஒரு குறியீடு ஆகும். இறந்தாரோடு உள்ள தொடர்பை அறுத்துக்கொள்ளவே இவ்வாறு செய்கிறார்கள். உப்பு நன்றி உணர்ச்சியின் தோற்றுவாய் ஆகவும் கருதப்படுகிறது. ‘தின்ற உப்பிற்குத் துரோகம் செய்வது ‘ என்பது நன்றி மறந்ததனைக் காட்டும் வழக்குமொழி.

நன்றி கெட்ட விதுரா _ சிறிதும்

நாணமற்ற விதுரா

தின்ற உப்பினுக்கே _ நாசம்

தேடுகின்ற விதுரா

என்று பாஞ்சாலி சபதத்தில் பாரதி இந்த நம்பிக்கையைப் பதிவு செய்கிறான்.

பழந்தமிழ்நாட்டின் மிகப் பெரிய சந்தைக்குரிய உற்பத்திப் பொரு ளாக உப்பு விளங்கியிருக்கிறது. கடற்கரையில் விளையும் உப்பினை வண்டிகளில் ஏற்றிச் செல்லும் ‘உமணர் ‘ என்ற வணிகர்களைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. கிறித்து வுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த அழகர் மலைத் தமிழ்க் கல்வெட்டு உப்பு வணிகன் ஒருவனையும் குறிக்கிறது. உப்பு விளையும் களத்திற்கு ‘அளம் ‘ என்றும் பெயர். பெரிய உப்பளங்களுக்கு அரசர் களின் பட்டப்பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள். அவை பேரளம், கோவளம் (கோ + அளம்) என்று வழங்கப்பட்டுள்ளன. சோழ, பாண்டிய அரசர்கள் உப்புத் தொழிலை அரசின் கட்டுக்குள்ளேயே வைத்திருந்திருக்கிறார்கள். ‘ஜடாவர்மன் திரிபுவனச் சக்ரவர்த்தி சுந்தர பாண்டியன் காலத்தில் (கி. பி. 1268) அதும்பூர் என்னும் ஜனனாதப் பேரளம், செல்லூர் என்னும் அநபாய சோழப் பேரளம், இடையன் குழி என்னும் இராஜேந்திர சோழப் பேரளம், கூடலூர் என்னும் ராஜநாராயணப் பேரளம், திருநல்லூர் என்னும் கிடாரம் கொண்ட சோழப் பேரளம், வெண்ணாரிகன் சுழி என்னும் ஏழிசை மோகன் பேரளம், சூரைக் காமு என்னும் ஆளப்பிறந்தான் பேரளம் ஆகியவற்றிலிருந்து உப்பு விற்கையில் ஒரு உறை உப்புக்கு ஒரு உழக்கு உப்பு என்னும் விகிதத்தில் சேகரித்துத் திருவதிகை திரு வீரட்டானேஸ்வரர் கோயில் திருவமுதுபடிக்கும் கோயில் சீரமைப் பிற்கும் நிவந்தமாக அளிக்கப்பட்டிருக்கின்றன ‘ என்று தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் எடுத்துக்காட்டுகிறார்.

போக்குவரத்து வசதிகள் பெருகாத காலத்தில் உப்பின் விலையும் அதிகமாகவே இருந்திருக்கிறது. ‘நெல்லின் நேரே வெண்கல் உப்பு ‘ என்று பெண் ஒருத்தி விலை கூறி உப்பு விற்பதனைச் சங்க இலக் கியத்தில் பார்க்கிறோம். சோழர் காலத்திலும் நெல்லின் விலையும் உப்பின் விலையும் அருகருகு இருந்தன என்று கல்வெட்டுக்களில் இருந்து தெரிகிறது. இன்றைய பொருளாதாரக் கணக்கில் உப்பின் விலை இப்போது உள்ளதைவிட ஐந்து மடங்கு அதிகமாக இருந்த தாகக் கொள்ளலாம். உப்பு உலோகத்தை அரிக்கும் தன்மை கொண்ட தனால் ‘மரவை ‘ எனப்படும் மரச்சட்டியிலும் ‘கல்மரவை ‘ எனப்படும் மாக்கல் சட்டியிலும் வீடுகளில் உப்பு இட்டு வைக்கப்பட்டிருக்கிறது. இப்பாத்திரங்கள் இப்போது பண்பாட்டு எச்சங்களாக விளங்குகின்றன.

தமிழ்நாட்டின் சமூகப் படிநிலைகளை அடையாளம் காட்டும் பொருள்களில் ஒன்றாகவும் உப்பு விளங்கியுள்ளது. ஆக்கிய சோற் றோடு உப்பைச் சேர்த்து உண்பது ஒரு வழக்கமாகும். சாதிய ஒடுக்கு முறை கடுமையாக இருந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட சாதியார், சோறு உலையில் இருக்கும்போதே அதில் உப்பையிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இலையில் தனியாக உப்பிட்டு உண்ணும் வழக்கம் மேட்டிமையின் சின்னமாகக் கருதப்பட்டது போலும்.

உப்பு வரிக்கு எதிராகக் காந்தியடிகள் சட்டமறுப்பைத் தொடங்கிய காரணம், உப்பு அனைத்து மக்களையும் (சாதி, சமயம், வர்க்கம் தாண்டி) பாதிக்கக்கூடியது என்பதுதான். உப்பிற்கு இருக்கும் பண் பாட்டு முக்கியத்துவத்தையும் குறியீட்டுச் சிறப்பினையும் சுட்டி, ‘உப்புக்கு வரிபோடும் அரசும் ஓர் அரசா ‘ என்று கேள்வி எழுப்பி ஆங்கிலேய அரசு ஆளத்தகுதியற்றது என அதன் தகுதிப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியது தேசிய இயக்கம்.

காந்தியடிகளின் உப்புச் சத்தியாக்கிரகமும், தண்டி யாத்திரையும் இந்திய அரசியல் வரலாற்றின் அழுத்தமான பக்கங்களாகும். தண்டி யாத்திரை நடந்த குசராத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு நிறுவனமான ‘கார்கில் ‘ கம்பெனிக்கு மைய அரசு உப்புத் தயாரிக்க அனுமதி வழங்கியது. குசராத் மக்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில் இந்த அனுமதியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்ததும், இறுதியில் ‘கார்கில் ‘ நிறுவனம் பின்வாங்கியதும் இந்திய வரலாற்றின் வெப்பம் மிகுந்த பக்கங்களாகும்.

‘பண்பாட்டு அசைவுகள் ‘ நூலிலிருந்து சில கட்டுரைகள்

பண்பாட்டு அசைவுகள்

ஆசிரியர் : தொ. பரமசிவன்

பக்கம் : 200; விலை ரூ.80

காலச்சுவடு பதிப்பகம்

669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629 001

தமிழ்நாடு, இந்தியா

தொலைபேசி: 91-4652-222525, 223159

தொலைநகல் : 91-4652-231160

இ-மெயில்: kalachuvadu@vsnl.com

Series Navigation

author

தொ பரமசிவம்

தொ பரமசிவம்

Similar Posts