ஈஸ்ரர் தினம்: அதன் வரலாறும் முக்கியத்துவமும்

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

சந்திரலேகா வாமதேவா


கிறீஸ்தவர்களுக்கு இது புனித வாரம். எனவே ஈஸ்ரரின் வரலாறு பற்றியும் கிறீஸ்தவர்கள் மத்தியில் அது எவ்வாறு அனுஷ்டிக்கப்படுகிறது, இன்று வேறு வேறு நாடுகளில் எவ்வாறு அது கொண்டாடப்படுகிறது என்பது பற்றியும் சிறிது பார்ப்போம். ஈஸ்ரர் வசந்த விழாக்கள் நடைபெறும் காலத்தில் வருகிறது. கிறீஸ்தவ நாடுகளில் தேவ மகனான யேசுநாதர் உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் வகையில் ஈஸ்ரர் சமய விடுமுறையாகும். ஆனால் ஈஸ்ரர் காலத்தில் பின்பற்றப்படும் சில வழக்கங்கள் கிறீஸ்தவத்திற்கு முந்திய சமயத்தைச் சார்ந்தவையாகும். எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கில அறிஞரான St. Bede என்பவர் ஈஸ்ரர் என்ற சொல் ஸ்கந்திநேவிய ஓஸ்றா (Ostra) என்ற சொல்லில் இருந்தோ, அல்லது இளவேனில் கால சூரியன் நில நடுக்கோட்டுக்கு எதிராக வரும் காலத்தில், வஸந்தத்தையும் வளத்தையும் குறிக்கும் வகையில் விழா எடுக்கப்பட்ட பெண் தெய்வங்கள் இருவரைக் குறிக்கும் Teutonic சொற்களான Ostern அல்லது Eostre ஆகிய சொற்களிலிருந்தோ வந்திருக்கலாம் என்று கூறுவதை பொதுவாக அறிஞர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.

கிபி 325 ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஏறத்தாழச் சரியாகிருக்கக்கூடிய பெளர்ணமி தினங்களை வானவியலாளர்கள் கிறீஸ்தவ தேவாலயத்திற்காக அமைத்துக் கொடுத்தனர். அவற்றை தேவாலயம் தொடர்பான பெளர்ணமி (Ecclesiastical Full Moon) என்று அழைத்தனர். மார்ச் 21ம் தேதி அதாவது சூரியன் நிலக்கோட்டுக்கு எதிராக வரும் நாளில், அல்லது அதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் வரும் பெளர்ணமியின் அதாவது பாஸ்கல் (paschal) பெளர்ணமியின் பின் வரும் ஞாயிறில் ஈஸ்ரர் கொண்டாடப்படுகிறது. அதனால் மார்ச் 22ம் தேதிக்கும் ஏப்பிரில் 25ம் தேதிக்கும் இடையில் ஈஸ்ரர் வரலாம். இஸ்ரேலுக்கு அருகில் மரபுகள் ஆழமாக வேரூன்றிய இடங்களில் உள்ள கிறீஸ்தவ தேவாலயங்கள் ஈஸ்ரரை யூதர்களின் Passover க்கு அமைவாகவே கொண்டாடுகின்றன.

ஈஸ்ரர் 46 நாட்கள் கொண்ட நோன்பு (Lent) காலத்தின் முடிவில் வருகிறது. அக்காலத்தினுள் வரும் 6 ஞாயிற்றுக்கிழமைகளை இந்த நோன்பு காலத்தில் சேர்ப்பது வழக்கமல்ல. இந்த ஞாயிறு தினங்கள் ஈஸ்ரர் ஞாயிறை நினைவு கூரும் விதமாகவும் அதனைக் கெளரவிக்கும் முகமாகவும் நோன்பு காலத்திலிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இக்காலம் உய்தி தேடுகிற காலமாகும். அத்துடன் ஈஸ்ரருக்கு தயாராகிற காலமுமாகும். எனவே நோன்பு காலம் 40 நாட்கள் மட்டுமே. ஜேசுநாதர் அனுபவித்த துன்பத்தையும் வதைகளையும் நினைவுகூரும் விதமாக இந்தக் காலத்தில் கிறீஸ்தவர்களால் நோன்பு அனுசரிக்கப்படுகிறது. ஜேசுநாதரின் 40 நாள் நோன்பை நினைவு கூரும் விதமாக ஆரம்ப காலத்தில் கடும் நோன்பு நோற்கப்பட்டது. ஈஸ்ரருக்கு முந்திய தினம் ஞானஸ்நானம் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் sacrament ஐ பெறுவதற்கு அவர்கள் தம்மைத் தயார்ப்படுத்தும் காலமாக ஆரம்பகால தேவாலயங்கள் இந்த 40 நாள் நோன்பைக் கருதின. காலப் போக்கில் இந்தக் காலத்துக்குரிய முக்கியத்துவம் ஞானஸ்நானத்திற்கு தயார்ப்படுத்துவதைக் குறிப்பதிலிருந்து குற்றங்களுக்கு கழுவாய் தேடும் அம்சங்களைக் குறிப்பதாக மாற்றப்பட்டது. பெரும் பாபங்கள் செய்த குற்றவுணர்வு உள்ளவர்கள் அவற்றிலிருந்து கழுவாய் தேடும் முயற்சியாக வெளiப்படையாக கடும் நோன்பினை அனுஷ்டித்தனர். நோன்பின் முடிவில் அவர்கள் பெரிய சடங்கின் மூலம்f மீண்டும் தேவாலயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.

யேசு கிறீஸ்த்து ஜெருசலசத்துக்குச் சென்றபோது மக்கள் கூட்டம் குருத்தோலைகளை ஏந்திச் சென்று அவரது பாதங்களில் வைத்து வரவேற்றதை நினைவுகூரும் விதமாக நோன்பு காலத்தின் கடைசி வாரம் குருத்தோலை ஞாயிறுடன் ஆரம்பமாகிறது. ஸ்பானியாவின் வடமேற்கு பகுதியைச் சேர்ந்த கிறீஸ்தவ பெண் துறவியான Etheria வின் பிரயாண ஏட்டில் முதலாவது குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. அவர் அந்த நாள் பஸ்கல் கிழமையின் ஆரம்பம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கிபி நான்காம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அவர் ஜெருசலேத்திற்குச் சென்றார். மேற்குலக தேவாலயங்களில் ஸ்பானியாவிலேயே முதலில் இந்த குருத்தோலை ஊர்வலம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அது ஏறக்குறைய கிபி ஐந்தாம் நூற்றாண்டிலே நடைபெற்றிருக்கலாம். ரோமாபுரியில் கிபி 12ம் நூற்றாண்டிற்கு முன்னர் இந்த ஊர்வலம் நடைபெறவில்லை. அமெரிக்காவில் Philadelphia வில் உள்ள Messiah Lutheran தேவாலயம் இந்த பண்டைய நடைமுறையை மீள ஆரம்பித்தது. Episcopal தேவாலயங்களில் ஆராதனையின் முடிவில் அனைவருக்கும் குருத்தோலைகள் வழங்கப்பட்டன. இன்று இந்த வழக்கம் மேற்குலகில் பெருமளவில் மறைந்து விட்டது. தேவாலயத்தில் அனைவரும் கூடுவதே இன்றைய நடைமுறையாக உள்ளது.

இந்த புனித வாரத்தில் திங்கட்கிழமை அன்று அதிக முக்கிய விஷயங்கள் நடைபெறுவதில்லை. ஜெருசலத்தில் உள்ள புனித தேவாலயம் இந்த நாளிலேயே தூய்மை செய்யப்பட்டது என்று நம்பப்படுகிறது. அது செலாவணிகரின் (moneychangers) மேசைகளை ஜேசுநாதர் கவிழ்த்து இது எனது பிரார்த்தனைகுரிய இடம் என்று எழுதப்பட்டுள்ளது. நீங்கள் இதனைக் கள்வர்களின் குகை ஆக்குகிறீர்கள் (Matthew- 21:13) என்று கூறியபோது நடைபெற்றது. யேசுநாதருக்கும் Pharisees க்கும் இடையில் இடம் பெற்றதாகக் கருதப்படும் சம்பவம் நடைபெற்றது புனித வாரத்தின் செய்வாய்க்கிழமையன்று. தேவாலயத்தில் உள்ளவர்கள் நாஸ்திக குறிப்பு ஒன்றைச் செய்வதற்கு ஜேசுநாதரை ஆளாக்க முயன்ற வேளையில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த நாள் இன்னொரு வகையிலும் முக்கியமானது. ஜெருசலத்தின் அழிவு பற்றியும் இறுதி நாள் பற்றிய சமிக்ஞைகள் தெரிவது பற்றியும் ஒலிவ்ஸ் குன்றில் ஜேசுநாதர் தனது சீடர்களுக்கு இந்த நாளிலேயே கூறினார்.

விபூதிப் புதன்கிழமையன்று புனித வாரத்தின் உணர்ச்சி வேகம் மேலும் அதிகரிக்கிறது. இதனை ஒற்றர் புதன் என்றும் அழைப்பதுண்டு. அன்றே ஜேசுநாதரை எங்கே இலகுவாகப் பிடிக்கலாம் என்று பிரதம குருமாருக்கு ஜூதாஸ் காட்ட ஒப்புக்கொண்ட துரோகம் நடைபெற்ற நாள். புனித வாரத்தின் வியாழக்கிழமை இறுதி இராப்போசனத்துடன் தொடர்பான நாள். இது புனித வியாழன் என்றும் கூறப்படுகிறது. இது ஜேசுநாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முந்திய நாள். அன்று அவர் தனது சீடர்களுடன் இறுதி உணவை அருந்தினார்.

இந்த புனித வாரத்தின் வெள்ளிக்கிழமை நல்ல வெள்ளி என்று அழைக்கப்படுகிறது. இந்நாளிலேயே ஜேசுநாதர் ஜெருசலேம் சுவர்களுக்கு வெளியே கல்வாரிக் குன்றின் உச்சியில் சிலுவையில் அறையப்பட்டார். கிறீஸ்தவ நம்பிக்கையின் படி ஜேசுநாதர் மனிதர்களின் பாபத்திற்காக தன்னை தியாகம் செய்து சிலுவையில் மரித்தார். ஜேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் விதமாக இந்த நாள் துக்க நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. மரித்ததன் மூலம் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையில் ஒரு தொடர்பை, ஒரு புரிந்துணர்வை ஜேசுகிறீஸ்து ஏற்படுத்தினார் என்று கிறீஸ்தவர்கள் நம்புகின்றனர். சிலுவையில் அறையப்பட்ட கிறீஸ்துவின் உருவம் அல்லது சிலுவை கிறீஸ்தவர்களின் நம்பிக்கைக்குரிய முக்கிய சின்னமாக கருதப்படுகிறது. ரோமன் கத்தோலிக்கர்கள் கிறீஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது அனுபவித்த நோவையும் துன்பத்தையும் நினைவு கூரும் வகையில் இந்த நாளை விரதமிருந்து சுய காட்டுப்பாட்டுடன் கழிப்பார்கள். 4ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்த வெள்ளி தனியான நாளாக அனுஸ்டிக்கப்படுகிறது. அதற்கு முன்னர் சிலுவையில் மரித்தமையும் திருமீட்டெழுச்சியும் ஒன்றாகக் கொண்டாடப்பட்டது.

புனித வெள்ளியைத் தொடர்வது புனித சனிக்கிழமை. இது Anglican தேவாலயங்களால் ஈஸ்ரருக்கு முந்திய தினம் என அழைக்கப்பட்டு ஞானஸ்நானம் செய்வதற்குரிய மரபார்ந்த காலமாகக் கருதப்படுகிறது. ரோமன் கத்தோலிக்க தேவாலயங்கள் ஆசிர்வாதம், மிக நீண்ட பாஸ்கல் மெழுகுவர்த்தியைக் கொழுத்துதல் ஆகியவற்றுடன் அனுஷ்டிக்கிறார்கள். Altar இன் gospel பக்கத்தில் நீண்ட மெழுகுவர்த்தி நிறுத்தப்பட்டு ஆசிர்வாதம் நடைபெறும் வேளையில், கிறீஸ்துவின் உடலில் ஏற்பட்ட ஐந்து காயங்களைக் குறிக்கும் வகையிலும் பின் அவரது உடலில் பூசப்பட்ட தைலங்களைக் குறிக்கும் வகையிலும் அதில் ஐந்து வகை வாசனைத் திரவியங்கள் செருகப்படும். அந்த மெழுகுவர்த்தி கொழுத்தப்பட்டு 40 நாட்களின் இறுதி நாளான அன்று கிறீஸ்து பின்னர் மீட்டெழுந்தமையைக் குறிக்கும் காலம் வரை எரிக்கப்படும். ஈஸ்ரர் நாளான ஞாயிற்றுக்கிழமை கிறீஸ்து திருமீட்டெழுச்சியடைந்து விண் புகுந்ததைக் குறிக்கிறது. இது புனித வாரத்தின் இறுதி நாள். இந்த புனித வாரம் கிறீஸ்து திருமீட்டெழுச்சி அடையும் வரையுள்ள அவரது வாழ்வுடன் தொடர்புபட்டது. ஈஸ்ரர் அன்று கிறீஸ்து நாதர் தனது கல்லறையிலிருந்து மீட்டெழுச்சி பெற்று விண் புகுவதன் முன் தனது சீடர்களைச் சந்தித்து தான் தொடங்கியதை முடிக்கும் பணியில் ஈடுபடுத்த அவர்களை தயார்ப்படுத்திதாகக் கூறப்படுகிறது. சுருக்கமாகக் கூறுவதாயின் புனித வாரம் விபூதி புதன்கிழமையுடன் (Ash Wednesday) ஆரம்பமாகி ஈஸ்ரர் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது. புனித வியாழன் யேசுபிரானின் கடைசி இராப்போசனத்தையும் பெரிய வெள்ளி அவர் சிலுவையில் அறையப்பட்டு மரித்ததையும் குறிக்கிறது. அந்த புனித வாரம் அவரது திருமீட்டெழுச்சியை குறிப்பதுடன் நிறைவெய்துகிறது.

ஈஸ்ரருடன் பல மரபார்ந்த அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளாக ஈஸ்ரர் பெருநாளுடன் முட்டையை இணைக்கும் வழக்கம் காணப்படுகிறது. முட்டைக்கு ஏன் எவ்வாறு இத்தனை முக்கியத்துவம் இப் பெருநாளுடன் தொடர்பாக ஏற்பட்டது ? மரபார்ந்த வசந்த கால கிரியைகளுடன் முட்டைக்கு இருந்த தொடர்பே ஈஸ்ரருடன் முட்டை இணைவதற்கான அடிப்படைக் காரணமாகும். மிக ஆதிகாலம் தொடக்கம் மனிதனுக்கு முட்டைகளுடன் தொடர்பு இருந்து வந்தது. இது பண்டைய லற்றீன் பழமொழியில் பிரதிபலித்துள்ளது. Omne vivum ex ovo என்பதன் கருத்து சகல உயிர்ப்பும் முட்டையில் இருந்தே வருகிறது என்பதாகும். லற்றின் பழமொழி மட்டுமல்ல இந்த உலகம் முட்டையில் இருந்தே உருவானது என்ற கருத்து பண்டைய இந்தியா முதல் பொலிநீசியா வரை, ஈரான், கிறீஸிலிருந்து லற்வியா எஸ்ரோனியா, பின்லாந்து வரை, மத்திய அமெரிக்காவிலிருந்து தென் அமெரிக்காவின் மேற்கு கரை வரை காணப்பட்டது. எனவே பெரும்பாலும் அனைத்துப் பண்பாடுகளிலும் முட்டை வாழ்வின் சின்னம் என்ற கருத்து காணப்பட்டமை அசாதாரணமான விஷயமல்ல. ஐரோப்பாவில் புதுவருட மரங்களிலும், Maypoles இலும் St.John ‘s மரங்களில் நடுக் கோடை காலத்திலும் முட்டைகள் தொங்கவிடப்பட்டன. பின்னர் கிறிஸ்தவம் பரவிய காலத்தில் பெரிய வெள்ளிக்கிழமையன்று இடப்பட்ட முட்டையை 100 வருடங்கள் வைத்திருந்தால் அதன் மஞ்சட் கரு வைரமாக மாறும் என்ற நம்பிக்கை மக்களிடையே காணப்பட்டது. அத்துடன் பெரிய வெள்ளியன்று இடப்பட்ட முட்டையை ஈஸ்ரர் அன்று சமைத்தால் அது மரங்கள், பயிர்கள் ஆகியவற்றின் வளத்தைப் பெருக்குவதுடன் சடுதியான மரணம் நேராது பாதுகாக்கும் என்ற நம்பிக்கையும் காணப்பட்டது. ஈஸ்ரர் முட்டைக்குள் இரண்டு மஞ்சட் கரு காணப்பட்டால் அதனை வைத்திருந்தவர் மிக விரைவில் செல்வந்தராவார் என்ற நம்பிக்கையும் கூடவே காணப்பட்டது. பண்டைய எகிப்து, பேர்ஷியா, Greece, ரோம் ஆகிய நாடுகளில் வசந்த விழாக்களின் போது முட்டைகள் நிறமூட்டப்பட்டு உண்ணப்பட்டன. பண்டைய பேஷியர் இளவேனிற் காலத்தில் கதிரவன் நிலை பூ நடுவரைக்கு எதிராக வரும் நாளில் முட்டைகளை ஒருவருக்கொருவர் பரிசளித்தனர். இந்த நம்பிக்கைகள் பிற்காலத்தில் ஈஸ்ரருடன் நன்கு இணைக்கப்பட்டன. முட்டைகளுக்கு நிறமூட்டுதல் என்பது 15ம் நூற்றாண்டளவில் மேற்கு ஐரோப்பாவில் மிஷனறிகளால் பரப்பப்பட்டது என்று ஊகிக்கப்படுகிறது. நாற்பது நாட்கள் கடும் நோன்பின் போது முட்டைகள் உண்ணப்படுவதில்லை.

முட்டை வளத்தையும் புது வாழ்வையும் குறிக்கிறது. ஆரம்பத்தில் முட்டைகள் கடும் வண்ணமூட்டப்பட்டு வசந்த கால சூரியனைப் பிரதிநிதித்துவப்படுத்தின. அத்துடன் அவை முட்டை உருட்டும் போட்டிகளில் பயன்படுத்தப்பட்டதுடன் பரிசாகவும் கொடுத்து வாங்கப்பட்டன. பின்னர் காலப் போக்கில் முட்டைகள் வண்ணமூட்டப்பட்டு அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டு காதலர்களிடையே பரிசாகப் பரிமாறப்பட்டது. மத்திய காலத்தில் மரபுரீதியாக ஈஸ்ரர் அன்று முட்டைகள் வேலையாட்களுக்கு வழங்கப்பட்டன. ஜேர்மனியில் ஈஸ்ரரின் போது முட்டைகள் ஏனைய பரிசுகளுடன் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் வழக்கம் காணப்பட்டது. வேறுபட்ட பண்பாடுகள் முட்டைகளை வேறுபட்ட முறைகளில் வர்ணமூட்டும் முறைகளை வளர்த்துக் கொண்டன. கிறீஸில் யேசுநாதரின் ரத்தத்தைக் குறிக்கும் வகையில் சிவப்பு நிற முட்டைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ஜேர்மனியிலும் ஒஸ்றியாவிலும் புனித வியாழனைக் குறிக்கும் வகையில் பச்சை நிறமூட்டப்பட்டன. ஸ்லாவிக் மக்கள் பொன் வெள்ளி நிறங்களில் பல்வேறு வேலைப்பாடுகள் கொண்டதாக முட்டைகளை அழகுபடுத்தினர். ஒஸ்றியர்கள் மிகச் சிறிய இலைக் கொப்புகளையும் தாவரங்களையும் முட்டையில் இணைத்து அவித்த பின்னர் அந்த இலைகளை நீக்க முட்டையில் அழகிய வேலைப்பாடுகள் இணைந்து அழகாகக் காட்சியளிக்கும். உருக்கிய தேன்மெழுகை முட்டையில் பூசி பின் பல்வேறு சாயங்களில் அமுக்கி எடுப்பார்கள். ஒவ்வொரு முறை எடுக்கும் போதும் தேன் மெமுழுகால் மேலும் சித்திரங்கள் தீட்டப்படும். இம்முட்டைகள் அவற்றில் வேலைப்பாடு செய்பவர்களின் கலைத்திறமையைக் காட்டி நிற்கும். ஜேர்மனியில் சிறிய ஊசிகளால் முட்டையில் துவாரமிட்டு உள்ளிருக்கும் வெள்ளை சிவப்புக் கருக்களை அகற்றிய பின்னர் கோதுகளுக்கு வர்ணமூட்டி மரங்களில் ஈஸ்ரரின் போது தொங்கவிடுவார்கள். ஆமேனியர்கள் கோதுகளில் யேசுபிரான் கன்னி மரியாள் ஆகியோரின் படங்களை வரைவார்கள்.

ஈஸ்ரர் முயல் அதாவது Easter Hare வளத்தின் சின்னமாகும். முயலைப்போல இனப்பெருக்கம் செய்யும் மிருகங்கள் கிடையாது. அதனால் அது புது வாழ்வையும் வசந்த காலத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. ஈஸ்ரர் சின்னங்களில் மிக விருப்பத்துக்குரியது முயல் சின்னமே. இது சர்வதேச ரீதியானது மட்டுமல்ல லெளகிகமானதும் கூட. பண்டைக் காலத்தில் இருந்து முயல் சந்திரனுடன் இணைத்துக் கூறப்பட்டு வந்துள்ளது. முயல் அதாவது Rabbit அல்ல Hare, கண்களை இமைப்பதற்காகக் கூட ஒரு கணமும் முடுவதில்லை என்று கூறப்படுகிறது. Rabbits கண்களை மூடியபடியே பிறக்கின்றன. ஆனால் Hares கண்களைத் திறந்தபடியே பிறப்பதாக கூறப்படுகிறது. பண்டைய எகிப்தியர் முயலை சந்திரனுடன் தொடர்புபடுத்தினர். Hare என்பது எகிப்திய மொழியில் un எனப்படும். அதன் கருத்து திற என்பதாகும். அவை இரவு முழுவதும் திறந்த கண்களுடன் பெளர்ணமி நிலவைப் பார்ப்பதற்கு விருப்பம் கொண்டவை. அத்துடன் முயலும் முட்டைகளும் Anglo-Saxon வசந்த தெய்வமான Eostre உடனும் தொடர்புபட்டுள்ளன. ஏனெனில் இந்த இரண்டும் வளத்துடன் தொடர்புபட்டவை. இந்த வளமே மரபு ரீதியான Hare ஐ விடுத்து rabbit ஐ அமெரிக்கா ஈஸ்ரரின் சின்னமாக தேர்ந்தெடுத்தமைக்குக் காரணமாகும். Hares ஐ விட rabbits அதிகம் இனப்பெருக்கம் செய்பவை. ஜேர்மனியில் இருந்து அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்தவர்கள் பெரும்பாலான Teutonic ஈஸ்ரர் மரபுகளை அங்கு கொண்டு சென்றனர். முயல்கள் ஜேர்மன் அல்லாத பிள்ளைகள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்றன. ஜேர்மனீய பிள்ளைகள் முயலுடைய கூடுகள் நிறைய அலங்கரிக்கப்பட்ட முட்டைகளால் நிரப்புவார்கள். அவர்கள் இதற்கான கூடுகளையும் செய்வார்கள். அவை மிக கவர்ச்சிகரமாக இருப்பதால் மற்றப் பிள்ளைகளும் ஈஸ்ரருக்கு அவ்வாறான பரிசுகளைத் தரும் படி வற்புறுத்துவார்கள். ஈஸ்ரர் அடையாளமாக முயலைப் பயன்படுத்தும் வழக்கம் ஜேர்மனியில் ஆரம்பித்தது. 1500 களின் எழுத்தாக்கங்களில் இது முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1800களில் அங்கு மாவும் சீனியும் கலந்த உண்ணக்கூடிய முயலுருவங்கள் செய்யப்பட்டன. 1700களில் அமெரிக்காவில் குடியேறிய ஜேர்மானியர் இந்த வழக்கத்தை அங்கு அறிமுகம் செய்தனர். Oschter Haws என ஜேர்மனியில் அழைக்கப்படும் இந்த ஈஸ்ரர் முயல் பிள்ளைகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கிறிஸ்மஸ் பப்பாவுக்கு அடுத்ததாக அவர்களைக் கவர்ந்தது இந்த முயலே. தாங்கள் நல்ல பிள்ளைகளாக நடந்து கொண்டால் இந்த முயல் பல நிறங்களில் முட்டைகளை இடும் என்று அவர்கள் நம்பினார்கள். இதற்காக ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் சிறுவர்கள் தமது தொப்பியையும் சிறுமிகள் தமது bonnet ஐயும் உபயோகித்துக் கூடுகள் அமைத்தனர். ஈஸ்ரர் முயல் சின்னம் எங்கும் பரவியதும் பின் அவற்றையும் முட்டைகளையும் வைப்பதற்காக கூடையை பயன்படுத்தும் முறை உருவாகியது.

ஈஸ்ரர் பரிசாக மிக அழகிய லில்லி மலர்களைப் பெற யார்தான் விரும்பமாட்டார்கள். பல காலமாக தேவாலயத்தை அலங்கரிக்க அழகிய வெள்ளை trumpet lily மலர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஏறக்குறைய 1800 களில் லில்லி மலர் அமெரிக்காவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அங்கிருந்த புரட்டஸ்ரன்ற் கிறீஸ்தவர்கள் ஈஸ்ரர் அனுசரிப்புடன் லில்லியை தொடர்புபடுத்தினர். அது பிரபலியமாக சில காலம் பிடித்தது. அமெரிக்காவில் காணப்படும் மடோனா லில்லி மலர்கள் ஆரம்ப கோடை காலத்திலேயே மலர்வன. எனவே லில்லி மலர் செடிகள் இறக்குமதி செய்யும் வரை அவை ஈஸ்ரருடன் தொடர்பாகப் பிரபலியமாகவில்லை. 1880களில் Bermuda என்ற இடத்தில் இருந்த போது Thomas P Sargent என்பவர் இயல்பாக வசந்த காலத்தில் மலரும் அழகிய லில்லி மலர்களைக் கண்டார். அவர் அதில் மிக விருப்புக் கொண்டு தனது இருப்பிடமான Philadelphia திரும்பும் போது அதன் கிழங்குகளை கொண்டு வந்தார். William Harris என்ற பூந்தோட்டக்காரர் அதனை பூக்கடைக்காரர் மத்தியில் பரப்பினார். அதன் பின்னர் அம்மலர் பல்லாயிரக்கணக்கானவரைக் கவரவே அது ஈஸ்ரர் அலங்காரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டது.

ஈஸ்ரர் நாடுகளுக்கு நாடு வேறுபட்ட விதங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவுஸ்திரேலியாவில் பல்லின மக்கள் வாழ்வதால் ஈஸ்ரர் பல்வேறு விதங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. Anglo-Irish பின்னணியைச் சேர்ந்தவர்களுக்கு ஈஸ்ரர் ஞாயிரே முக்கியமான தினமாகும். அன்றே அவர்களது கொண்டாட்டங்கள் இடம் பெறுகின்றன. சிலர் தேவாலயத்தில் இடம்பெறும் ஆராதனைகளில் கலந்து கொள்வார்கள். அத்துடன் காலை உணவாக இனிப்பு நிறைந்த பழங்கள் சேர்க்கப்பட்ட Hot cross buns ஐ உண்பார்கள். பிள்ளைகள் ஈஸ்ரர் சொக்கலேற்றால் ஆன முட்டைகளை பரிமாறிக் கொள்வார்கள். அவற்றில் சில உள்ளே சிறிய விளையாட்டுப் பொருள்களைக் கொண்டிருக்கும். சிறிய முட்டைகளிலிருந்து மிகப் பிரமாண்டமான முட்டை வரை பல அளவுகளில் சொக்கலேற் முட்டைகள் காணப்படுகின்றன. பல குடும்பங்கள் ஈஸ்ரர் ஞாயிறன்று காலையில் தமது வீடுகளில் அல்லது தோட்டங்களில் Easter Hunt எனப்படும் முட்டை தேடியெடுத்தல் போட்டியை நடத்துகிறார்கள். அதிக எண்ணிக்கையில் முட்டைகளைத் தேடிக் கண்டு பிடிப்பவர்களே வெற்றி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். அப்போது தமது உறவினருடன் கூடி காலை உணவை அருந்துகிறார்கள். மரபார்ந்த முறையில் இந்த உணவு வாட்டப்பட்ட ஆடு அல்லது மாடு அல்லது கோழி இறைச்சியுடன் வாட்டப்பட்ட உருளைக்கிழங்கு, கரட், பூசனிக்காய் போன்ற மரக்கறிகளையும் கொண்டிருக்கும்.

ஐரோப்பாவின் பல பகுதிகளில் ஈஸ்ரருக்கு முதல்நாள் குன்றுகளின் உச்சிகளிலும் தேவாலய வளவுகளிலும் பிரமாண்டமான முறையில் தீ வளர்க்கப்படும். அது சிலவேளைகளில் ஜூதாஸின் (Judas) தீ என்று அழைக்கப்படும். ஏனெனில் அதில் ஜூதாஸின் உருவம் செய்யப்பட்டு அந்த தீயில் கொடும்பாவியாகக் கொழுத்தப்படும். இந்த தீ வளர்த்தல் என்பது கிறீஸ்தவத்திற்கு முந்தியது. வசந்தத்தின் வரவைக் குறிக்க அப்போது தீ வளர்க்கப்பட்டது. அப்போது குளிர் காலத்தை உருவகப்படுத்தும் ஒரு உருவத்தைச் செய்து அதனைத் தீயில் எரித்தனர்.

இங்கிலாந்தில் ஈஸ்ரரின் போது முட்டைகள் மற்றும் பணம், ஆடைகள், சொக்கலேற்றுகள் போன்ற பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்வார்கள். அல்லது ஒன்றாக விடுமுறையில் செல்வார்கள். சிலர் ஈஸ்ரர் கூடைகளைச் செய்து அதனுள் daffodils மலர்கள் அல்லது சிறிய சொக்கலேற் முட்டைகளை வைப்பர்கள். உள்ளுர் சமூக நிலையங்களiல் வைக்கப்படும் ஈஸ்ரர் bonnet போட்டிகளில் பிள்ளைகள் கலந்து சிறந்ததைச் செய்தவர்கள் ஈஸ்ரர் முட்டையைப் பரிசாகப் பெறுவார்கள். ஈஸ்ரர் முயல் இங்கிலாந்தின் ஈஸ்ரர் மரபுடன் இணைந்ததொன்று. கடைகளில் ஆயிரக்கணக்கில் நிறைந்திருக்கும் இவற்றை வாங்கி ஒருவருக்கொருவர் பரிசளித்துக் கொள்வார்கள். இந்த சொக்கலேற் முயல்களை வீடுகளில் ஒளித்து வைத்து தேடி எடுக்கும் பிள்ளைகள் பரிசுகள் பெறுவதும் இங்குள்ள மரபுகளில் ஒன்று. பெரிய வெள்ளியன்று காலை hot cross buns உண்ணப்படும். ஈஸ்ரரின் முன் இவை கடைகளில் விற்பனைக்கு வந்துவிடும்.

பிரான்சிய மொழியில் ஈஸ்ரர் Paques என்று அழைக்கப்படுகிறது. பெரிய வெள்ளி தொடக்கம் கொண்டாட்டம் துக்கத்துடன் ஆரம்பமாகும். அன்றிலிருந்து ஈஸ்ரர் ஞாயிறு வரை தேவாலய மணிகள் ஒலிக்காது. ஜேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட நிகழ்ச்சிக்கு துக்கம் அனுஷ்டிப்பதைக் குறிக்கும் அடையாளமாக இந்த மணி ஒலிப்பது நிறுத்தப்படுகிறது. ஈஸ்ரர் அன்று காலையில் மணி ரோமிலிருந்து திரும்பிப் பறந்து வருவதாக உள்ள ஐதீகத்தின் படி அதைப் பார்ப்பதற்காக பிள்ளைகள் தோட்டத்திற்கு விரைந்து சென்று மணியைப் பார்க்க வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்க பெரியவர்கள் சொக்கலேற் முட்டைகளை ஒளித்து வைப்பதில் ஈடுபடுவார்கள்.

இத்தாலிய மொழியில் ஈஸ்ரர் La Pasqua எனப்படுகிறது. பெரிய விருந்துடன் இங்கு ஈஸ்ரர் கொண்டாடப்படுகிறது. வாட்டப்பட்ட குட்டி ஆட்டு இறைச்சியிலாலான Angellino எனப்படும் ஈஸ்ரர் சிறப்பு உணவு இதில் பரிமாறப்படும். பல வண்ண இனிப்புகளால் அலங்கரிக்கப்பட்டு மகுட வடிவில் ஈஸ்ரருக்காகச் சிறப்பாகத் தயாரிக்கப்படும் பாணை பிள்ளைகள் உண்பார்கள்.

ஜேர்மன் மொழியில் ஈஸ்ரர் ஓஸதரெந எனப்படுகிறது. இந்தப் பெயர் வசந்த தெய்வமான Eostre என்ற பெயரிலிருந்து உருவாகியிருக்கலாம். ஈஸ்ரருக்கு மூன்று வார பாடசாலை விடுமுறை அளிக்கப்படுகிறது. பெரிய வெள்ளியன்று பலர் மீன் உணவை உண்பார்கள். ஈஸ்ரர் சனியன்று மாலையில் பெரிய தீ வளர்க்கப்படும். அதனைக் காணப் பலர் கூடுவார்கள். குளிர் கால முடிவினையும் கெட்ட உணர்வுகளையும் குறிக்கும் வகையில் இந்த தீ வளர்க்கப்படுகிறது. ஈஸ்ரர் ஞாயிறன்று குடும்பங்கள் ஒன்றாக இணைந்து சிறந்த காலை உணவை உண்பார்கள். பின்னர் பெற்றோர் இனிப்புகள், முட்டைகள், சிறிய பரிசுப் பொருட்களைக் கொண்ட கூடைகளை பிள்ளைகள் தேடிக் கண்டு பிடிப்பதற்காக ஒளித்து வைப்பார்கள். கைகளால் வர்ணமூட்டப்பட்ட முட்டைகளை நண்பர்கள் ஒருவருக்கொருவர் கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். முன்னர் கிராமப் பெண்கள் தமது காதலருக்கு சிவப்பு நிறமூட்டப்பட்ட முட்டையைப் பரிசளிப்பது வழக்கமாக இருந்தது. இது இப்போது அருகி மறைந்து விட்டது.

நெதர்லாந்து மொழியில் ஈஸ்ரர் Pasen அல்லது Pasen Zontag என்று கூறப்படுகிறது. முழு நாட்டிலும் ஈஸ்ரர் ஒரு வசந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது. மலர்களாலும் நிறமூட்டப்பட்ட முட்டைகளாலும் ஈஸ்ரர் இராப்போசன விருந்து மேசைகள் அலங்கரிக்கப்படுகின்றன. ஈஸ்ரர் விருந்தில் முந்திரியவற்றல்களால் நிறைக்கப்பட்ட இனிப்புப் பாண் சிறப்பிடம் பெறுகிறது. சுவீடிஸ் மொழியில் ஈஸ்ரர் நாள் Pரூskdagen எனப்படுகிறது. ஈஸ்ரர் விருந்துகளிலும் விளையாட்டுகளிலும் வாழ்வினதும் புதுப்பித்தலினதும் சின்னமாக விளங்கும் முட்டை இடம்பெறுகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் முட்டைக்கு நிறமூட்டும் விழாக்கள் நடைபெறுகின்றன. முட்டை உருட்டும் போட்டி இளம் பிள்ளைகளது விருப்பத்துக்குரிய ஈஸ்ரர் விளையாட்டு. ஈஸ்ரருக்கு முந்திய தினம் தீ மூட்டுதல் வாணவேடிக்கை ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

காலப்போக்கில் முட்டை, முயல் ஆகியன சொக்கலேற்றில் தயாரிக்கப்பட்டு வியாபாரமாக்கப்பட்டது. இன்று ஈஸ்ரர் வருகிறது என்பதைக் கடைகளில் வண்ண வண்ணமாக அடுக்கப்பட்ட முட்டைகளும் முயல்களும் கட்டியம் கூறுகின்றன. பல்லின மக்கள் வேறு வேறு வகைகளில் ஈஸ்ரரைக் கொண்டாடி வருகின்ற போதும், சிலுவையில் மரித்த யேசுநாதர் மீண்டும் உயிர் பெற்றெழுந்ததன் மூலம் மனித வாழ்வுக்கு நம்பிக்கை, செயலின்மையிலிருந்து புதுச் செயலூக்குவிப்பு, புதுப்பித்தல் ஆகியவற்றைக் கொண்ட நற்செய்தியை தெரிவித்தமையை அனைவரும் அடிப்படையில் ஏற்றுக் கொள்கின்றனர்.

kcvamadeva@bigpond.com

Series Navigation

சந்திரலேகா வாமதேவா

சந்திரலேகா வாமதேவா