ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாக அமைந்துவிட்டது

This entry is part [part not set] of 33 in the series 20080313_Issue

கிரிஜா மணாளன்


சுஜாதா அவர்கள் ஓர் பன்முக வித்தகராக விளங்கி பல துறைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர். அவரது இழப்பு இலக்கிய உலகுக்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாக அமைந்துவிட்டது. எழுத்துலக ஜாம்பவான் என்றழைக்கப்பட்ட திரு. சாவி அவர்களின் சாவி இதழுக்கு அவர் ஆற்றிய தொண்டு பற்றி சாவி அவர்களே பலமுறை அவரைச் சந்திக்கும் எழுத்தாளர்களிடம் புகழ்ந்து கூறியுள்ளார். எழுத்துலகில் நான் நுழைந்த காலத்தில் என் போன்ற புதுமுக எழுத்தாளர்கள் திரு சாவி அவர்கள் கொடுத்த ஊக்கத்தினால் எங்கள் எழுத்துத் திறனைப் பெருக்கிக் கொண்டோம். சென்னை அலுவல கத்திலும், புதிய எழுத்தாளர்களை உருவாக்க அவர் பல ஊர்களில் நடத்திய முகாம்களிலும் சாவி அவர்களைச் சந்திக்கும்போதெல்லாம் அவர் ‘சுஜாதாவின் எழுத்து நடையிலுள்ள நகைச்சுவையைப் பின்பற்றுங்கள். நீங்கள் பிற்காலத்தில் எழுத்துலகில் பிரகாசிக்க அது உதவியாக இருக்கும்” என்று அடிக்கடி கூறுவதுண்டு. அது பிற்காலத்தில் எங்களுக்கு அனைத்து இதழ்களிலும் வாய்ப்புகள் பெற பேருதவியாக இருந்தது. அப்படிப்பட்ட ஓர் குருகுலமாகத் திகழ்ந்தவர் சுஜாதா அவர்கள். தன்னைச் சந்திக்கும் எழுத்தாளர்களை முன்னணி, பின்னணி என்ற பாகுபாடு பார்க்காமல் அனைவரிடமும் சரளமாகப் பேசும் தன்மையுள்ளவர். சாவி அவர்கள் தன்னால் வளர்க்கப்பட்டவர்கள், தனது இதழ் முயற்சிகள் தோல்வியுற்ற காலத்தில் தன்னிட மிருந்து பிரிந்துபோனபோது ஒரு பேட்டியில் ‘நான் வளர்த்த கடாக்கள்’ என்று சிலரைக் குறிப்பிட்டபோதுகூட, சுஜாதா தன்மீது வைத்திருந்த மாறாத அன்பைப் புகழ்ந்துகொண்டேயிருந்தவர் சாவி அவர்கள். அனைத்து இதழ்களிலும் எழுதி வானளாவப் புகழ்பெற்ற காலத்திலும்கூட, சுஜாதா அவர்கள் சாவி அவர்களின் இறுதிக்காலம் வரையிலும் அவருக்குத் துணைநின்றது அவருடைய நன்றிக்கடனை சிறப்பாக எடுத்துக்காட்டியது. தொலைக்காட்சி ஊடகத்தால் இதழ்கள் தம் வாசகர்களை இழந்துவிடுமோ என்று அச்சப்படும் இக்கால கட்டத்தில், சுஜாதா போன்ற எழுத்துலக வேந்தர்களின் மறைவு புதிய எழுத்தாளர்களை நம்பிக்கை இழக்கவைக்கிறது என்றே சொல்லலாம்.

கிரிஜா மணாளன், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம், திருச்சி ‍ 620021, தமிழ்நாடு


Email: girijamanaalan2006@yahoo.co.in

Series Navigation