இஸ்லாத்தில் பிரிவினை

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

அ.முஹம்மது இஸ்மாயில்


முஸ்லிம்களிடையே பிணைப்பை ஏற்படுத்தியவன் அல்லாஹ்- முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியவன் நிச்சயமாக ஒரு முஸ்லிமாகத்தான் இருப்பான் என்று எண்ணுகிறேன்.

ஒன்றாயிருந்த சமுதாயம் இன்று இரண்டாக தோன்றுவதன் பல காரணங்களில் மிக முக்கிய காரணம் என்னவெனில் முஸ்லிம்களில் சி(ப)லர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்கள் என்பதேயாகும்.

அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் என்றால் என்ன ?

படைக்கப்பட்ட மனிதர்களும் படைத்த அல்லாஹ்வும் சரிசமமென நம்புவதும் அல்லாஹ்வுக்கு இணையான அந்தஸ்த்தில் மனிதர்களை வைப்பதும் தான் பொதுவாக இணை வைத்தலாகும்- உதாரணமாக-

ரசூலுல்லாஹ் பெயரால் மெளலுது ஓதுவது, அவ்லியாக்கள் பெயரால் பாத்திஹா ஓதுவது, அவ்லியாக்களிடத்திலே துஆ கேட்பது இவைகளையே முக்கியமாக இணைவைத்தல் என்று கூறுகிறார்கள்- மேற்கண்டவைகளை ஒரு முஸ்லிமாகப்பட்டவன் ஒருக்காலும் செய்யக் கூடாது என்ற தங்களது கூற்றுக்கு ஆதாரமாக புகாரி ஷரீஃப் மற்றும் பல ஹதீஸ் தொகுப்புகளிலிருந்தும் ஏராளமான ஹதீஸ்களை எடுத்துக் கூறுவது மற்றுமின்றி அவர்கள் அப்படி சொல்வது தவறு என்று யாரேனும் கூறினால் நேரிலேயே விவாதம் செய்ய தயார் என்று அறைகூவல் விடுகிறார்கள்- குரான் மற்றும் ஹதீஸில் என்ன இருக்கிறதோ அதை தவிர வேறு எதனையும் ஆதாரமாக ஏற்க மாட்டோம் என்று அடித்து கூறுகிறார்கள்-

தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் விரலை ஆட்ட சொல்லி வருவதும், ரமலான் மாதத்தில் தராவீஹ் தொழுகை 8 ரகாத் தொழுதால் போதும் ஏனெனில் அது தான் ரசூலுல்லாஹ் தொழுதது என்று கூறி வருவவதும் இவர்கள் தான்.

அவர்களது வாதத்தின் திறமையாலும், பேச்சின் இனிமையாலும் கவரப்படாதவர்கள் எவருமில்லை. அவர்களின் கூற்று உண்மையென இருக்கும் பட்சத்தில் பொய்யர்களைத் தவிர வேறு யார் தான் ஏற்க மறுப்பார்கள் என்று கேள்வி எழலாம்- ஆனால் எனக்கு கொடுக்கப்பட்டுள்ள சிற்றறிவை வைத்து சிந்தித்து பார்த்ததில் என்னால் ஏற்க முடியவில்லை.

அப்படியானால் உங்களது விவாதத்தை எடுத்து வையுங்கள் அது சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களை ஏற்க வைப்போம் அல்லது பதில் கொடுக்க சொல்வோம் என்று கூறுகிறீர்களா ?

நான் விவாதம் செய்ய விரும்பவில்லை என்பது ஒரு புறமிருக்க என் சிந்தனைகளை நான் தெரிவிக்க துணியத்தான் போகிறேன்- என் கருத்து மேலும் குழப்பத்தை தூண்டி விடாமல் இருக்க வேண்டும்- நாம் எல்லோரும் சேர்ந்து சிந்திக்கலாம் என்ற அடிப்படையில் இங்கே எழுதப்படுகிறதே தவிர என் கருத்தை தவிர வேறு எல்லா கருத்தும் பொய்யானவை என்றோ வேறு யாரும் சரியாக சிந்திக்காமல் இருக்கிறார்கள் என்ற தலைகனத்திலோ எழுதவில்லை.

முதலில் ஒரு கருத்தை பார்ப்போம்,

பெருமானார் ரசூல்(ஸல்) அவர்கள் சொன்னார்கள் மக்களிடம் பேசும் போது அவர்களின் அறிவுக்கு தக்கவாறு பேசுங்கள் என்று-

என்ன அர்த்தம் ? ஒரு நன்மையை நாடி ஒருவரிடம் ஒரு செய்தியை சொல்ல நினைக்கிறோம் என்று வையுங்கள்- அந்த நன்மை கிடைக்கும் அதே நேரத்தில் அந்த நன்மையை சொல்வதனாலேயே பல கெடுதிகள் விளையுமானால் அந்த நன்மையை சொல்ல வேண்டுமா ? கூடாதா ? சற்று ஆழமாக சிந்திப்போம்-

உதாரணமாக பெருமானார் இஸ்லாத்தை போதிப்பதால் சமுதாயத்துக்கு நன்மை இருந்தது ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்களது உயிருக்கே ஆபத்து இருந்தது- பெருமானார் அவர்கள் உயிருக்கு பயப்படாமல் ஊருக்கு நன்மையை தேடி தந்தார்கள்- இது வந்து ஒரு சமுதாயத்துக்கு நன்மை நடக்குமென்றால் தனக்கு வரும் தீமையை பொருட்படுத்தக் கூடாது என்று உணர்த்துகிறது-

ஆனால் சமுதாயத்துக்கே தீங்கு ஏற்படும் எனில், அந்த நன்மையை கருதி நன்மையை சொல்லாமல் இருப்பதே சாலச் சிறந்தது- காரணம்,

தாயிப் நகர மக்கள் பெருமானாரிடம், நாங்கள் இஸ்லாத்திற்கு வருவோம் ஆனால் வட்டி வாங்குவதை நிறுத்த மாட்டோம் என்று சொன்ன போது கூட பெருமானார் அவர்கள் பரவாயில்லை முதலில் இஸ்லாத்திற்கு வாருங்கள் என்று அழைத்ததை பார்க்கிறோம் (இஸ்லாத்திற்கு வந்த பிறகு வட்டி வாங்குவதை நிறுத்தி விட்டார்கள் அல்லது நிறுத்தி விட வைத்தார்கள் பெருமானார் அவர்கள் என்பது வேறு விஷயம்)- இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால்

அவர்கள் இஸ்லாத்திற்கு அழைத்த போது கூட ஒரு அழகு இருந்தது அதாவது சமுதாயாத கூட்டை குழைக்காமல் கொண்டு சென்றுள்ளார்கள் என்பது தெளிவாக விளங்குகிறது அதாவது அவர்கள் நினைத்து இருந்தால் அதெல்லாம் முடியாது நீங்க வட்டி வாங்கக் கூடாது இல்லையென்றால் இஸ்லாத்திற்கு வரவே வேண்டாம் என்று கூறியிருந்திருக்கலாம்- சத்தியத்தை எடுத்துச் சொன்ன போது கூட கேட்கும் நபர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் சொன்னது அவர்களது வெற்றியென விளங்குகிறது-

இதற்கிடையில் வட்டியை பற்றி அல்லாஹ் குரானில் கடுமையாக அல்லாஹ் விமர்ச்சித்துள்ளான். இருந்தும், பெருமானார் அவர்கள் எப்போதுமே எடுத்தோம் கவுத்தினோம் என்று பேசியது கிடையாது- அவர்கள் மக்காவில் உள்ள சிலைகளை உடைத்தது கூட மக்கா வெற்றிக்கு பிறகு தான்- மானமிகு தந்தை பெரியார் அவர்கள் கூட அவர் காசு கொடுத்து வாங்கின பிள்ளையார் சிலையை தான் உடைத்தார் ஆனால் பெருமானார் அவர்களோ மக்காவில் காலம் காலமாக தொழப்பட்டு வந்த 360 சிலைகளை உடைத்தார்கள்- ஆரம்ப கட்டத்தில் யாரையும் பார்த்து,போய் சிலைகளை உடையுங்கள் என்று பெருமானார் அவர்கள் சொன்னதே கிடையாது-

வரலாறை விவாதத்தில் வெற்றி பெற வேண்டுமெனும் நோக்கமில்லாமல் நன்கு படித்து உணற வேண்டுமென நினைப்பவர்களுக்கு மேற்கூறிய விளக்கங்கள் போதுமென்றே தோன்றுகிறது-

மக்களிடம் பேசும் போது அவர்களுக்குள் குழப்பம் விளைவிக்காமல், சண்டையை மூட்டிவிடாமல், மனதை கலைக்காமல் அவர்களது போக்கிலேயே போய் நன்மையானவற்றை தகுந்த நேரம் பார்த்து புகுத்த வேண்டும் என்றே நான் பெருமானாரின் வரலாறிலிருந்து விளங்கியிருக்கிறேன்.

தங்களை ஏகத்துவவாதிகள் என்று கூறி கொள்ளும் இவர்கள் நன்மையையே சொன்னார்கள் என்று வைத்து கொண்டாலும் அதனால் நன்மைக்கு பதிலாக குழப்பமே விளைந்தது- உதாரணமாக, தொப்பி அணியாமலும் தொழலாம் என்று அவர்கள் சொல்லப் போக தொப்பி அணிவதே பாவம் என்று அவர்களை பின்ப்ற்றும் நம்மவர்கள் நினைத்து தொப்பி போடாமல் தொழ ஊரில் சண்டை, பள்ளியில் நிர்வாகிகளும் தொப்பி போடாமல் தொழ வர வேண்டாம் என்று கூற பெரிய குழப்பம்- யார் மீது தவறு என்பது ஒரு புறமிருக்க குழப்பம் விளைந்தது உண்மை தானே! மறுக்க முடியாதே! இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம்-

நாயகம்(ஸல்) அவரகளை திருக்குரான் பலவாறு புகழ்ந்துள்ளது, முஹம்மது என்றாலே புகழப்பட்டவர் என்று தானே அர்த்தம். திருக்குரான் ஓரிடத்தில் நாயகம்(ஸல்) அவர்களை அழகிய முன்மாதிரி என்று வர்ணிக்கிறது. இங்கே தான் ஆழ்ந்து கவனிக்க வேண்டும்- நாம் செய்யும் அனைத்து இபாதத்துகளுக்கும் நல்ல அமல்களுக்கும் நாயகம்(ஸல்) அவர்கள் தான் முன்மாதிரி என்றால் நாயகம்(ஸல்) அவர்கள் மீது நாம் ஸலவாத்து சொல்கிறோமே அதற்கு யார் முன் மாதிரி ? நாயகம்(ஸல்) அவர்களா ? திருக்குரானை உணர்ந்து படியுங்கள்- அல்லாஹ் தான் முன் மாதிரி- திருக்குரானில் முஃமீன்களை நாயகம்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்ல சொல்லும் போது யாரை முன் மாதிரியாக சொல்கிறான் தெரியுமா ? அல்லாஹ் அவனைத் தான் முன் மாதிரியாக சொல்கிறான். அல்லாஹ், மலாயிகத்மார்கள் யாவரும் இந்த நபியின் மீது ஸலவாத்து சொல்கிறார்கள், ஆகவே முஃமீன்களே நீங்களும் இந்த நபியின் மீது ஸலவாத் சொல்லுங்கள் என்று கட்டளையிடுகிறான். சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம். நாயகம்(ஸல்) அவர்களுக்கு நாம் சொல்லும் ஸலவாத்து என்பது ஒரு நல்ல இபாதத், ஆனால் அதற்கு முன் மாதிரி நாயகம்(ஸல்) அவர்கள் அல்ல- அல்லாஹ் தான் முன் மாதிரி. மெளலுது ஷரீஃப் ஓதுவதை கூட நான் இந்த அடிப்படையில் தான் நான் சிந்தித்து பார்க்கிறேன்.

? ஜிப்ரீல்(அலை) அவர்கள் அன்னை மர்யத்திடம் ஈஸா நபி பற்றி நற்செய்தி சொன்ன போது கூட “நான் உங்களுக்கு ஒரு குழந்தையை பரிசளிக்க வந்துள்ளேன்” என்று தான் சொன்னார்கள்(சூரா மர்யம்)- அதற்காக ஜிப்ரீயில்(அலை) அப்படி சொல்லியிருக்க கூடாது “அல்லாஹ் உங்களுக்கு ஒரு குழந்தையை பரிசளிக்க இருக்கிறான், அந்த நற்செய்தியை என் மூலமாக சொல்ல நாடினான் அதை சொல்லவே நான் வந்தேன்” என்றல்லவா கூறியிருக்க வேண்டும்- மாற்றி கூறியதால் ஜிப்ரீல்(அலை) அவர்கள் இணை வைத்து விட்டார்கள்(அல்லாஹ்(ஜல்),ஜிப்ரீல்(அலை) மன்னிக்கனும்) என்று கூற முடியுமா ? சிந்திக்கிறோம்.. ஜிப்ரீல்(அலை) ஈஸா நபியை பரிசாக கொடுத்தார்கள் என்றால் அல்லாஹ்விடமிருந்து தான் வாங்கி கொடுத்தார்கள்.

தொழுகையை பற்றி பேச எவ்வளவோ செய்தி இருக்கிறது.. அதையெல்லாம் பேசாமல் விரலை ஆட்டுவதில் தான் அதிக கவனம் எடுத்து கொள்கிறோம்- சிந்திக்க வேண்டும்- சில தொழுகையை அல்லாஹ் குப்பையை போல் எரிந்து விடுவதாக திருக்குரானில் அச்சுறுத்துகிறான், அது எந்த தொழுகை ? விரலை ஆட்டாத தொழுகையா ? நிச்சயமாக இல்லை- மனதை அலைய விட்ட தொழுகையை பிறருக்கு காண்பிக்க எண்ணி தொழுத தொழுகையை- நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள், அல்லாஹ்வை பார்ப்பது போல் தொழுங்கள் என்று- இது வரை நீங்கள் ஒரு முறையாவது அல்லாஹ்வை பார்ப்பது போல் தொழுதுள்ளீர்களா ? அல்லாஹ்வை எப்படி பார்ப்பது ? அது வேறு அடுத்த கேள்வி- அல்லாஹ்வை தவிர வேறு யாருடைய

எண்ணமும் உங்களுக்கு தொழுகையில் வந்தால் நீங்கள் இணை வைத்து விட்டார்கள் என்று அர்த்தம்.. ஆமாம் அல்லாஹ்வை பார்ப்பது போல் தொழுங்கள் என்று நாயகம்(ஸல்) அவர்கள் சொன்ன பிறகு உங்கள் மனதில் வேறு யாருடைய உருவமும் வந்தால் அவரை நீங்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்து விட்டார்கள் என்று தான் அர்த்தம்(அல்லாஹ்(ஜல்) காப்பாத்தணும்)-

மனதை தூய்மைப் படுத்துவது பற்றி பேசுங்கள், மனதை கட்டுப்படுத்துவது பற்றி கற்றுக் கொடுங்கள், அழுக்கை சுத்தம் செய்த பிறகு தான் சுத்தமான பொருளை அங்கு நிரப்ப வேண்டும்-

தொழுகை ஒரு பயிற்சி, தொழுகை ஒரு சுத்தப்படுத்துதல்- இவையெல்லாம் பேசலாமே- ஆதாரத்தோடு பேசுவதை விட அவசியமானதை பேசுவது ரொம்பவும் முக்கியம்- தொழுகை பற்றி மேலும் அவசியமானதை தெரிந்துக் கொள்ள கண்ணியத்திற்குறிய இறைஞானி ஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள் எழுதிய இறை வணக்கம் படிக்கலாம்- உங்களுக்கு நீங்கள் சொல்ல இருப்பதோ ஏராளம்- ஊருக்கு சொல்ல ஏனிந்த அவசரம் ?- எல்லோருக்கும் வாழ்வில் வெற்றி முக்கியம். மனதை தூய்மை படுத்தியவன் வெற்றியடைந்து விட்டதாக நபிக்கருத்து உள்ளது – தொழுகைக்கு அழைக்கும் போதோ வெற்றி பெற வாருங்கள் என்று பாங்கு சொல்கிறார்கள்- தொழுகையில் மனதை தூய்மை படுத்தி வெற்றி பெறுவதை பற்றி நாம் ஏன் அதிகம் சிந்திக்க கூடாது ஏன் அதிகம் பேசக் கூடாது- தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிந்தவன் போலாவான் என்ற நபிமொழியும் சிந்தனைக்குறியதாக உள்ளது- தொழுகையில் தன்னை அறிந்து கொள்ள ப்யிற்சி எடுத்தால் என்ன ?

இப்படியாக பேசி சிந்தித்து இறை நெருக்கத்தை பெற்று இறை நேசர்கள் அதை செய்ய முடியுமா ? எதை செய்ய முடியுமா ? என்ற ஆராய்ச்சியை விட்டு விலகி எல்லோருமே இறை நேசர்களாக மாறி என்ன செய்ய முடியும் என்று சொந்த அனுபவத்தின் மூலமாக தெரிந்து கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்வின் துணையுடன் முயற்சிப்போமாக..

பெருமானார் அவர்களின் கடைசி காலத்தில் வெளி வந்த ஹதீஸ் ஒன்றும் நாம் எங்கே நினைவு கூற தகுந்தது- அதாவது, பெருமானார் கூறினார்கள், எனக்கு பிறகு நீங்கள் இணை வைப்பீர்கள் என்று நான் பயப்படவில்லை, ஆனால் நீங்கள் எங்கே தர்க்கித்து பிரிந்து விடுவீர்களோ என்று தான் நான் பயப்படுகிறேன்’ என்றார்கள்-

சகோதர மார்க்கத்தில் பிரிவு ஏது ?

சாந்தி மார்க்கத்தில் சண்டை எதற்கு ?

dul_fiqar@yahoo.com.sg

Series Navigation