இவர்களது எழுத்துமுறை – 7 -வண்ணதாசன்

This entry is part [part not set] of 33 in the series 20100919_Issue

வே.சபாநாயகம்.


1. லா.ச.ராவுக்குப்பின் தமிழ் இலக்கியத்தில் உங்கள் மொழிநடை(style) மிகவும் தனித்துவமானது என்பது பற்றி?

என்னோட ‘ஸ்டைல்’ எனக்குத் தடையா இருக்குன்னுதான் நெனக்கிறேன். என்னை அது கட்டிப் போடுது. இது யாருக்கும் நடக்கக்கூடாதுன்னு நெனக்கிறேன். எந்த ஒரு எழுத்தாளனின் ஸ்டைலும் அவனைக் கட்டிப் போடக் கூடாது. நானே ஒரு பிரத்தியேக பாஷையை உருவாக்கி, அதற்குள் சிக்கிக் கொண்டேன்னுதான் சொல்லணும். நானே அதிலிருந்து விடுபட முயற்சித்தும் முடியல. இது யாரும் எழுத முடியாத ஸ்டைல், நாம
எழுதறோம் அப்படின்னல்லாம் ஒண்ணுமே கெடையாது. ரொம்ப ரொம்ப எளிமையான பாஷை எதுவோ, அதுதான் நல்ல பாஷைன்னு இப்பல்லாம் எனக்குத் தோணுது. ஜி.நாகராஜன் எழுதின ‘குறத்திமுடுக்கு’ மாதிரித்தான் எளிமையா எழுதணும்னு தோணுது.

2. உங்கள் சிறுகதைகள் உங்களுள் கருத்தரித்த விதத்தை விளக்க முடியுமா?

என் சிறுகதைகள் எல்லாமே என்னைச் சுற்றி நடந்த விஷயங்களை வைத்தே எழுதியிருக்கேன்.
99 சதவீதம் உண்மைக் கதைகள். சில சமயம் நிஜப்பேரு போடாமே, சில சமயம் போட்டு எழுதியிருக்கேன்.
எப்படி நிகழ்ச்சியை தேர்ந்தெடுகிறேன்னு தெரியல. இதை எழுதிட வேண்டியதுதான்னு டக்குன்னு படுது.

3. யதார்த்தபாணியில்தான் உங்கள் கதைகள் அமைந்துள்ளன. இனி எதார்த்தவாத எழுத்துக்களுக்கு எதிர் காலமில்லை என்பது பற்றி…?

கடைசிவரைக்கும் நான் எதார்த்தவகை எழுத்துக்களையே எழுதுவேன். இலக்கியமே எதார்த்தம்தான்.
கடைசிவரை எதார்த்தமே நிலைக்கும். மற்றவகைகளெல்லாம் வரும் போகும்.

4. கவிதையிலே மிக எளிமையான சொற்களாலே புஷ்பம் தொடுக்கிறமாதிரி இயல்பா கவிதை எழுதறீங்க. இந்த எளிமை நீங்க திட்டமிட்டு செய்வதா?

கவிதை இப்படித்தான் எழுகணும்னு மனசுலே எதுவும் வச்சுக்கல. திட்டமிட்டு நான் எதுவுமே பண்ணலே. இதைத்தான் எழுதணும், இந்த விஷயத்தை எழுதக்கூடாது, இந்த யுக்தியிலே எழுதணும், எழுதக் கூடாதுன்னு, தமிழல்லாத வார்த்தை போடக்கூடாது, English வராமப் பார்த்துக்கணும் அப்படியெல்லாம் நான் திட்டமிடுதலே கிடையாது. சரியா சொல்லணும்னா என் கதைகளைவிட கவிதைகள்தான் சரியான பாதையிலே போகுதுன்னு நெனக்கிறேன். எளிமைதான் என்னோட மொழியா இருக்கணும்னு நெனைக்கிறேன்.

5. இன்றைய உங்கள் இலக்கிய வாழ்வு எப்படி இருக்கிறது?

என்னுடைய கதைகளையும் சரி, கவிதைகளையும் சரி, அந்தத் துறைகளில் ஒரு அலையெழுப்புகிற தாகவோ, வலிமைமிக்க ஒரு உந்து சக்தியாகவோ, சுவடுகளை பதித்துச் செல்ல வேண்டிய அவசியமுடையவை என்றோ நான் கருதியதில்லை. அப்படியெல்லாம் கருதாமலும், அப்படியெல்லாம் பிறர் கருதுவதற்கு எந்த அடையாளமும் இல்லாமலுமே என் படைப்புகளை எழுதிக்கிட்டு வர்ரேன். வாழ்வு குறித்தும், வாழ்வின் அர்த்தங்கள் குறித்தும், எந்தத் தீவிரமான கேள்விகளும் எழுப்பாமல் அதே சமயம் சிறுமைகளுடனும் சமரசம்
செஞ்சுக்காம, எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேனோ, அப்படியே என் எழுத்துக்கள் எழுதப்படுகின்றன. நான் எவ்வளவு நிஜமோ அவ்வளவு நிஜம், நான் எவ்வளவு பொய்யோ அவ்வளவு பொய் என் எழுத்துக்கள். 0

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்