இவர்களது எழுத்துமுறை – 32 அ.முத்துலிங்கம்

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

வே.சபாநாயகம்


1. ஒரு நல்ல எழுத்தாளர் தான் எந்த வகை எழுத்தில் பிரகாசிப்பார் என்று தெரிந்துவைத்து அதிலே பயிற்சி செய்து சிறப்படைய முடியும். இப்படித்தான் நானும் ஒருவகை எழுத்தை தெரிவு செய்து அப்படி எழுதிக்கொண்டு வருகிறேன்.

2. ஒரு சொற்தொடரை, வசனத்தை, வார்த்தையை வாசகர் ரசிக்கவேண்டும் என்பது என் விருப்பம். அவர் எழுப்பும் ‘ஆ, ஓ’ சத்தம்தான் ஆகக் கிடைக்காத பரிசு என்று நினைக்கிறேன்.

3.முதல் எழுத்தில் நாம் விரும்பிய உருவம் கிடைப்பதில்லை. அந்த உருவம் கிடைக்க கொஞ்சம் பாடுபடவேண்டும். பல தடவைகள் திருத்திய பிறகும் மனதிலே தோன்றியது பேப்பரில் வராமல் போவதும் உண்டு.

4.நான் எழுதியதை பலமுறை வாசித்து திருத்தங்கள் செய்வதுண்டு. எளிமைப் படுத்துவதுதான் நோக்கம். எழுத்து வாசகரை அடையாவிட்டால் எழுதி என்ன பிரயோசனம்.

5.அந்தக் காலத்தில் இருந்து என் கதைகளில் யாழ்ப்பாண வழக்கு இருக்கும். சம்பாஷணைகளில் அது ஒரு நிஜத்தன்மையை கொடுக்கும். ஆனால் வாசகர்களுக்கு இன்னும் நெருக்கமாக வேண்டும் என்று முழு வட்டார வழக்கில் நான் கதை சொன்னதில்லை.

6.ஒரே கூறு முறையை நான் பின்பற்றவில்லை. மாறுபட்ட முறைகளை பல கதைகளில் பரீட்சித்துப் பார்த்தபடியே இருக்கிறேன்.’செங்கல்’,’நாளை’, ‘ஏவாள்’, ‘ஆயுள்’, ‘கொழுத்தாடு பிடிப்பேன்’ என்று பலவிதமான உத்திகளையும், கூறு முறைகளையும் என் கதைகளில் காணலாம். இன்னும் பல முறைகளையும் பரீட்சித்துப் பார்க்கும் ஆசையிருக்கிறது.

அதற்காக முதலிலேயே உத்தியை தீர்மானித்துவிட்டு பிறகு நான் கதையை தேடுவதில்லை. சொல்லப்போகும் பொருள்தான் வடிவத்தையும் உத்தியையும் தீர்மானிக்கிறது. புதுமையை தேடுவதே இலக்கியம்.

7.என்னுடைய கதைகளிலும் கட்டுரைகளிலும் சில அங்கதச் சுவை கொண்டு இருக்கின்றன. அது கதைகளுக்கு அழகு சேர்ப்பதாகவும், அவசியமானதாகவும் கூட இருக்கலாம். ஆனால் கால, நேரம், இடம் தெரியாமல் எல்லா கதைகளிலும் புகுந்து விட்டால் அது சரியென்று எனக்கு படவில்லை. கதையை ஒட்டி இயல்பாக அமைவதுதான் நல்லாக இருக்கும்.

என்னுடைய கதைகள் பலவற்றில் கிண்டல் என்பது கிட்டவும் வரவில்லை. கதையின் திசையை அவை மாற்றக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்

8.உத்தி சோதனைகளில் நான் அதிக கவனம் செலுத்துவதில்லை. இன்னும் சொல்லப்போனால் பொருள்தான் உத்தியையும் தீர்மானித்து விடுகிறது.

சமீப காலங்களில் எனக்கு anti-hero வில் ஒரு பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் சாத்தியப்பாடுகள் பிரமிப்பூட்டுகின்றன. கதையை நகர்த்திக்கொண்டு போகும்போது வாசகர் ஒரு தீர்மானம் செய்ய வேண்டிய நிலமைக்கு தள்ளப்படுகிறார். அப்பொழுது நான் மெள்ள நழுவிவிடுவேன். வாசகர் எப்படியான முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதமே. அவருடைய திண்டாட்டமே என் திருப்தி. 0

Series Navigation