இவர்களது எழுத்துமுறை – 21 நீல.பத்மநாபன்

This entry is part [part not set] of 35 in the series 20101219_Issue

வே.சபாநாயகம்.


1. ‘ஒரு கவிதை அல்லது கற்பனைப் படைப்பு உள்ளுக்குள் ஆனந்தத்தை
ஆத்மானந்தத்தைத் தரத் தவறிவிட்டால் அது தரம் குறைந்ததாகி விடுகிறது.
ஆனால் அறிவியல் படைப்பாக இருந்தால் நாம் எதிர் பார்க்கும் அதிகமான
அறிவாற்றல் செழுமையில் திருப்தி அடைந்து விடுகிறோம்’ என்று
ஜான் பரோஸ் குறிப்பிட்ட ஆத்மானந்தத்தை ஒரு எழுத்தாளன் என்ற
முறையில் என் படைப்புகள் மூலம் ஆத்மசோதனையும் சுயஉணர்தலும்
பயில்வதின் வழி நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.

2. தப்போ, சரியோ தன்னிச்சையாக இயல்பாக என்னைச்சுற்றிய மனிதர்கள்
பேசும் பழமொழிகள், கொச்சைச் சொற்கள் கலந்த ஜீவத்துடிப்பான
மொழிநடைக்குப் பதிலாக ஒரு பொதுநிலை மொழியை என் அநாயசமான
எழுத்து முயற்சிக்குப் பயன்படுத்த என் அகம் துணியவில்லை. வளமையான
வக்கணையான நடையை நான் நாடவில்லை. எடுத்துக்கொண்ட கருத்தை
சுருக்கமாய் அழுத்தமாய் சொல்ல முயல்வதே என் பாணி. இவை எல்லாம்
என் தனித்தன்மை முன்னிலை கொண்ட ஒரு குறிப்பிட்ட நடைக்கு என்னை
இட்டுச் சென்றன.

3. எல்லா படைப்பு எழுத்தாளர்களையும் போல நானும் ஒரு முழுமைநாடி.
எனவே அசல் வாழ்வில் லட்சியத்துக்கும் நடப்பியலுக்கும் இடையே நிலவும்
முரண்பாடுகளையும் போராட்டங்களையும் கண்டுணர்ந்து எப்போதும்
அமைதியற்ற மனநிலைமை…இந்த மனநிலைதான் என் படைப்பாக்கத்தை,
கடந்த 50 ஆண்டுகாலத்துக்கும் மேலாக தொடர்ந்து செயலாற்றத் தூண்டவும்
சீண்டவும் செய்து கொண்டிருக்கிறது.

4. நெகிழ்வாய் இருக்க வேண்டியுள்ளது. இறுக்கத்துக்கும் நெகிழ்வுக்குமான
யுத்தத்தில் செத்தொழிபவன் கலைஞன். என் எழுத்தில் நான் கொஞ்சம்
இருக்கலாம். முழுதும் நானல்ல. எழுதும்போது நான் நானல்ல. பேனா
பிடித்ததும் அவன் தேவதையாகி விடுகின்றான்.

5. ஒரு கலைஞனை – எழுத்தாளனைப் பொறுத்தவரையில் முதலாவதும்
முடிவாவதும் அவனது ஆன்ம பலம்தான் அவன் உந்து சக்தி. அன்றும்
இன்றும் விமர்சகர்களிடம் சிலரைப்போல் எனக்கு அலர்ஜி இல்லை. ஏன்
என்றால் நானே என்னுடைய ஈவிரக்கமற்ற விமர்சகன். என் நிறைகளை
விட என் குறைகளே எனக்குத் தெரிகின்றன.

6. வாழ்க்கை என்னில் விளைவிக்கும் அனுபவத் தழும்புகள் என்னை
எழுதத் தூண்டும்போது நான் அறியாமல், எழுதும் பகைப்புலனுக்கு –
அட்மாஸ்பியருக்கு ஏற்ப ஒரு உருவம் அமைகிறது. எல்லா இஸம்களையும்
தன்னுள் அடக்கியாண்டு கலை அனுபவத்தை விளைவித்துக்கொண்டு,
நிலைத்து நிற்கும் வலு என் படைப்புகளுக்கு இருக்க வேண்டும்.
இல்லையேல் அவை செத்துவிடும். 0

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்