இவர்களது எழுத்துமுறை – 18 எம்.டி.வாசுதேவன் நாயர்

This entry is part [part not set] of 34 in the series 20101205_Issue

வே.சபாநாயகம்.


1. தொடக்கத்திலிருந்தே நான் ஒரு எழுத்தாளனாக இருக்க விரும்பினேன். வெற்றி தோல்வி பற்றி நான் கவலைப்படவில்லை. எழுத்தாளன் ஆகவேண்டும் என்பதே என் விழைவாக இருந்தது. ஏன் என்று எனக்குத் தெரியாது.

2. நான் எழுத்தாளனாக இருக்க முடிவு செய்துள்ளேன். அஃது எனது வாழ்க்கைத் தொழில்; வேண்டுமானால் என் காதல்; என் வெறி; என்று – வாழ்வை உந்தித்தள்ளும் ஆற்றல் என்று அதைக் கூறலாம்.

3. நான் ஹீரோ அல்ல….கிராமத்துக்காரன். மழை, மண், விவசாயம் என கிராமீயமானவன். என் கலை, கவனிப்பில் கருத்தரிக்கிறது. எல்லாவற்றையும் கவனிக்கிறேன்.
ஒவ்வொரு சின்ன நிகழ்ச்சியிலும் ஒரு கதை இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும். மனிதர்கள்தான் என் புத்தகம்.

4. கிராமம்தான் எனக்குள் இலக்கியத்திற்கான இன்ஸ்பிரேஷனைத் தருகிறது. நான் என் கிராமத்தை விரும்புகிறேன். எல்லாவற்றையும் பார்க்கிறேன். என் படைப்பு அப்சர்வேஷனில் இருக்கிறது. என் கதைகள் கற்பனைக் கதைகள் அல்ல. வெறும் கற்பனையிலிருந்து எதுவும் வராது. ஆனால் எழுத கற்பனையும் வேண்டும்

5. எழுதுவது எனக்குப் பயமூட்டுகிற விஷயம். கேட்கிறர்கள் என்பதற்காக நான் எதையும் எழுதிக் கொடுத்து விடுவது கிடையாது. இன்றைக்கும் பேனா எடுத்து எழுத உட்காரும்போது முதன் முதலாக பரீட்சை எழுதப் போகும் மாணவனின் மனசைப் போல் கைநடுங்குகிறது. இதுதான் என் முதல் கதை என்பதுபோல பயத்தோடு எழுதுகிறேன். எழுதுவது என்பது எனக்கு சவால். அது பெரிய போராட்டம்.

6. எழுத்துக்கலை தனக்கு ஒரு பொழுதுபோக்கு என்கிறார் ஆல்பட்டோ மொறோவியா.
எனக்கு அதைப் பொழுதுபோக்காகச் சிந்திக்க முடியவில்லை. என்றைக்குமே எழுத்து என்கிற பணி எனக்கு வேதனையாய்த்தான் இருந்திருக்கிறது. ஆத்மாவின் கடும் தாகமாய்த்தான் இருந்திருக்கிறது. வாழ்வதற்கே அவசியமான கனவாய்த் திகழ்ந்திருக்கிறது.

7. எனக்காகத்தான் நான் எழுதுகிறேன். நான் எழுதும்போது எனக்கு முன் பத்திரிகைக் காரர்கள் இல்லை. பாராட்டுகிறவர்கள் இல்லை. வாசித்து மகிழ்கிற ரசிகர்கள் இல்லை!
நான் மட்டும்தான் இருக்கிறேன்! பத்திரிகை, வாசகன், ரசிகர், அச்சுப் புத்தகம்….
இத்யாதி எல்லாம் நான் எழுதி முடித்த கதையின் பௌதீக வாழ்க்கைக்குத்தான். எழுதி முடித்த என் கதை பெறவேண்டிய உலகவாழ்வு அது! அவையெல்லாம் நான் எழுதி முடித்த பின்னர்தான் வருகின்றன. கதை வாழ்ந்த ஆத்மீக ஜீவிதம் எனக்குள்தான்.
கிளர்ந்தெழுவதும், படர்ந்து விரிந்து பரவுவதும் பூத்து வெளிவந்து குலுங்குவதும் என் இதயத்தில்தான்.

8. புகழ்வோர் புகழ் மொழிகளும் பிரசுரிப்போர் ஆணையும் எழுத்தின் தூண்டுதல் அல்ல. என் துக்கங்களும் கண்ணீர்களும் என் அவதிகளும் என் கனவுகளும் ஆசைகளும் என்னை அழுத்தித்தான் மேல்வர முந்தும்போது நான் எழுதியாக வேண்டும். ; எழுதித் தீரவேண்டும். எழுதாமல் இருக்க முடியாது. அப்படி எழுத முடியாமல் நின்றால் எங்கோ எனக்குள் கீறல்களாக அழுகை குமுறிக் கிளம்புகிறது.
அதை அமைதியாக நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

9. ஒரு புதிய கதை – முழு ஆத்மதிருப்தியோடு எழுதித் தீர்ந்துவிட்டால் அந்தக் கணத்தில் அந்த ஆனந்தக் களிமயக்கில் சொக்குகிறேன். அது சொல்லொணாத ஆனந்தம். – அது அனுபூதி – விவரிப்பதைவிட அனுபவித்தாலன்றி அதன் முழுமை தெரியப் பாதி வழியில் நின்று அறிய முடியாது.

10. நான் போதனை செய்வதில்லை. போதிக்கத் தொடங்கினால் படைப்பின் நயம் குறைந்துவிடும். அதை அரசியல்வாதிக்கோ, மறையியல் வல்லுனருக்கோ விட்டு விடலாம். 0

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்