இவர்களது எழுத்துமுறை – 15 ஆர்.கே.நாராயணன்

This entry is part [part not set] of 40 in the series 20101114_Issue

வே.சபாநாயகம்.


1. எழுதியவற்றில் எப்போதுமே நான் நிறைவு பெறுவது கிடையாது. என் முக்கிய
கவனம் எழுதவிருக்கும் புத்தகத்திலும், எழுத எண்ணிக் கொண்டிருக்கும் புத்தகத்திலும்
தான். கதையோ நாவலோ அது அச்சுக்குப் போனதுடன் அதைப் பற்றிய உற்சாகம் மறந்து
விடுகிறது. எழுதியதை நான் மீண்டும் பார்ப்பதில்லை. பார்க்கத் துணிவதுமில்லை.
வாழ்க்கையில் நான் முக்கியம் எனக் கருதுவது எது, அவற்றை எந்த அளவிற்கு என்
படைப்புகளில் வெளிப்படுத்தினேன் என்ற கேள்விக்குப் பதில் சொல்ல இயலாது.

2. வெளி நாட்டில் இருந்து கொண்டு இந்தியாவைப் பற்றி எழுத வேண்டிய ஆசிரியர்களுக்கு
தாய் நாட்டைப்பற்றி ஒரு ஏக்க மனப்பான்மை உள்ள காரணத்தால், அவர்களால் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் எழுத முடியும். யாரையும் இப்படி எழுதவேண்டும், இப்படி எழுதக்கூடாது
என்று கூறுவதை நான் வெறுப்பவன். எனினும் எங்கு வாழ்க்கை அமைந்து விடுகிறதோ அந்த
நாட்டின் உண்மை நிலையைப் படம் பிடித்துக் காட்டினால்தான் அது சாரமுள்ள உண்மைப்
படைப்பாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

3. மனித உறவைத்தான் நான் மிகவும் அதிகமாக, நெருக்கமாக மதிக்கிறேன். எந்த உருவில்
இருப்பினும், எல்லா உருவில் இருப்பினும், வீட்டிலும் சரி, வெளியிலும் சரி மனித உறவுதான்
உயிர் வாழ்வதைப் பயனுள்ளதாக ஆக்குகிறது. இந்தத் தத்துவத்தை என் படைப்புகளில்
நேர்த்தியுடன் வெளிப்படுத்தியதாகவே கருதுகிறேன்.

4. என்னுடைய படைப்புகளுக்கு யாருடைய தூண்டுகோலும் கிடையாது. நாவலை எழுதும்
போது வேறு ஆசிரியர்களின் எந்த நாவலையும் படிக்காத வண்ணம் மற்றவர்களின்
தூண்டுகோலைத் தவிர்க்கிறேன். எப்போதும் ஏதாவது ஒரு நாவலில் நான் ஈடுபட்டுக்
கொண்டுள்ளதால், மற்றவர்கள் எழுதிய எந்த நாவலையும் நான் அநேகமாகத் தவிர்க்கிறேன்.
ஏனெனில் அவற்றில் ஏதாவநு ஒரு வகையில் ஒற்றுமைத் தனமை இருக்க நேரிடலாம். அல்லது
ஏதாவது ஒரு வழியில் தூண்டுகோலாகவும் அமைந்து விடலாம்.

5. எனக்குத் தூண்டுகோலாக அமைவதெல்லாம் வாழ்க்கை, சுற்றுப்புற சூழ்நிலை, ஒரு சிறிய
பெட்டிக்கடை (street shop) இவைதான். எங்கு சென்றாலும் நான் தேடுவது வாழ்க்கையைத்தான்.
மக்கள் அவர்களின் ஈடுபாடுகள், ஆசைகள், அவதிகள் – இவற்றைத்தான் நான் தேடுவது. 0

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்