இளமையா முதுமையா

This entry is part [part not set] of 48 in the series 20060203_Issue

கவிஞர் புகாரி


இளமையின் வேகம்
தோல்வியின் சக்கரமா
வெற்றியின் ஏணியா ?

முதுமையின் நிதானம்
பாதுகாப்புக் கயிறா
வாழ்வு பறிக்கும் தொல்லையா ?
.

பயமறியா இளமை
சறுக்கியும் விழுகிறது
சாதித்தும் காட்டுகிறது

அனுபவ முதுமை
இழந்தும் நிற்கிறது
வென்றும் நிமிர்கிறது
.

இளமை தோல்விகளைப்
பொருட்படுத்துவதில்லை
பொருட்படுத்தாதவை
தோல்விகளாவதில்லை

முதுமை தோல்விகளை
ஏற்பதில்லை
அனுபவ நிதானத்தால்
தோல்விகள் வருவதில்லை
.

இளமை அனுபவிக்கும்
சின்னச்சின்ன சிலிர்ப்புகளில்
முதுமை புல்லரிக்காது

முதுமை அனுபவிக்கும்
மெளன இன்பங்களை
இளமை சீரணிக்காது
.

எல்லாவற்றுக்கும்
பழமொழிகள் சொல்லும்
முதுமை

எல்லாவற்றையும்
தொட்டுத் தொட்டுச்
செலவாகும் இளமை
.

இளமையின் காயம்
வெறும் தசைப் பிளவு

முதுவையின் காயமோ
எலும்பு முறிவு

.

இளமையின் காயம்
வளர்பிறையாய் மறையும்
பொர்ணமியாய் மீளும்

முதுமையின் காயம்
தேய்பிறையாய் வளரும்
கருநிலவாய் ஆகும்
.

சிந்தனைச் சாதனை
முதுமையின் வெற்றி
செயலாற்றும் சாதனை
இளமையின் வெற்றி

நிதான முதுமையோடு
வேக இளமை சேர்ந்தாலோ
தோல்வியென்பதே
பொய்யாகிப் போகும்
.

இளமையைப் கண்டு
முதுமை
புத்துணர்ச்சி பெறுவதும்
முதுமையைக் கண்டு
இளமை
சிந்தனை கொள்வதும்
இலவசக்
கொடுக்கல் வாங்கல்
.

பேரனிடம் சொன்னால்
நொடிப்பொழுதில்
முடிப்பான் என்று
பெருமைப்படுவார் தாத்தா

என் தாத்தாவிடம் கேட்டால்
அற்புத ஆலோசனைகள்
அள்ளிப் பொழிவார் என்று
பீற்றிக்கொள்வான் பேரன்

buhari@gmail.com

Series Navigation

கவிஞர் புகாரி

கவிஞர் புகாரி