இலை போட்டாச்சு! – 21- தவலை வடை

This entry is part [part not set] of 32 in the series 20070322_Issue

பாரதி மகேந்திரன்


தவலை வடை

தேவைப்படும் பொருள்கள்

பச்சரிசி 300 கிராம்
உளுத்தம்பருப்பு 100 கி
துவரம்பருப்பு 100 கி
கடலைப்பருப்பு 100 கி
பாசிப்பருப்பு 2 மே. க.
மிளகாய் வற்றல் 10
பெருங்காயப் பொடி 1 தே.க. (தலை தட்டி)
எண்ணெய் அரை கிலோ
நெய் 1 மே. க.
கடுகு 1 தே.க.
தேங்காய்ச் சில்லுகள் 1 பெரிய பாதி அல்லது முழுச் சிறியதேங்காய்
(பற்களாய்க் கீறியது)
கறிவேப்பிலை பொடியாய் அரிந்த 10 ஆர்க்கு இலைகள்
உப்பு ஒன்றரை மே.க. – அல்லது தேவைப்படி
மஞ்சள் பொடி 2 சிட்டிகை
கொத்துமல்லித் தழை ஆய்ந்து கிள்ளியது – 2 கைப்பிடிகள்
முந்திரிப்பருப்பு உடைத்துக் கிள்ளியவை – 50 கிராம்
இஞ்சித்துண்டங்கள் 3 மே.க. (தோல் சீவிப் பொடியாய் அரிந்தது)

முதலில் பாசிப்பருப்பைக் களைந்தபின் தனியாகத் தண்ணீரில் ஊற வைக்கவும். மற்ற பருப்புகளை அரிசியுடன் சேர்த்துக் களைங்து, மொத்தமாய் ஊற வைக்கவும். இவை இரண்டு மணி நேரம் போல் ஊறிய பின், பாசிப்பருப்பைத் தவிர மற்றவற்றை மின் அம்மியில் உப்புடன் தண்ணீர் சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். மிளகாய் வற்றலையும் இவற்றுடன் சேர்த்து அரைக்கலாம், அல்லது பொடிப்பொடியாகக் கடைசியில் கிள்ளியும் போடலாம். இவ்வாறு அரைத்த மாவுடன், ஊறிய பாசிப்பருப்பு, பெருங்காயப் பொடி, கறிவேப்பிலை, தேங்காய்ச் சில்லுகள், மஞ்சள் பொடி, முந்திரிப் பருப்பு, கொத்துமல்லித் தழை, இஞ்சித் துண்ட்டங்கள் ஆகியவற்றயும் சேர்த்துக் கலக்கவும். இந்த மாவு கரண்டியால் எடுத்து எண்ணெய்யில் ஊற்றுகிற அளவுக்கு நெகிழ்த்தியாக இருக்க வேண்டும். ரொம்பவும் ஓட, ஓட இருந்தால் சரியாக வராது. எண்ணெய் குடிக்கும். எனவே சரியான பதம் வரும்படி கவனமாய்த் தண்ணீர் கலக்கவும். சில நாள் அனுபவத்துக்குப் பிறகு மாவை அரைக்கும் போதே சரியான அளவுக்குத் தண்ணீரை ஊற்றக் கற்றுக் கொண்டுவிடலாம்.

பின்னர், ஒரு கரண்டியில் நெய்யை ஊற்றி அதில் கடுகைத் தாளித்து அதை மாவில் ஊற்றிக் கலக்கவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்த பின் கலந்து வைத்துள்ள மாவைக் கரண்டியால் எடுத்து ஊற்றி, இரண்டு நிமிட நேரத்துகுப் பின் அப்பக்குத்தி அல்லது கூரிய கரண்டி / கத்தி முனையால் இவ்வடைகளில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் குத்தவும். வடைகள் உள்ளும் புறமும் நன்றாக அப்போதுதான் வேகும். அவ்வப்போது திருப்பி, அவை சிவந்த பின் சல்லடைக் கரண்டியால் எண்ணெய்யை வடித்து விட்டு எடுக்கவும். (அரைத்த மாவை உடனே வடை தட்டுவதை விட, அதை அப்படியே 2, 3 மணி நேரம் விட்டு விட்டு வடையாக ஊற்றினால் சிறு புளிப்புடன் அதிகச் சுவையுடன் இருக்கும். புளிப்பு அதிகம் தேவைப்படுபவர்கள் அவரவர் விருப்பம் போல் அதிக நேரம் ஊற வைத்தபின் செய்யலாம்.)

mahendranbhaarathi@yahoo.com


பாரதி மகேந்திரன்

Series Navigation

பாரதி மகேந்திரன்

பாரதி மகேந்திரன்