இலை போட்டாச்சு – 11 பசியூக்கி (appetizer)

This entry is part [part not set] of 32 in the series 20070118_Issue

பாரதி மகேந்திரன்


இலை போட்டாச்சு !

பசியூக்கி (appetizer)

“பார்ட்டி” என்றாலே சாப்பாட்டு ராமன் / ராமிகளுக்குக் கொண்டாட்டம்தான். வகை வகையான, வண்ண வண்ண அயிட்டங்களைப் பார்த்தாலே நாவு ஒரு நீர்மூழ்கிக் கப்பல் ஆகிவிடுகிறது. ஆனால் வயிற்றில் இடம் வேண்டாமா? எனவேதான் இந்தப் பசியூக்கி!

தேவையானவை: தக்காளி 5
சாம்பார் வெங்காயம் 10
எலுமிச்சைச் சாறு 2 மேசைக் கரண்டி
புதினா – ஆய்ந்தது 1 கிண்ணம்
கொத்துமல்லி – ஆய்ந்தது 1 கிண்ணம்
கறிவேப்பிலை 2 மேசைக்கரண்டி
வெல்லம் – பொடித்தது 1 கிண்ணம்
கிராம்பு 4 அல்லது 5
சோம்பு 1 தேக்கரண்டி
ஏலம் 10
மஞ்சள் பொடி 1 தேக்கரண்டி
தோல் நீக்கித் துருவிய இஞ்சி 2 மேசைக் கரண்டி
திப்பிலி 1/2 தேக்கரண்டி
பேரீச்சம்பழம் 4 அல்லது 5
பூண்டு 5 அல்லது 6 பற்கள்
மாங்காய்த்துருவல் 2 மேசைக் கரண்டி
பச்சை மிளகாய் 4 அல்லது 5
மசாலாப் பொடி 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி 1 தேக்கரண்டி
உப்புப் பொடி தேவைக்கு ஏற்ப
எண்ணெய் அல்லது நெய்
(அல்லது இரண்டுமாக) 3 மேசைக்கரண்டி

கடாயில் எண்ணெய் காய்ந்ததும், முதலில் சாம்பார் வெங்காயத்தையும் பூண்டையும் போட்டு, முக்கால் வதங்கலுக்குப் பின், பச்சை மிளகாய், அரிந்த (முடிந்தால் விதை நீக்கிய) தக்காளி, புதினா, கொத்துமல்லி, மாங்காய்த்துருவல், இஞ்சித்துருவல், கறிவேப்பிலை ஆகியவற்றை இந்த வரிசையில் ஒவ்வொன்றாக ஐந்தாறு நொடிகள் இடைவெளிவிட்டுப் போட்டு வதக்கிக் கடைசியில் உப்பையும் மஞ்சள் பொடியையும் பெருங்காயப் பொடியையும் போட்டுக் கலந்த பின் வதங்கலை எடுத்து வைக்கவும்.

பிறகு, கடாயில் மீந்துள்ள எண்ணெய்யில் கிராம்பு, ஏலம், சோம்பு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை வாசம் வரும் வரை வறுத்து, மாசாலாப் பொடியையும் போட்டுக் கிளறி இறக்கவும். (அல்லது இவற்றை முதலில் வறுத்த பின் வதக்கலைச் செய்யலாம். அவரவர் வசதி. ஊற்றிய எண்ணெய் பற்றவில்லையெனில் மேலும் கொஞ்சம் ஊற்றலாம்.)

பின்னர், மின் அம்மியில் முதலில் வறுத்தவை, அவற்றின் மேல் வதக்கியவை, இவற்றின் மேல் பொடிப்பொடியாய் நறுக்கிய பேரீச்சம்பழத் துண்டுகள்,வெல்லப் பொடி, ஆகியவற்றைப் போட்டுச் சிறிது தண்ணீர் ஊற்றி மிக நன்கு “மை”யாக அரைக்கவும். நன்றாக அரைபட்டதும் இறக்கிப் போதுமான நீர் ஊற்றி நன்கு கலக்கவும். பின், எலுமிச்சைச் சாற்றை ஊற்றிக் கலக்கவும். தேவைப்பட்டால், உப்பும் சேர்க்கலாம். இப்போது வயிற்றிலும் “ஜடராக்னி” நீர் சுரக்க வைக்கும் பசியூக்கி தயார்! (சில நாசூக்குக்காரர்கள் திப்பி இருப்பின் வடி கட்டுவார்கள். அது நல்லதன்று.) பிறகென்ன? அடுத்த பார்ட்டிக்கு உங்களுக்கு அழைப்பு வருமா என்பது சந்தேகம்தான்! அதனால் என்ன? அதை அப்போது பார்த்துக் கொள்ளலாமே!

mahendranbhaarathi@yahoo.com பாரதி மகேந்திரன்

Series Navigation