இலை போட்டாச்சு: 6. கொள்ளுப் பொடி

This entry is part [part not set] of 31 in the series 20061214_Issue

பாரதி மகேந்திரன்


மனிதர்களைப் போலவே நாலுகால் உயிரினங்களில் சில கொழு கொழுவென்று பருக்கக் கூடும். ஆனால் குதிரைகளில் தொப்பையும் தொந்தியுமானவற்றை நாம் பார்த்ததுண்டா? சற்றே பூசினாற்போன்ற சதைபிடிப்புடனும், பளபளப்புடனும் இருக்கும் குதிரைகளைப் பார்க்கலாமே தவிர, குண்டுக் குதிரைகளைப் பார்ப்பது அரிதுதான். ஏன்? அறவே இல்லை என்று கூடச் சொல்லிவிடலாம். குதிரைகளின் இந்தக் கட்டுக் கோப்பான உடலமைப்புக்கு என்ன காரணம்? வேறென்ன? கொள்ளுதான்!

குதிரைகள் சாப்பிடும் அந்தக் கொள்ளை மனிதர்களும் சாப்பிட்டால் “குதிரைத் திறன்” அவர்களிடமும் அதிகரிக்கும் என்பதோடு, உடம்பில் ஊளைச் சதை போடாமல் அது இறுக்கமாகவும் வலிமையாகவும் இருக்கும். முக்கியமாய் நம் கால்கள் வலுவுள்ளவையாக இருக்கும். குதிரை களைப்பே யடையாமல் நெடுந்தொலைவு ஓட இயல்வது கொள்ளால்தான்! எனவே, கொள்ளால் நாமும் பயன் அடையலாமே! கொழுத்தவனுக்குக் கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு என்பது நமது முது மொழியாகும். அதாவது கொழுத்தவன் கொள்ளு உண்ணவேண்டும். உடம்பு இறுகும். சதைப்பற்று அற்று இளைத்திருப்பவன் சதை போட விரும்பினால் எள்ளை உண்ண வேண்டுமாம்!

கொள்ளுப்பொடிக்குத் தேவையானவை:

கொள்ளு . . . 200 கிராம்
துவரம்பருப்பு . . . 200 கிராம்
மிளகு ஒன்றரை மேசைக் கரண்டி
மிளகாய் வற்றல் . . . 4 அல்லது 5
உப்பு ஒன்றரை தேக்கரண்டி
(அல்லது தேவைப்படி)
கறிவேப்பிலை இரண்டு கைப்பிடி இலைகள்
பெருங்காயப் பொடி ஒன்றரை தேக்கரண்டி
சீரகம் 1 மேசைக்கரண்டி

முதலில், கொள்ளு, துவரம்பருப்பு ஆகியவற்றைத் தனித் தனியாக எண்ணெய் ஏதும் ஊற்றாமல் வெறும் இரும்புக் கடாயில் வாசம் வரும் வரை நன்கு வறுத்துக்கொள்ளவும். பிறகு, மிளகை – அது படபட வென்று பொரியும் வரை – வறுத்து எடுக்கவும். பிறகு மிளகாய் வற்றலையும் அவ்வாறே அதன் ஈரப்பசை போய் முறு முறு வென்று ஆகும் வரை வறுக்கவும். உலர்ந்த கறிவேப்பிலையாக இருந்தால் அப்படியே பொடிக்கான பொருள்களோடு சேர்த்துத் திரிக்கலாம். பச்சைக் கறிவேப்பிலையாக இருந்தால், இலைகளை ஆய்ந்து இரும்புக் கடாயில் அவற்றின் ஈர்ப்பசை நீங்கும் வரையில் வறுத்துக்கொள்ள வேண்டும். சீரகத்தையும் பெருங்காயப் பொடியையும் ஒன்றாக இலேசாய் இதே போன்று வெறும் கடாயில் வறுக்கவும். பிறகு, மேலே சொல்லப்பட்டுள்ளா எல்லாப் பொருள்களையும் ஒன்றாய்க் கலந்து மின் அம்மியில் திரிக்கவும். ரொம்பவும் மையாகப் பொடிக்காமல் சற்றே கரகரப்பாகப் பொடித்தால் வாய்க்குச் சுவையாக இருக்கும்.

இந்தப் பொடியைச் சாதத்தில் தேவைப்படும் அளவுக்குக் கலந்து நெய் அல்லது நல்ல எண்ணெய் ஊற்றிக்கொண்டு பிசைந்து சாப்பிடலாம். சாதம் சுடச் சுட இருந்தால் சுவை கூடும். நெய்யானால் உருக்கியதை வார்த்துக்கொள்ளுவது நல்லது.

ஊளைச் சதைப் பருமனாலும், அதன் விளைவான முட்டி வலியாலும் அவதிப் படுகிறவர்களுக்கு இது ஓர் அருமருந்தாகும்.

mahendranbhaarathi@yahoo.com
பாரதி மகேந்திரன்

Series Navigation

பாரதி மகேந்திரன்

பாரதி மகேந்திரன்