இலங்கையில் வழங்கும் தாலாட்டுப்பாடல்கள்

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்


நாட்டுப் பாடல்களுள் இப்போது வழக்கிலுள்ள பாடல் வடிவங்களுள் ஒன்றாக தாலாட்டுப்பாடல்களைக் கூறலாம். குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இவை பாடப்படுக்pன்றன. இத்தாலாட்டுகள் தமிழ் இலக்கியங்களிலே ஒரு பகுதியாக முக்கிய இடம் பெற்றுள்ளன. பெரியாழ்வார் திருமாலைத் தாலாட்டுவதை அவரது திருமொழியில் காணலாம். பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தத்திலே தால் என்பது ஒரு உறுப்பாகக் கூறப்பட்டுள்ளது. பிற்காலப்புலவர் பலர் ஆண்பிள்ளை தாலாட்டு பெண்பிள்ளை தாலாட்டு எனவும் பாடியுள்ளனர்.தால் என்றால் நாக்கு. நாவினால் அசைத்துப் பாடப்படுவதால் தாலாட்டு எனக்கூறப்படுகிறது என்பர்.

வாய்மொழி மரபில் இத்தாலாட்டுப் பாடல்களைப் பாடுவோர் குழந்தையின் தாய், பேத்தி,சகோதரி அல்லது தாயின் சகோதரி ,தந்தையின் சகோதரி, உறவுப்பெண்கள் போன்றோராவர். மிகச்சில சந்தர்ப்பங்களில் ஆண்கள் பாடுவர். இத்தாலாட்டுப் பாடல்கள் ஆராட்டு (மட்டக்களப்புவழக்கு), ஓராட்டு,(யாழ்வழக்கு) ராராட்டு (தமிழ்நாடு) எனவும் பேச்சு வழக்கில் வழங்கப்படுகின்றன. இவை தூங்குவதற்குரிய ஓசையுடையனவாய் ஆரம்பத்தில் ஒரு ஓசை ஒழுங்கையுடையதாய் குழந்தை தூங்கக் கூடிய வகையில் அமைகின்றன. அவற்றின் ஆரம்பம் பின்வருமாறு அமையும்.இதனுடைய இராகம் நீலாம்பரியில் அமைகிறது என்பர்.

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ அல்லது

ஆராரோ ஆரிவரோ
ஆரிவரோ ஆராரோ அல்லது

ஓராரோ ஓரிரரோ
ஓரிரரோ ஓராரோ அல்லது

ஓராரோ ஓரிவரோ
ஓரிவரோ ஓராரோ

ராரிர ராராரோ
ராராரோ ராரிர

எனவரும் இத் தொடக்கத்துடன் பாடத் தொடங்குவர். அப்பாடல் வரிகளில் குழந்தை ஏன் அழுகிறது.அதற்கு யார் அடித்தார்கள் குழந்தையின் அழகு,குடும்ப உறுப்பினர் குழந்தைக்குச் செய்யக்கூடிய சன்மானங்கள், கடமைகள் என்ன எனக் கேட்கப்படுவதுடன் தாயின் துயரமும் பாடப்படுவதுண்டு தமிழ்நாட்டுத் தாலாட்டுப் பாடல்களில் சில புராணக் கதைகளும் தாலாட்டாகப் பாடப்படுவதை த.சண்முகசுந்தரம் நாலு வகைப் பூவெடுத்து என்ற தனது நூலிலே எடுத்துக்காட்டியுள்ளார். இவ்வகையில் சொக்கர் மீனாள் தாலாட்டு இராமர் தாலாட்டு போன்றன பாடப்படுகின்றன. இலங்கையில் கதைகள் தாலாட்டுகளாகப் பாடப் படுவதில்லை.

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ

ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு

கண்ணே யடிச்சாரார்
கற்பகத்தைத் தொட்டாரார்
தொட்டாரைச் சொல்லியழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்
அடிச்சாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்

எனப் பாடும் போது குழந்தையை அடித்தவர்கள் யார்.என்று கேட்டு அடித்தவர்கள் யார் என்று குழந்தை சொன்னால் அவர்களுக்குத் தண்டனைகள் செய்வோம் என்று தமது வாழ்வியற் சிந்தனையில் நின்று பாடுவதைக் காணலாம். குழந்தைக்கு இது விளங்குமா என்பது வேறு விஷயம். உண்மையில் குழந்தையை யாரும் அடித்திருக்க மாட்டார்கள். எனினும் குழந்தை அழுவதற்குக் காரணம் யாரோதான என்பதாகக் கற்பனை பண்ணிப்பாடுவர்;.

மாமன் அடித்தானோ
மாதாளங் கம்பாலே
அண்ணன் அடித்தானோ
ஆவாரங் கொப்பாலே
பாட்டி அடித்தாளோ
பால் வடியும் கம்பாலே (யாழ்ப்பாணம்)

மாமி அடித்தாளோ
மாதாளந் தண்டாலே
அண்ணன் அடித்தானோ
அருகாணி; கொடியாலே (மட்டக்களப்பு)

என அடித்தவர்கள் யாரென உறவினரைக் குறிப்பிட்டும் பாடுவர்.ஆனால் அவ்வாறு குறிப்பிடப்படும் உறவினர்கள் உண்மையில் குழந்தையை நேசிப்பவர்களாகவே யிருப்பர்.

பச்சை இலுப்பை வெட்டி
பால் வடியத் தொட்டில் கட்டி
தொட்டிலுமோ பொன்னாலே
தொடுகயிறோ முத்தாலே

எனவரும் அடிகளில்; குழந்தையைத் தொட்டிலி லிடும் போது குழந்தையை வளர்த்துவதற்காக செய்யப்படும் தொட்டிலின் தன்மை பற்றிப் பேசப்படுவதைக் காணலாம். அவள் ஏழையாயினும்கூட இப்படித்தான் பாடுவாள்.
பொன்னால் தொட்டில் செய்து, முத்தால் கயிறு செய்து ,ஆட்டுவதாக கற்பனை செய்வது அவளின் மகிழ்ச்சியைக் காட்டும். தமிழ்நாட்டுத் தாலாட்டுப் பாடலிலே சிறிது மாற்றத்தைக் காணலாம்.

பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டிலிட்டு
பவளக்கால் தொட்டிலிட்டு
பாலகனே நீயுறங்கு என வரும் அது.

குழந்தையை முத்துக்கும் விலை மதிப்பற்ற பொருட்களுக்கும் இனிமையான பொருட்களுக்கும் ஒப்பிட்டுப் பாடுகின்றனர்.

பின்வரும் பாடல் வரிகளிலே அதனைக் காட்டும்.

கொஞ்சிய மகனே
குமரப்பரிமளமே

கண்ணே நவமணியே
கற்கண்டே செந்தேனே

முத்தான முத்தோ நீ
முது கடலில் ஆணி முத்தோ
சங்கீன்ற முத்தோ நீ
சமுத்திரத்தில் ஆணி முத்தோ.

ஆண்பனையில் நொங்கெ
அணில் கோதா மாம்பழமே

தேடக் கிடைக்காத
தௌ;ளமுதே சர்க்கரையே

என்றெல்லாம் குழந்தையைப் புகழ்ந்து பாடப்படுகிறது. அத்துடன் குழந்தை கல்வியில் முன்னேற வேண்டும் என்பது தாலாட்டுப் பாடலில் கூறப்படுகிறது.

நீட்டோலை வாசிக்கத் தம்பிக்கு
நெடுங்குருத்து வெள்ளோலை
வெள்ளோலை வாசிக்கத் -தம்பி
வெள்ளாளர் பிள்ளையல்லோ

வண்டு;ப்பனையோலை
வார்ந்தெடுத்த நல்லோலை
கண்டுப் பனையோலை
தம்பிக்குக் கணக்கெழுத நல்லோலை

மகன் எழுதிப்படிக்க நெடுங் குருத்தை நீட்டோலையாக வெட்டி எழுதுவது பற்றியும் கண்டுப் பனையோலையில் கணக்கெழுதுவது பற்றியும் தாய் கூறுவதை இதில் காணலாம்.
அதுமட்டுமல்லாது அந்தச்சமூகத்தின் சாதியமும் வெளிப்படுவதைக் காணலாம்.

வெள்ளோலை வாசிக்கத் -தம்பி
வெள்ளாளர் பிள்ளையல்லோ

எனவரும் வரிகள் அவர்கள் தம் குழந்தைகட்குச் சாதியத்தையும் சேர்த்துப் பெருமையாகக் கூறுவதைக் காட்டும் அவர்களே கல்விக்குரியவர்கள் என்ற சிந்தனையும் அதனூடே தொனிக்கிறது.

அது மட்டுமல்லாது தமிழர் உறவு முறைகளும் உறவினர்களின் பொறுப்புகளும் கூட இப்பாடல்களில் வெளிப்படுத்தப் படுகின்றன. தமிழ்ச் சமூகத்தில் தாய்மாமனுக்கு முக்கிய இடம் உண்டு. இத்தாய்மாமன் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய கடன்கள் பல உண்டு. அக்கடன்களும் தாலாட்டில் எடுத்துக் கூறப்படுவதுண்டு.

ஆண்டம்மான் என்ன தந்தான்
ஆனை கொடுத்துவிட்டான்.
குட்டி யம்மான் என்ன தந்தான்
குண்டு மணித் தொட்டிலிட்டான்
செல்லம்மான் என்ன தந்தான்
செம்பவளத் தொட்டிலிட்டான்

என மாமன்மார் கடமைகள் கூறப்படுகின்றன.மாமன்மார் இவற்றை வழங்காவிடினும் வழங்கியதாகவே பாடப்படும். அத்துடன் அம்மாமன்மார் மருமகனுக்காக மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கின்றனர் என்பதையும் தாலாட்டுப் பாடல்களில் தெரிவிக்கின்றனர்.

பொற்சங்கால் புகட்டினால்
புத்திகுறையுமெண்டு
வெள்ளியால் புகட்டினால்
வித்தை குறையுமெண்டு
நடுக்கடலில் மூழ்கி
நாரணனைச் சங்கெடுத்து
திருப்பாற் கடலில்
திருமாலின் சங்கெடுத்து
பொருக் கென்றெழுந்து
புறப்பட்டா ருங்களம்மான். (யாழ்ப்பாணம்)

தாய்மாமன் தானிங்கே
தங்கநகை வைரங்கள்;
வாங்கியே வருவார்
வருந்தாதே என்மகனே (மட்டக்களப்பு)

எனவரும் அது. அதுமட்டுமல்லாது குழந்தை இல்லாத பெண்கள் சமூகத்தில் தூற்றப்படுவதைப் பற்றியும்; தாலாட்டுப் பாடல்களில் தாய்மார் குறிப்பிடுகின்றனர்.குழந்தையில்லாத இப்பெண்கள் சமூகத்தால் மலடி என்று அழைக்கப்படுவர். அதனைச் சொல்லி தனது மலட்டுத்தன்மையை நீக்க வந்த குழந்தையாக அதைக் காண்கிறாள்.
மலடி மலடியென்று
மாநிலத்தோர் ஏசாமல்
மலடிக்கொருகுழந்தை
மாயவனார் தந்த பிச்சை
இருளி இருளியென்று
இருநிலத்தோர் ஏசாமல்
இருளிக்கொரு குழந்தை
ஈஸ்வரனார் தந்த பிச்சை (யாழ்ப்பாணம் )

தங்க மகனே –அழகுகண்டார்
தனிமலடு தீர்த்தவனே

பிள்ளை வேணுமெண்டு
நாங்க கதிர்காமம் போகையிலை
கதிர்காமக்கந்தன்
பிள்ளைக்கலி தீர்த்தாரையா.

மைந்தன் இல்லையென்று
மாமாங்கம் போகையிலை
மாமாங்கச் சாமிஎங்கள்
மனக்கவலை தீர்த்தாரையா

இலை தீய்ந்து கொடிகருகி
இல்லையென்று போகையிலை
மாரிபோல் வந்து
மனக்கவலை தீர்த்தாயே (மண்டூர், மட்டக்களப்பு)

இவ்வாறாக இத்தாலாட்டுப்பாடல்கள் மக்களின் வாழ்வில் குழந்தைகளின் சிறப்பையும் பற்றி எடுத்துக் கூறுகின்றன. எனினும் அவை தற்போது மறைந்து வருகின்றன. இயந்திர வாழ்க்கை தாயைப்பிள்ளை பற்றி சிந்திக்க விடுவதில்லை. இதனாலும் படித்தவர்கள் மட்டுமல்லாது பெண்கள் எல்லோருமே பெரும்பாலும் இத்தாலாட்டைப்பாடுவது
அநாகரிகம் எனக்கருதி தாலாட்டுப்பாட விரும்பாமையும் பிள்ளைகளை நித்திரையாக்கக் கூடிய பதிலீட்டு விடயங்கள், விளையாட்டுப் பொருட்கள், சூப்பிகள் போன்றனவும் பாடற்பதிவுகள் போன்றனவும் வந்து சேர்ந்தமையும் இதற்குக் காரணங்களாகும். எனவே எல்லா நாட்டுப்பாடல்களும் போன்று இவையும் பாதுகாக்கப்பட வேண்டியவையே.


murugathas1953@yahoo.com

Series Navigation