இலக்குகள்

This entry is part [part not set] of 34 in the series 20030607_Issue

பவளமணி பிரகாசம்


விஞ்ஞான வளர்ச்சியால் விளைந்த யந்திர புரட்சியால் உலகில் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து விட்டது. கட்டை வண்டியில் பயணம் செய்த காலம் போய் ஜெட் பிரயாண காலம் வந்து விட்டது. புறாக் காலில் கடிதம் கட்டியனுப்பிய காலம் போய் ஈமெயிலில் நொடியில் தொடர்பு கொள்ளும் வசதி வந்து விட்டது. உலகம் சுருங்கி மின்னணு கிராமமானது. இன்றைய மனிதன் தன் மூதாதையர்களைவிட மிகவும் சுகவாசியாக, ஆரோக்கியமாக, நீண்ட ஆயுளுடன் வாழ்கிறான். இதெல்லாம் அறிவியல் ஆராய்ச்சியால் கண்ட ஆரோக்கியமான பலன்கள். நிஜமும், நிழலும் சேர்ந்தே இருப்பது போல இந்த அபரிதமான வளர்ச்சிக்கு ஆரோக்கியமற்ற பக்கவிளைவுகளும் சேர்ந்தே வளர்ந்து பெரும் பிரச்சினையாகிவிட்டன. அதற்காக காலசக்கரத்தை பின்னோக்கி நகர்த்த முடியாது – மின்சாரத்தை மறந்து விட்டு மெழுகுவர்த்தியுடன் இருளில் புழங்க முடியாது. பிரச்சினைகளை அலசி ஆராய வேண்டும், அறிவுபூர்வமாக தீர்வு காண வேண்டும்.

மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் பெரிய வீடுகளில் அண்ணன், தம்பி குடும்பத்தினர் கூட்டமாக வாழ்ந்து வந்தனர். பொது வருமானம், பொது பராமரிப்பு, பொது நன்மைகள். அனைத்து வயதினருக்கும் போதுமான கவனிப்பும், போதுமான பாதுகாப்பும் இருந்தது. அடுத்து உத்தியோக நிமித்தமாய் இளம் தலைமுறையினர் கூட்டு குடும்ப முறையிலிருந்து பிரிந்து தனிக் குடும்பமாய் வாழத் துவங்கினர். அடுத்து வந்தது பெண்களும் வேலைக்கு செல்லும் புதுப் பழக்கம் – முன்பும் பள்ளிகளில், ஆஸ்பத்திரிகளில், அரசு அலுவலகங்களில் பெண்கள் வேலை பார்த்தார்கள். அவர்கள் விகிதம் சிறியது. அவர்களெல்லாம் பெரும்பாலும் கணவனை இழந்தபின் தன்னைத்தானே கெளரவமாக காப்பாற்றிக் கொள்ள நினைத்தவர்கள், கல்யாணமே வேண்டாமென முதிர்கன்னிகளாய் இருந்துவிட்டவர்கள், வெளியே போய் வேலை செய்வதில் சம்பாதிக்கும் காரணத்திற்கு நிகராக ஒரு சேவை நோக்கத்தையும், அதற்காக சிற்சில தியாகங்களை மனமுவந்து செய்யும் மனப்போக்கையும் கொண்டவர்கள் – இப்படித்தான் இருந்தது நிலைமை.

இன்றோ பெண்கள் வேலை செய்யாத இடமே இல்லை. அரசு அலுவலகங்களில், தனியார் நிறுவனங்களில், வங்கிகளில் என சிறிதும் பெரிதுமான பல அலுவலகங்களில் பெண்கள் பணிபுரிகிறார்கள். இந்த இடங்களில் இவர்களுக்குப் பதில் பணி புரிய ஆண்கள் இல்லையா, ஆண் ஜனத்தொகை குறைந்துவிட்டதா ? இல்லை. பெண்களுக்கு தங்கள் சாமர்த்தியத்தை நிரூபிக்க வாய்ப்புகளும், ஆதரவும் அதிகரித்து விட்டன. படிப்பில் முன்னேறி வேலை வாய்ப்புகளை போட்டியிட்டு கவர்ந்து ஆண்களை விட அதிக முயற்சியுடன் வேலையிடங்களை பெண்கள் கைப்பற்றிக் கொண்டிருக்கின்றனர். இதை எத்தனை ஆண்கள் உணர்ந்து உண்மையாக முன்னேற – பெரும்பான்மை பணிகளை தக்க வைத்துக் கொள்ள – முயல்கிறார்கள் ? திறமை குறைந்த, வேலையில்லா இளைஞர்கள் கூட்டம் பெருகி வருகிறது. பெண்களை சீண்டுவது, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது எல்லாம் அதிகரித்து விட்டது.

ஆண்கள் மட்டுமே சம்பாதிப்பவர்கள், குடும்பத்தை சம்ரட்சிப்பவர்கள் என்ற கருத்து மறைய ஆரம்பித்து விட்டது. பெண் சம்பாத்தியத்தில் குடும்பத்தின் வசதிகளும், வளர்ச்சியும் கிடைப்பதில் கெளரவக் குறைச்சல் எதுவும் இப்போது கிடையாது.

குடும்பங்களில் பணத்தேவைகள் பெருகிக் கொண்டே போகின்றன. வயிறார உண்ணவும், முழுதாக உடுத்தவும், ஆரோக்கியமாக வாழவும் மட்டும் விரும்பும் எளிய மனப்பான்மை மறைந்து விட்டது. மேலும் மேலும் வசதிகள் தேவைப் படுகின்றன. சந்தையில் விற்கும் அனைத்தின் மேலும் ஆசை வருகிறது. போதுமென்ற மனமில்லை. எதிலும் திருப்தி அடையாத, இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க முயலும் மனோபாவம் தான் எங்கும் பரவியுள்ளது. வரதட்சிணை கொடுமை குறையவில்லை. ஒரு பெண்ணின் திருமணம் இன்னமும் ஒரு மிகப் பெரிய செலவினமாகவே இருக்கிறது. இவையெல்லாம் பெண்களை வேலைக்குச் செல்ல உந்தித் தள்ளும் காரணங்கள். இருநூறோ, இரண்டாயிரமோ சம்பளமாக வாங்கிட வேண்டுமென்ற முனைப்புடன் எல்லா தட்டுகளிலும் பெண்கள் சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள்.

பின்னணி இப்படி இருக்கும் போது பெண்ணின் தாய் பதவிக்குத்தான் சோதனை பெரிதாக வந்துள்ளது. முன்பு போல முழு நேரத்தையும் தன் குழந்தைக்காக ஒதுக்க முடியவில்லை. பார்த்து, பார்த்து பாங்காக வளர்க்க முடியவில்லை. அன்னையின் அன்புக்கவசம் விலகி, எடுப்பார் கைப்பிள்ளையாக, வயதான பாட்டியிடம், கூலிக்கு அமர்த்தப்பட்ட தாதியிடம் வளர வேண்டிய சூழ்நிலை. பள்ளிப் பிராயத்து பயங்களும், ஆசைகளும், கவலையற்ற மனப்பான்மையும் இல்லாமல் வயதுக்கு மிஞ்சிய முதிர்ச்சியுடன் ‘Home Alone ‘ அனுபவங்களை சந்தித்தாக வேண்டிய கட்டாயம். பெரிய மனுஷ தோரணையுடன் நடந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம். குருவி தலையில் பனங்காய். குழந்தையின் ஏமாற்றங்கள் விபரீதமாக வடிகால் தேடுகின்றன. பெற்றவளின் குற்ற உணர்ச்சியும் குழந்தையை கண்டிக்க தடையாய் இருக்கிறது. இருபக்கமும் மனதில் இழப்பு உணர்ச்சி. ஈடுகட்ட இருக்கவே இருக்கிறது பணம் வாங்கித் தரும் அநாவசிய ஆடம்பர சுகங்கள். உடல் உபாதைக்கு மருத்துவர்கள் இருப்பது போல மனச் சிதைவை தீர்க்க மனோததுவ நிபுணர்கள் பெருமளவில் தோன்றியுள்ளனர்.

ஆணுக்கு நிகராய் பொருளாதார மேம்பாட்டுத்துறையில் நுழைந்துவிட்ட பெண்ணின் பிரத்தியேக, ஏகபோக தாய் ஸ்தானத்திற்கு சோதனை. பிறந்த சிசுவிற்கு பரிந்தூட்ட, பள்ளிப் பிள்ளைக்கு காது கொடுத்து ஊக்குவிக்க, தோளுக்கு மேல் வளர்ந்தவிட்ட பருவப் பிள்ளைக்கு தோழமை காட்ட, தனியே நிற்கும் அளவுக்கு வளர்ந்துவிட்ட பிள்ளைக்கு ஆசியுடன் வழிகாட்ட பெண்ணிற்கு இப்போது பொழுதில்லை, உடல்பலமில்லை, ஆசையில்லை. புதிய தொடுவானங்கள் விரியக் கண்டவள் பந்தயக் குதிரை போல் ஓடுகிறாள். அனுபவித்து வாழ வேண்டிய இல்வாழ்க்கையை, அந்தந்த கணத்து சந்தோஷங்களை, வருங்கால தூண்களை செதுக்கும் சிறப்பான பணியை சிலபல லகரங்களுக்காக இழந்து வருகிறாளோ இன்றைய பெண் என்றே தோன்றுகிறது.

கணவனும், மனைவியும் வெவ்வேறு ஊர்களில், வெகு தொலைவில், வருடக்கணக்கில் பிரிந்திருந்து ஆளுக்கொரு குழந்தையை வைத்து வளர்த்துக் கொண்டு குடித்தனம் செய்வது வேடிக்கையான விஷயம். என்ன மிஞ்சுகிறது இங்கே ? வாலிப வயதின் இனிமையான தாம்பத்தியமும், சகோதர பாசமும், ஒருவருக்கொருவர் அன்னியோன்யமாய் பகிர்ந்து கொள்ளும் குடும்ப உறவும் பலியாகவில்லையா ? எதை இழந்து எதை அடைகிறார்கள் ? இலக்குகள் மாறிவிட்டன.

குடும்ப உறவுகள் போற்றப் படாத அந்நிய கலாச்சாரத்தின் அம்சங்கள் நம் நாட்டிலும் அரங்கேற ஆரம்பித்துவிட்டன. வயதான பெற்றோர் சுமையாய் போனார்கள் – முதியோர் இல்லங்கள் முளைத்தன. பிள்ளைகள் சுமையாய் போனார்கள் – குழந்தை காப்பகங்கள் அவசியமாகிவிட்டன. இன்று பிரபலமாகிவிட்ட சித்தாந்தம்: பெண் சந்தனமல்ல – பிறருக்காக தன்னைத் தேய்த்து அழிந்து போக. பெற்றோர், கணவன், குழந்தைகள் யாருக்காகவும் தன் சுய அபிலாஷைகளை அடக்கிக் கொள்ளப் போவதில்லை. போலியான அந்தஸ்தும், வறட்டு கெளரவமும் கானல் நீராய் இழுக்க இப்பிறவியின் உவப்பான இன்பங்களை விட்டு வெகு தூரம் விலகி விலகிப் போகிறாள். வாழ்வின் இலக்குகள்தான் என்ன ?

***

pavalamani_pragasam@yahoo.com

Series Navigation