இலக்கியவாதிகளும் சோளக்காட்டு பொம்மையும்

This entry is part [part not set] of 39 in the series 20101212_Issue

சத்யானந்தன்


தமிழ் சினிமா அல்லது வணிக சினிமா எதிலும் ஒரு எளிய கதை உண்டு. ஒரு பணக்கார அப்பா தன் மகனைத் தேடிக் கொண்டிருப்பார். அப்போது கதாநாயகன் எதேச்சையாக அங்கு போவார். அவரை எதுவும் பேச விடாமல் எல்லோரும் அவர்தான் மகன் என்பார்கள். அவரும் மெல்ல மெல்ல அந்த வீட்டுக்குள் ஐக்கியமாகி விடுவார்.

த்மிழ் எழுத்தாளர் ஒவ்வொருவருக்கும் இது போன்ற ஒரு தர்ம சங்கடம் உண்டு. பொது மக்களே அவர்கள் தலையைச் சுற்றி ஒரு ஒளி வட்டத்தை வரைந்து விடுவார்கள். அதைத் தொடர்ந்து சென்றால் எழுத்துச் சித்தர் என்னும் புதிய உயிரினமாகப் பரிணமிக்கும் அளவு கூடப் போகலாம். ஒரு முறை பெரியவர் அசோகமித்ரன் “ஆட்டோ ஒட்டுபவர் வண்டி ஓட்டுவது போல எழுதுவதும் ஒரு தொழில்” என்றார். அவர் வயிற்றுப்பிழைப்பு என்னும் பொருள் படக் கூறவில்லை. பீடங்கள் தேவையற்றவை என்னும் அர்த்தத்தில் சொன்னார். எப்படியோ புலி மீதிலிருந்து கூட இறங்கி விடலாம். பீடத்திலிருந்து இறங்குவது சிரமம்.

வணிக நோக்கற்ற படைப்பாளியாகவும் வாசிப்பு ஈடுபாடும் உடைய ஒரு இலக்கியவாதியாகவும் வாழ முயலும் ஒரு எழுத்தாளர் நேரப் பற்றாக்குறை என்னும் ஒரே அடிப்படையிலேயே பரிதாபத்துக்கு உரியவர். ஆனால் அவருக்கோ எழுத்து என்னும் பயிரைப் பாதுகாக்கும் தமிழ் இலக்கியக் காட்டில் ஒரு சோளக்கொல்லை பொம்மையாகத் தன் பிம்பத்தைக் கட்டமைத்துக் கொள்ளும் கட்டாயம் இருக்கிறது. தொடர்புகளைத் தேடும், நிறுவிப் பாதுகாத்துப் பேணும் கட்டாயம் இருக்கிறது. நேரடியாகவோ பூடகமாகவோ தன் எழுத்து ஆகச் சிறந்தது, கற்பூர வாசனை தெரியாத ஜந்துக்களால் ஒரு சகாப்தமே குடத்துள் இருக்கிறது என்னும் பிரகடனத்தைச் செய்ய வேண்டி வருகிறது. இத்ற்கெல்லாம் அடிப்படையாக இலக்கியம் என்பது அதை உருவாக்கும் ஆளுமை சம்பந்தப்பட்டது, அவரின் பூர்வீகம், அவர் காலம். அவரது குரு, தோழர், அவரது சொந்த வாழ்க்கை எனப் புகுந்து புறப்பட்டு தனது முன்னோடிகள் வெத்து வேட்டுக்கள் என்று துணிய வேண்டி வருகிறது. ஆனால் ஒரு படைப்பாளியின் ஆளுமை ஒவ்வொரு படைப்பிலும் வெவ்வேறாய் வெளிப்படுகிறது. அனேகமாக வெவ்வேறு அவதாரங்களாய். அபூர்வமான தருணங்களில் படைப்பாளி எங்குமே தென்படாது படைப்பே தன் பரிமாணங்களில் ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொரு விதமாக வெளிப்ப்டும். படைப்பாக்கம் வெளிப்படும், படைப்பாக்கம் நிகழும் தருணங்கள் புனிதமானவை அல்லது பரவச நிலை என மிகைப்படுத்துவதைத் தவிர்ப்போம். அதே சமயம் ஒரு படைப்பு தன்னைத் தானே உருவாகிக் கொள்ளும் அற்புதம் கொன்டாடப்படும் படைப்பாளிக்குத்தான் நிகழ வேண்டும் என்பதில்லை. உண்மை தான் வெளிப்பட விரும்பும் இதழ்களை அதிர்ச்சி தரும் வண்ணம் தேர்ந்தெடுத்துக்கொள்வது போல அசலான படைப்பும் ஒரு அபூர்வமான தருணத்தில் அற்பமாய் கருதப்படுமொரு எழுத்தாளனின் அடையாளத்தோடு வெளிப்படக்கூடும்.

இலக்கியம் வெளிப்படும் வரை வாசகன் படைப்பாளி மற்றும் மொழி காத்திருக்கிறார்கள்.இந்தக் காத்திருப்பு முடிவற்றது. மனிதகுல பரிணாம வளர்ச்சியில் மொழி தோன்றியதற்கு ஒப்பான ஒரு பெரு நிகழ்வு இலக்கியப் பதிவுகள் வெளிவந்த்தாகும். இலக்கியம் வாய் வழி அல்லது அச்சு வழியில் மொழி மற்றும் பண்பாடு பற்றிய புரிதலுக்கும் முன்நகர்வுக்கும் மையமானதாகும். அசலானதும் இலக்கியத் தரமுடையதுமான படைப்புக்களை இனங்கண்டு வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் முக்கியமான பணியை காலங்காலமாக மூத்த எழுத்தாளர்கள் பலரும் செய்து வந்தார்கள். அதன் விளைவாகவே இன்று இலக்கிய உலகின் பெரிய ஆளுமைகள் உற்சாகம் பெற்றதும் தமக்கு உரிய அங்கீகரிப்பைப் பெற்றதும். தமது கால கட்டத்தில் புதிய ஊற்றுக்களை இனம் கண்டு எல்லோரின் வாசிப்புக்கும் கொண்டு செல்லும் கடமை இவர்கட்கும் உள்ளது.

துயரமான ஒரு போக்கு இப்போது இலக்கியவாதிக்ளிடையே இதற்கு நேர் எதிர் திசையில் தென்படுகிறது. மானசீகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ பீடங்களைக் கைவசப்படுத்தியபின் இலக்கியத்தை விடவும் அறிவுஜீவி மற்றும் வெகு சனம் பெரிதும் ஈர்க்கப்படும் சினிமா என்னும் ஊடகத்தை நோக்கி நல்ல எழுத்தாளர்கள் நகரத் துவங்கி இருக்கிறார்கள். சினிமாவுக்கு எழுதுபவராகவோ அல்லது கலை அம்சம் மிக்க இந்திய அல்லது உலக சினிமாவை விமர்சித்துக் கொண்டாடுபவராகவோ இயங்கும் ஆர்வம் கரை புரள்கிறது. தொடர்ந்து கவனம் அவ்வழியிலேயே செல்ல மொழி சார்ந்த பதிவுகளும் வாசிப்பும் காலாவதி ஆனது போல காட்சி ஊடகமான சினிமாவை இவர் நெருங்கித் தழுவிக் கொண்டனர். இது விபரீதமானது. பெரியவர் ஜெயகாந்தன் தம்து படைப்புக்கள் படமாகும் நோக்கில் மட்டுமே சினிமாத் தொடர்பு கொண்டு பின்னர் விலகினார். நல்ல முன் உதாரணத்தை அவர் விட்டுச் சென்றார். சினிமா என்னும் ஊடகத்தின் தளம் முற்றிலும் வேறானது. அது பார்வையாளருக்குத் தரும் அனுபவம் அல்லது காட்சி இலக்கியத்துடன் ஒப்பிடும் போது அற்பமானது. கலைப் படம் இதற்கு விதிவிலக்கு அல்ல.. சினிமா என்னும் ஊடகம் தனது குறுகிய சாத்தியங்களுடனேயே சிந்திக்கப் பழகியதுடன் சம்பந்தப்பட்ட யாரையும் அதே நிலைக்குத் தள்ளியபின்னர் மட்டுமே அவரை அங்கீகரித்துப் பயன்படுத்திக் கொள்ளும். அந்தத் தடத்தில் போக சுஜாதா போன்ற ஒரு மனப்பாங்கும் உள்நோக்கமும் கட்டாயம் தேவை. ஆழ்ந்து சிந்திக்கும் அசலான படைப்பாக்கம் சாத்தியப் பட்டவர்க்கு அந்த ஊடகம் மிகப் பெரிய ஊறே செய்யும். வாசிப்பு அனுபவம் மற்றும் அது விளைவிக்கும் சிந்தனைத் தொடர், மொழி என்னும் உணர்வு பூர்வமான நாளத்தின் ஊடே உள்வாங்கப்படுவதாகும். இலக்கியத்தோடு ஒப்பிட்டால் சினிமா கையாலாகாத ஒரு ஊடகம். இது தெரிந்தும் எழுத்தாளர்கள் சினிமாவைக் காதலிக்கிறார்கள். என்ன செய்வது? ஒரு ஆசை வேரூன்றியபின் ஒருவர் தனது நிலையை சீர் தூக்கிப் பார்ப்பதோ அல்லது சரியான திசையைத் தீர்மானிப்பதோ சாத்தியம் அற்றதே. காட்சி ஊடகம் மட்டுமே புழக்கமும் பழக்கமும் ஆன இன்றைய தலை முறைக்கு வாசிப்பு அறிமுகமே ஆகாமற் போகக்கூடிய அபாய கட்டத்தில் பண்பட்ட இலக்கியவாதிகளும் சினிமா ஊடகத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது பெரிய சறுக்கல்.

இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட ஊடகம் எதிலும் ஒரு இலக்கியவாதியின் அடையாளம் வெளிப்பட இயலாது. ஒரு படைப்பாளியின் இருப்பு அவனது படைப்புக்களில் மட்டுமே. அந்தப் படைப்பு கவனம் பெறுவதும் தனக்கு உரிய இடத்தைப் பெறுவதும் முக்கியமானதே. ஆனால் அது மட்டுமே ஒரு படைப்பாளியின் தடத்தையும் இடத்தையும் இறுதியாகத் தீர்மானிப்பவை ஆகா. இலக்கியமும் மொழியும் உரிய இடத்தைப் பெற சிந்தனையும் பதிவுகளும் வாசிப்பும் விவாதங்களுமான சூழல் பேணப்பட்டுப் பரிமளிக்க வேண்டும். அதன் விளைவாய் பல்வேறு கால கட்டத்தின் அசலான படைப்புகள் கண்டிப்பாக கவனம் பெரும். தீவீரமான இலக்கியப் பணிகளுக்கு காரணியாய் இயங்கும் கடமை ஒவ்வொரு இலக்கியவாதிக்கும் உண்டு.

Series Navigation

சத்யானந்தன்

சத்யானந்தன்