இறை மறுப்பாளர் நீட்சேயின் இன்ப அறிவியல் (GAY SCIENCE BY FREDRICH NIETZSCHE)

This entry is part [part not set] of 46 in the series 20060331_Issue

தமிழில் : புதுவை ஞானம்


அழைப்பு
—-

ஒரு வாய்ப்பு தாருங்களேன்- என்
படையலைச் சுவைத்து தான் பாருங்களேன் !
உறுதியளிக்கிறேன் யான் அது உம்மை
உறுதியாக்கும் என.
போகப் போகத் தெரியும் அந்தப்
போதையின் சுவை அனைத்தும், சுவைத்த பின்
மேலும் தேவையென்றால்- நான் ஏற்கனவே
படைத்தது எவ்வளவோ இருக்கிறது
புத்தம் புதியதாய்
ஊக்கம் அளிக்கும் அது.


மகிழ்ச்சி
—-
ஓடியும் தேடியும் மிகக்
களைத்துப் போனதனால்
ஆய்ந்தகழ்ந்து அறிவதற்கு
கற்றுக் கொண்டனன் யான்
எதிர் காற்று என் முகத்தில்
மோதிச் செல்வதனால்
காற்றுத் திசை வழி
கலம் செலுத்தக் கற்றேன் யான்.


உறையாடல்
____

நோயுற்றிருந்தேனா ?
சுகமடைந்து விட்டேனா ?
யாரெந்தன் மருத்துவர்
சொல்ல முடியுமா நீ ?
குழம்பியே போயிற்று
என் நினைவு.

இப்போது தான் நீ
நலமாக இருக்கிறாய்
மறந்து போனவரெல்லாம்
நலமாய் தான் இருக்கிறார்கள்.


ஒழுக்கமுடையார்க்கு
____

ஏன் இப்படி ஒழுக்க நெறிகள்
இடர் மிக்கதாய் உள்ளன ?
சுறுசுறுப்பான பாதங்கள்
எனக்குப் பிடித்தமாய் இருக்கிறதே
ஹோமரின் வரிகள் போல
அவை வந்து வந்து போகிறதே!


ஒளியை நேசிப்பவருக்கு
____
உமது கண்ணும் மனமும்
மையம் பூத்துப் போக
வேண்டாமெனில்
நிழலை ஒட்டியே தொடருங்கள்
ஆதவனை.


குறுகிய ஆன்மாக்கள்
____

குறுகிய ஆன்மாக்களே ! நான்
கட்டுப்பட மாட்டேன் -ஏனெனில்
அதனுள்
நல்லதும் கெட்டதும் இல்லை.


எனது ரோஜாக்கள்
____

ஆம்….
எனது மகிழ்ச்சி வேடிக்கை காட்டுகிறது ஒவ்வொரு
மகிழ்ச்சியும் வேடிக்கை காட்டவே
விரும்புகிறது
எனது ரோஜாக்களைப் பறிக்க
விரும்புகிறீர்களா ? அப்படியானால்
முட்களுக்கும் பாறைகட்கும் இடையே – குனிந்து
சிராய்ப்புகளுக்கும் எரிச்சலுகும்
அஞ்சாமல் நுழைய வேண்டும்
ஏனெனில் எனது கேளிக்கை
சீண்டி வேடிக்கை பார்க்கும்
சூழ்ச்சி செய்து மாட்ட வைக்கும்.
எனது ரோஜாக்களைப் பறிிக்க
விரும்புகீர்களா ?


வெறுப்பு
—-

நான் ததும்பிச் சிதறுவதாகவும்
வெறுப்பை உமிழ்வதாகவும்
நினைக்கக் கூடும் நீங்கள்
உங்கள் கோப்பை முற்றிலும்
நிரம்பியிருந்தால்
நீங்களும் கூட
சிந்தவும் சிதறவும் செய்வீர்கள்
எதைப் பருகுகிறீகளோ – அதன் மேல்
வெறுப்பு இன்றி.


பழமொழி பேசுகிறது
—-

கூர்மையும் இலகுவும்
கடினமும் மென்மையும்
அயலும் உறவும்
அசிங்கமும் சுத்தமும் ஆக
முட்டாளும் துறவியும்
சந்திக்கும் இடம் அது.
இவை அனைத்தும் நான் – ஆம்
அனைத்தையும்
புறாவையும், பாம்பையும், பன்றியையும்
அனைத்தையும்
நினைக்க விரும்புகிறேன் நான்.


நடனமாடுபவருக்கு
____
மென்மையான பனித்தளமும்
சொர்க்க பூமியாகும்
நளினத்தோடு
நடனமாடத் தெரிந்தவர்க்கு.


நல்ல மனிதன்
____

பொய்மையான நட்பை விட
முழு மனதான பகையே மேல்.


துரு
____

கொஞ்சம் துருப்பிடிக்க வேண்டும்

கூர்மை மட்டும் போதாது – இல்லையெனில்
இளையவராகவும்
இறுக்கமானவராகவும் தோன்றுவீர்கள்.

உயரம்
____
சிகரத்தை எட்ட வேண்டுமானால்
சிந்திக்கக் கூடாது
அளவுக்கு அதிகமாக.

முரட்டுத்தனத்தின் உண்மை
____
ஏன் கூவிக்குதிக்கிறாய் எனக்
கேட்காதீர்கள்.
தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன்
ஏற்றுக் கொள்ளுங்கள்.

தன்னிச்சை
____

விளையாட்டாக வீசினான்
ஒர் வெற்று வார்த்தையை- அது
வீழ்த்தி விட்டது ஒரு மங்கையை.

உங்கள் சிந்தனைக்கு
____

இரட்டை வலியைத் தாங்கிக் கொள்ளலாம்
ஒற்றைத் தலை வலியை விட
ஏற்றுக்கொள்கிறீர்களா
எனது துணிச்சலை ?

தற்பெருமைக்கு எதிராக
____

தன்னை வியந்து தருக்கும் பலூன்கள்
சபிக்கப்பட்டு சப்பையாகி விடும் ஒரு
ஊசியால் குத்தப்படுகையில்.

வியாக்கியானம்
____

என்னையே படித்தேன் நான்
எல்லாப் புத்தகங்களிலும்
நிச்சயமாக எனக்குத் தேவை
கொளுத்தும் வெயிலில்
சொந்த முயற்சியில்
சிகரங்களில் ஏறுபவர்களே
சுமந்து செல்வீர்களா ?
எனது படிமங்களையும்.

நம்பிக்கை அற்றவருக்கான மருந்து
____

உமக்கு எதுவும் சுவையாக இல்லைதானே
என் நன்பரே ? சலித்துப் போயிற்று எனக்கு
உம் வயிற்று வலியைப் பார்த்து.
எரிந்து விழுகிறீர்கள் நீங்கள்
காரிக்காரித்துப்புகிறீர்கள்
அபவாதம் பேசுகிறீர்கள்
ஓய்ச்சல் ஒழிவு இன்றி .

பொறுமையும் இதயமும்
சிதறிப்போகின்றன – எனக்கு
ஒரு வழி தோன்றுகிறது
சற்றே பின் தொடருங்கள்
எனது நல்ல ஆலோசனை என்னவெனில்
ஒரு தேரையைத்தான் நீங்கள் விழுங்க வேண்டும்
வயிற்றுப் பொருமல் போயே போய் விடும்.


புரிந்து கொள்ளுங்கள்
____
எங்கே நிற்கிறீர்களோ அங்கே
ஆழமாகத் தோண்டுங்கள் !
கூர்ந்து கவனியுங்கள்.
ஆழத்தில் என்ன இருக்கிறது ?
நரகம் தான்_என்று சிலர்
அலறி விட்டுப் போகட்டும்.


உலக ஞானம்
____

சம தளத்தில் தேங்கிப் போகாதீர்
அல்லது
கண்ணுக்கு எட்டாத உயரத்தில்
ஏறிப் போகாதீர்.
உலகத்தைப் பற்றிய சரியான காட்சி
இடைப்பட்ட உயரத்தில் தான்
தெளிவாகத் தென்படும்.


என் வழியும் உன் வழியும்
____
எனது எழுத்து நடையாலும்
மனப்பாங்கினாலும் கவரப்பட்டு
என்னைப் பின் தொடருகிறீர்களா ?
உங்களடு சுயத்தை நம்பிக்கையுடன்
பின் தொடருங்கள்.
அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள்
இப்படியாக….
என்னைப் பின் தொடர இயலும்.


ஆணும் பெண்ணும்
____
எந்த மங்கையை நேசிக்கிறாயோ
அந்த மங்கையைக் கடத்திச் செல் _
என்று தான் நினைக்கிறான் ஆண் மகன்.
பெண்களோ கொள்ளை அடிப்பது இல்லை
திருடி விடுகிறார்கள்.


வேண்டுகோள்
____
மற்றவர் மனது எனக்கு
நன்றாகத்தெரியும் – ஆனால்
யார் நான் ?
என்னல் சொல்ல இயலாது.
என் விழிகள்
எனக்கு நெருக்கமாக இருக்கின்றன
என்ன கண்டேனோ
என்ன காண்கிறோனோ
அதுவாக நான் இல்லை.
நான் மட்டும்
சற்றுத்தூரமாக உட்கார்ந்தால்
ஆதாயம் உண்டு.
ஆனால்…
எனது எதிரிகளோ
மிகத்தொலைவில் இருக்கிறார்கள்
அதை விடத் தூரமாக இருக்கிறார்கள்
நெருங்கிய நண்பர்கள்.
நண்பருக்கும் எனக்கும் இடையில் இருப்பது
நடுவாய் இருப்பது போலும்
எனது விருப்பம்
நீங்களே விடை தேடுங்கள்
எனது புதிருக்கு.


மூன்றாம் தோலுரித்தல்
____

தாகம் தணிய மேலும் மண் வேண்டி
தின்ற மண் போதாதென
எனக்குள்ளிருக்கும் பாம்பு
தாகிக்கத் தாகிக்க-
என் தோல் வெடித்து உரிகிறது.
புல்லிதழ்களுக்கும் அடித்தண்டுகளுக்கும்
இடையே நெளிகிறேன் பாம்பாக.
தேய்ந்த பாதைக்கு
வெகு தொலைவுக்கப்பால்.
பசியுடனும், இருந்த போதிலும்
மகிழ்வுடனும்- எதைத்
தின்று களித்தேனோ அதையே
மேலும் தின்பதற்கு.
கயமையின் தீனியும் நீ
பூமியும் நீ.


எனது கடுமை
____

நான் எறி ஆக வெண்டும் நூறு படிகள்
மேன்மேலும் ஏறி ஆக வெண்டும் நான் -நீ
முணகுவதைக் கேட்க முடிகிறது என்னால்
‘ கடுமையானவன் நீ
கல்லாலா படைத்திருக்கிறான் என்னை ? ‘ என
நான் ஏறி ஆக வேண்டும் நூறு படிகள்.
அதில் ஒரு படியாய் இருப்பதற்கு
யார் விரும்புகிறார்கள் ?
யாருமே இல்லை


ஊர் சுற்றி
____
‘பாதையும் இல்லை பாதாளமும் இல்லை
இன்னும் வர வில்லை மரணம் ‘_
நீ தான் ஆசைப்பட்டாய்- உன் விருப்பிலேயே
விலகினாய் பாதை விட்டு.
அமைதியும் தெளிவும் கொள்
அன்னியனே! _மாறாக
அஞ்சுவாய் ஆயின்
தொலைந்தே போய் விடுவாய்.


கற்றுக்குட்டிக்கு ஒரு ஆறுதல்
____

பெண் பன்றிகளுக்கு இடையில்
சிக்குண்ட குழந்தையைப் பாருங்கள்.
பேசக்கூட முடியாது நிர்கதியான அவனால்.
அழுது கொண்டே இருக்கிறான் எப்போதும்
எப்போதாவது….
நடப்பதற்குக் கற்றுக் கொள்வானா ?
நம்பிக்கை இழந்து போகாதீர்கள்.
நடனமாடிக் காட்டுவான் விரைவில்
தன் காலில் நிற்பதற்கு முடிந்து விட்டால்
தலை கீழாகவும் நிற்பான்.


தாரகைகளின் கவலை
____
பீப்பாய் போல
முடிவற்று உருளாவிட்டால்
எரிக்கும் சூரியனிடமிருந்து
எப்படிக் காப்பாற்றிக்
கொள்ள முடியும் ?
பொசுங்கிப் போகாமல்.


அண்டை வீட்டான்
____

நேசிக்கவில்லை நான் எனக்கு
அருகாமையில் இருக்கும்
அண்டை வீட்டானை
தூரத்திலும் உயரத்திலும்
இருக்க வேண்டும் அவன்.
பின் எப்படித் தான் அவன்
எனது தாரகை ஆக முடியும் ?

மாறு வேடம் பூண்ட மனிதர்
____
சாத்தானின் சாதுர்யத்திலும் ஆடையிலும்
போர்த்திக் கொண்ட போதிலும் உங்களது
மகிழ்ச்சி பெர்ம் சுமையாக இருக்கிறதே !
எல்லாமும் வீண்…உங்கள் விழிகள்
தேவதையின் புனிதத்தை
வெளிப்படுத்துகின்றனவே!


சுதந்திரமற்ற மனிதன்
____
அ) எழுந்து நின்று நினைவு கூறுகிறான்
செவி மடுப்பது என்ன ?
ரீங்கரிப்பது என்ன ?
கீழே வீழ்த்தியது
எந்த மரண பயம் ?

ஆ)சங்கிலியால் ஒரு முறை
பிணைக்கப் பட்டவன்
எப்போதுமே நினைக்கிறான் அடிமைச்
சங்கிலியின் ஓசை
எப்போதுமே பின் தொடருவதாக.


ஆதரவு
____

பின் தொடருவதை வெறுக்கிறேன்
முன் நடத்துவதை வெறுக்கிறேன்
கீழ் படியவா ?…. முடியாது
ஆட்சி செய்யவா ?….முடியாது
எதுவும் முடியாது
அச்சத்தில் உறைபவன் நான்.
அச்சத்தைத் தூண்டுகிறார்கள்
அப்படிச் செய்பவர்களால் தான்
ஆள முடியும்.
முன் நடத்திச் செல்வது கூட
எந்தனது வேகத்தில் இல்லை.
சிறிது நேரம் காணாமல் போவதை
நேசிக்கிறேன் நான்
கடலிலும் காடுகளிலும்
வதியும் விலங்குகள் போல்
கைவிடப்பட்டதொரு தீவில்
உட்கார்ந்து சிந்திக்கவும்
நெடிய தூரத்திலிருந்து
வீடு திரும்ப விழையும் என்னை
நான் மீண்டும் பெறவும்.


பனிக்கட்டி
____
ஆம்….
சில சமயங்களில் நான்
உறைந்து போகிறேன்
பனிக்கட்டியாக.
ஏனெனில்
செரிப்பதற்கு அது உதவுகிறது.
நிச்சயமாக விரும்புவீர்கள் நீங்கள்
எனது பனிக்கட்டியை.


யதார்த்த ஒவியர்கள்
____

உண்மையாக இருக்க வேண்டும்
இயற்கைக்கு உண்மையாக
இருக்க வேண்டும் எல்லாமும்
அதுதான் கலை.
உள்ளீடற்ற இந்த கருத்து
தேய்ந்து போன கதை தான்.
எல்லையற்றவை இயற்கையின்
சின்னஞ்சிறு பகுதிகள் கூட.
எது மகிழ்ச்சி அளிக்கிறதோ
அதனை வரைகிறார்கள்.
அவர்களுக்கு எது மகிழ்ச்சி அளிக்கிறது ?
என்ன வரைய முடிகிறதோ
அது தான்.


கவிஞனின் அலட்டல்
____

வச்சிரத்தை வழங்குங்கள் எனக்கு
அதுவும் சரியான நேரத்தில்
நானே கண்டு பிடிப்பேன் இயற்கையை.
அற்பத்தனமான நாலு வரிகளில்
உணர்ச்சிகளைக் குவிய வைப்பது போதும்
தானே வரும் கவிதை.


தேர்ந்த ருசி
____

எனது விருப்பத்துக்கு விடப்பட்டால்
சிறப்பாக இருக்கும் அது _
சொர்க்கத்தில் இடம் பிடிக்க.
அதைவிட நல்லதாக
வாயிற்படிக்கு வெளியே.


வளைந்த மூக்கு
____

பெருமையாகவும்- எளிதில்
வளைவதாகவும் துளைகள்-
பெருமைப்படுகிறது மூக்கு.
அதனால்தான் -கொம்புகள் இல்லை
காண்டாமிருகத்துக்கு
முன்னோக்கி விழ நேர்ந்தால்
பெருமைக்குரிய சிறிய மனிதனே
உடைந்த மூக்கோடு நேரடிப்
பெருமையும் கூடவே கிடைக்கும்.


வலிமையானது பேனா
____

வலிமையானது பேனா….தூ….தூ
கிறுக்குவதற்கென நான்
சபிக்கப்பட்டிருக்கிறேனா ?
தைரியமாக நனைக்கிறேன்
நான் அதனை மசியில்-
மலர்கிறது எனது எழுத்து
வெற்றி அடைகின்றன நான்
முயலும் அனைத்தும்.
கொடிய இரவின் பரவலில்
தெளிவாகத் தெரிவதில்லை அது.
பரவாயில்லை
யார் படிக்கிறார்கள் நான்
எழுதும் கருத்துகளை ?


உயர்ந்த மனிதன்
____

பாராட்டப்பட வேண்டியவன் தான்
சிகரங்களில் ஏறியதற்காக.
ஆனாலும்….
இறங்கி வருகிறான் இன்னொருவன்
மேலே இருந்து
பெருமைக்கு எட்டாத இடத்தில்
வசிக்கிறான் அவன்
உங்களின் பார்வைக்கு அப்பால்.


அய்யுரவு வாதியின் வாக்கு மூலம்
____

போயே போய் விட்டது உங்களின்
பாதி வாழ்க்கை- திடாரென உணருகிறீர்கள்
ஒரு சில்லிப்பை – நடுங்குகின்றன கைகள்
அலைந்து விட்டார்கள் நிறைய
ஓடிவிட்டார்கள்….தேடி விட்டார்கள்
காணவில்லை எதையும்
ஏன் இந்த திடார் நடுக்கம் ?
போயே போய் விட்டது பாதி வாழ்க்கை
முற்றிலும் தவறாகவும் துயரமாகவும்.
இன்னும் என்ன தேடுகிறீர்கள் ?
இதைத்தான் சரியாகத் தேடுகிறேன்
காரணம் என்னவாக இருக்கும் ?


ECCE HOMO
—-

ஆம் ….எனக்குத் தெரியும்
எங்கிருந்து வந்தேன் என்று.
என்னைத் தின்று சுடர் விடுகின்றேன்.
நான்….
தொடுவதனைத்திலும்
ஒளி பிறக்கின்றது-
விடுவதனைத்திலும்
சாம்பல் குவிகிறது.
நிச்சயமாக நான்
நெருப்பு தான்.

(குறிப்பு : ECCE HOMO – காணீர் இந்த மனிதனை எனப் பொருள்படும். பாண்டியஸ் பிலாத்து , முள்முடியணிந்த ஏசு கிருஸ்துவை மக்கள் முன்காட்டிய போது சொல்லப்பட்டது.)


கோள்களின் ஒழுக்கம்
____

பின் பற்ற வேண்டும் என்கிறார்கள்
கோள்களின் சுழற்சிப் பாதையை.
இருட்டு என்பது என்ன தாரகையே ?
மகிழ்ச்சியில் சுழலுதலும்
காலத்தைக் கடந்து செல்வதும்.
அதன் துயரம் உனக்கு
அப்பாலும் புரியாமலும் இருக்கிறது.
தூரத்து உலகம் உனக்குப்
பாதுகாப்பு ஒளி வழங்கட்டும்
துயரம் என்னவெனில்….நீ
பாவம் செய்யக்கூடாது-ஆனால்
உனது கட்டுப்பாட்டில்
ஒன்று இருக்கிறது- அது
பரிசுத்தமாய் இருப்பது ஆகும்.


இளமை
____

இளமையின் – அறிவின்
ஆஃல்பா முதல் ஒமேகா வரை
மீண்டும் செவி மடுத்தேன்
என்ன சொன்னது அது ?
ஞானத்தின் வார்த்தை அல்ல
முற்று முடிவற்ற
துயரத்தின் சொற்களை
எல்லையற்ற
ஆல்ஃபாவும் ஒமேகாவும்
இளமை என்பதில்
நாராசமாக ஒலிக்கிறது.


எச்சரிக்கை
____

பரிச்சயம் அற்றவர்களுக்கு
ஆபத்தானது அந்தப் பகுதி
அறிவுடன் இருப்பது
இரட்டிப்பாக்குகிறது ஆபத்தை
அன்பு செலுத்துவார்கள்
உங்களைக் கவர்ந்திழுத்து
கிழித்தெறிவார்கள் பின்னர்
நார்-நாராக
ஆர்வம் மிக்கவர்கள் அவர்கள்
ஆனாலும் அறிவொன்றும் இருப்பதில்லை
அந்தப் பகுதியினருக்கு.


அழுக்காறின்மை
____

பொறாமை இல்லை அவனது பார்வையில்
எனவே புகழ்ந்தீர்கள் அவனை.
அவன் கவனிக்கவே இல்லை
நீங்கள் புகழ்ந்ததை.
தூரத்தில் உள்ளதைப் பார்க்க வல்ல
கழுகுக் கண் அவனுக்கு.
உங்களைப் பார்ப்பதில்லை அவன்
தாரகைகளைத்தான்….!


ஹெராக்கிளிட்டினியம்
____
போராட்டம் தான்
மகிழ்ச்சியை வழங்கும்
பூமியின் மீது.
போர்க்களங்களில் தான்
பிரசவம் பெறுகிறது
நட்பு.
மூன்றில் ஒருவர்
நண்பராகின்றனர்.
துயரத்தில் உள்ள
சகோதரர்கள்
சரிக்குச் சரியானவர்கள்.
எதிரிகளை எதிர் கொள்பவர்கள்
விடுதலை பெருகிறார்கள்
மரணத்தைத் தழுவும் போது.


மெத்தப் பண்பட்டவர்களின் கொள்கை
____
நான்கு கால்களால்
தவழ்வதை விட
கட்டை விரல் மேல்
எம்பி எழுங்கள்
சாவித் துவாரத்தால்
எட்டிப் பார்ப்பதை விட
திறந்த கதவு வழியே
தரிசனம் செய்யுங்கள்.


மென்மையான கண்டு பிடிப்பு
____

புகழுக்கு ஆசைப் படுகிறீர்களா
அப்படியானால்….அதன்
விலை என்ன என்பதைக்
குறித்துக் கொள்ளுங்கள்.
கவுரவம் தேடும்
அனைத்து உரிமைகளுக்கும்
தியாகம் செய்தேயாக வேண்டும்.


ஆழ மூழ்குதல்
____

உண்மையைத் தேடுபவனா நான் ?
சற்றே சலனமற்று இருங்கள்.
கனமானவன் நான்
பல மடங்கு எடை உள்ளவன்
விழுகிறேன் நான்
விழுந்து கொண்டே இருக்கிறேன்
தரையைச் சென்றடையும் வரை.


எப்போதும்
____

இன்று நான் வருகிறேன்
ஏனெனில்
எனக்குத் தோன்றுகிறது அப்படி.
வந்தவரெல்லாம் தங்கி விடத்தான்
நினைக்கிறார்கள் நிரந்தரமாக.
உலகம் என்ன சொல்லும் ?
நீ சீக்கிரம் வந்து விட்டாய் என்றோ
தாமதமாக வந்து விட்டாய் எனவோ.


நொந்து போனவர்கள்
____

சூரியனை வெறுப்பவர்கள்
வயிற்றைக் கழுவுபவர்கள்
நிழலுக்காக மட்டுமே
மரத்தை நேசிப்பவர்கள்.


வீழ்ச்சி
____

முணகிக் கொண்டிருக்கிறான் அவன்
வீழ்ந்து கொண்டு இருக்கிறான்
அவ்வளவு தான் -சொல்வது யார் ?
உண்மை என்னவென்றால்
உன் அளவுக்கு இறங்குகிறான் அவன்.
முழுமை அடைந்து விட்டது
அவனது பேரின்பம்
உங்களைத் துரத்துகிறது
அவனது ஒளி வட்டம்.


சட்டங்களுக்கு எதிராக
____
மயிரிழையினால் தொங்க விடப்பட்டு
இன்று போலவே என்றும்
கழுத்துக்கு மேல் ஊசலாடுகிறது.
தாரகைகள்,ஆதவன்,
சேவலின் கூவல், நிழல்கள்
இன்று போலவே என்றும்
எல்லாமும் இருக்கின்றன-
நமக்கு நேரத்தை அறிவித்தவை
அனைத்தும் அப்படியே.
செவிடும் குருடும் ஊமையுமாய்
பாறை போல் மவுனித்துக்
காட்சியளிக்கிறது இயற்கை.
சட்டம் மட்டும் கடிகாரத்தின்
டிக்….டிக்…. ஒலியில்.


பணிவான எதிர்ப்பு
____

கடவுள் நம்மை நேசிக்கிறார்
ஏனெனில்….
நாம் அவரால் படைக்கப் பட்டோம்.
‘ ஆனால்….
மனிதன் தான் கடவுளைப் படைத்தான். ‘
பக்குவப்பட்டவர்கள் சொல்கிறார்கள்.
தான் பக்குவப் படுத்தியதை அவன்
நேசிக்க வேண்டாமா ?
அவன் தான் படைத்தான் என்பதற்காக
அவனே மறுக்க வேண்டுமா என்ன ?
நொண்டுகிறது அந்த உய்த்துணர்வு
நாக்கு குழறுகிறது அதற்கு.


கோடையில்…
____

நாம் ரொட்டி திண்ணலாமா
புருவங்களில் வியர்வை வழியும் போது
உணவு அருந்தக் கூடாது
வியர்வையில் நனைந்திருக்கும் போது
நல்ல மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
நாய் நட்சத்திரம் இப்போது மின்னுகிறது
இதன் அடையாளம் என்ன ?
புருவங்களில் வியர்வை வழியும் போது
திராட்சை ரசம் அருந்த வேண்டும்.

நாய் நட்சத்திரம் = Dog star = Cants major
(see Oxford thesaurus )


முனிவர் பேசுகிறார்
____

கும்பலுக்கு அந்நியன் தான் -எனினும்
கும்பலுக்குப் பயன் உளவன்.
ஒரு வழி காட்டுகிறேன் நான்.
ஒரு சமயம் சூரியன்
மறு சமயம் மேகங்கள்
ஆனால் எப்போதுமே
கும்பலின் தலைக்கு மேலாக
மிக மிக உயரத்திலிருந்து.


முண்டம்
____

ஏன் இன்றவள்
வெகு புத்திசாலியாகவும்
வெகு பக்குவம் ஆகவும் இருக்கிறாள் ?
மனமுடைந்து போய் விட்டான்
ஒரு மனிதன் அவளால்.
ஒழுங்காகத்தான் இருந்தது
அவன் தலை
இந்தச் சுழற்சிக்கு முன்னதாக
அறிவழிந்து போய் விட்டான்
மேற்சொன்ன மடந்தையால்.


காலால் எழுதுதல்
____

கைகளால் மட்டும் எழுதவில்லை நான்
கால்களும் பங்கேற்க விரும்புகின்றன.
ஓடுகின்றன எனது பாதங்கள்
உறுதி, சுதந்திரம், தைரியம் கொண்டு
களங்களிலும் காகிதங்கள் மீதும்.


எளிய விருப்பங்கள்
____

எல்லா சாவிகளும் நிச்சயம்
நரகம் செல்ல வேண்டும்.
ஒவ்வொரு சாவித் துளையும்
எலும்புக்கூடுகளாய்
மாற்றியமைக்கப்பட வேண்டும் ! ‘
இப்படியாகத்தான் இருந்தது ருசி
முக்கியமானவர்கள் தாங்கள்
எனத் தருக்கியவற்கு
ஏனெனில்….
இரண்டாவதாகச் சொல்லப்பட்டவர்கள்
அல்லவா அவர்கள் ?.


மனிதம் எல்லாமும் மனிதம்
____

வெட்கமும் வேதனையுமாக இருக்கிறது
கடந்த காலத்தை நினைக்கும் போது
எதிர் காலத்தை நம்புவீர்கள்
உங்களை நம்பும் போது
நீங்கள் வேட்டையாடும் கழுகா அல்லது
மினர்வாவுக்குப் பிடித்த
மரங்கொத்தி தானா ?


எனது வாசகர்களுக்கு
____

சமையல்காரன் நான் தான்
இருக்கட்டும் உங்களுக்கு
உறுதியான பற்களும்
வலிமையான வயிறும்.
வர வேண்டும் என்னுடன்
எனது நூலுக்குள் நுழைந்திடில்.

மூலம் ; ஃபிரெற்றிக் நீட்சே

தமிழாக்கம் ;புதுவை ஞானம்

Series Navigation