இறைவா..எனக்கொன்றும் புரியவில்லை..!

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

செங்காளி


இறைவா உனக்கு
நிறையத்தான் கோபம் வந்தால்
சூராவளியாய்ச் சுழல்கின்றாய்..
பேய்மழையாய்ப் பொழிகின்றாய்..
பெருவெள்ளமாய்ப் பாய்கின்றாய்..

அனல்காற்றாய் வீசுகின்றாய்..
கொடும்பனியாய்க் கொட்டுகின்றாய்..
தீப்பிழம்பாய் எரிகின்றாய்..
இப்படித்தான் வரிசையாய்
உன் வீச்சத்தைக் காட்டுகின்றாய்.

கடைசியாக நீ செய்த கைங்கர்யம்.
ஈரான் நாட்டின் எழில்நிறைந்த நகரத்தை
வேரோடு பிடித்துக் குலுக்கிச்
சடலங்கள் புதைந்த பெரும்
சமாதியாய் ஆக்கிவிட்டாய்.

சாதிப் பித்தர், சமய வெறியர்
அரசியல் கிறுக்கர்கள், குண்டர்கள்,
கொள்ளையடிப்போர், கொலை செய்வோர்
என்றபடி உலகினிலே
எத்தனையோபேர் இருக்கையிலே

அவர்களை விட்டுவிட்டு
ஏதுமறியா எளியோரின்
கதையைத்தான் மாற்றிவிட்டாய்.
குடும்பங்களை அழித்து நீ
குலநாசம் செய்துவிட்டாய்.

எப்படித்தான் மனம் வந்தது இறைவா
இப்படிச் செய்ய உனக்கு ?
இதை நான் கேட்டுவிட்டால்
முன்வினைப் பயனென்று சொல்லி
என்னை நீ ஏமாற்றாதே.

உன்னையே நம்பி இருந்தோர்க்கு
ஏனய்யா இந்த முடிவு ?
இப்படி நீ செய்துவிட்டால்
எப்படித்தான் உன்னை நம்புவது ?
இறைவா..எனக்கொன்றும் புரியவில்லை!
——————————————————————–
natesasabapathy@yahoo.com

Series Navigation