இறுதி மணித்தியாலம்

This entry is part [part not set] of 33 in the series 20100919_Issue

மூலம் – மஹேஷ் முணசிங்ஹ (சிங்கள மொழியில்) தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை


மொழிபெயர்ப்புக் கவிதை

கிலட்டின் தயாராகிறது
இறுதி உணவுபசாரத்துக்கும்
சூழ்ச்சி செய்யாமல்
தேர்ந்தெடுங்கள்
தேசியவாதிகளும் விடுதலை விரும்பிகளும்
எங்கள் துணிச்சல்மிக்கவர்களைப் பெயரிட்டுள்ளனர்

ராசாக்கள் தந்த சுகம்
மாளிகை அந்தப்புரம்
கை விட்டுப்போகுமென்ற நடுக்கத்தில்
தேசக் காதலர்கள் அழுகிறார்கள்
வெளிப்படையாகவே அவர்கள்
பகல் கொள்ளைக்காரர்கள்
ஊழல்காரர்கள் கொலைகாரர்கள்
சுரண்டிச் சாப்பிடுபவர்கள்

ரோசா நிறத்து விடுதலைவிரும்பிகள்
(சுய இருத்தலுக்கான)
உபாயமொன்றை
மீண்டும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்
தேர்ந்தெடுத்த அனைத்தும் தவறானவை
பொருட்டின்றிக் கைவிடப்பட்ட
வலுவோடும் அன்போடும்
துயில்கின்றனர் பெருநிலத்தின் கீழே
வடக்கிலும் தெற்கிலும்
பல்லாயிரக் கணக்கில்
தொண்டைகிழிய
இரு கைகளுயர்த்திச் சொல்கிறார்கள்
அவர்களது தந்தையினதும் சகோதரனினதும்
அயலவனினதும் கொலைகாரர்கள்
எமது மீட்பர்கள்தானென

கனவுகளைக் காண்பவனும்
கனவுகளைக் கட்டியெழுப்புபவனும்
எம்முடனேயே மரித்துப்போகட்டுமென விதிக்கப்பட்டுள்ளது
இப்பொழுதே
கண்டங்களின் வேட்டைக்காரர்கள்
துணிச்சல்காரர்களை
விலைக்கு வாங்கிவிட்டனர்

Series Navigation