இறுதிப் பேருரை

This entry is part [part not set] of 36 in the series 20090129_Issue

நரேந்திரன்


எனக்கு ஒரு பொறியியல் (என்ஜினியரிங்) பிரச்சினை இருக்கிறது.

எனது பொதுவான உடல் ஆரோக்கியநிலை மிக நன்றாக இருந்தாலும், என்னுடைய ஈரலில் பத்துக் கட்டிகள் இருக்கின்றன. ஆம். எனக்கு Pancreatic Cancer எனப்படும் ஈரல்குலைக் கட்டி நோய் இருக்கிறது. இன்னும் சில மாதங்கள் மட்டுமே நான் உயிர்வாழ்வேன் என மருத்துவர்கள் என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

எனது கனவுக் கன்னியைத் திருமணம் செய்தவகையில், அழகான மூன்று குழந்தைகள் எனக்கு உண்டு. என்னைப் பற்றிய சுய பச்சாதாபம் என்னிடம் மேலிட்டாலும், நான் அதனைக் குறித்து அதிகம் எண்ணப் போவதில்லை. அதனால் ப்ரோயஜனம் எதுவுமில்லை என்பதனை நான் நன்கறிவேன்.

எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் இக்குறுகிய காலத்தை எவ்வாறு கழிப்பது?

குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதும், அவர்களுடன் நேரம் செலவழிப்பதும் முக்கியமான ஒரு விஷயம். அதனை நான் செய்து கொண்டுதான் இருக்கிறேன். நான் இல்லாத உலகில் அவர்கள் வாழத் தேவையான எல்லாவித அவசியங்களையும், வழிவகைகளையும் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிதான் இருக்கிறேன்.

அதே சமயம், எனது குழந்தைகள் மிகவும் சின்னஞ்சிறு சிறுவர்கள். நான் உயிருடன் இருக்கப் போவதோ இன்னும் சில மாதங்கள். அவர்களுக்கு எவ்வாறு இன்னுன் இருபதாண்டுகளுக்கு தேவையான அறிவினைப் புகட்ட முடியும்? நான் கற்றுக் கொடுத்தாலும் புரிந்து கொள்ளக் கூடிய நிலைமையில் அவர்கள் இல்லை. என் போன்ற எல்லாப் பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளுக்கு தவறுக்கும், சரிக்குமான வித்தியாசங்களைக் கற்றுக் கொடுக்கவும், சவால்களைச் சமாளித்து உலகில் உயிர்வாழத் தேவையான முக்கிய விஷயங்களைக் எடுத்துக் கூறுவதையும் விரும்புவார்கள் என்பதில் சந்தேகமில்லை. மேலும் நமது வாழ்க்கைக் கதைகளையும், அனுபவங்களையும் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து, அவர்கள் தங்களின் வாழ்க்கைப் பாதையை செம்மையாக அமைத்துக் கொள்ள வழிகாட்டுவதும் ஒவ்வொரு பெற்றோரும் செய்யும் ஒரு செயல்.

எனவே, எனது வாழ்க்கை அனுபவங்களை “இறுதிப் பேருரையாக” நான் பணிபுரியும் அமெரிக்க கார்னிகி மெலோன் (Carnegie Mellon) சர்வகலாசாலையில் வழங்கத் தீர்மானித்தேன்.

எனது இப் பேருரைகள் சர்வகலாசாலையினரால் தொடர்ந்து ஒளிநாடாக்களில் பதிவு செய்யப்பட்டன. மாணாக்கர்களுக்கு கல்வி வழங்கிடும் சாக்கில், எனது சொந்த வாழ்கைக் கதையைச் சொல்வது சரியானதல்ல என்று நீங்கள் நினைக்கலாம். என்னுடைய எண்ணம், புட்டியில் அடைக்கப்பட்டுக் கடலில் வீசியெறியப்பட்ட செய்தியானது என்றேனும் ஒருநாள் என் குழந்தைகளினால் கண்டுபிடிக்கப்படும் என்பதுதான். நான் ஒரு ஓவியனாக இருந்திருந்தால், எனது வாழ்க்கையை ஓவியமாக வரைந்திருப்பேன் அவர்களுக்காக. நான் ஒரு இசைக் கலைஞனாக இருந்திருந்தால் பாடல்களைப் புணைந்து வைத்துப் போயிருப்பேன். நானோ வெறும் ஒரு விரிவுரையாளன். எனவே நான் ஒரு பேருரை வழங்கத் துணிந்தேன்.

எனது வாழ்க்கையின் எச்சம் சிறிதளவே இருக்கின்ற நிலைமையிலும், வாழ்க்கையின் இன்பங்களையும், உலக வாழ்வு நமக்களிக்கும் சந்தோஷங்களையும் பற்றி நான் தொடர்ந்து உரைகளாற்றினேன். என்னுடைய பொதுவாழ்வில் நான் தவறாமல் கடைப்பிடித்த சத்தியம், நேர்மை, அன்பு, விட்டுக் கொடுத்து வாழ்தல் போன்ற குணங்களின் உயர்வு குறித்தும், அதனைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் நான் விளக்கினேன். அதேசமயம் எனது உரைகள் சுவாரசியமானவையாக இருக்குமாறு பார்த்துக் கொண்டேன்.

கல்லூரியில் குறிப்பிட்ட விஷயங்களின் தொடர்ச்சியாக ஒரு புத்தகம் எழுதத் துவங்கினேன். எனக்கு இறைவன் அளித்திருக்கும் சில மாதங்கள் வீணாக்க இயலாதவை. நான் உயிருடன் இருக்கப் போகும் இக் குறுகிய காலத்தை எனது குழந்தைகளுடன் இனிமையாகக் கழிக்க விரும்புகிறேன். ஒவ்வொரு நாள் காலையிலும் உடற்பயிற்சி செய்வதையும், நான் குடியிருக்கும் பகுதியைச் சுற்றி சைக்கிள் சவாரி செய்வதையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.

எனது இந்தப் புத்தகம், தனது குழந்தைகளைக் கண்ணே போலக் காத்து வளர்க்கும் ஒரு உயிர்வாழும் பெற்றோருக்கு இணையாகாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் பொறியியல் என்பது பிரச்சினைகளை 100 சதவீதம் தீர்த்து வைப்பது என்பதல்ல. நம்மிடையே இருப்பதைக் கொண்டு அதன் மூலம் நம்மால் ஆனதை சிறப்பாகச் செய்வது என்பதுதான். எனது புத்தகம் மூலமாகவும், பேருரைகள் மூலமாகவும் அதனைச் செய்ய முயன்றிருக்கிறேன்.

– Randy Pausch அவரின் The Last Lecture என்ற புத்தகத்திற்காக எழுதிய முன்னுரையிலிருந்து.

ராண்டி பாஸ்ச், கார்னிகி மெலன் சர்வகலாசாலையில், கணிப்பொறித் துறைப் பேராசிரியர். The Last Lecture அவருடைய சுயசரிதை.

ராண்டி இன்று நம்மிடையே இல்லை.

2008, ஜூலை 25-ஆம் தேதி தனது 47-ஆவது வயதில் ராண்டி மரணமடைந்தார்.

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்