இரு காந்தீயப் போராளிகள்

This entry is part [part not set] of 24 in the series 20070412_Issue

பி ஏ கிருஷ்ணன்1

எனக்கு என் மீது ஓரளவு மரியாதை உண்டு. மற்றவர்களை விட நான் சிறிது வித்தியாசமானவன், சாதாரண மக்களின் பிரச்சினைகளைப் பற்றி கொஞ்சம் புரிதல் உள்ளவன் என்று என்னைப் பற்றி நானே நினைத்துக் கொண்டு உள்ளுக்குள்ளே நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு நடந்து பார்த்திருக்கிறேன். ஆனால் நான் மிகவும் அற்பமானவன், ஒரு புழு அளவிற்குக் கூட உபயோகம் இல்லாதவன் என்ற உண்மை பல சமயங்களில் எனக்குத் தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. சமீபத்தில் நான் பார்த்த சே குவேராவின் இளமைக் காலத்தைப் பற்றி பேசும் Motorcycle Diaries படம் இந்த உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. மற்றொரு முறை இது என் முன் வந்து நின்றது கத்தியின்றி ரத்தமின்றி புத்தகத்தைப் படித்த போது. கத்தியின்றி ரத்தமின்றி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியரைப் பற்றிய புத்தகம். ஆனந்த விகடன் வெளியிட்டது. லாரா கோப்பா இத்தாலிய மொழியில் எழுதிய இந்த புத்தகத்தை அதன் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து (ஆங்கிலப் புத்தகத்தின் பெயர் – The color of Freedom) தமிழில் திரு மகாதேவன் மொழி பெயர்த்திருக்கிறார். தடையின்றிச் செல்லும் மொழி பெயர்ப்பு. ஆனந்த விகடன் இந்த புத்தகத்தைக் கொண்டு வந்திருப்பதாலேயே புத்தகம் சொல்வதை பலரும் கேட்க முடியும். இதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சுவாமிநாதையரின் சுய சரிதத்தை வெளியிட்ட பிறகு ஆனந்த விகடன் செய்திருக்கும் மிகப் பெரிய சாதனை இதுதான் என்று தோன்றுகிறது.

2

யார் இந்த கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியர்?

இந்தக் கேள்விக்குப் பதில் பல தமிழர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இவர்களைப் பற்றி நினைவு கொள்ளத் தக்க எந்த புத்தகமும் இது வரை தமிழில் வந்ததாகத் தெரியவில்லை நமது தமிழ்ச் சூழல் அப்படி. A pig with feathers behind its ears is still a pig and not a bird of paradise என்று ஆங்கிலத்தில் ஒரு கூற்று உண்டு. நமக்கு இந்த கூற்று பொருந்தாது. காதுகளில் வண்ண இறகுகளை வைத்துக் கொண்டிப்பதாலேயே பல பன்றிகளை நாம் சுவர்க்கப் பறவைகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையான சுவர்க்கப் பறவைகள் நம்மைச் சுற்றி வந்து நர்த்தனம் செய்வதில்லை. அவைகள் அவைகளாகவே இருப்பதால் நமக்கு அடையாளம் தெரிவதில்லை.

கிருஷ்ணம்மாள் ஒரு தலித் குடும்பத்தில் 1926 ம் ஆண்டு பிறந்தவர். ஜெகந்நாதன் என்ற உயர் சாதிக் காரரை மணந்தவர். தமிழகத் தலித் பெண்களில் முதன் முதலாக பட்டதாரியானவர் இவர்தான் என்று இந்தப் புத்தகம் கூறுகிறது. ( இது உண்மையா என்பது சந்தேகமாக இருக்கிறது). மிக வறுமையான குடும்பத்தில் 12 குழந்தைகளில் ஒருவராகப் பிறந்த இவர் டாக்டர் சவுந்தரம்மாளின் உதவியால் கல்லூரியில் சேர்ந்து படித்தார். இப்படிப் படிக்கும் போது ஒரு அதிசயம் நடந்தது என்று கிருஷ்ணம்மாள் சொல்கிறார்.

காந்தி அப்போது தமிழ்நாடெங்கும் சுற்று பயணம் மேற்கொண்டிருந்தார்… அவர் வருகிறார் என்று தெரிந்த போது மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியைத் விட அவரைப் பார்க்க முடியாதே என்ற கவலையே மனதில் அதிகமாக இருந்தது. (காந்தியின் மருத்துவருக்கு) ஒரு உதவியாளர் தேவையாக இருந்திருக்கிறார். சவுந்தரம் அம்மாள் என்னை அந்தப் பணிக்கு நியமித்தார்கள். ஒரு நிமிடமாவது காந்தியைப் பார்க்க முடியுமா என்று தவித்த எனக்கு ஒரு வாரம் முழுவதும் அவருக்கு அருகே இருந்து பணிவிடைகள் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.

ஜெகந்நாதன் 1914 ம் ஆண்டு ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்தவர். காந்தியால் ஈர்க்கப் பட்ட பலரில் இவரும் ஒருவர். கல்லூரிப் படிப்பை பாதியிலேயே துறந்து தீன சர்வ சேவா சங்கம் என்ற பெயரில் டாக்டர் ராலே கெய்தான் பெங்களூரில் நடத்தி வந்திருந்த ஆஸ்ரமத்தில் சேர்ந்து பணி புரிந்தார். சேரிக் குழந்தைகளுக்கு இரவில் வகுப்புகள் நடத்தினார். 1941 தனி நபர் சத்தியாகிரகத்தின் போதும் 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்குப் பிறகும் இரு முறை சிறை சென்றார். ஏன் கிருஷ்ணம்மாளை மணந்தேன் என்பதற்கு இவர் சொல்லும் காரணம் இது: (இந்தியப் பெண்கள்) மிக ஏழையாக இருந்தாலும் கழுத்தில் ஒரு துளி தங்கமாவது இருக்கும். ஆனால் கிருஷ்ணம்மாள்… கழுத்திலோ காதிலோ ஏன் மூக்கிலோ கூட எந்த நகையும் இல்லாமல் இருந்தார். வெள்ளை நிறத்தில் ஒரு புடவை கட்டிக் கொண்டிருந்தார். சின்னதாக ஒரு கறை போட்ட அந்தப் புடவையில் அவர் மற்றவர்களில் இருந்து தனித்துத் தெரிந்தார். எனக்கு அவரைப் பார்த்த நிமிடமே இவர்தான் நம் வாழ்க்கைத் துணை என்று மனதில் தோன்றிவிட்டது.

3

ஜெகந்நாதன் கிருஷ்ணம்மாள் தம்பதிகளைப்ப் பற்றி நான் முதலில் கேள்விப் பட்டது 1968 வாக்கில் என நினைக்கிறேன். கீழ் வெண்மணி படுகொலைகளால் கம்யூனிஸ்டுகள் கொதித்துப் போயிருந்த நேரம். நானும் கொதித்துப் போயிருந்தேன். கொதித்துப் போய் என்ன செய்ய முடியும்? கோபப்பட முடியும். அன்று நாங்கள் கோபப் பட்டது சர்வோதயா இயக்கத்துத் தொண்டர்கள் மேல். புரட்சிக் கனலை அணைக்க முயலும் பிற்போக்கு வாதிகளில் அவர்கள் முதலில் இருந்தார்கள். கீழ் வெண் மணியில் நடந்தது பற்றி கிருஷ்ணம்மாள் சொல்கிறார்:

கருகிய உடல்களுக்கு முன்னால் இருந்த ஜெகந்நாதனுக்கு கோபமாக வந்தது. கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறைதான் இது போன்ற நிகழ்வுகளுக்குக் காரணம் என்று சாடினார். நான் … கம்யூனிஸ்டுகள் இருப்பதால்தான் நிலைமை இவ்வளவாவது கட்டுக்குள் இருக்கிறது என்று … சமாதானப் படுத்தினேன்.

கீழ்வெண்மணியில் கிருஷ்ணம்மாள் ஒரு வருட காலம் தங்கினார். கம்யூனிஸ்டுகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையில் அவர் தலித்துகளிடையே வேலை செய்தார். 1971 ம் வருடம் அந்த கிராமத்தில் இருந்த 74 தலித் குடும்பங்களுக்கு 74 ஏக்கர் நிலங்களை- நல்ல விளைச்சல் விளையக் கூடிய நிலங்களை வாங்கிக் கொடுத்தார். 1968 போராட்டத்தின் காரணம் விவசாயிகள் அரைப் படி அரிசி கூடுதல் கூலி கேட்டது என்பதை நாம் நினைவு வைத்துக் கொண்டால் இந்தச் சாதனை எவ்வளவு பிரம்மாண்டமானது என்பது நமக்கு விளங்கும்.

கீழ் வெண்மணி விவசாயிகள் இன்று சொல்கிறார்கள்:

கிருஷ்ணம்மாளும் ஜெகந்நாதனும் எங்களுக்கு சிவனும் பார்வதியும் போல. அரைப் படி அரிசி கூடுதலாகக் கேட்ட எங்களுக்கு அந்த நிலமே கிடைத்து விட்டது … பொருளாதார நிலையில் நாங்கள் உயர்ந்தது என்பது எங்கள் சமூக நிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

4

இன்றைய இளைஞர்களுக்கு பூதான இயக்கத்தைப் பற்றி அதிகம் தெரியாது. தெலிங்கானாவில் (ஆசியர் கூறுவது போல குஜராத்தில் அல்ல) கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டத்திற்கு அமைதியான முறையில் தீர்வு காணுவதற்கு வினோபா பாவே- காந்தியின் பல சீடர்களில் ஒருவர்- தேர்ந்தெடுத்த முறைதான் பூதான இயக்கம். உயர் சாதி மக்களிடமிருந்து நிலங்களைத் தானமாகப் பெற்று நிலமற்றவர்களுக்கு அளிப்பதுவே இந்த இயக்கத்தின் நோக்கம். 13 ஆண்டு நடந்த இந்த இயக்கத்தினனல் இந்தியா முழுவதும் கிட்டத் தட்ட 40 லட்சம் ஏக்கர்கள் தானமாகப் பெறப் பட்டு நிலமற்றவர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த இயக்கத்தை தமிழ் நாட்டில் முன்னின்று நடத்தியவர்கள் ஜெகந்நாதனும் கிருஷ்ணம்மாளும். கிட்டத்தட்ட மூன்றே வருடங்களில் ஒரு லட்சம் ஏக்கர்கள் தானமாக இவர்கள் இருவரும் பெற்று விட்டனர். கம்யூனிஸ்டுகள் பூதான இயக்கம் வெறும் கண்துடைப்பு வேலை என்று கடுமையாக பிரசாரம் செய்தார்கள். இது பற்றி ஜெகந்நாதன் சொல்கிறார்:

கம்யூனிஸ்டுகள் எங்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்தார்களே தவிர நாங்கள் அவர்களுக்கு எதிராக ஏதும் செய்யவில்லை. மேலும் தானமாக கிடைத்த நிலத்தில் ஒரு நாற்பது சதவீத நிலங்கள் நல்ல நிலங்கள்தான். நீர்ப் பாசன் வசதிகள் செய்து கொண்டால் அரிசியும் சோளமும் அருமையாக விளையும். யாருக்கும் நீர்ப்பாசன வசதியோடு இருக்கும் நிலத்தைத் தர மனம் வந்திருக்கவில்லை.

ஒரு லட்சம் ஏக்கர்கள்!

நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. சென்னையைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் இன்று தரிசு நிலத்தின் விலை சதுர அடிக்கு குறைந்தது 2000 ரூபாயாவது இருக்கும். பூதானம் நடந்த போது நாம் இந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்திருக்க வில்லை.

5

இந்த தம்பதிகள் கலந்து கொண்ட போராட்டங்களில் பல grand causes என்பார்களே அத்தகைய கம்பீரமான கொள்கைகளுக்காக நடத்தப் பட்ட போரட்டங்கள் அல்ல. சிறிய அளவில் , வத்தல குண்டு, வலிவலம் போன்ற சிறிய ஊர்களில் சதாரண மக்களின் அடிப்படைத் தேவைக்களுக்காக நடத்தப் பட்ட போராட்டங்கள். இந்தப் போராட்டங்கள் மடாதிபதிகளையும், கம்யூனிஸ்டுகளாக இருந்து மந்திரிகளானதும் முதலாளிகள் ஆனவர்களையும், இந்திரா காந்தி அரசையும் இவர்களுக்கு எதிரிகளாக ஆக்கியிருக்கிறன. இவர்களை சுதந்திர இந்தியாவின் பல சிறைச்சாலைகளுக்கு – தமிழ் நாட்டிலிருந்து பீகார் வரை – அனுப்பியிருக்கிறன.. நமது சிறைச்சாலைகளைப் பற்றி கிருஷ்ணம்மாள் சொல்கிறார்:

ஆங்கிலேயர் ஆட்சி என்றாலும் சரி, நமது ஆட்சி என்றாலும் சரி சிறை என்பது ஒரே விதமாகத்தான் இருக்கிறது. காவலர்கள் என்பவர்கள் ஒரே விதமாகத்தான் இருக்கிறார்கள்… ஆடைகளைக் களைந்து அலசி எல்லாம் குளிக்க முடியாது. அப்படியே தலையில் ஊற்றிக் கொள்ள வேண்டியதுதான். துணியைப் பிழிந்து, வேறு உடுத்திக் கொள்ள முடியாது. அப்படியே வெய்யிலில் நின்று காய்ந்து கொள்ள வேண்டியதுதான்.

இந்த தம்பதிகள் நடத்திய போரட்டங்களில் சர்வதேச அளவில் கவனம் பெற்ற ஒன்று இறால் பண்ணைப் போராட்டம். 87 வயதில் ஜெகந்நாதனைச் சிறைக்கு அனுப்பிய போராட்டம். நன்றாக விளைந்து கொண்டிருந்த நிலங்களை உவர் நிலங்களாக்கும் அவலம் இறால் பண்ணைகள் மூலம் நடந்தது. நில உடைமையாளர்கள் நிலங்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் இதைப் பற்றிக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் நிலங்களில் உழைத்தவர்கள் வயிறுகளில் அடி விழுந்தது. பத்து குடும்பங்கள் பிழைத்துக் கொண்டிருந்த நிலங்களில் இறால் பண்ணை வந்ததால் அதிக பட்சம் ஒரு குடும்பம் பிழைக்க முடிந்தது. இறால் பண்ணைக்காக இராட்சத மோட்டார்களைக் கொண்டு நிலத்தடித் தண்ணீர் உறிஞ்சப் பட்டதால், மற்ற நிலங்களில் உள்ள பயிர்கள் தண்ணீரின்றிக் கருகும் நிலை ஏற்பட்டது. இந்தப் பண்ணைகளை எதிர்த்து இவர்கள் தொடுத்த வழக்கில் உச்ச நீதி மன்றம் மக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியும் அரசு அமைப்புகள் பண்ணைகளுக்கே துணை போயின. போய்க் கொண்டிருக்கின்றன.

இந்தப் புத்தகம் ஒரு வாழ்க்கை வரலாறு அல்ல. லாரா கோப்பா ஜெகந்நாதன் தம்பதிகளின் வாழ்க்கையைப் பற்றி அவர்களிடம் கேட்டறிந்ததையே அவர் எழுதியிருக்கிறார். தம்பதிகள் இன்று எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் அருமையாகப் படம் பிடித்திருக்கிறார். தமிழ் நாட்டின் அழுக்குகளையும் அழகுகளையும் பற்றி அவர் எழுதியிருக்கும் வரிகள் கூரியவை. நாம் பார்த்தும் பார்க்காதது போல் போய்விடுபவை பற்றி, பார்த்து எழுதியிருக்கிறார்.

6

ஜெகந்நாதன் தம்பதிகள் தேவர்கள் அல்ல. கொள்கைகளை உதிர்த்துக் கொண்டே போகும் அரசியல் ஞானிகள் அல்ல. காந்தி காட்டிய பாதையே சரி என்று நினைத்து அந்த பாதையிலிருந்து விலகாமல் தங்கள் வாழ்க்கை முழுவதும் கழித்தவர்கள். இவர்களைப் போன்றவர்களின் உழைப்பினல் மொத்த சமுதாயமும் மாறச் சாத்தியம் இல்லை என்ற விமரிசனம் உண்மைதான். ஆனால் இவர்களின் உழைப்பினால் சில கிராமங்கள் உயர்ந்திருக்கின்றன. பல ஆயிரக்கணக்கான எளிய மக்களின் வாழ்க்கைகள் ஓரளவு சீரடைந்திருக்கின்றன. புரட்சியின் வாளை மழுங்கச் செய்வதில் இவர்களின் பங்கு எவ்வாறாக இருப்பினும், இவர்கள் வாழ்ந்த விதம் மகத்தானது. எந்த புரட்சி வாழ்விற்கும் குறைவில்லாதது. இந்தியாவும் தமிழ்நாடும் இவர்களைப் போன்றவர்களால் பெருமை பெறுகின்றன.

பி. ஏ. கிருஷ்ணன்


tigerclaw@gmail.com

Series Navigation