இருப்புணர்ந்து இளகும் நெஞ்சு!!

This entry is part [part not set] of 28 in the series 20020924_Issue

வ.ந.கிரிதரன் –


உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
உனக்குள் எனக்குள்
பரவிக் கிடக்கும் வெறுமையைக்
கண்டு மனம் அதிரும்.
உள்ளூம் புறமும் வெளியாய்
பரவிக்கிடக்குமிந்தப் பெருவெளி.
சோகமேன் சகியே!
உனைப் பார்த்து மட்டுமல்ல
உன்னருகே கிளைதாவுமந்த
அணில், அதனருகே தனித்துணவு
தேடுமந்தச் சிட்டு,
அவசர அவசரமாக வீடு
விரையுமந்த அந்த அராபிய மனிதன்
ஆபிரிக்க அணங்கு
ஆலயம் விட்டு ஆடிவரும்
அந்த முதிய சிறிலங்காத் தமிழன்
அந்த இந்திய மனிதன்
அந்த எருது
அந்த அமெரிக்கன்
அந்த ஆங்கிலேயன்
இவ்விதம் யாரைப் பார்த்தாலும்
எதனைப் பார்த்தாலும்
எனக்குத் தெரிவதெல்லாம்
வெளியும்,கதியும்,முகிலும்,
சுடரும்,சக்தியும் தானே.
வெறுமைக்குள் வெறுமையாய்
அரங்கேறும் நாடகங்கள்.
சிறுதுளியாய்க் கணநேர இருப்பு.
இருப்பினை இருத்திவிடுமொரு
பொறுப்பு மட்டுமில்லையென்றால்…
அதற்குள் தானெத்தனை ஆட்டங்கள்!
அடிப்படையில் அனைத்துமொன்றே.
இது கூடப்
புரியாத பொழுதெனவே
போகுமிந்த இருப்பினிலே
இருப்புணர்ந்து
இளகும் என் நெஞ்சே!.

***
ngiri2704@rogers.com

Series Navigation