இருப்பதினால் ஆய பயன்

This entry is part [part not set] of 19 in the series 20011210_Issue

கே.கே…


எங்கு போயின எம் திசையளந்த கனவுகள்
நாம் கண்ட உலகங்கள் எங்கே
எமது கபடமற்ற குழந்தைகளும் கருணை மிக்க
கடவுளுமெங்கே ….
எமக்கு புரியாவிடில் உணர்த்துங்கள்
மேன்மை தாங்கியவர்களே.

நாம் கேட்டது இல்லையெனில்
இருப்பதில் என்ன கோளாறு.
எங்கு போயினர் …
புத்தியும் சித்தியும் வாய்க்கப் பெற்ற எமது சகாக்கள்

ரோட்டின் மத்தியில் துண்டாடப்பட்ட
வெள்ளை கோட்டினைப் போன்ற
நேர்த்தியும் உறவுமற்ற நிலை எதற்கு.

எங்கள் உள்ளங்களை உயிராலன்றோ நிரப்பினோம்
உதிரம் ஏன் வடிகிறது

செய்தது சரியில்லையெனில்
எறியுங்கள் எம்மைப் புழுதியோடு
எமது பிரிவிழந்த கரங்களையும்
பிரியம் நிறைந்த நெஞ்சுக் கூட்டையும்
கடைசியாக ஒரு முறை உணர்ந்து பார்த்த பின்.

Series Navigation

கே.கே...

கே.கே...