This entry is in the series 20030530_Issue

கோமதி நடராஜன்


விட்டுச் சென்ற நாளிலிருந்து
விடாமல் தேடுகின்றேன்.
தொட்டுச் சென்ற நாளிலிருந்து
தொடர்ந்து தேடுகின்றேன்.
கிணற்றில்,முத்தைத் தேடிய,
முட்டாள் போல்,
உன்னை-
பார்த்தால் மட்டுமே, பார்க்கும்
பாவிகளிடம் தேடினேன்.
சிரித்தால் மட்டுமே,சிரிக்கும்
சிறியோரிடம் தேடினேன்,
பேசினால் மட்டுமே, பேசும்
பேதையரிடம் தேடினேன்.
இங்கெல்லாம் கிடைக்க,
நீ என்ன கூழாங்கல்லா ?
சாக்கடையில் விழுந்த
சரளைக் கல்லா ?
ஆழ்கடல் முத்து நீ.
அள்ளிப் பருகும் அமுதம் நீ.
பொறி தட்டியது,ஒருநாள்.
புரிந்து கொண்டேன்,
நீ இருக்குமிடத்தை.
ஆதாயம் தேடாமல்
ஆதரவாய் வருடும் தென்றலில்
தவழ்ந்து வந்தாய் நீ!
சுயநலம் பார்க்காமல்
தாகம் தீர்க்கும் தண்ணீரில்
கலந்து நின்றாய் நீ!
எதிர்பார்ப்பு ஏதுமின்றி,
மணம் வீசும் மலரில்,
ஒன்றானாய் நீ!
அன்றிலிருந்து-
தென்றல், என்னைத்
தீண்டும் போதும்,
தண்ணீர், என் தாகம்
தணிக்கும் போதும்,
மலர்மணம்,என் நாசியை
தொடும் போதும்,
அன்னையே!நீ என் அருகில்
இருக்கின்றாய்,
உன்னையே எனக்குத்
தருகின்றாய் என்றுண்ர்ந்தேன்.
கண்டு கொண்டேன்,
நீ இருக்குமிடத்தை.
இனி-
நீ, இல்லாத இடத்தில்
தேட மாட்டேன்.
அங்கே-
இல்லையே என்று
வாடமாட்டேன்.

ngomathi@rediffmail.com

Series Navigation