இரவின் அழகு

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

சத்தி சக்திதாசன்


இரவு ராஜா
தன் மேனியைச்
சுற்றி போர்த்ததந்த
இருளாடை

கறுப்புச் சூழலிலும்
உயர்ந்து
பார்க்கையில் மலைபோல்
அடுக்காய்
தோன்றும் வெண்முகில்
கூட்டங்கள்

அதற்கும் மேலே
வண்ண நீலத்திரையாய்
வானத்தின் கோலம்
துல்லியமாய் அதில்
இயற்கையன்னை இட்டதொரு
வட்டமான ஓவியமாம்
வெண்ணிலவின் யாத்திரை

என்னே அழகு
எந்தன் இரவு எனும்
அந்த பருவக் கனிகை
மனிதர் யாவும் தம்
துயரங்களை ஒருகணம்
மூடிவைத்து
கனவெனும் ஓர் காலவரையற்ற
நதியினில் ஆடி மகிழ
பரிசென வந்த இரவு

இரவைப் பகல்
விழுங்கியதா ?
அன்றி
பகலை இரவு
கக்கியதா ?
தாலாட்டுப் பாடுவது
இரவு
தவிக்க விடுவது
பகல்

அமைதியைக் கொடுப்பதற்கு
அந்தஸ்து
கேட்பதில்லை இரவு
வெளிச்சத்தைக் கொடுத்து
விலையாய் உழைப்பை
வாங்குகின்றது பகல்

என் இரவின்
அழகைக் கலைக்காதே
பகலின் துன்பச்சுமைகளை
இறக்கி வைக்கும்
இரவுச் சுமைதாங்கியை
உடைத்து விடாதே

இரவின் இருளோடு
எத்தனையோ விழிகள்
தம் கண்ணீர் நதிகளை
உலகில் கலந்து
விடுகின்றன
பணமின்றி இந்த உலகில்
ரசிக்கக்கூடியவை
சொற்பமானவையே
இரவின் அமைதியை
பேராசையினால் என்றுமே
இழந்துவிட
சம்மதிக்க மாட்டேன்.

———————————————————–
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்