இரவின்மடியில்

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

பாவண்ணன்


அப்பாவுக்குத் திடீரென இரவு நேரங்களில் தூக்கம் வராமல் போனது. வழக்கமாக எங்கள் ஊர் டுரிங் டாக்கீஸில் முதலாவது ஆட்டம் முடிந்து பாட்டு போடுகிற சமயத்தில் கடையைச் சாத்திக்கொண்டு வீட்டுக்கு வருவார் அப்பா. கைகால் முகம் கழுவிக்கொண்டு காற்றின் அலைகளில் திரிந்தலையும் இசையை வானொலியின் குமிழியைத் திருகித்திருகிப் பாடவைத்துவிட்டு சாப்பிடுவார். பிறகு களைப்பில் அப்படியே படுத்துத் தூங்கிவிடுவார். இந்தப் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் அவர் தூங்கும் நேரம் கொஞ்சம்கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. சாப்பாட்டுக்குப் பிறகு களைப்புக்கு மாறாக உற்சாகம் நிரம்பியவராகக் காணப்பட்டார். தூங்கும் என்னையும் தம்பி தங்கையையும் “கத சொல்றன் வாங்க” என்று சொல்லி எழுப்பி கதை சொல்வதும் நடந்தது. அரைகுறை மயக்கத்தில் அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருப்போம். பிறகு, எப்போது தூங்கினோம் என்று தெரியாமலேயே தூங்கிவிடுவோம். நாங்கள் தூங்கிய பிறகும்கூட அப்பாவுக்கு உறக்கம் வருவதில்லை. திண்ணையில் உட்கார்ந்து வானத்தையும் நட்சத்திரத்தையும் நிலவையும் பார்த்துக்கொண்டிருப்பார். சில நேரங்களில் உத்வேகத்தோடு பாடத் தொடங்கிவிடுவார். “கச்சேரிய தொடங்கிட்டான்டா, எப்ப அடங்குவானோ அந்த ஆத்தாவுக்குத்தான் வெளிச்சம்…” என்று மேஸ்திரி வீட்டு ஆயா சலித்துக்கொள்ளும். பல சமயங்களில் அந்தக் கச்சேரி இரண்டாம் ஆட்டம் படம்விட்டு அக்கம்பக்கத்துத் தெருக்காரர்களெல்லாம் நடந்துபோவதுவரை நீண்டது. அந்த இடைவேளையில் ஒருமுறை பாடுவதை நிறுத்திவிட்டு மெதுவாக வெற்றிலை போடுவார். பிறகு வாய் கொப்பளித்துத் துப்பிவிட்டு தூங்கச் செல்வார். சிற்சில நேரங்களில் அதுவும் மாறி, விடியவிடிய விழித்திருக்கத் தொடங்கினார். மாலை சரிந்து இரவு கவியத் தொடங்கும் நேரத்தில் அவர் மனம் சிறுகச்சிறுக அமைதியிழந்து தவிப்பதற்கும் அந்தத் தவிப்பிலிருந்து மீள்வதற்காக பாடல்களை ஒரு துணையாக மாற்றுவதற்கும் என்ன காரணம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை.
கசப்பும் விரக்தியும் நிம்மதியின்மையும் கலந்த கலவையின் வடிவமாக இரவு கவிந்திருந்த காலம் அது. இருட்டஇருட்ட எங்களுக்கு நடுக்கம் கூடிக்கொண்டே போகும். ஆனால் அப்பாவின் முகத்தில் உற்சாகம் களைகட்டியிருக்கும்.
“உத்தாரம் தாருமையே…” என்று தென்னைமரம் நிற்கிற திசையின்பக்கமாக கையை நீட்டியபடி அவர் இரவெல்லாம் பாடிய நாட்களை மறக்கமுடியாது. அவர் உருகஉருகப் பாடுவதைப் பார்த்தால் பதில்சொல்லக் கடமைப்பட்ட ஆள் அந்த மரத்துக்குப் பின்னால் நின்றிருப்பதுபோலவும் அவருடைய கவனத்தைத் திசைதிருப்பி எப்பாடுபட்டாவது பதில் பெறவேண்டியது தன்னுடைய கடமை என நினைப்பதுபோலவும் தோன்றும். தாருமையே என்ற சொல்லை பல நிலைகளில் ஏற்றிஇறக்கிச் சொல்லிக் கெஞ்சுவதைக் கேட்கக்கேட்க கண்ணீர் வந்துவிடும். பாடல் முடிந்தபிறகும் அந்த மரத்தையே உற்றுப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பார், ஒரு சிற்பத்தைப்போல. வெகுநேரம் யாசித்து நின்றதற்குப் பலனற்றுப் போய்விட்டதுபோன்ற ஏமாற்றம் அவர் முகத்தில் படிவதை அப்போது பார்க்கமுடியும். கடுமையான துக்கமொன்று அவர் கண்களில் தத்தளிப்பது தெரியும். மறுகணமே நிலைகுலைந்து சாய்ந்துவிடுவார் என்பதுபோல அவர் உடல் சோர்ந்து தளர்வடையதாகத் தோன்றும். எல்லாமே சில கணங்கள்தான். சட்டென அவர் எல்லாவற்றையும் உதறிவிட்டு மல்லிகைக்கொடியின் பக்கம் திரும்பி பித்தம் தௌiய மருந்தொன்று இருக்குது என்று புதுசாக வேறொரு பாட்டைத் தொடங்கிவிடுவார். நாங்கள் அவர் வாயைப் பார்த்தபடி உட்கார்ந்திருப்போம். தம்பியும் தங்கையும் சுவரில் சாய்ந்தது தெரியாமலேயே தூங்கவிடுவார்கள். கண்களை மீண்டும்மீண்டும் சுருக்கியபடி அவரையே பார்த்திருப்பேன் நான்.
இருட்டில் அவருக்குக் காவலாக நான் உட்கார்ந்திருப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. பாட்டு வேகத்தில் திடீரென்று எழுந்துபோய் வேறெந்த வீட்டுத் திண்ணையிலாவது உட்கார்ந்துவிடுவார். சில சமயங்களில் கோயில் படிக்கட்டின்பக்கம் போய்விடுவார். வாய்க்கால்பாலம், சத்திரத்துக் கிணற்றடி, வேப்பந்தோப்பு, தொட்டிப்பாட்டை என அவர் சொல்லும் இடங்கள் கணிப்புக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். அம்மாதான் ஒவ்வொரு இடமாக பெயர்சொல்லித் தேடிப் பார்த்து அப்பாவை அழைத்துவரும்படி அனுப்பிவைப்பார்.
காற்று வீசும் சத்தம்கூட துல்லியமாகக் கேட்கக்கூடிய அந்த இரவு நேரத்தில் பயத்தில் நடுங்கியபடியே நடந்துசெல்வேன். தரையில் விழுந்திருக்கும் கரிய நிழல்களின் அசைவுகளைக் கண்டு என் இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கும். முருகா முருகா என்ற மனத்துக்குள் முணுமுணுத்தபடியே கழுத்தில் தொங்கும் தாயத்துக் கயிற்றைப் பற்றிக்கொண்டு நடந்துபோவேன். இருளிலிருந்து அப்பாவின் உருவம் எழுந்து வாராதா என்று எல்லா திசைகளிலும் பார்வையைப் படரவிடுவேன். எங்காவது ஒரு பக்கத்திலிருந்து என்னைப் பெயர் சொல்லி அழைத்து நிறுத்தமாட்டாரா என்று நினைத்துக்கொள்வேன். வீட்டுத் திண்ணையில் பாடகராக அமர்ந்திருப்பவர் வெளியிடங்களில் அமைதியின் உருவமாக மாறி அமர்ந்திருப்பார். வானத்துக்கும் அப்பால் எங்கோ ஒரு புள்ளியில் பார்வையை நிலைநிறுத்திய கண்கள் இமைக்க மறந்ததுபோலக் காணப்படும். அவர் கண்களில் தென்படும் வெளிச்சத்தைப் பார்க்க வசீகரமாகவும் அச்சமாகவும் இருக்கும். மெதுவாக அவர் அருகில் சென்று தொட்டு அசைப்பேன். தொடுதலை உணராத அளவுக்கு எங்கோ கவனம் குவித்தபடி சிலைபோல உட்கார்ந்திருப்பார். அந்தத் தனிமை ஊட்டும் அச்சத்தைத் தவிர்க்கவேமுடியாது. கண்ணுக்குத் தெரியாமல் எல்லாத் திசைகளிலிருந்தும் நீண்ட இழைகளால் பின்னப்பட்ட ஒரு பெரிய வலையில் அகப்பட்டுக்கொண்ட இரைபோல காணப்படுவார் அவர். அப்பா என்று குரல்கொடுத்தபடி மீண்டும் அவரை அசைப்பேன். பலமுறை அழைத்த பிறகுதான் அவர் முகம்திருப்பி என்னைப் பார்ப்பார். யாரையோ பார்ப்பதுபோல பார்க்கும் அந்தப் பார்வையை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது. அழுகை தொண்டையை முட்டும். மீண்டும் அப்பா என்று தொட்டு அசைப்பேன். அவர் அப்போது கண்களை இரண்டுதரம் இமைத்துஇமைத்து மூடுவார். சட்டென்று என்னை அடையாளம் கண்டுகொள்வார். ஆழ்ந்து பெருமூச்சுவிட்டபடி “என்னப்பா?” என்று கேட்பார். “ராத்திரில எதுக்குப்பா இங்க உக்காந்திருக்க, வாப்பா வீட்டுக்கு போவலாம்..” என்றபடி மறுபடியும் அவரை அசைப்பேன். அவர் உட்கார்ந்திருக்கும் மகிழமரத்தடியில் உதிர்ந்துவிழுந்திருக்கும் பூக்களின் மணம் நெஞ்சை அடைப்பதுபோல இருக்கும். குளிர்ந்த காற்றில் அடிவயிறு நடுங்க சில்லென்ற கையால் அவர் தோளைத் தொட்டு அசைத்து “வாப்பா போவலாம்” என்று அழுத்தம் கொடுப்பேன். எதுக்குடா என்று ஏதோ புரியாததுபோல அவர் கேட்டபடி என்னைப் பார்ப்பார். “வீட்டுக்கு வாப்பா போவலாம்…” என்று இன்னும் கூடுதலான அழுத்தத்தோடு எழுப்பியதும் எழுந்திருப்பார். ஒரு சின்னப் பிள்ளையைப்போல என் விரல்களைப் பற்றிக்கொண்டு மெதுவாக நடந்துவருவார். ச்ரக் ச்ரக் என்று செருப்புகள் பதிந்தெழும் சத்தமும் எங்களோடு சேர்ந்து வரும்.
பாலத்துக்குப் பக்கத்தில் விளக்குக் கம்பத்தில் கீழே உட்கார்ந்திருக்கும் நாய்களின் கூட்டம் ஒருமுறை எங்களைத் திரும்பிப் பார்த்து அழைப்பதுபோலக் குரைக்கும். ஒரு குட்டிநாய் அவசரமாக அந்தக் கூட்டத்திலிருந்து எழுந்தோடி வந்து அவருக்குப் பக்கத்தில் வந்து நின்று தலையை அவர் பக்கமாக வளைத்துவளைத்து குரைக்கும். இரவின் அமைதியைக் கிழிக்கும் அக்குரல்களைக் கேட்டு அடிவயிறு கலங்கித் துடிக்கும். அப்பாவோ என் விரல்களை உதறிவிட்டு குனிந்து அந்த நாய்க்குட்டியின் தலையைத் தடவிக் கொடுப்பார். அதற்காகவே காத்திருந்ததுபோல அந்தக் குட்டி கழுத்தைச் சாய்த்துக் காட்டும். கொஞ்சிமுடித்த பிறகு அந்தக் குட்டியைத் தூக்கிச் சென்று கூட்டத்தோடு சேர்த்துவிட்டு அங்கிருக்கும் ஒவ்வொரு நாயோடும் கொஞ்ச ஆரம்பித்துவிடுவார். அதற்குள் அவருக்கு இந்த உலகமே மறந்துபோய்விடும். நாய்களும் அவரும் ஒரே மொழியை மாற்றிமாற்றிப் பேசிக்கொள்வதுபோல தோன்றும். தூக்கக்கலக்கத்தில் எனக்குத் தலையே வெடித்துவிடும்போல இருக்கும். அப்பா என்று அவரை மெதுவாகத் தொட்டு அழைப்பேன். ஒரு நாயின் முதுகைத் தடவியபடியே என்னடா என்று திருப்பிக் கேட்பார் அப்பா. விரல்களில் இன்னும் கூடுதலான அழுத்தத்தைச் சேர்த்து எழுந்திருப்பா வீட்டுக்குப் போவலாம் என்று சொல்வேன்.
“போயி என்னடா செய்யறது?”
“தூங்க வேணாமா? நடுராத்திரில இப்பிடி திரிஞ்சா ஒடம்பு கெடாதா?”
கண்களைச் சுருக்கி என்னை ஒருகணம் நிமிர்ந்து பார்ப்பார். பிறகு, பார்வையை சுவரில் நெளிந்தசையும் மரத்தின் நிழலின்மீது குவித்தபடி “ஒடம்ப நல்லா வச்சி என்னடா சாதிக்கப் போறோம்?” என்பார். உதடுகளைப் பிதுக்கிப்பிதுக்கி தலையை மேலும் கீழும் அசைத்துக்கொள்வார். எனக்காக மனமிரங்கியபடி பெருமூச்சு வாங்கியவண்ணம் எழுந்து நடப்பார். “பொய்நெல்லைக் குத்தியே பொங்க நினைத்தவன் கைநெல்லும் விட்டானம்மா…” என்று பாட்டொன்றை அவர் வாய் முணுமுணுக்கும். நான் பிடித்திராத மற்றொரு கைவிரல்களால் சிட்டிகைத்தாளம் போட்டபடி அந்த வரிகளைத் திரும்பத்திரும்பப் பாடுவார்.
ஒரு பாறையைப்போல ஏதோ துக்கம் அவரை அழுத்திக்கொண்டிருந்த நாட்கள் அவை. அவர் நினைத்திருந்தால் ஒரே கணத்தில் அதை உருட்டித் தள்ளிவிட்டு விலகியிருக்கலாம். மாறாக, அந்தப் பாறையை ஒரு மயிலிறகுபோல நெஞ்சிலேயே சுமக்கத் தொடங்கினார். அவர் தொடங்கிய எந்தத் தொழிலிலும் அவர் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கவில்லை. யாருக்கோ கைமாற்றாகக் கொடுத்திருந்த பெரிய தொகை திரும்பக் கிடைக்கவில்லை. பெரியபெரிய கனவுகளோடு கட்டிய சீட்டுத் தொகை கைக்குக் கிடைக்கவே இல்லை. அடிக்கடி வீடு மாறவேண்டியிருந்தது. சிக்கனமாக வாழ்ந்து சிறுகச்சிறுகச் சேமித்து வாங்கிய ஒரு துண்டு நிலத்தில் இரண்டு வருடம்கூட விவசாயம் பார்க்கமுடியவில்லை. நெருக்கடிகளின் காரணமாக விற்க வேண்டியதாயிற்று. அடுத்தடுத்து நேர்ந்த துன்பங்கள் அவரைத் துவளவைத்தன. அவருக்குப் பதில் சொல்லக்கூடிய அளவுக்குக் கருத்துத் தெரியாத பருவம் அது.
நாங்கள் வரும்வரை கதவோரமாக சிம்னி விளக்கை ஏற்றிவைத்துவிட்டு அம்மா அந்தத் திரியையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார். அழுதுஅழுது அவர் கண்கள் சிவந்திருக்கும். வானத்தையே ஒரு பெரிய கண்ணாகக் கொண்டு எங்களைப் பார்ப்பதுபோல இருக்கும் அந்த இரவு.
எல்லா இரவுகளிலும் அப்பாவைக் கண்டுபிடித்துவிடமுடிந்ததில்லை. பின்தொடர்ந்து சென்றாலும் கவனம் பிசகும் ஒரு கணத்தில் எப்படியோ வழிதப்பிவிடும். எங்கோ ஒரு திசையில் அவர் சென்றுவிட, வேறொரு திசையில் அவரைத் தேடிக்கொண்டே இருப்பேன் நான். அப்போதெல்லாம் வானத்து நிலா சுடர்விளக்கேற்றி என் பின்னாலேயே வருவதுபோலத் தோன்றும். மேகத்துக்கிடையே மறையும் நிலா எதிர்பாராதபடி வெளிப்பட்டு மீண்டும் சுடர்விடுவதுபோல அப்பாவும் எங்கிருந்தாவது தன்னை வெளிப்படுத்தக்கூடும் என்று பழகிய தெருக்களிலெல்லாம் திரிந்தலைவேன். ஏமாற்றத்தோடு வீட்டுக்குத் திரும்பும்போது மனபாரம் தாங்கமுடியாததாக இருக்கும். இருட்டுக்குள் நின்றபடி பதற்றத்தோடும் ஏமாற்றத்தோடும் அம்மா ஒருகணம் நிமிர்ந்து பார்க்கும் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலைகுனிந்தபடி தரையில் உட்கார்ந்துவிடுவேன். ஆழ்ந்த துக்கம் ஒரு பாரமாக அழுத்தி, மனத்தை இயங்கவிடாமல் தடுத்து ஒரு பாறையாக மாற்றிவிடும். தாங்கமுடியாத களைப்பால் எப்போது தூங்கினேன் என்று தெரியாமலேயே தூக்கத்தில் மூழ்கிவிடுவேன். அடிவயிறு கனத்து சிறுநீர் கழிப்பதற்காக விழித்தெழுந்து வெளியே வரும்போது வீட்டுத் திண்ணையில் அப்பாவைப் பார்த்துத் திடுக்கிட்டுப் பின்வாங்குவேன். ஒருகணம் குழம்பி, பிறகு சுயநினைவு பெற்று, செடிகளின் ஓரமாக ஒன்றுக்கிருந்துவிட்டு திரும்பி வந்து அப்பா என்று அழைப்பேன். அவர் கண்கள் மட்டும் என்னை நோக்கித் திரும்பும். நடுராத்திரிவரைக்கும் எங்கஎங்கயோ தேடி பாத்துட்டு திரும்பிட்டன். “எங்கப்பா காணாம போயிட்ட?” கண்களைக் கசக்கியபடி நான் கேட்ட கேள்விகள் அவரைச் சென்றடையாததைப்போல காணப்படுவார். “படுக்கலையா?” என மீண்டும் கேட்பேன். “எனக்கு தூக்கம் வரலை, நீ போய் படு” என்பார். “இங்கயே பாயும் தலயணயும் கொண்டாரட்டுமா?” என்று கேட்பேன். “அதெல்லாம் வேணாம்பா, நீ போய் படு..” என்று சொல்வார். நான் அவரோடு நெருக்கமாக உட்கார்ந்து அவர் தொடையில் தலைவைத்து உடலைக் கட்டியபடி படுத்துக்கொள்வேன். அவர் உடம்பின் குளுமை பச்சைத் தண்ணீரைத் தொட்டதுபோல இருக்கும். என் உடம்பின் கதகதப்புக்கு அந்தக் குளுமை இதமாக இருக்கும். செடிகளின் பக்கத்தில் இடைவிடாமல் எழும் சிள்வண்டுகளின் இரைச்சலைக் கேட்டபடி கண்களை மூடுவேன். தூக்கத்தில் நழுவிவிழும் வேளையில் காயாத கானகத்தே என்று அப்பா பாடும் பாடலின் வரிகள் துண்டுதுண்டாக மிதந்து வந்து அசைந்துவிட்டு நகர்வதுபோல இருக்கும்.
எங்கள் ஊரையும் தெருக்களையும் பகலில் பார்த்ததைவிட இரவில் சுற்றிச்சுற்றிப் பார்த்துத் தெரிந்துகொண்டதுதான் அதிகம். பகல்வேளைகளில் நிற்கத் தயங்குகிற வீட்டு வாசல்களிலெல்லாம் இரவு வேளைகளில் நின்றுநின்று உற்றுப் பார்த்தபடி நடப்பேன். தொடக்கத்தில் எனக்கு அச்சமூட்டிய இரவு காலப்போக்கில் எனக்கு ஒரு தோழனாக மாறியது. தெருக்களில் திட்டுத்திட்டாக விழுந்து அசைகிற நிழல்கள் வேடிக்கைப் பொம்மைகளைப்போலக் காணப்படும்.
ஒருநாள் நள்ளிரவில் ரயில்வே லெவல்கிராஸிங் காவலர் ஒருவர் என்னைத் தடுத்து விசாரித்தார். ஏரியில் தண்ணீர் கடல்போலப் பொங்கி நிறைந்திருந்த நேரம். முதலில் நான் பதிலே சொல்லவில்லை. பிறகு மெதுவாக வயிறு சரியில்ல, அதான் என்று இழுத்தேன். அவர் நம்பவில்லை. நெருங்கிவந்து வீட்டுவிவரம் விசாரித்தார். தலைகுனிந்தபடி நான் சொன்ன விவரங்கள் அவரை மேற்கொண்டு கேள்விகேட்கவிடாமல் தடுத்துவிட்டன. அதற்குள் என் கண்கள் தளும்பி நீர் நிறைந்துவிட்டது. முழங்கையை உயர்த்தி துடைத்துக்கொண்டேன். “தோப்புக்கு உள்ள போவாதடா. நல்லதும் பொல்லாததும் நடமாடற நேரம். எட்டயே இருந்து பாத்துட்டு போ..” என்று சொல்லி அனுப்பிவைத்தார். அவரை நிமிர்ந்துகூட பார்க்க தைரியமில்லாமல் நான் மேற்கொண்டு நடந்தேன். சிறிதுதொலைவு நடந்த பிறகு “காளமாட்ட தேடிகினு கன்னுக்குட்டி போவுதா? கலிகாலம்…” என்று சலித்துக்கொள்ளும் ஒரு பெண்குரல் கேட்டது. தும்பைச்செடிகளின் நடுவே ஒளிப்புள்ளிகள்போல தாவித்தாவிப் பறக்கும் மின்மினிகளின் விளையாட்டை ரசிக்கும் மனநிலை சுத்தமாக இல்லை. எங்கெங்கோ அலைந்து திரிந்தும் கண்டுபிடிக்கமுடியாத ஏமாற்றத்தோடு திரும்பிவந்து திண்ணையில் சாய்ந்து அடுத்த கணமே தூங்கிவிட்டேன்.
தூங்கவே முடியாத அப்பாவின் அவஸ்தைகளும் அவரைக் கண்டுபிடிப்பதில் எங்களுக்கு நேர்ந்த அவஸ்தைகளும் தாங்கமுடியாததாக இருந்தன. எங்கள் காவலை மீறி அவர் வீட்டைவிட்டு வெளியேறிச் செல்வதும் பிறகு பல மணிநேரம் பல இடங்களில் தேடியலைந்து அழைத்துவருவதும் வழக்கமான சம்பவமானது. கட்டுப்பாடிழந்த வாகனம்போல, அவர் கால்போன திசையில் செல்வதை யாராலும் தடுக்கமுடியவில்லை. ஒருமுறை எங்கள் ஊரைவிட்டே சென்றுவிட்டபோது, நிலைமை தீவிரமானது. எங்கள் ஊரிலிருந்து நான்கு திசைகளிலும் பாதைகள் உண்டு. ஒரு திசையில் கோலியனூர். இன்னொரு திசையில் புதுச்சேரி. மற்றொரு திசையில் நரையூர். பிறிதொரு திசையில் அர்ப்பிசம்பாளையம். எந்தப் பக்கம் சென்றிருக்கக்கூடும் என்று தெரியாமல் இரவெல்லாம் தடுமாறினோம். இரவு முழுக்க அலைந்துஅலைந்து, கண்ணில் தென்படுகிறவர்கள் சொல்கிற தகவல்களையெல்லாம் நம்பி, அந்தத் திசையில் அலைந்து கண்டுபிடித்து அழைத்துவந்தோம். தொடக்கத்தில் சில மணிநேரங்களாக இருந்த எங்கள் தேடல் பயணம் போகப்போக நாட்கணக்காக நீடிக்கும் ஒன்றாக மாறியது. ஒவ்வொரு முறையும் கண்டுபிடித்து கையைப்பற்றி அழைத்துவரும்போது, கடவுளே, இந்த அவஸ்தை இத்தோடு முடியவேண்டுமே என்று கவலைதான் நெஞ்சை அழுத்தும். இரவின் அடர்த்தியான கருமைபோல, எங்கள் துயரமும் அடர்த்தியான ஒன்றாக அமைந்துவிட்டது.
நிலைமையை உணர்ந்தபோது, அப்பாவும் வருத்தத்தில் மூழ்கினார். தலையில் அடித்துக்கொண்டு அழுதார். அப்போது அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது. தூங்குவதற்காக கொடுத்த மாத்திரைகளை, அவை உருவாக்கும் அளவற்ற களைப்பை விரும்பாததாலோ என்னமோ அவர் உட்கொள்ள மறுத்தார். அது நிலைமையை இன்னும் தீவிரமாக்கியது. ஏதேனும் உணவில் அம்மாத்திரைகளைக் கரைத்துக் கொடுப்பதை சில நாட்கள் கடைப்பிடித்தோம். ஆனால் அந்தத் தந்திரத்தை அவர் எப்படியோ அடையாளம் கண்டுகொண்டார். உணவை மறுத்து, மறுபடியும் இரவெல்லாம் கண்விழிக்கத் தொடங்கினார். உடனே பாடல்களும் ஒலிக்கத் தொடங்கும். பள்ளிக்கூடமே செல்லாத அவர் இத்தனைப் பாடல்களை மனப்பாடமாக எப்படி அறிந்துகொண்டாரோ என ஆச்சரியம் கொள்கிற அளவுக்கு அவர் பாடல்கள் அமைந்திருந்தன.
அப்பாவின் குரல் அழுத்தமும் கனிவும் நிறைந்தது. ஓங்கி ஒலிக்கப் பொருத்தமான குரல். அதே சமயத்தில் இறைஞ்சும் தொனியில் அல்லது கெஞ்சும் தொனியில் பாடவும் பொருத்தமான குரல். ஒவ்வொரு முறையும் அவர் பாடும்போது வரிகளுக்கு இசைவானவகையில் அவர் குரல் நெளியும். குழையும். கெஞ்சும். சிரிக்கும். ஏக்கத்தை வெளிப்படுத்தும். மன்றாடும். அவரைப் பிடிக்காதவர்கூட அவர் குரலால் ஈர்க்கப்பட்டு ஒருசில நொடிகள் நின்று கேட்டுவிட்டுச் செல்வதுண்டு. ஒருவேளை அவர் நல்ல நிலையில் இருந்து பாடியிருந்தால் அவருடைய குரல் வரமாகக் கருதப்பட்டிருக்கலாம். ஆனால் நாங்கள் வசித்த சூழலின் காரணமாக, அது சாபமாகப் போய்விட்டது. மதிப்புமிகுந்த ஒரு வைரக்கல்லை எல்லாரும் காலமெல்லாம் ஒரு கண்ணாடித்துண்டாகவே நினைத்தார்கள்.
என் பத்துவயதில் தொடங்கிய அந்தத் துயரம் ஆண்டுக்கணக்காக முடிவில்லாத தொடர்கதையாகவே நீண்டது. படித்து, பட்டம்பெற்று, போட்டித் தேர்வுகள் எழுதி, வெற்றிபெற்று, வேலையின் நிமித்தமாக நான் கர்நாடகத்தில் குடியேறியதைத் தொடர்ந்து, தேடல் பயணச்சுமைகளை தம்பிகள் ஏற்கவேண்டியதாயிற்று. துங்கபத்திரை ஆற்றங்கரையில் முகாமிட்டு அருகிலிருந்த இரண்டு ஊர்களிடையே கேபிள் புதைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தேன். அப்போதெல்லாம் வேலைமுடிந்து முகாமுக்குத் திரும்பும் சாயங்காலப் பொழுதுகளில் ஊரிலிருந்து ஏதேனும் மடல் வந்திருக்கிறதா எனப் பார்ப்பதுதான் என் முதல் வேலையாக இருக்கும். வந்திருந்தாலும் பதற்றம்தான். இல்லையென்றாலும் பதற்றம்தான். மெல்லமெல்ல பதற்றமே என் இயற்கையான சுபாவமாக மாறிவிட்டது. ஊரிலிருந்து வரும் மடல்களில் அப்பாவைப்பற்றிய தகவல்களில்லாமல் இருந்ததே கிடையாது. காணாமல் போனதிலிருந்து தொடங்கி, அவரைத் தேடியலைந்து கண்டுபிடித்த விவரங்கள்வரைக்கும் அவற்றில் எழுதப்பட்டிருக்கும். அவற்றைப் படித்ததுமே ஒருவித அமைதியின்மையில் நிலைகுலைந்த கப்பலாக மாறிவிடுவேன். காற்றில் விரித்துவைக்கப்பட்ட பெரிய புத்தகமொன்றின் பக்கங்கள் படபடப்பதைப்போல இறந்தகால நினைவுகள் தாறுமாறாகக் குலைந்து படபடக்கும். அப்போதெல்லாம் நீண்டதூர நடையால்மட்டுமே அப்பதற்றத்திலிருந்து விடுபட்டு இயல்பான நிலைக்குத் திரும்புவது எனக்குச் சாத்தியாமனது.
காணாமல் போன அப்பாவை இரண்டு வாரங்களாக எங்கெங்கோ அலைந்துதிரிந்தும் கண்டுபிடிக்கமுடியாத தகவலை ஒருமுறை அம்மா எழுதியிருந்தார். எனக்குள் ஒரு பெரியமரம் சாய்ந்ததுபோல இருந்தது. அப்படி எப்போதுமே நிகழ்ந்ததில்லை. அவரைத் தேடும் பயணம் அதிகபட்சமாக ஒரு வாரம்வரைக்கும்தான் நீடிக்கும். அதற்கிடையில் அவரைக் கண்டுபிடித்துவிடலாம். அல்லது அவராகவே திரும்பிவந்துவிடுவார். இந்த முறை இரண்டும் நிகழவில்லை என்று அம்மா குறிப்பிட்டிருந்தார். என்னால் கூடாரத்தில் தங்கியிருக்கவே முடியவில்லை. கால்போன போக்கில் துங்கபத்திரையின் கரையோரமாக நடக்கத் தொடங்கினேன். நடமாட்டம் குறைந்த கரை அது. இரண்டு பக்கங்களிலும் தைலமரங்கள். கைநீட்டி அழைப்பதுபோல காற்றில் அவற்றின் கிளைகள் அசைந்தன. இருட்டில் அவை நின்றகோலம் ஓர் ஓவியத்தைப்போலக் காணப்பட்டது. ஓவியத்துக்குள் நடந்துநடந்து நானும் ஒரு புள்ளியாக மாறிவிடுவேன் என்று தோன்றியது. திரும்பிவந்து ஆறுதல் சொல்லி அம்மாவுக்கு ஒரு மடலை எழுதினேன். ஆனால் துரதிருஷ்டவசமாக என் வரிகளால் துளியளவும் அம்மாவுக்கு ஆறுதல் கிடைக்கவில்லை. அடுத்தடுத்த மடல்களில் அம்மா தம் முயற்சிகளின் தோல்வியைப்பற்றிமட்டுமே எழுதியிருந்தார். அதைப் படித்து அப்படியே இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டேன். அப்பா. பாடல்கள். தூக்கமின்மை. வேதனை. தடுமாற்றம். சீற்றம். எதையுமே என்னால் கோர்வையாக நினைத்துப் பார்க்கமுடியவில்லை. குழப்பமும் தடுமாற்றமும் மாறிமாறி என்னை அலைக்கழித்தன. விலைமதிக்கமுடியாத ஒன்றைத் தவறிவிட்டதுபோன்ற துக்கம் பொங்கிவழிந்தது. அம்மாவிடமிருந்து எந்தத் தகவலும் பிறகு வரவே இல்லை. மீண்டும்மீண்டும் அம்மாவுக்கு ஆறுதல் சொல்லியும் என்றாவது ஒருநாள் காணாமல்போன அப்பா திரும்பிவரக்கூடுமென்றும் நான்மட்டும் மடல்கள் எழுதியபடி இருந்தேன். என்னிடம் பகிர்ந்துகொள்ள செய்தியே இல்லை என்பதுபோல அம்மாவிடமிருந்து மடல் வருவது அறவே நின்றுவிட்டது.
ஒருநாள் நள்ளிரவில் கனவில் அப்பாவைக் கண்டேன். ஒரு பெரிய ஆலமரம். ஆயிரம்கால் மண்டபத்துத் தூண்கள்fபோல அதன் விழுதுகள் எல்லாத் திசைகளிலும் இறங்கியிருந்தன. தரையில் விழுந்து கிடந்த சருகுகளிடையே கால்நீட்டி அவர் உட்கார்ந்திருந்தார். தொலைவில் தெரியும் கோவில்கோபுர உச்சியைப் பார்த்து பிறவாத வரம் வேண்டும் என்று அவர் பாடும் குரல் கேட்டது. மன்றாடும் அக்குரலில் கரைந்து திடுக்கிட்டு விழித்து அப்பா என்றேன். சட்டென்று காணாமல் போய்விட்டார். ஆனால் அருகிலேயே அவர் எங்கோ நடமாடுவதை என் புலன்களால் உணரமுடிந்தது. கெஞ்சும் அவர் குரல்மட்டும் அதன் ஏற்ற இறக்கங்களுடன் எங்கிருந்தோ வந்தபடியே இருந்தது. அப்பா, இங்கு எப்படி வந்தாய்? இந்த இடத்தை எப்படிக் கண்டுபிடித்தாய்? அம்மா உன்னை அங்கே தேடிக்கொண்டிருப்பது தெரியாதா? என்றெல்லாம் முனகி, புலம்பி, தடுமாறி, கண்ணீர்விட்டுக் கலங்கி சுயஉணர்வோடு எழுந்தபோது நீலவானத்தில் ஒரேஒரு துண்டு மேகம்மட்டும் சுதந்திரமாகத் திரிவதைக் கண்டேன். சற்றே கையை நீட்டி அவரைத் தொட்டு என் பக்கமாக அழைத்துக்கொள்ளலாம் என நினைத்த கணத்தில் அவர் மறைந்துவிட்டார்.
அதற்குப் பிறகு என்னால் தூங்கமுடியவில்லை. எழுந்து கூடாரத்துக்கு வெளியே வந்தேன். தரையில் விரித்த புடவைபோல துங்கபத்திரை வளைந்துநௌiந்து ஓடிக்கொண்டிருந்தது. நிலவின் வெளிச்சத்தில் வெள்ளித்தகடுபோல தண்ணீர் மின்னியது. கால்போன போக்கில் நடக்கத் தொடங்கினேன். மனம் அப்பாவின் நினைவுகளால் நிரம்பிவழிந்தது. ஏதேதோ பாடல்துணுக்குகள் மிதக்கத்தொடங்கின. லாவகமாக வளைந்துவளைந்து உச்சிக்குச் சென்று, பிறகு வானத்திலிருந்து இறங்கி தரையைத் தொடும் ஒரு காற்றாடிபோல சமநிலைக்கு இறங்கி வந்து நிற்கும் அவர் குரல் நெஞ்சில் ஒலித்தது. அந்தக் குரலே வழிநடத்துவதுபோன்ற பிரமையில் நடந்துகொண்டே இருந்தேன்.
ஒருமுறை அப்பாவை சாப்பிடவைப்பதற்கு நாங்கள் பட்ட பாடு சட்டென்று நினைவுக்கு வந்தது. தட்டுநிறைய பிசைந்த சாப்பாட்டை வைத்துக்கொண்டு ஒரு கவளம்கூட தொடமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார். எதைஎதையோ சொல்லிக் கெஞ்சியபிறகு, “நான் சாப்பிடணும்ன்னா நீ ஒரு பாட்டுப் பாடணும்…” என்று ஒரு நிபந்தனையைச் சொன்னார். இப்படி ஒரு வேண்டுகோளா என்று அம்மா தலையில் அடித்துக்கொண்டார். “நீ கெட்டதும் இல்லாம சின்ன புள்ளயயும் கெடுக்கணுமா?” என்று அப்பாவின் அருகில் சென்று அவர் முணுமுணுத்ததை என்னால் கேட்கமுடிந்தது. ஆனால் அதற்கெல்லாம் அவர் கட்டுப்படுகிறவராகத் தெரியவில்லை. தன் நிபந்தனைப்படி யாராவது பாடினால்தான் சாப்பிடமுடியும் என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். எதையாவது பாடி அவரை கொஞ்சமாவது சாப்பிடவைக்கவேண்டும் என்று நினைத்தேன். அவர் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. என்ன பாட்டு பாட என்று நினைத்துக் குழம்பியபோது சட்டென்று ஒரு வரி பீறிட்டு எழுந்தது. “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே”. தலைகுனிந்த நிலையில் அந்தப் பாட்டைப் பாடினேன். வரிகள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தபடி இருந்தன. என்னை மீறி ஒரு துக்கம் என் நெஞ்சை அடைப்பதுபோல இருந்தது. பாடப்பாட, அந்தப் பாட்டை எங்களுக்காகவே யாரோ எழுதிப் பாடியிருப்பதுபோல தோன்றியது. அந்த எண்ணமே நெஞ்சைக் கலக்கியது. பாடி முடித்த வேளையில் “சிங்கக்குட்டிடா நீ. அழகா பாடறியே. ஆனா கொரல்தான் கீச்சுகீச்சுன்னு குருவிகொரலாட்டம் இருக்குது”. அப்பா என் முதுகில் தட்டிக்கொடுத்தார். பிறகு, சாப்பாட்டுத் தட்டை இழுத்துத் தன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டவராக மெதுவாகச் சாப்பிடத் தொடங்கினார். அப்பா, அப்பா, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் அப்பா, நீங்கள் இருக்கிற இடத்தில் சாப்பாடு கிடைக்கிறதா அப்பா பார்க்கமுடியாத என் அப்பாவிடம் கேட்கவேண்டும்போல இருந்தது.
நீளவாக்கில் ஓடிய துங்கபத்திரை குறிப்பிட்ட ஓர் இடத்தில் உயரம் குறைந்த ஒரு குன்றைத் தொட்டபடி வளைந்து திரும்பி ஓடிக்கொண்டிருந்தது. அந்தத் திருப்பத்திலிருந்து ஏதோ ஒரு கிராமம் தொடங்கியது. அங்கங்கே சின்னச்சின்ன வீடுகள். தெருவிளக்குகள். மரங்கள். ஒரு மரத்தடியில் காளைமாடொன்று உட்கார்ந்திருந்தது. தொலைவிலிருந்து பார்ப்பதற்கு எனக்கு அப்படித்தான் தெரிந்தது. நெருங்கிய பிறகுதான் அது படுக்கவைக்கப்பட்டு கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருப்பதைப் பார்த்தேன். அருகில் மூன்று பேர்கள் நின்றிருந்தார்கள். ஒருவர்மட்டும் காளையின் கால்களுக்கருகே உட்கார்ந்திருந்தார். மற்றவர்களைப் பார்த்து “அத எடு, இத எடு” என்று ஏவிக்கொண்டிருந்தார். ஒரு கணம் எனக்கு என்ன நிகழ்கிறது என்றே புரியவில்லை. அந்தக் காளை அம்மா என அடிவயிற்றிலிருந்து எழுப்பிய குரல் என் நெஞ்சைப் பிசைந்தது. அதிர்ச்சியோடு நெருங்கிப் பார்த்தேன். உட்கார்ந்திருந்தவர் ஒரு சாக்குப்பையிலிருந்து ஒரு லாடத்தை எடுத்து காளையின் பாதத்தில் வைத்து அளவு பார்த்துக்கொண்டிருந்தார். காதுமடலை அசைத்தும் தலையைத் திருப்பியும் அந்தக் காளை எழுப்பிய குரல் மனிதக்குரல்போலவே இருந்தது. ஒருகணம்கூட என்னால் அக்காட்சியைப் பார்க்கமுடியவில்லை. சட்டென்று திரும்பி ஆற்றங்கரையில் நடக்கத் தொடங்கினேன். அந்தக் குரல் என்னை இடைவிடாமல் பின்தொடர்ந்தபடி இருந்தது. ஒரு கணம் காளையின் குரலாகவும் மறுகணம் மனிதக்குரலாகவும் மாறிமாறி அது ஒலித்தது. சட்டென்று என் நினைவு பிசகிய ஒரு கணத்தில் அது என் அப்பாவின் குரலை ஞாபகப்படுத்தியது. அப்பாவும் அடிவயிற்றிலிருந்து இப்படித்தான் கூச்சலிட்டுக் கதறிக் கெஞ்சுவார். அடிக்கடி நள்ளிரவில் வீட்டைவிட்டுக் காணாமல் போய்விடுவதைத் தடுப்பதற்காக, ஒரு கட்டத்தில் அப்பாவின் சகோதரர்கள் அவரை திண்ணையில் கயிற்றால் கட்டிவைக்கத் தொடங்கினார்கள். அதையும் சாமர்த்தியமாக அவிழ்த்துவிடுகிறார் என்பதைத் தெரிந்துகொண்டதும் கைகளையும் கால்களையும் கட்டிவைத்தார்கள். ஒரு துணிமூட்டையைப்போல இரவு முழுக்க திண்ணையிலேயே கிடத்திவைக்கப்பட்டார் அவர். அப்போது அங்கிருந்தவர்களையெல்லாம் மாறிமாறிப் பார்த்து இயலாமையோடும் வேதனையோடும் அவர் இரவெல்லாம் இப்படித்தான் குரலெழுப்பியபடியே இருப்பார். அப்பாவைப்பற்றிய நினைவுகள் தொடர்ச்சியாக சுரந்துகொண்டே இருந்தன.
சோறு வடித்த கஞ்சியின் நிறத்தில் ஓடும் ஆறு. நீலநிற வானம். சுடர்விடும் விண்மீன்கள். குளிர்ந்த காற்று. அமைதியைக் கிழித்துக்கொண்டு வேதனையின் உச்சத்தில் அலைஅலையாக வானெங்கும் பரவியொலிக்கும் குரலாக என்னைச் சூழ்ந்திருப்பவர் அப்பாவா? ஒருநாளும் நிம்மதியாக உறங்கியறியாத அவர்தான் பாடியலைகிறாரா? விடையின்மையால் உருவான தவிப்பு மனத்தை அழுத்தியது. கூடாரத்துக்குத் திரும்பும்வரை என்னையே பின்தொடர்ந்துவந்தது அந்தக் குரல். வந்து ஒரு பெருமூச்சோடு படுக்கையில் விழுந்தேன். கண்ணை மூடியதும் அவர் நினைவுகளே ஊற்றெடுத்துப் பொங்கின. கூடாரத்தின் உட்கம்பத்தைப் பார்த்தபோது எங்கள் வீட்டுத் திண்ணையின் தூணின் சித்திரம் நினைவில் எழுந்தது. என் நெஞ்சிலிருந்து காயாத கானகத்தே என முணுமுணுக்கும் ஒரு மெல்லிய குரல் ஒலித்தது. என்னைப் பிளந்துகொண்டு உட்செல்லவும் வெளிவரவும் முடிந்த குரலாக அப்பா மாறிவிட்டாரோ என்று தோன்றியது.

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்