இன்னொரு சுதந்திரம் வேண்டும் !

This entry is part [part not set] of 39 in the series 20090402_Issue

அப்துல் கையூம்ஏறக்குறைய எல்லாக் கவிஞர்களும் ‘சுதந்திரம்’ பற்றி பாடி விட்டார்கள். பாடிய கவிஞர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் (கி.மு – கி.பி. என்று சொல்வதைப்போல).

இந்தியச் சுதந்திரத்திற்கு முன் சுதந்திரம் வேண்டும் என்று பாடியவர்கள் முதல் வகை. சுதந்திரம் கிடைத்த பின்பும் சுதந்திரம் வேண்டும் என்று பாடியவர்கள் இரண்டாவது வகை.

“அவன் சுதந்திரம் என்னும்
பட்டு வேட்டியின்
கனவு கண்டபோது – அவன்
கட்டியிருந்த கோவணம்
களவாடப்பட்டது”

என்கிறார் கவிஞர் மு.மேத்தா. சுதந்திரம் வந்தும் சுபீட்சம் இல்லை என்ற கருத்துதான் பரவலாக மேலோங்கி இருக்கின்றது. இப்படி ஆகுமென்று தெரிந்தால் பேசாமல் சுதந்திரம் வாங்காமலேயே இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் கூட சிலருக்கு வந்ததுண்டு. “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?”என்று பாரதி பாடிய பைந்தமிழ் வரிகள் இன்றைய சூழ்நிலைக்கும் கூட பொருத்தமாக இருக்கிறது.

ஆனால் கண்ணதாசனின் கருத்தோட்டம் முற்றிலும் வேறு கோணத்தில் இருந்தது. “சுதந்திரத்தைக் குற்றம் கூறி என்ன பயன்? பிரச்சினையே நம்மிடத்தில்தான்” என்பது அவரது வாதம்.

“வீடெங்கும் திண்ணை கட்டி
வெறும்பேச்சு வெள்ளை வேட்டி
சோம்பலில் மனிதன் வாழ்ந்தால்
சுதந்திரம் என்ன செய்யும்?”

என்ற திரைப்படப் பாடல் மூலம் வீணர்களைச் சாடுகிறார் கவியரசர். சுதந்திரம் கிடைத்தும் அதனை ஒழுங்காக பயன்படுத்த தெரியாதது நம் குற்றம்தான் என்கிறார்.

புதுக்கவிதைக்கு வித்திட்ட காலங்களில் கவிக்கோ அப்துல் ரகுமானால் கண்டெடுக்கப்பட்ட

“இரவில் வாங்கினோம்
இன்னும் விடியவே இல்லை”

என்ற வாக்கியம் எல்லோருக்கும் நினைவிருக்கும். புதுக்கவிதையின் எழுச்சியின்போது இந்த இரண்டு வரிக்கவிதைதான் எடுத்துக்காட்டாக எல்லோராலும் கையாளப்பட்டது.

“பகலில் ‘சுதந்திரம்’ வாங்கியிருந்தால் மட்டுமென்ன பாலும், தேனுமா வடியப் போகிறது?” என்று யாராவது திருப்பி கேட்கக் கூடும்.

சுதந்திரம் கிடைத்தும் நமக்கு விடியல் ஏற்படவில்லையே என்ற இந்தியக் குடிமக்கள் அனைவரது ஒட்டு மொத்த ஆதங்கத்தைதான் இந்த குட்டிக்கவிதை பிம்பமாய் பிரதிபலித்தது.

“அன்று
வியாபாரம் செய்ய வந்தவர்கள்
அரசியல் நடத்தினார்கள்

இன்று
அரசியல் நடத்த வந்தவர்கள்
வியாபாரம் செய்கிறார்கள்”

என்ற கவிஞர் வைரமுத்துவின் வைரவரிகள் முற்றிலும் உண்மை. அனைத்து தேர்தலிலும் குதிரைப்பேரம்தானே ‘ஜாம் – ஜாம்’ என்று நடந்துக் கொண்டு இருக்கிறது. “Politics is the last refuge for scoundrels” என்று சாமுவல் ஜான்ஸன் சொன்னது மெய்தானோ?

இந்த சுதந்திரம் கிடைப்பதற்காக துப்பாக்கி தோட்டாக்களை மார்பில் ஏந்தியவர்கள் எத்தனைப்பேர்? தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள் எத்தனைப் பேர்? ‘ஜாலியன்வாலா பாக்’ கிணற்றுக்குள் உயிர்துறந்தவர்கள் எத்தனைப்பேர்? வேதாரண்யத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து தடியடி ஏற்றவர்கள் எத்தனைப் பேர்?

சுதந்திரம் கிடைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே,

“ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்தச் சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று”

என்று கூவினான் மகாகவி. கிடைக்காத ஒன்றை கிடைத்து விட்டதாக கூறுகிறானே, இவனுக்கு கிறுக்குப் பிடித்து விட்டதோ? என்று அவனை பலரும் நையாண்டி செய்திருக்கக்கூடும்.

கவிஞனுக்கு தீர்க்கதரிசனம் என்பது ‘மூன்றாம் கண்’ போலும். வரப்போவதை வந்ததாக நினைத்து ஆனந்தத் தாண்டவம் ஆட நம்பிக்கையுறுதியும், தொலைநோக்கும் கொண்ட ஒருவனால்தான் இது சாத்தியமாகும். பாரதியிடம் அது மிகையாகவே இருந்தது.

“சுதந்திர கீதங்கள்
மதிப்பிழந்த நாட்டில்
தேசிய கீதங்கள்
தேவையே இல்லை”

என்று மிகச் சரியாகச் சொன்னார் மு,மேத்தா. நான் சிறுவனாக இருக்கையில் நாகூர் விஜயலட்சுமி கீற்றுக் கொட்டகையில் படம் பார்க்க போனதுண்டு. படம் முடிந்ததும் தேசிய கீதம் இசைப்பார்கள். எழுந்து நின்று ஆடாமல் அசையாமல் மரியாதை செய்பவர்கள் ஒரு சிலர்தான் தென்படுவார்கள். பெரும்பாலோர் வந்த வேலை முடிந்து விட்டதென நடையைக் கட்டுவார்கள்.

அதன் பிறகு, “தேசிய கீதங்கள் திரையரங்குகளில் தேவையில்லை” என்ற முடிவுக்கு அரசாங்கமே வந்து விட்டது. கவிஞர் சொன்னதைப்போல் சுதந்திரத்திற்கு மதிப்பு இல்லை என்று அவர்களே ஒத்துக் கொண்ட காரணத்தினாலும் இருக்கலாம்.

சுதந்திரம் அடைந்து ஆண்டுகள் அறுபதுக்குமேல் உருண்டோடி விட்டன. வெள்ளிவிழா, பொன்விழா யாவும் கொண்டாடிவிட்டோம்.

“எங்களுக்கோ
வெள்ளியும் தங்கமும்
விழாக்களின் பெயர்களில்தான்
வருகின்றன”

இதுவும் மு,மேத்தாவின் வரிகள்தான். வறுமைக் கோட்டுக்குக்கீழ் அவதியுறும் சராசரி இந்தியக் குடிமகனின் உள்ளத்து வெளிப்பாடாக இருக்கிறது இது . கவிஞர் தேசப்பிதாவைப் விளித்து இவ்வாறு புலம்புகிறார்.

“அமுதசுரபியைத்தான்
நீ தந்துச் சென்றாய்
இப்போது
எங்கள் கைகளில் இருப்பதோ
பிச்சைப் பாத்திரம்”

என்ற கவிதை வரிகளில் ‘தேசத்தொண்டு’ எனும் போர்வையில் பொதுமக்களைச் சூறையாடும் அரசியல்வாதிகளை பிடித்துச் சாடுகிறார்.

சுதந்திரம் கிடைத்த இரண்டு ஆண்டுகளுக்குப்பின் (1949), பாரதி கூத்தாடியதைப் போன்று கவிஞர் திலகம் சாரணபாஸ்கரனும் ‘சுதந்திரமே வாழ்க’வெனும் தலைப்பில் உணர்ச்சிவசப்பட்டு பாடுகிறார்.

“ஏவலராய், ஏதுமறி யாதவராய்க்
—கோழையராய், இரந்துண் போராய்ச்
சேவகராய்ச் சிரம்பணியும் அடிமையராய்ச்
—செயலிழந்த சிலைபோன் றோராய்க்
கேவலமாய் வாழ்ந்தஎமை யாவருடன்
—சமமாக்கிக் கீர்த்தி மிக்கக்
காவலராய் ஆக்குவித்த சுதந்திரமே
—வாழியநீ கடைசி மட்டும்!”

இப்படி ஆனந்தத் தாண்டவம் ஆடிய அவரது பேருவகை அதிக நாட்கள் நிலைத்து நிற்கவில்லை. ‘அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் (1953) எழுதிய கவிதையில் அவர் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்கிறார்.

“சுதந்திர சூரியன் தோன்றிவிட்டால் – மக்கள்
—தொல்லை அகன்றிடும் என்றுரைத்தோம்
சுதந்திரம் வந்தது கண்டுகொண்டோம் – மக்கள்
—தொல்லை அகன்றிடக் காணவில்லை!

ஆளும் உரிமை அடைந்துவிட்டால் – மக்கள்
—அவலம் ஒழிந்திடும் என்றுரைத்தோம்
ஆளும் உரிமை அடைந்தவுடன் – நாமே
—ஆதிக்கம் செய்யத் துணிந்துவிட்டோம்!

மாற்றான் பிடிப்பை அறுத்துவிட்டால் – இங்கு
—மக்களின் ஆட்சி மலருமென்றோம்
மாற்றான் பிடிப்பு அகன்றபின்னே – ஏழை
—மக்களை நாமே மறைந்துவிட்டோம்!”

பெயரவில் சுதந்திரம் பெற்று, செயலளவில் சுதந்திரம் பெற முடியாத அவல நிலையை கவிஞர் திலகம் அழகாக சித்தரித்துக் காட்டுகிறார்.

மகாத்மா காந்தியின் உடமைகளை அண்மையில் ஏலம் விட்ட போது உலகம் முழுக்க பரவி இருந்த இந்தியக் குடிமகன்கள் அலறித் துடித்தனர். “மகாத்மாவின் பொருள்களை ஏலம் விடுவதா? விட்டேனா பார்!” என்று வரிந்துக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கினர். எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை அவற்றை இந்திய அரசாங்கம் ஏலம் எடுத்து இந்தியாவுக்கு திரும்பக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

பருப்பொருள் பற்றினால் (Materialistic attachment) எந்தவித ஆதாயமும் இல்லை; இறைப்பற்றும், மனிதனை மனிதனாய் மதிக்கத்தெரிந்த சமுதாயப் பற்றுதான் நமக்கு இன்றிமையாதது என்ற கொள்கையைக் கடைப்பிடித்த காந்திஜியின் பொருள்களுக்காக இவர்கள் இப்படி சொந்தம் கொண்டாடி அடித்துக் கொள்கிறார்களே என்று நம்மை நினைக்கத் தூண்டுகிறது.

அவர் தனக்கு வேண்டாம் என்று நினைத்துதானே மற்றவர்களுக்கு தன் உடமைகளைப் பரிசளித்தார்? அந்த உடமைகளுக்காக ஏன் இவர்கள் இப்படி அடித்துக் கொள்கிறார்கள்? என்றெல்லாம் சிந்தனை ஓடியது.

மகாத்மாவின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்ட இவர்களுக்கு திடீரென்று எங்கிருந்து ஒரு பாசம் பொத்துக் கொண்டு வந்தது என்று தெரியவில்லை.

காந்திஜி, மதுவிலக்குக்காகவும், மதுவினால் ஏற்படும் தீமைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்வதிலும் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டவர்.

ஆனால் இன்று காந்தியின் பெயராலேயே கள்ளுக்கடைகளை திறக்கின்றார்கள். அவர் பெயரை வைத்துக் கொண்டு மதப்பிரிவினைச் செய்கிறார்கள். சிறுபான்மையினருக்கு எச்சரிக்கை விடுக்கிறார்கள். மகாத்மா காந்தியின் பெயருக்கு இதைவிட ஒரு களங்கம் வேறென்ன வேண்டும்?

காந்திஜியின் உடமைகளை போட்டி போட்டுக் கொண்டு ஏலம் எடுத்தவரோ நமது மதிப்பிற்குரிய விஜய் மல்லையா எனும் சாராய மன்னர். ‘கிங்பிஷ்ஷர்’ பீர் விளம்பரத்தில் அரைகுறை ஆடையுடன் அழகிகளை போஸ் கொடுக்க வைத்து நவீன கலாச்சாரத்தை நாட்டுக்கு அறிமுகம் செய்த கோடீஸ்வரர்.

மதுவினால் கோடிகள் சம்பாதித்த இந்த புண்ணியாவான் மகாத்மாவின் உடமைகளை ஏலம் எடுத்து தன் பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடிக் கொள்கிறார் போலும். இந்த ஏலத்தினால் விஜய் மல்லையாவுக்கு கிடைத்த மகத்தான விளம்பரத்தினால், அவரது மது வியாபாரம் தன் சாராய சாம்ராஜ்யத்திற்கு மேலும் கோடிகளை குவிக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை.

மேலைநாடுகளும் கீழைநாடுகளும் பாபுஜியின் அகிம்சையின் மகிமையை உணர்ந்து அவரவர்கள் இந்த மகாத்மாவின் கொள்கைகளை சுவீகரிக்கத் துடிக்கும் இந்த பயங்கரவாத நிறைந்த உலகத்தில், நாம் காந்திஜியின் செருப்பையும், கண்ணாடியையும், கோப்பையையும், கடிகாரத்தையும் இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டு வரும் வெற்றிக் களிப்பில் ஆகாயத்தில் மிதக்கிறோம்.

நாம் எழுப்பிய இந்த பூகம்பப் பிரச்சினையினால் ஆதாயம் அடைந்ததென்னவோ இதனை ஏலம் விட்டவர்கள்தான்.

இந்திய மானத்தைக் (?) 9.3 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்து காப்பாற்றியமைக்காக விஜய் மல்லையாவுக்கு குவிந்த பாராட்டுக்களோ ஏராளம் ஏராளம். இந்த கோடிகளின் விரயத்தை இந்தியாவில் ஏழ்மையில் வாடுபவர்களுக்கு உதவுவதில் அவர் செலவு செய்திருக்கலாம்.

இந்த பொருள்களை ஏலம் விட்ட ஜேம்ஸ் ஓடீஸின் நண்பர் லெஸ்டர் குர்ட்ஸ் என்பவரிடத்தில் மகாத்மா காந்தி சுடப்பட்டபோது சிந்திய ரத்தத்துளிகள் அடங்கிய துணியும், காந்திஜியின் பூவுடலின் சாம்பலும் இவருடைய பாதுகாப்பில் பத்திரமாக இருக்கின்றதாம்.

அடுத்ததாக இதனை ஏலம் எடுத்து இந்த சுதந்திர பூமியின் மானத்தைக் காப்பாற்றப் போகிறவர் எந்த கடத்தல் மன்னரோ, சாராய ராஜாவோ நமக்குத் தெரியாது.

நல்லவேளை, இந்த கூத்து யாவற்றையும் காண்பதற்கு தேசப்பிதா இன்று நம்மோடு இல்லை. இருந்திருந்தால், “குடி குடியைக் கெடுக்குமப்பா; இந்த ஈனப்பிழைப்பில் சம்பத்தித்த பணத்தைக் கொண்டு என்னுடைய பொருளை வாங்காதே!” என்று மல்லையாவுக்கு நல்லாவே அறிவுறுத்தி இருப்பார்.

சரி வாங்க! மறுபடியும் நாம் தலைப்புக்கு வருவோம். உண்மையிலேயே நமக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதா? நம்மால் உறுதியாகக் கூற முடியவில்லை.

இரவு வேளையில் கழுத்து நிறைய நகையணிந்து நங்கையொருத்தி எப்போது பயமில்லாமல் வீதியில் நடமாட முடிகிறதோ அப்பொழுதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்றார் மகாத்மா காந்தி. இப்பொழுது நகைகளை வீட்டில் பூட்டி வைத்து விட்டு வெளியில் தைரியமாக போய் வரக்கூட உத்தரவாதம் இல்லை,

கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்றோ எழுதிய கவிதை வரிகளை இன்று நினத்துப் பார்க்கிறேன்.

“இன்னொரு
சுதந்திரம் வேண்டும்

இரவில்
எதைக் கொடுத்தான்?
எதை வாங்கினோம்
எவர் வங்கினோம்
ஏதும் தெரியவில்லை.

ஒரு பகற் பொழுதில்
உச்சி வெயிலில்
ஒரு சுதந்திரம் வேண்டும்”

இன்னொரு சுதந்திரம் நமக்கு கிடைக்குமா?

vapuchi@hotmail.com

Series Navigation

அப்துல் கையூம்

அப்துல் கையூம்