இனவாத ஈவெரா ?

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

பரிமளம்


பொதுவாகத் திராவிடர்க் கழகங்களையும் குறிப்பாக ஈ.வெ.ராமசாமியையும் தாக்குவதற்கு அரவிந்தன் நீலகண்டன் தூக்கும் தடிகளில் ‘திராவிடர்- ஆரிய இனப்பாகுபாடு ஆங்கிலேயர்களின் கட்டுக்கதை’ என்பதும் ஒன்று. அதாவது இந்தியாவில் இனங்கள் இல்லை. மதங்கள் மட்டுமே உண்டு ஆகவே ஆரிய இனத்தை எதிர்ப்பதாகக் கூறிய ராமசாமியின் போராட்டம் பொருளற்றது என்பது அ.நீ யின் கோட்பாடு என்று இத்தனைக் காலமும் நினைத்துக்கொண்டிருந்தால், மனிதர் கடந்தவாரம் எழுதுகிறார் ‘ஈவெராவின் அடிப்படையான இனவாத – இனவெறுப்பு பிரச்சாரம் பகுத்தறிவின் குறைந்த பட்ச சாயல் கூட இல்லாதது’ (ஈவெரா பித்தம் தெளிய சோவென்ற மருந்தொன்றிருகிறது) என்று!

ராமசாமி எந்த இனத்தின் மீது வெறுப்பு கொண்டிருந்தார் என்று அ.நீ கொஞ்சம் விளக்கினால் நல்லது.

****

சாதியக் கட்டுமானத்தின் இரண்டாம் தட்டில் இருந்துகொண்டு மேல் தட்டில் இருப்பவர்களது அநியாயங்களை எதிர்த்தவர் இனவெறியர் என்றால், அடுக்கின் கீழ்த்தட்டில் இருந்துகொண்டு மேலே உள்ள அனைவரது அநியாயங்களையும் எதிர்க்கும் தலித்துகளும் இன வெறியர்கள் என்று அ.நீ கூறுவாரா ?

****

ஈவெராவின் போராட்டம் ‘பகுத்தறிவின் குறைந்தபட்ச சாயல் கூட இல்லாதது’ என்றால் அ.நீ. பின் வருவனவற்றுக்கும் ஆதரவாளர் என்று பொருளாகும். (இது முழுப்பட்டியல் அல்ல, ஏதோ நினைவுக்கு வந்தவரை எழுதுகிறேன்)

பெண் கல்வி கூடாது.

குழந்தைத் திருமணம் சிறந்தது

சிறுமிகளை முதியவர்களுக்கு மணமுடிப்பது தவறில்லை

கலப்புத் திருமணம் தவறு

விதவைத் திருமணம் தவறு

பெண்களுக்குச் சுயபுத்தி கூடாது

சாதிய அமைப்பு சாஸ்த்திரத்தில் உள்ளது. எனவே அதை மீறக்கூடாது

தலித்துகள் கோவிலுக்குள்(கருவறைக்குள்) வரக்கூடாது.

பார்ப்பனர்கள் உண்பதற்குத் தனி இடம் ஒதுக்குவது சரிதான். (‘பார்ப்பனர்’ என்பதைப் பழந்தமிழ் இலக்கியத்தில் ஆளப்படும் ஒரு நல்ல தமிழ்ச்சொல்லாகக் கருதிப் பயன்படுத்துகிறேன்)

கீழ்ச்சாதிக்காரர்கள் படிக்கக்கூடாது

கல்விக்கூடங்களிலும் அலுவலகங்களிலும் 95% பேர் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களாக இருப்பதில் எந்த அநீதியும் இல்லை.

தீண்டாமை சரிதான்

மனிதர்கள் அனைவரும் சமமில்லை

மனிதர்களின் காலில் விழுவது மரியாதைக்கு அடையாளம்

சுயமரியாதை என்பது வெங்காயம்

எதையும் பகுத்தாராய்வது வெட்டி வேலை

பொதுவாகச் சமூக அநீதிகளைப் பற்றிப் பேசுவது தவறு

janaparimalam@yahoo.com

Series Navigation

பரிமளம்

பரிமளம்