இந்த வாரம் இப்படி — சூன் 17

This entry is part [part not set] of 19 in the series 20010618_Issue

மஞ்சுளா நவநீதன்


ஜெயலலிதாவிற்கு மன்னிப்பு

ஜெயலலிதாவிற்கு ஆளுனரின் கருணையால் பொது மன்னிப்பு வழங்கலாம் என்று ஒரு விவாதம் கிளப்பிவிடப்பட்டுள்ளது. இப்படி மன்னிப்பு வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இப்படி மன்னிப்பு வழங்குவதற்கு சில வழி முறைகள், சில அடிப்படைகள் உள்ளன.

ஒன்று : ஜெயலலிதா தன் எல்லாக் குற்றங்களையும் ஒப்பிக் கொள்ள வேண்டும். தண்டனைக்கு எதிரான அப்பீல்களைத் திரும்பப் பெற வேண்டும்.

இரண்டு : தண்டனையை ஏற்றுக் கொண்டால் , பதவி விலகியாக வேண்டும்.

மூன்று : இனி பொது வாழ்வில் ஈடுபடவோ இது போல் குற்றங்கள் புரியவோ மாட்டேன் என்று உறுதி மொழி வழங்க வேண்டும்.

குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்குவது என்பது தொடர்ந்து குற்றம் புரிந்து கொண்டிருக்க வழங்கப் பட்ட அனுமதிச் சீட்டு அல்ல. உதாரணமாக நிக்ஸன் வாட்டர் கேட் ஊழலின் பின்பு பதவி இறக்கப் பட்ட பின்பு வழங்கப் பட்ட மன்னிப்பு இப்படிப் பட்ட ஒன்று தான். இழந்த பெருமையோ , வேறெந்த விதத்திலும் மரியாதையோ அவருக்குக் கிடைக்கவே இல்லை. அதில்லாமல் மக்கள் மத்தியில் அவர் பெயர் சொல்லப் படும் போதெல்லாம் வாட்டர்கேட் ஊழலுடன் இணைத்தே சொல்லப் பட்டது.

வீரப்பனாயினும், ஜெயலலிதாவாயினும் குற்றவாளிகளுக்கு மன்னிப்புக் கோர உரிமை உண்டு. அந்த மன்னிப்பு அரசியல் காரணங்களுக்காக தொடர்ந்த குற்றங்களுக்கு இன்னமும் ஏற்றம் அளிக்கும் விதமாய் இருக்கலாகாது.

****

ஈரானில் காதாமி

ஈரானின் தேர்தல் முடிவுகள் காதாமிக்குச் சார்பாக இருக்கும் என்று அனைவரும் எதிர் பார்த்ததே. இஸ்லாமியப் புரட்சி என்ற பெயரில் , ஷாவை விரட்டிவிட்டு அயோதல்லா கோமானி ஆட்சிக்கு வந்ததும், பிறகு மிகக் கொடூரமாகவும், இறுக்கமாகவும் இஸ்லாமியச் சட்ட திட்டங்களை அமலுக்குக் கொண்டு வந்ததும் பழங்கதையாகி விட்டது. ஆனால் இன்னமும் தாமாகவே இஸ்லாமியப் பாதுகாவலர்கள் என்ற பெயர் சூட்டிக் கொண்டு மக்களைத் துன்புறுத்தும் மதவாதிகள் இல்லாமல் இல்லை. ஆனால் காதாமியின் சீர்திருத்தத்திற்கும், திறந்த சமூக அமைப்பிற்கும் ஆதரவு பெருகி வருகிறது. 25 வருடத்தில் ஒரு பழைய தலைமுறை சென்று விட்டது. இன்றைய இளைஞர்கள் மதத்தின் இறுக்கத்தைக் காட்டிலும் சுதந்திரத்தையும் , நல்ல வாழ்வையும் விரும்புகிறார்கள்.

கமால் அதாதுர்க் துருக்கியை நவீனப் படுத்தியது போல இஸ்லாமியச் சமூகங்கள் நவீனப் படுத்த வேண்டும் என்று பலர் முயன்றாலும், முல்லாக்கள் விடுவதில்லை. பாகிஸ்தான் அதிபர் முஷரஃப் பதவி ஏற்றவுடன் அதாதுர்க்கைப் பாராட்டிப் பேசிய போது, மதவாதிகளால் மிகவும் தாக்கப் பட்டார்.

******

மூன்றாவது அணியும் ஜெயலலிதாவும்

ஜெயலலிதா அமைத்த கூட்டணி தேர்தலுடன் முற்றுப் பெற்று விட்டது என்று அறிவிப்புச் செய்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஜெயலலிதா கட்சி அமோக வெற்றி பெறாமல், தொங்கு சட்டசபை அமைத்தால் , தான் முதல்வராக பா ம க, காங்கிரஸ், த மா க போன்ற கட்சிகளை நம்பியிருக்க வேண்டியிருக்கும். அதனால் அமைச்சரவையில் பங்கு பெறலாம் என்று இந்தக் கட்சிகள் கணக்குப் போட்டிருந்தன., அது பொய்த்து விட்டதால், இனி ஜெயலலிதாவின் தாக்குதலுக்கு ஆளாகாமல் தப்பிக்கவேண்டியாவது ஜெயலலிதாவிற்கு ஆதரவு அளித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

காங்கிரஸ் கூட்டணியில் இருந்தால் , பாராளுமன்றத் தேர்தலில் ஒரு வேளை காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி வெற்றி பெற்றால் நிச்சயம் சோனியா தான் பிரதமர். மூன்றாவது கூட்டணியில் ஒட்டிக் கொண்டிருந்தால், தேவ கெளடா, குஜ்ரால் போல தானும் பிரதமராகச் சந்தர்ப்பம் உண்டு என்று ஜெயலலிதாவின் கருத்து. ஏற்கனவே முதல்வராகத் தகுதி உண்டு என்று ஒப்புக்கொள்ளப் பட்ட நிலையில் பிரதமர் ஆகத் தகுதி இல்லை என்று யார் சொல்ல முடியும் ?

*****

வழக்குகள் : வழக்குகள்

சரமாரியாக வழக்குகள் . யாரையும் அம்மையார் விட்டு வைக்கவில்லை. கருணாநிதி , ரங்கநாதன், தாமரைக் கனி, தேவராஜன் என்று அரசியல் எதிரிகள் மீது சட்டம் பாய்கிறது. தமிழக முதல்வர் அல்ல, நான் அ தி மு க முதல்வர் என்று அனைவருக்கும் அறிவுறுத்தும் செயல் இது. மினி எமர்ஜென்ஸி என்று இதனைக் கருணாநிதி அழைத்ததில் உண்மை இல்லாமல் இல்லை. காவல் துறை அரசியல் கட்சியின் கைப்பாவையாய்ச் செயல் பட ஆரம்பித்தால் அதன் முடிவு , காவல் துறையில் பிளவுகளை ஏற்படுத்தும். குறுகியகாலப் பயனாக அ தி மு க பலம் வாய்ந்த கட்சி என்ற பிரமையை ஏற்படுத்த இது பயன் தரலாம். இந்தத் தவறான முன்னுதாரணம், அடுத்த ஆட்சி மாற்றத்தின் போது வேறு வடிவங்களை மேற்கொள்ளும் அபாயம் இருக்கிறது.

*****

Series Navigation