இந்த வாரம் இப்படி : மே 17 2003 (ஜெயலலிதா, கிருஷ்ணசாமி,மருத்துவக்கல்லூரி மாணவர்கள், புத்ததேவின் வங்காளம்)

This entry is part [part not set] of 35 in the series 20030518_Issue

மஞ்சுளா நவநீதன்


ஜெயலலிதாவுக்குக் கண்டனம் : கிருஷ்ணசாமிக்குப் பாராட்டு

மருத்துவர் கிருஷ்ணசாமி சாதிக்கலவரத்தை தூண்டுகிறாரா ?

ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதுபோல, கிருஷ்ணசாமி ஜாதிக்கலவரத்தைத் தூண்டுகிறார் என்று முதல்வர் பேசியிருக்கிறார். அதுவும் சட்டசபையில். ஏதோ சாதி உணர்வே தமிழ்நாட்டில் இல்லாததுபோலவும், கிருஷ்ணசாமிதான் சாதி உணர்வையோ அல்லது ஜாதி வெறியையோ புதிதாக உருவாக்குகிறார் என்பது போலவும் பேசினால், கூட இருக்கும் அதிமுக மக்கள் பிரதிநிதிகள் ஒருவேளை சந்தோஷமாக கை தட்டலாம்.

கிருஷ்ணசாமி ஒரு தேவதூதர் என்பது போல நான் சொல்லவில்லை. தலித்களின் ஒரே தலைவர் என்று கூட யாரும் சொல்லமாட்டார்கள். சொல்லப்போனால் அவரது ஜாதியின் மக்கள்கூட அவரை ஒரே தலைவராக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர் ஒரு ஜாதித்தலைவர்தான் என்பதில்கூட எனக்கு வேறு கருத்துக் கிடையாது. அவர் செய்யும் அரசியலுக்கு, அவர் என்னதான் தன் கட்சிக்கு புதிய தமிழகம் என்று வைத்திருந்தாலும், வெகுவாக பிள்ளைமார், கவுண்டர், படையாச்சி ஓட்டுக்களை வாங்க முடியாது. அவருக்கு அவரது ஜாதி தாண்டி வெகுவாக மக்கள் செல்வாக்கு கிடையாது. ஆனால் அவர் ஜாதிக்கலவரத்தை தூண்டுகிறார் அல்லது ஜாதிவெறியைப் பரப்புகிறார் என்பது அபத்தத்தின் சிகரம். ஆயிரம் வருடங்களாக தலித் மக்கள் அடிபட்டு அடிமையாக வாழ்ந்துவந்திருக்கிறார்கள். இன்று சுதந்திரத்தின் காற்று சுமார் 50 வருடங்களாகத்தான் அவர்களைத் தீண்டியிருக்கிறது. ஆனால், இவர்கள் சுதந்திர மனிதர்கள், இவர்களை மதிக்க வேண்டும் என்ற உணர்வு போகாத மற்ற சாதியினர் அவர்களைத் தொடர்ந்து பழையபடியே நடத்திவருகிறார்கள். அது முடியாது. இனியும் என்னை பழைய படி நடத்தமுடியாது என்று கிருஷ்ணசாமி மற்றும் திருமாவளவன் ஆகியோர் கூறுகிறார்கள். அவ்வாறு வன்முறை அவர்கள் மேல் பிரயோகிக்கப்பட்டால் எதிர்த்து நிற்கிறார்கள். திருப்பி அடிக்கிறார்கள். உடனே தேவர்களும், மற்ற சாதியினரும், தலித்துகளை வன்முறையாளர்கள் என்று பட்டம் சூட்டுகிறார்கள். ‘அவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன் ‘ என்றது வெறும் சினிமாவசனம் மட்டுமல்ல. சுவற்றின் மீது விட்டெறிந்த பந்து திரும்பிவந்தால், அது பந்தின் குற்றமல்ல. தூக்கி எறிவதற்கு முன்னர் யோசிக்கவேண்டும். முன்பு பந்தின் உள்ளே சுதந்திரக் காற்று இல்லை. சப்பென்று அடிவாங்கி விழுந்து கொண்டிருந்தது. இன்று அந்த பந்துகளின் உள்ளே சுதந்திரக் காற்று புகுந்திருக்கிறது. அது திரும்பித்தான் வரும். வீசிய முகத்திலேயே பொட்டென்று விழும். இன்று யாரின் பிரதிநிதியாக நின்று ஜெயலலிதா அவர்கள் கிருஷ்ணசாமியை ஜாதிக்கலவரத்தை தூண்டுகிறார், ஜாதி உணர்வை பரப்புகிறார் என்று குற்றம் சாட்டுகிறார் என்பது சொல்லாமலேயே தெளிவான விஷயம்தான். ஆனால், இன்று திருமாவளவனும், கிருஷ்ணசாமியும் அரசியல்ரீதியாக தம் மக்களை ஒன்றிைணைக்க வேண்டும் என்று வந்ததன் காரணமும், அதன் அவசியமும், திமுகவாலும், அதிமுகவாலுமே வந்தது. இந்த இரண்டு கட்சிகளும் தலித் மக்களுக்காக குரல் கொடுப்பதாகப் பேசினாலும் அவர்களை பயன்படுத்திக்கொள்ளவும், அவர்கள் மீதான நடுநிலைசாதிகளின் மேலாண்மையை தக்கவைத்துக்கொள்ளவும், மேலும் அடிமைப்படுத்தவுமே முயன்றன என்பது இன்று அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு வி ?யம். அதனாலேயே இன்று கிரு ?ணசாமியும், திருமாவளவனும் தேவையான நபர்கள்.

தங்கள் கீழே இல்லாத தலித் மக்களை, பெரியாரின் கொள்கைப் பூர்வமாக பிராம்மண எதிர்ப்பாகவும், காஞ்சிமட எதிர்ப்பாகவும் ஆக்குவதில் திமுக அதிமுக கட்சிகள் வெற்றிபெற்றுவிட்டார்கள். சென்ற தேர்தலின் போது ஓரளவுக்கு திருமாவளவன் தெளிவாகவே, பாஜக ஆதரவு நிலைப்பாட்டையும் பாமக எதிர்ப்பு நிலைப்பாட்டையும் எடுத்தார். தெளிவாகவே அதற்குக் காரணத்தையும் சொன்னார். அது உண்மையான காரணமும் கூட. கிருஷ்ணசாமி அந்த அளவுக்குத் தெளிவான சிந்தனை உடையவராகவும், இன்றைய சூழலை கணக்கிலெடுத்துக்கொண்டு கொள்கைப் போர் புரிபவராகவும் தெரியவில்லை. திருமாவளவனை அதிகாரவர்க்கத்தைத் துணைக்கொண்டு, போலீஸ் துணைக் கொண்டு அடக்க அதிமுக அரசு முயல்கிறது. கிருஷ்ணசாமி நேரடியாக காஞ்சி மடத்தின் மீது வழக்குப் போட்டதன் மூலம், அவரை கைது செய்தால், அதில் எல்லோரும் பிராம்மணசதியை கண்டுவிடுவார்கள் என்று அதிமுக அரசு அடக்கிவாசிக்கிறது. ஆனாலும், கிருஷ்ணசாமியும் திருமாவளவனும் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இருக்கும் தலித் ஓட்டு வங்கியை உடைப்பவர்கள் என்பதை தெளிவாகவே இரண்டு கட்சியினரும் உணர்ந்திருக்கிறார்கள். ஏற்கெனவே ராமதாஸ் தன்னுடைய இடைவிடாத உழைப்பால் வன்னிய ஓட்டை திமுகவிடமிருந்து பிரித்துவிட்டார். அடுத்து தலித் ஓட்டும் போய்விட்டால் இந்த இரண்டு கட்சியினரின் ஜாதி சார்பு மிகத்தெளிவாகவே தெரிந்துவிடும். நாடார்களும், கவுண்டர்களும் இன்று காங்கிரஸை விட்டு பாஜகவுக்குத் தாவிக்கொண்டிருக்கிறார்கள். அதிமுகவுக்கும் திமுகவுக்கும் என்ன மீத மிருக்கும் ? வெறும் மேல்ஜாதி மற்றும் இடைப்பட்ட மேல்ஜாதி கட்சியாக பல்லை இளித்துவிடும் இந்த இரண்டு கட்சிகளும். அதுதான் உண்மையும் கூட. ஜாதிவாரியாக அரசியல்கட்சிகள் தோன்றுவதிலோ அல்லது நிலைப்பதிலோ தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கப்போவதில்லை. ஜாதிகளைக் கடந்த பார்வையை, ஜாதிகளை உதாசீனம் செய்த பார்வையைகொண்ட கட்சிகளே இன்றைய தமிழ்நாட்டுக்குத் தேவை. அதனை பூர்த்தி செய்வது பாஜகவும் காங்கிரஸ் கட்சியுமே. ஜாதியை அரசியல் ஆக்காத, ஜாதியைக் கடந்த அரசியலை பெயரளவுக்காவது கொண்டிருக்கும் கட்சிகளே இன்றைய தேவை. வெளிப்படையாக ஜாதி அரசியல் செய்வது பொதுமக்களை வெறுக்கடிக்கச் செய்துவிடும். அதனை சென்றமுறை தேர்தலில் பார்த்தோம்.

தலித் தலைவர்களை ஜாதிவெறியைத் தூண்டுகிறார்கள் என்று அவதூறு செய்வதை நிறுத்திவிட்டு, அவர்களின் பிரசினையைத் தீர்ப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

************

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

இந்தப் போராட்டம் பல காரணங்களுக்காக என்று சொல்லப்பட்டாலும் முதன்மையான கோரிக்கை தனியார் கல்லூரிகள் மருத்துவம், பல் மருத்துவம் போன்ற துறைகளில் தொடங்கப்படக்கூடாது என்பது தான். இதன் அடிப்படையான தர்க்கம் என்ன ? ‘ரெயில்பட்டிப் பயணிகளின் உளவியல் ‘ என்று ஒன்றைக் குறிப்பிடுவார்கள். மிகக் கூட்டம் நிரம்பிய ரெயில் பெட்டியில் உள்ளே போக வேண்டும் என்று கெஞ்சிக் கூத்தாடி, பிரம்மப் பிரயத்தனம் செய்து , உள்ளே புகுந்து கொண்ட ஒரு நபர், உள்ளே நுழைந்தவுடனேயே வெளியாள் யாரும் ஏறிவிடாதபடி பிடித்துத் தள்ளுவதைப் பார்க்கலாம். இது சுயநலம் மட்டுமல்ல, மற்றவர்கள் தமக்குச் சமமாய் வந்துவிடலாகாது என்ற ‘எல்லைக் காப்பு ‘ உணர்வும் கூட. மருத்துவமாணவர்களின் போராட்டம் இதைத்தான் சொல்கிறது. எதனால் தனியார் மருத்துவக் கல்லூரிகள் வரக்கூடாது என்று போராடுகிறார்கள் ? லஞ்சம் தந்து, வசதிகள் குறைவாக, கல்விச் சிறப்பு இல்லாத கல்வி நிலையங்கள் வருமே என்பதாலா ? இதெல்லாம் தான் இவர்களது நோக்கம் என்றால் பாராட்டவேண்டிய போராட்டம் இது. அல்லது தமக்குப் போட்டியாக வருபவர்கள் எண்ணிக்கை பெருகிவிடும் என்று எண்ணுகிறார்களா ?

முதலாவது இப்போது மருத்துவக்கல்வி, அரசாங்கக் கல்விக் கூடங்களில் மிகுந்த அரசாங்கச் செலவுடன் பவிற்றுவிக்கப் படுகிறது. இது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை. ஐ ஐ டி போன்றவற்றிலும் இதே நிலைமை தான். இவர்களுக்குச் செய்யும் செலவை ஏன் இவர்கள் கடன் வாங்கிப் படித்துவிட்டு , வேலைக்குச் சேர்ந்தவுடன் திருப்பளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யலாகாது ? இவர்கள் யாரும் படிப்பு முடிந்தவுடன் வேலை கிடைக்காமல் இருப்பது என்பது கிடையாது. இவர்கள் கண்டுபிடிக்கும் தொழில் நுட்பம் அரசாங்கத்திற்குப் பயன் விளைவிக்கும் என்றால் இப்படி கல்வி அளிப்பதற்குப் பொருள் உண்டு. அப்படி நடைபெறுவதாய்த் தெரியவில்லை. இப்படி பணத்தேவை இருபப்வர்களுக்கு கடன் உதவி அளித்து அரசாங்கச் செலவைச் சரிக்கட்டி அந்த முதலீட்டை ஆரம்பக் கல்விக்குச் செலவிடுவது தான் விவேகமான செயல்.

ஐ ஐ டி, மருத்துவக் கல்லூரி போன்றவற்றில் ஒரு நபருக்குப் பயிற்றுவிக்கும் செலவில் 1000 பேருக்கு அடிப்படைக் கல்வி அளிக்கமுடியும். அரசாங்க மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் இவர்கள் அரசாங்கப் பள்ளிகளில் படித்துவிட்டா மருத்துவக் கல்லூரீயில் சேர்ந்திருக்கிறார்கள் ? , தம்முடைய பிள்ளைகளை அரசாங்கத்தினால் நடத்தப் பெறும் ஆரம்பப்பள்ளிகளுக்கு அனுப்புவார்களா ? நிச்சயம் மாட்டார்கள். நாளை அரசாங்கக் கல்லூரிக்கு இவர்கள் அளிக்கும் ஏகோபித்த ஆதரவை இன்னமும் வலுப்படுத்த வேண்டி அரசாங்கப் பள்ளிகளில் படித்தால் தான் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் என்று அறிவிக்கட்டும், உடனே அரசாங்கப் பள்ளிகளுக்கு எதிராக இவர்கள் பேச ஆரம்பித்துவிடுவார்கள். காரணம், அரசாங்கப் பள்ளிகள் கல்வித்தரம் சரியில்லை என்ற சரியான காரணத்தால் தான். இவர்கள் தனியார் கல்லூரிகளை எதிர்ப்பதற்கும் இதே காரணம் பொருந்தும். அங்கே கல்வி தரமானதாக இருக்காது என்பது தான் அது.

கல்வியை – அரசாங்கப் பள்ளிக் கூடமானாலும் சரி, தனியார் மருத்துவக் கல்லூரியானாலும் சரி எப்படி மேம்படுத்த முடியும் ? கல்வித்தரம் பற்றிய சரியான அளவுகோல்களை நிர்ணயித்து, சரியான வழிப்படுத்தலுடன் சரியான தலைமையில் இயங்கினால் இது நிச்சயம் கைகூடக் கூடிய ஒன்றுதான். தனியார் கல்லூரிகள் என்பதனாலேயே சரியில்லாத கல்வி என்பது பொருளல்ல. தனியார்மயப் படுத்தும்போது, அரசாங்கம் , மருத்துவர்களின் கூட்டமைப்புடன் அமைக்கப் பட்ட கல்லூரிகளுக்கும், ராமகிருஷ்ணா மிஷன், கிறுஸ்தவப் பள்ளி ஆணையங்கள் போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து கல்லூரிகள் தொடங்கச் செய்தால் ஊழல் ஓரளவு குறையலாம்.

1000- 995 வாங்கினவனை விட 1000-க்கு 990 வாங்கினவன் தகுதியில் குறைந்தவன் அதனால் அவனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் இல்லை என்று சொல்லலாகாது. முடிந்த வரையில் மருத்துவக் கல்லூரியில் இடங்கள் அதிகரிக்க வேண்டும். மாணவர் பிரதிநிதிகள் டங்கிய அரசியல் சார்பற்ற ஓர் உயர்மட்டக் குழு கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் இடையில் தனிப்பட்ட எந்த பணப் பரிமாற்றமும் இருக்கலாகாது, அரசாங்கம் அல்லது வங்கிகள் மூலமாகத் தான் இந்த வரவு செலவு செய்யப்படவேண்டும் என்று கடுமையான மேற்பார்வை நிபந்தனைகள் வந்தால் போதும். இப்போது கல்விக் கொள்ளை அடிக்க அலையும் பணமூட்டைகள் விலகிவிடுவார்கள்.

***********

புத்ததேவ் ஒழிக

ஒரு ஆளைக் கொன்றால் கொலைகாரன். ஓராயிரம் பேரைக் கொன்றால் மாவீரன். பத்தாயிரம் பேரைக் கொன்றால், மக்கள் எழுச்சி. ஒரு நாட்டையே துவம்சம் செய்து ஆக்கிரமித்தால், புரட்சிச் செயல்பாடு. Numbers sanctify.

இரண்டு பஞ்சாயத்து தொகுதிகளில் தேர்தல் நடத்தத் முடியவில்லை என்றால், தமிழ்நாட்டில் சாதியம் தலைவிரித்து ஆடுகிறது. கீரிப்பட்டி, பாப்பாரப் பட்டி தேர்தல் கேலிக்கூத்து முன்பக்கத்தில். இந்து பத்திரிகையில் தலையங்கம், செய்திகள். ஆனால் கிட்டத்தட்ட 20000 தொகுதிகளில் மக்களை பயமுறுத்தி, போட்டியிட வந்தவர்களை மிரட்டி, தேர்தலில் போட்டியின்றி இடது சாரி முன்னணி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டால் அது பற்றி யாரும் எதுவும் சொல்லக் கூடாது . ஏனென்றால் மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட்-மாவோயிஸ்ட்-பாசுயிஸ்ட் புரட்சியின் அடிப்படையே அச்சுறுத்தி முதலாளித்துவ பாசிசச் சக்திகளை முறியடிப்பது என்ற வரலாற்றுத் தேவையல்லவா ? இந்த மேற்கு வங்கத் தேர்தலில் வழக்கமாக நடைபெறும், வாக்குச் சாவடி கைப்பற்றல், எதிரிகளைக் கொல்வது என்பதெல்லாம் தவிர இன்னொரு முறையில் வரலாறு படைத்திருக்கிறது. பொதுவாக பெண்கள் வாக்குப்பதிவுக் கலவரங்களில் கொல்லப் படுவதில்லை. இரண்டு பெண்கள் அவர்கள் சோஷலிஸ்ட் யூனிடி செண்டர் சார்ந்தவர்கள் என்ற காரணத்துக்காக நேருக்கு நேராய்க் கொல்லப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் முஸ்லிம்கள் என்பது வேறு விஷயம். அவர்கள் இந்துத்துவ ஃபாசிஸ்டுகளால கொல்லப்படவில்லை, முற்போக்கு, மார்க்ஸிஸ்ட் புரட்சியாளர்களால தான் கொல்லப் பட்டார்கள் என்பது குறித்து மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் என்பது நிச்சயம்.

எங்கெல்லாம் எதிர்க்கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு ருந்த்தோ அங்கெல்லாம் வன்முறை .

ஜோதிபாசு மேற்கு வங்காளத்தில் ஆட்சிக்கு அமர்ந்து 25 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடினார்கள். இதில் கொண்டாட என்ன இருக்கிறது ? இருபத்தைந்து ஆண்டுகள் ஒரே ஆள் ஆட்சியில் இருப்பது என்பதைக் காட்டிலும் என்ன முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதல்லவா முக்கியம் ? கல்கத்தா இந்தியாவின் பெருநகரங்களில் கடைக்கோடியில் நிற்கிறது. பீகாருக்குச் சற்று முன்னே தான் மேற்கு வங்கம் உள்ளது.

***

manjulanavaneedhan@yahoo.com

***

Series Navigation