இந்த வாரம் இப்படி – மார்ச் 11, 2001

This entry is part [part not set] of 15 in the series 20010311_Issue

மஞ்சுளா நவநீதன்


**

ஒருவழியாக மூப்பனார் நாடகம் முடிந்தது

எப்போதோ நிச்சயம் செய்யப்பட்டது, இப்போது அரங்கேறியிருக்கிறது. மூப்பனார் அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டார். பாமக, புலி போன்றவைகள் எல்லாம் சும்மா அதிக சீட் வாங்க ஆடும் நாடகம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். மூன்றாவது அணி நப்பாசைக்காரர்கள் (நான் உட்பட) தெரிந்தே ஏமாந்தார்கள்.

இந்த முறை ஒரேயடியாக திமுக, ஒரேயடியாக அதிமுக என்று வராது என்றுதான் எல்லோரும் அணி சேர்க்கிறார்கள். அதே காரணத்தால் அதிமுக ஜெயித்தாலும் அதில் மூப்பனாரின் செல்வாக்கும், மூப்பனாரின் அமைச்சர்களும் இருப்பார்கள் என்றே ஆட்டம் நடக்கிறது. கிருபாநிதியும் கருணாநிதியும் (இரண்டு நிதிகளும் கையொப்பம் இட்டுவிட்டோம் என்று கருணாநிதியின் நகைச்சுவை வேறு) கூட்டணியில் 23 இடங்கள் பாஜகவுக்கு என்றும் அறிவித்துவிட்டார்கள், வைகோ ஓட்டுகளை திமுக ஓட்டு என்றே கருதினால், இப்போது பாஜகவும், திமுகவுமே கூட்டணியில் இருக்கின்றன. ஆக, பாஜகவுக்காக பாமகவையும், தமகாவையும், கருணாநிதி விட்டுக்கொடுத்திருக்கிறார். இது அவரதுஆட்சியை டிஸ்மிஸ் செய்ய மறுத்த பாஜகவுக்கு அவர் காட்டும் நன்றியென்றே நான் நினைக்கிறேன்.

**

இந்தியப் பெண்களில் 28இல் ஒருவருக்கு மார்பகப் புற்று நோய் இருக்கிறது

பெரும்பாலும் சுயபரிசோதனை மூலம் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகித்சை செய்தால் ஆபத்தற்ற நோய் இது. முதியோர் கல்வியின் போதும், பெண்கள் பள்ளிகளிலும் இது சொல்லித்தருவது நல்லது. இதைச் சொல்லித்தருவது எளியது. அதிக நேரம் எடுக்காது.

மாதம் ஒருமுறை ஒரு டாக்டர், அருகிலிருக்கும் பள்ளிக்கூடங்களுக்கு விஜயம் செய்து, பெண் மாணவர்களுக்கும், ஆண் மாணவர்களுக்கும் சில விஷயங்களைச் சொல்வதும், சுகாதாரமான வாழ்வு வாழ்வது பற்றிப் பேசுவதும் நல்லது.

**

விவசாய விளைபொருட்களின் விலை வீழ்ச்சி

சோளம், அரிசி போன்ற விளைபொருட்களின் விலை படுவீழ்ச்சி அடைந்திருக்கிறது. கர்னாடக மாநிலத்தில் விவசாயிகள் சோளத்தை விற்க முடியாமல் தற்கொலை செய்து வருகிறார்கள். தமிழக அரசின் முக்கியமான வேலை இப்போதைக்கு விவசாயிகளை காப்பாற்றுவதே.

**

சிரிக்கும் சின்னப்பையன்கள் செய்யும் கொலைகள்

சென்ற வாரம் அமெரிக்காவில் இரண்டு செய்திகள் மிகவும் கஷ்டப்படவைத்தவை. சாதாரண சிறுபிள்ளைகள் துப்பாக்கியை பள்ளிக்கூடத்துக்கு எடுத்துவந்து சக மாணவர்களை சுட்டுக்கொன்றிருக்கிறார்கள். இது போன்ற நிகழ்ச்சி இது ஐந்தோ ஆறாவதோ. ஏன் ஏன் ஏன் இப்படி நடக்கிறது ? இந்தப் பிள்ளைகள் ஏன் கொலைவெறியுடன் அலைகிறார்கள் என்று மாறி மாறி கேட்டுகொண்டுவருகிறார்கள் அமெரிக்கர்கள்.

முதல் காரணம் : துப்பாக்கிகள் எளிதாகக் கிடைப்பது. துப்பாக்கி கிடைக்கவில்லை என்றால் மாணவன் கத்தி எடுத்துவந்துதான் குத்த வேண்டும். அவ்வளவு ஆபத்து கிடையாது இதில். துப்பாக்கி வைத்திருப்பது மனித உரிமைகளில் ஒன்று என்று அரசியல் சட்டம் எழுதிவிட்டுப் போய்விட்டார்கள் அமெரிக்காவைத் தோற்றுவித்தவர்கள். ஆகவே.. சிக்கல்.

இரண்டாவது: நிறைய கொலைகார வீடியோ விளையாட்டுகள். ரத்தம் தெறிக்கும், குடல் பிய்ந்து தொங்கும், அமெரிக்க, ஐரோப்பிய ஜப்பானிய வீடியோ விளையாட்டுகளில் யாருடைய கொலை தத்ரூபமாக இருக்கிறது என்று போட்டி வேறு. ஒரு டாலர் போட்டு 3000 கொலை பண்ணிவிட்டு அடுத்த விளையாட்டு விளையாடப்போகும் சிறுவர்களின் மனத்தில் என்னவோ தோன்றிவிடுகிறது. எல்லாம் சும்மாத்தான் என்றாற்போல.

மூன்றாவது: அதிகமாகும் பெற்றோர்களின் மணமுறிவுகள். பெற்றோர்களின் விவாகரத்தின் போது பிள்ளைகள் வெகுவாகப் பாதிக்கப்படுகிறார்கள் மனரீதியாக என்று பலவேறு கட்டுரைகளும் ஆய்வுகளும் வந்தவண்ணம் இருக்கின்றன. இருந்தும் தும்மல் போட்டால் சத்தம் அதிகமாக இருக்கின்றது என்று விவாகரத்துக்குப் போகும் தாய்மார்கள் இன்னும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். இது ஒரு பெரிய சமூகச்சிக்கலாக இன்றே இருக்கிறது எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக ஆகலாம்.

இதிலெல்லாம் இந்தியர்களுக்குப் பாடங்கள் இருக்கின்றன.

**

திரும்பிய பக்கமெல்லாம் நிலநடுக்கம்.

உலகமெங்கும் நிலநடுக்கம் நடந்துவந்திருக்கிறது. அமெரிக்காவின் சியாட்டிலிலிருந்து, இந்தோனேஷியாவரை, இந்தியாவின் டெல்லியிலிருந்து தென் அமெரிக்காவரை எல்லா நிலமும் நடுங்குகிறது. கிரிஸ்தவர், முஸ்லீம், இந்துக்கள், பெளத்தர்கள் அவர்கள் பண்ணும் நல்லதுகள் லொல்லுகள் எல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு நிலம் பாட்டுக்கு நடுங்கிக் கொண்டு இருக்கிறது.

**

Series Navigation