இந்த வாரம் இப்படி – நவம்பர் 24 2002

This entry is part [part not set] of 35 in the series 20021124_Issue

மஞ்சுளா நவநீதன்


போக்குவரத்துத் துறை – தனியார்மயம்

ஜெயலலிதாவின் தயவால் போக்குவரத்துத் துறை தனியார் மயமாகிறது. ஒரு புறம் வரவேற்கவேண்டும் என்று எண்ணினாலும் , இன்னொருபுறம் கட்டண உயர்வு மற்றும் வேலை வாய்ப்பு இழப்பு அச்சங்கள் நிலவுகின்றன. இதில் சில நடைமுறைகளைக் கையாளலாம்.

ஒன்று : வேலை வாய்ப்பு இழக்கும் ஓட்டுனர்கள் நடத்துனர்களுக்கே வழித்தட உரிமையை வழங்கி அவர்களை தொழில் முயலுனர்களாய்ச் செய்யலாம். இவர்களுக்குப் பண உதவி தர வங்கிகள் முன்வரவேண்டும். சிறு தொழில் அபிவிருத்தி பெற இந்த நிபந்தனை உதவும்.

இரண்டு : தனியார்மயமாகும் போது, இப்போது லாபம் ஈட்டும் வழித்தடத்துடன் சேர்ந்து, நட்டத்தில் ஓடும் வழித்தடமும் எடுத்தால் தான் அனுமதி வழங்குவது என்று நடைமுறை கொண்டு வரவேண்டும். இது ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது என்று அறிகிறேன். வழித்தடங்களில் ஒரு பகுதி அரசிடமும் இருக்கும் என்பதால் , நியாயமான போட்டியும் ஏற்பட வாய்ப்புண்டு. இது மூலமாய்ப் பெறப்படும் தொகையைக் கொண்டு மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும். ஏழைகளுக்கு குறைக்கப் பட்ட ரேஷன் அரிசி மற்றும் பொருட்கள் மீண்டும் தொடர வேண்டும்.

******

வீரப்பனுக்குப் பணம் ?

ராஜ் குமாரை விடுவிக்க வீரப்பனுக்குப் பணம் கொடுக்கப் பட்டதா இல்லையா ? கருணாநிதிக்குப் பணம் கொடுக்கப் பட்டதா இல்லையா ? எஸ் எம் கிருஷ்ணா பதவி விலக வேண்டுமா இல்லையா ? முன்னாள் காவல் துறை டைரக்டர் சி தினகர் புத்தகம் எழுதியது சரியா இல்லையா என்று பல விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனால் , முக்கியமான ஒன்றைப் பற்றி விவாதம் நடைபெறவில்லை. ரகசியப் பாதுகாப்புச் சட்டத்தின் முனை எதுவரையில் இருக்க வேண்டும் ? எப்படிப்பட்ட ரகசியங்கள் பாதுகாக்கப் படவேண்டும் ? ஏன் பாதுகாக்கப் படவேண்டும் ? என்ன நடைமுறை கொள்ள வேண்டும் ? இது பற்றி யாரும் விவாதிக்க வில்லை.

வீரப்பனுக்குப் பணம் கொடுக்கப் பட்டது என்பது ஊரறிந்த ரகசியம் என்று சொல்லலாம். ஆனால் , ராஜ்குமார் விடுவிக்கப் பட்டவுடன் முழுமுதல் விவரங்களுடன் தேதி வாரியாக உண்மையில் நடந்ததென்ன என்பது பற்றி ஓர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டியது அரசின் கடமையல்லவா ? இந்த விவகாரத்தில் என்ன ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டியுள்ளது ? ராணுவ ரகசியங்கள் தவிர வேறு எந்த ரகசியமும் பாதுகாக்கப் பட வேண்டியதல்ல என்பது தான் அரசின் நடைமுறையாய் இருக்க வேண்டும்.

********

சோனியாவின் கேள்வி

கிட்டத் தட்ட ஒரு வருடமாக ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் நின்றிருந்தது. இப்போது படிப்படியாக பாகிஸ்தானின் எல்லையிலிருந்து படைகள் திரும்பப் பெறப் பட்டுள்ளன ? என்ன காரணத்துக்காக படைகள் நிறுத்தப் பட்டன ? அப்படி படைகள் நிறுத்தப் பட்டதன் குறிக்கோள்கள் நிறைவேறியுள்ளனவா ? அரசாங்கம் இதற்கு செலவு செய்தது எவ்வளவு ? இப்படிப் படை நிறுத்தத்தின் போது வேறு அவசர நிலைப் போர் முயற்சி மேற்கொள்ளும் தேவை ஏற்பட்டால் எப்படி அரசு எதிர்கொண்டிருக்கும் ? இது பற்றியெல்லாம ஒரு விவரமான வெள்ளை அறிக்கையை அரசாங்கம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற சோனியாவின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது.

**********

வாழ்க பாகிஸ்தான் ஜனநாயகம்..

பாகிஸ்தானின் ‘மக்கள் பிரதிநிதிகளின் ‘ அரசு ஏற்பட்டுள்ளது. மிக விசித்திரமான ஒரு விஷயம். தொங்கு பாராளுமன்றம் . ஆனால் ,தேர்தலில் பெரும்பான்மை இடங்கள் பெற்றது மதவாத கட்சிகள். ஆனால் ராணுவ ஆட்சிக்கு ஆதரவான கட்சியை பிரதமர் பதவியில் அமர்த்தியாக வேண்டும். என்னதான் ஜனநாயகம் என்றாலும் , தேர்தல்கள் என்றாலும் அன்றும் இன்றும் என்றும் பாகிஸ்தானின் ஆட்சி புரிவது ராணுவமே. இதை எப்படி அடைவது என்று யோசித்தார் சர்வாதிகாரி. தேர்தலுக்கு முன்பு நிறைவேற்றிய கட்சித் தாவல் தடைச் சட்டத்தை தள்ளிவைத்தார். குதிரை வியாபாரம் அமோகமாய் நடந்தது. சர்வாதிகாரியின் நிழல் அரசு, மக்கள் அரசு என்ற போர்வையில்.

***********

manjulanavaneedhan@yahoo.com

***

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்த வாரம் இப்படி – நவம்பர் 24 2001 (கிருஷ்ணசாமி, பான் மசாலா, போக்குவரத்து ஊழியர், ஆஃப்கானிஸ்தான், நோம் சோம்ஸ்கி)

This entry is part [part not set] of 19 in the series 20011125_Issue

மஞ்சுளா நவநீதன்


கிருஷ்ணசாமி கைது

பொய்வழக்குப் புகழ் அ தி மு க ஆட்சியில் ஒருவர் கைது செய்யப் பட்ட வுடனேயே அவருடைய கைதுக்கு ‘உண்மைக் காரணம் ‘ என்னவாய் ஒருக்கும் என்று தான் எல்லோரும் யோசிக்கிறார்களே தவிர, உண்மையான காரணத்திற்காக ஒருவர் கைது செய்யப்படக் கூடும் என்று எவருமே எண்ணுவதில்லை. கிருஷ்ண சாமி கைது விவகாரமும் அப்படித் தானா ? வால்பாறைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு போனஸ் கேட்டுப் போராட்டத்தில் இவர் தன்னை இணைத்துக் கொண்டதால் இந்த கைது நாடகமா என்ற கேள்வி எழாமல் இல்லை.

***********

பான் மசாலாவுக்குத் தடை : வாழ்க புத்திசாலிகள்

எந்த புத்திசாலி பான் மசாலா விற்பனைக்குத் தடை விதிக்கிற எண்ணம் மேற்கொண்டார் என்று தெரியவில்லை. எப்படித் தான் இவர்களுக்கு இப்படியெல்லாம் யோசனை வருகிறதோ ? பொது இடங்களில் சிகரெட் புகைக்கத் தடிஅ விதித்த சரியான செயலுடன் கூடவே இதையும் செய்திருக்கிறார்கள். பொது இடங்களில் புகை பிடிப்பது மற்றவர்களின் ஆரோக்கியத்திற்குக் கெடுதி என்ற விஷயம் காரணமாய் அதை நாம் வரவேற்க வேண்டும். புகை பிடிக்காதவரின் சுதந்திரத்தின் தலையீடு என்ற அளவில் அப்படிப்ப்பட்ட தடை இருப்பது நல்லதே. ஆனால், பான் மசாலா அப்படியல்ல. புகையிலையினால் ஏற்படும் உடல்நலக் கேடு பற்றி அரசாங்கம் முடிந்தவரையில் கல்வியின் மூலமாகவும் மற்று பொது நல அறிவிப்புகளின் மூலமும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமே தவிர வயதுக்கு வந்தவர்களின் சொந்த வாழ்க்கையில் இப்படி தலையீடு செய்வது நாகரிக சமூகத்தின் அடையாளம் அல்ல. நல்ல வேளையாக , உயர் நீதி மன்றம் இந்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.

உண்மையில் மக்கள் நலன் நோக்கமென்றால் பான் மசாலாவில் உள்ள புகையிலை விகிதாசாரத்தைக் கட்டுப்படுத்தலாம். தடை செய்யக் கூடாது.

இத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டிய விஷயம் சென்னையில் டிஸ்கொதேக்களுக்கு விதிக்கப் பட்டிருக்கும் தடை. இது என்ன தாலிபான் நாடா ?

************

போக்குவரத்து ஊழியர் போராட்டம் : தொடரும் துயரம்.

தி மு க அரசின் போது 25 சதவீத போனசிற்காககப் போராடுவோம் என்று அறிவித்த வெட்கம் கெட்ட அ தி மு க இன்று ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தவுடன், அவர்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய போனஸ் கூடக் கொடுக்க மறுக்கிறது.

ஒரு வழியாக வேலை நிறுத்தம் நின்று பணியாளர்கள் வெலைக்குத் திரும்பவிருக்கிறார்கள். இப்போதைக்கு 8.33 சதவீதமும் பின்பு பாக்கித் தொகையையும் தரவிருப்பதாய் அறிகிறேன்.

*********

வார்டு தேர்தல்களில் அ தி மு க வெற்றி

மக்கள் மீண்டும் மீண்டும் அ தி மு க மீது நம்பிக்கை வைப்பது ஒரு விதத்தில் வியப்பு அளித்தாலும், இன்னொரு வகையில் புரிந்து கொள்ளக் கூடியதே. எப்படியாவது தி மு க முழுமையான அதிகாரம் பெற்று விடக்கூடாது என்று மக்கள் நினைக்கிறார்கள். அதனால் வேறு வழியில்லாமல் அ தி மு க – விற்கு வாக்களிக்கிறார்களோ என்று தோன்றுகிறது. சென்னயின் வார்டு தேர்தலில் அ தி மு க வெற்றி பெற்றிருப்பதை நான் இப்படித்தான் புரிந்து கொள்கிறேன். அதில்லாமல் பெண்கள் ஜெயலலிதாவின் வெற்றியில் தம்முடைய வெற்றியை இனங்காண்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. மூன்றாவது அணி தொடங்குமுன்பே காற்றில் போய் விட்டது போலும்

********

விஜய காந்த் – கமல் ஹாசன் கட்சி அரசியலில் ? ?

கமல் ஹாசன் ஆளவந்தார் பட வெளியீட்டு விழாவில் தான் அரசியலில் வரவிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். விஜய காந்தும் அரசியலுக்கு வரலாம் என்று சொல்கிறார்கள். நல்ல யோசனை. அரசியல் பண்ணிப் பணமும், அதிகாரமும் பண்ண வேண்டிய அவசியமில்லாத கமல் ஹாசனும், விஜய் காந்தும் அரசியலுக்கு வருவது நிச்சயம் அரசியலில் மாறுதலைக் கொண்டு வரும். கூடவே ரஜனி காந்தும் இணைய வேண்டும். கட்சி அரசியல் என்றில்லாமல் ஒரு பொதுச் செயல் திட்டத்தை வைத்துச் செயல் படலாம். உதாரணமாக ப சிதம்பரம் முதல்வர் அல்லது நிதி அமைச்சர். குமரி அனந்தன் உள்ளாட்சித் துறை . வைகோ சமீப காலத்தில் அரசியலில் சற்று முதிர்ச்சி பெற்று வருகிற அடையாளம் தெரிகிறது. தனியாய் நின்றது, நடைமுறையுடன் ஒத்துப் போகாத செயல் என்றாலும் தம்முடைய அணுகுமுறையில் , கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டு செயல் படுகிற ஒரு போக்கும் தெரிகிறது. மத அரசியலும், சாதி அரசியலும் பண்ணாத அதே சமயம் எல்லோருக்கும் நீதி கிடைக்கும் வண்ணம் செயல் படும் நூறு பேர் கூடவா தேற மாட்டார்கள் ?

இவர்களை முன்னமேயே அறிவித்து விட்டு , தேர்தலில் ஈடுபட வேண்டும். இந்த மூவரும் இணைந்தால் இது சாத்தியமே. ஆனால் , தொழில் முறை அரசியல் கட்சிகள் வீசி எறியும் சகதியைத் தாங்கும் மன உறுதியும் வேண்டும். செய்வார்களா ?

(இப்படியெல்லாம் பெரிதாக நம்பித்தான் எம் ஜி ஆருக்கும் நாங்கள் வாக்களித்தோம் அதன் தொடர்ச்சி எங்கே வந்து நிற்கிறது என்று பார்த்த பிறகுமா இப்படியொரு யோசனை என்று ஒரு சினேகிதி சொன்னாள். எனக்கு நம்பிக்கை மட்டும் வற்றுவதே இல்லை.)

*******

ஆஃப்கானிஸ்தான் தலைவிதி பெர்லினில் நிச்சயிக்கப் படுமா ?

மீண்டும் ஒரு தவறான நடவடிக்கை. ஆஃகானிஸ்தானில் எப்படிப் பட்ட ஆட்சி நடைபெற வேண்டும் என்று பெர்லினில் கூடிப் பேசப் போகிறார்களாம். வடக்கு முன்னணி இது வரையிலும் தாலிபன் தாக்குதல்களுக்கு ஈடு கொடுத்து வந்திருக்கிறது. வடக்குக் கூட்டணி இப்படி உயிருடன் இருந்திருக்க வில்லையென்றால், தாலிபன் இப்போது கூடத் தோல்வி பெற்றிருக்காது. எனவே வடக்குக் கூட்டணி ஆஃப்கானிஸ்தான் ஆட்சியில் முக்கிய பங்கு பெற வேண்டும்.

பாகிஸ்தானின் ஆதரவு தாலிபனுக்கு இல்லையென்றால், வடக்கு முன்னணி தான் கடந்த ஐந்து வருடங்களும் ஆட்சி செய்திருக்கும். ஆனால், பாகிஸ்தான் இப்போது திடாரென்று ‘மிதவாத ‘ தாலிபனுக்கு ஆட்சியில் இடம் வேண்டும் என்று கோருகிறது. தன் பிடியை ஆஃப்கானிஸ்தான் மீது தக்க வைத்துக் கொள்ள பாகிஸ்தான் செய்யும் இந்த முயற்சிக்கு இடம் அளிக்கலாகாது.

***********

நோம் சாம்ஸ்கி : இடதுசாரிகளின் புதிய ரட்சகர் ?

இந்துக்கள் காசியாத்திரை போவது போல், இடது சாரிகள் எல்லாம் நோம் சாம்ஸ்கியின் பேச்சைக் கேட்பதற்காக அணி திரண்டு போயிருக்கிறார்கள். மேலை நாடுகளில் எப்படி செய்திகள் சுதந்திரமானவை அல்ல என்பது பற்றியும், செய்திகள் எப்படி நடப்பட்டு அரசிற்குச் சாதகமாய் திசை திருப்பப் படுகின்றன என்பது பற்றியும் சில முக்கியமான கருத்துகளைத் தெரிவித்தவர் நோம் சாம்ஸ்கி. ஆனால் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் போல ஒரு சிறப்பான ஆளுமையையோ இயக்கத்திற்குத் தலைமை தாங்கிச் செலுத்தும் உணர்வையோ அவர் அளிக்கவில்லை. இதன் காரணம், ஒரு விதத்தில் குருட்டுத் தனமான அமெரிக்க எதிர்ப்பும், — இடது சாரிகள் இவர் பின்னால் போவதற்கு இது ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம் — மற்ற கலாசாரங்களைப் புரிந்து கொள்கிற உணர்வின்மையும், வன்முறைக்கு எதிரான திட்ட வட்டமான ஒரு நிலைபாட்டை எடுக்காததும் என்று சொல்லலாம். போல் போட் போன்ற கொடுங்கோலர்களின் ஆட்சியைக் கூட வரவேற்றவர் இவர் என்று அறியும் போது அவர் மீது வைக்கிற மரியாதை பொடியாகிப் போகிறது. இன்றைய மேனாடுகளின் போக்கை விமர்சிக்க ரஸ்ஸல் போன்ற ஒருவர் தான் தேவை.

இந்தியாவில் வந்து காஷ்மீர் பற்றிக் கருத்துத் தெரிவித்து விட்டு பாகிஸ்தான் சென்றிருக்கிறார். அங்கு ஜனநாயகப் படுகொலை பற்றியும், சிறுபான்மையினருக்கு இரண்டாம் தரக் குடிமகன் அந்தஸ்துக் கூட இல்லாமல் இருப்பதையும் பற்றிப் பேசுவாரா என்று தெரியவில்லை.

*********

போக்குவரத்துத் துறையில் ஏன் நட்டம் ?

எனக்குத் தெரிந்து என்னுடைய ஊரில் இரண்டு பஸ் வைத்திருப்பவர்கள் கூடப் பெரும் பணக்காரர்களாகி விட்டார்கள். ஒரு பஸ் தடம் அனுமதி வாங்குவதற்கு லட்சக் கணக்கில் லஞ்சம் கொடுக்கவும் தயாராய் இருக்கிறார்கள். பொதுவாக சிறிய அளவில் செய்யப்படும் பொருளாதார முனைவுகள் , பெருமளவில் செய்யப் பட்டால் லாபம் அதிகமாகும் என்பது பொருளாதார விதி. அரசாங்கம் மேற்கொண்டுள்ள போக்குவரத்துத் துறையில் மட்டும் நட்டம் ஏன் ஏற்படுகிறது என்று யாரும் சொல்ல முடியுமா ? இது பற்றி தொழிற்சங்கங்கள், அதிகார வர்க்கம் போன்றவை ஏதும் வெள்ளை அறிக்கை தயாரித்து அனுப்பியுள்ளனவா ?

********

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்த வாரம் இப்படி – நவம்பர் 19 2001

This entry is part [part not set] of 20 in the series 20011118_Issue

மஞ்சுளா நவநீதன்


முரசொலி மாறனுக்கு ஒரு வெற்றி

உலக வர்த்தக நிறுவன மாநாட்டில் முரசொலி மாறனுக்கு ஒரு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. காப்புரிமை – குறிப்பாக மருந்துகளின் காப்புரிமைச் சட்டங்களை உபயோகித்து , நாட்டின் மருந்து உற்பத்தி கட்டுப் படுத்தப் படுகிற ஒரு நிலைமை உருவாகியிருந்தது. இப்போது கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தினால், தனிப்பட்ட நாடுகள் சமூகத்தினர் நலம் கருதி , காப்புரிமைச் சட்டத்தைத் தளர்த்தலாம் என்று கூறப்பட்டுள்ள்து. இது வளரும் நாடுகளுக்கு மிகப் பெரிய வெற்றி. இதனை உபயோகித்து மலிவு விலையில் மருந்துகள் தயார் செய்வது மட்டுமில்லாமல், மருந்தின் ஆய்விலும் கவனம் செலுத்த வேண்டும்.

இதே போல் உலக வர்த்தக நிறுவனத்தின் விதிகள் வளரும் நாடுகளின் ஆராய்ச்சியை வளர்க்கும் விதத்தில் அமைய வேண்டும். மலிவு விலையில் பொருட்கள் கிடைக்க வழி செய்யும் அதே சமயம் உள்ளூர் வர்த்தக நிறுவனங்களின் இருப்பையும், வளர்ச்சியையும் முன்னிற்கச் செய்ய வேண்டும்.

*******

போக்குவரத்து ஊழியர் போராட்டம் : தனியார் மயமாக்கலுக்கு முன்னோடியா ?

போக்குவரத்து ஊழியர் போராட்டம் தீர்வதில் பன்னீர் செல்வம் அரசாங்கத்திற்கு அவ்வளவு உற்சாகமில்லை என்று தெரிய வருகிறது. இதையே சாக்காக வைத்து , மக்களிடம் போக்குவரத்து ஊழியர்கள் மீது வெறுப்பை உருவாக்கி விட்டால் மெள்ள மெள்ள போக்குவரத்துத்துறையை முழுவதும் தனியார் வசம் ஒப்படைத்து விடலாம் என்று ஒரு எண்ணம் அரசிற்கு இருக்கக் கூடும் என்று தெரிகிறது. என்ன பேரம் நடக்கிறது என்று புரியவில்லை. ‘இந்து ‘ போன்ற நாளிதழ்களில் ஏற்கனவே தனியார் மயமாக்கல் ஒரு தீர்வு என்பதாய் கடிதங்கள் வர ஆரம்பித்து விட்டன.

தமிழ் நாட்டின் போக்குவரத்துத் துறை பெருமளவு சிறப்பான வளர்ச்சியுற்ற ஒரு துறை. அங்கு பிரசினைகள் இல்லாமல் இல்லை. ஆனால் மக்களின் முக்கிய ஒரு தேவையை பூர்த்தி செய்வது மட்டுமில்லாமல், சில தடங்கள் லாபகரமாகவும் இயங்குகின்றன. தனியார் போக்குவரத்து ஊழியர்களும் ஒரளவு நல்ல சம்பளம் பெறவும் இந்தப் போட்டி உதவுகிறது.

இந்தப் போராட்டத்தில் மற்ற துறையினரும் ஈடுபடவிருக்கிறார்கள் என்று செய்திக் குறிப்புகள் சொல்கின்றன. அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு மனம் திரும்ப வேண்டும்.

***

ஆஃகானிஸ்தானில் ஒரு பாடல்

சுதந்திர கீதம் மீண்டும் ஆஃப்கானிஸ்தானில் இசைக்கப் படுகிறது. பெண்கள் வேலைக்குத் திரும்புகிறார்கள். தொலைக்காட்சி மீண்டும் ஒளிர்கிறது. முகத்திரைகள் விலகுகின்றன. பெண்கள் பள்ளிகள் திறக்கப் படவிருக்கின்றன. வடக்குக் கூட்டணியை ஆதரிக்கும் ரஷ்யாவும் இந்தியாவும் அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு தந்து சுதந்திரத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும். எந்த மதமும் கோட்பாடும் மக்களின் சுதந்திரத்தைப் பறிக்கிற போது அதை முறியடித்து சுதந்திரக் கொடியை ஏற்றுவது ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட.

*****

ஆஃகானிஸ்தானில் இனி என்ன ?

ஆஃப்கானிஸ்தானில் இனி என்ன என்ற கேள்விக்கு உடனடியாய்ப் பதில் இல்லை. இது முழுக்க முழுக்க அமெரிக்காவின் வெற்றி என்று கொண்டாட முடியாத அளவிற்கு, ரஷ்ய இந்திய ஆதரவு செயல் பட்டிருக்கிறது. வடக்குக் கூட்டணி மற்ற குழுக்களையும் சேர்த்து ஆட்சி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. பஷ்டூன் மொழி பேசும் மக்களைத் தவிர மற்றவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப் படும் என்று வடக்குக் கூட்டணி அறிவித்துள்ளது. மதவெறி கொண்ட கூலிப்படைகள் ஆஃப்கானிஸ்தான் மக்களை மிரட்டி அடிமைப் படுத்தி வைத்திருந்தன. பாகிஸ்தானி உருது பேசுவோரும், அரேபியா , சூடான் போன்ற நாடுகளிலிருந்து அராபிய மொழி பேசுவோரும் இங்கே புகுந்து ஆக்கிரமிப்புச் செலுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் தண்டனை பெற வேண்டியது அவசியம்.

தாலிபனின் மிதவாதிகளுக்கு அரசில் இடம் அளித்து அதன் மூலம் ஆஃகானிஸ்தான் மீது தன் பிடியைத் தொடர்ந்து வைத்திருக்க பாகிஸ்தான் விழைகிறது. இதற்கு வடக்குக் கூட்டணி ஒப்புக் கொள்ளப் போவதில்லை.

வடக்குக் கூட்டணி தலைவர் ரப்பானியை வாழ்த்தி (மீண்டும்) வரவேற்போம்.

ஆஃப்கானிஸ்தான் போலவே காஷ்மீரிலும் கூலிப்படைகள் தான் எந்த ஒரு இணக்கமும் ஏற்படாதவாறு வன்முறைச் செயலில் ஈடுபட்டு வருகின்றன. 10 ராணுவத்தினர் இந்த பயங்கர வாதிகளால் கொல்லப் பட்டிருக்கின்றனர். இந்த பயங்கரவாதம் எப்போது முடிவு பெறும் ?

****

ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம்

அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்றபிறகு உடனடியாக வாஜ்பாய் ரஷ்யா சென்றதும், அங்கு அவசர அவசரமாக சில ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டதும் நடந்துள்ளது. ரஷ்யாவுடன் இந்தியா கொண்டுள்ள உறவு எப்போதும் சமநிலையில் இருந்துள்ளது. பாகிஸ்தானுடன் இந்தியா போரிட நேர்ந்த போதெல்லாம், அமெரிக்கா இந்தியாவிற்கு உதவி வந்திருக்கிறது.

இப்போது இந்தப் பயணம் மற்ற மேனாடுகளுக்கு , இன்னமும் ரஷ்யா தான் இந்தியாவின் நம்பத்தகுந்த நண்பன் என்று நிரூபிக்கும் வண்ணம் அமைந்துள்ளது என்று நினைக்கிறேன். பாகிஸ்தானுடன் கொண்டுள்ள உறவை அமெரிக்காவோ, இங்கிலாந்தோ அவ்வளவு சீக்கிரம் முறித்துக் கொள்ளாது என்ற உண்மையை உணர்ந்தவுடன் எமக்கும் ஒரு நண்பன் உண்டு என்ற பிரகடனம் இது.

ஆனால் இந்தப் பிரகடனத்திற்கு கொடுக்கப் பட்ட விலை அதிகமோ என்று தோன்றுகிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு 2 பில்லியன் டாலர் போல இந்தியா ரஷ்யாவிற்குத் தரவிருக்கிறது. அணுச் சேதங்களை ரஷ்யாவே திரும்பப் பெற்றுக் கொள்ளும் ஒரு நிபந்தனையும் இதில் உள்ளது. ஆனால் தொழில் நுட்ப அளவில் ரஷ்யா சற்றுப் பின்தங்கித் தான் உள்ளது. இந்தியாவே தனித்த முறையில் இந்த மின் நிலையத்தினை நிறுவக்கூடிய திறன் நம்மிடையே இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

************

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்த வாரம் இப்படி – நவம்பர் 11 2001 (உலக வர்த்தக நிறுவனம், மஜாரில் சுதந்திரக்காற்று, போனஸ், பின் லாடன்)

This entry is part [part not set] of 20 in the series 20011111_Issue

மஞ்சுளா நவநீதன்


உலக வர்த்தக நிறுவனத்தில் முரசொலி மாறன்

விவசாயப் பொருட்கள் மீண்டும் உலக வர்த்தக நிறுவனத்தில் பிரசினையாகியுள்ளன. எங்களுக்கு உங்கள் சந்தைகளைத் திறந்து விடுங்கள் என்று கேட்கிற மேல் நாடுகள் விவசாயப் பொருட்களுக்குத் தருகிற மான்யங்களையும் , ஏற்றுமதி ஊக்குவிப்புத் தொகையையும் நிறுத்தத் தயாரில்லை. வர்த்தகப் பேச்சு வார்த்தைகளில் விவசாயப் பொருட்களைச் சேர்க்கக் கூடாது என்று சொல்லும் அளவிற்கு இவர்கள் இருக்கிறார்கள். பேச்சு வார்த்தை முறிந்தாலும் பரவாயில்லை இந்த விஷயத்தில் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதில் மிக உறுதியாய் இருக்கிறார்கள். முக்கியமாய் ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் எந்த விதமான சலுகையையும் வளரும் நாடுகளுக்கு அளிக்கத் தயாரில்லை என்பது , முரசொலி மாறன் போன்ற அமைச்சர்களுக்குக் கோபம் அளித்துள்ளது.

இன்னொரு விஷயமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. வளரும் நாடுகளில் மருந்துகள் மலிவு விலையில் கிடைக்க , காப்புரிமைச் சட்டங்கள் அமல் படுத்துவதில் சற்றே தளர்ந்த நடைமுறை வேண்டும் என்ற கோரிக்கை ஓரளவு ஏற்கப் பட்டுள்ளது. மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் பிரதி நிதிகள் இதை எதிர்த்திருக்கிறார்கள். தென் ஆப்பிரிக்கா, பிரேஸில் போன்ற நாடுகள் இந்தப் பிரசினையில் முன் நின்று தாம் மருந்துகள் தொடர்ந்து தயாரிக்க ஆதரவு கோரியுள்ளன.

சீனா உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பினர் ஆனதன் மூலம் சந்தைப் பொருளாதாரத்திற்கான தம்முடைய நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்ததாய்க் கொள்ள வேண்டும். இன்னமும் தன்னைக் கம்யூனிஸ்ட் நாடு என்று சீனா அழைத்துக் கொள்ளுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.

தைவான் சீனாவுடன் கூடவே உறுப்பினர் அந்தஸ்தைப் பெற்றிருப்பதும் ஒரு முக்கியமான விஷயம் ஆகும். தைவான் தனி நாடு என்று சீனா அங்கீகரித்ததில்லை. மேல் நாடுகளின் பிரித்தாளும் சூழ்ச்சியால் தான் தைவான் உருவானது என்பதும், மீண்டும் தைவான் சீனாவுடன் சேர வேண்டும் என்பதும் தான் சீனாவின் கோரிக்கை. இரண்டு நாடுகளும் உலக வர்த்தக நிறுவனத்தில் உறுப்பினர் ஆவதன் மூலம் , தகவல் பரிமாற்றங்கள் தொடரலாம்.

*****

மஜார் ஏ ஷெரீஃப் – சுதந்திரக் காற்று

தாலிபன் கைப்பிடியிலிருந்து மஜார் ஏ ஷெரீஃப் விடுதலை பெற்றவுடன் பெண்கள் பர்தாவைக் கழற்றி வீசிவிட்டு மகிழ்ச்சியால் நடனம் புரிந்தனர் என்றும், ஆண்கள் தாடியை மழித்துக் கொள்ள வரிசையில் நின்றனர் என்றும் ஒரு செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது. சுதந்திரக் காற்று வீசாத சமூகம் மடமையும், மூட நம்பிக்கைகளும் கொண்டு துர் நாற்றம் வீசும். மக்கள் அடிப்படையில் சுதந்திரம் விரும்பிகள். சமூக வாழ்விற்கு அடிப்படையான ஒரு சில விதிகள் தேவை என்றாலும், தனிமனித சுதந்திர உணர்வை மதிக்காத எந்த கோட்பாடும் முடிவில் தோல்வியே அடியும். ஆனால் இந்த முடிவை நோக்கிச் செல்லும் பாதையில் புத்தர் சிலைகள் உடைகிற கலாசாரச் சீரழிவும், படுகொலை மைதானங்களும் விரவிக் கிடக்கின்றன.

தாலிபனைக் கைவிட பாகிஸ்தான் தயாரில்லை. தாலிபன் கோட்பாடுகளுடன் உடன்படும் ஓர் அமைப்புத் தான் பாகிஸ்தானின் ராணுவம். அதன் அரவணைப்பிலும், போஷிப்பிலும் வளர்ந்த தாலிபன் விலகிப் போனால் எதிர்கால அரசு, பாகிஸ்தானுடன் சுமுக உறவு கொள்ளாது என்பதால், தாலிபனுக்கும் எதிர் காலத்தில் ஆஃப்கானிஸ்தானின் அரசமைப்பில் ஓரிடம் கோருகிறது பாகிஸ்தான். எப்படி நிறைவேற முடியும் ?

*******

போனஸ் கேட்டு போக்குவரத்து ஊழியர் போராட்டம்

போக்குவரத்து ஊழியருக்கு நியாயமாய்க் கிடைக்க வேண்டிய போனஸ் தராமல், அவர்கள் போராட்டத்தை முறியடிக்கவும் ஏற்பாடு நடக்கிறது என்ற செய்தி வருத்தம் தருகிறது. போக்குவரத்து ஊழியர்கள் மிக அத்தியாவசியமான பணியில் இருப்பவர்கள். அவர்கள் தம் பணியில் தொடர்ந்து சிறப்புறச் செயல்படவேண்டும் எனில் அவர்களுடைய நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப் பட வேண்டும்.

***

பின் லேடன் பாகிஸ்தான் பாதுகாப்பில் ?

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் பின் லேடன் தங்கியிருக்கலாம் என்று ஒரு உளவுத்துறைக் குறிப்புச் சொல்வதாய் அறிகிறோம். நம்பத்தகுந்த செய்தி தான் . டான் பத்திரிகை மிகச் சுலபமாக பின் லேடனுடன் பேட்டி எடுக்க முடிந்திருக்கிறது. மிரட்டல் விடுவதும் , அணுகுண்டு தன்னிடம் உள்ளது என்று தெரிவிப்பதுமாக ஒரு மாவீரப் போர்வையில் எளிதாக பாகிஸ்தானில் தோற்றம் அளிக்க பின் லேடனால் முடிந்திருக்கிறது. பாலஸ்தீன், காஷ்மீர் போன்ற பகுதிகளில் முஸ்லீம்மக்களுக்கு எதிராக ந்டடக்கும் அநீதிகளுக்குப் பழி வாங்கத் தான் செயல் படுவதாய் பின் லேடனின் கூற்று தெரிவிக்கிறது.

ஆச்சரியபடுவதற்கு ஒன்றுமில்லை. பின் லேடன் பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் ஒரு பொன் முட்டையிடும் வாத்து. பின் லேடனைக் காரணம் காட்டி ஏற்கனவே பொருளாதாரத் தடைகள் அகற்றப் பட்டு விட்டன. அதில்லாமல் கடன்களும் ரத்து செய்யப் பட்டுள்ளன. பின் லாடனை அமெரிக்கா பிடிக்காமல் விட்டால் சலுகைகள் தொடர்ந்து கிடைக்குமல்லவா ? பின் லேடனுக்கும் பகிஸ்தானிற்கு நெருங்கிய தொடர்பு உண்டு. பின் லேடனைப் பிடித்துத் தருகிறோம் என்று பணமும் பயிற்சியும் பாகிஸ்தான் ராணுவம் பெற்ற செய்தியும் மறப்பதற்கில்லை.

*****

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்த வாரம் இப்படி – நவம்பர் 4 ,2001 (வளைக்கரங்கள், ப.த.ச, மூன்றாமணி, முட்டை, பெளத்தம், கிறுஸ்தவர்கள், மின்னஞ்சல் மிரட்டல்)

This entry is part [part not set] of 16 in the series 20011104_Issue

மஞ்சுளா நவநீதன்


வளைக்கரமும் பர்வேஸ் முஷரஃபும்

‘நான் ஒன்றும் வளையல் போட்டுக் கொண்டிருக்கவில்லை ‘ என்று தெரிவிக்கிறார் பாகிஸ்தானின் சர்வாதிகாரி பர்வேஸ் முஷரஃப். இந்தியா படையெடுக்குமானால் அதற்குத் தகுந்த பதிலடி கொடுப்போம் என்று தெரிவிக்கிற வீராவேசமான பேச்சில் ஒரு வாசகம் இது. பெண்களை இழிவு படுத்துகிற வாசகங்கள் எல்லா மொழிகளிலும் , எல்லாச் சந்தர்ப்பங்களைலும் புழங்கக் காண்கிறோம். ஆணாதிக்க, தன்னுடைய வீரத்தை காட்ட, தான் கோழையில்லை என்பதைத் தெரிவிக்க, நான் என்ன பெட்டைப் பயலா ? என்றும், நான் புடவை (மேல் நாடு என்றால் பாவாடை) அணிவதில்லை என்றும் தெரிவிப்பதும் வழக்கமாகி இருக்கிறது. இது எவ்வளவு அசிங்கமான சொற்பழக்கம் என்று யாரும் உணர்வதாய்த் தெரியவில்லை. இந்திரா காந்தி என்ற பெண் தலைவியாக இருக்கும் போது பர்வேஸ் முஷரஃப் ஒரு சாதாரண அலுவலராய் இருந்த சமயம், பாகிஸ்தான் படைகள் இந்திரா காந்தியின் படைகள் முன்பு சரணாகதியடைந்ததை ஒரு பெண்மணி நினைவு படுத்தியிருக்கிறார்.

பெண்கள் இது மாதிரி இன்னொரு சொலவடைகளை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். உதாரணமாய் என்னை என்ன முட்டாள் என்றா நினைத்துக் கொண்டாய் என்று கேட்பதற்குப் பதில் எனக்கு என்ன மீசையா இருக்கிறது என்று கேட்கலாம். நான் காட்டு மிராண்டியா என்று கேட்பதற்குப் பதில் எனக்கு என்ன தாடியா தொங்குகிறது என்று கேட்கலாம். இது போன்ற இன்ன பிற வாசகங்களை வழக்கிற்குக் கொண்டு வந்தால், – பெண்களுக்குக் கற்பனை வளம் இல்லையா என்ன ?– முஷரஃப் போன்ற அறிவு கெட்ட ஆண்களுக்குப் புத்தி வரும்

*********

பயங்கரவாதத் தடைச் சட்டம்

தடா மதிரி , மிசா மாதிரி இதுவும் எந்தப் பயனையும் அளிக்காது. அதில்லாமல், சாதாரண மக்களின் மீதான சந்தேகக் கேஸ்களும், அரசியல் எதிரிகளைப் பழி வாங்கும் போக்கில் ஓர் அம்சமாய்த் தான் இது செயல் படும்.

தடா , மிசாவில் இல்லாத இன்னொரு அம்சம் இதில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். பத்திரிகையாளர்கள் பயங்கரவாதிகளின் இருப்பிடத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தும் பகுதி அது. பயங்கரவாதிகளுடன் போலிஸ் மற்றும் அரசியல்வாதிகளுக்குள்ள ஒரே தொடர்பு பத்திரிகையாளர்கள் தான் என்றாகிவிட்ட நிலையில் பத்திரிகையாளர்களை நம்பி அவர்கள் தம் கருத்துகளை வெளியுலகிற்கு எடுத்துச் செல்லலாம் என்ற நம்பிக்கையில் பயங்கரவாதிகள் பத்திரிகையாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர். இந்த தொடர்பும் அறுந்து போகுமெனில், பத்திரிகையாளர்கள் இவர்களுடன் பேசவும் முயலமாட்டார்கள். இதனால் அரசிற்குத் தான் நட்டம். பத்திரிகைத் துறையினருக்கு செய்தி சேகரிப்பின் போது என்ன விதமாய்ச் செயல்பட வேண்டும் என்று அரசு சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கலாகாது.

**********

தமிழ் நாட்டில் மூன்றாவது அணி

தமிழ் நாட்டில் மூன்றாவது அணி உள்ளாட்சித் தேர்தல்களில் ஒரு சில தொகுதிகளில் வென்றிருப்பதே மானெரும் சாதனை என்று சொல்ல வேண்டும். மூன்றாவ்து அணி உருவாக நேரும்போதெல்லாம், காங்கிரஸ் போன்ற அன்றைய பெருங்கட்சிகள் அகில இந்திய அரசியல் போக்குகளிற்காக தமிழ் நாட்டின் அரசியலைப் பலி கொடுத்தது உண்மை. சிதம்பரம், கிருஷ்ண சாமி, ஈ வி கே எஸ் இளங்கோவன் போன்றோர் இணைந்து அமைத்திருக்கும் இந்த அணி திருமா வளவன் போன்றோரையும் உள்ளிட்டு உருவாக்கப் படவேண்டும். ம தி மு க-வும் , பா ம க வும் மூன்றாவது அணியில் சேருமெனில் இந்த அணி மிக வலுவாகச் செயல் படவும் வாய்ப்புண்டு.கொள்கையளவில் பா ம கவிற்கும், ம தி முக விற்கும் என்ன வித்தியாசம் என்று யாராவது விளக்கினால் தேவலை.

இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு வெளியே தமிழ் நாட்டின் அதிகாரப் பகிர்வு நடக்க மூன்றாவது அணி வலுப்பெறுவது வழி கோலலாம்.

**********

முட்டையா சத்துணவு உருண்டையா ?

முட்டைக்குப் பதிலாக சத்துணவு உருண்டை ஒன்றை வழங்கலாம் என்று முடிவெடுத்திருப்பதாய் அறிகிறேன். இதன் காரணம் என்னவென்று தெரியவில்லை. முட்டையின் சத்துக்கள் பெரிதும் நிரூபிக்கப் பட்டவை. முட்டையில் கலப்படம் செய்யவும் வாய்ப்பில்லை. சத்துணவு உருண்டை என்பது அப்படியல்ல. கருணநிதி சத்துணவில் முட்டை சேர்க்க ஆரம்பித்தார் அதனால் அதை நிறுத்துவோம் என்ற முட்டாள் தனமான கருத்துத் தான் இதற்குக் காரணம் என்று தோன்றுகிறது.

இதில்லாமல் நாமக்கல் போன்ற இடங்களில் முட்டைத் தொழில் நசிக்கும் அபாயமும் இருக்கிறது. முட்டையைத் தொடர வேண்டும்.

*******

பெளத்தத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்ட மக்கள்

ஆயிரக்கணக்கான மக்கள் இந்து மதத்தை விட்டு பெளத்த மதத்திற்கு மாறியுள்ளனர். இந்து மதத்தின் சாதீயத்திற்கு மாற்றாக அம்பேத்கரால் பரிந்துரைக்கப் பட்ட வழி இது. வாழ்த்துவோம். இது பற்றி ஆஎ எஸ் எஸ் காரர்கள் எரிச்சலடைந்து அறிக்கை விட்டுருப்பதும் எதிர்பார்க்கக் கூடியதே. இந்து மதத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்க வேண்டுமெனில் அதன் சாதீயம் ஒழிய வேண்டும்.இன்றைய நிலையில் சாதீயத்தின் தீவிரங்கள் எல்லாம் தலித்கள் மீது தான் பாய்கின்றன. சாதி வெறி பிடித்த மேல்சாதியினரும் பிரசினையைத் தீர்க்க உதவ மாட்டார்கள். இந்தப் பிரசினையை ஒழிக்காமல் கிறுஸ்தவர்கள் மத மாற்றம் செய்கிறார்கள் என்றெல்லாம் பிரசாரம் செய்வது பிரசினையைத் தீர்க்க உதவாது. இந்தியா ஜன நாயக நாடு. தத்தம் மதத்தினைத் தேர்வு செய்யும் உரிமை அனைவருக்கும் உண்டு. தம்முடைய மதம் தனக்கு உரிய உரிமையை அளிக்க வில்லையெனில் எந்த மதம் அப்படி அளிக்கக் கூடுமோ அதை மேற்கொள்ளும் உரிமை அனைவருக்கும் உண்டு.

*********

பாகிஸ்தானில் கிறுஸ்தவர்கள் படுகொலை

ஒரு வழிபாட்டுக் கூடத்தில் முஸ்லீம் தீவிர வாதிகள் கிறுஸ்தவர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள் . காஷ்மீரில் தினம் தினம் பாகிஸ்தானின் அரசு உதவியுடன் இந்துக்களுக்கு எதிராக நடக்கிற இந்த விஷயம் இப்போது பாகிஸ்தானிற்குள் கிறுஸ்தவர்களுக்கு எதிராக நடந்திருக்கிறது. ஆஃகானிஸ்தானில் நடக்கும் போரை கிறுஸ்தவ-முஸ்லீம் போராகச் சித்தரிக்க உதவும் வண்ணம் இந்தச் செயல் நடைபெற்றிருக்கிறது. இதை நிகழ்த்தியவர்களின் எண்ணம் இதனைத் தொடர்ந்து கிறுஸ்தவர்கள் முஸ்லீமைத் தாக்கினால் அவர்களைக் குறை சொல்லி மீண்டும் கிறுஸ்தவர்கள் மீதான தாக்குதலைத் தொடரலாம் என்பது தான். அப்படியேதும் உடனடியாய் நடக்க வில்லை என்பது உண்மை.

பாகிஸ்தானில் கிறுஸ்தவர்கள் எப்போதுமே நசுக்கப் பட்டுத் தான் வந்திருக்கிறார்கள்.இந்தியாவில் தலித் மக்களுக்காவது வேலை மற்றும் படிப்பில் முன்னுரிமை என்ற பெயரில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானில் தலித் மக்கள் போலத் தான் கிறுஸ்தவர்கள் இருந்து வருகின்றனர்.

********

ஜெயலலிதாவிற்கு மிரட்டல் கடிதம்

மின்னஞ்சலில் ஜெயலலிதாவிற்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாம். தமிழக விடுதலை முன்னணியினர் இந்த மிரட்டல் கடிதத்தை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளனராம். மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட எந்த ஒரு கடிதமும் எங்கிருந்து யாரால் அனுப்பப்பட்டது என்பதை மிகச் சுலபமாய்க் கண்டுபிடிக்கலாம் . ஆனால் அது கண்டுபிடிக்கவில்லை இன்னமும்.

கோர்ட்டில் வைத்துக் கொல்லுவோம் என்று குறிப்பாகச் சொல்வது வேறு சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. ஜெயலலிதா கோர்ட்டிற்குப் போகிற ஆர்வம் காட்டியதே இல்லை. வாய்தா வாங்கியே வழக்கு முழுக்க நடக்கிறது. எப்போதாவது கோர்ட்டிற்கு வந்து இந்த வழக்கிற்குத் தீர்வு ஏற்படலாம் என்ற வாய்ப்பும் இப்போது போய் விட்டது. ஒரு யோசனை: வழக்கு மன்றத்தைத் தற்காலிகமாக போயஸ் தோட்டத்திற்கு மாற்றி விட்டு இரவு பகலாய் விசாரணையை நடத்தி தீர்ப்பு வழங்கினால் நல்லது. அதுவரையில் கோர்ட் மட்டுமல்ல வேறெங்கும் அம்மையார் செல்லக் கூடாது என்று செய்தால் என்ன ?

*******

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்