இந்த வாரம் இப்படி – டிஸம்பர் 15, 2002 ( மோடிவித்தை, நாகப்பா கொலை)

This entry is part [part not set] of 29 in the series 20021215_Issue

சின்னக்கருப்பன்


மோடிவித்தை

எனக்கு இந்த தேர்தல் முடிவுகளுக்கு முன்னால், நான் 300 பேரை சந்தித்து என்ன வரப்போகிறது என்று சொல்கிறேன் என்று ஆரம்பித்த எதன் மீதும் நம்பிக்கை இல்லாமல் போனது தமிழர்கள் ஒட்டுமொத்தமாக ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட்டுவிட்டு, நான் கருணாநிதிக்குத்தான் போடுகிறேன் என்று இது போல கருத்துக்கணிப்பு எடுக்கும் அப்பாவியிடம் பொய் சொல்லி, அந்த ஆள் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடியதிலிருந்துதான். இருப்பினும் இது போல கருத்துக்கணிப்பு எடுக்கும் ஆட்கள், அந்த வேலையை விடமாட்டேன் என்கிறார்கள். அவுட்லுக், ஜீ டிவி, தி வீக் எல்லாம் இதோ சோனியா வெற்றிவாகை சூடுகிறார் என்று மாலையை தயாராக வைத்துக்கொண்டிருக்க, பாஜக வெற்றி பெறும் என்று சொன்ன பிரண்ட்லைனுக்கும் கரி பூசி, குஜராத் வாக்காளர்கள் மூன்றில் இரண்டு தொகுதிகளை பாஜகவுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

காங்கிரசுக்கு வெற்றி தரவேண்டும் என்ற முனைப்பில் பகிரங்கமாக எழுதும் அவுட்லுக்கைக்கூட ஓரளவுக்கு இதிலிருந்து விடுவித்துவிடலாம் என்றால் கூட, தி வீக், இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகளும் இதனை சரிவரக் கணிக்க முடியாதது ஆச்சரியம்தான்.

இதில் ஆளாளுக்குக் கருத்துச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ரீடிஃப் இணையப்பேச்சில் கொஞ்ச நேரம் கலந்துகொண்டு என்ன பேசுகிறார்கள் என்று பார்த்துக்கொண்டிருந்தேன். கருப்பு வெள்ளையாகப் பேசுகிறார்கள். உலகம் பல வண்ணங்கள் நிறைந்தது என்பதை அங்கே காணமுடியவில்லை.

ஒருவர் சொன்னது யோசிக்கத்தகுந்தது. ‘முஸ்லீம்கள் கலவரத்தில் கலந்து கொள்ளவே இல்லை என்பது போன்ற மாயையை பத்திரிக்கைகள் உருவாக்கி இருக்கின்றன. எல்லா இறப்பும் முஸ்லீம்களே என்பது போன்ற மாயை குஜராத்தில் வாழும் நான் ஒப்புக்கொள்ளமுடியாது. இதுவரை எத்தனை இந்துக்கள் கற்பழிக்கப்பட்டார்கள், எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற விஷயம் வெளிவரவே இல்லை. இது உலகெங்கும், இந்து மோடி முஸ்லீம்களைக் கொல்கிறார் என்ற மாயையை உருவாக்கிவிட்டது. இது பொய் என்பதாலேயே குஜராத் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள் ‘. நான் குஜராத் போனதில்லை. இங்கே யார் சுதந்திர மீடியா என்று தெரியவில்லை. யாரை நம்புவது எனப்புரியவில்லை. ஒரு தேர்தலில் சரிபார்க்கப்படக்கூடிய முடிவுகளையே பொய்யாகக் கணித்து தான் ஆதரிக்கும் கட்சிகளுக்கு ஆதரவு தேடும் பத்திரிக்கைகள் இருக்கும்போது, சோ கேட்டதைத்தான் கேட்கத்தோன்றுகிறது.. உண்மையே உன் விலை என்ன ?

***

நாகப்பாவைக் கொன்றது யார் என்பது விஷயமில்லை. நாகப்பாவை ஏன் வீரப்பன் கடத்திச் சென்று கோடி கோடியாகக் கேட்டான் என்பதுதான் கேள்வி. ஒரு முன்னாள் அமைச்சரைக் கடத்திச் சென்றால் ஏன் தமிழ்நாடும் கர்னாடகாவும் பதறிஅடித்துக்கொண்டு அவனுக்கு காசு கொடுக்க பேரம் பேச வேண்டும் என்பதுதான் கேள்வி.

காவிரி பிரச்னையால் பிளவு பட்டிருக்கிற சமுதாயத்திலே குளிர் காய நினைக்கிறான் இவன். இவன் நாகப்பாவைக்கொன்று அதனால் கர்னாடகாவில் இருக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டில் இருக்கும் கன்னடர்களுக்கும் சமூக விரோதிகளால் தீய விளைவு நேரக்கூடாது என்று அக்கறைப்பட்டு இரண்டு மாநில அரசுகள் அவனோடு பேரம் பேச விழைகின்றன. நாகப்பா கொலையுண்டு இறக்கிறார். அதில் பழியை தமிழ்நாட்டு போலீஸ் மீது போட்டு விட்டு போகிறான் வீரப்பன், இவ்வாறு போடுவதால் அவனுக்கு என்ன நன்மை ? கர்னாடகாவில் இருக்கும் தமிழர்கள் ஏற்கெனவே கர்னாடகா விட்டு வெளியேற ஆரம்பிக்கிறார்கள். தமிழ்நாட்டு போலீஸால்தான் நாகப்பா இறந்தார் என்று ஆனால், கர்னாடகாவில் இருக்கும் தமிழர்களுக்கு குந்தகம் விளையும் என்ற காரணத்தாலும் (உண்மையிலேயே தமிழ்நாட்டு போலீசுக்கு சம்பந்தம் இல்லை என்பதாலும் இருக்கலாம்) நாகப்பா கொலைக்கு தமிழ்நாடு போலீஸ் காரணமில்லை என்று தமிழ்நாடு சொல்கிறது. இதில் நாகப்பா கொலைக்கு தமிழ்நாடு போலீஸ் தான் காரணமாக இருக்கும் என்று விவாதிப்பவர்களுக்கு என்ன உள்நோக்கம் இருக்க முடியும் ? வீரப்பனுக்கு இருக்கும் நோக்கம் தான் இருக்க முடியும்.

இதில் வெகு முற்போக்கு என்று நினைத்துக்கொண்டு நக்ஸலைட்டுகளை போலீஸ் படுத்துவதையும் இதனையும் ஒப்பிட்டுக்கொண்டு வீரப்பனுக்கு சாமரம் வீசுபவர்களை என்ன செய்வது ? இவ்வளவு நாளாக இல்லாதிருந்த நக்ஸலைட்டு பிரச்னை ஏன் திடார் எனக் கிளம்பியது ? ராஜகுமாரை விடுதலை செய்ய வாங்கிய கோடிகளில் சில நக்ஸலைட்டுகளுக்குச் சென்றனவா ? நக்ஸலைட்டு என்றாலே முற்போக்கு, உரிமைக்குரல் என்று வெறும் வாயை ஆட்டுபவர்கள், அவல் கொடுத்தாற்போல மெல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

வீரப்பன் பிரச்னை என்பது அரசியல் தலைவர்களின் ஆதரவில்லாமல் இதுவரை வளர்ந்திருக்காது என்பது உண்மை. ஆனால் அதே அரசியல்வாதிகளால்தான் இதனையும் தீர்த்துவைக்கமுடியும்.

தமிழ்நாடு பத்திரிக்கைகள், யாரெல்லாம் வீரப்பன் காரணமில்லை என்று சொல்வார்கள் என்று தேடிப்பிடித்து ‘பரபரப்பு செய்தி ‘ பண்ணிக்கொண்டிருக்கின்றன. வீரப்பன் நாகப்பாவை கடத்திக்கொண்டு செல்லாமல் இருந்தால் ஏன் இந்த விவாதம். முழு முதல் காரணம் வீரப்பன் தான். இதில் 40 கோடி கொடுத்தும் நாகப்பாவை விடுவிக்க வேண்டும் என்று அக்கறைப்படக்கூடியவர்கள் அவரது குடும்பத்தினர் மட்டுமே இருக்க முடியும், மற்றவரெல்லாம் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிறவர்கள். இதில் தமிழ்நாடு கர்னாடகம், தமிழ்நாடு போலீஸ் தான் காரணம், கர்னாடக போலீஸ்தான் காரணம் என்று பேசுவதெல்லாம் வீண் பேச்சு. போலீஸ் தாக்குதலில் நாகப்பா இறந்திருந்தாலோ, அல்லது மருத்துவ உதவி கிட்டாமல் சர்க்கரைவியாதி காரணமாக இறந்திருந்தாலோ, அது தமிழ்நாட்டு மக்களுக்கும், கர்னாடக மக்களுக்கும் தேவையில்லாத விஷயம்.

****

karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்