இந்த வாரம் இப்படி – செப்டெம்பர் 23, 2000

This entry is part [part not set] of 10 in the series 20000924_Issue

சின்னக்கருப்பன்


***

மத்தியில் மார்க்ஸிஸ்ட் கட்சி

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மிகப்பெரும் புரட்சி நடக்க இருக்கிறது. அதாவது ஜோதி பாசு அவர்கள் கேரளாவிலிருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கம்யூனிஸ்ட் கட்சி இனிமேல் மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்குமெனில் அதனை மறுதலிக்கப்போவதில்லை என்று முடிவு செய்து விட்டதாம். இதை அவர் மிகப்பெரும் போர்முறை மாற்றமாக கூறியிருக்கிறார்.

எனக்கு ஏதோ ஒரு தமிழ்ப் பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது. அதை எழுதினால் திண்ணை ஆசிரியர் கோபித்துக் கொள்வார்.

***

மானத்தைக் காப்பாற்றிய மல்லேஸ்வரி

ஒலிம்பிக்ஸில் பளுதூக்கும் போட்டியில் கரணம் மல்லேஸ்வரி வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார். அவரும் அவரது குலத்தாரும் சுற்றத்தாரும் அவரது நண்பர்களும் அவரது கோச்சும் அவரது தாயாரும் தந்தையாரும் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்.

***

தலைவர் வாழ்க ! பஸ்கள் ஒழிக !!

தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி பெற்ற மக்கள் தெருவிலே பஸ்களை கொளுத்தி அடித்துக் கொள்கிறார்கள். ஓட்டுப் போட்ட மக்கள் தலையிலே அடித்துக் கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் ராமதாஸ் மீது நடந்த ‘தாக்குதலு ‘க்காக பஸ்கள் கொளுத்தப் படுகின்றன. பாவம் பஸ்கள். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் ராமதாஸ், ‘ இது வேறே யாரோ செய்து விட்டு பா ம க-வின் மீது பழி போடிகிறார்கள் ‘ என்கிறார். தலைவர் மீது தமக்குள்ள அபிமானத்தைக் காட்ட இந்த ‘மக்களு ‘க்குக் கிடைத்த ஒரே வழி கொளுத்து பஸ்ஸை . வாழ்க தமிழ்ப் பண்பாடு.

***

வாஜ்பாய் இந்தியில் பேசினார்

இந்தியப் பிரதமர் வாஜ்பாயி அமெரிக்க வெள்ளை மாளிகை முன்னால் உள்ள புல்வெளியில் நடந்த பெரும் நிகழ்ச்சியில் இந்தியில் பேசினார். வாழ்க அவரது இந்திப் பற்று. ஆனால் அவர் அதை இந்தி வெறித்தனமாக கையாளவில்லை. அதுதான் ஆச்சரியம். இந்தியாவின் பரந்த வேற்றுமைகளில் ஒன்றாகவும் அந்த வேற்றுமைகள் போற்றப்படுவதன் அடையாளமாகவும் இந்தி மொழியில் பேசினார். ஆகவே ப.சிதம்பரம் இந்தியப் பிரதமராக ஆகி அவர் வெள்ளை மாளிகையில் தமிழில் பேசுவதை கேட்க இப்போதிருந்தே நான் ஆவலாக இருக்கிறேன். (என்ன செய்வது அகில இந்திய அளவில் ஆசை உள்ள ஒரே தமிழராக அவர் ஒருவர் தான் இருந்தார். இப்போது அதுவும் இல்லை. முரசொலி மாறன் மத்தியில் இருக்கிறாரே தவிர அகில இந்திய கட்சியில் உறுப்பினராக இல்லையே)

**

அமெரிக்காவில் தர்மாம்பாள்

தார்மா அன்ட் க்ரெக் என்று அமெரிக்க தொலைக்காட்சியில் ஒரு தொடர் நகைச்சுவை நாடகம் வருகிறது. கவனிக்கவும் அமெரிக்க உச்சரிப்பில் தர்மா என்னும் தர்மாம்பாள் தான் தார்மாவாகி விட்டது. அமெரிக்காவின் 60களில் மிகவும் பிரபலமாக இருந்த counter-cultureஇன் விளைவு வுட்ஸ்டாக் என்றும், ரவிஷங்கரின் இசை என்றும், ஹரே ராமா என்றும் யோகா என்றும் பிரபலமான இந்திய தாக்கம், இன்று அமெரிக்க சிந்தனையில் ஊறி எந்த இந்தியரும் இல்லாமல் தானே இயங்குகிறது. அதன் விளைவே, தார்மாவின் 60களின் கலாசாரத்திலேயே தங்கிவிட்ட குடும்பம். தார்மா பகலில் நாய்களை பழக்குகிறாள். இரவில் யோகா சொல்லித்தருகிறாள். அவளது காதலன்-கணவன் க்ரெக் ஒரு வக்கீல் (தார்மாவின் குடும்பத்தினரின் ஈடுபாடுகளுக்கு மிகவும் எதிர்மாறான வேலை, குடும்பம், பெற்றோர்). பணம் செல்வாக்கு ஆடம்பரம் என்று இருக்கும் க்ரெக்கின் குடும்பத்தாரும் யோகா, எளிமை, அஹிம்சை, சந்தோஷம் என்பதை குறிக்கோளாக இருக்கும் தார்மாவின் குடும்பத்தாருக்கும் இடையே நடக்கும் விஷயங்களை நகைச்சுவையாக சொல்லும் இந்த நாடகம் அமெரிக்காவில் ஓடோ ஒடு என்று ஓடுகிறது. சமீபத்தில் சிறந்த நகைச்சுவை நாடகம் என்று பரிசும் பெற்றிருக்கிறது. தன்னைத் தானே கிண்டல் செய்துகொள்கிற முறையில் சிரிப்பும் , அங்கங்கே கொஞ்சம் யோசிக்கவும் இடம் கொடுக்கிறது இந்தத் தொடர்.

*

அமெரிக்க நாட்டுக்கு நல்லது செய்த நாடார்

ரால்ஃப் நாடார் (Ralph Nader) அமெரிக்காவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே நல்லது செய்த ஒரு தனிமனிதர். அவர் இப்போது அமெரிக்க பச்சை கட்சியின் (Green partyதான்) சார்பில் அமெரிக்காவுக்கு ஜனாதிபதி ஆவதற்கு நிற்கிறார்.

சென்ற வெள்ளிக்கிழமை அவர் மினசோட்டாவில் டார்கெட் மையத்தில் பேசினார். அமெரிக்காவிலும் நம்நாட்டைப்போல் அரசியல் பேச்சைக் கேட்பதற்கு பணம் கொடுத்துதான் ஆள் சேர்ப்பார்கள். ஆனால் இவருடைய பேச்சைக் கேட்பதற்கு மக்கள் ஆளுக்கு 7 டாலர் அனுமதிக் கட்டணம் கொடுத்து 17000 பேர் அவர் பேசியதைக் கேட்டார்கள். ஆச்சரியப்பட்டேன்!

ரால்ஃப் நாடார் பற்றி விவரமாக ஒரு கட்டுரை எழுத வேண்டும். அதற்கு முன் ஒரு சிறு குறிப்பு. அமெரிக்க முதலாளிகள் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர்; ஆட்டிக்கொண்டிருக்கிறவர் இந்த ரால்ஃப் நாடார். GE, GM, General Dynamics, Ford போன்ற பெரும் முதலாளிகள் தங்கள் பொருள்களால் மக்களுக்கு ஏதாவது உபத்திரவம் நேர்ந்தால் அது கண்டுகொள்ளாமல் இருந்ததை மாற்றிவர் இவர்தான். சமீபத்தில் போர்டு கம்பெனி தயார் செய்யும் வண்டியில் டயர் தானாக கழண்டு போய் அடிக்கடி விபத்துகள் நடந்து பல பேர் இறந்தார்கள். ஆனால் டயர்களை திரும்பப் பெற்றுக்கொண்டு நஷ்ட ஈடு வழங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் செய்தார்கள். இவ்வாறு நிவாரணம் செய்ததற்கு ரால்ஃப் நாடாரே காரணம் (அவர் வழக்கு போடுவார் என்று பயந்தே நடந்த பல விஷயங்களில் அதுவும் ஒன்று)

அவருடன் துணை ஜனாதிபதி வேட்பாளராக நிற்பவர் லாடியூக் என்னும் ஒரு செவ்விந்திய இனப்பெண்மணி.

***

பாகிஸ்தானில் வேகமாகும் பிரிவினைவாதம்

பாகிஸ்தான் வெகு வேகமாக உடையத் துடிக்கிறது. கடந்த செப்டெம்பர் 17இல் மொஹாஜிர் குவாமி மூவ்மெண்ட் என்ற MQM ( பிரிவினையின்போது இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் சென்று தங்கியதால் அங்கிருக்கும் மக்களால் அவமரியாதைக்குள்ளாகி அதனின்று மீள இந்திய முஸ்லீம்கள் ஆரம்பித்த கட்சி) தாங்கள் பெரும்பான்மையாக உள்ள கராச்சி மற்றும் சில பகுதிகளை தனிநாடாக அறிவிக்கும் என்று பேசினார்கள். அங்குள்ள பலுச்சிஸ்தான் பகுதி, சிந்துப்பகுதி தலைவர்கள் பேசி ஒட்டுமொத்தமாக எல்லோரும் சேர்ந்து தனித்தனியாக வழி பார்த்துக் கொண்டு போய்விடலாம் என்று ஒரு வருஷம் தள்ளிப் போட்டிருக்கிறார்கள்.

அங்கிருக்கும் ராணுவ அரசு அங்கிருந்த அனைத்து பாகிஸ்தான் கட்சிகளை ஊழல் வாதிகள் என்று சொல்லி பெனாசிரை நாடுகடத்தியும், நவாஸை சிறைக்குள் போட்டும் இந்த பிரிவினை வாதிகளை முன்னுக்கு கொண்டுவந்திருக்கிறது. இந்த ஆபத்தை இந்தியர்களோ பாகிஸ்தானியரோ புரிந்து கொண்டிருக்கிறார்களா என்பது தெரியவில்லை.

சரியாக சமாளிக்கவில்லை என்றால் இந்தியா ஐந்து பாகிஸ்தான்களை சமாளிக்க வேண்டி வரும்.

***

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்