இந்த வாரம் இப்படி – சூலை 28 2002 (ஜெயலலிதாவுக்கு அழைப்பு, கிருஷ்ணகாந்த், பாகிஸ்தான், என் ராம்)

This entry is part [part not set] of 29 in the series 20020728_Issue

மஞ்சுளா நவநீதன்


ஜனாதிபதி பதவியேற்பு: ஜெயலலிதாவிற்கு அழைப்பு ஏன் இல்லை ?

ஜனாதிபதி பதவியேற்பிற்கு ஏன் ஜெயலலிதாவிற்கு அழைப்பு இல்லை ? ஜெயலலிதா பா ஜ கவிற்கு நெருக்கமாக இல்லாமலிருக்கலாம். ஆனால் ஆறு கோடித் தமிழ் மக்களின் பிரதிநிதி. அவருக்கு அழைப்பு அனுப்பாதது தமிழ் நாட்டிற்கே ஒரு அவமதிப்பு. இதற்கு ஜெயலலிதா தெரிவித்த கண்டனம் எல்லோரும் இணைந்து கொள்ள வேண்டிய ஒன்று.

கருணாநிதி ஜெயலலிதாவிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருப்பது மிகுந்த ஆறுதலை அளிக்கிறது. இது போன்று தமிழ் நாட்டைப் பாதிக்கும் பிரசினைகளுக்கு, கட்சி சார்பைத் தாண்டி ஒற்றுமையாய்க் குரல் கொடுத்தால், தமிழ் நாட்டிற்கும் நல்லது. அரசியல் நாகரிகத்திற்கும் நல்லது.

***

கிருஷ்ண காந்த் : ஒரு விஞ்ஞzaானப் பார்வை கொண்ட அரசியல் வாதி.

ஒரு விஞ்ஞானி ஜனாதிபதியாகிவிட்டார் என்று அப்துல் கலாம் ஜனாதிபதியான போது பலரும் பேசினார்கள். காலஞ்சென்ற கிருஷ்ணகாந்த விஞ்ஞானப் பயிற்சி கொண்ட தொழில் நுட்பப்பின்னணி கொண்டவர் என்பது பெரிதும் பேசப் படுவதில்லை. விஞ்ஞானக் கொள்கைகளை வகுப்பதில் இந்திய அரசில் மிக முக்கிய பங்கு வகித்தவர் கிருஷ்ண காந்த்.

மக்கள் உரிமை மற்றும் சிவில் சுதந்திரக் கழகத்தைத் தொடங்கியவர். அவர் ஜெயப்பிரகாஷ் நாராயணைத் தலைவராய்க் கொண்டு தொடங்கப்பட்ட அந்த அமைப்பு இன்று பலவிதங்களில் மனித உரிமைமீறல்களைப் பற்றிப் பேசி நிவாரணம் காண முயல்கிறது. அவசர நிலையின் போது எதிர் இயக்கங்களில் தீவிரமாய் உழைத்தவர்.

அவர் மறைவுக்கு அஞ்சலி.

***

அமெரிக்கா, இந்தியா அரசியல் கைதிகள்

இந்தியாவில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி அமெரிக்கா கூறியிருக்கிறது. முக்கியமாக காஷ்மீர அரசியல் கைதிகளை தேர்தலுக்கு முன்னர் விடுவிக்கக் கோரியிருக்கிறது.

(பதிலடி கொடுக்கவேண்டுமென்றால், செவ்விந்தியர்களின் தலைவரான லியனார்ட் பெல்டியரை விடுவியுங்கள் என இந்தியா பதிலுக்குக் கோரியிருக்கலாம். )

அதற்கு, இந்தியாவின் செய்தித்தொடர்பு அதிகாரியான நிருபமா ராவ் அவர்கள், இந்தியா அரசியல் கைதிகளை சிறைப்படுத்துவதில்லை எனவும், சட்டத்தை மீறும் குற்றவாளிகளையும், இந்தியாவின் தேசிய நலன்களுக்கு முரணாக நடந்து கொள்பவர்களையும், பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டிருப்பவர்களையும் தான் சிறைப்படுத்தி இருக்கிறது என பதில் தந்துள்ளார்.

முதலும் கடைசியும் சரி, ஆனால் இரண்டாவதாக குறிப்பிடப்படும் காரணம், சட்டரீதியான காரணமாக இருக்க முடியுமா என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஒரு ஆளும் கட்சி நினைத்தால், எல்லா எதிர்கட்சிகளையும் அந்த இரண்டாம் காரணத்தின் கீழ் கொண்டுவரலாம் என்பதை யோசித்துப் பாருங்கள். போடாவின் கீழ் பலர் சிறைப்பட்டிருப்பதை நியாயப்படுத்தவே இப்படி கூறி இருக்கலாம்.

ஆயினும், இது தவறான பேச்சு. தவறான முன்னுதாரணம், தவறான கொள்கை.

***

சீனப் பிரசாரத்திற்கு என், ராம் உதவி

ஃப்ரண்ட்லைன் இதழில் திபெத் பற்றி என் ராம் ஒருதலைப் பட்சமாகவும், சீனாவின் அதிகாரபூர்வமான நிலைபாட்டை அப்படியே அடியொற்றி எழுதியிருந்ததை முன்பே ‘திண்ணை ‘யில் பதிவு செய்திருக்கிறேன்.

இப்போது என் ராம் எப்படி சீனப் பிரசாரத்திற்குத் துணை போகிறார் என்று பார்க்க சந்தர்ப்பம் ஒரு நண்பர் மூலம் கிடைத்தது. சீனாவின் ‘பீப்பிள்ஸ் டெய்லி ‘ யில் வெளிநாட்டார் எப்படி திபெத்தைப் பார்க்கிறார்கள் என்பது பற்றி ஒரு ‘கட்டுரை ‘ (என்றாலே பிரசாரக்கட்டுரை தான், சீனாவைப் பொறுத்தமட்டில் என்று சொல்லத் தேவையில்லை.) வெளிவந்தது. இந்தக் கட்டுரை உலகெங்கும் உள்ள சீன தூதுவரகங்களின் வெளியீடுகளிலும், திபெத் பற்றி சீனா வெளியிடும் அதிகாரபூர்வமான வெளியிடுகளிலும் பிரதியெடுக்கப் பட்டு வெளியிடப் பட்டிருக்கிறது. இந்தக் கட்டுரையில் என் ராமின் பெயர் மிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப் பட்டிருக்கிறது. பெயர் என்று தான் சொல்ல வேண்டும் . என் ராமின் கருத்துகள் என்று சொல்ல முடியாது. திபெத்தில் சீனப் பிரதிநிதி எழுதிக் கொடுத்ததை அப்படியே தன் பெயரில் தானே அவர் வெளியிட்டார்.

அறுபதுகளிலும், எழுபதுகளிலும் ஒரு கூத்து நடந்ததுண்டு. அல்பேனியாவின் கம்யூனிஸ்ட் சர்வாதிகாரி என்வர் ஹோக்ஸாவும், வட கொரியாவின் கம்யூனிஸ்ட் சர்வாதிகாரி கிம் இல் சுங்க்கும் ஒரு நடைமுறையைக் கடைப் பிடித்ததுண்டு. ‘ நியூ யார்க் டைம்ஸ் ‘ போன்ற சர்வதேசப் பத்திரிகைகளில் , கிம் இல் சுங், என்வர் ஹோக்ஸாவின் சாதனைகள் என்று முழுப் பக்க விளம்பரத்தை அரசாங்கப் பணத்தில் இந்த சர்வாதிகாரிகள் வாங்குவார்கள். இந்த விளம்பரத்தில் எப்படி வட கொரியா , அல்பேனியா சுபிட்சமாய் இருக்கிறது என்று புள்ளி விவரங்கள் தரப்படும்.

இந்த விளம்பரங்களை அப்படியே வட கொரியாவிலும், அல்பேனியாவிலும் பத்திரிகைகளில் அரசாங்கள் வெளியிடும். ஒரே ஒரு மாறுதல் தான். விளம்பரம் இப்போது செய்தியாகிவிடும். உலகம் பூராவும் வட கொரியாவின் சாதனைகளையும், அல்பேனியாவின் சாதனைகளையும் மெச்சிக் கொள்வதான ஒரு பிம்பம் உருவாக்கப் பட்டுவிடும்.

யாருக்கும் வெட்கமில்லை என்று தான் சொல்லவேண்டும்.

கீழே இருப்பது சீன இணையப்பக்கங்களில் இருக்கும் செய்தி. மொழி பெயர்ப்பு நான். கீழே இது இருக்கும் சில இணையப்பக்கங்களின் முகவரிகள்.

***

வெளிநாட்டினரின் பார்வையில் திபெத்

மூன்றாம் முறை திபெத்துக்கு வரும், குடெமாலா நாட்டைச் சார்ந்த பைரண் லியோனல் ஓலயோ, ‘உலகத்தின் கூரை ‘ஆக இருக்கும் திபெத்தின் அழகினால் மட்டுமன்றி, அங்கு நடைபெற்றுவரும் பெரும் மாறுதல்களையும் கண்டு மிகவும் புல்லரிப்பு அடைந்தார்.

‘1994இல் முதன் முறையாக வந்தபோது, போக்குவரத்துகூட சரியாக இல்லை. இன்று நிறையவும், அகலமாகவும் நிறைய சாலைகள் இருக்கின்றன ‘ என்று பைரன் கூறினார். இவர் திபெத் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருக்கிறார்.

5 வருடங்களுக்கு முன்னர், இந்த தனிப்பட்ட சிறப்புடைய பிரதேசத்தின் தனிப்பட்ட கலாச்சாரத்தால் ஆகர்ஷிக்கப்பட்டு இங்கு வந்த பைரன், திபெத்திய மொழியை லாஷாவில் தன்னுடைய அமெரிக்க மனைவியான கே-உடன் கற்றுக்கொள்ள ஒரு ஆசை கொண்டார். அது சென்ற மார்ச்சில் நிறைவேறியது.

திபெத் பல்கலைக்கழகத்தில் இருக்கும் பல வெளிநாட்டு மாணவர்கள் பைரனைப் போலவே அனுபவமடைந்திருக்கிறார்கள். பல்கலைக்கழக அலுவலர்களைப் பொறுத்த மட்டில், வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 74. இது சமீபத்திய வருடங்களில் ஒரு சாதனை.

சில மாணவர்கள் தன்னுடைய பட்டப்படிப்பு முடிந்ததும், திபெத்திலேயே தங்கிவிடவும் முடிவு செய்திருக்கிறார்கள். ஜான் நைஸ் என்ற ஜெர்மானியர், 1995ல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, இப்போது லாசாவில் வியாபார நிறுவனம் நடத்திவருகிறார்.

‘திபெத்துக்கு நிறைய வெளிநாட்டினர் வருகிறார்கள். பிராந்திய கலைப்பொருட்களை உருவாக்குவதிலும் விற்பதிலும் என்னுடைய நிறுவனம் இப்போது ஈடுபட்டிருக்கிறது ‘ என்று நைஸ் கூறினார்.

திபெத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் எண்ணிக்கை 2000இல் 1.36 மில்லியனாக இருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இது சென்ற வருடத்தைவிட 37 சதவீதம் அதிகம்.

ஜான் அவர்கள்து நிறுவனத்தில் இப்போது 24 வேலையாட்கள் பணிபுரிகிறார்கள். சமீபத்தில் அவர் 360000 அமெரிக்க டாலர் அளவுக்கு தன்னுடைய முதலீட்டை அதிகப்படுத்தியிருக்கிறார். ‘முதலீடு சூழல் இங்கு நன்றாக ஆகிவருகிறது. எதிர்கால சந்தையின் நிலைமையும் சிறப்பாக இருக்கிறது ‘ என்று கூறுகிறார்.

தன்னுடைய மனைவியையும் இரு மகன்களையும் லாசாவுக்கு அழைத்துவந்த ஜான், கணிணி விற்பனைக்கும், சூரிய சக்தி உபகரணங்களை விற்பதற்கும் இன்னொரு நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்.

தனிச்சிறப்புள்ள கலாச்சாரத்தாலும், பிராந்திய அழகாலும், ஏராளமான அரசாங்க பயணிகளை இங்கு வரவழைத்துக்கொண்டிருக்கிறது திபெத். சோய்னாம் என்ற திபெத்திய வெளியுறவுத் துறை இயக்குனர், சென்ற வருடம் சாதனை அளவுக்கு வெளிநாட்டினர் இங்கு வந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார். 600 வெளிநாட்டு அரசாங்க அலுவலர்களும், 1000 வெளிநாட்டு நிபுணர்களும் வந்திருக்கிறார்கள் எனக் கூறுகிறார்.

காரி நேல் என்ற ஆஸ்திரேலிய பாராளுமன்ற துணை சபாநாயகர், கட்டுமான பணிகளிலும், பிராந்திய மக்களின் வாழ்க்கைத்தரத்திலும் இருக்கும் வெகுவான முன்னேற்றத்தை பாராட்டுகிறார். நேல் அவர்களைப் பொறுத்தமட்டில், ‘ஈடு இணையற்ற ‘ மாற்றங்கள் 1950க்குப் பின் இந்த பீட பூமியில் நடந்திருப்பதாகக் கூறுகிறார்.

இந்தியாவின் ‘ப்ரண்ட் லைன் ‘ பத்திரிக்கையின் ஆசிரியர் என். ராம், தன் திபெத் பிரயாணத்துக்குப் பின்னர், திபெத் பற்றிய முழு விவரத்தையும் தன் பத்திரிக்கையின் கவர் ஸ்டோரிக்காக தந்தார். இதில் தன் வாசகர்களுக்காக, பொருளாதாரம், மக்கள்தொகை, மத சுதந்திரம், மனித உரிமைகள் நிலைமை ஆகிய அனைத்தையும் வெளியிட்டிருந்தார்.

தன்னுடைய கட்டுரையில், சீன அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட திபெத் முன்னேற்றத் திட்டங்கள் காரணத்தால், எல்லாத் துறைகளிலும், பொருளாதார அதிவேக முன்னேற்றத்தைக் கண்டுவருகிறது என்பதை குறிப்பிட்டார்.

அவரது கட்டுரை, திபெத்தியர்கள் ஏராளமான மதச்சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள் என்பதையும், சீன அரசாங்கங்கள் கலாச்சார பழமை பொருட்களை பாதுகாக்கவும், அவைகளைச் சேகரிக்கவும், புகழ்பெற்ற புத்த மறைகளையும் இலக்கியங்களையும் பிரசுரிக்கவும் நிறைய பணம் ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள் என்பதையும் குறித்திருந்தது.

டுல்லயா சிரிகுல்பிபாடானா என்ற தாய்லாந்து பத்திரிக்கையாளர் குழுவின் தலைவர் திபெத் பற்றிய வதந்திகளை மறுத்தார்.

‘திபெத் விஜயத்தின் போது, ‘திபெத் என்பது சுதந்திரம் இல்லாத மனித உரிமைகள் இல்லாத மோசமான பிரதேசம் ‘ என்ற அறிக்கைக்கு முற்றிலும் மாறான விஷயங்களையே கண்டோம் ‘ என்று கூறினார். ‘நாங்கள் பார்த்ததெல்லாம் அழகான திபெத் ‘ என்றும் கூறினார்.

****

http://english.peopledaily.com.cn/200108/01/eng20010801_76237.html

http://www.tibet.ca/wtnarchive/2001/8/1_4.html

http://www.china.org.cn/english/2001/Aug/16868.htm

http://www.cctv.com/english/zhuanji/xizhang/news/0802.html

http://www.chinese-embassy.no/eng/16277.html

http://www.chinese-embassy.org.uk/eng/16277.html

***

***

manjulanavaneedhan@yahoo.com

***

Series Navigation