இந்த வாரம் இப்படி – சூன் 30 2001

This entry is part [part not set] of 17 in the series 20010629_Issue

மஞ்சுளா நவநீதன்


கருணாநிதி கைது. ஆச்சரியத்துக்கு என்ன இருக்கிறது ?

1.32 கோடி தமிழக வாக்காளர்கள் எதற்காக ஜெயலலிதாவின் வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போட்டார்களோ அது நிறைவேறிவிட்டது. அவர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தரும்படிக்கு, நள்ளிரவில் கதவை உடைத்து, கருணாநிதியை அடித்து தூக்கிக் கொண்டுவந்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். பெருவாரியாக அதிமுகவுக்கு ஓட்டுப் போட்ட தமிழக மக்கள் சந்தோஷத்துடன் சன் டிவியில் கருணாநிதி அடிபடுவதையும், மாறன், டி ஆர் பாலு போன்ற மத்திய மந்திரிகள் அடித்து சிறைக்குக் கொண்டு செல்லப்படுவதையும் பார்த்து குதூகலிக்கிறார்கள். அவர்கள் எதற்காக ஓட்டுப் போட்டார்களோ அது நிறைவேறிவிட்டது. தமிழக மக்கள் பட்டாசு வெடித்து இதை கொண்டாடிய படங்கள் வெளிவந்திருக்கின்றன. பிபிஸி வலைப்பக்கத்தில் இந்தப்படங்கள் இருக்கின்றன.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு அல்லவா ?

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த போது, ஒரு மாநில எதிர்க்கட்சி இப்படி மத்திய மந்திரிகளை அடித்து கைது செய்திருந்தால் அந்த மாநில அரசு மின்வேகத்தில் கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்பட்டிருக்கும். இது கையாலாகாத தேசிய முன்னணி அரசு. அதைவிடவும், மாநில உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று நினைக்கும் அரசு. இப்போது ஜெயலலிதா அரசு கலைக்கப்படாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் அது ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போட்ட 1.32 கோடி தமிழக வாக்காளர்களின் உணர்வை மதிக்க வேண்டும் என்பது இருக்கலாம்.

தெளிவாக இப்போது ராமதாசும், மூப்பனாரும் கைது செய்தது சரிதான், கைது செய்த போலீஸ்காரர்கள் அத்து மீறி இருக்கலாம் என்று பேசுவதும் ஆச்சரியமானதல்ல. சோவும், டி என் சேஷனும் இதே போல தீவிரவாதம் நசுக்கப்படுகிறது என்று சந்தோஷம் கொள்ளலாம். ஜெயகாந்தன் ஜெயலலிதாவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அவரும் கருணாநிதி எதிர்ப்பில் தீவிரமானவர். அவரும் இந்த காட்சியைப் பார்த்து எதிர்ப்பார்த்தது நடந்துவிட்டது என்று சந்தோஷப்படலாம். தினபூமி என்ற பத்திரிக்கை விலாவாரியாக ஜெயலலிதாவை ஆதரித்து செய்து வெளியிடுகிறது. இவை எல்லாமே ஆச்சரியமானதல்ல. மதச்சார்பற்ற கூட்டணி என்று ஜெயலலிதா கூட்டணியை ஆதரித்த இடதுசாரிகள், கம்யூனிஸ்ட் கட்சி கார்டு வைத்திருக்கும் இந்து என் ராம் போன்றோர் அனைவரும் போல்பாட் அரசாங்கம் வருவதற்கு எங்களால் ஆன உதவி என்று சந்தோஷப்படலாம்.

ஆக இதில் வருத்தப்படுபவர்கள், வெறும் 1 கோடி தமிழக வாக்காளர்கள் மட்டுமே. அவர்கள் சிறுபான்மையினர். சிறுபான்மையினரின் உணர்வுகளை மதிப்பது என்பது நமது அரசியல் சட்டத்தில் இல்லை. சிறுபான்மையினர் நடத்தும் பந்தை இரும்புக்கரம் கொண்டு அதிமுக அரசு நசுக்கி அதிமுகவுக்கு ஓட்டு அளித்த பெரும்பான்மையினரைக் காப்பாற்றும் என்று நம்புவோம்.

****

கே வி மகாதேவன் மறைவு

சினிமா இசை அமைப்பாளர்களில் இளையராஜாவுக்கு முன்பு என்று ஒரு சகாப்தம் என்று வைத்துக் கொண்டால் அதில் முக்கியமாய்ப் பெயர் சொல்ல வேண்டியவர் கே வி மகாதேவன். அவருடைய பாணி பரீட்சார்த்தமானது என்று சொல்ல முடியாது. ஆனால் கிளாஸிகல் வழியைச்சற்று ஜனரஞ்சகப் படுத்தியவர் என்று சொல்லலாம். அவருடைய சங்கராபரணம் பாடல்களுக்கு இது ஒரு விமர்சனமாகவே வைக்கப்பட்டதுண்டு.

சங்கராபரணம் பாடல்களும், படமும் தமிழ் நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது இன்னொரு ஆறுதலான விஷயத்தையும் நிரூபித்தது. தமிழ் நாட்டு மக்களை மற்றக் கலாசாரங்களுக்கு எதிராக உசுப்பி விட்டுக் கொண்டே இருக்கிற மாதிரி இனவாத அரசியல் தலைவர்கள் செயல் பட்டாலும் கூட, அதைப் பொருட் படுத்தாமல் தம் பரந்த மனப்பான்மையை மக்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். சங்கராபரணம் வெற்றி இதன் மற்றொரு உதாரணம்.

**********

ஐக்கிய நாடுகள் சபையின் சிறையில் மிலோசெவிச்

யுத்தக் குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையில் மிலோசெவிச் அடைக்கப் பட்டிருக்கிறார். யூகோஸ்லாவியாவில் கோசோவோ மக்கள் மீது , போர்க்காலத்தில் அக்கிரமம் புரிந்ததாய் அவர் மீது வழக்கு.

இது போல் குற்றம் சாட்டுவது என்பது வெற்றிபெற்றவர்களின் வழக்கமாகி விட்டது. மிலோசெவிச் குற்றம் செய்யாதவனல்ல. ஆனால் இன்னும் எத்தனை குற்றவாளிகள் வெளியே இருக்கிறார்கள். அமெரிக்க வெளியுறவி அதிகாரி கிஸிங்கரைக் கூட போர்க்காலக் குற்றவாளி என்று குற்றம் சாட்டி ஒரு நீண்ட கட்டுரை ஒரு அமெரிக்க ஏட்டில் வந்தது. ரஷ்யா மிலோசெவிச்சை அடைப்பதை விரும்பவில்லை. வெற்றி பெற்றவர்கள் தப்பிப்பதற்கும், தோல்வியுற்றவர்களைச் சிக்க வைப்பதற்கும் தான் இது பயன் பட்டு வருகிறது.

வியத் நாமில் நடந்தவிஷயங்களுக்கும், ஆஃப்கானிஸ்தானில் ரஷ்யா செய்தவற்றிற்கும், தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசு செய்ததற்கும் எந்த விசாரணையையும் யாரும் இன்னும் நடத்திட வில்லை தமிழர் மீது போர்க்குர்றம் புரிந்தவனை ஆஸ்திரேலியாவில் தூதராய் நியமித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழர்களின் குரல்கள் எழுந்தன. இஸ்ரேலியப் பிரதமர் ஏரியல் ஷாரன் மீதும் இப்படிக் குற்றம் சாட்டி விசாரிக்க பாலஸ்தீனிய அமைப்புகள் முயன்று வருகின்றன.

உலகம் ஒருமித்த குரலில் இது போன்ற குற்றங்களுக்கு எதிராகக் குரல் எழுப்புவது அரிதாகவே இருக்கிறது. தன் அரசியல்/இனம்/ நாடு/மதம்/ சாதிக்காரன் தப்பு செய்திருந்தால் அது குற்றமல்ல. மற்றவர்கள் குற்றம் செய்தால் தான் என் குரல் எழும்பும் என்பது தான் இன்றைய வழமுறை.

******

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்