இந்த வாரம் இப்படி – ஏப்ரல் 15, 2001

This entry is part [part not set] of 14 in the series 20010415_Issue

மஞ்சுளா நவநீதன்


***

தேர்தலோ தேர்தல்

புதிய நீதிக் கட்சிக்கு ஐந்து இடங்கள். (ஜெயபாலன் கோட்பாட்டை உரசிப் பார்க்கலாம். ஏன் பெயரில் தமிழ் இல்லை ? முதலியார் கட்சி என்று ஏன் சொல்ல்க் கொள்வதில்லை. குழூஉக் குறியிலேயே ஏன் இந்தச் சாதிக்கட்சிகள் காலம் தள்ளுகின்றன ?)

இன்னொரு எம் ஜி ஆர்-காலடிக் கட்சி உடைகிறது. (எந்தக் கட்சி என்று யாருக்கும் கவலை வேண்டாம்.)

வாழப்பாடி கட்சி காங்கிரஸில் சேருவார் (சூனியம் + சூனியம் = பெரும் சூனியம்,.)

சிதம்பரம் தி மு க-விற்குப் பிரசாரம் செய்வார். ( த மா க-வின் பெரும் ஆதரவு அலையில் எந்த அலை இவருடையது ?)

ம தி மு க எல்லா இடங்களிலும் போட்டி . (பா ஜ க-வை எதிர்த்து மட்டும் போட்டி இல்லை. பெரியார் பெயர் கூறும் கட்சிகள் மாறி மாறி பா ஜ க-வை ஆதரிக்கப் போட்டி)

ஜெயலலிதா இரண்டு தொகுதிகளில் போட்டி. (ஒன்று போனால் இன்னொன்று. பேசாமல் எல்லாத் தொகுதிகளிலும் புரட்சித் தலைவியே போட்டியிட்டு விடலாம்.)

தாமரைக்கனியின் மகன் அ தி மு க சார்பில் போட்டி . (அரசியல் வாரிசுகளைக் கொண்டே அரசியல் எதிரிகளை எப்படி அழிப்பது என்று ஜெயலலிதாவிற்குத் தெரியாதா என்ன ? ஈ வி கே சம்பத்தின் மனைவியை ஏவிவிட்டு தன் மகனைத் தாக்கச் சொன்னவர். ஓ அது பழைய கதை இல்லையா ? இப்போது அம்மாவும் பையனும் ஒரே அணியில்.)

***

அமெரிக்காவிலிருந்து ஈரானிற்கு

அமெரிக்காவிலிருந்து நேராக ஈரான் சென்ற அமெரிக்கர் அல்லாத அரசியல் தலைவர் ஜஸ்வந்த் சிங் ஒருவராய்த் தான் இருக்க முடியும். மற்ற நாடுகளுடன் நட்புறவு வளர்த்துக் கொள்கிற தொடர்ந்த முயற்சியின் இன்னொரு படியாய் இது இருக்கிறது. ஈரானிற்கு உதவியளிக்கவும் இந்தியா ஒப்புக் கொண்டிருக்கிறது. கடன் அளிப்பதினால், சொந்த நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவது என்பது வளர்ந்த நாடுகளின் ஒரு முக்கியமான செயல் திட்டம் ஆகும். இதைப் புரிந்து கொள்கிற இந்திய அரசாங்கம் இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஆனால் ஜஸ்வந்த் வந்து விட்டுப் போன சுவடே அமெரிக்கப் பத்திரிகைகளிலோ, அமெரிக்க தொலைக் காட்சி நிலையங்களிலோ இல்லை. இதன் காரணம் , சீனாவுடன் அமெரிக்கா கொண்டிருந்த பிரசினை செய்திப் பரப்பை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது மட்டும் தான் என்று சொல்ல முடியாது. இந்தியா இன்னமும் அமெரிக்காவில் ‘செய்திக்கான தகுதி நிலை ‘யை அடையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சீனாவுக்கும் , இஸ்ரேலுக்கும் இருப்பது போன்ற செய்தி முன்னணி இடத்தை இந்தியா இன்னும் அடையவில்லை.

இருந்தாலும் இந்திய அரசாங்கத்தினர் இதையெல்லாம் கண்டுகொள்வதாகத்தெரியவில்லை. சூட்டோடு சூட்டாக, கிழக்கே மலாக்காவிலிருந்து மேற்கே சூயஸ் கால்வாய் வரை இந்தியபெருங்கடல் முழுவதும், இந்தியாவின் மேற்பார்வையில் விட்டுவிட்டு அமெரிக்கா இந்த இடங்களிலிருந்து நகர்ந்து கொள்ளவேண்டும் என்று கோலின் பவல் அவர்களிடம் ஜஸ்வந்த் சிங் தெரிவித்துவிட்டிருக்கிறார். அதிர்ச்சியிலிருந்து மீள கோலின் அவர்களுக்கும் புஷ் அவர்களுக்கும் சில வருடங்கள் பிடிக்கும் என்று தோன்றுகிறது.

வாய்பாயி அவர்களும் ஈரான் சென்று ஆஃப்கானிஸ்தானின் தாலிபான் விவகாரத்தை நோண்டி ஈரானும் இந்தியாவும் நண்பர்கள் என்று செருகிவிட்டு பாகிஸ்தான் வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டு வந்துவிட்டார்.

***

தணிக்கை வினோதங்கள்

காற்றுக்கென்ன வேலி : குற்றப் பத்திரிகை என்று தணிக்கை மறுக்கப் பட்ட படங்களின் எண்ணிக்கை கூடுகிறது. தணிக்கை என்பதே ஓர் அரசியல் ஆயுதம் தான். பல விதங்களில் தணிக்கையாளர்கள் அன்றைய அரசின் கொள்கையைப் பின்பற்றுபவர்களாய்த் தான் இருப்பார்கள். தமிழ்ப் படங்களில் தணிக்கை விமர்சனங்கள் பெரும்பாலும் செக்ஸ் சம்பந்தப் பட்ட காட்சிகளாய்த் தான் இருக்கும். ஈழப் போராட்டத்தை ஆதரிக்கிற மாதிரி வருகிறது என்பதால் ‘காற்றுக்கென்ன வேலி ‘க்கு இவர்கள் சான்றிதழ் வழங்க வில்லையாம். ‘தெனாலி ‘ ஈழப் போராட்டத்திற்கு எதிரானதா என்று தெரியவில்லை.

இந்த தணிக்கை என்பதே ஒரு பெரிய பம்மாத்து. தணிக்கை என்பதை விட்டுவிட்டு ஒவ்வொரு படத்தையும் எந்த வயதினர் பார்க்க தகுதியானவர்கள் என்பது மட்டும் திரைப்படத்துறையினரே தெரிவித்துவிட்டுப் போவதுதான் எல்லோருக்கும் மரியாதை.

***

இந்த வார சிரிப்புக்கு :

வாஜ்பாய் : பாரதீய ஜனதா கட்சி ஊழலை ஒழிக்கும்.

சோனியா : காங்கிரஸ் அதிகாரம் பதவி மோகம் கொண்டு அலையவில்லை.

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்