இந்த வாரம் இப்படி (ஜனவரி, 4, 2003) (இந்தப் பகுதி பற்றி, பர்தா கொலைகள், திராவிடத்வா)

This entry is part [part not set] of 37 in the series 20030104_Issue

சின்னக்கருப்பன்


முதலாவது, இந்த பகுதி ஏன் வெளிவருகிறது என்பது பற்றி.

இந்த பகுதி எழுத ஆரம்பிக்கப்பட்டதன் முக்கிய நோக்கமே, ஓரளவுக்காவது திண்ணையில் அந்த வார நிகழ்ச்சிகள் பற்றி விவாதத்தையோ, கருத்துக்களையோ எழுத வேண்டும் என்பதுதான். ஆசிரியர் கேட்டுக்கொண்டதற்கிணங்கி, வெகுகாலம் மஞ்சுளா அவர்கள் இந்த பகுதியை எழுதி வந்தார். ஒரு வாரம் இந்தப் பகுதி வரவில்லை என்றால், ஏன் இந்தவாரம் இப்படி பகுதி வரவில்லை என்று கேட்டு ஆசிரியருக்குப் பல கடிதங்கள் வருகின்றன. பலரும் விரும்பியோ விரும்பாமலோ படிக்கும் ஒரு பகுதியாக இது ஆகியிருக்கிறது. இதனை நான் தற்காலிகமாகவே எழுதி வருகிறேன். நான் ஓரளவுக்கு கன்சர்வேடிவ் ஆள் என்றாலும் எனக்கு வாய்ப்பு கொடுக்கும் திண்ணை ஆசிரியருக்கு நன்றி.

***

பர்தா கொலைகள்

சென்ற வாரம் காஷ்மீரில் நடந்த பர்தா போடாததற்காக முஸ்லீம் பெண்கள் படுகொலை பற்றி நான் ஏன் எழுதவில்லை என்று கோபத்துடனும், கோபமில்லாமலும் சில கடிதங்கள் எனக்கு வந்திருந்தன. இந்த வாரம், ஒரு கேரளா அமைச்சர், இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர், பொட்டு வைத்திருந்தது கேரளாவில் பெரும் சர்ச்சையாகவும், அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையாகவும் பேசப்பட்டிருக்கிறது. முஸ்லீம் இளைஞர் சங்கம் (சன்னி யுவ சங்கம்) இந்த கோரிக்கையை தீவிரப்படுத்தி, அவர் பிராயச்சித்தம் செய்யவேண்டும் என்று கேட்டிருந்தது. நானாக விரும்பி வைக்கவில்லை என்றும், பூஜாரிகள் வைத்துவிட்டார்கள் என்றும் அவர் விளக்கியதன் பின்னால் இது முடிவுக்கு வந்ததாக இந்து பத்திரிக்கை வெளியிட்டிருக்கிறது.

எனது சீக்கிய நண்பன் சென்னைக்கு மாற்றலாகி வந்ததன் முக்கியகாரணமே அவனுக்கு சிகரெட் மீதுள்ள பிடித்தம்தான். சென்னையில் ஒரு சினிமா தியேட்டருக்கு வெளியே சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த அவன், சென்னை வாழ் சீக்கியர்களால் தாக்கப்பட்டான். ரத்தமும் விளாருமாக கிடந்த அவனை என் நண்பர்கள் உயிர் காப்பாற்றினார்கள். மன வேதனையும் உடல் வேதனையும் தாங்க முடியாமல் சில நாட்கள் இருந்துவிட்டு பின்னர் அமெரிக்கா சென்றுவிட்டான்.

சென்னையில் என்னோடு பணிபுரியும் முஸ்லீம் பெண்கள் சமீபகாலமாக கறுப்பு பர்தா போட்டுக்கொண்டு அலுவலகத்துக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். என் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் அவர்களிடம் சென்று என்ன புதியதாக என்று கேட்டு வைத்தேன். விருப்பம் இல்லைதான், ஆனால் மசூதியில் கட்டாயப்படுத்துகிறார்கள் என்று சொன்னார்கள். இன்னொருவர் என்னைப் பிராண்டிவிட்டார். நீ பட்டை போட்டுக்கொண்டு ஆபீஸ் வருகிறாயே நான் ஏனென்று கேட்டேனா ? என்னை ஏன் கேட்கிறாய் என்று கேட்டார். (நான் விபூதி போட்டுக்கொண்டு ஆபீஸ் போவச்சொல்லி யாரும் கட்டாயப்படுத்தவில்லை. போடாமல் வந்தாலும் ஏன் போட்டுக்கொண்டுவரவில்லை என்று கேட்கப்போவதில்லை யாரும். போட்டுக்கொண்டு வந்தாலும் போட உனக்கென்ன அருகதை என்று கேட்கப் போவதில்லை)

ஒரு தனி மனிதரின் உடல் அவருக்குச் சொந்தமில்லை என்பது உறுதியாகச் சொல்லப்படுவதை அழுத்தமாய்த் தெரிவிக்கிறது. பிறப்பால் கிரிஸ்தவரான ஜேசுதாஸ் சபரிமலைக்குச் சென்றதால் அவரது குழந்தைகளுக்கு ஞானஸ்னானம் மறுக்கப்பட்டதை அவர் வருத்தத்துடன் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் (சாதாரண இந்துக்களுக்கு ஞானஸ்னானம் செய்ய ஆவலாக இருக்கும் கிரிஸ்தவ பாதிரிகள், விரும்பிய ஒருவரது குழந்தைகளுக்கு ஞானஸ்னானம் மறுப்பது, ஓரளவுக்கு ஜாதிப்பிரஷ்டம் என்ற ஆயுதத்தை பழங்காலத்தில் உபயோகப்படுத்திய இந்து ஜாதியினர் போலத்தானே ?). யார் எப்படி என்ன உடை உடுத்தவேண்டும் என்பதும், யார் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதும் மற்றவர்களால் ஒரு தனிமனிதனின் மீது திணிக்கப்படும்போது அது சமூக வன்முறையாக வெடிக்கிறது.

என்ன காரணத்தாலோ, சிறுபான்மையினர் உரிமையைப் பாதுக்காக்கிறேன் பேர்வழி என்று சிறுபான்மையினரைச் சேர்ந்த தனிமனிதர்களின் உரிமைகளை கவனிக்காமல் அது பற்றிப் பேசாமல் காற்றில் பறக்க விட்டுவிடுகிறோம். இதன் மூலம், சிறுபான்மை இனத்தின் பழமைவாதிகளுக்கு ஆதரவாக நின்று, அங்கு உரிமை இழக்கும் மக்களுக்கு ஆதரவு மறுத்து, அவர்களையும் இந்த பழமைவாதிகளின் பின்னேயே இருக்கும்படிக்கு வற்புறுத்திவிடுகிறோம்.

நான் இதனை அடிக்கடி எழுதிகிறேனா என்று எனக்கே ஒரு அசூசை இருக்கிறது. இது பொதுவாக அனைத்து மக்களிடமிருந்தும் கட்சி, ஜாதி, இன மத பேதமின்றி இன்னொரு தனிமனிதனின் உரிமைக்கு குரலாக வரவேண்டும். தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் குரல் வெறும் வயிற்று உணவுக்கு மட்டும்தான் என எடுத்துக்கொள்வது குறுகிய பார்வை. இன்றைக்கு நான் எந்த கட்சியை எதிர்க்கவேண்டும் என்று முடிவு செய்து, அந்த கட்சிக்கு உதவும் எந்த நிலைபாட்டையும் எடுத்துவிடக்கூடாது என்ற கங்கணம் அந்தந்த கட்சிகளுக்குத்தான் ஆதரவாகப் போகும் இறுதியில்.

***

திராவிடத்வா

ஒரு செய்தி எப்படி ஆங்கிலப் பத்திரிக்கைகளால் திரிக்கப்படுகிறது என்பதற்கு கலைஞர் கருணாநிதி சொன்ன திராவிடத்துவா வார்த்தை பரிணாமம் அடைந்ததுதான் அருமையான சாட்சி. மெமடிக்ஸ் ஆட்கள் இதனைப் பற்றி ஆராய்ச்சி செய்தால் பயனுண்டு. இது அப்பட்டமாக, தன்னுடைய கருத்தை கலைஞர் கருத்து மீது ஏற்றி, அதனைக்கொண்டு பாஜகவை அடிக்க ஆங்கிலப்பத்திரிக்கைகள், முக்கியமாக இந்து பத்திரிக்கை செய்த முயற்சிதான்.

நேரம் கிடைத்தால், ஆனந்த விகடனில் கலைஞர் சொன்னது, அது இந்துப்பத்திரிக்கையில் வெளிவந்தது, அது பின்னர் டைம்ஸ் ஆஃப் இந்தியா, டெலிகிராஃப் பத்திரிக்கையில் வெளிவந்தது ஆகியவற்றை ஒப்பிட்டுப் பாருங்கள்.

***

பாகிஸ்தான் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் இந்தியாவில் அணுகுண்டு போடுவேன் என்று மிரட்டியதால் தான் இந்தியா பாகிஸ்தானை தாக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

இந்தியாவால் என்னதான் செய்ய முடியும் என்று தெரியவில்லை. இந்தியா முதலில் அணுகுண்டு வீசுவதில்லை என்று கொள்கையைப் பதிவு செய்திருக்கிறது. பாகிஸ்தான் அப்படியொரு கொள்கை எதுவும் தமக்கு இல்லை என்று பகிரங்கமாகவே மறுத்திருக்கிறது.

***

***

karuppanchinna@yahoo.com

***

Series Navigation