இந்தோனேசியா தீவுகளில் உண்டாகும் பூகம்பம் இந்து மாக்கடல் அரங்கில் சுனாமியைத் தூண்ட வல்லது (3)

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


பாதாளக் குடல் வெடித்து

பூதாளம் போடும் பூகம்ப ஆட்டம்,

வேதாளம் வருமென முரசடிக்கும்!

முன்னடி பாயும் முன்பு

பின்னடி வைக்கும் வேங்கை!

அலைவெள்ளம் வேகமாய்த் துகிலுரித்து

கடற்கன்னி நாணி நிற்கும்

உடற்காட்சி கரைநீங்க ஆணையிடும்!

தொடர்வண்டி ரயில் மகுடி ஊதியபின்

படமெடுத்துப் பாயும் சுனாமி!

சுனாமிக்கு முன் அமைதி!

சுனாமிக்குப் பின் சமாதி!

‘2015 ஆண்டுக்குள் பழைய மற்றும் புதிய மருத்துவ மனைகள், மின்சார நிலையங்கள், பள்ளித் தளங்கள், தொழிற்சாலைகள் போன்ற நாட்டின் உள்துணை விருத்தி நிறுவகங்கள் [Infrastructures] சுனாமி, பூகம்பச் சிதைவிலிருந்து பாதுகாக்கப்படும் என்னும் உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும். இந்த எதிர்பார்ப்பை மெய்யாக்க நிதி மட்டும் போதாது. இவற்றை உறுதியாக்க அரசாங்கம் பொறுப்பு ஏற்றுக் கொள்வதுடன், போக்குவரத்து, தகவல் தொடர்பு, ஒளிபரப்பு ஊடகங்கள், எரிசக்தி, நீரனுப்பு நிலையங்கள் போன்ற அனைத்து நிறுவனங்களும் பங்கு கொள்ள வேண்டும் ‘

ஜான் லூக் பான்ஸ்லே [World Conference on Disaster Reduction, Kobe, Japan (Jan 21, 2005)]

‘இந்து மாக்கடல் சுனாமி மைய எச்சரிக்கை அரங்கின் மிகப் பெரும் சவால் உள்ளூர் அறிவிப்பு முறைகள்! கடற்கரையில் இங்குமங்கும் தனிப்பட்டுள்ள சமூக மாந்தர் கவனத்துக்கு எப்படி அறிவிப்பைக் கொண்டு வருவது ? சுனாமியால் பாதிக்கப்படும் மாந்தர் காதில் பட்டு, பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்தால் மட்டுமே முன்னறிவிப்பு எச்சரிக்கை ஏற்பாடுகள் வெற்றி பெற்றன என்று மெய்யாகக் கூற முடியும் ‘.

இயான் வில்டர்ஸ்பின் [International Federation of Red Cross]

முன்னுரை: இந்தோனேசியத் தீவுகள் இந்து மாக்கடல் அரங்கில் பிறழ்ந்த பூதளக் தட்டுகள் [Tectonic Plates] அடுக்கடுக்காய்க் கடல் மடியில் படிந்த சீர்கேடுகளைப் பெற்றவை! அவை தடம் புரண்டவை! தடம் பிறழ்ந்த தட்டின் முனைகள் ஒன்றின் மீது ஒன்றாகக் குதிரை ஏறலாம். அல்லது ஒன்றின் கீழ் ஒன்றாக இறங்கலாம். பூமியின் உட்கருவில் உள்ள கனல் பந்தில் ஏற்படும் மாறுபட்ட கொந்தளிப்பில் அழுத்தம் மிகையாகித் தடம் புரண்ட தட்டுகளை எவ்விடும் உடைந்த வில்போல அதிரச் செய்து மோத வைத்து, நில நடுக்கங்கள் அடிக்கடலிலோ அல்லது தரைக்கடியிலோ ஏற்படுகின்றன. ஆனால் சுமாத்திரா அருகில் இந்தியத் தட்டும், ஆஸ்திரேலியா தட்டும் [Indian & Australian Plates] மெதுவாகப் பக்கவாட்டில் ஊர்ந்துபோய் [Creeping Alongside] யுரேசியாப் பெருந்தட்டின் [Eurasian Plate] ஒரு பகுதியான பர்மா தட்டின் [Burma Plate] கீழ் பாய்ந்து செல்கின்றன! கனத்தட்டு கீழிறங்கி, மென்தட்டு மேலெழும் இந்த நகர்ச்சி முறை ‘கீழ்த்திணிப்பு இயக்கம் ‘ [Subduction Process] என்று பூதளவியல் விஞ்ஞானத்தில் அழைக்கப்படுகிறது.

பூதளத்தின் மேற்குமிழ்த் தட்டுகள் [Lithosperic Plates] மோதும் போது அவற்றில் கனமான ஒன்று, மற்ற தட்டின் கீழே சென்று, உட்கவசக் குமிழில் [Mantle] விழுகிறது. அந்த கீழ்த்திணிப்பு முறையால் கடல் மடியில் குழிப்பிளவு [Ocean Trench] உண்டாகும்! மலைக் குன்று உயரும்! எரிமலை வெடிக்க வைக்கும்! பூகம்பத்தைத் தூண்டிக் கடலில் சுனாமியை எழுப்பும்! சுமாத்திராவுக்கு 120 மைல் மேற்கே கீழ்த்திணிப்பு அரங்கில் [Subduction Zone] ஏற்பட்ட ‘சுந்தா கடற்குழி ‘ [Sunda Trench] தீவுக்கு இணையாகச் செல்கிறது. மேலும் அமெரிக்காவின் காலிஃபோர்னியா ஸான் ஆன்டிரியாஸ் பழுது [San Andreas Fault] போல, சுமாத்திரா பழுதுப் பிளவு [Sumatra Fault] தீவு நீளத்துக்குப் பரவியுள்ளது. சுமாத்திரா பழுது ஏற்கனவே பலமுறை பாதிப்பான ஒரு சரிவுப் பழுது [Strike-Slip Fault]! அந்தச் சரிவுப் பழுதில் எதிராக உராயும் இரண்டு பாறைத் தட்டுகள் நெருங்கிச் செல்கின்றன. சுருங்கக் கூறின் இந்தோனேசியா தீவுகளில் அல்லது அவற்றின் அருகில் ஏற்படும் மிகப்பெரும் நிலநடுக்கங்களில் ஏதாவது ஒன்று, இந்து மாக்கடலில் சுனாமியை எழுப்பி விட்டுப் பேரளவுப் பேரழிவுகளை உண்டாக்கும் அசுர வல்லமை பெற்றது!

ஜப்பானில் ஐக்கிய நாடுகளின் பேரழிவுக் குறைப்புப் பேரவை

2004 டிசம்பர் 26 ஆம் தேதி இந்து மாக்கடலில் எழுந்த பேரழிவுக் கோரச் சுனாமியில் ஏற்பட்ட 226,000 மேற்பட்ட மரணத்தால், 168 நாடுகள் ஜப்பான் கோப் நகரில் 2005 ஜனவரி (18-22) தேதிகளில் கூடி உரையாடி, எவ்விதம் பேரழிவைக் குறைப்பது என்பதை ஆராய்ந்தார்கள். பேரவைக் கூட்டுரையில் கலந்து கொள்ளச் சென்றவர்: 4000 பிரதிநிதிகள்! பத்தாண்டுகளுக்கு முன்பு (ஜனவரி 17 1995) கோப் நகரின் ஹான்ஷின் பகுதியில் [Hanshin, Kobe Region] 6.9 ரிக்டர் அளவில் பூதப் பூகம்பம் ஏற்பட்டு 6400 பேர் மாண்ட நினைவு நாளில் மேற்கூறிய பேரவை கூடியது. ஒவ்வொரு ஆண்டும் இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை சுமார் 200 மில்லியன் என்றும், கடந்த 10 ஆண்டுகளில் அதனால் நிதியிழப்பு 800 பில்லியன் டாலரைத் தாண்டி விட்டதென்றும் அறியப்பட்டது! மேலும் பெரும்பான்மையான பாதிப்பு நேர்ந்த பகுதிகள் முன்னேறும் நாடுகளில் ஏற்பட்ட தென்றும், அப்பேரழிவுகள் அந்நாடுகளை மேலும் ஏழ்மைப் படுத்தின வென்றும் கூறப்பட்டது! செல்வச் செழிப்பு பெற்ற நாடுகள் ஏழ்மை நாடுகளின் அப்பேரழிகளுக்குப் போதிய கவனம் செலுத்தி இதுவரைக் கைகொடுத்தனவா என்று சொல்ல முடியாது!

ஆனால் 2004 இல் ஏற்பட்ட இந்து மாக்கடல் சுனாமி உலக மக்களின் கண்ணீரைத் திறந்துவிட்டு அவரது பணப்பெட்டியையும் திறக்க வைத்து 5 பில்லியன் டாலருக்கு மேல் உதவி அளிக்கச் செய்திருக்கிறது! எல்லாவற்றுக்கும் மேலாக முன்னேறிய செல்வ நாடுகள், முன்னேறிவரும் நாடுகளின் இன்னல்களைப் பங்கிட்டுக் கரம்நீட்டி உதவி செய்ய தற்போது முன்வந்துள்ள மனிதப் பண்பு மிகவும் பாராட்டுவதற்குரியது. அந்த கூட்டுப் பேரவையில் நிகழ்ந்த ஒரு முக்கிய தர்க்க மன்றம், சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு, மக்கள் பாதுகாப்பு பற்றிக் கருத்துப் பரிமாறி முடிவு செய்வது. இறுதியில் இந்து மாக்கடல் அரங்கு கடல்கரை நாடுகளுக்குச் சுனாமி முன்னறிவிப்பு ஏற்பாடு அமைப்ப தென்றும், தற்போதுள்ள பசிபிக் கடலரங்கு எச்சரிக்கை ஏற்பாட்டை நீட்டி அட்லாண்டிக் கரீபியன் கடற்பகுதிகளுக்கு இணைக்கவும் கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டது. மேலும் தற்போதுள்ள பசிபிக் கடலரங்கு ஏற்பாடு சூறாவளி, டைஃபூன், சைக்குலோன், வெள்ளம் அடிப்பு [Tornado, Typhoon, Cyclone, Flooding] போன்ற இயற்கையின் ஆயுதங்கள் நாடுகளைத் தாக்குவதற்கு முன் எச்சரிக்கை விடுக்கவும் மேம்படுத்தப்படும்.

2004 ஆண்டு எழுந்த சுனாமி விழுங்கியவரில் பெரும்பாலோர் சிறுவர்களே. இயற்கையின் சீற்றத்தில் ஏற்படும் கோர மரணங்களையும், கொடிய விளைவுகளையும் பொது நபருக்கு எந்த முறையில் அறிவிப்பது ? எந்த மாதிரிப் பயிற்சிகள் அளிப்பது ? பயிற்சி நெறி முறைகளை எவ்விதம் தொடர்ந்து கடைப்பிடிப்பது ? ஒவ்வொரு நாட்டிலும் இயற்கைப் பேரழிவைக் குறைக்க எந்தவித நிர்வாக இயக்கம் ஏற்படுத்த வேண்டும் ? பேரழிவுக் குறைப்பு நிர்வாகத்துக்குச் சுய ஆர்வத் தொண்டர்படை, உள்ளூர் நபர்கள், உதவி நிறுவனங்கள் ஒருமைப்பாடுடன் உழைக்க வேண்டும். உள்ளூர் மக்களுக்குத் திரைப்படம், டெலிவிஷன் மூலம் சுனாமியைப் பற்றி விளக்கமாகக் காட்டி, எவ்விதம் தப்பிக் கொள்வது என்று பாதுகாப்புக்குப் பயிற்சிகள் அளிக்க வேண்டும். அடுத்து பள்ளிக்கூடங்கள், மருத்துவ மனைகள், மின்சார நிலையங்கள், நீர்ப் பதம்படு நிலையங்கள் [Water Treatment Plants], திரைப்படக் காட்சிக் கூடங்கள் போன்ற அபாயப் பாதுகாப்பு நிறுவகங்கள் நிலநடுக்கம், சுனாமி சிதைக்கா வண்ணம் உறுதிப் படுத்தப்பட வேண்டும்.

நிலநடுக்கம் தாலாட்டும் நித்திய பூமி!

ஆண்டு தோறும் நிகழும் நிலநடுக்க ஆட்டங்கள், சூறாவளி, சுனாமி, புயல் அடிப்புகள் போன்றவை ஜப்பானிய மக்களுக்கு ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அளிக்காதவை! உலகத்தின் 10 சதவீத நிலநடுக்கங்கள் டோக்கியோ தலைநகருக்கு அருகிய பகுதிகளில் நேருகின்றன! இயற்கை அன்னை விளைவிக்கும் கோர விபத்துகளை எதிர்பார்த்து, இடர்களை ஏற்றுக் கொண்டு மீண்டும் மீண்டும் சீர்ப்படுத்தி, உயிர்த்தெழும் ஜப்பானியரின் நெஞ்சுறுதிக்கு ஈடு, இணை உலகில் வேறு எங்கும் இல்லை! ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் முதல் தேதி அன்று, பூகம்ப எச்சரிக்கைப் பயிற்சிகள் தவறாது நடத்தப்பட்டு ஜப்பானிய மக்களைத் தயாராக வைத்திருப்பது, பாராட்டத் தகுந்த ஓர் அரசாங்கப் பணி!

1995 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி கோப் பெரு நகரத்தின் அருகே 6.9 ரிக்டர் அளவில் நேர்ந்த 20 விநாடிப் பூகம்ப ஆட்டத்தில் இறந்தவர்: 6400. காயமடைந்தவர் 33,000! நிலநடுக்கத்தில் சிதைந்து போன இல்லங்கள்: 144,032! தீப்பற்றி மாய்ந்து போன வீடுகள்: 7456! கவிழ்ந்து போன கட்டடங்கள்: 82,091! முறிந்து போன மாளிகைகள்: 86,043! முக்கியமாக கார், வாகன, இரயில், கப்பல் போக்குவரத்துக்கள் நின்று போயின! காங்கிரீட் பாலங்கள் உடைந்து, இருப்புப் பாதைகள் நெளிந்து, பெரு வீதிகள் பிளந்து நகரங்கள் பெருஞ்சேத மடைந்தன! நிதி மதிப்பீட்டில் சிதைவுக்கு ஈடான தொகை: 200 பில்லியன் டாலர்! நீர்வசதி, மின்சார வசதி, எரிவாயு போன்ற மனிதருக்குத் தேவையான முக்கிய ஏற்பாடுகளைச் சீராக்கி மீண்டும் உயிர்ப்பித்து இணைக்க 100 பில்லியன் டாலர் நிதி செலவானது! வாணிப நிதிவளத் தொழிற் துறைகளை மீண்டும் இயக்க அடுத்து 50 பில்லியன் டாலர் தொகை தேவைப்பட்டது!

பூகம்ப ஆட்டத்தின் போது புள்ளெட் ரயில் பாதுகாப்பு!

மணிக்கு 180 மைல் வேகத்தில் பாய்ந்து உலகிலே அதி விரைவில் ஓடும் புள்ளெட் இரயில்கள் ஜப்பான் ஒரு நாட்டில்தான் சீராக இயங்கி வருகின்றன! அவை வேகத்துக்கும், பாதுகாப்புக்கும், குறித்த நேரத்துக்கும் பெயர் பெற்றவை! 1964 ஆண்டு முதல் இயங்கிவரும் புள்ளெட் இரயில் முன் விழுந்து தானாக உயிரிழந்தவரைத் தவிர இதுவரை வண்டி கவிழ்ப்போ, தடப் புரட்டோ எதுவும் நேர்ந்து யாரும் உயிரிழந்த தில்லை! காலவரம்பு கடைப்பிடிக்கப் பட்டு விநாடித் துல்லியமாக அனுதினமும் நிலையங்களை அடைகிறது, புள்ளெட் இரயில் வண்டி!

புள்ளெட் இரயில் ஓடும் ஜப்பானின் இருப்புப்பாதை முழுவதிலும் இடையிடையே ‘நிலநடுக்க உளவிகள் ‘ [Seismometers] மாட்டப் பட்டிருக்கின்றன. அவற்றின் பணி, புவித்தள ஆட்டத்தை உணர்ந்து ரிக்டர் அளவு 4 மேற்பட்ட சமயத்தில் அதி வேகத்தில் பாய்ந்து செல்லும் புள்ளெட் இரயிலை உடனே நிறுத்துவது! சக்தி வாய்ந்த நிலநடுக்க ஆற்றல் இருப்புப் பாதைகளை நெளித்து, இரயில் வண்டியைச் சாய்த்துவிடும் முன்னரே, முன்னறிவிப்புக் கருவிகள் வண்டியைச் சுயமாகவே நிறுத்தி விடுகின்றன! இரயில் பாதை அருகிலும், மற்றும் பாலங்கள், வீதிக் கம்பங்கள் ஆகியவற்றில் நிலநடுக்க ஆட்டத்தின் மட்ட நகர்ச்சியைப் [Horizontal Displacements] பதிவு செய்யக் குறிக்கோடுகள் வரையப் பட்டுள்ளன! புள்ளெட் இரயில் போல மற்ற வாகனங்களும் 4 ரிக்டர் அளவுக்கு மிகையான பூகம்ப ஆட்டத்தின் போது எச்சரிக்கையைப் பார்த்தும், காதில் கேட்டும் நிறுத்தப் படுகின்றன.

சுனாமி வருவதற்கு இயற்கை தரும் எச்சரிக்கை!

இயற்கை அன்னையே கடற்கரையில் வாழும் மாந்தருக்கு மூன்றுவித முன்னெச்சரிக்கையைச் சுனாமி வருவதற்கு முன்பு அறிவிக்கிறாள். சுனாமி தாக்குவதற்கு முன் முதலில் கடற்பகுதிகளில் நிலநடுக்கம் உணரப் படுகிறது! அடுத்த விபரீதக் காட்சி: அமைதியாகக் காணப்படும் கடற்கரையில் அலையடிப்பு சுருங்கி வெகு விரைவாய் அலைவெள்ளம் உள்ளிழுக்கப் படுகிறது! இது சுனாமி வருகையை அறிவிக்கும் இரண்டாவது எச்சரிக்கை! சுனாமி என்னும் வினோத அலை ஒருமுறை மட்டும் அடிக்கும் அலைப்படை யன்று! சுமார் 30-60 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் மீண்டும் மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்டு மீளும் அலை மதில்களைக் கொண்டு தாக்கும் வல்லமை உடையது! முதல் அலையை விட வலுவாக இரண்டாவது அலைப்படை அடிக்கிறது! இரண்டாவது அலையை விட மூன்றாவது அலைமதில் மிக்க பலத்துடன் தாக்குகிறது! ஒரு கியூபிக் யார்டு [1 cubic yard] கடல்வெள்ளம் 1 டன் எடை உள்ளது! கடற்கரையைத் தாக்கும் அலைச்சுவரின் அடிப்பு பல மில்லியன் டன் ஆற்றல் கொண்டது!

சுனாமி வருவது தெரிந்த பின்பு, அலை வேடிக்கை பார்க்கக் கடற்கரையில் நிற்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்! முதலில் வரும் சுனாமி அலையின் வேகம், அலைமதில் உயரம், உள்நுழையும் துாரம் சற்று குறைவாகவே இருக்கும். அடுத்துவரும் அலை வெள்ளம் மிகையான வேகமும், உயரமும், உள்நுழையும் தூரமும் கொண்டதாக இருக்கும்! மூன்றாவது, நாலாவது வரும் அலைகள் 8 அடி முதல் 100 அடி வரை உயரமும், மணிக்கு (30-40) மைல் செல்லும் வேகமும், உள்நாட்டுக்குள் ஒரு மைல் முதல் மூன்று மைல்கள் நுழையும் கொடூரத் தன்மை படைத்தவை! 2004 ஆம் ஆண்டு இந்து மாக்கடல் சுனாமியில் சுமாத்திரா, அந்தமான், நிக்கோபார் தீவுகளை முதலில் பூகம்பங்கள் தாக்கி மிகுந்த சேதாரம் விளைந்துள்ளது! அடுத்து சுனாமி அலைகள் 60 அடி [20 மீடர்] உயரத்தில் எழுந்து, சுமார் 3 மைல் தூரம் உள்நாட்டில் நுழைந்து பேரழிவு செய்துள்ளதாக அறியப்படுகிறது! ஈழத்தீவில் சுனாமி 30 அடி [10 மீடர்] உயரம் எழுந்து, ஒன்று அல்லது இரண்டு மைல் தூரம் உள்நாட்டை ஊடுறுவிச் சென்றதாகத் தெரிகிறது!

சுனாமி தாக்குவதற்கு நெருங்கும் போது சில சமயங்களில், கடற்கரை அலையடிப்பு உயரம் ஏறலாம். அல்லது இறங்கலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் நிகழ்கிறது. சுனாமி கடற்கரையை நெருங்கும் போது, ஜெட்விமானம் விடுக்கும் பலத்த அரவம் போல, அல்லது பளுவேற்றிய தொடர்வண்டி இரயில் [Goods Train] இடும் சத்தம் போல உரக்கக் கேட்கிறது! ஒரு கடற்கரையில் சுனாமி அலை சிறிதாக எழுவதும், அதே சமயத்தில் சில மைல் தூரம் உள்ள வேறு கடற்கரையில் மிகப்பெரும் சுனாமி அலை அடிப்பதும் நேரக் கூடியவை! வீடுகளும், மற்ற கட்டிடங்களும் முழுப்பாதுகாப்பு அளிக்கமாட்டா. காங்கிரீட் வீடுகள், மாளிகைகளின் மேற்தளங்கள் சுனாமியிடமிருந்து தப்பிக் கொள்ளப் பாதுகாப்புத் தரலாம். ஆனால் இந்து மாக்கடல் நாடுகளின் கடற்கரைப் பகுதியில் பிழைத்துக் கொள்ளக் கட்டி யிருக்கும் காங்கிரீட் கட்டிடங்கள் மிக மிகக் குறைவே. கடல் நடுவே படகுகளில் வேலை செய்யும் மீனவர்கள், சுனாமி வருவதை அறிந்தால் கடற்கரைப் பக்கம் மீளாமல் குறைந்தது 100 பாத்தம் (600அடி) [Fathom=6 feet] கடல் ஆழப் பகுதிக்குச் சென்றால் சுனாமி அடிப்பிலிருந்து தப்பிக் கொள்ளலாம்!

சுனாமி நெருங்குமுன் தப்புவது எப்படி ?

1. கடற்தளப் பகுதியில் நின்று கொண்டிருக்கும் போது, தளப்பரப்பில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டால், உடனே கடற்கரையை விட்டு மேடைகளை நோக்கி வேகமாய் ஓடு! வாகனம் இருந்தால் அல்லது பஸ் வசதி கிடைத்தால் உள்நாட்டுப் பக்கம் விரைந்து செல். ஓடும் போது சுனாமி வருகிறது என்று மற்றவர் அறிந்திடக் கூச்சலிடு! உனது குடும்பத்தினரையும் மற்ற உற்றார் உறவினரையும் கூட்டிச் சென்றுவிடு.

2. கடற்கரையில் உலாவிடும் போது, கடல் அலைகள் வேகமாய் உள்ளிழுக்கப்பட்டு, நீச்ச அலை மட்ட வரம்புக்கும் கீழாக [Beyond Low Tide Limit] 1000 அடிக்கு மேல் செல்லுமாயின், அது சுனாமி வருவதைக் காட்டுகிறது! அடுத்த 30-60 நிமிடங்களுக்குள், மாபெரும் சுனாமி ஒன்று கரையைத் தாக்கப் போவதை நிச்சயமாக நம்பலாம். முதல் பத்தியில் கூறியபடி கடற்கரையை விட்டு உடனே மேடைகளுக்கோ அல்லது உள்நாட்டுக்குப் பகுதிகளுக்கோ விரைந்து செல்.

3. கடற்கரையை நெருங்கும் சுனாமி பறந்து செல்லும் ஜெட்விமானம் போன்று பலத்த அரவம் உண்டாக்குகிறது! அல்லது இரும்புத் தண்டவாளத்தில் பளுவண்டி இரயில் ஓடுவதுபோல் அரவம் கேட்கிறது! அவ்விதம் காதில் பட்டால் முதல் பத்தியில் கூறிய முறையைப் பின்பற்று!

இந்து மாக்கடல் கடலரங்கு எச்சரிப்புக் கருவிகள்

ஜப்பானில் நடந்த 2005 ஜனவரிப் பேரவையில் இந்து மாக்கடல் சுனாமியை அறிவிக்கப் பலவித எச்சரிக்கை ஏற்பாடுகள் ஆராயப்பட்டன. அவற்றில் ஐக்கிய நாடுகளின் விஞ்ஞானக் கலாச்சாரக் கல்விப் பேரவை [UNESCO] எடுத்துக் கூறிய திட்டமும் ஒன்று. யுனெஸ்கோ கூறிய திட்டம் 30 மில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்டு 2006 ஆண்டின் பாதிக் காலத்தில் முடிவு பெறுவது. இந்து மாக்கடல் பகுதிகளில் தகுந்த இடங்களில் மிதக்க விடப்படும் ஆழ்கடல் மிதப்பிகளின் கூட்டிணைப்புகள், மற்றும் கடலரங்குத் தொடர்பு மையங்கள் [Network of Deep-Sea Buoys & Regional Communication Centres] ஆகியவற்றை யுனெஸ்கோ நிபுணர்கள் குறிப்பிட்டனர். ஆனால் வேறுபட்ட அமைப்பை அமெரிக்கா ஆலோசனைக்கு அறிவித்தது.

தற்போது அமெரிக்கா கண்காணித்து வரும் பசிபிக் எச்சரிக்கை ஏற்பாட்டை விருத்தி செய்து நீட்டி, அட்லாண்டிக், கரீபியன், ஈரோப்பில் மத்திய தரைக்கடல் மற்றும் இந்து மாக்கடல் பரப்புகள் அனைத்துக்கும் ஒரே எச்சரிக்கை சமிக்கை அனுப்பும் நோவா விண்சிமிழைப் [NOAA Satellite Global Environmental Operational Satellite (GEOS-8)] பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அமெரிக்கா ஆலோசனை கூறியது. நோவா விண்சிமிழ் பூமிக்கு மேல் 23000 மைல் உயரத்தில் பூகோளச் சுழற்சி ஒருமைப்பாடு சுற்றுவீதியில் [Geosynchronous Orbit] சுற்றி வருகின்ற ஒரு பூதளச் சுழல்நிலைப்புச் சிமிழ் ஆகும் [Geostationary Satellite]. அதாவது பூமிக்கு மேல் எப்போதும் ஒரே பூகோளப் பகுதியில் நேரும் நிகழ்ச்சிகளைக் கண்காணித்துச் சுற்றி வருவது, நோவா விண்சிமிழ். அது வட அமெரிக்கா, தென்னமெரிக்கா கண்டங்கள், மற்றும் பசிபிக், அட்லாண்டிக் கடல்களின் சூழ்மண்டலக் காலநிலை மாறுபாடுகளைக் கண்டு [முகில் படங்கள், நீரியல் ஆவித் தளங்கள், வெப்ப-தட்ப மாறுபாடு, பூதளத்தின் உஷ்ணம் போன்றவை] செய்தி அனுப்புகிறது. மேலும் கடல்களில் எழும் ஹர்ரிகேன், சூறாவளி, சுனாமி போன்ற இயற்கையின் கொடூர ஆயுத எழுச்சிகளையும் நோவா விண்சிமிழ் கண்டு படம் எடுத்து அனுப்பக் கூடிய தகுதி உடையது!

இந்து மாக்கடல் நாடுகளுக்கு ஜப்பான் தேசம் பயிற்சி அளிப்பு

ஆண்டு தோறும் வரும் பூகம்பம் அல்லது எரிமலை, அபூர்வமாக எழும் சுனாமி போன்ற இயற்கையின் பேரழிப்பு விளைவுகளைக் குறைக்க எப்போதும் தயாராக இருக்கும் ஜப்பானிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நெறிகள், பயிற்சி முறைகள் எராளமானவை. ஜப்பான் அரசாங்கமும், உள்ளூர் நகர மக்களும் ஒருங்கிணைந்து இயற்கையின் சிதைவுகளைக் குறைக்கக் கையாளும் ஒழுக்க நெறிப்பாடுகளை இந்தியா, ஸ்ரீலங்கா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா போன்ற தெற்காசிய நாடுகள் ஒவ்வொரு தரமும் கடைப்பிடிக்க முயல்வது கடினமான பணியாகும். ஜாதி, மதம், இனம், மொழி, நிறம், கட்சி, மாநிலம், தீண்டாமை போன்ற வேறுபாடுகள் நமக்குள்ளே நமக்கு எதிரியாய் இருப்பினும் பொது இடர் நேரும் போது, கைகோர்த்து ஒன்றாய்ப் பணிபுரிவது குடியாட்சி மக்களின் நாகரீகப் பண்பாகும். சுனாமியின் பேரழிவு நிகழும் சமயத்தில் உலகக் கரங்கள் நமக்கு உதவிட நீளும் போது, நமது கைகளும் நம் நாட்டு மக்களுக்கு உதவிடத் தயங்கலாமா ? சுனாமிப் பாதுகாப்புப் பயிற்சி அளிக்க ஜப்பான் தனது அனுபவத்தைப் பங்கிட்டுக் கொள்ள தயாராக இருப்பது, சமீபத்தில் கோபில் நிகழ்ந்த ஐக்கிய நாடுகளின் பேரழிவுக் குறைப்புப் பேரவையில் தெளிவாக அறியப்பட்டது. பேரழிவு விளைவுக்குப் பின் பிழைத்து மீண்டெழும் சமூகங்களைப் படைப்பதே உலக நாடுகளின் மிகப்பெரும் சவாலான பணியாக இனிமேல் இருக்கப் போகிறது! அப்பணியில் ஜப்பானே ஆசியாவில் முதன்முதல் வெற்றி பெற்ற தேசமாய்ப் பெருமிதம் கொண்டு வருகிறது!

(முற்றும்)

தகவல்கள்:

Picture Credits: Associated Press (AP) Photos, Time, Newsweek, Toronto Star, The Hindu, CNN, CBS, ABC, CBC, BBC News & The Following Web Sites.

1. Indian Ocean Tsunami Warning System Will Cost Just 1.9 Million-Dollar (Jan 4, 2005) [http://news.scotsman.com/latest.cfm]

2. UNESCO Ready to Create Tsunami Warning System in Indian Ocean (Jan 4, 2004) [www.itar-tass.com/eng]

3. Physics of Tsunamis [http://wcatwc.gov/physics.htm]

4. How a Tsunami Forms ? Toronto Star (Dec 27, 2004)

5. Asia to Seek Help on Warning System, Indonesia Death Rates 19% (Jan 4, 2005) [www.bloomberg.com/apps/news.

6. Tsunami Warning System [www.geophys.washington.edu/tsunami] (Jan 3, 2005)

7. The Tsunami Warning System in the Pacific (May 8, 1997)

8. The Global Ocean Observing System (GOOS) [http://ioc.unesco.org/goos/docs/whatis01.htm]

9. Tsunami Research Activities [www.prh.noaa.gov/pr/itic]

10 Early Warning System Could Have Saved Lives [www.ctv.ca/servlet/ArticleNews/] (Jan 5, 2005]

11 US Geological Survey ‘Warnings Could Have Saved Thousands ‘ (Dec 27, 2004)

12 CBC News ‘Hell, Highwater & Heartache ‘ [www.cbc.ca/newsbackground/asia_earthquake] (Jan 6, 2005)

13 Physics of Tsunami By: Frank Gonzalez [www.sciam.com/] (May 18, 1999)

14 Tsunami Ready Community Requirements [www.prh.noaa.gov/ptwc/tsunamiready/requirements.htm]

15 Press Information Bureau, Govt of India [www.pib.nic.in/release] (Jan 11, 2005)

16 Tsunami Survival By (NOAA) National Oceanic & Atmospheric Administration [http://oshores.com/tsunami1.html]

17 At-a-glance Tsunami Economic Impact BBC News (Jan 13, 2005) [http://newsnote.bbc.co.uk]

18 UN Conference Examines Tsunami Warning System (Jan 20, 2005) [http://thestar.com.my/]

19 World Conference on Disaster Reduction, Kobe Japan (Jan 18-22 2005) [www.noticias.info/asp]

20 Kobe World Conference on Disaster Reduction, Ashahi Editorial (Jan 25, 2005)

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (January 26, 2005)]

Series Navigation