இந்திய விடுதலை வரலாற்றில் இளைஞர்கள்

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

இரா.பிரவீன் குமார்


“ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைகள் வாழ எனக்கு வாய்ப்புத் தரப்பட்டாலும் நான் அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் என் தேசத்தின் நலனுக்காகவே அர்ப்பணம் செய்வேன்”-1915 நவம்பர் 17ம் நாள் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட கத்தர் இயக்க வீர இளைஞன் கர்த்தார்சிங் தூக்கு மேடை முன் நின்று முழங்கிய வார்த்தைகள் இவை.

“நாளைக்காலையில் மெழுகுவர்த்தி ஒளி மங்குவதுபோல நானும் காலை ஒளியில் கரைந்து மறைந்து விடுவேன்,ஆனால் நம்முடைய நம்பிக்கைகள் குறிக்கோள்கள், உலகத்தைப் பிரகாசிக்க செய்யும்.இன்றுபோய் நாளை மீண்டும் பிறப்போம்.எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில்”-தூக்கிலேறு முன் கடைசியாக தன் தம்பிக்கு எழுதிய கடிதத்தில் பகத்சிங் இப்படி கூறினார்.

‘அவனுக்கு அது தகும்.அவந்தான் உண்மையில் குற்றவாளி.என் நாட்டு மக்களின் உணர்ச்சியை நசுக்க பார்த்தான்.என் தாய் நாட்டுக்காக உயிரைக் கொடுப்பது என்பதை விடப் பெருமை வேறென்ன இருக்க முடியும்?இருபத்தோரு வருடங்கள் இதற்காக நான் காத்திருந்தேன்.-ஜாலியின்வாலாபாக் படுகொலைக்கு காரணமாக இருந்த பஞ்சாப் கவர்னர் மைக்கேல் டயரை லண்டனில் சுட்டுக் கொன்ற உத்தம்சிங் தூக்கிலேறுமுன் சொன்ன வார்த்தைகள் இவை.

1932ஆம் ஆண்டு ஜனவரி 11ல் திருப்பூர் குமரன் என்னும் 28வயது இளைஞன் வெள்ளயரை எதிர்த்து மறியல் செய்தபோது தடியால் அடித்து கொல்லப்பட்டான்.மூளை சிதறியபோதும் பற்றிய மூவர்ணகொடியை சிதறாமல் பிடித்து கொண்டே வீர மரணமடைந்தான்.ஒரு ஊர்வலம் கூட இல்லாமல் வேட்டியில் தொட்டிகட்டி அவன் சடலம் உறவினரால் புதைக்கப்பட்டது.

இத்தகய ஆயிரம் ஆயிரம் இந்திய இளையர்களின் தியாகத்தாலும் ரத்தத்தாலும் எழுதப்பட்டது தான் நவ இந்தியாவின் விடுதலை வரலாறு.ஆனால் எத்தனை பேருக்கு இது சொல்லப்பட்டிருக்கிறது?புரட்ட புரட்ட இளைஞர்கள் சிந்திய குருதியின் வாடை வீசும் பக்கங்களும்,அத்தியாயங்களும் நிரம்பியது இந்திய விடுதலையின் வரலாறு. ஆனால் கத்தியின்றி,ரத்தமின்றி,யுத்தமின்றிச் சுதந்திரம் வாங்கப் பட்டதாக மக்களின் மூளைகளில் திணிக்கப் பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பங்கையோ,மகாத்மா காந்தியின் மகத்தான தலைமையையோ மறுதலிப்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல. எனினும் நேர்மையுடன் விடுதலைப்போரில் தங்கள் உயிரை துட்சமென நினைத்து,விடுதலையின் பறைமுழக்கத்தை இடைவிடாது அடித்து எழுப்பிக் கொண்டிருந்த புரட்சி இளையர்களின் பங்கையும் நினைவுபடுத்துவதே இதன் நோக்கம்.

ஊழலில் ஊறிப் பருத்த பெருச்சாளியான ராபர்ட் கிளைவ் என்னும் கொடூரன் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரியாக இந்தியாவுக்கு வந்து பெரும் அழிவை துவக்கி வைத்தான் 1757ல் நடைப் பெற்ற பிளாசிப் போரில் எண்ணற்ற இந்திய இளையர்கள் களப்பலி ஆனார்கள்,கிளைவ் வென்றான்,வங்காளத்தில் வரிவசூலிக்கும் உரிமை பெற்றான். இதே காலகட்டத்தில் தமிழ் மண்ணில் பூலித்தேவனும் அவனுடைய ஒற்றன் ஒண்டிப்பகடையும் ஆங்கிலேயருக்குப் பெரும் சேதாரத்தை ஏற்படுத்திப் படை நடத்தினர்.

யாரை கேட்கிறாய் வரி ? என்று வாளேடுத்துப் போர்புரிந்து 1799 அக்டோபர் 16ல் கயத்தாற்றில் தூக்குக் கயிற்றை முத்தமிட்டான் வீரபாண்டிய கட்டபொம்மன். சுந்தரலிங்கமும்,வெள்ளையத்தேவனும்,மகமது சாமியும்,கொட்டிப்பகடையும், முத்தனபகடையும் களப்பலி ஆகினார்.வெள்ளையத்தேவனின் இளம் மனைவி வெள்ளையம்மாள் பரங்கியின் பாசறைக்குள் ஆண்வேடம் பூண்டு உட்புகுந்து கணவனைக் கொன்ற பரங்கியனைக் குத்திச் சாய்த்துப் பழித்தீர்த்த தமிழச்சியாவாள்.

கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை,மருது சகோதரர்களுடன் கூட்டணி அமைத்து வெள்ளையர்களை எதிர்த்தான் 1801ல் இவர்களும் கொல்லப்பட்டனர்.பாம்பன் பாலம் வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு சுங்கவரி விதித்த ராமாநாதபுரத்து மன்னர் இளைஞர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி 1772ல் கைது செய்யப்பட்டு 23 ஆண்டுகாலம் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சமகாலத்தில் வாழ்ந்த ஹைதர் அலியின் மகன் திப்புசுல்தான் மைசூர் பகுதியில் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். பொருளாதார ரீதியாகவும்,அரசியல் ரீதியாகவும் வெள்ளையனுக்கு சவாலாக விளங்கிய இவர் 1799ல் போர்களத்தில் மாண்டார்.

1808-1810 வேலுதம்பி தலைமையில் நடந்த திருவாங்கூர் எழுச்சி,1830-1861 வங்கத்தின் வகாபியர் எழுச்சி,1849ல் நடந்த நாகர்களின் எழுச்சி,1853ல் நாதிர்கான் தலைமையில் ராவல்பிண்டியில் நடந்த கலகம்,1855-1856ல் சந்தால் பழங்குடி மக்கள் போராட்டம் என ஏராளமான போராட்டங்கள் வட்டார அளவில் மட்டுமே நடந்தது.பெரிய நிலப்பரப்பு முழுவதற்கும் பரவிய புரட்சி 1857ல் சிப்பாய்கலகம். வெள்ளைகார எஜமானியனுக்காக தம் நாட்டு மக்களையே கொலை செய்யும் நிலை,பசுக்கொழுப்பும்,பன்றிக்கொலுப்பும் தடவிய தோட்டாவை பயன்படுத்த கட்டாயப் படுத்தியது போன்ற காரணத்தால் சிப்பாய்கலகம் வெடித்தது.பிளாசிப்போரின் நூற்றாண்டு தினமான 31.5.1857ல் கலகத்தை துவங்க திட்டமிட்டது.எனினும் அதற்கு முன்னரே 10.5.1857ல் மீரட்டில் கலகம் துவங்கியது.டெல்லி கோட்டை சிப்பாய்களுடம் மீரட் சிப்பாய்களும் இணைந்து போரிட்டு ஏராளமான வெள்ளையர்களை கொன்று குவித்து 2ல் பகதூர்ஷாவை ஆட்சியில் அமர்த்தினர்.வடபகுதி முழுவதும் புரட்சி பரவியது.கான்பூரில் நானாசாகிப்,தாந்தியா தோப்பே,ஜான்சியில் இளம் ராணி லட்சுமிபாய்,லக்னோவில் அகமதுல்லாஷா என இளம்புயல்கள் இவ்வெழுச்சிகளுக்குத் தலைமைதாங்கியது.

எனினும் தெற்கிலும்,வடகிழக்கிழும்,மேற்கிலும் கிளர்ச்சி பரவாதது ஆங்கிலேயருக்கு சாதகமாக அமைந்தது,நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வெள்ளையர் படைகள் அழைக்கப் பட்டு இச்சிப்பாய்கலகப் புரட்சி 1857 செப்டம்பர் 19ல் ஒடுக்கப்பட்டது.அடுத்த கட்ட இந்திய விடுதலைக்காக நடந்த இளைஞர் எழுச்சி பேரலையை மூன்றாக வகைப்படுத்தலாம்.

முதல் பேரலை 1897 – 1910 :

உறக்கத்திலிருந்த இந்திய மக்களைத் தட்டியெழுப்பிய முதல் வெடிச்சத்தம் 1897 ஜூன் 22ஆம் தேதி மகாராஷ்டிரத்தில் கேட்டது.புனேயில் பிளேக் நோய் பரவியதைத் தொடர்ந்து கிருமிகளை ஒழிப்பது என்ற பேரில் சொத்துக்களை எரித்தும்,மக்களை முகாம்களுக்குத் தள்ளியும்,பெண்கள் மீது வன்முறை செலுத்தியும் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டது.அதற்குச் சரியான எதிர்வினையாக இளைஞர்கள் சாப்கர் சகோதரர்கள் பிரிட்டிஷ் பிளேக் கமிஷனரான ராண்ட் என்பவரையும் இன்னொரு அதிகாரியையும் போட்டு தள்ளினர். சாப்கர் சகோதரர்களின் கைதும்,1898ல் அவர்கள் தூக்கிலிடபட்டதும் மக்களிடையே பெறும் அனுதாபத்தையும் சுதந்திர தியாகத்தையும் ஏற்படுத்தியது.இச்சம்பவத்தால் வி.டி.சவார்க்கர் தலைமையில் இயங்கிய மித்ர மேளா எனுன் இளைஞர் அமைப்பு பெறும் உந்துதல் பெற்றது,பின்1904ல் நாசிக்கில் இவ்வியக்கம் அபிநவபாரத் எனும் பெயர் மாற்றம் கண்டது. இதே காலகட்டத்தில் சதிஷ் போஸ்,ஜதேந்திர பேனர்ஜி என்பவர்கள் வங்கத்தில் கல்கத்தா அனுஷிலான் சமிதி என்ற இளையர் அமைப்பை உருவாக்கினர்.1905ல் வெள்ளையன் கர்சன் வங்காளத்தை இரண்டாகப் பிரித்தான்,முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதி கிழக்கு வங்காளம் என்றும்,இந்துக்கள் உள்ள பகுதி மேற்குவங்காளம் என்றும் பிரித்து மக்களின் ஒற்றுமையை குலைக்க முயர்ச்சித்தான்.இக்காரியம் மகத்தான மக்கள் எழுச்சிக்கும்,ஒன்றுபட்ட போரட்டங்களுக்கும் வித்திட்டது.இதன் தொடர்நிகழ்வாக 1905ல் கல்கத்தாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான பேரணியின் முடிவில் அந்நிய பொருட்களை பகிஷ்கரிக்க முடிவு செய்யபட்டது.

இச்சமயத்தில் தமிழ்நாட்டின் தென் கோடியில் ஒரு பிராகசமான நட்சத்திரம் சுடர்விட்டு பிராகாசித்தது.33வயது இளையரான வ.உ.சிதம்பரம்பிள்ளை சுதேசிப் புயலாகத் தமிழகத்தில் சுழன்று வந்தார்.1906ல் சுதேசிக்கப்பல் விட்டார்.1908இல் ஆங்கிலேயருக்கு சொந்தமான கோரல் ஆலைத்தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் இறக்கி,அப்போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார்.அதே ஆண்டு அவர் கைது செய்ய பட்டார்.இக்கைது நடவடிக்கையால் மாணவர்களும்,பொதுமக்களும் தெருவில் இறங்கி போராடினர்.

இரண்டாம் பேரலை 1911 – 1919 :

வாஞ்சி அய்யர் என்ற 20 வயது வாலிபர் 1911ல் நெல்லை சீமையிலே மணியாச்சி ரயில் நிலையத்தில் கலெக்டர் ஆஷ் என்பவனைத் துப்பாக்கியால் சுட்டு இளைஞர் எழுச்சியின் இரண்டாவது பேரலையை துவக்கி வைத்தார். கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் பிழைக்கப் போன இந்தியர்கள் சான் பிரான்சிஸ்கோவை மையமாக வைத்து 1913ல் கத்தர்(புரட்சி)இயக்கத்தை துவங்கினர்.சோகன் சிங் ப்க்னா அதன் தலைமைப் பொறுப்பேற்றார்.இந்தியாவில் ராஷ்யபிகாரிபோஸ் முன்முயற்சியில் நாடு தழுவிய ஒரு எழுச்சிக்கு திட்டம் போடப்பட்டது.நாட்டில் உள்ள அனைத்து இளைஞர் குழுக்களை ஒருங்கினைத்தும்,வெளிநாடுகளிலிருந்து அமைப்புகளின் உதவியோடும் திட்டம் தீட்டப்பட்டது.இந்திய ராணுவ படையில் பிளவுண்டாக்கி எழுச்சியைத் துவக்க முடிவு செய்யப்பட்டது.பிரிட்டனின் எதிரி நாடான ஜெர்மனி மற்றும் துருக்கியுடன் பேசி ஆயுதங்கள் பெறவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.அவர்களும் ஆயுதங்கள் தர சம்மதம் தெரிவித்தனர்.கத்தர் இயக்க வீரர்கள் பஞ்சாபிற்குள் வந்து குவிய தொடங்கினர்.பல இடங்களில் அவர்கள் பிரிட்டிஷாரால் பிடிபட்டாலும் சுமார் 8000 பேர் இந்தியாவிற்குள் நுழைந்து விட்டனர்.ஆங்காங்கே ராணுவபடைப் பிரிவுடன் ரகசியமாக பேசதுவங்கினர்.ராஷ்யபிகாரி போஸ்,பிங்ளே,சச்சிந்திரநாத் போன்ற தலைவகள் ஆயுதங்கள் தயாரிக்கவும்,படைகளைதிரட்டவும் நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் பறந்தனர்.

21-2-1915 அன்று ஒரே நேரத்தில் எழுச்சி தொடங்க திட்டமிடபட்டது,தலைவர்கள் ஒவ்வொரு இடத்திலும் நின்று நேரடி தலைமையாக வழிநடத்தினர்.எல்லாம் சரியாகத்

துவங்கியது,ஆனால் வெளிநாட்டில் இருந்து ஆயுதங்கள் கடைசி வரை வந்து சேரவில்லை.சிலபடைப்பிரிவுகளில் காட்டிக் கொடுக்கும் பணியும் நடந்ததால் அதே ஆண்டில் இவ்வெழுச்சி அன்னியர்களால் அடக்கப்பட்டது.பிங்ளே,கர்த்தார் சிங் உள்ளிட்ட 46பேர் ஒரே நேரத்தில் தூக்கிலடப்பட்டனர்,பலர் நாடு கடத்த பட்டனர்,சிறையிலடைக்கப்பட்டனர்.ஜதீந்திரநாத்தும் ஆயுத மோதலில் வெள்ளையர்களால் கொல்லப் பட்டார்.1919ல் நடந்த ஜாலியின்வாலாபாக் நிகழ்ச்சி மக்களிடம் பெறும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.எனினும் பிரிட்டிஷ் படையால் இரண்டாம் பேரலையும் அடக்கப்பட்டது.

மூன்றாம் பேரலை 1920 – 1945 :

இக்கால பகுதியின் முக்கியமான இயக்கங்களாக சந்திரசேகர் ஆசாத்தின் இந்துஸ்தான் குடியரசு ராணுவம்,பகத்சிங்கின் இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு ராணுவம் மற்றும் சுபாஸ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவம்(INA) ஆகியவையாகும்,வங்கத்தின் இளைஞசர்களைக் கொண்டு1923ல் துவக்கப்பட்ட இந்துஸ்தான் குடியரசு ராணுவம் காசி,அலகாபாத்,லக்னோ,கான்பூர்,ஆக்ராவிலும் பரவி விடுதலையை நோக்கி முன்னேறியது.எனினும் 1926 இறுதிக்குள் இவ்வியக்கத்தின் முக்கியத்தலைவர்கள் (சந்திரசேகர் ஆசாத்தை தவிர) கைதானார்கள்,நீண்ட விசாரனை நடந்தது.ஒவ்வொரு நாள் விசாரனையையும் அவர்கள் விடுதலை வேட்கையை விதைக்கும் பிரச்சார மேடையாக பயன்படுத்தினர்.பின்னர் பலரும் தூக்கிலடப்பட்டனர்.

இதில் தப்பிய சந்திரசேகர் ஆசாத் கூடுதல் சக்தி வாய்ந்த இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு ராணுவத்தத உருவாக்கினர்.பகத்சிங் பின்னர் இதில் இணைந்து கொண்டார்.

இவ்வியக்கத்தின் மிகப்பெரிய நடவடிக்கை “சாண்டர்ஸ்” கொலையாகும்,1928ல் சைமன் கமிஷனுக்கு எதிராக பஞ்சாபில் லாலா லஜபதிராய் தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தை போலிஸ் வெறிகொண்டு தாக்கினர். இத்தாக்குதலில் லாலா லஜபதிராய்

நெஞ்சில் தாக்கப்பட்டு வீழ்ந்தார்,பின் இதனால் படுக்கையில் வீழ்ந்து மரணமடைந்தார்.இந்நிகழ்வில் கொதித்தெழுந்த பகத்சிங் சக தோழர்களான சந்திரசேகர் ஆசாத்,சுகதேவ்,ராஜகுருவின் உதவியோடு போலிஸ் அதிகாரி சாண்டர்ஸை சுட்டுகொன்றனர்.இந்த ஒரே நடவடிக்கையில் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றனர் இவ்விளைஞர்கள்.பின்னர் பகத்சிங்கும் கைது செய்யப்பட்டு தூக்கிலடப்பட்டார்.அலகாபாத்தில் போலிசுடன் நடந்த மோதலில் சந்திரசேகர் ஆசாத்தும் கொல்லப்பட்டார்.காங்கிரஸில் இருந்து பிரிந்து சுபாஸ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார்.ஜெர்மனி,சிங்கப்பூர்,ஜப்பான் போன்ற நாடுகளின் உதவியோடு 1944ல் பர்மாவில் வெள்ளையர்களை எதிர்த்து இந்திய தேசிய ராணுவம் போரிட்டது.எனினும் வெள்ளையரால் அது முடக்கப்பட்டது.1945ல் ஜப்பானில் விமான விபத்தில் அவர் இறந்ததாக நம்பப்படுகிறது.ஆனால் உண்மை???????

இன்னும் எத்தனை எத்தனையோ இளைஞர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.பலரது வீரர்களின் பெயர்கள் இக்கட்டுரையில் விடுபட்டிருக்கலாம்,ஆக வீரமிக்க இளைஞர்களின் ஒட்டுமொத்த நெருக்குதலாலும்,மகாத்மா அவர்களின் மகத்தான தலைமையிலும் 1947ல் நமக்கு சுதந்திரம் கிடைத்தது.

வெள்ளையர்களிடம் கிடைத்த சுதந்திரம் இன்று சுயநல அரசியல்வாதிகளிடம் சிக்கியுள்ளது.அவற்றை மறுபடியும் பெற மற்றுமொரு சுதந்திரப் போராட்டம் அவசியமாகிறது.சமூக அரசியல் மாற்றித்திற்கான இச்சுதந்திர பயணத்தில் நமது “மக்கள் சக்தி இயக்கம்” பயணிக்கிறது.சக பயணிகளாக மாணவர்களும் இளைஞர்களும் ,சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வருவார்கள் எனும் நம்பிக்கையில்.ஆம் நண்பர்களே சமூக அக்கரையுள்ள மக்கள், வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்களாக மட்டும் இல்லாமல்,இந்த இரண்டாவது சுதந்திர போராட்டத்தில் பங்குபெறும் பங்கேற்பாளராகவும் இருக்கவேண்டும்…

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்

ஜெய் ஹிந்த்

இதமுடன்

இரா.பிரவீன் குமார்

மக்கள் சக்தி இயக்கம்

praveen@makkalsakthi.org

www.makkalsakthi.org

www.makkal-sakthi-eiyakkam.blogspot.com

நன்றி : திரு.ச.தமிழ்ச்செல்வன்

பாரதி புத்தகாவியம்.

Series Navigation

இரா.பிரவீன் குமார்

இரா.பிரவீன் குமார்