இந்திய ராணுவம். ஒரு காகிதப் புலியா ?

This entry is part [part not set] of 14 in the series 20010115_Issue

பிரிகேடியர் எஸ் எஸ் சாந்தேல், SC VSM (Retd)


நாம் உலகத்தின் நான்காவது பெரிய ராணுவம். அதுவும் மக்கள் தாமாக சுயவிருப்பத்துடன் சேர்ந்த ஒரு ராணுவம். இந்தப் பத்து லட்சம் போர்வீரர்களும், தானாக விரும்பி ராணுவத்தில் இணைந்ததால்,பொரு லட்சிய உணர்வுள்ளவர்களாய் நாம் காண வேண்டும். இவர்களுக்குப் பின்னால், ஒரு 10 கோடி மக்கள் இருக்கிறதாகவும் இவர்களில் சுமார் 2 கோடி பேர் தீவிரமான போர் வீரர்களாக உருவாவார்கள் என்றும் கருதுகிறோம்.

இதை விட ஒரு பொய் இருக்க முடியாது. நமது 10 லட்சம் போர்வீரர்கள் என்பது ஒரு மாயம். இந்த ‘சுய விருப்பத்துடன் வந்த போர்வீரர்களை ‘ ஆராய்வோம். இவர்கள் சுய விருப்பத்துடன் வந்தவர்களல்லர். இவர்கள் ஏழ்மை துரத்த வேலை ஊதியம் ஒரு ராணுவ உடையோடு கிடைக்கிறதே என்பதனால் ராணுவத்திற்கு வந்தவர்கள்.

எந்த வேலை பார்க்க விரும்புகிறாய் என்று ஒரு இந்திய இளைஞனை கேட்டால் அவன் ஒன்பதாவது இடத்திலேயே ராணுவ உத்யோகத்தை வைக்கிறான்.

ராணுவத்துக்குள்ளும், காலாட்படை (infantry ) யைத் தேர்வு செய்வது கடைசியான இடத்தில் இருக்கிறது. இந்த காலாட்படையில் ராணுவத்தின் 37 சதவீத ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். (அதாவது 3,70,000 ராணுவ வீரர்கள் காலாட்படையினர்). இதிலும் அதிகமானவர்கள் குமாஸ்தாக்கள், சமையல்காரர்கள், தையல்காரர்கள், மரவேலை செய்பவர்கள், மருத்துவ உதவியாளர்கள், தொலைத்தொடர்பு காரியஸ்தர்கள், வண்டி ஓட்டுபவர்கள் போன்றோர். எந்த காலத்திலும் சுமார் 25 சதவீத ராணுவ வீரர்கள் ஏதாவது ஒரு விடுமுறையில் இருக்கிறார்கள். ஆகவே ராணுவத்தில் எந்த காலத்திலும் 3 லட்சம் ராணுவ வீரர்களே சுமார் 7200 கிலோமீட்டர் எல்லைக்கோட்டை காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சில வேலைகளுக்கு (இலங்கை அமைதிப்படை, போன்ற குறிப்பான வேலைகளுக்கு) சுமார் 750 ஆட்கள் வேண்டும் என்றால் அதற்கு சுமார் 400 ஆட்கள் கூடத் தேறுவது கிடையாது. இதுதான் மற்ற கப்பல் படை, விமானப்படையைப் பொறுத்தும் நிகழ்வது..

போர்க்காலத்தின்போது என்ன நடக்கிறது ? அப்போது உடல் ஊனமுற்றவர்களும், போர்க்கைதிகளும் அதிகமாவார்கள். இவர்களது எண்ணிக்கையை சரிக்கட்ட, ரிசர்வ்ஸ் என்னும் படையிலிருந்து ஆட்கள் வந்து நிரப்ப வேண்டும். கார்கிலின் போர் சில விஷயங்களை சுட்டிக்காட்டியிருக்கிறது. சுமார் 3 அல்லது 4 யூனிட்கள் மட்டுமே வந்த பாகிஸ்தானின் வடக்கு இளம் காலாட்படை (Northern Light Infantry) யைச் சமாளிக்க, மலைப் போர்ப் பிரிவு எண் 27-ஐ(Mountain Division 27), கிழக்குப் படைப் பிரிவிலிருந்தும், மலைப் போர்ப் பிரிவு 6-ஐ ( 6 Mountain Division) மத்தியப் படைப் பிரிவிலிருந்தும் அனுப்ப வேண்டியதாகி விட்டது.

நம்மிடம், ஆயிரக்கணக்கான சுயஆர்வ ராணுவத்தினர்கள் இருந்தாலும், இவர்களை ஒரு கட்டுக்கோப்பான போர்க்குழுக்களாக மாற்ற தேவையான அமைப்புகளோ, இவர்களை தேர்ந்தெடுக்கத் தேவையான அமைப்புகளும், இவர்களை சரியான முறையில் வார்த்தெடுக்கத் தேவையான பயிற்சி நிலையங்களும் இல்லை. பொத்தாம் பொதுவாக பேசி கழித்துக் கட்டிவிடுகிறோம். காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை ஒரு போர் நடந்தால் என்ன செய்வது என்று பயிற்சி முறைப் போர்களை நாம் நடத்துவதில்லை.

பிரச்னை என்னவென்றால், நம்மிடம் இருக்கும் மிகச்சிறிய ராணுவத்துக்கு (நமது மக்கள்தொகையில் நூற்றில் ஒருவர் உள்ள ராணுவத்துக்கு) நாம் நமது உள்நாட்டு உற்பத்தியில் (GDP-Gross Domestic Product) சுமார் 30%சதவீதத்தை

செலவிடுகிறோம். இந்த ராணுவத்தால், (கப்பல்படையாலும், விமானப்படையாலும்) ஒரு பெரும் போரைச் சந்திக்க இயலாது. உதாரணமாக சைனாவுடன் நாம் நிற்க முடியாது. எனவேதான், நமது நிலங்களை, 1962இலும், 1947இலும் சைனாவும் பாகிஸ்தானும் பிடித்து வைத்திருக்கும் போது, நாம் ஒன்றும் பண்ண முடியாமல் இருக்கிறது. வெறும் வார்த்தைகள் உண்மையான வலிமைக்கு மாற்று அல்ல.

நமது 100 கோடி மக்கள்தொகையை உருப்படியாக உபயோகப்படுத்துவதும், இந்த பெரும் பரப்பளவையும் அதன் பொருளாதார வலிமையையும் சரியாகப்பயன்படுத்துவதும்தான் இதன் பதில். சிறிய நிற்கும் படை (standing Army) தேவைப்பட்ட காலத்தில் நூறு அல்லது இருநூறு டிவிஷன்களாக பெருகுவதற்கு ஒரு கருவாக பயன்பட வேண்டும். மீதமுள்ள அனைத்து மக்களும், இந்த படைக்கு ரிஸர்வுகளாக செயல்பட வேண்டும். அப்படி 200 டிவிஷன்களை, மாபெரும் படையைப் பொருளாதார ரீதியில் தாங்குவதற்கு இந்தியாவின் பொருளாதாரம் இடம் கொடுக்காததால், இது படைப் பணியாளர்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கொண்டுள்ள conscript Army ஆகவே இருக்க வேண்டும்.

கல்லூரியில் படித்த, 30 வயதான எல்லா ஆண்களும் பெண்களும், கட்டாயம் 2 வருடம் ராணுவத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற விதி முறை வேண்டும். தொழிலாளர்களும், விவசாயிகளும் 3 வருடம் ராணுவத்தில் இருக்க கட்டாயப் படுத்தப்பட வேண்டும். ஆபீஸர்களும் இந்த கட்டாய ராணுவத்தின் மூலமே வர வேண்டும். அப்போது, அவர்கள் பலவிதத் திறமைகளை கொண்டுவருவார்கள்.

இந்த கட்டாய ராணுவக் காலத்தில் இந்த போர்வீரர்களுக்கு ஒரு சிறிய அளவு ஊதியமும், உணவும், உடையும், தேவைப்பட்ட காலத்தில் அவர்களை அழைக்கும் போது அவர்கள் செய்ய வேண்டிய பணியைப் பற்றியும் சொல்லித்தர வேண்டும்.

நிரந்தரப் போர்வீரர்களுக்கு நிரந்தர பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும். ஸ்பெஷல் பயிற்சிகள் பல்வேறு பள்ளிகளில் சொல்லித்தரப் பட வேண்டும். அப்போதுதான் இப்போதிருக்கும் காகிதப்புலி போலன்றி, இந்தியாவும் நாமும் உண்மையிலேயே ஒரு அசைக்கமுடியாத படையைக் கொண்டிருப்போம்..

**

Series Navigation

பிரிகேடியர் எஸ் எஸ் சாந்தேல், SC VSM (Retd)

பிரிகேடியர் எஸ் எஸ் சாந்தேல், SC VSM (Retd)