இந்திய ராணுவத்தை ஈராக்குக்கு அனுப்புவது தவறு

This entry is part [part not set] of 37 in the series 20030619_Issue

சின்னக்கருப்பன்


அமெரிக்கா வற்புறுத்துகிறது. இந்தியா தாக்காட்டுகிறது. முடியாது என்று நிர்த்தாட்சண்யமாகச் சொல்லவும் இல்லை. செய்கிறேன் என்று உறுதி கூறவும் இல்லை. அமெரிக்காவின் வற்புறுத்தலால் இந்தியா ஈராக்குக்கு ராணுவத்துருப்புக்களை அனுப்பலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறது என்று கருதுகிறேன்.

முதலாவது விஷயம், அமெரிக்கா இன்னொரு வியத்நாமை ஈராக்கில் சந்திக்க தயாராக இல்லை என்பது. ஈராக் இன்னொரு வியத்நாமாக அமெரிக்காவுக்கு ஆக்கித்தர பலர் முனைந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. சதாம் உசேனின் முன்னாள் இன்னாள் விசுவாசிகள், முக்கியமாக ஆட்சியில் இருந்த சிறுபான்மை சன்னி பிரிவு ஈராக்கிய முஸ்லீம்கள் சதாம் உசேனுக்கு ஆதரவாக அரசியல் ரீதியிலும் ராணுவ ரீதியிலும் தொடர்ந்து இருப்பார்கள் எனத் தோன்றுகிறது. பெரும்பான்மையாக இருக்கும் ஷியா பிரிவினர் இவ்வளவு நாளாக சதாம் உசேனின் கீழ் இருந்து பட்ட துன்பத்தை இன்னொரு முறை அமெரிக்காவிடம் பெற முனைவார்கள் என்றும் தோன்றவில்லை. ஷியா பிரிவினரிடம் ஈரானிய செல்வாக்கு அதிகம். அவர்கள் இன்னொரு கோமேய்னியின் பின்னால் நின்று இஸ்லாமிய குடியரசை ஈராகில் நிறுவவேண்டும் என்று முனைவதாக செய்திகள் வருகின்றன. இரண்டு பிரிவினரும் அரசியல் ரீதியாக எதிர்க்கும் ஒரு இடத்தில் அமெரிக்காவின் ராணுவத் துருப்புகள் தொடர்ந்து ஆள் இழப்பை அனுபவித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

அமெரிக்காவின் பின்னால் இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் தவிர வேறு ஆட்கள் இல்லை.

இப்படிப்பட்ட வேலைகளுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் தேசங்களான பாகிஸ்தானிடமும் பங்களாதேஷிடமும் அமெரிக்கா ஆணையிட்டால் நிச்சயம் அமெரிக்காவின் எடுபிடி வேலைகளுக்கு ஆட்களை அனுப்புவார்கள். போடும் கொஞ்சம் பிச்சைக்காசை கொண்டு இந்த நாடுகள் இந்தியாவை குத்தும் வேலையை தொடர்ந்து நடத்துவார்கள். ஒரு பக்கம் அமெரிக்காவின் செருப்புகளுக்கு பாலீஷ் போட்டுத்தருவது வழக்கம் போல தொடர்ந்து நடக்கும். அந்த வேலையை வைத்து ஆட்சியின் மீது மக்களுக்கு கோபம் வரக்கூடாது என்பதற்காக இந்தியாவின் மீதான வெறுப்பை மக்களுக்கு ஊட்டி ஊட்டி வளர்க்கும் வேலையும் தொடர்ந்து நடக்கும். (அவற்றில் உண்மை இருக்கிறது என்று விலாவாரியாக நம் ஊர் அறிவுஜீவிகளும் பேசி பிரபலம் அடைவார்கள்)

இந்தியா உலக ரீதியில் ஒரு வலிமையான இடம் இருந்தால் ஒழிய நமக்கு தேவையான பொருளாதார நலன்களை பெற்றுக்கொள்ள முடியாது என்று உணர்ந்திருக்கிறது. பொருளாதார வலிமை வெறும் உழைப்பால் மட்டும் வருவதல்ல. அப்துல்கலாம் அவர்கள் சொல்வது போல, அமைப்பு ரீதியான, பல துறைகளிலும் சமமான முன்னேற்றமே சரியான முன்னேற்றம்.

இந்தியா அமெரிக்காவின் நல்ல தோழனாக இருந்து கொண்டு தன்னுடைய காரியங்களை சாதித்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புவதில் தவறொன்றுமில்லை. ஆனால், அமெரிக்காவின் நல்ல தோழனாக இருப்பது என்பது பல நாடுகளுக்கு சாவுமணியாக ஆகிவிட்டது என்ற வரலாற்று உண்மை தெரிந்திருக்க வேண்டும். அமெரிக்காவுக்கு முக்கியம் அமெரிக்கர்களின் நலன் (அதுவும் அமெரிக்க பணக்காரர்களின் நலன்) என்பது அவர்களே ஒப்புக்கொள்ளும் உண்மை. அது நமக்கும் புரிந்திருக்க வேண்டும்.

உதவி பிரதமர் அத்வானி அவர்கள் தெளிவாகவே சொல்லிவிட்டார். ஆப்கானிஸ்தானத்துக்கு இந்தியா தன்னுடைய படைகளை அனுப்ப விரும்புகிறது. அதற்கு பாகிஸ்தானின் தூண்டுதலால் அமெரிக்கா முட்டுக்கட்டை போடுகிறது. நிர்த்தாட்சண்யமாக இந்தியாவின் படைகளை ஆப்கானிஸ்தானத்துக்கு அனுப்பக்கூடாது என்று சொல்கிறது. ஆனால், ஈராக்குக்கு மட்டும் இந்தியாவின் படைகளை அனுப்பவேண்டும் என்று கோருகிறது. இப்படிப்பட்ட பேச்சு அமெரிக்காவுக்கு எது தேவையோ அதனை மற்றவர்கள் மீது திணிக்கும் முயற்சியே தவிர, விட்டுக்கொடுக்கும் உணர்வோ அல்லது உண்மையிலேயே இந்தியாவுக்கு உலகத்தில் அதற்கு உரிமைப்பட்ட இடத்தைக் கொடுக்கும் நினைப்போ இல்லை என்பது வெளிப்படை.

அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வெகுவாக உதவிவிடக்கூடாது என்ற அடிப்படை மட்டுமே அமெரிக்காவுடன் இந்தியாவுக்கான நட்புறவாக இருக்க வேண்டும். அமெரிக்கா இடும் ஆணைகளை தலைமேல் கொண்டு நிறைவேற்றித் தருவதாக அந்த ‘நட்புறவு ‘ இருக்கக்கூடாது.

ஈராக்குக்கு பாகிஸ்தான் துருப்புகளும் பங்களாதேஷ் துருப்புகளும் வேண்டுமென்றால் போகட்டும். அதனால் இடும் பிச்சைக்காசைக் கொண்டு இந்தியவை குத்தும் வேலையை தொடர்ந்து நடத்தட்டும். ஆனால், எந்த ஒரு காரணத்துக்காகவும் ஈராக்கியர்களுக்கு எதிரிகளாக அமெரிக்காவின் பக்கம் இந்தியா நிற்கக்கூடாது. இந்தியாவின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் ஈராக் வந்திருந்தால் இந்தியா அங்கு ராணுவத்தை அனுப்புவதற்கு ஒரு முகாந்திரம் இருக்கிறது. ஆப்கானிஸ்தானத்தில் பயிற்சி பெற்ற இந்திய எதிர்ப்பாளர்களை அடக்குவதற்காகவென்றாலாவது இந்தியா ஆப்கானிஸ்தானத்துக்கு படைகளை அனுப்புவதும், அங்கு இருக்கும் அரசாங்கத்துக்கு ஒரு உறுதியான ராணுவத்தையும், சட்ட ஒழுங்கை நிலைநிறுத்தவும், அங்கு மக்களுக்கு உதவவும் படைகளை அனுப்புவதிலாவது ஒரு பொருள் இருக்கிறது. ஈராக்குக்கு இந்திய படைகளை அனுப்புவதில் என்ன இந்தியாவுக்கு பலன் இருக்கும் ? அங்கிருக்கும் எண்ணெயை நாம் உபயோகப்படுத்தப்போகிறோமா ? அல்லது இந்தியா வெகுவாக உபயோகப்படுத்த அமெரிக்கா அனுமதித்துவிடுமா ? அமெரிக்காவுக்கு எண்ணெய் வேண்டுமென்பதற்காகத்தான் அங்கு சென்றிருக்கிறது. இந்திய ராணுவ வீரரின் உயிர் ஒவ்வொன்றும் விலை மதிக்க முடியாதது. அதனை அமெரிக்காவின் நட்புறவுக்காக விலை கொடுக்க முடியாது.

இந்திய எல்லைகளை காப்பாற்றுவதுதான் இந்திய ராணுவத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். இந்தியாவை விட்டு எங்கும் அவர்கள் செல்வது சரியல்ல. சொல்லப்போனால் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை ராணுவமாக இந்திய துருப்புகள் இந்தியாவை விட்டு வெளியே செல்வது கூட சரியல்ல.

இந்த விஷயம் பற்றி ராமானந்த் சென்குப்தா ரீடிஃப் தளத்தில், இந்தியா தன் படைகளை ஈராக்குக்கு அனுப்பி அங்கு இருக்கும் ஈராக்கியர்களுக்கு உதவ வேண்டும் என்று எழுதியிருக்கிறார். நமது படை மற்ற படைகளோடு உறவு கொள்ளாமல் (1964இலிருந்து) தனிமைப்பட்டு இருப்பதால், இப்படிப்பட்ட அமைதி காக்கும் வேலை நம் படைகளுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று எழுதியிருக்கிறார். இது ஒப்புக்கொள்ள முடியாதது. உலகத்திலேயே இப்படிப்பட்ட அமைதி காக்கும் வேலைகளில் இந்திய படைகளுக்கு இருக்கும் அனுபவம் போல வேறெந்த படைகளுக்கும் இல்லை. உள்நாட்டிலேயே அமைதி காக்கும் வேலை செய்துகொண்டு, ஐக்கிய நாடுகள் சபைக்காக உலகமெங்கும் (சியர்ரோ லியோன் உட்பட) அமைதி காக்கும் வேலைகளில் ஈடு பட்டு வந்திருக்கிறார்கள்.

மேஜர் ஜெனரல் அஃப்ஸிர் கரீம் அவர்கள் அவுட்லுக் பத்திரிக்கையில் தெளிவாகவே, இந்திய படைகளை ஈராக்குக்கு அமெரிக்க ஜெனரல்களின் கீழ் வேலை செய்ய அனுப்பக்கூடாது என்று எழுதியிருக்கிறார். அவுட்லுக் பத்திரிக்கையில் ப்ரேம் சங்கர் ஜா அவர்களும் இதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இந்தியாவை விட்டு வெளியே செல்லும் இந்தியப்படைகள் உண்மையிலேயே அமைதிப்படைகளாகத்தான் இருக்க வேண்டும். தற்காப்புக்கு இருக்கும் குறைந்த பட்ச ஆயுதங்கள் தவிர வேறெதும் இல்லாத, தொழில்நுட்பவியலாளர்களும், மருத்துவர்களும், பொறியியலாளர்களும், சமூக சேவை செய்யச் செல்லும் மக்கள் மட்டுமே இந்தியாவின் அதிகாரப்பூர்வமான அமைதிப்படைகளாக இருக்க வேண்டுமே தவிர போர் வீரர்கள் அல்லர்.

சொல்லப்போனால் அமைதிப்படை என்பதன் அடிப்படையையே நாம் மறுபார்வை பார்க்க வேண்டும். காந்தீய சிந்தனையின் அடிப்படையில் இந்த அமைதிப்படை உருவாக வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு அமைதிப்படை ஈராக்குக்கு செல்லுமெனில் அது இந்தியர்களின் தலைமையின் கீழ் செயல்படுமெனில் அதனை நான் வரவேற்பேன். தவிர, அமெரிக்கப் போர்வீரர்களுக்குப் பதிலாக இறக்க இந்தியப்போர்வீரர்களை அனுப்ப இந்த அரசு துணியுமெனில் அதனை தீவிரமாக அனைத்து மக்களும் எதிர்க்க வேண்டும் என்றும் கோருகிறேன்.

***

karuppanchinna@yahoo.com

***

Series Navigation