இந்தியா- சீனா நட்பு மலர்கள்

This entry is part [part not set] of 28 in the series 20030504_Issue

ஸ்ரீதா


பாரதப் பிரதமர் வாஜ்பேயி அவர்கள் செய்த மிகப் பெரிய நல்ல காரியம், 1998 ல் போக்ரான் அனு குண்டு வெடிப்பு சோதனை நடத்தி, அனு குண்டையும் நமது பாதுகாப்பின் ஒரு அங்கமாக்கியது தான். ஈராக் போர், தன் கையே தனக்கு உதவி, எந்த நாட்டையும் சார்ந்து இருக்கக் கூடாது என்ற யதார்தத்தை நிருபித்திருக்கிறது. நாடுகளுடன் நட்பாக இருப்பது வேறு, சார்ந்து இருப்பது வேறு. ஒரு நாட்டின் பாது காப்பிற்காக செய்யும் காரியங்கள், அந்த நாட்டின் சொந்த விஷயம், உரிமை. ஆனால் நமது நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளே, காங்கிரஸிலிருந்தது, கம்யூனிஸ்டுகள் வரை இதை அவசியமாக்குவதை விட்டு, அரசியலாக்கியது துரதிர்ஷ்டம். அரசியல் கட்சிகளும், ஜாதி சங்கங்களும், ஆன்மீக அமைப்பைச் சார்ந்தவர்களும், மீன் சாமியார்களின் பின் செல்வது போல் பின் செல்கிறார்களே தவிர, ஏதோ தங்கள் அமைப்புகள் தவறே செய்யாதது போல் நடந்து கொள்வது, நியாயங்கள் மறுக்கப் பட்டு, மறைக்கப்பட்டு, பாதிப்புகள் நிலையாகிறது. எப்போதும் போல, அமெரிக்கா, நாம் நமது மண்ணில் அனு குண்டு வெடித்தது, அவர்களது மண்டையில் வெடித்தது போலவும், நாம் செய்யக் கூடாத தவறு செய்தது போலவும், ஏதோ அமெரிக்காவை கொள்ளை அடித்து பேரிக்காயாக்கியதாக ஆர்பாட்டம் செய்து, பொருளாதார தடை விதித்தது. அமெரிக்காவிடம் இல்லாத அனு குண்டா, அதே அனு குண்டு நம்மிடம் இருப்பதற்காக, பொருளாதார தடையில் தண்டனை அளிப்பது, கோடி ரூபாய் வைத்துள்ளவன், ஆயிரம் ரூபாய் வைத்துள்ளவனை, தவறு செய்தான் என்று கூறி தண்டனை அளிப்பது போல் உள்ளது. பணமும், பாதுகாப்பும் அமெரிக்கர்களுக்கு மாத்திரம் சொந்தமா ? சொந்தமாகலாம், ஆண்டவன் படைத்த, காற்றும், நீரும் அமெரிக்கர்களுக்கே சொந்தம் என்பது உண்மையானால்.

குளிர் பான சந்தையில் பெப்ஸி, கோக் போன்ற அமெரிக்க கம்பெனிகள், நுழைந்த 10 வருடங்களில், 94% நமது சந்தையை ஆக்கிரமித்து, நமது இந்திய கம்பெனிகளுக்கு மூடு விழா நடத்தி,சாதாரண கலர் தண்ணி விற்றே, நமது மக்களின் பணத்தை அமெரிக்காவிற்கு கொண்டு செல்கிறார்கள். நமக்கு அல்வா கொடுக்கும் அமெரிக்காவிற்கு, நாம் அல்லவா பொருளாதார தடை விதிக்க வேண்டும். வெளி நாட்டு கம்பெனிகளின் வர்த்தக உறவு அவசியம், ஆனால் அது ஆரோக்கியமான வர்த்தகமாக இருக்க வேண்டும். இருவருக்கும் லாப கரமானதாக இருக்க வேண்டும். அமெரிக்க கம்பெனிகள் வீிட்டில் படுக்க இடம் கொடுத்தவனையே, வீட்டிற்கு வெளியே தள்ளுவது போல் செயல் படுகிறது. MONOPOLY செய்வது முதலாளித்துவம் அல்ல, மறை முகக் கொள்ளை என்பது தான் பொருந்தும். சீனா இங்கு தான், இந்தியாவிடம் இருந்து வித்தியாசப் படுகிறது. அயல் நாட்டு கம்பெனிகளுக்கு, லாபம் சம்பாரிக்க எல்லா கட்டுமான வசதிகளையும் செய்து கொடுக்கும். அதே சமயம், வியாபாரத்தின் குடுமி, சீனாவின் கையில் இருக்கும். பணம் சம்பாரிக்கலாம், ஆனால் கொள்ளை அடிக்க முடியாது.

ரஷ்ஷியா கிரியோஜெனிக் எங்ஜின்களை நமது விண்வெளி ஆராய்ச்சிக்கு தருவதையும், பொறாமையினால் கண் வைத்து, ஆராய்ச்சிக்கு பின்னடைவு எற்படுத்தினார்கள். இதிலிருந்தே அமெரிக்கா, இந்தியாவை சமமான நட்புறவோடு, பார்ப்பதோ, பழகுவதோ இல்லை என்பதும், இந்தியா முன்னேறுவதில் விருப்பம் இல்லை, தடுக்கும் என்பதும் தெளிவாகிறது. இந்தியாவை அமெரிக்காவின் இரண்டாம் தர பார்ட்னரகவோ, வேலையாளவாகவோ மாற்றுவதில் தான் அமெரிக்காவின் விருப்பமும், செயல்பாடும். நம்மை இன்னும் வளர்ச்சியடையா, நாகரீகமற்ற காட்டுவாசிகள் போலத் தான் கருதுகிறது. பொன்னையும், பெண்ணையும் ஒரே போல் வியாபார பொருளாக பார்ப்பதும், ஆயில் பணத்திற்காக, பிணத்தைக் கூட தின்னும் இவர்களின் நாகரீகம் இந்தியாவுக்கு ஒரு போதும் தேவையில்லை. பெரும்பாலான இந்திய மக்கள் இன்றும் நிம்மதியையும், பாவ, புண்ணியங்களையும் நம்புகிறார்கள். வெள்ளைப் புறாக்களான இந்தியர்களுக்கு, வேலியே பயிரை மேயாமல் பாதுகாப்பு அளிப்பது வாழ்க்கைத் தர்மமாகும்.

அமெரிக்கா, உலக ஜனநாயக நாடான இந்தியாவிற்கே ஆப்பு வைக்கிறது என்றால், மற்ற நாடுகளுக்கு பட்டை நாமம் தான்.

அனு குண்டு தயாரிக்க அமெரிக்காவிற்கு உரிமையுள்ளது. இந்தியாவிற்கும் உரிமை உள்ளது. பாகீஸ்தானிற்கும், வடகொரியா, ஈரான், இஸ்ரேல், ஏன் , எல்லா நாடுகளுக்கும் உரிமை உள்ளது. இதிலும் தாழ்வு மனப்பான்மை, சந்தேகமிருந்தால், அந்த நாடு சுய மரியாதை இழந்து, அடிமையாகி விடும். ஆனால் 1998 ல், அனு குண்டு வெடித்தற்கான காரணம், சீனாவிடமிருந்து பாதுகாக்க என்று பாதுகாப்பு அமைச்சர் கூறியது தவறான, தரம் குறைந்த அரசியலாகும். ஆனால் அதே பாதுகாப்பு அமைச்சர், தனது மாயையிலிருந்து விடுபட்டு , நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சீனா வந்து, நட்புக்கரத்தை நீட்டுகிறார். ஈராக் போர், அமெரிக்கா நல்லது செய்யும் என்ற மாயைத் திரையை நீக்கி அமெரிக்காவின் உண்மையான சுய லாப சொரூபத்தை உலகுக்கு காட்டியது. அமெரிக்க மாயை இந்தியாவில் விலகுகிறது. அதன் விளவு தான், பாதுகாப்பு அமைச்சரின் சீன பயணமும். என்ன தான், தெகல்கா போன்றவற்றில் பாதுகாப்பு அமைச்சரின் பெயர் அடி பட்டிருந்தாலும், இந்திய நாடு, எந்த நாட்டிற்கும் அடிமையாவதை விரும்பாதவர்.

ஈராக் போரோடு அமெரிக்கா நின்று விடும் என்று கருதுவது, தேள் கொட்டாது என்று கருதுவதைப் போலத் தான். அடுத்து இந்தியா மீதும் கை வைக்கும். அடி பலம் என்றால், ஈராக்கின் அதே கதி தான், கொஞ்சம் என்றால் அமெரிக்கர்கள் இந்திய மண்ணில் இராணுவ தளத்தை அமைத்து, நம்மை இரண்டாம் தர பார்ட்னராகவோ, வேலையாட்களாகவோ மாற்றலாம். இதை உணர்ந்த நமது அரசியல் வாதிகள், அடி நம் மீது விழாமல், கெளரவமாக வாழ, சீனா, ரஷ்ஷியா, ஜெர்மனி, ஐரோப்பா, கனடா, க்யூபா போன்ற நாடுகளுடன் உறவைப் பலப் படுத்தி, காய்களை புத்திசாலித்தனமாக நகர்த்த ஆரம்பித்திருக்கிறது. பாது காப்பு அமைச்சரின் சீன விஜயம், அரசியல் சாணக்கியமேயாகும். இனியும் நாம் சரியான பாதையில் காய்களை நகர்த்தவில்லையென்றால், நாம் நமது கெளரவத்தை இழந்து, இந்தியத் தாய் பெற்றெடுத்த நாம், அமெர்க்கர்களூக்கு சேவகர்களாகவும், நமது பெண்கள் உலக சந்தையில் வியாபார பொருளாகவும் மாற்றப் படுவார்கள்.

இன்றைய சூழ் நிலையில், இந்தியா தன்னை பாதுகாத்துக் கொள்ள, சீனா, ரஷ்ஷியா, ஜெர்மனி, ஐரோப்பா, கனடா, க்யூபா போன்ற நாடுகளுடன் நட்புறவு வைத்துக் கொள்வது அவசியமாகிறது. ஏனென்றால் சக்தி வாய்ந்த இந்தியா, இந்த நாடுகளுடன் சரியாக , சமமாக பேச முடியும். இங்கு யார்,யாரையும் தாழ்வாகப் பார்பதோ, பொருளாதரத் தடை விதிப்பதோ கிடையாது.ஒரு நாடு ,மற்ற நாடுகளை மதித்து, நல்ல அனுபவங்களை,ஒன்றுக் கொன்று பரிமாறி,கற்றுக் கொள்ள முடியும். மரியாதையான நட்புறவு. இந்தப் புரிதலின் வெளிப்பாடுதான், பாதுகாப்பு அமைச்சரின், சீன விஜயம்.

இந்தியா- சீனா நட்புறவில் கடந்த 2002 ஆண்டுகளில் 99.9 சதவீத காலம் சுமூகமாக இருந்துள்ளது, 0.1 சதவீத காலம், சுமூகமாயில்லை, அதாவது 1962 ம் வருட போர் உள் பட. இந்த 0.1 சதவீத காலத்தை பெரிது படுத்தி, 99.9 சதவீத காலத்தை சிறிிதாக்காமல், அந்த 0.1 சதவீத கால பிரச்சனைகளை, பேசி தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் , இந்திய – சீன நாடுகள் செயல் பட ஆரம்பித்திருக்கிறது. இது வரை மேகத்தால் மறைக்கப் பட்ட நிலா, மேகம் விலகி, அழகாக, குளிர்ச்சியாகத் தெரிவதைப் போல், செடியால் மறைக்கப் பட்ட மலர்கள், செடி விலகி , அழகாக தெரிவது போல், இந்திய , சீனா உறவுகளுக்கிடையே உள்ள திரை விலகப் பட்டு, மலரும், மணமும், பார்க்க, உணர முடிகிறது.

உலகிலேயே இந்தியாவும், சீனாவும் சரித்திரப் புகழ் பெற்ற, பாரம்பரியமான, பழமையான நாடுகள். இதனால் வாழ்க்கை அனுபவங்களுடன், கலை, கலாச்சாரம், பண்பாடு என்று எவ்வளவோ நல்ல காரியங்கள் உள்ள நாடுகள். 18 ஆம் நூற்றாண்டில் இந்தியா- சீனா, உலக வர்த்தகத்தில் 40 சதவீதத்தைக் கையில் வைத்திருந்த நாடுகள். அமெரிக்கா பிறக்கும் எவ்வளவோ காலம் முன்பே, இன்று அமெரிக்கா காணும் செல்வத்தை விட எவ்வளவோ மடங்கு செல்வத்தை இந்தியா-சீனா அனுபவித்துள்ளது. அப்படி அனுபவிக்கும் போது, செல்வம் மாத்திரம், வாழ்க்கையை முழுமையாக்காது என்ற உண்மையையும், செல்வத்தால் அலுப்பும் தட்டிய நாடுகள். அந்த செல்வத்தை கொள்ளையடிக்கத் தான், வெளிநாடுகள் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் நூற்றுக்கணக்கான வருடங்கள், தொல்லை கொடுத்து வருகிறது. இந்த கொள்ளைக்காரர்கள் உண்டு பண்ணிய காஷ்மீர், தாய்வான் பிரச்சினைகள் இன்றும் தீர்ந்த பாடில்லை. இந்தியாவும் , சீனாவும், உலக மக்கள் தொகையில் 36 சதவீதமாக, மிகப் பெரிய சந்தையாக உள்ளது. அயல் நாட்டவர்கள், இன்றும் நம்மிடம் எடுப்பது தான் அதிகமாயிருக்கிறதே தவிர, கொடுப்பது குறைவு. ஆனாலும் கொடை வள்ளல்களைப் போலவும், சுதந்திரக் காவலர்களைப் போலவும் ஆடுகிறார்கள், பணத்திற்காக அலைவதை மறைத்துக் கொண்டு. உண்மையில் பார்த்தால் நாம் தான் இவர்களூக்கு அதிக பணம் சம்பாரிக்க உதவி செய்கிறோம், ஆகையால் இவர்கள் தான், நமக்கு நன்றியையும், மரியாதையையும் காட்ட வேண்டும். ஆனால் நிலைமை தலை கீழ். சீனா இவர்களை உயரப் பார்க்காமல் சமமாக பார்க்கிறது. ஆனால் நாம் இன்னும், இவர்களை, சுய மரியாதை இன்றி, உயரப் பார்க்கிறோம்.

உலக நாடுகள், அமெரிக்காவிடமிருந்து நல்ல பொருளாதார அனுபங்களை கற்றுக் கொள்ளலாம். அமெரிக்காவும், எல்லாம் தெரிந்த முட்டாள்களைப் போல் நடக்காமல், இந்தியா- சீனா ஆகிய நாடுகளின் வாழ்க்கை அனுபவங்கள், கலை, கலாச்சாரம், பண்பு எல்லாம், கற்றுக் கொள்ளலாம். கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு தானே. அமெரிக்கா இதை புரிந்து கொள்ள வேண்டும்.ஆனால், இரத்த வெறி பிடித்த, இரானுவ, ஆயில் CORPORATE கூட்டம் அமெரிக்காவை ஆள்வது வரை, ஆள வந்தான் கதை தான்.

உலகம் முழுவதும், நட்பு மலர்கள் பூத்தால், ஆனந்தமே. அமெரிக்கா ஈராக் போர் போன்ற செயல்களால், நச்சு விதைகளை பூமியில் விதைத்து, பணத்துடன், பிணைத்தையும் அல்லவா, அறுவடை செய்கிறது. புஷ் 25 வருட ஆயில் மேன், 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள், எனர்ஜி கம்பெனிகளிடமிருந்து, தேர்தல் பணம் வாங்கியிருக்கிறர். அமெரிக்காவில் NOTHING IS FREE, ஆகவே அவர்களுக்கு ஈராக் எண்ணெய் வளம் ஒப்படைப்பு, இதைப் பார்த்தாலே அமெரிக்காவை மக்கள் ஆள்கிறார்களா, COPPORATE ஆள்கிறர்களா என்பது தெளிவாகத் தெரியும். பெரும்பாலான அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்தியர்களுக்கு பணக்காரர்களாகத் தெரியலாம். அமெரிக்காவில் இவர்கள் வேலக்காரர்கள் மட்டுமே, கடுமையான வாழ்க்கை போராட்டத்திலிருந்து ஓய்வு இல்லை. அமெரிக்காவின் 90 சதவீத சொத்து, 10 சதவீத அமெரிக்கர்களுடய கையில் உள்ளது. நமது இந்தியர்கள் , இவர்களூக்கு கிளார்க் காகவோ, அதிகாரியாகவோ வாழ்க்கை முடிய வேலை செய்து, அமெரிக்காவில் சாதாரணமானவர்களாகவும், இந்தியாவில் கனவான்களாகவும், நினைத்து வாழ வேண்டியது தான். அமெரிக்க அரசியல்வாதிகளும், சாதாரண அமெரிக்கர்களை ஏணியாக பயன்படுத்தி, மேலே போனவுடன், உதைத்து தள்ளுகிறார்கள். சொந்த அமெரிக்க மக்களை முட்டாக்கிய பிறகு, பணம் கொடுத்த கார்பரேட் கூட்டத்தை திருப்திப் படுத்த, உலக மக்களையும் முட்டாள்களாக்கி, அவர்களின் அறியாமையிலும், கஷ்டத்திலும் , பலவீனத்திலும் குளிர் காய்கிறார்கள். கேட்டால், மனித சுதந்திரம், மனித உரிமை, சர்வாதிகாரம், WEAPONS OF MASS DESTRUCTION என்று காதில் பூச் சுற்றுகிறார்கள். மக்களை மக்கள் ஆள்வது தான், ஜனநாயகமும், முதலாளித்துவமே தவிர, மக்களை CORPORATE ஆள்வது, ஜன நாயகமோ, முதலாளித்துவமோ அல்ல. முதலாளித்துவத்தில் MONOPOLY ற்கு இடமே இல்லை.

புஷ்ஷிற்கு, அவரது ஆலோசகர்கள், யூத வெறியர்களாகவும், போர் வெறியர்களாகவும், இராணுவ வியாபார வெறியர்களாகவும் இருக்கிறார்கள். விளைவும் வெறி நாய் கடித்தது போன்ற நிலை தான். உதாரணம், இன்றைய ஈராக் போர். பிளேயரின் ஆலோசகர் கூப்பர், ஒரு படி மேலே போய், வெளிப்படையாகவே, NEED FOR COLONOISATION, JUNGLE OF LESS CIVILIZED PEOPLE. அதாவது மீண்டும் காலணியாதிக்கமும், நாம் எல்லாம், நாகரீகத்தில் குறைந்த காட்டு மனிதர்கள் போல். இப்படிப் பட்ட ஆலோசகர்கள் இருக்கும் போது, புஷ்ஷும், பிளேயரும் பேயாட்டமாடுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. நாம் இவர்களுக்கு தாழ்ந்தவர்கள், ஆனால் நமது உழைப்பும், பணமும் மாத்திரம் இவர்களுக்கு தேவை. மற்ற நாடுகளை காலணியாக்குவது, அவசியம், சுதந்திரம், நாகரீகம். எப்படி இருக்கிறது கதை. யாராவது இவர்கள் நாட்டை காலணியாக்குவது பற்றி பேசினால், சம்மதிப்பார்களா. தனக்கொரு நியாயம், மற்றொருவருக்கு இன்னொரு நியாயம், இது தான் இவர்களது நியாயம், சுதந்திரம் , மனித உரிமை எல்லாமே. கூப்பரின் கூறு கெட்ட நாகரீகம், கிரேக்க நாகரீகம் போல நினைத்து பேசுகிறார். நிர்வாணமாக ஓடும் மனிதரெல்லாம், மானத்தை பற்றி பேசிகிறார்கள். கோயிலை இடிப்பவன் எல்லாம், பெருமாளை பற்றி பேசுகிறார்கள்.

அமெரிக்கா, WMD( WEAPONS OF MASS DESTRUCTION) பற்றி பேசி, மற்ற நாடுகளின் மீது போர் தொடுத்ததால், அந்த WMD இந்தியாவிடமும் உள்ளது. இந்த ஒரு காரணமே போதும்,பிரச்சனைகளை ஊதி பற்ற வைத்து, இந்தியா மீது கைவைக்க. ஏழை என்றால்,எறும்பு கூட ஏறி மிதிக்குமாம். இது தானே உலகம். 1998 ல் பொக்கரானில் அனுகுண்டு சோதனை நடத்திய போது, அமெரிக்க அரசாங்கத்தில் உள்ளவர்கள், இந்தியா மீது பொருளாதார தடை விதித்து அல்லாமல், அந்த தண்டனை குறைவென்றும் கூட சொன்னார்கள். சிவனே என்று நாம் நமது வேலையை பார்க்கும் போது, உதைப்பது அல்லாமல், உதை குறைத்து கொடுத்து விட்டேன் என்று கவலைப் படுகிறார்கள். இந்தியா அனு வல்லமை, அமெரிக்காவின் விருப்பங்களூக்கு அபாயம் என்று கூட சொன்னார்கள். இந்த எண்ணம் உள்ள அமெரிக்கா, இந்தியாவை சமமாக வளர விடுமா ? நீங்களே முடிவு செய்யுங்கள். இந்தியா அமெரிக்காவிடம் சொல்வதெல்லாம் ஒன்று தான், நாங்கள் எங்களது பாதையில் செல்கிறோம், உங்களது பாதையில் கால் கூட வைப்பதில்லை. நீங்களும் எங்களிடம் நாகரீகமாக, மரியாதையாக, தலையிடாமல், மனிதர்களைப் போல் நடந்து கொள்ளுங்கள் என்பது தான். யார் சொல்லியம் அமெரிக்கா கேட்காது என்பது உலகறிந்த ரகசியம். மற்றவர்களின் குடும்பத்தில், அத்து மீறி நுழைவது தான், அவர்கள் சொல்லும் சுதந்திரமும், அமைதியும்.

CIA, ரவுடிகள் ராஜ்ஜியம்( ROUGE STATES) என்று சொல்லப்படுகிற நாடுகளை விட, இந்தியாவின் மீது அதிக கவனம் வேண்டும் என்று சொல்கிறது. இந்தியா, அழகான, அற்புதமான, மிகப் பெரிய மார்க்கெட் உள்ள, இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நாடு. சுற்றிலும் கடலால் சூழப் பட்டு, ஆசியா, வளை குடா நாடுகளை இணக்கும் பாதையாக, முக்கியமான துறை முகங்களையும், கடல் வளத்தையும் பெற்ற நாடு.

அமெரிக்கா இதை உணர்ந்து, இந்தியாவில் இராணுவ தளத்தை நிறுவவும், இந்தியாவை இரண்டாம் தர பார்ட்னராக மாற்றவும் முயற்சி செய்கிறது. இந்தியா முன்னேறுவதில் அமெரிக்காவிற்கு இஷ்டம் இல்லை. இந்தப் புரிதலின் வெளிப்பாடே, பாது காப்பு அமைச்சரின், சீன வருகை.

சீனாவும் இரண்டு நூற்றாண்டுகளாய் அயல் நாடுகளின் கொள்ளையில் பாதிக்கப் பட்ட நாடாகையால், இந்தியாவை நன்றாகப் புரிந்து, நமது பாதுகாப்பு அமைச்சருக்கு அன்பான, மிகப் பெரிய, நட்பான வரவேற்பை அளித்தது. சீனா எந்த நாட்டையும் கடவுளாக பார்த்து பின் செல்லாமல், தனது நாட்டிற்கு பொருந்தும் இராணுவ, பொருளாதார பாதை வகுத்து, நடந்து, முன்னேறி கொண்டு இருக்கிறது. நாமும், எந்த நாட்டையும் பின் பற்றாமல், நமது இந்திய நாட்டிற்கு பொருத்தமான பாதையில் செல்ல வேண்டும். பெரும்பாலான இந்திய மக்களும், சீன மக்களூம், போரை விரும்புவதில்லை. மற்ற நாடுகளை அடிமைப் படுத்தவும் விரும்புவதில்லை. உலகில் SUPER POWER ஆக இருப்பதையும் விரும்புவதில்லை. எனேன்றால் SUPER POWER சரித்திரத்தில் தற்காலிக நிலையே, என்பது சரித்திர அனுபவமுள்ள இந்தியாவிற்கும், சீனாவிற்கும் தெரியும். உலகை ஆண்ட ரோமப் பேரரசு எங்கே ? பாதி உலகை வென்ற அலெக்ஸாண்டர் எங்கே ? எனவே தான், SUPER POWER ஆக விருப்பப்படாமல், மற்ற நாடுகளுடன், சமமான, லாப கரமான உறவுகளையும், பரிமாற்றங்களையும் செய்வது தான் சரியான பாதை என்ற தெளிவு இருக்கிறது. அதன் விளைவு தான், இந்தியா-சீனா நட்புறவு. ஆண்டவன் படைத்த உலகத்தில் உயர்ந்த, தாழ்ந்த மனிதர்கள் என்ற பேதமில்லை. ஆண்டவன் படைத்த காற்றுக்கும், நீருக்கும் பேதமில்லை. இதை உணர்ந்த இந்தியா- சீனா நாடுகள், ஒருவருக்கொருவர் ஆரோக்கியமில்லாத போட்டியாளராகக் கருதாமல், வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இந்தியா-சீனா நட்புறவு பூத்துக் குலுங்குவது போல், என்றும் பூத்துக் குலுங்க புரிதலுடன், பாடு பட தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் இது மாத்திரம் நிரந்திர உலக அமைதியையோ, பாதிப்புகள் அற்ற உலகத்தை ஏற்படுத்தாது. அமெரிக்க அரசாங்கமும், COPORATE சொலவது போல், அவர்களுக்காக பணம் பண்ண ஆட்டம் போடாமல், அமெரிக்க மக்களின் விருப்பப் படியும், எல்லாரும் மனிதர்களே என்ற புரிதலோடு, இணைய வேண்டும். உலக எல்லைகளூக்கும், பாஸ்போர்ட்டிற்கும் வேலை இல்லாமல், மக்களுக்கு வேலை கிடைக்கும். உலகமெங்கும் நட்பு மலர்கள் பூத்துக் குலுங்கட்டும்.

sridhasridha@yahoo.com

Series Navigation

ஸ்ரீதா

ஸ்ரீதா